search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழக பட்ஜெட்"

    • அதிமுக திட்டங்களை தங்கள் திட்டங்களாக கூறுகிறார்கள், அதை கவர்னரும் பாராட்ட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
    • கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை அழகாக வடிவமைத்து திட்டமிட்டிருந்தோம்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * எதிர்க்கட்சி துணைத்தலைவர் விவகாரத்தில், சபாநாயகர் அவை மரபை கடைபிடிப்பார் என நம்புகிறோம்.

    * சட்டசபை தலைவர் நடுநிலையாக செயல்படவேண்டும், ஆனால் அவரே ஒரு தலைபட்சமாக செயல்படுகிறார்.

    * தேசிய கீதம் இசைப்பது தொடர்பாக கவர்னர் ஏற்கனவே சபாநாயகருக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.

    * கோரிக்கை நிறைவேற்றப்படாத காரணத்தால் கவர்னர் புறக்கணித்துள்ளார்.

    * இது கவர்னருக்கும், அரசுக்கும் இடையே உள்ள பிரச்சனை.

    * அதிமுக திட்டங்களை தங்கள் திட்டங்களாக கூறுகிறார்கள், அதை கவர்னரும் பாராட்ட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

    * கவர்னர் உரையில் எதிர்வரும் ஆண்டில் அரசு என்ன செய்ய போகிறது என்பதை சுருக்கமாக சொல்வதுதான் மரபு.

    * கவர்னர் உரை உப்பு சப்பில்லாத உரை.

    * கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை அழகாக வடிவமைத்து திட்டமிட்டிருந்தோம். திமுக அரசு அவசர அவசரமாக கிளாம்பாக்க்ம பேருந்து நிலையத்தை திறந்ததால் அடிப்படை வசதிகள் இல்லை.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

    • துரைமுருகன் பேச தொடங்கியதும் சட்டசபையில் இருந்து கவர்னர் ஆர்.என்.ரவி புறப்பட்டு சென்றார்.
    • துரைமுருகன் முன்மொழிந்த தீர்மானம், ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

    சென்னை:

    தமிழக சட்டசபை இன்று காலை கூடியதும் தமிழில் பேச தொடங்கிய கவர்னர் ஆர்.என்.ரவி இரண்டு நிமிடங்களில் தனது உரையை கேரள பாணியில் 2 நிமிடத்தில் முடித்துக்கொண்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    அரசின் உரையை முழுமையாக கவர்னர் ஆர்.என்.ரவி வாசிக்காத நிலையில், சபாநாயகர் அப்பாவு வாசித்தார்.

    கவர்னர் ஆர்.என்.ரவி கூறியதாவது, உரையில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்களுடன் முரண்படுகிறேன். தேசிய கீதத்தை தொடக்கத்திலும், இறுதியிலும் வாசிக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தேன். அரசின் உரையை வாசித்தால், அரசியலமைப்பு சட்டத்தில் குழப்பம் ஏற்படும் என்பதால் வாசிக்கவில்லை என்றார்.

    இதையடுத்து கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிராக சட்டசபையில் எதிரான தீர்மானத்தை அவை முன்னவர் துரைமுருகன் பேச தொடங்கியதும் சட்டசபையில் இருந்து கவர்னர் ஆர்.என்.ரவி புறப்பட்டு சென்றார். துரைமுருகன் முன்மொழிந்த தீர்மானம், ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

    இதை தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு பேசுகையில்,

    * அரசு தயாரித்த உரை மட்டுமே அவை குறிப்பில் இடம்பெறும்.

    * கவர்னர் பேசியது அவை குறிப்பில் இடம்பெறாது.

    * கவர்னர் முறைப்படி சட்டசபைக்கு அழைக்கப்பட்டார்.

    * முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தும், இறுதியில் தேசிய கீதமும் பாடுவது தான் தமிழ்நாடு சட்டசபையின் மரபு.

    * கொள்கை முரண்பாடு இருந்தாலும் மாண்புடன் அவை நடத்துவதுதான் மரபு.

    இவ்வாறு சபாநாயகர் அப்பாவு பேசினார். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சபாநாயகர் அப்பாவு, சட்டசபை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் கவர்னருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
    • தமிழ்த்தாய் வாழ்த்துடன் சட்டசபை கூட்டம் தொடங்கியது.

