search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜடேஜா"

    • இங்கிலாந்தின் 9-வது பேட்ஸ்மேன் ராபின்சன் அரைசதம் அடித்தார்.
    • ஜடேஜா கடைசி 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று ராஞ்சியில் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அறிமுக வீரர் ஆகாஷ் தீப் அபாரமாக பந்து வீச இங்கிலாந்து 57 ரன்னுக்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்து திணறியது.

    அதன்பின் ஜோ ரூட்- போர்ஸ்டோவ் ஜோடி தாக்குப்பிடித்து 57 ரன்கள் சேர்த்தது. பின்னர் ஜோ ரூட் உடன் பென் போக்ஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் சிறப்பாக விளையாடி 113 ரன்கள் சேர்த்தது. இதனால் இங்கிலாந்து சரிவில் இருந்து மீண்டது.

    ஜோ ரூட் அபாரமாக விளையாடி சதம் விளாசினார். இதனால் நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 7 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்கள் சேர்த்தது. ஜோ ரூட் 106 ரன்களுடனும், ராபின்சன் 31 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஜோ ரூட் நிதானமாக விளையாட ராபின்சன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அரைசதம் அடித்த ராபின்சன் 58 ரன்னில் ஆட்டமிழந்தார். அப்போது இங்கிலாந்து 347 ரன்கள் எடுத்திருந்தது. ராபின்சனை ஜடேஜா வீழ்த்தினார்.

    இதே ஓவரில் பஷீரையும் வீழ்த்தினார் ஜடேஜா. அடுத்த ஓவரில் ஆண்டர்சனை வீழ்த்த இங்கிலாந்து 104.5 ஓவரில் 353 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. ஜோ ரூட் 122 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இந்திய அணி சார்பில் ஜடேஜா 4 விக்கெட்டும், ஆகாஷ் தீப் 3 விக்கெட்டும், சிராஜ் 2 விக்கெட்டும், அஸ்வின் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • 4 ரன்னில் இருந்து தப்பிய கிராலி 42 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
    • பேர்ஸ்டோ 35 பந்தில் 38 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் ராஞ்சியில் இன்று காலை தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் பும்ராவிற்கு பதிலாக அறிமுக வீரர் ஆகாஷ் தீப் இடம் பிடித்தார்.

    ஜாக் கிராலி- பென் டக்கெட் ஆகியொர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இங்கிலாந்தின் ஸ்கோர் 8 ரன்னாக இருக்கும்போது ஆகாஷ் தீப் பந்தில் 4 ரன்கள் எடுத்த நிலையில் கிராலி க்ளீன் போல்டானார். ஆனால் நோ-பால் என நடுவர் அறிவிக்க கிராலி அவுட்டாவதில் இருந்து தப்பினார்.

    அதன்பின் கிராலி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சிராஜ் வீசிய ஆட்டத்தின் 7-வது ஓவரில் கிராலி தொடர்ந்து மூன்று பவுண்டரிகள், ஒரு சிக்ஸ் விளாசினார். இந்த ஓவரில் சிராஜ் 19 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.

    இங்கிலாந்து அணி 47 ரன்கள் எடுத்திருந்த போது முதல் விக்கெட்டை இழந்தது. ஆகாஷ் தீப் பந்தில் டக்கெட் 11 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். டக்கெட்டை வீழ்த்தி டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் விக்கெட்டை கைப்பற்றினார்.

    இதே ஓவரில் ஒல்லி போப் ரன்ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். ஆகாஷ் தீப் வீசிய அதற்கு அடுத்த ஓவரில் கிராலி 42 ரன்னில் க்ளீன் போல்டானார். 4 ரன்னில் தப்பிய கிராலியை 42 ரன்னில் வீழ்த்தினார்.

