search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சென்னை மழை"

    • ஊழல் புகாரில் ஒரு அமைச்சர் சிறையில் உள்ளார்.
    • திமுக அமைச்சரவையில் 10 அமைச்சர்கள் மீது ஊழல் வழக்கு நிலுவையில் உள்ளது.

    சென்னை:

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பேசிய உண்மைகள் திமுக அமைச்சர்களை கடுமையாக பாதித்திருப்பதாக அறிகிறேன். தமிழக மக்கள் செலுத்திய வரியை தான் கேட்கிறோம் என்று வழக்கம் போல் திசை திருப்பும் வேலையில் இறங்கியுள்ள தி.மு.க. அமைச்சர்களுக்கு சில கேள்விகள்.

    தமிழக மக்களின் வரி பணத்தில் இருந்து கோபாலபுரத்தின் இளவரசரும் மாப்பிள்ளையும் ஒரே ஆண்டில் 30 ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடாக சம்பாதித்தார்கள் என்று நாங்கள் சொல்லவில்லை, தமிழகத்தின் முன்னாள் நிதி அமைச்சர் சொன்னார்.

    அந்த 30 ஆயிரம் கோடி எங்கே என்று தான் நாங்கள் கேட்கிறோம். தி.மு.க. பைல்ஸ் வெளியிட்ட போது நோபல் ஸ்டீல் நிறுவனத்தின் கிளை நிறுவனமான நோபல் பிரிக்ஸ் நிறுவனமும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையும் ஒரே விலாசத்தில் இயங்குவதை சுட்டி காட்டி துபாயிலிருந்து நோபல் ஸ்டீல் நிறுவனத்திடம் இருந்து வருவதாக சொன்ன 1000 கோடி ரூபாய் முதலீடு குறித்து கேள்வி எழுப்பியிருந்தோம்.

    முறைகேடாக கொள்ளை அடித்த மக்கள் வரிப் பணத்தை முதலீடாக கொண்டு வருகிறீர்களா என்ற கேள்விக்கு இன்று வரை பதில் இல்லை.

    4000 கோடி ரூபாய் மழைநீர் வடிகால் பணிகளில் 98 சதவீதம் முடித்து விட்டோம் என்று தமிழக முதல்வர் உட்பட திமுக அமைச்சர்கள் அனைவரும் சொன்ன போது, நீங்கள் சொன்னது எல்லாம் பொய், 42 சதவீதம் பணிகள் தான் முடிந்துள்ளது என்று நாங்கள் சொல்லவில்லை, தி.மு.க. அமைச்சர் கே.என்.நேரு சொன்னார்.


    98 சதவீதம் நிறைவடைந்ததாக சொல்லப்பட்ட பணிகளுக்கு செலவிட்ட தொகை என்ன ஆனது என்று தான் நாங்கள் கேட்கிறோம்.

    ஊழல் புகாரில் ஒரு அமைச்சர் சிறையில் உள்ளார். நேற்று மற்றொரு திமுக அமைச்சர் பொன்முடி ஊழல் புகாருக்கு சிறை தண்டனை பெற்று சிறை செல்லவுள்ளார். இது மட்டுமில்லாமல், திமுக அமைச்சரவையில் 10 அமைச்சர்கள் மீது ஊழல் வழக்கு நிலுவையில் உள்ளது.

    மக்கள் வரிப்பணத்தை ஊழல் செய்து சிறை தண்டனை பெறும் நீங்கள் மக்கள் வரி பணத்தை எவ்வாறு செலவிட வேண்டும் என்று பாடம் எடுக்க வேண்டாம். புழல் சிறையில் திமுக அமைச்சர்களுக்கென ஒரு தனி கட்டிடம் உருவாக்குங்கள்.

    ரோம் நகர் பற்றி எரியும் போது பிடில் வாசித்ததாக சொல்லப்படும் நீரோ மன்னன் போல தென் தமிழகத்தில் வெள்ளம் ஏற்பட்டு மக்கள் தவித்த போது தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்தியா கூட்டணி சந்திப்பில் பங்கேற்க டெல்லி சென்றிருந்தார்.

    அங்கு தி.மு.க.வினருக்கு மொழிபெயர்க்க முடியாது என்றும் தி.மு.க.வினர் இந்தி கற்க வேண்டும் என்றும் உங்களை பீகார் மாநில முதல்வர் அவமானப்படுத்திய போது பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோர் கற்று தந்ததை திடீரென்று மறந்து விட்டீர்களா?