    சென்னை:

    தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் ஆண்டுதோறும் கவர்னர் உரையுடன் தொடங்குவது மரபாக இருந்து வருகிறது. அந்த வகையில் இன்று கவர்னர் ஆர்.என்.ரவியின் உரையுடன் சட்டசபை கூட்டம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.

    இதையடுத்து, இன்று சட்டசபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக தலைமைச்செயலகத்திற்கு வந்த கவர்னர் ஆர்.என்.ரவிக்கு பேண்டு வாத்தியம் முழங்க போலீஸ் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. அணிவகுப்பு மரியாதையை கவர்னர் ஏற்றுக்கொண்டார். இதையடுத்து சபாநாயகர் அப்பாவு, சட்டசபை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் கவர்னருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். தமிழ்த்தாய் வாழ்த்துடன் சட்டசபை கூட்டம் தொடங்கியது. இதைத்தொடர்ந்து தமிழில் பேசி உரையை தொடங்கிய கவர்னர் ஆர்.என்.ரவி கேரள பாணியில் 2 நிமிடத்தில் உரையை முடித்துக்கொண்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    அரசின் உரையை முழுமையாக கவர்னர் ஆர்.என்.ரவி வாசிக்காத நிலையில், சபாநாயகர் அப்பாவு வாசித்தார்.

    இதுகுறித்து கவர்னர் ஆர்.என்.ரவி கூறியதாவது:-

    * உரையில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்களுடன் முரண்படுகிறேன்.

    * தேசிய கீதத்தை தொடக்கத்திலும், இறுதியிலும் வாசிக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தேன்.

    * அரசின் உரையை வாசித்தால், அரசியலமைப்பு சட்டத்தில் குழப்பம் ஏற்படும் என்பதால் வாசிக்கவில்லை. 

    • சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்க இன்னும் ஒரு நா‌ள் உள்ள நிலையில் பணிகள் வேகமாக நடந்து வருகிறது.
    • சட்டமன்ற உறுப்பினர்கள் அறைகளில் உள்ள இருக்கைகளும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழக சட்டசபை கூட்டம் வருகிற 12-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு கூடுகிறது.

    அரசியலமைப்புச் சட்டத்தின்படி, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி அன்றைய தினம் உரை நிகழ்த்த உள்ளார். அவரது உரையின் தமிழாக்கத்தை சட்டசபை சபாநாயகர் அப்பாவு வாசிக்க உள்ளார். இந்த நிகழ்வைத் தொடர்ந்து சட்டசபையின் அலுவல் ஆய்வு குழு கூட்டம் திங்கட்கிழமை மதியம் நடைபெற உள்ளது.

    கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முன்மொழியப்பட்டு, அதன் மீதான விவாதம் 3 நாட்கள் வரை நடைபெறும் என எதிர் பார்க்கப்படுகிறது. ஆனாலும், நாட்களை இறுதி செய்யும் பணியை அலுவல் ஆய்வு குழு மேற்கொள்ளும்.

    அதனைத் தொடர்ந்து, 19-ந்தேதி நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு 2024-2025-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையினை தாக்கல் செய்வார்.


    மேலும் 20-ந்தேதி 2024-2025-ம் ஆண்டிற்கான முன்பண மானிய கோரிக்கையினையும், 21-ந்தேதி 2023-2024-ம் ஆண்டிற்கான முன் பணச் செலவின மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளன.

    இந்த நிலையில் சட்டப் பேரவை மண்டபம் முழுமையாக சுத்தம் செய்யப்பட்டுள்ளதோடு, ஒலிப் பெருக்கிகள் உள்ளிட்டவை முழுமையாக சோதனை செய்யப்பட்டு வருகிறது.

    அதேபோல் நுழைவாயிலில் உள்ளே செல்லும் வழி வெளியே வரும் வழி அறிந்துக்கொள்ள ஏதுவாக அறிவிப்பு பலகைகளும் அமைக்கப்பட்டுள்ளது.

    மேலும், தலைமைச் செயலகம் முழுவதுமாக சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு, சட்டமன்ற உறுப்பினர்கள் அறைகளில் உள்ள இருக்கைகளும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்க இன்னும் ஒரு நாள் உள்ள நிலையில் பணிகள் வேகமாக நடந்து வருகிறது.