    அப்போது இங்கிலாந்து 57 ரன்கள் எடுத்திருந்தது. 4-வது விக்கெட்டுக்கு ஜோ ரூட் உடன் பேர்ஸ்டோ ஜோடி சேர்ந்தார். இந்தஜோ ஓரவிற்கு நிலைத்து நின்று விளையாடியது. பேர்ஸ்டாவ் விரைவாக ரன் சேர்க்க இங்கிலாந்து 20 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது.

    பென் ஸ்டோக்ஸ்

    22-வது ஓவரை அஸ்வின் வீசினார். இந்த ஓவரில் பேர்ஸ்டோ எல்.பி.டபிள்யூ. ஆகி வெளியேறினார். அவர் 35 பந்தில் 38 ரன்கள் சேர்த்தார்.

    5-வது விக்கெட்டுக்கு ஜோ ரூட் உடன் பென் ஸ்டோக்ஸ் ஜோடி சேர்ந்தார். பென் ஸ்டோக்ஸ் 3 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜா பந்தில் ஆட்டமிழந்தார். அத்துடன் முதல்நாள் மதிய உணவு இடைவேளை விடப்பட்டது. அப்போது இங்கிலாந்து 24.1 ஓவரில் விக்கெட்டுகளை இழந்து 112 ரன்கள் எடுத்திருந்தது.

    ஜோ ரூட் 16 ரன்களுடன் களத்தில் உள்ளார். ஆகாஷ் தீப் 3 விக்கெட்டும், அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • 3-வது டெஸ்ட்டில் இங்கிலாந்தை 434 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
    • அடுத்தடுத்து இரு டெஸ்டில் இரட்டை செஞ்சுரி அடித்த 11-வது வீரர் ஜெய்ஸ்வால் ஆவார்.

    3-வது டெஸ்டில் இரட்டை செஞ்சுரி அடித்த ஜெய்ஸ்வால் விசாகப்பட்டினத்தில் நடந்த 2-வது டெஸ்டிலும் இரட்டை சதம் (209 ரன்) அடித்திருந்தார். அடுத்தடுத்து இரு டெஸ்டில் இரட்டை செஞ்சுரி அடித்த 11-வது வீரர், இந்திய அளவில் 3-வது வீரர் என்ற பெருமையை ஜெய்ஸ்வால் பெற்றார். ஏற்கனவே வினோத் காம்ப்ளி (1993-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக 224 ரன் மற்றும் ஜிம்பாப்வேக்கு எதிராக 227 ரன்), விராட் கோலி (2017-ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக நாக்பூரில் 213 ரன், டெல்லியில் 243 ரன்) ) ஆகிய இந்தியர்கள் தொடர்ச்சியாக இரு டெஸ்டில் இரட்டை சதம் அடித்துள்ளனர்.

    ஜெய்ஸ்வாலின் வயது 22 ஆண்டு 49 நாட்கள். டெஸ்டில் இரண்டு இரட்டை சதம் அடித்த 3-வது இளம் வீரராகவும் சாதனை பட்டியலில் இணைந்துள்ளார். இந்தியாவின் வினோத் காம்ப்ளி தனது வயது 21 ஆண்டு 54 நாளிலும், ஆஸ்திரேலியாவின் டான் பிராட்மேன் வயது 21 ஆண்டு 318 நாளிலும் இச்சாதனையை செய்துள்ளனர்.

    இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா ஆட்டநாயகன் விருதை பெறுவது இது 10-வது முறையாகும். இதில் உள்நாட்டில் மட்டும் 9 முறை இவ்விருதை பெற்றுள்ளார். இதன் மூலம் சொந்த மண்ணில் அதிக தடவை ஆட்டநாயகன் விருதை பெற்ற இந்தியரான கும்பிளேவின் (இவரும் 9 முறை) சாதனையை சமன் செய்தார்.