    விளம்பரத்திற்காக ஆட்சி நடத்தி ஸ்டிக்கர் ஒட்டும் பணியில் பொழுதை போக்கும் நீங்கள் இனியும் பொய்களை சொல்லி மக்களை ஏமாற்ற முடியாது.

    மத்திய அரசு தமிழகத்திற்கு கடந்த 9 ஆண்டுகளில் என்ன செய்தது என்பதை வெள்ளை அறிக்கையாக கொடுத்து உள்ளது தமிழக பா.ஜனதா.

    தமிழர்கள் செலுத்திய ஒரு ரூபாய் வரிக்கு பாரதப் பிரதமர் தலைமையிலான மத்திய அரசு இரண்டு ரூபாய் திருப்பி கொடுத்து உள்ளது. அதை ஊழல் செய்யாமல் மக்களிடம் சென்று உங்களால் சேர்க்க முடியவில்லை என்றாலும் பரவாயில்லை அதை தடுக்காதீர்கள்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • சென்னையில் 4,034 உள்சாலைகளும், 87 பேருந்து வழிடத்தட சாலைகளும் சேதம் அடைந்து இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
    • சாலைகள் சேதம் அடைந்ததில் கோடம்பாக்கம் மண்டலம் முதலிடத்தில் உள்ளது.

    சென்னை:

    சென்னையில் புயல் மழையால் சாலைகள் கடுமையாக சேதம் அடைந்தன. நகரில் உள்ள பேருந்து சாலைகள், தெருக்களில் உள்ள சாலைகள் குண்டும் குழியுமாக மாறின. ஒரு சில இடங்களில் குண்டும் குழியுமாக உள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள்.

    வெள்ளத்தில் பெரும்பாலான சாலைகள் மிகவும் மோசமடைந்த நிலையில் அவற்றை உடனே சரி செய்யும் பணியில் மாநகராட்சி ஈடுபட்டுள்ளது. புதிய சாலைகள் போடுவதற்கு காலதாமதமாகும் என்பதால் தற்சமயம் பள்ளங்களை நிரப்புவதற்கான பணிகளை தொடங்கியுள்ளனர்.

    சென்னையில் 4,034 உள்சாலைகளும், 87 பேருந்து வழிடத்தட சாலைகளும் சேதம் அடைந்து இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அதனை சரி செய்யும் பணி தொடங்கியுள்ளது. ஆர்.கே. மடம் சாலை, காமராஜர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளங்களை தொழிலாளர்கள் சரி செய்தனர்.

    சாலைகள் சேதம் அடைந்ததில் கோடம்பாக்கம் மண்டலம் முதலிடத்தில் உள்ளது. அங்கு 1056 சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளன. மாம்பலம், தியாகராய நகர், கோடம்பாக்கம் பகுதியில் அதிகளவு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. நீண்ட நாட்கள் அந்த பகுதியில் தண்ணீர் தேங்கி நின்றதால் சாலைகளில் அதிக பள்ளம் ஏற்பட்டு உள்ளன.

    ராயபுரம் மண்டலத்தில் 567 சாலைகள், அண்ணாநகர் மண்டலத்தில் 396 சாலைகளை அதிகாரிகள் கண்டறிந்து உள்ளனர். அண்ணாநகரில் 12068 சதுர மீட்டருக்கு சாலைகள் சேதம் அடைந்துள்ளன.

    தேனாம்பேட்டை மண்டலத்தில் 381, திரு.வி.க. நகர் 331, மாதவரம் 273, தண்டையார்பேட்டை 214, சாலைகள் குண்டும் குழியுமாக மாறியுள்ளன. மற்ற மண்டலங்களில் 200-க்கும் குறைவான சாலைகளில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன.

    தெருக்களில் பள்ளம் இருந்தால் 1913-க்கு புகார் தெரிவிக்கலாம் என்று மாநகராட்சி தெரிவித்து உள்ளது. இதுகுறித்து கமிஷனர் ஜெ.ராதா கிருஷ்ணன் கூறுகையில்,

    மழை வெள்ளத்தால் சேதம் அடைந்த சாலைகள் சிமெண்ட் கலவைகள் மூலம் நிரப்பப்படுகின்றன. வாகன ஓட்டிகள் பள்ளங்களில் விழுந்து விபத்து ஏற்படுவதை தடுப்பதற்காக இந்த பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

    சாலைகளில் உள்ள சிறிய பள்ளங்கள் முதல் பெரிய குழி வரை இந்த கலவையின் மூலம் நிரப்பப்படும். தேவையான இடங்களுக்கு தார் சாலைகளும் போடப்படும். ஜனவரி மாதத்திற்கு பிறகு தான் புதிய சாலை சீரமைக்கும் பணி நடைபெறும் என்றார். 

    • மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவு முழுமையாக பின்பற்றப்படவில்லை.
    • உபரிநீரில் கழிவு நீர் திறந்து விடப்பட்டதால் ஏரி நீர் கருப்பாக மாறியது.

    சென்னை:

    சென்னை கொரட்டூரில் மிகப்பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரி மாசுபடுவதை தடுக்க அதன் சுற்றுப்புற தொழிற்சாலைகளில் இருந்து ரசாயன கழிவுகளை ஏரிக்கு திறந்து விட தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது.

    மேலும் இந்த ஏரி மாசுபடுவதை தடுக்க வேண்டும் என்றும், ஏரிக்கு கழிவு நீர் திறந்து விடுவதை தடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது. மேலும் 6 மாதங்களுக்கு ஒருமுறை ஆய்வு செய்து அதற்கான அறிக்கை தாக்கல் செய்யவும் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது.

    அம்பத்தூர் ஏரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர், உபரி கால்வாய் வழியாக கொரட்டூர் ஏரிக்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்த கால்வாயில் மழைநீர் வடிகால் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து கழிவு நீர் வெளியேற்றப்படுவதால் கொரட்டூர் ஏரியில் மாசு அளவு அதிகரித்துள்ளது.

    'மிச்சாங்' புயல் மழையை தொடர்ந்து உபரி நீரும், கழிவு நீரும் கொரட்டூர் ஏரியில் கலப்பதாக கூறப்படுகிறது. கடந்த டிசம்பர் 5-ந்தேதி மழையின் போது ஏரிக்கு நல்ல தண்ணீர் வந்தது. அதன் பிறகு அடுத்தடுத்த நாட்களில் உபரிநீரில் கழிவு நீர் திறந்து விடப்பட்டதால் ஏரி நீர் கருப்பாக மாறியது. அத்துடன் துர்நாற்றமும் வீச தொடங்கியது.

    இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறியதாவது:-

    மழைக்காலங்களில் கொரட்டூர் ஏரிப்பகுதியை சுற்றியுள்ள தொழிற்சாலைகளின் கழிவு நீர் ஏரியில் திறந்து விடப்படுகிறது. பல தொழிற்சாலைகள் கழிவு நீரை சுத்திகரித்தாலும், சில தொழிற்சாலைகள் ஏரியில் கழிவுநீரை திறந்து விடுவதை வாடிக்கையாக வைத்துள்ளன. மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவு முழுமையாக பின்பற்றப்பட வில்லை. எனவே கழிவு நீரை திறந்து விடும் தொழிற்சாலைகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், 'மழைநீர் கால்வாய்களில் சட்ட விரோதமாக கழிவுநீர் திறந்துவிடுவதை தடுக்கவும், மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது குறித்து உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்' என்றார்.

    • முந்தைய நிலைமைக்கு திரும்புவதற்கு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் வரை ஆகும்.
    • கால்நடைகளை கணக்கீடு செய்து அவற்றிற்கான இழப்பீட்டு தொகையையும் அரசு வழங்க வேண்டும்.

    பெருந்தலைவர் மக்கள் கட்சித்தலைவர் என்.ஆர்.தனபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 3 தினங்களுக்கு முன்னர் தென்மாவட்டங்களில் பெய்த கொடூர மழையால் தென்மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டு உடுத்த துணி தவிர மாற்று துணிகளுக்கு வழி இல்லாத நிலைமையை வெள்ளம் உருவாக்கியது. இந்த நிலையில் இருந்து மீண்டும் முந்தைய நிலைமைக்கு திரும்புவதற்கு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் வரை ஆகும்.

    வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள முதியவர்கள், குழந்தைகள், பெண்கள் மற்றும் அனைவரின் நலனையும் கருத்தில் கொண்டு நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட மக்களின் குடும்ப அட்டைகள் மூலம் தலா 20 ஆயிரம் ரூபாய் உடனடியாக வழங்கிடவேண்டும்.

    தென்காசி மாவட்ட விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்பை ஈடுகட்டும் வகையில் அரசு ஏக்கருக்கு குறைந்தபட்சம் ரூ.25 ஆயிரம் வழங்கவும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கால்நடைகளை கணக்கீடு செய்து அவற்றிற்கான இழப்பீட்டு தொகையையும் அரசு வழங்க வேண்டும் என்று பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • நிவாரணப் பணியை மாநில அரசு தொடங்கியுள்ளது.
    • மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்.