    திங்கட்கிழமை காலை 10 மணிக்கு சட்டசபை கூட்டம் நடைபெறும் போது அரசு தயாரித்து வழங்கும் உரையை கவர்னர் முழுமையாக வாசிப்பாரா? அல்லது கடந்த ஆண்டை போல் சில வாசகங்களை தவிர்த்து விட்டு வாசிப்பாரா? என்பது அப்போது தான் தெரிய வரும்.


    கவர்னர் உரைக்கு பிறகு தொடர்ந்து நடைபெறும் சட்டசபையில் ஆளும் கட்சி-எதிர்கட்சி இடையே அனல் பறக்கும் விவாதங்கள் நடைபெறும் என தெரிகிறது. கேள்வி நேரத்தின் போது உறுப்பினர்களின் விவரங்கள், அவர்களது கேள்விகள் போன்றவற்றைக்காண வைக்கப்பட்டுள்ள அகண்ட திரையின் அகலம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

    காகிதம் இல்லாத சட்ட சபையின் அங்கமாக சட்டசபை மண்டபத்தில் ஒரு சில இடங்களில் அகண்ட திரைகள் வைக்கப்பட்டு உள்ளன.

    கேள்வி நேரத்தின்போது வினா எழுப்பும் உறுப்பினரின் பெயர், தொகுதி விவரங்கள், எழுப்பப்பட்ட வினா, அதற்கு பதிலளிக்கும் அமைச்சரின் பெயர், துறை விவரங்கள் அந்தத் திரையில் இடம் பெற்று வருகின்றன.

    இதற்காக வைக்கப்பட்டு உள்ள திரையின் அகலம் இப்போது அதிகரிக்கப்பட்டுள்ளதாக சட்டசபை செயலக அதிகாரிகள் தெரிவித்தனர். 50 அங்குலம் அளவில் இருந்த திரைகளின் அகலம் இப்போது கூடுதலாக்கப்பட்டுள்ளது.

    இதன் மூலம் திரையில் காட்டப்படும் விவரங்களை எங்கிருந்தும் எளிதாக பார்க்க முடியும். இதே போன்று சட்டசபையின் மண்டபத்தின் தரைத் தளத்தில் உள்ள பத்திரிகையாளர்களுக்கு சுழலும் வகையிலான நாற்காலிகள் வாங்கப்பட்டுள்ளன. அவையும் இந்த கூட்டத் தொடரில் பயன்பாட்டுக்கு வர உள்ளன.

    சட்டசபை கூட்டத் தொடரில் சில முக்கிய பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. சட்டம்-ஒழுங்கு நிலைமை உள்பட பல்வேறு முக்கிய பிரச்சினைகளை அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எழுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கடந்த ஆண்டின் தொடக்கத்தில் சட்டசபை கூட்டத் தொடரை தொடங்கி வைக்கும் வகையில் கவர்னர் ஆர்.என்.ரவி உரையாற்றினார். அப்போது அரசின் சார்பில் அளிக்கப்பட்ட உரையைத் தவிர்த்து, சில பத்திகளை விடுத்தும், சில வரிகளை அவரே சேர்த்தும் வாசித்தார். இதற்கு தமிழக அரசின் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

    கவர்னர் படித்த உரை அவைக் குறிப்பில் இடம் பெறாது எனவும் அரசின் சார்பில் தயாரித்து சட்ட சபைக்கு அளிக்கப்பட்ட உரையே இடம் பெறும் என்றும் அறிவிப்பு செய்யப்பட்டது. இதற்கான தீர்மானத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்து நிறைவேற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • வெளிநாட்டில் இருந்து நிதித்துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் காணொலி வாயிலாக பேசினார்.
    • அரசின் முக்கிய அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை மேற்கொண்டார்.

    தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 12ம் தேதி ஆளுநர் உரையுடன் கூடுகிறது. இதைதொடர்ந்து, வரும் 19ம் தேதியன்று தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

    இதை முன்னிட்டு, சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். குறிப்பாக, தமிழக பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசித்து வந்தார்.

    வெளிநாட்டில் இருந்து நிதித்துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் காணொலி வாயிலாக பேசினார்.

    முதலமைச்சரின் தனி செயலாளர் முருகானந்தன், அரசின் முக்கிய அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை மேற்கொண்டார்.