    இந்த டெஸ்டில் அறிமுக வீரராக இடம் பிடித்த மும்பையைச் சேர்ந்த சர்ப்ராஸ் கான் இரு இன்னிங்சிலும் அரைசதம் (62 மற்றும் 68 ரன்) அடித்தார். திலவார் ஹூசைன் (1934-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக), சுனில் கவாஸ்கர் (1971-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக), ஸ்ரேயாஸ் அய்யர் (2021-ம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக) ஆகியோருக்கு பிறகு அறிமுக டெஸ்டின் இரு இன்னிங்சிலும் 50 ரன்களுக்கு மேல் எடுத்த 4-வது இந்தியராக சர்ப்ராஸ்கான் அறியப்படுகிறார்.

    இங்கிலாந்துக்கு எதிராக இதுவரை 134 டெஸ்டில் ஆடியுள்ள இந்தியா அதில் பெற்ற 33-வது வெற்றி இதுவாகும். இவற்றில் 24 வெற்றி சொந்த மண்ணில் கிடைத்தவையாகும். குறிப்பிட்ட ஒரு அணிக்கு எதிராக இந்தியாவின் அதிகபட்ச வெற்றி இது தான். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 32 டெஸ்டில் வெற்றி பெற்றதே இந்தியாவின் முந்தைய அதிகபட்சமாக இருந்தது.

    இந்திய கேப்டன் ரோகித் சர்மா முதல் இன்னிங்சில் 131 ரன் எடுத்தார். இது அவரது 11-வது சதமாகும். அவர் சதம் அடித்த எல்லா டெஸ்டுகளிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. டெஸ்டில் 10-க்கு மேல் சதம் அடித்து எல்லாமே வெற்றியில் முடிந்திருப்பது ரோகித் சர்மாவுக்கு மட்டுமே.

    • இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்டில் 434 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை இந்திய அணி வீழ்த்தியது.
    • 112 ரன்கள் எடுத்து, 7 விக்கெட்டுகள் கைப்பற்றிய ஜடேஜா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

    இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்டில் 434 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை இந்திய அணி வீழ்த்தியது. அதில், 112 ரன்கள் எடுத்து, 7 விக்கெட்டுகள் கைப்பற்றிய ஜடேஜா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

    இந்த டெஸ்ட் போட்டியில், முதல் இன்னிங்சில், 112 ரங்களும், 2 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்த ஜடேஜா, 2-வது இன்னிங்சில் 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதன் மூலம், தனது சொந்த மாநிலமான குஜராத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஆட்டநாயகன் விருது பெற்று ஜடேஜா அசத்தியுள்ளார்.

    மேலும் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தனது மிகப்பெரிய வெற்றியை இப்போட்டியில் இந்திய அணி பதிவு செய்துள்ளது. 434 ரன்கள் வைத்தியத்தில் இமாலய வெற்றியை இந்திய அணி பெற்றுள்ளது. இதற்கு முன்பு 2021-ம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், 372 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதே மிகப்பெரிய வெற்றியாக இருந்தது.

    இந்த வெற்றியை தொடர்ந்து, இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது.

    • ஆட்ட நேரம் முடிய 15-20 நிமிடங்கள் இருந்த போது ஜடேஜாவின் தவறால், சர்ப்ராஸ் கான் ரன்-அவுட் ஆனார்.
    • சர்ப்ராஸ் கான் ரன்-அவுட்டில் சிக்கியதால், வீரர்கள் ஓய்வறையில் இருந்த கேப்டன் ரோகித் சர்மா கோபத்தில் தொப்பியை தூக்கி எறிந்தார்.

    இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 326 ரன்கள் எடுத்தது.

    இந்த போட்டியில் அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்த சர்ப்ராஸ் கான் 62 ரன்னில் ரன் அவுட் ஆனார். ஜடேஜா 99 ரன்னில் இருந்த போது, பந்தை அருகில் தட்டிவிட்டு ஒரு ரன்னுக்கு ஓட முயற்சித்தார். பிறகு வேண்டாம் என்று திரும்பினார். அதற்குள் எதிர்முனையில் நின்ற சர்ப்ராஸ்கான் பாதி தூரம் வந்து விட்டு திரும்புவதற்குள் மார்க்வுட்டால் பிரமாதமாக ரன்-அவுட் செய்யப்பட்டார்.