    பிரதமர் நரேந்திர மோடிக்கும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அனுப்பியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

    வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்ற பாதுகாப்புப் படைகளின் உதவியுடன் பெரிய அளவில் மீட்பு மற்றும் நிவாரணப் பணியை மாநில அரசு தொடங்கியுள்ளது. ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியதால், அவை பெருமளவில் சேதமடைந்துள்ளன. வெள்ளம் காரணமாக விவசாயிகள் விளைவித்த காய்கறிகள் மற்றும் பழங்களை சந்தைப்படுத்த முடியாமல், விளைபொருட்கள் அழிந்துவிட்டன. மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதால், வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர்.

    எனவே, தயவு செய்து மீட்பு மற்றும் நிவாரணப் பொருட்களை விரைந்து வழங்கவும், சேதங்களை மதிப்பீடு செய்ய ஆய்வுக் குழுவை அனுப்பவும், பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வுக்காக தமிழக அரசுக்கு போதிய நிதி மற்றும் நிவாரணங்களை வழங்கவும், விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கி, விரைவில் இயல்பு நிலையை மீட்டெடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • கடல் நீரின் தன்மையை அறிய தண்ணீரை பரிசோதனைக்கும் அனுப்பி உள்ளனர்.
    • எண்ணெய் கழிவுகள் சேகரிக்கப்பட்டு தூய்மைப்படுத்தும் பணி நடந்து வருகிறது.

    பொன்னேரி:

    மிச்சாங் புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின்போது எண்ணூர் கடல் பகுதியில் எண்ணெய் கழிவு பரவியது. கடலில் மிதந்து வரும் இந்த எண்ணெய் படலத்தை அகற்றும் பணி இன்னும் நீடித்து வருகிறது.

    இதற்கிடையே இந்த எண்ணெய் கழிவு பழவேற்காடு மீனவர் குப்பம் பகுதிகளான அரங்கம்குப்பம், வைர வன்குப்பம், கோரை குப்பம், கருங்காலி, பள்ளப்பாடு ஆகிய பகுதிகளில் உள்ள கடலோரப் பகுதிகளுக்கும் பரவியது.

    ஏராளமான மீன்களும் இறந்து கரை ஒதுங்கின. இதுபற்றி அறிந்ததும் அதிகாரிகள் விரைந்து வந்து கடலில் மிதந்து வரும் எண்ணெய் கழிவு குறித்து ஆய்வு செய்தனர். மேலும் கடல் நீரின் தன்மையை அறிய தண்ணீரை பரிசோதனைக்கும் அனுப்பி உள்ளனர்.

    இதற்கிடையே திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி லிவிங்ஸ்டன் மற்றும் வருவாய்த்துறை, மீன்வளத்துறை அலுவலர்கள் நேரடியாக வந்து பழவேற்காடு கடல் பகுதி, பக்கிங்காம் கால்வாய் பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது துரை. சந்திரசேகர் எம்.எல்.ஏ., மீஞ்சூர் ஒன்றியக் குழு சேர்மன்ரவி ஆகியோர் உடன் இருந்தனர்.

    ஆய்வுக்கு பின்னர் கலெக்டர் பிரபு சங்கர் கூறும்போது, பழவேற்காடு கடல்பகுதியில் ஒதுங்கிய எண்ணெய் கழிவுகள் சேகரிக்கப்பட்டு தூய்மைப்படுத்தும் பணி நடந்து வருகிறது. தற்போது இங்குள்ள மீன்கள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    இதன் முடிவு வந்த பின்னர் மீனவர்கள் மீன் பிடிப்பது குறித்து அறிக்கை வெளியிடப்படும் என்றார்.

    ஆய்வின் போது பொன்னேரி சார் ஆட்சியர் வாகே சங்கெத் பல்வந்த், வட்டாட்சியர் மதிவாணன், மீன்வளத்துறை உதவி இயக்குனர் கங்காதரன், ஊராட்சி மன்ற தலைவர் ஞானவேல் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். மிச்சாங் புயல் எச்சரிக்கையில் இருந்தே கடந்த 20 நாட்களுக்கு மேலாக பழவேற்காடு மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லாமல் உள்ளனர். இதனால் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது.

    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
    • நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

    சென்னை:

    லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி இன்று தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாக 26-ந்தேதி வரை தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

    தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். நாளை (21-ந்தேதி) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யும். 22 முதல் 26-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்த பட்சம் வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியசை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    • மிச்சாங் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரண தொகை ரொக்கப்பணமாக ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வருகிறது.
    • காலையில் 100 பேர்களுக்கும், மாலையில் 100 பேர்களுக்கும் பணம் வழங்கப்பட்டு வந்தது.

