search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடிபோதை"

    • டிரைவரிடம் விசாரணை நடத்தியபோது அவர் குடிபோதையில் இருந்தது தெரிய வந்தது. ‌
    • பஸ் பயணிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

    கடலூர்:

    புதுவையில் இருந்து கடலூர் நோக்கி பயணிகளை ஏற்றிக் கொண்டு தனியார் பஸ் இன்று காலை வந்து கொண்டிருந்தது.

    கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகே தனியார் பஸ் வந்து கொண்டிருந்தபோது திடீரென்று முன்னாள் சென்ற காரை இடிப்பது போல் சென்றது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த காரில் சென்றவர்கள் உடனடியாக தனியார் பஸ்சை நிறுத்தினார்கள். அப்போது அங்கு இருந்த போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அமர்நாத் உடனடியாக தனியார் பஸ் டிரைவரிடம் விசாரணை மேற்கொண்டார்.

    டிரைவரிடம் விசாரணை நடத்தியபோது அவர் குடிபோதையில் இருந்தது தெரிய வந்தது. இதனால் பஸ்ஸில் இருந்த பயணிகள், போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனடியாக பஸ்சில் இருந்த பயணிகளை இறக்கிய போலீசார் மாற்று பஸ்சில் அனுப்பி வைத்தனர். குடிபோதையில் பஸ்சினை ஓட்டிவந்த டிரைவர் கடலூரை சேர்ந்த ராமச்சந்திரனுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

    மேலும், சம்பந்தப்பட்ட தனியார் பஸ் உரிமையாளரிடம் தெரிவித்து மாற்று டிரைவரை கொண்டு தனியார் பஸ்சினை இயக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த சம்பவம் பஸ் பயணிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

    • வேனில் சுமார் 15க்கும் மேற்பட்ட குழந்தைகளை ஏற்றிக்கொண்டு பல்லடம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.
    • முன்னாள் சென்று கொண்டிருந்த கார் மீது பள்ளி வேன் மோதியது.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள குங்குமம் பாளையம் பகுதியில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு பள்ளி வாகன ஓட்டுனநராக கோவை காந்திபுரத்தைச் சேர்ந்த மணி என்பவரது மகன் பிரவீன் குமார் (வயது 31) என்பவர் கடந்த 3 வருடங்களாக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று மாலை பள்ளி முடிந்தவுடன் பள்ளிக்குச் சொந்தமான வேனில் சுமார் 15க்கும் மேற்பட்ட குழந்தைகளை ஏற்றிக்கொண்டு திருப்பூர் - பல்லடம் மெயின் ரோட்டில் பல்லடம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.

    கரையாம்புதூர் என்ற இடம் அருகே சென்றபோது, முன்னாள் சென்று கொண்டிருந்த கார் மீது பள்ளி வேன் மோதியது. இதில் காரின் பின்புற கண்ணாடி உடைந்தது. பள்ளி வேனுக்குள் இருந்த குழந்தைகள் நிலை தடுமாறி அய்யோ அம்மா என்று அலறினர். இந்த நிலையில் வேனை நிறுத்தாமல் மீண்டும் வேகமாக பிரவீன் குமார் செலுத்தியுள்ளார்.

    இதை அடுத்து விபத்து ஏற்பட்ட கார் உரிமையாளர், பள்ளி வேனை துரத்தி ராயர் பாளையம் என்ற இடத்தில் மடக்கி பிடித்தார். பின்னர் வேனிலிருந்து ஓட்டுனரை இறங்கச் செய்தபோது, அவர் குடிபோதையில் நிதானம் இன்றி இருப்பது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அங்கிருந்த பொது மக்களிடம் இது குறித்து தெரிவித்தார்.

    அவர்கள் பல்லடம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து சம்பவ இடம் வந்த போலீசார் குடிபோதையில் வாகனம் ஓட்டிய ஓட்டுநரை கைது செய்து போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர். வேறு வாகனம் வரவழைக்கப்பட்டு குழந்தைகள் வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர்.

    குடிபோதையில் வாகனம் ஓட்டியதால் குழந்தைகளின் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்து இது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டனர், அதிர்ஷ்டவசமாக சிறிய விபத்தினால் பள்ளி வேனில் இருந்த குழந்தைகள் உயிர் தப்பினர். இதுவே குடிபோதை ஓட்டுனரால் பெரிய விபத்து ஏற்பட்டு இருந்தால், வேனில் இருந்த 15 குழந்தைகளின் நிலை என்னவாக இருக்கும் என அதிர்ச்சியுடன் பெற்றோர்கள் தெரிவித்தனர்.

    • கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரை சமாதானம் செய்து மீண்டும் குடும்ப நடத்த அழைத்து வந்தார்.
    • அழகுசின்னு ராஜதானி போலீசில் சரண் அடைந்தார்.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே ராயவேலூரை சேர்ந்தவர் சண்முகவேல் (வயது37). இவரது மனைவி அழகுசின்னு (31). இவர்களுக்கு பிளஸ்-2 மற்றும் 6-ம் வகுப்பு படிக்கும் 2 மகன்கள் உள்ளனர். கணவன் மனைவி 2 பேரும் கூலித்தொழில் செய்து வந்தனர்.

    சண்முகவேல் குடிபழக்கத்துக்கு அடிமையானதால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது. அடிக்கடி மது குடித்து விட்டு வந்து மனைவியை தாக்கி ரகளையில் ஈடுபட்டார். இதனால் வேதனையடைந்த அழகுசின்னு கோபித்துக்கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரை சமாதானம் செய்து மீண்டும் குடும்ப நடத்த அழைத்து வந்தார். சில நாட்கள் அமைதியாக சென்ற நிலையில் மீண்டும் மது குடித்துவிட்டு வந்து தொல்லை கொடுக்க ஆரம்பித்தார். பொறுத்து பொறுத்து பார்த்த அழகுசின்னு கணவரை திரும்பி தாக்க தொடங்கினார். ஒரு கட்டத்தில் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற அவர் அருகில் இருந்த அரிவாளை எடுத்து சண்முகவேலை சரமாரியாக வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சண்முகவேல் சம்பவ இடத்திலேயே பலியானார். பின்னர் அழகுசின்னு ராஜதானி போலீசில் சரண் அடைந்தார்.

    இதனைத் தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சண்முகவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர். குடிபோதையில் தொல்லை கொடுத்த கணவரை மனைவியே வெட்டி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ராமலட்சுமி சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து வந்து ஆண்டியப்பன் உடலில் சரமாரியாக வெட்டினார்.
    • ராமலெட்சுமி மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே உள்ள பத்தமடை அன்னை நாகம்மாள் தெருவை சேர்ந்தவர் வேலு என்ற ஆண்டியப்பன் (வயது 50). கூலி தொழிலாளி. இவரது மனைவி ராமலட்சுமி (45).

    ஆண்டியப்பனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. கடந்த 10 நாட்களாக ஆண்டியப்பன் குடித்துவிட்டு சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். மேலும் மது போதையில் அடிக்கடி மனைவியிடமும் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். நேற்று இரவு வழக்கம் போல் மது குடித்து விட்டு வந்த ஆண்டியப்பன் ராம லட்சுமியிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

    ஒரு கட்டத்தில் அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றி உள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ராமலட்சுமி சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து வந்து ஆண்டியப்பன் உடலில் சரமாரியாக வெட்டினார். இதனால் ஆண்டியப்பன் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். அதன் பின்னர் கோபத்துடன் ராமலட்சுமி தனது அறையில் போய் படுத்துக்கொண்டார்.

    இன்று காலையில் எழுந்த ராமலட்சுமி பத்தமடை போலீஸ் நிலையத்திற்கு சென்று சரணடைந்தார். அவர் நடந்த விபரங்களை கூறியதும், போலீசார் ராம லட்சுமியின் வீட்டுக்கு விரைந்து சென்றனர்.

    அங்கு உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ஆண்டியப்பனை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மேலும், ராமலெட்சுமி மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நள்ளிரவு 12.30 மணியளவில் வாலிபர் ஒருவர் தனது காரை வேகமாக ஓட்டி வந்தார்.
    • பாண்டி பஜார் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சென்னை:

    சென்னை வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலையில் நேற்று இரவு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனங்களை நிறுத்தி சோதனை நடத்தினர். நள்ளிரவு 12.30 மணியளவில் வாலிபர் ஒருவர் தனது காரை வேகமாக ஓட்டி வந்தார். போலீசார் அந்த காரை தடுத்தி நிறுத்தினர். ஆனால் வாலிபரோ காரை நிறுத்தாமல் ஓட்டினார். அப்போது சாலை தடுப்புகளில் மோதிய கார் நிற்காமல் சென்றது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் காரை மடக்கி பிடிக்கும் பணியில் தீவிரம் காட்டினர். இருப்பினும் வாலிபர் காரை நிறுத்தவில்லை. வேகமாக ஓட்டினார். அப்போது நிலை தடுமாறிய கார் போக்குவரத்து போலீசாரின் ரோந்து வாகனத்தின் மீது வேகமாக மோதியது. இதில் போலீஸ் வாகனத்தின் பின் பகுதி சேதம் அடைந்தது. வாலிபரின் காரும் சேதமானது.