    ஆட்ட நேரம் முடிய 15-20 நிமிடங்கள் இருந்த போது ஜடேஜாவின் தவறால், சர்ப்ராஸ் கான் ரன்-அவுட்டில் சிக்கியதால், வீரர்கள் ஓய்வறையில் இருந்த கேப்டன் ரோகித் சர்மா கோபத்தில் தொப்பியை தூக்கி எறிந்தார். சர்ப்ராஸ்கான் 62 ரன்களில் (66 பந்து, 9 பவுண்டரி, ஒரு சிக்சர்) வெளியேறினார்.

    இந்த நிலையில் முதல் நாள் ஆட்டம் முடிந்ததும் ஜடேஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 'சர்ப்ராஸ்கானுக்காக வருந்துகிறேன். இந்த ரன்-அவுட் எனது தவறான அழைப்பால் தான் நடந்தது. அவர் அருமையாக ஆடினார்' என்று கூறியுள்ளார். 'கிரிக்கெட்டில் இது போல் நடப்பது சகஜம் தான். அதனால் இது ஒரு பெரிய விஷயமல்ல' என்று சர்ப்ராஸ் குறிப்பிட்டார்.

    • ரோகித் சர்மா, ஜடேஜாவின் அபார சதத்தால் இந்தியா முதல் நாளில் 326 ரன்கள் எடுத்தது.
    • 4வது விக்கெட்டுக்கு ரோகித் சர்மா-ஜடேஜா ஜோடி 204 ரன்கள் குவித்தது.

    ராஜ்கோட்:

    இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று குஜராத்தின் ராஜ்கோட்டில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.

    முதலில் இந்திய அணி திணறியது. 33 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. 4-வது விக்கெட்டுக்கு ரோகித் சர்மா உடன் ஜடேஜா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. சிறப்பாக ஆடி சதமத்த ரோகித் சர்மா 131 ரன்னில் ஆட்டமிழந்தார். அதேவேளையில் ஜடேஜா அரைசதம் கடந்தார்.ரோகித் சர்மா-ஜடேஜா ஜோடி 204 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

    அடுத்து களமிறங்கிய அறிமுக வீரர் சர்பராஸ் கான் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 48 பந்தில் 7 பவுண்டரி, ஒரு சிக்சருடன் அரைசதம் அடித்தார். அவர் 62 ரன்னில் அவுட்டானார்.

    மறுமுனையில் நிதானமாக ஆடிய ஜடேஜா 198 பந்தில் சதம் அடித்தார். டெஸ்ட் போட்டியில் ஜடேஜாவின் 4-வது சதம் இதுவாகும்.

    இறுதியில், முதல் நாள் முடிவில் இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 326 ரன்களை எடுத்துள்ளது. ஜடேஜா 110 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இங்கிலாந்து சார்பில் மார்க் வுட் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    • ஜெய்ஸ்வால், கில், ரஜத் படிதார் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த நிலையில் ஜடேஜா களம் இறங்கினார்.
    • ரோகித் சர்மா- ஜடேஜா ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 125 ரன்களுக்கு மேல் அடித்துள்ளது.

    இந்தியா- இங்கிலாந்து இடையிலான 3-வது டெஸ்ட் ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இந்தியா தொடக்கத்தில் விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்தது. 33 ரன்கள் எடுப்பதற்குள் ஜெய்ஸ்வால் (10), கில் (0), படிதார் (5) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

    இங்கிலாந்தின் சுழற்பந்து வீச்சை வலது கை பேட்ஸ்மேன்கள் எதிர்கொள்ள திணறி வரும் நிலையில், அடுத்து இரண்டு அறிமுக வீரர்கள் இருப்பதால் ஜடேஜாவை முன்னதாக களம் இறக்கினார் ரோகித் சர்மா.