    சென்னை:

    சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிச்சாங் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரண தொகை ரொக்கப்பணமாக ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வருகிறது.

    இதற்காக ஏற்கனவே டோக்கன் வழங்கப்பட்டு அதில் தேதி மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதன்படி காலையில் 100 பேர்களுக்கும், மாலையில் 100 பேர்களுக்கும் பணம் வழங்கப்பட்டு வந்தது.

    23-ந்தேதி வரை ரூ.6 ஆயிரம் பெற்றுக்கொள்ள டோக்கன் வழங்கப்பட்ட நிலையில் தற்போது ரேஷன் கடைகளில் கூட்டம் இல்லாத காரணத்தால் எந்த தேதி குறிப்பிட்டிருந்தாலும் இன்று வந்துகூட பணம் பெற்றுக் கொள்ளலாம் என்று அரசு அறிவித்துள்ளது.

    இது சம்பந்தமாக ரேஷன் கடைகளுக்கு உயர் அதிகாரிகள் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளனர். எந்த தேதி டோக்கனாக இருந்தாலும் பணம் வழங்கி விடுங்கள் என்று அறிவுறுத்தி உள்ளனர்.

    • உலகின் சில நாடுகள் ஈடுபட துவங்கியும் உள்ளன.
    • தன்னார்வளர்கள் ஆற்றிய அயராத பணியால் மீண்டெழுந்தது.

    உலகளவில் காலநிலை மாற்றம் காரணமாக இயற்கை பேரிடர்கள் மனித சக்தியால் கையாள முடியாத அளவுக்கு பாதிப்புகளை ஏற்படுத்துவது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது. இதனை உண்மையாக்கும் சம்பவங்கள் மனித குலத்திற்கு தினந்தோறும் பாடம் கற்பித்துக் கொண்டே தான் இருக்கிறது. பல்வேறு நாடுகள் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான பணிகளில் ஈடுபட்டும், சில நாடுகள் ஈடுபட துவங்கியும் உள்ளன.

    இந்த நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. இம்மாத துவக்கத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களில் வரலாறு காணாத கனமழை காரணமாக வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. வெள்ளத்தில் சிக்கி திணறிய சென்னை பொதுமக்கள், தன்னார்வளர்கள் ஆற்றிய அயராத பணியால் மீண்டெழுந்தது.

     

    தற்போது திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி போன்ற தென் மாவட்டங்களில் மிக குறுகிய காலக்கட்டத்தில் கொட்டித்தீர்த்த கனமழை காரணமாக நான்கு மாவட்டங்களும் தனி தீவுகளாகின. இங்கும் வெள்ளத்தில் சிக்கித் திணறும் பொது மக்களை மீட்கும் பணிகளில் பொது மக்கள், தன்னார்வளர்கள், மத்திய மாநில அரசுகளின் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    தமிழ்நாட்டில் ஒவ்வொரு முறை இயற்கை பேரிடர் ஏற்படும் போதும், பொதுமக்கள், தன்னார்வ தொண்டாளர்கள், பேரிடர் மீட்பு படையினர், ராணுவம் மற்றும் கடற்படை வீரர்களே மீட்பு பணிகளில் ஈடுபடுகின்றனர். எனினும், பொது மக்களுக்கு சேவையாற்றும் நோக்கில் துவங்கப்பட்ட அரசியல் கட்சிகள் களத்தில் இறங்கி பணியாற்றும் வழக்கம் பொதுமக்கள் காணாத சம்பவமாகவே இருந்து வருகிறது.

     


    பேரிடர் சமயங்களில் களமிறங்கி சேவையாற்றுவதில் ஏதேதோ காரணங்களால் தள்ளி நிற்கும் அரசியல் கட்சிகள் அரசு இதை செய்திருக்கலாம், இந்த பணிகளை மேற்கொண்டிருக்கலாம், போதுமான முன்னேற்பாடுகள் செய்யப்படவில்லை, மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என பெரும்பாலும் குற்றச்சாட்டுகளை தெரிவிப்பதையே வாடிக்கையாக கொண்டுள்ளன.

    குற்றச்சாட்டுகளால் அரசுக்கு குறைகளை சுட்டிக்காட்ட முடியும் என்றாலும், பொது மக்களுக்கு சேவையாற்ற துவங்கப்பட்ட அரசியல் கட்சிகள் இனியாவது களத்தில் இறங்கி மக்களுக்கு சேவையாற்றும் வழக்கம் நடைறைக்கு வருமா என்பதே பேரிடரில் சிக்கித் தவிக்கும் பொது மக்கள் மற்றும் அவர்களை நினைத்து வாடுவோரின் தற்போதைய மனநிலையாக உள்ளது.  