    காரை வேகமாக ஓட்டிய வாலிபர் சீட் பெல்ட் அணியாமல் ஓட்டி வந்துள்ளார். இதனால் வாலிபரின் மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது. ஒரு வழியாக வாலிபர் நிறுத்தினார். இதையடுத்து காரில் இருந்த வாலிபரை போலீசார் வெளியில் வர சொன்னார்கள். அப்போது அவர் போதையில் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை பரிசோதனை செய்தனர். அப்போது அவர் மது போதையில் விபத்தில் சிக்கி காயம் அடைந்தது தெரியாமல் என்னை அடித்தது யார்? என கேட்டு போலீசுடன் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.

    போலீசார் அவரிடம் விபத்தில் சிக்கியதை எடுத்துக்கூறுவதற்குள் படாத பாடுபட்டனர். இதையடுத்து வாலிபரின் பெயர் உள்ளிட்ட விவரங்களை போலீசார் கேட்டனர். அவரது பெயர் ரியாஸ் அகமது என்பதும் ராயப்பேட்டையை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. போதையில் கார் ஓட்டிய குற்றத்துக்காக ரியாஸ் அகமதுக்கு ரூ. 10 ஆயிரம் அபராதமும், உரிய ஆவணங்களை காட்டாததற்காக ரூ. 500-ம் அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்காத குற்றத்துக்காக ரூ. 1,500ம் என தனிதனியாக அபராதம் விதிக்கப்பட்டது. இது தொடர்பாக பாண்டி பஜார் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • போலீசார் குண்டுகட்டாக தூக்கி சென்றதால் பரபரப்பு
    • நாகர்கோவிலில் உள்ள ஒரு ஓட்டல் ஒன்றில் வேலை பார்த்து வருவதாக கூறினார்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் நேற்று காலை இளம்பெண் ஒருவர் ரகளையில் ஈடுபட்டார். இதுபற்றி தகவல் அறிந்ததும் வடசேரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்கள்.

    அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தியபோது, அவர் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது. அந்த பெண் நாகர்கோவிலில் உள்ள ஒரு ஓட்டல் ஒன்றில் வேலை பார்த்து வருவதாக கூறினார்.

    விசாரணையில் அவர் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவந்ததால் அவரை அங்கு அனுப்பி வைக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

    ஆனால் அந்த பெண் அங்கிருந்து செல்லாமல் பஸ் நிலையத்தில் சுற்றி வந்தார். பஸ் நிலையத்தில் பெண் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் வடசேரி போலீசார் அந்த பெண்ணை ரெயில் மூலமாக திருவனந்தபுரத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.

    சென்னையிலிருந்து நாகர்கோவில் வழியாக குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று இரவு வந்ததும் அதில் அந்த பெண்ணை ஏற்றி வைப்பதற்காக அவரை அழைத்து வந்தனர்.

    ஆனால் ரெயில் நிலையத்திற்கு வர மறுப்பு தெரிவித்த அந்த பெண் போலீசாரிடம் தகராறில் ஈடுபட்டார். ஒரு வழியாக குண்டுகட்டாக தூக்கி ரெயில் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். ரெயில் நிலையத்தில் உள்ள பிளாட் பாரத்திற்கு கொண்டு வந்ததும் அந்த பெண் பிளாட்பாரத்தில் உருண்டு புரண்டு ரகளை செய்தார்.

    போதை தலைக்கேறியதால் அந்த பெண் செய்வது என்ன என்று தெரியாமலேயே இருந்தார்.

    இதை பார்த்த ரெயில் பயணிகள் முகம் சுழித்த னர். ஒரு வழியாக அந்த பெண்ணை ரெயிலில் ஏற்றி அனுப்பி வைத்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இதே பெண் நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் குடி போதை யில் தகராறில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

    • குடிபோதையில் பஸ் நிலையத்துக்குள் வந்த வாலிபர் ஒருவர் அங்கிருந்த பெண்ணிடம் தகராறில் ஈடுபட்டார்.
    • பெண் போதை வாலிபரை ஓட, ஓட விரட்டி சரமாரியாக தாக்கினார்.