    ரோகித் சர்மாவின் கணக்கை ஜடேஜா வீணடிக்கவில்லை. சிறப்பாக விளையாடி இங்கிலாந்து பந்து வீச்சை எதிர்கொண்டார். ரோகித் சர்மா உடன் சரியான முறையில் ஜோடி அமைத்தார்.

    ஜடேஜா 97 பந்தில் ஐந்து பவுண்டரிகளுடன் அரைசதம் அடித்தார். அத்துடன் ரோகித் சர்மா உடன் இணைந்து இந்திய அணிக்கு (158/3) 125 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து கொடுத்துள்ளார்.

    • முதல் டெஸ்ட் போட்டியிலேயே அதை நிகழ்த்துவார் என நினைத்தேன்.
    • எனது சொந்த ஊரான ராஜ்கோர்ட்டில் அஸ்வின் அந்த சாதனையை படைக்க வேண்டும் என்பதே விதி.

    இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 5 டெஸ்ட் கொண்ட தொடரில் முதல் போட்டியில் இங்கிலாந்து அணியும் 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்று தொடரில் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நாளை (15-ந்தேதி) தொடங்குகிறது.

    இந்நிலையில் எனது சொந்த ஊரான ராஜ்கோர்ட்டில் அஸ்வின் தனது 500-வது விக்கெட்டுகளை வீழ்த்துவார் என்பதே விதி என ஜடேஜா தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    அஸ்வினுடன் நிறைய ஆண்டுகள் விளையாடி இருக்கிறேன். அவருக்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். இங்கிலாந்து அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் தனது 500-வது டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்துவார். முதல் டெஸ்ட் போட்டியிலேயே அதை நிகழ்த்துவார் என நினைத்தேன். பரவாயில்லை எனது சொந்த ஊரான ராஜ்கோர்ட்டில் அஸ்வின் அந்த சாதனையை படைக்க வேண்டும் என்பதே விதி.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்தியா ஒரு வலிமையான அணியாகும்.
    • மோசமான பேட்டிங் காரணமாகவே ஷ்ரேயாஸ் அய்யர் எஞ்சிய டெஸ்ட் தொடரில் இருந்து நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    புதுடெல்லி:

    இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் கே.எல்.ராகுல், ஜடேஜா ஆகியோர் காயத்தால் விளையாடவில்லை. இருவரும் 3-வது டெஸ்ட் போட்டிக்கான அணியில் இடம்பெற்றுள்ளனர். அதே நேரத்தில் ஷ்ரேயாஸ் அய்யர் எஞ்சிய 3 டெஸ்டில் ஆட வில்லை.

    இந்த நிலையில் கே.எல்.ராகுல், ஜடேஜா வருகையால் இந்திய அணி வலிமை பெறும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் இயன் சேப்பல் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    இந்தியா ஒரு வலிமையான அணியாகும். அவர்களுக்கு திறமையான கேப்டன் ரோகித் சர்மா இருக்கிறார். காயத்தில் இருந்து குணமடைந்த ஜடேஜா மற்றும் கே.எல்.ராகுல் அணிக்கு திரும்பி இருக்கிறார்கள். இருவரும் இந்திய அணியை வலிமைப்படுத்துவார்கள்.

    ஆனால் விராட்கோலி எஞ்சிய 3 டெஸ்டிலும் விளையாடமாட்டார் என்பது இந்திய அணிக்கு இழப்பே. தேர்வு குழுவினர் ஷ்ரேயாஸ் அய்யரின் பேட்டிங் திறமையை மிகைப்படுத்தி மதிப்பிடுவதை நிறுத்திவிட்டு, குல்தீப் யாதவின் பந்துவீச்சு திறனை அதிகமாக மதிப்பிட கற்றுக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு இயன் சேப்பல் கூறியுள்ளார்.

    மோசமான பேட்டிங் காரணமாகவே ஷ்ரேயாஸ் அய்யர் எஞ்சிய டெஸ்ட் தொடரில் இருந்து நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    • முதல் டெஸ்ட்டில் ஏற்பட்ட காயத்தால் 2-வது டெஸ்ட் போட்டியில் இருந்து ஜடேஜா மற்றும் கே.எல். ராகுல் விலகினர்.
    • இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது.

