search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கவர்னர் உரை"

    • சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்க இன்னும் ஒரு நா‌ள் உள்ள நிலையில் பணிகள் வேகமாக நடந்து வருகிறது.
    • சட்டமன்ற உறுப்பினர்கள் அறைகளில் உள்ள இருக்கைகளும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழக சட்டசபை கூட்டம் வருகிற 12-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு கூடுகிறது.

    அரசியலமைப்புச் சட்டத்தின்படி, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி அன்றைய தினம் உரை நிகழ்த்த உள்ளார். அவரது உரையின் தமிழாக்கத்தை சட்டசபை சபாநாயகர் அப்பாவு வாசிக்க உள்ளார். இந்த நிகழ்வைத் தொடர்ந்து சட்டசபையின் அலுவல் ஆய்வு குழு கூட்டம் திங்கட்கிழமை மதியம் நடைபெற உள்ளது.

    கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முன்மொழியப்பட்டு, அதன் மீதான விவாதம் 3 நாட்கள் வரை நடைபெறும் என எதிர் பார்க்கப்படுகிறது. ஆனாலும், நாட்களை இறுதி செய்யும் பணியை அலுவல் ஆய்வு குழு மேற்கொள்ளும்.

    அதனைத் தொடர்ந்து, 19-ந்தேதி நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு 2024-2025-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையினை தாக்கல் செய்வார்.


    மேலும் 20-ந்தேதி 2024-2025-ம் ஆண்டிற்கான முன்பண மானிய கோரிக்கையினையும், 21-ந்தேதி 2023-2024-ம் ஆண்டிற்கான முன் பணச் செலவின மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளன.

    இந்த நிலையில் சட்டப் பேரவை மண்டபம் முழுமையாக சுத்தம் செய்யப்பட்டுள்ளதோடு, ஒலிப் பெருக்கிகள் உள்ளிட்டவை முழுமையாக சோதனை செய்யப்பட்டு வருகிறது.

    அதேபோல் நுழைவாயிலில் உள்ளே செல்லும் வழி வெளியே வரும் வழி அறிந்துக்கொள்ள ஏதுவாக அறிவிப்பு பலகைகளும் அமைக்கப்பட்டுள்ளது.

    மேலும், தலைமைச் செயலகம் முழுவதுமாக சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு, சட்டமன்ற உறுப்பினர்கள் அறைகளில் உள்ள இருக்கைகளும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்க இன்னும் ஒரு நாள் உள்ள நிலையில் பணிகள் வேகமாக நடந்து வருகிறது.

    திங்கட்கிழமை காலை 10 மணிக்கு சட்டசபை கூட்டம் நடைபெறும் போது அரசு தயாரித்து வழங்கும் உரையை கவர்னர் முழுமையாக வாசிப்பாரா? அல்லது கடந்த ஆண்டை போல் சில வாசகங்களை தவிர்த்து விட்டு வாசிப்பாரா? என்பது அப்போது தான் தெரிய வரும்.


    கவர்னர் உரைக்கு பிறகு தொடர்ந்து நடைபெறும் சட்டசபையில் ஆளும் கட்சி-எதிர்கட்சி இடையே அனல் பறக்கும் விவாதங்கள் நடைபெறும் என தெரிகிறது. கேள்வி நேரத்தின் போது உறுப்பினர்களின் விவரங்கள், அவர்களது கேள்விகள் போன்றவற்றைக்காண வைக்கப்பட்டுள்ள அகண்ட திரையின் அகலம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

    காகிதம் இல்லாத சட்ட சபையின் அங்கமாக சட்டசபை மண்டபத்தில் ஒரு சில இடங்களில் அகண்ட திரைகள் வைக்கப்பட்டு உள்ளன.

    கேள்வி நேரத்தின்போது வினா எழுப்பும் உறுப்பினரின் பெயர், தொகுதி விவரங்கள், எழுப்பப்பட்ட வினா, அதற்கு பதிலளிக்கும் அமைச்சரின் பெயர், துறை விவரங்கள் அந்தத் திரையில் இடம் பெற்று வருகின்றன.

    இதற்காக வைக்கப்பட்டு உள்ள திரையின் அகலம் இப்போது அதிகரிக்கப்பட்டுள்ளதாக சட்டசபை செயலக அதிகாரிகள் தெரிவித்தனர். 50 அங்குலம் அளவில் இருந்த திரைகளின் அகலம் இப்போது கூடுதலாக்கப்பட்டுள்ளது.

    இதன் மூலம் திரையில் காட்டப்படும் விவரங்களை எங்கிருந்தும் எளிதாக பார்க்க முடியும். இதே போன்று சட்டசபையின் மண்டபத்தின் தரைத் தளத்தில் உள்ள பத்திரிகையாளர்களுக்கு சுழலும் வகையிலான நாற்காலிகள் வாங்கப்பட்டுள்ளன. அவையும் இந்த கூட்டத் தொடரில் பயன்பாட்டுக்கு வர உள்ளன.

    சட்டசபை கூட்டத் தொடரில் சில முக்கிய பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. சட்டம்-ஒழுங்கு நிலைமை உள்பட பல்வேறு முக்கிய பிரச்சினைகளை அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எழுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கடந்த ஆண்டின் தொடக்கத்தில் சட்டசபை கூட்டத் தொடரை தொடங்கி வைக்கும் வகையில் கவர்னர் ஆர்.என்.ரவி உரையாற்றினார். அப்போது அரசின் சார்பில் அளிக்கப்பட்ட உரையைத் தவிர்த்து, சில பத்திகளை விடுத்தும், சில வரிகளை அவரே சேர்த்தும் வாசித்தார். இதற்கு தமிழக அரசின் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

    கவர்னர் படித்த உரை அவைக் குறிப்பில் இடம் பெறாது எனவும் அரசின் சார்பில் தயாரித்து சட்ட சபைக்கு அளிக்கப்பட்ட உரையே இடம் பெறும் என்றும் அறிவிப்பு செய்யப்பட்டது. இதற்கான தீர்மானத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்து நிறைவேற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×