    பூந்தமல்லி:

    பூந்தமல்லி பஸ் நிலைய வளாகம் எப்போது பயணிகள் வருகையால் பரபரப்பாக இருக்கும்.

    இந்த நிலையில் நேற்று இரவு குடிபோதையில் பஸ் நிலையத்துக்குள் வந்த வாலிபர் ஒருவர் அங்கிருந்த பெண்ணிடம் தகராறில் ஈடுபட்டார்.

    இதனால் அவர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த அந்த பெண் திடீரென தனது செருப்பை கழற்றி போதை வாலிபரை சரமாரியாக தாக்கினார்.

    அடிவாங்க முடியாமல் அந்த வாலிபர் போதை தள்ளாட்டத்துடன் பஸ் நிலைய பிளாட்பாரங்களில் தப்பி ஓடினார். ஆனாலும் அந்த பெண் போதை வாலிபரை ஓட, ஓட விரட்டி சரமாரியாக தாக்கினார்.

    அப்போது ஒரு கடை முன்பு இருந்த இரும்பு கம்பிகளை எடுத்து அந்த பெண் அடிக்க பாய்ந்தார். பதிலுக்கு போதை ஆசாமியும் அங்கிருந்த ஒருவாளியை எடுத்து தடுக்க தயாரானார்.

    இதனை கண்ட கடையில் இருந்த ஊழியர் ஒருவர் அவர்களை அங்கிருந்து செல்லுமாறு சமாதானப்படுத்தி அனுப்பினார். ஆனாலும் அவர்களது மோதல் தீரவில்லை. நீண்ட நேரத்திற்கு பின்னர் போக்கு வரத்து போலீஸ்காரர் ஒருவர் வந்து போதை வாலிபரை எச்சரித்து அனுப்பி வைத்தார்.இதன் பிறகுதான் அவர்களது மோதல் முடிவுக்கு வந்தது.

    போதை வாலிபரை பெண் விரட்டி,விரட்டி தாக்கும் காட்சியை பஸ் நிலையத்தில் இருந்து ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பரப்பினார்.

    இந்த வீடிேயா தற்போது வைரலாக பரவிவருகிறது. இச்சம்பவத்தால் பூந்தமல்லி பஸ் நிலையம் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

    • காரில் இருந்த மற்றொருவரும் இறங்கி வந்து கடை உரிமையாளரிடம் தகராறில் ஈடுபட்டு ரகளை செய்தனர்.
    • சம்பவம் சேலம் மாவட்ட போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சேலம்:

    சேலம் அம்மாபேட்டை மிலிட்டரி ரோடு ரவுண்டானா பகுதியில் ஒரு ஓட்டல் செயல்பட்டு வருகிறது. இந்த ஓட்டலுக்கு கடந்த 19-ந்தேதி இரவு குடிபோதையில் 2 பேர் சாப்பிட வந்தனர். அவர்கள் அசைவ உணவு ஆர்டர் செய்து சாப்பிட்டனர். அதில் ஒருவர் சாப்பிட்டு முடிக்கவும் கடையின் மேசை மீது தலை வைத்து அப்படியே போதையில் மயங்கிவிட்டார்.

    மற்றொருவர் அவர்கள் வந்த காரிலேயே தூங்கிவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஓட்டல் உரிமையாளர் பலமுறை எழுப்பியும் அவர் எழுந்திருக்கவில்லை. தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ஓட்டலில் மயங்கியவரை ஒருவழியாக எழுப்பினர்.

    அப்போது கடையில் இருந்து புறப்பட்டு செல்லுங்கள் என உரிமையாளர் கூறினார். அதற்கு காரில் இருந்த மற்றொருவரும் இறங்கி வந்து கடை உரிமையாளரிடம் தகராறில் ஈடுபட்டு ரகளை செய்தனர்.

    இது பற்றி அம்மாப்பேட்டை போலீசாருக்கு ஊழியர்கள் தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து, அவர்களிடம் விசாரித்தனர். அதில், அவர்கள் சேலம் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் பணியாற்றி வரும் சப்-இன்ஸ்பெக்டர் சிவசக்தி மற்றும் ஏட்டு செந்தில்குமார் என்பது தெரியவந்தது.

    இந்த ரகளையை அங்கிருந்த வாடிக்கையாளர் ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களான வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்டவைகளில் வைரலாக பரவியது.