    • தமிழக தலைநகர் சென்னை தீவிர வானிலைக்கு தயாராக இல்லை.
    • வளர்ச்சி அடைய தொழில்முறை தளத்தை வழங்குகிறது.

    நகரம் மற்றும் நாட்டு திட்டமிடல் இயக்குநரகம் (DTCP) என்பது ஒரு மாநிலத்தின் திட்டமிடல் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி சீராக இயங்குவதை உறுதி செய்வதற்காக நிறுவப்பட்ட ஒரு அமைப்பு. சட்டவிரோத கட்டிடங்களை தடுத்து நிறுத்துவது, வணிக மற்றும் குடியிருப்பு ரியல் எஸ்டேட், நகர்ப்புற திட்டமிடல் தொடர்பான விஷயங்களில் மற்ற ஏஜென்சிகளுக்கு இந்த அமைப்பு ஆலோசனைகளை வழங்குகிறது.

    அனைத்து ரியல் எஸ்டேட் டெவலப்பர்களும் எந்தவொரு பெரிய திட்டங்களையும் தொடங்குவதற்கு முன், மாநிலத்தின் DTCP-யிடம் இருந்து முறையான சான்றிதழைப் பெற வேண்டியது அவசியம் ஆகும். தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நகரம் மற்றும் நாட்டு திட்டமிடல் சட்டம் 1971 மூலம் நகரம் மற்றும் நாடு திட்டமிடல் இயக்குனரகம் நிறுவப்பட்டது.

     

    மாநிலம் முழுவதும் அதிகார வரம்பைக் கொண்ட வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறையால் (H&UD) கட்டுப்படுத்தப்படுகிறது. தமிழ்நாட்டின் டெக்-ஹப் "ஸ்மார்ட் சிட்டி"-யான சென்னையில், நல்ல வேலை வாய்ப்புகள், வீடுகள் மற்றும் வசதிகள் போன்ற வாய்ப்புகள் பல இருப்பினும் மாறி வரும் வானிலையின் கோர முகம் மக்களை சோகத்தில் ஆழ்த்துகிறது.

    வரலாற்றில் வெள்ளம், புயல் போன்ற பல்வேறு இயற்கை பிரச்சினைகளை கடந்து வந்த பிறகும் ஒவ்வொரு வருடமும் சென்னை மக்கள் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் கனமழை, புயல் ஏற்படும் போது இடம்ப்பெயர்வு, மற்றும் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர். தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை, தீவிர வானிலைக்கு தயாராக இல்லை.

     


    இது வீடு வாங்குபவர்களுக்கு சென்னையை வாழ்வதற்கான இடமாகத் தேர்ந்தெடுப்பதில் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும் புலம்பெயர்ந்தோரை சென்னை தொடர்ந்து அதிகளவில் வரவேற்று வருகிறது. தகவல் தொழில்நுட்பம் மற்றும் உள்கட்டமைப்புகளில் ஏற்றம் ஏற்பட்டதால், சென்னை நகரம் மக்களை வாழ செய்கிறது. மேலும் அவர்கள் வளர்ச்சி அடைவதற்கும் தொழில்முறை தளத்தை வழங்குகிறது.

    இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து புலம்பெயர்ந்தோரை கவர்ந்துவரும் சென்னை, அதன் மக்கள் தொகையை 1 கோடிக்கும் அதிகமாக உயர்த்தியுள்ளது. இது தற்போதுள்ள உள்கட்டமைப்பு மற்றும் சேவைகளில் இன்னும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மிகவும் அடர்த்தியாக நிரம்பிய வீடுகளை உடையது.

     

    வருங்காலங்களில் தீவிர வானிலை சமயங்களில் சேதங்கள் அதிகமாகவும், வாழ்க்கை முறை கடினமாகவும் இருக்கும். தொடர்ச்சியான வளர்ச்சி மற்றும் அதிகரித்து வரும் மக்கள்தொகை இருந்தபோதிலும், கடந்த 16 ஆண்டுகளில், பேரழிவுகரமான 2015 வெள்ளத்திற்கு பிறகும், சென்னையின் பெரும்பாலான பிரச்சனைகள் போதிய மற்றும் மோசமாக நிர்வகிக்கப்படும் உள்கட்டமைப்பைச் சுற்றியே உள்ளன.

