search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தனியார்"

    • வீட்டில் பதிவாகியிருந்த கைரேகைகளை போலீசார் பதிவு செய்தனர்.
    • கண்காணிப்பு காமிரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் சைமன் நகரை சேர்ந்தவர் சங்கரநாராயணன்( வயது 38).தனியார் நிறுவன மேலாளர். இவரது மனைவி பிருந்தா. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.

    கடந்த 7-ந் தேதி பிருந்தா குழந்தையுடன் வில்லுக்குறி அருகே உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார். சங்கரநாராயணன் வேலை விஷயமாக நிறுவனத்தில் தங்கியிருந்தார்.அதிகாலையில் வீட்டிற்கு வந்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது.

    உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 62 பவுன் நகை, ரூ.90 ஆயிரம் ரொக்க பணம் திருடப்பட்டு இருந்தது. இதுகுறித்து நேசமணி நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    வீட்டில் பதிவாகியிருந்த கைரேகைகளையும் போலீசார் பதிவு செய்தனர். அப்போது இரண்டு கைரேகைகள் சிக்கியது. கொள்ளையர்களை பிடிக்க இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் விசாரணையை தொடங்கினார்கள்.

    அந்த பகுதியில் பதிவாகி இருந்த கண்காணிப்பு கேமராவின் காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டது .அப்போது கண்காணிப்பு கேமராவில் இரண்டு நபர்களின் உருவம் பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளை போலீசார் கைப்பற்றி உள்ளனர் .அந்த நபர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்த ப்பட்டு வருகிறது.

    முதல் கட்ட விசாரணையில் அவர்கள் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. அவர்களை பிடிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.

    • கொடுமுடி அருகே இச்சிப்பாளையத்தில் தனியாருக்கு சொந்தமான தேங்காய் நார் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது.
    • ஆர்.டி.ஓ. சதீஷ்குமார் முன்னிலையில் மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் தனபால் மற்றும் தேவராஜ் தலைமையிலான குழு தேங்காய் நார் ஆலையில் ஆய்வு மேற்கொண்டார்கள்.

    கொடுமுடி:

    கொடுமுடி அருகே இச்சிப்பாளையத்தில் தனியாருக்கு சொந்தமான தேங்காய் நார் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இங்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொழிற்சாலை தொடங்கிய நிலையில் அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்ததால் தற்காலிகமாக தொழிற்சாலை மூடப்பட்டது.

    இதனை தொடர்ந்து தொழிற்சாலை நிர்வாகம் தரப்பில் ஆர்.டி.ஓ.வுக்கு மாசு கட்டுப்பாட்டு ஆய்வு நடத்து வதற்கு மனு கொடுத்தார்கள்.

    இதனையடுத்து ஆர்.டி.ஓ. சதீஷ்குமார் முன்னிலையில் மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் தனபால் மற்றும் தேவராஜ் தலைமையிலான குழு தேங்காய் நார் ஆலையில் ஆய்வு மேற்கொண்டார்கள்.

    ஆய்வின்போது கொடுமுடி தாசில்தார் மாசிலாமணி, துணை தாசில்தார் பரமசிவம், வருவாய் ஆய்வாளர் உஷாராணி மற்றும் வருவாய் துறையினர், இன்ஸ்பெக்டர்கள் ஜீவானந்தம், ஆனந்த் ஆகியோர் உடனிருந்தனர்.

    ஆய்வுக்கு பிறகு பொதுமக்கள் இடையே ஆர்.டி.ஓ. சதீஷ்குமார் கூறுகையில், ஆய்வின் முடிவுகளை கலெக்டருக்கு அனுப்பப்படும். அவரது அறிவுறுத்தலின்படி மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    • மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்யப்பட்டது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    மார்த்தாண்டம் சி.எஸ்.ஐ. சர்ச் பகுதியில் ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது பள்ளியில் காலாண்டு தேர்வு முடிவுற்ற நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து நேற்று காலையில் பள்ளியை திறக்க நிர்வாகிகள் வந்தபோது பள்ளியின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் பள்ளி அலுவலகத்தில் சென்று பார்த்தபோது கம்ப்யூட்டர் சி.பி.யு. மற்றும் ஹோம் தியேட்டர்கள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

    இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • மின்விநியோகம் சீரான வேளையில் திடீரென மின்கசிவு ஏற்பட்டு அருகில் இருந்த பஞ்சு மூட்டைகளில் தீ பரவியது.
    • இந்த தீ விபத்தில் சுமார் ரூ.5 லட்சம் மதிப்பிலான பஞ்சு மூட்டைகள் தீயில் கருகி சேதமாகி உள்ளது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் நெகமம் பிரிவில் கல்யாண சுந்தரம் என்பவருக்கு சொந்தமான பஞ்சு ஆலை உள்ளது. இதில் 30-க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் இரவு திடீரென மின்விநியோகம் துண்டிப்பானது. பிறகு சிறிது நேரம் கழித்து மின்விநியோகம் சீரான வேளையில் திடீரென மின்கசிவு ஏற்பட்டு அருகில் இருந்த பஞ்சு மூட்டைகளில் தீ பரவியது.

    தீ மளமளவென பரவியதால் உடனே வேலை பார்த்து கொண்டிருக்கும் தொழிலாளர்கள் எல்லாம் அலறி அடித்தபடி வெளியே ஓடி வந்தனர். பிறகு சத்தியமங்கலம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.

    சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் 2 மணி நேர போராட்டத்திற்கு பின்பு தீயை அணைத்தனர். இதனால் சத்தியமங்கலம்- மேட்டுப்பாளையம் சாலையில் சிறிது நேரம் புகை மூட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து தீயணைப்பு துறையினர் பஞ்சு மூட்டைகள் மீது தண்ணீர் ஊற்றி ஈரப்படுத்தினர்.

    இந்த தீ விபத்தில் சுமார் ரூ.5 லட்சம் மதிப்பிலான பஞ்சு மூட்டைகள் தீயில் கருகி சேதமாகி உள்ளது.

    • சத்தியமங்கலம் அருகே ஒரு தனியார் திருமண மண்படத்தில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக சத்தியமங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • அப்போது அங்கு 30 பேர் கும்பலாக சூதாடுவது தெரியவந்தது.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் அருகே ஒரு தனியார் திருமண மண்படத்தில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக சத்தியமங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் ரோந்து சென்று தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

    அப்போது சத்தியமங்கலம் அடுத்த ராஜன் நகர் என்ற பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் சிலர் சூதாடுவது தெரியவந்தது. இதுப்பற்றி தெரியவந்ததும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

    அப்போது அங்கு 30 பேர் கும்பலாக சூதாடுவது தெரியவந்தது. இதையடுத்து அங்கு இருந்த ரு. 2 லட்சத்து 18 ஆயிரம் பணம் மற்றும் 5 சொகுசுகார்கள், 5 மோட்டார் சைக்கிள்களை கைப்பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சம்பவத்தன்று இரவு பிரதாப் இரவு உணவு சாப்பிட்டு விட்டு தூங்க சென்று விட்டார். நள்ளிரவில் அவர் திடீரென வாந்தி எடுத்துள்ளார்.
    • இதையடுத்து அவரது மனைவி மற்றும் குடும்பத்தார் அவரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு சூரம்பட்டி பாரதிபுரம் பகுதியை சேர்ந்தவர் பிரதாப் (30). இவரது மனைவி வித்யா. பிரதாப் மூலப்பாளையத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று இரவு பிரதாப் இரவு உணவு சாப்பிட்டு விட்டு தூங்க சென்று விட்டார். நள்ளிரவில் பிரதாப் திடீரென வாந்தி எடுத்துள்ளார். இதையடுத்து அவரது மனைவி மற்றும் குடும்பத்தார் அவரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அப்போது பிரதாப்பை பரிசோதித்த டாக்டர்கள் அவர் விஷம் குடித்திருப்பதாக அவரது மனைவி மற்றும் உறவின ர்களிடம் தெரிவித்தனர். இந்நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த பிரதாப் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 100 நாள் வேலை திட்டத்திற்கு நிலுவையில் உள்ள ஊதிய தொகையை உடனே வழங்க வேண்டும்.
    • புதிய கல்வி கொள்கை என்ற பெயரில் கல்வியை தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சியை கைவிட வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் ஆலமரத்தடி பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெற்றது.

    ஒன்றிய செயலாளர் ஸ்டாலின்பாபு தலைமை தாங்கினார்.