    இதனிடையே சம்பவம் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார் விசாரணை நடத்தி ஓட்டலில் ரகளை செய்த சப்-இன்ஸ்பெக்டர் சிவ சக்தி, ஏட்டு செந்தில்குமார் ஆகிய இருவரையும் மாவட்ட ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டார்.

    தொடர்ந்து துறை ரீதியான விசாரணையை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு செல்லப் பாண்டியன் நடத்தினார். இந்த விசாரணை அறிக்கையை அவர் நேற்று போலீஸ் சூப்பிரண்டிடம் சமர்பித்தார். அந்த அறிக்கையை சேலம் சரக டி.ஐ.ஜி. ராஜேஸ்வரிக்கு போலீஸ் சூப்பிரண்டு அனுப்பி வைத்தார்.

    தொடர்ந்து அந்த அறிக்கையின் அடிப்படையில் துறைரீதியான நடவ டிக்கையாக சப்-இன்ஸ்பெக்டர் சிவசக்தி, ஏட்டு செந்தில்குமாரை சஸ்பெண்டு செய்து போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார் உத்தரவிட்டார். இந்த சம்பவம் சேலம் மாவட்ட போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • காயமடைந்த ஹக்கீம் வலியால் அலறினார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து வெங்கடேஷ்பாபு, சல்மான், தபுரேஷ், மதன்குமார் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் பகுதியைச் சேர்ந்தவர் சாகுல்.

    இவரது மகன் ஹக்கீம் (வயது32). கூலித்தொழிலாளியான இவரும், அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் பாபு என்கிற வெங்கடேஷ்பாபு (28), சல்மான் (30), தபுரேஷ் (24), மதன்குமார் (32) ஆகியோர் 4 பேரும் நண்பர்கள் ஆவர்.

    இந்த நிலையில் ஹக்கீமும், அவரது நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து கடந்த 17-ந் தேதி மது குடிக்க சென்றார். அப்போது போதையில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த 4 பேரும் சேர்ந்து ஹக்கீமை கையால் தாக்கினர். பின்னர் அங்கிருந்த பீர்பாட்டில் அவரை சராமாரியாக 4 பேரும் சேர்ந்து தாக்கினர். இதில் காயமடைந்த ஹக்கீம் வலியால் அலறினார். உடனே அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து ஹக்கீமை மீட்டு சிகிச்சைக்காக காவேரிப்பட்டணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த சம்பவம் குறித்து ஹக்கீம் காவேரிப்பட்டணம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வெங்கடேஷ்பாபு, சல்மான், தபுரேஷ், மதன்குமார் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

    • 2 நாளில் ரூ.5 லட்சம் வசூலானது
    • சோதனையில் 146 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் போக்கு வரத்து பிரிவு போலீசார் போக்குவரத்து விதிமுறை களை மீறுபவர்களுக்கு அபராதம் விதித்து வருகி றார்கள். நேற்று முன்தினம் ஒரே நாளில் நாகர்கோவில் நகரில் மட்டும் 238 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    இதன் மூலமாக ரூ.3 லட்சம் வசூலானது. இந்த நிலையில் நேற்றும் போலீ சார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். நாகர்கோவில் கோட்டார் பகுதியில் சோதனை நடத்தியபோது ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் சென்ற பலரை போலீசார் மடக்கி பிடித்து அபராதம் விதித்தனர். குடிபோதையில் வாகனம் ஓட்டியவர்களும் சிக்கினார்கள். ஆட்டோக்களிலும் சோதனை நடத்தப்பட்டது.

    அதிக மாணவிகளை ஏற்றி வந்த 2 ஆட்டோக்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர். மேலும் ஆட்டோ டிரைவர் ஒருவர் குடிபோதையில் வாகனம் ஓட்டியது தெரியவந்தது. இதையடுத்து அந்த ஆட்டோ டிரைவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்ததுடன் ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர். ஆட்டோ டிரை வரின் லைசென்ஸை ரத்து செய்ய ஆர்.டி.ஓ.வுக்கு பரிந்துரை செய்தனர். வடசேரி, கோட்டார், கலெகடர் அலுவலகம் பகுதியில் சோதனை நடத்தப்பட்டது. சோதனையில் 146 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. 12 மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். நேற்று ரூ.2 லட்சம் வசூலானது. கடந்த 2 நாட்களில் நாகர்கோவில் நகரில் மட்டும் ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட் டுள்ளது. இன்று காலையில் போக்குவரத்து போலீசார் கேப் ரோடு, ராமன் புதூர் சந்திப்பு, வடசேரி பகுதி களில் சோதனை மேற் கொண்டு வருகிறார்கள்.