    • தமிழ்நாட்டில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளை ஆளுநர் ரவி தொடர்ந்து தெரிவித்து வருகிறார்.
    • பிப்ரவரி 19-ந் தேதி தமிழ்நாடு பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார்.

    சென்னை:

    தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் பிப்ரவரி 12-ந்தேதி தொடங்கும் நிலையில் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி இன்று திடீரென டெல்லி சென்றுள்ளார்.

    தமிழ்நாட்டில் ஆளும் தி.மு.க. அரசுடன் கவர்னர் ஆர்.என்.ரவி தொடர்ந்து மோதல் போக்கையே கடைபிடித்து வருகிறார். தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் நிறுத்தி வைப்பது, திருப்பி அனுப்புவது உள்ளிட்டவைகளால் கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

    அதன் பிறகு சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தலின் பேரில் கவர்னரும் முதலமைச்சரும் நேரடியாக அமர்ந்து பேசினார்கள். ஆனாலும் இதன் விவரம் வெளியிடப்படவில்லை.

    அதே நேரத்தில் தமிழ்நாட்டில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளை ஆளுநர் ரவி தொடர்ந்து தெரிவித்து வருகிறார்.

    தற்போது தமிழ்நாடு சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 12-ந் தேதி தொடங்க உள்ளது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் சட்டசபையில் கவர்னர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்த உள்ளார்.

    கடந்த ஆண்டு கவர்னர் உரையில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, காமராஜர், திராவிட மாடல் ஆகியவற்றை தவிர்த்துவிட்டு கவர்னர் ரவி உரையாற்றினார். அத்துடன் அவராகவே சிலவற்றையும் கவர்னர் உரையில் சேர்த்து வாசித்தார். இதனால் தமிழ்நாடு சட்டசபையில் அரசின் உரை மட்டுமே இடம் பெறும். கவர்னர் தன்னிச்சையாக வாசித்த உரை இடம்பெறாது என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தீர்மானத்தை வாசித்தார். உடனே சட்ட சபையில் இருந்து கவர்னர் ஆர்.என்.ரவி வெளிநடப்பு செய்தது பெரும் சர்ச்சையானது.

    அண்மையில் கேரளா சட்டசபையில் கவர்னர் முகமது ஆரிப் கான், மாநில அரசின் உரையை முழுமையாக வாசிக்காமல் 1.15 நிமிடம் மட்டுமே வாசித்து விட்டு வெளியேறியதும் பெரும் சர்ச்சையானது. இப்பின்னணியில் தமிழ்நாடு சட்டசபை வரும் 12-ந் தேதி கூடுகிறது. பிப்ரவரி 19-ந் தேதி தமிழ்நாடு பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார்.

    நடப்பாண்டின் முதல் கூட்டம் என்பதால் கவர்னர் உரை இடம்பெற உள்ளது. இம்முறை கவர்னர் ரவி என்ன மாதிரியான நிலைப்பாடு எடுக்கப் போகிறார்? என்பது எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது. இச்சூழலில் இன்று திடீரென கவர்னர் ஆர்.என்.ரவி டெல்லி சென்றுள்ளார். டெல்லிக்கு 3 நாட்கள் பயணமாக செல்லும் கவர்னர் ரவி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசுகிறார். இச்சந்திப்பின்போது தமிழ்நாடு நிலவரம் குறித்து கவர்னர் ரவி ஆலோசனை நடத்துவார் என கூறப்படுகிறது.

    • தமிழக சட்டசபைக் கூட்டம் வரும் 12-ம் தேதி தொடங்குகிறது.
    • பிப்ரவரி 19-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

    சென்னை:

    தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவு இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    தமிழக சட்டசபைக் கூட்டம் வரும் 12-ம் தேதி தொடங்குகிறது.

    பிப்ரவரி 19-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

    பிப்ரவரி 20-ம் தேதி மானிய கோரிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.

    நடப்பு ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் உரையுடன் காலை 10 மணிக்கு பேரவை கூடுகிறது.

    சட்டப் பேரவையில் யாரை, எங்கு அமரவைக்க வேண்டும் என முடிவெடுக்கும் அதிகாரம் சபாநாயகருக்கு உண்டு.

    சட்டசபை நிகழ்வுகளை நேரலையாக காண்பிக்க வேண்டும் என்பதே அரசின் திட்டம்.