    மாநில குழு உறுப்பினர் நாகை மாலி எம்.எல்.ஏ பிரச்சார இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

    இதில் 100 நாள் வேலை திட்டத்திற்கு நிலுவையில் உள்ள ஊதிய தொகையை உடனே வழங்க வேண்டும், பெட்ரோல்- டீசல், சமையல் எரிவாயு விலை வியர்வை குறைக்க வேண்டும், அக்னிபாத் திட்டத்தின் மூலம் பலவீனப்படுத்தும் முயற்சியை நிறுத்த வேண்டும், புதிய கல்வி கொள்கை என்ற பெயரில் கல்வியை தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சியை கைவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டன.

    இதில் மாவட்ட குழு உறுப்பினர்கள் லெனின், கஸ்தூரி, விவசாய சங்க ஒன்றிய செயலாளர் மார்க்ஸ், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் பாரதி, முன்னாள் மாவட்ட குழு உறுப்பினர் ஜெயபால், ஜனநாயக வாலிபர் சங்கம் ஒன்றிய செயலாளர் பாலு, ஒன்றிய தலைவர் பிரபாகரன் உள்ளிட்டோர் பங்கேற்று கடைகள், வீடுகளில் துண்டு பிரசுரங்கள் வழங்கினர்.

    • சுமார் 20 கிராம் எடை கொண்ட நகையை பெற்றுக் கொண்டு ரூ.70 ஆயிரம் கொடுத்துள்ளார்.
    • இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    சுங்கான்கடை அடுத்த களியங்காடு பகுதியை சேர்ந்தவர் சிதம்பரம் (வயது 44). இவர் பரசேரியில் தனியார் பள்ளிக்கூடம் மற்றும் நகை அடகு பிடிக்கும் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த 6ம் தேதி காலை நகை அடகு பிடிக்கும் கடைக்கு வந்த சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் நகை அடகு வைக்க வேண்டும் என கூறியுள்ளார். அப்போது பணியில் இருந்த ஐஸ்வர்யா அவர் கொடுத்த சுமார் 20 கிராம் எடை கொண்ட நகையை பெற்றுக் கொண்டு ரூ.70 ஆயிரம் கொடுத்துள்ளார்.

    பின்னர் அந்த நபரின் நடத்தையில் சந்தேகமடைந்த ஐஸ்வர்யா நகைகளை சோதனை செய்துள்ளார். அப்போது அந்த நபர் கொடுத்த நகை மற்றும் முகவரி போலி என தெரியவந்தது. இதுகுறித்து சிதம்பரம் இரணியல் போலீசில் புகாரளித்தார்.

    புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலி நகைகள் வைத்து ஏமாற்றிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    • விபத்தில் தனயார் நிறுவன ஊழியர் கீழே விழுந்து தலையில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.
    • இது குறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மொடக்குறிச்சி:

    ஈரோடு மாவட்டம் சிவகிரி அடுத்த காகம் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகரன் (48). இவர் ஈரோட்டில் உள்ள ஒரு பர்னிச்சர் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    இவர் வேலை முடிந்து ஈரோட்டில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் மொடக்குறிச்சி அடுத்த கருந்தேவன்பாளையம் பகுதியில் வந்து கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக ஒரு மூதாட்டி வந்தார்.

    அப்போது அவர் மீது மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக மோதியது.

    இதில் சந்திரசேகர் கீழே விழுந்து தலையில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். இதில் காயம் அடைந்த மூதாட்டியை மீட்டு 108 ஆம்புலன்சு மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    இது குறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • சின்னசேலம் வன்முறை சம்பவத்தை கண்டித்து சேலம், நாமக்கல் மாவட்டங்களில் தனியார் பள்ளிகள் மூடினார்கள்.
    • குறிப்பாக, பள்ளிக் கூட்டத்திற்குள் வைக்கப்பட்டிருந்த மாணவ- மாணவிகளின் கல்வி சான்றிதழ் தீக்கிரையாக்கப்பட்டன.

    சேலம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் இன்டர்நேசனல் பள்ளி வன்முறையாளர்களால் சூறையாடப்பட்டது. குறிப்பாக, பள்ளிக் கூட்டத்திற்குள் வைக்கப்பட்டிருந்த மாணவ- மாணவிகளின் கல்வி சான்றிதழ் தீக்கிரையாக்கப்பட்டன. மேலும் பள்ளி முன்பு நிறுத்தியிருந்த காவல் துறையின் பஸ்சை வன்முறையாளர்கள் தீ வைத்து கொளுத்தினார்கள். போலீஸ் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. தடுக்க முயன்ற டி.ஐ.ஜி.பாண்டியன், போலீஸ் சூப்பிரண்டுகள் ஸ்ரீஅபிநவ் (சேலம்), செல்வகுமார் (கள்ளக்குறிச்சி) உள்ளிட்ட போலீஸ் உயர் அதிகாரிகள் உள்பட 55 போலீசார் காயம் அடைந்தனர்.

