search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஏரியில் கழிவு நீர் கலப்பதால் துர்நாற்றம் வீசுகிறது
    X

    ஏரியில் கழிவு நீர் கலப்பதால் துர்நாற்றம் வீசுகிறது

    • மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவு முழுமையாக பின்பற்றப்படவில்லை.
    • உபரிநீரில் கழிவு நீர் திறந்து விடப்பட்டதால் ஏரி நீர் கருப்பாக மாறியது.

    சென்னை:

    சென்னை கொரட்டூரில் மிகப்பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரி மாசுபடுவதை தடுக்க அதன் சுற்றுப்புற தொழிற்சாலைகளில் இருந்து ரசாயன கழிவுகளை ஏரிக்கு திறந்து விட தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது.

    மேலும் இந்த ஏரி மாசுபடுவதை தடுக்க வேண்டும் என்றும், ஏரிக்கு கழிவு நீர் திறந்து விடுவதை தடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது. மேலும் 6 மாதங்களுக்கு ஒருமுறை ஆய்வு செய்து அதற்கான அறிக்கை தாக்கல் செய்யவும் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது.

    அம்பத்தூர் ஏரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர், உபரி கால்வாய் வழியாக கொரட்டூர் ஏரிக்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்த கால்வாயில் மழைநீர் வடிகால் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து கழிவு நீர் வெளியேற்றப்படுவதால் கொரட்டூர் ஏரியில் மாசு அளவு அதிகரித்துள்ளது.

    'மிச்சாங்' புயல் மழையை தொடர்ந்து உபரி நீரும், கழிவு நீரும் கொரட்டூர் ஏரியில் கலப்பதாக கூறப்படுகிறது. கடந்த டிசம்பர் 5-ந்தேதி மழையின் போது ஏரிக்கு நல்ல தண்ணீர் வந்தது. அதன் பிறகு அடுத்தடுத்த நாட்களில் உபரிநீரில் கழிவு நீர் திறந்து விடப்பட்டதால் ஏரி நீர் கருப்பாக மாறியது. அத்துடன் துர்நாற்றமும் வீச தொடங்கியது.

    இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறியதாவது:-

    மழைக்காலங்களில் கொரட்டூர் ஏரிப்பகுதியை சுற்றியுள்ள தொழிற்சாலைகளின் கழிவு நீர் ஏரியில் திறந்து விடப்படுகிறது. பல தொழிற்சாலைகள் கழிவு நீரை சுத்திகரித்தாலும், சில தொழிற்சாலைகள் ஏரியில் கழிவுநீரை திறந்து விடுவதை வாடிக்கையாக வைத்துள்ளன. மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவு முழுமையாக பின்பற்றப்பட வில்லை. எனவே கழிவு நீரை திறந்து விடும் தொழிற்சாலைகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், 'மழைநீர் கால்வாய்களில் சட்ட விரோதமாக கழிவுநீர் திறந்துவிடுவதை தடுக்கவும், மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது குறித்து உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்' என்றார்.

    Next Story
    ×