    வேறு எந்த மாநிலத்திலும் தமிழகத்தைப் போல நேரலையில் காட்டப்படுவதில்லை. அரசிடம் எந்த ஒளிவு மறைவும் இல்லை என தெரிவித்தார்.

    • கே.என்.நேரு, சக்கரபரணி, பெரியகருப்பன், அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்பு.
    • பால், முட்டை உற்பத்தியாளர்கள், விளை பொருள் விற்பனையாளர்களிடம் கருத்து கேட்பு.

    சென்னை தலைமை செயலகத்தில், 2024- 2025ம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கை தொடர்பாக கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்று வருகிறது

    இந்த கூட்டத்தில், அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கே.என்.நேரு, சக்கரபரணி, பெரியகருப்பன், அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

    கூட்டத்தின்போது, விவசாய சங்க பிரதிநிதிகள், கரும்பு விவசாயிகள், பால், முட்டை உற்பத்தியாளர்கள், விளை பொருள் விற்பனையாளர்களிடம் கருத்து கேட்கப்படுகிறது.

    • காஞ்சிபுரம் பட்டாசு தொழிற்சாலை விபத்து குறித்து காங்கிரஸ் உறுப்பினர் செல்வப்பெருந்தகை கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார்.
    • கிருஷ்ணகிரியில் நடந்த ஆணவக்கொலை தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார்.

    சென்னை:

    தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை தொடங்கியது. அன்று 2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். மறுநாள் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

    இந்நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் 3-ம் நாள் நிகழ்வு இன்று தொடங்கியது. கூட்டத்தொடர் தொடங்கியதும் மறைந்த முன்னாள் எம்எல்ஏக்கள் மாரிமுத்து, தங்கவேலு, பின்னணி பாடகி வாணி ஜெயராம் உள்ளிட்டோருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.

    பின்னர், காஞ்சிபுரம் பட்டாசு தொழிற்சாலை விபத்து குறித்து காங்கிரஸ் உறுப்பினர் செல்வப்பெருந்தகை கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார். இந்த தீர்மானத்திற்கு வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் விளக்கம் அளிக்கிறார்.

    இதற்கிடையே கிருஷ்ணகிரியில் நடந்த ஆணவக்கொலை தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார்.

    அப்போது, பட்டப்பகலில் கொடூரமாக கொலை நடந்துள்ளது. இதற்கு அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். முதலமைச்சர் பதிலளிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கூறினார்.

    இதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆணவக்கொலையில் சம்மந்தப்பட்டவர் அவதானப்பட்டி அதிமுக கிளைச்செயலாளர் என்பது தெரிய வந்துள்ளது. சமூக நீதி காக்கும் மண்ணாக உள்ள தமிழ்நாட்டில், இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாத வண்ணம் அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைவரும் ஒருங்கிணைந்து சமூக நல்லிணக்கத்தை பேணிக்காக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என கூறினார்.

    கொலை செய்த பெண்ணின் தந்தையை அதிமுக கிளை செயலாளர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதால் சட்டசபையில் அ.தி.மு.க.வினர் அமளியில் ஈடுபட்டனர்.

    • தமிழக பட்ஜெட்டில் அனைத்து துறை வளர்ச்சிக்கான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
    • விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    விருதுநகர்

    தமிழக பட்ஜெட் குறித்து விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசின் இந்த ஆண்டுக்கான பட்ஜெட் தொலைநோக்கு பார்வை யோடு தயாரிக்கப் பட்டுள்ளது. தமிழகத்தின் அனைத்து துறைகளின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இது ஒரு சமூக நீதிக்கான பட்ஜெட்டாகும்.

    குறிப்பாக குடும்பத் தலைவிகளுக்கு இந்த நிதியாண்டில் இருந்து மாதம் ரூ.1000 உரிமைத் தொகை யாக வழங்கப்படும் என்ற அறிவிப்பு தமிழகத்தையே மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது.

    அதேப்போல விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருமங்கலம் நகரில் இருந்து மதுரை ஒத்தக்கடை வரை மெட்ரோ ெரயில் திட்டம் ரூ.8ஆயிரத்து 800 கோடி செலவில் நிறைவேற்றப்படும் என்று அறிவித்திருப்பது அனைத்து மக்களையும் மகிழ்ச்சியுறச் செய்துள்ளது.