    இதேபோல் சுசீந்திரம் போலீசார் ஆசிரமம் பகுதி யில் சோதனை மேற் கொண்டனர். குளச்சல், தக்கலை, கன்னியாகுமரி சப்-டிவிஷன்களுக்குட்பட்ட பகுதிகளிலும் சோதனை நடந்து வருகிறது. மேற்கு மாவட்ட பகுதிகளில் ஹெல்மெட் சோதனை மேற்கொள்ளும் போலீசார் கனரக வாகனங்களில் கனிம வளங்களை அதிக அளவு ஏற்றி செல்லும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    எனவே போலீசார் அதிக பாரம் ஏற்றி செல்லும் வாகனங்களை கண்காணித்து அந்த வாகனங்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

    • குடிபோதையில் இருந்த ஜெயபிரகாசை கைது செய்தனர்.
    • குடிபோதையில் தண்டவாளத்தில் காரை ஓட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கேரள மாநிலம் கண்ணூர் அருகேயுள்ள தேலே செவ்வா என்ற இடத்தில் ரயில்வே கேட் உள்ளது.

    இந்த ரெயில்வே கேட் அருகே நேற்றிரவு ஜெயபிரகாஷ் என்பவர் குடிபோதையில் காரை ஓட்டி வந்துள்ளார்.பின்னர் அவர் தண்டவாளத்தில் 15 மீட்டர் துரம் காரை ஓட்டி சென்றுள்ளார். இதை கண்ட கேட் கீப்பர் பதறி போய் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

    பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தண்டவாளத்தில் இருந்த காரை அப்புறப்படுத்தினர். மேலும் குடிபோதையில் இருந்த ஜெயபிரகாசையும் கைது செய்தனர்.

    பின்னர் அவர் மீது குடிபோதையில் வாகனத்தை இயக்குதல் மற்றும் ரெயில்வே சட்டப்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    குடிபோதையில் தண்டவாளத்தில் காரை ஓட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • ஓட்டலுக்கு போதையில் சாப்பிட வந்தவர்கள் போலீசார் என்று தெரியவந்தது.
    • தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ஓட்டலில் மயங்கியவரை ஒருவழியாக எழுப்பினர்.

    சேலம்:

    சேலம் அம்மாபேட்டை மிலிட்டரி ரோடு ரவுண்டானா பகுதியில் ஒரு ஓட்டல் செயல்பட்டு வருகிறது.

    சம்பவத்தன்று இரவு காரில் குடிபோதையில் 2 பேர் இந்த ஓட்டலுக்கு சாப்பிட வந்தனர். பின்னர் சாப்பிட்டு விட்டு ஒருவர் ஓட்டலில் இருந்த மேஜை மீது தலைவைத்து போதையில் மயங்கிவிட்டார். மற்றொருவர் அவர்கள் வந்த காரிலேயே தூங்கிவிட்டார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த ஓட்டல் உரிமையாளர் அம்மாபேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதற்கிடையே ஓட்டலுக்கு போதையில் சாப்பிட வந்தவர்கள் போலீசார் என்று தெரியவந்தது.

    தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ஓட்டலில் மயங்கியவரை ஒருவழியாக எழுப்பினர். ஆனாலும் அவர் ஓட்டலில் இருந்து புறப்படாமல் அங்கேயே நின்று கொண்டிருந்தார். பின்னர் அவரை அங்கிருந்து கிளம்பிசெல்லுங்கள் என்று கூறியுள்ளனர். ஆனால் அவர் நாங்கள் இங்கேயேதான் நிற்போம், எங்கு வேண்டுமானாலும் தூங்குவோம், என்ன பண்ணுவ என்று அநாகரீகமாக நடந்ததாக கூறப்படுகிறது.

    இந்த சம்பவங்களை அந்த பகுதியைச் சேர்ந்த ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார். தற்போது இந்த வீடியோக்கள் வைரலாகி வருகிறது. இதையடுத்து அந்த வீடியோவில் இருந்த போலீசார் யார்? என்று போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர்கள் சேலம் மாவட்ட சைபர் கிரைம் பிரிவைச் சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் சிவசக்தி, தலைமைக் காவலர் செந்தில்குமார் ஆகியோர் என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக உயர் அதிகாரிகளுக்கும் உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார் உத்தரவின் பேரில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணை முடிவில் 2 பேர் மீதும் துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது.

    ×