    இதன் விளைவாக 2015 சென்னை வெள்ளத்தின் போது கசிவுகள், அடைக்கப்பட்ட வடிகால், நகரின் வடிகால் நிரம்பி வழிந்ததால், கழிவுநீர் அமைப்புகளை தண்ணீரில் மூழ்கடித்ததால், அது விரைவில் திறந்தவெளி சாக்கடையாக மாறியது. இது சென்னையில் பல தசாப்தங்களாக இருக்கும் பிரச்சினைகள் ஆகும். சென்னை நகரம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்று பிளாஸ்டிக் மாசுபாடு.

    இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 3.4 மில்லியன் டன் பிளாஸ்டிக் கழிவுகள் குவிகின்றன. ஒரு நாளைக்கு 429 டன் பிளாஸ்டிக் கழிவுகளை உற்பத்தி செய்து நாட்டிலேயே சென்னை இரண்டாவது இடத்தில் உள்ளது. பிளாஸ்டிக் கழிவுநீர் வடிகால் மற்றும் சாக்கடைகளை அடைப்பதால், கனமழையின் போது வெள்ளம் எங்கும் செல்ல முடியாமல் தெருக்களில் தண்ணீர் தேங்குகிறது. பிளாஸ்டிக் மாசுபாடு, பிரச்சனைக்கு எவ்வாறு பங்களிக்கிறது, உள்ளூர் மட்டத்தில் அதற்கு என்ன செய்யலாம் என்பது பற்றிய விழிப்புணர்வு தொடங்குவது அவசியம்.

     

    தற்போதைய நிலையில் தமிழகத்தின் சில தென் மாவட்டங்களிலும் வெள்ள நீர் நிரம்பி, மக்கள் அவதிப்படும் நிலை பார்க்க முடிகிறது. இனி வரும் காலங்களில் பதிப்புகள் குறைவாக இருக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்.

    தலைநகரம் மாநிலத்தின் மத்திய இடத்தில் இருக்க வேண்டும். திருச்சி தலைமையகத்துக்கு சரியாக இருக்கும் என்றார் தி.மு.க. அமைச்சரும், மூத்த அரசியல்வாதியுமான துறைமுருகன். நகர திட்டமிடலுக்கு அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

    • பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் முயற்சியில் மாநில அரசு சிறப்பாக நடவடிக்கை எடுத்து வருகிறது.
    • அ.தி.மு.க இன்னும் பா.ஜ.க நிழலில்தான் உள்ளது என்பதற்கு இதுவே சான்று.

    திண்டுக்கல்:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் இன்று திண்டுக்கல்லில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

    சென்னை மக்கள் வெள்ளத்தில் இருந்து மீண்டு வரும் சூழ்நிலையில் தற்போது நெல்லை உள்பட 4 மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்ததால் மக்கள் பெரும் துயரத்தை அடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் முயற்சியில் மாநில அரசு சிறப்பாக நடவடிக்கை எடுத்து வருகிறது.

    ஆனால் நிவாரணம் வழங்கவேண்டிய மத்திய அரசு முழுமையாக வழங்காமல் ஆய்வுக்குழுவை அனுப்புவதாக பாரபட்சம் காட்டுகிறது. மாநில அரசு கேட்கும் நிவாரணத்தில் பாதிஅளவு கூட மத்திய அரசு வழங்கவில்லை. கடந்த 100 வருடமாக நீர்நிலைகள், குளங்களை பாதுகாக்க தவறியதே இதுபோன்ற இயற்கை பேரழிவுக்கு முக்கிய காரணமாக உள்ளது.

    எனவே தமிழகத்தில் இனிவரும் காலங்களிலாவது இதுபோன்ற இயற்கை பேரிடரை சமாளிக்க சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். வருகிற 23-ந்தேதி சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில குழுகூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் இயற்கை பேரிடர்களை சமாளிப்பது குறித்து ஆய்வுகள் சேகரிக்கப்பட்டு அதனை அரசுக்கு வழங்க உள்ளோம்.

    வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் பெற்றுத்தர எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இதனை வைத்து அரசியல் செய்யும் முயற்சியில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை ஈடுபட்டுள்ளார். சென்னையில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை சிறப்பாக கையாண்டதாக மத்திய குழுவே பாராட்டி சென்றுள்ளது. அதனை பொறுத்துக்கொள்ள முடியாமல் அண்ணாமலை பேசி வருகிறார்.


    பாராளுமன்றத்தில் 2 இளைஞர்கள் உள்ளே புகுந்து கலர்புகை குண்டுகளை வீசி சென்றுள்ளனர். நாட்டின் பாதுகாப்பு மிகுந்த பகுதியான பாராளுமன்றமே கேள்விக்குறியாகி உள்ளது. இதுகுறித்து கேள்வி எழுப்பிய எதிர்கட்சி எம்.பிக்கள் 92 பேரை பா.ஜ.க அரசு சஸ்பெண்டு செய்துள்ளது.

    பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா பதில் அளிக்க கோரியதற்காக எதிர்கட்சி எம்.பிக்களை சஸ்பெண்டு செய்துவிட்டு பாராளுமன்றத்தை பா.ஜ.க பொதுக்குழுபோல நடத்த முடிவு செய்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் அ.தி.மு.க தனது கடமைகளை சரிவர செய்யாததால் கடும் பாதிப்பு தற்போது ஏற்பட்டுள்ளது. அதனை மறைத்து எடப்பாடி பழனிச்சாமி பொய்யான தகவல்களை கூறி வருகிறார்.

    காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க மத்திய அரசு எடுத்த முடிவின்போது அதற்கு ஆதரவு தெரிவித்த அ.தி.மு.க தற்போது உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எந்தவித பதிலும் கூறாமல் மவுனம் காத்து வருகிறது. இவர்கள் எவ்வாறு சிறுபான்மையினருக்கு பாதுகாப்பாக இருப்பார்கள். அ.தி.மு.க இன்னும் பா.ஜ.க நிழலில்தான் உள்ளது என்பதற்கு இதுவே சான்று.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது மதுக்கூர்ராமலிங்கம், பாண்டி, சச்சிதானந்தம் ஆகியோர் உடனிருந்தனர்.

    • 4 தென்மாவட்டங்களிலும் வரலாறு காணாத மழை பெய்து பெரிய சேதத்தை ஏற்படுத்திவிட்டது.
    • விமானம் மூலம் நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி புறப்பட்டு சென்றார்.

    சென்னை:

    மிச்சாங் புயலால் ஏற்பட்ட மழை வெள்ளத்தால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் கடுமையாக பாதிப்பு ஏற்பட்டது. இதை சரிசெய்ய இடைக்கால நிவாரணமாக ரூ.5,060 கோடியும், நிரந்தர நிவாரணமாக ரூ.12,659 கோடியும் வேண்டும் என்று மத்திய அரசை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி இருந்தார்.

    இதற்கிடையே, மத்தியக் குழுவும் வெள்ளச் சேதத்தை பார்வையிட்டு டெல்லி சென்றிருக்கிறது. இன்னும் ஒரு சில திட்டங்கள் இந்த மத்திய குழு தனது அறிக்கையை மத்திய அரசிடம் தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அதற்குள், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 4 தென்மாவட்டங்களிலும் வரலாறு காணாத மழை பெய்து பெரிய சேதத்தை ஏற்படுத்திவிட்டது. இன்னும் வெள்ளம் வடியாத நிலையில், மக்கள் சொல்லொணாத் துயரத்தை அனுபவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில், நேற்று கோவையில் 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை சென்றிருந்தார். ஏற்கனவே, அவர் மழை வெள்ள நிவாரண நிதி சம்பந்தமாக பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து பேசுவதற்காக நேரம் கேட்டிருந்தார்.

    கோவையில் இருந்தபோது, அதற்கான அனுமதி கிடைத்ததால், அங்கிருந்தே விமானம் மூலம் நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி புறப்பட்டு சென்றார்.

    இந்த நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 10 மணிக்கு பிரதமர் நரேந்திரமோடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசுகிறார்.

    தமிழ்நாடு இல்லத்தில் தங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்தபடி, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 4 மாவட்ட கலெக்டர்களுடன் காணொலி வாயிலாக பேசி, மழை வெள்ள நிவாரணப் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

    இதேபோல், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், தங்கம் தென்னரசு உள்ளிட்டோருடனும் மழை வெள்ள நிவாரணப் பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார்.

    அப்போது, மிச்சாங் புயலால் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நிவாரணப் பணிகள் மேற்கொள்வதற்காக மத்திய அரசிடம் நிதி கேட்கிறார். மேலும், தற்போது மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் ஏற்பட்ட பாதிப்புகளுக்கும் இடைக்கால நிவாரண நிதி கோருவதுடன் மத்திய குழுவையும் பார்வையிட அனுப்பிவைக்குமாறு பிரதமர் நரேந்திரமோடியை வலியுறுத்த இருக்கிறார்.

    முன்னதாக மாலை 3 மணிக்கு 'இந்தியா' கூட்டணியின் 4-வது ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.

    சென்னை திரும்பியதும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென்மாவட்டங்களுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அதற்கான பயணத் திட்டமும் வகுக்கப்பட்டு வருகிறது.

    ×