    மதுரைக்கு மெட்ரோ ெரயில் திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று நாடாளு மன்றத்தில் பலமுறை குரல் கொடுத்தேன். என் குரலுக்கு மதிப்பளித்து மதுரை மெட்ரோ ெரயில் திட்டத்திற்கு நிதி ஒதுக்கி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    தமிழ்நாடு அரசின் வருவாய் பற்றாக்குறையை ரூ.62 ஆயிரம் கோடியில் இருந்து ரூ.30 ஆயிரம் கோடியாக குறைத்து இருப்பது மிகவும் பாராட்டுக்குரியது.

    பள்ளிக்கூடம் முதல் (காலை உணவு) ஏரி, குளங்கள் சீரமைப்பு, பன்னோக்கு, மருத்துவ மனைகள், போக்குவரத்து 14 ஆயிரத்து 500 மெகாவாட் திறன் கொண்ட புதிய மின் திட்டங்கள் என அனைத்து துறை வளர்ச்சிக்கான திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருப்பது தொலை நோக்குப் பார்வையான பட்ஜெட் என்பதற்கும், சமூக நீதிக்கான பட்ஜெட் என்பதற்கும் எடுத்துக் காட்டுகள் ஆகும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பட்ஜெட்டை நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.
    • சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நினைவிடத்தில் வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார்.

    தமிழக சட்டசபையில் இந்த ஆண்டிற்கான பொது பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.

    இந்த நிகழ்வை தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் சட்டசபை கூட்டத்தை ஏப்ரல் 21-ந்தேதி வரை நடத்த முடிவு எடுத்து அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், சட்டசபையில் வேளாண் பட்ஜெட்டை வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார்.

    • மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு முதல் கட்டமாக 7000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • நிகழ்காலத்துக்காக மட்டுமல்ல, எதிர்காலத்தையும் உள்ளடக்கியதாக இந்தத் திட்டங்கள் அமைந்துள்ளன.

    சென்னை:

    பட்ஜெட் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

    'திராவிட மாடல்' என்ற கருத்தியலுக்கு முழுமையான எடுத்துக்காட்டாக இந்த நிதிநிலை அறிக்கை உருவாக்கப்பட்டு வெளியாகி உள்ளது. 'திராவிட மாடல் என்றால் என்ன?' என்று கேட்டவர்களுக்கு, "அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சி" என்று நான் பதில் அளித்தேன். அனைத்துத் துறை வளர்ச்சி, அனைத்து மக்கள் வளர்ச்சி, அனைத்து மாவட்ட வளர்ச்சி என்று நான் விளக்கி இருந்தேன்.

    இந்த நிதிநிலை அறிக்கை என்பது திராவிட மாடல் கருத்தியலை முழுமையாக உள்ளடக்கிய நிதிநிலை அறிக்கையாக அமைந்துள்ளது. எந்தவொரு ஆட்சியாக இருந்தாலும் அதனுடைய முகமாக இருப்பது ஆண்டுதோறும் தாக்கல் செய்யப்படும் நிதிநிலை அறிக்கைதான்.

    ஓராண்டு காலத்துக்கான அறிக்கையாக மட்டுமல்லாமல், அடுத்தடுத்து வரக்கூடிய ஆண்டுகளை வழிநடத்தும் அறிக்கையாகவும் அவை அமைந்திருக்கும். அந்த வகையில் 2023-24-ஆம் நிதியாண்டுக்கான அறிக்கை என்பது, தலைமுறைகளைத் தாண்டி வாழ்வளிக்கும் அறிக்கையாக அமைந்திருக்கிறது. தமிழ்நாட்டின் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் வாழ்நாள் முழுக்க வாழ்க்கைக்கு உதவி செய்யப் போகும் பல்வேறு நலத்திட்டங்கள் இந்த நிதிநிலை அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.

    மக்களுக்கு அளித்த மிக முக்கியமான வாக்குறுதியான 1000 ரூபாய் உரிமைத்தொகை என்பதை அறிவித்துள்ளோம். இதற்கு முதல் கட்டமாக 7000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டு மகளிர் வாழ்வில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தப் போகும் மகத்தான அறிவிப்பாக இது இந்த நிதிநிலை அறிக்கையில் அமைந்துள்ளது.