    மும்பை:

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையேயான 2-வது போட்டி விசாகப்பட்டினத்தில் நாளை நடைபெற உள்ளது.

    முதல் டெஸ்ட்டில் ஏற்பட்ட காயத்தால் 2-வது டெஸ்ட் போட்டியில் இருந்து ஜடேஜா மற்றும் கே.எல். ராகுல் விலகினர். இந்நிலையில் 3-வது டெஸ்ட் போட்டியிலும் ஜடேஜா விலக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அவருக்கு ஏற்பட்ட காயம் இன்னும் முழுமையாக குணமடையாததால் அவர் 3-வது டெஸ்ட் போட்டியில் விளையாடுவதில் சிக்கல் எழுந்துள்ளது. இருப்பினும் இது குறித்து அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் வரவில்லை.

    இவரை தவிர மற்றொரு வீரரான முகமது சமி காயம் காரணமாக முதல் 2 போட்டிகளில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இவர் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இருந்து விலகுவது தகவல் வெளியாகி உள்ளது.

    • டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலையில் உள்ளது.
    • இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இருந்து காயம் காரணமாக கேஎல் ராகுல், ஜடேஜா ஆகியோர் விலகி உள்ளனர்.

    இந்தியா, இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் நடந்தது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலையில் உள்ளது.

    இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இருந்து காயம் காரணமாக கேஎல் ராகுல், ஜடேஜா ஆகியோர் விலகி உள்ளனர்.

    அவர்களுக்கு பதிலாக சர்பராஸ் கான் மற்றும் இடது கை சுழற்பந்து வீச்சாளர் சௌரப் குமார் மற்றும் ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இந்திய அணியில் இணைந்துள்ளனர்.

    இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி அடுத்த மாதம் 2-ந் தேதி விசாகப்பட்டினத்தில் நடக்கிறது.

    • ஐபிஎல் இறுதி போட்டியில் சென்னை அணி வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்தவர் ஜடேஜா.
    • இன்ஸ்டாகிராமில் 7.8 லட்சம் பேர் ஜடேஜாவை பின் தொடர்கிறார்கள்.

    இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த ஆல் ரவுண்டராக ரவீந்திர ஜடேஜா செயல்பட்டு வருகிறார். இவர் சமூக வலைதள பக்கங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் 7.8 லட்சம் பேர் இவரை பின் தொடர்கிறார்கள். இதை தனது ஸ்டோரியில் வைத்துள்ளார். இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    அந்த ஸ்டோரியில் ஒரே அணியா செயல்பட்டால் கனவை நிறைவேற்றலாம். 7.8 மில்லியன் எங்க ஜெர்சி நம்பரை போலவே என குறிப்பிட்டுள்ளார். 

    கடந்த வருடம் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் 5-வது முறையாக கோப்பையை கைப்பற்றியது. இறுதி போட்டியில் சென்னை அணி வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்தவர் ஜடேஜா. வெற்றியை தேடி தந்த ஜடேஜாவை தூக்கி டோனி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்த ஐபிஎல் கோப்பையை எம்எஸ் டோனிக்கு அர்பணிப்பதாக ஜடேஜா போட்டி முடிந்தவுடன் பேட்டியளித்தார்.

    இருவரும் இந்திய அணியில் இருந்து சிஎஸ்கே வரை மிகவும் நட்பாக இருந்து வருவதும் அனைவரும் அறிந்ததே. ஐபிஎல் தொடரில் இருவரும் சில சில சேட்டைகளில் ஈடுப்பட்டு வந்தது சமூக வலைதளங்களில் அப்போது வைரலானது.

    மேலும் இந்த தொடருக்கு முன்னர் இருவருக்கும் இடையே மோதல் இருந்ததாக கூறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

    ×