    இந்த வன்முறை சம்பவத்தை கண்டித்து தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு இன்று முதல் தமிழகம் முழுவதும் தனியார் பள்ளிகள் இயங்காது என அறிவித்துள்ளது.

    சேலம், நாமக்கல் மாவட்டங்களில் 1500-க்கும் மேற்பட்ட தனியார் மெட்ரிக் பள்ளிகள், சி.பி.எஸ்.இ.பள்ளிகள், இன்டர்நேசனல் பள்ளிகள் இயங்கி வருகின்றன.

    இதில் சேலம் மாநகரத்தில் உள்ள பெரும்பாலான பள்ளிகள் இன்று திறக்கப்படவில்லை. அதுபோல் சேலம் புறநகர் மாவட்டத்தில் மேட்டூர், எடப்பாடி, சங்ககிரி, ஆத்தூர், வீரபாண்டி, ஏற்காடு, கெங்கவல்லி, நங்கவள்ளி, தலைவாசல், பொத்தநாயக்கன் பாளையம், மேச்சேரி, தாரமங்கலம், வாழப்பாடி, ஏத்தாப்பூர், காகாபாளையம், இடங்கணசாலை, ஓமலூர், காடையாம்பட்டி, மகுடஞ்சாவடி, தேவூர் உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலான தனியார் பள்ளிகள் திறக்கப்படவில்லை.

    அதுபோல் நாமக்கல் மாவட்டத்தில், நாமக்கல், திருச்செங்கோடு, பரமத்திவேலூர், ராசிபுரம், குமாரபாளையம், பாண்டமங்கலம், மோகனூர், கொல்லிமலை, சேந்தமங்கலம், பள்ளிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலான தனியார் மெட்ரிக் பள்ளிகள், சி.பி.எஸ்.இ. பள்ளிகள் திறக்கப்படவில்லை.

    பள்ளிக் கூடங்கள் திறக்கப்படாது என்பது பற்றிய தகவல் முன்கூட்டியே பள்ளி நிர்வாகம் சார்பில் எஸ்.எம்.எஸ், மின்னஞ்சல் முகவரி வாயிலாக மாணவ- மாணவிகளின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தகவல் அளிக்கப்படாத, தகவல் கிடைக்காத பெற்றோர்கள், தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து வந்தனர். பள்ளி முன்பகுதி கேட் மூடப்பட்டு, இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படாது என நோட்டீசு ஒட்டப்பட்டிருந்தது. இதனால் பெற்றோர், மாணவ- மாணவிகள் ஏமாற்றத்துடன் வீட்டுக்கு திரும்பினர்.

    சேலம், நாமக்கல் மாவட்டங்களில் ஒரு சில பள்ளிகள் மட்டுமே திறக்கப்பட்டு இருந்தது. அதுபோல் ஒரு சில தனியார் பள்ளிகள் உயர்நிலை, மேல்நிலை வகுப்புக்காக பள்ளிகள் திறந்திருந்தனர்.

    பல தனியார் பள்ளிகள் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அவர்கள் பள்ளின்கூட்டங்களை சுற்றிலும் கண்காணித்து வருகின்றன.

    • மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி மாணவியின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கடந்த 4 நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர்.
    • பள்ளிக்குள் வைத்திருந்த அனைத்து சான்றிதழ்களும் கருகியது.

    பரமத்திவேலூர்:

    தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில தலைவர் ராஜா, மாநில செயலாளர் இளங்கோவன்,மாநில பொருளாளர் சந்திரசேகர் ஆகியோர் விடுத்துள்ள செய்தில் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே இயங்கிவரும் தனியார் பள்ளியின் விடுதில் தங்கி பயின்று வந்த 12-ம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி கடந்த 13-ந் தேதி பள்ளியின் விடுதி மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி மாணவியின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கடந்த 4 நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று பாதுகாப்புக்கு வந்த போலீசாரை கல்வீசி தாக்கியும், பள்ளி மற்றும் காவல்துறையினரின் வாகனங்களுக்கும், பள்ளி வாகனங்களுக்கும் தீ வைத்த கும்பல் பள்ளி வளாகத்திற்கு புகுந்து பள்ளியின் உடமைகளை சேதப்படுத்தியும் உள்ளனர். பள்ளிக்குள் வைத்திருந்த அனைத்து சான்றிதழ்களும் கருகியது.