    பள்ளி மாணவர்க்கு காலை உணவுத் திட்டம், அரசுப் பள்ளியில் படித்து உயர்கல்விக்கு வரும் மாணவியர்க்கு 1000 ரூபாய், குடிமைப் பணித் தேர்வுக்குப் பயிற்சி பெறும் தேர்வாளர்களுக்கு மாதம்தோறும் 7500 ரூபாய், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத் தொழில் முனைவோரை உருவாக்க அண்ணல் அம்பேத்கர் பெயரால் திட்டம், புதிரை வண்ணார் நல வாரியம் புத்துயிர்ப்பு, ஆதி திராவிடர் குடியிருப்புகளையும், அவர்தம் சமுதாய வளர்ச்சியை ஊக்குவிக்கவும் அயோத்திதாசப் பண்டிதர் பெயரால் மேம்பாட்டுத் திட்டம், பின்தங்கிய வட்டாரங்களை வளர்க்க வளமிகு வட்டாரங்கள் திட்டம், சென்னையைச் சீராக வளர்க்க வடசென்னை வளர்ச்சித் திட்டம், இலங்கைத் தமிழர்க்கு 3,959 வீடுகளைக் கட்டித் தருதல், சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியம் 1 லட்சம் பேருக்குக் கூடுதலாக வழங்குதல் , பெண் தொழில்முனைவோர்க்கான புத்தொழில் இயக்கம், மாற்றுத்திறனாளிகள் - சிறுபான்மையினர் - பிற்படுத்தப்பட்டோருக்கான திட்டங்கள் எனத் தமிழ்நாட்டில் அனைத்துச் சமூகங்களையும், அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கிய வளர்ச்சியாக இந்த நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது.

    ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது தமிழ்நாட்டின் ஒவ்வொரு தனிமனிதர் நலனை உள்ளடக்கியும் - ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டின் வளர்ச்சியை மனதில் வைத்தும் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. நிகழ்காலத்துக்காக மட்டுமல்ல, எதிர்காலத்தையும் உள்ளடக்கியதாக இந்தத் திட்டங்கள் அமைந்துள்ளன.

    மகளிர், மாணவ - மாணவியர், இளைஞர், ஏழை எளிய விளிம்பு நிலை மக்களைக் கை தூக்கிவிடுவதன் மூலமாக அவர்களை மட்டுமல்ல, அவர்கள் வழியில் வர இருக்கிற தலைமுறையையும் சேர்த்து இந்த நிதிநிலை அறிக்கை வளர்த்தெடுக்க இருக்கிறது. இதனைத்தான் ஒற்றைச் சொல்லாக 'திராவிட மாடல்' என்று நாங்கள் சொல்கிறோம்.

    இது ஒரு கட்சியின் அரசல்ல; ஓர் இனத்தின் அரசு! கொள்கையின் அரசு! என்று நாங்கள் சொல்லி வருவதை உறுதிப்படுத்துவதாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கங்களை அறியும் பக்குவம் இல்லாத எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி அவர்கள், 'மின்மினிப் பூச்சியைப் போன்றது இந்த அறிக்கை. மின்மினிப் பூச்சியில் இருந்து வெளிச்சம் கிடைக்காது' என்று சொல்லி இருக்கிறார்.

    கழக அரசு வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை என்பது உதயசூரியனைப் போல் அனைவருக்கும் ஒளியூட்டக் கூடியதே தவிர மின்மினிப்பூச்சி அல்ல. உதயசூரியனின் வெப்பத்தில் மின்மினிப்பூச்சிகள் காணாமல் போய்விடும். இருண்ட காலத்தைத் தமிழ்நாட்டுக்கு வழங்கிய அவரால் உதயசூரிய ஒளியைப் பார்க்க முடியாமல் தவிப்பதையே அவரது பேட்டி உணர்த்துகிறது.

    அறிவிக்கப்பட்ட திட்டங்களை முறையாக நிறைவேற்றி உரிய காலத்தில் முடித்து, முழுப்பயனையும் மக்களுக்கும் மாநிலத்துக்கும் வழங்க அமைச்சர்கள் முதல் அலுவலர்கள் வரை அனைவரும் அயராது பாடுபட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு முதலமைச்சர் கூறி உள்ளார்.

    ×