    இதனால் பள்ளியில் பயிலும் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படவேண்டும். தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கும்,பள்ளி உடைமைகளுக்கும்,

    ஆசிரியர்கள்,ஊழியர்கள் உள்ளிட்டோரின் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறியுள்ளது.

    இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு தனியார் பள்ளியின் கூட்டமைப்பின் சார்பில் மேற்கண்ட பள்ளியில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளின் நிர்வாகிகள் மற்றும் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் இன்று கருப்பு வண்ண பேட்ஜ் அணிந்து அந்தந்த மாவட்டங்களில் உள்ள கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டுகளை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க உள்ளனர். எனவே இன்று தனியார் பள்ளிகள் இயங்காது.இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

    பரமத்தி வேலூர் தாலுகாவிற்கு உட்பட்ட தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள், பிரைமரி மற்றும் நர்சரி பள்ளிகள், சிபிஎஸ்இ பள்ளிகள் என அனைத்து பள்ளிகளையும் தனியார் பள்ளி நிர்வாகிகள் இன்று ஒரு நாள் மட்டும் பள்ளிகளை மூடி சின்னசேலம் அருகே தனியார் பள்ளியில் நடைபெற்ற வன்முறை சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    • சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்
    • 150 பேர் மீது வழக்கு

    கன்னியாகுமரி:

    புதுக்கடை அருகே கீழ்குளம் வில்லாரி விளை சந்திப்பு பகுதியில் தனியார் மதுபான கடை அமைக்க கடந்த சில நாட்களுக்கு முன்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    இதற்கு அந்த பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் கடை அமைக்க வில்லை. இந்த நிலையில் நேற்று மாலையில் திடீர் என ஒரு கடையில் மதுபான பொருட்களை இறக்கியுள்ளனர். இந்த தகவல் அந்த பகுதியில் பரவியதும், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மதுபான பொருட்கள் இறக்க கூடாது என பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    ஆனால் பொதுமக்கள் எதிர்ப்பையும் மீறி பொருட் களை கடையில் இறக்கினர். இதையடுத்து சம்மந்தபட்ட 15-ம் வார்டு கவுன்சிலர் அனிதா தலைமையில், பேரூராட்சி துணை தலைவர் விஜயகுமார் உட்பட பொதுமக்கள் திரண்டு இரவில் சாலை மறியல் செய்தனர்.

    போராட்டத்தில் அந்த வழியாக சென்ற அரசு பஸ் ஒன்றும் மற்றும் வாகனங்கள் சிறை பிடிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு புதுக்கடை இன்ஸ்பெக்டர் ஏசு ராஜசேகர் தலைமையில் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். தனியார் மதுபான கடையில் உள்ள பொருட்களை அகற்றி னால் மட்டுமே கலைந்து செல்வ தாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

    இதையடுத்து குளச்சல்.டி.எஸ்.பி. தங்கராமன் போராட்ட காரர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி, தனியார் மதுபான கடையை உடனடியாக அப்புறப்படுத்து வதாக கூறினார். ஆனால் பொதுமக்கள் அப்புறப்படுத்தினால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவதாக கூறி தொடர்ந்து போராட்டம் நடத்தினர்.

    இதில் பொது மக்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் மனித உரிமை துறை பொறுப்பாளர் ராஜகிளன், பாரதிய ஜனதா கிள்ளியூர் வட்டார தலைவர் தன சிங், மாவட்ட செயலாளர் சுடர் சிங், கவுன்சிலர்கள் லாசர், எமில் ஜெபசிங் மற்றும் அனைத்து கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பேச்சு வார்த்தையில் மது பான கடை அங்கிருந்து அகற்றப்பட்டது. பொது மக்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.

    இது தொடர்பாக புதுக் கடை போலீசார் அனுமதி யின்றி மறியல் போராட் டம் நடத்தியதாக 150 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    ×