search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போதையில் காரை ஓட்டி மூக்கை உடைத்துக்கொண்ட வாலிபர்- என்னை தாக்கியது யார்? என கேட்டு போலீசாருடன் வாக்குவாதம்
    X

    போதையில் காரை ஓட்டி மூக்கை உடைத்துக்கொண்ட வாலிபர்- என்னை தாக்கியது யார்? என கேட்டு போலீசாருடன் வாக்குவாதம்

    • நள்ளிரவு 12.30 மணியளவில் வாலிபர் ஒருவர் தனது காரை வேகமாக ஓட்டி வந்தார்.
    • பாண்டி பஜார் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சென்னை:

    சென்னை வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலையில் நேற்று இரவு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனங்களை நிறுத்தி சோதனை நடத்தினர். நள்ளிரவு 12.30 மணியளவில் வாலிபர் ஒருவர் தனது காரை வேகமாக ஓட்டி வந்தார். போலீசார் அந்த காரை தடுத்தி நிறுத்தினர். ஆனால் வாலிபரோ காரை நிறுத்தாமல் ஓட்டினார். அப்போது சாலை தடுப்புகளில் மோதிய கார் நிற்காமல் சென்றது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் காரை மடக்கி பிடிக்கும் பணியில் தீவிரம் காட்டினர். இருப்பினும் வாலிபர் காரை நிறுத்தவில்லை. வேகமாக ஓட்டினார். அப்போது நிலை தடுமாறிய கார் போக்குவரத்து போலீசாரின் ரோந்து வாகனத்தின் மீது வேகமாக மோதியது. இதில் போலீஸ் வாகனத்தின் பின் பகுதி சேதம் அடைந்தது. வாலிபரின் காரும் சேதமானது.

    காரை வேகமாக ஓட்டிய வாலிபர் சீட் பெல்ட் அணியாமல் ஓட்டி வந்துள்ளார். இதனால் வாலிபரின் மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது. ஒரு வழியாக வாலிபர் நிறுத்தினார். இதையடுத்து காரில் இருந்த வாலிபரை போலீசார் வெளியில் வர சொன்னார்கள். அப்போது அவர் போதையில் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை பரிசோதனை செய்தனர். அப்போது அவர் மது போதையில் விபத்தில் சிக்கி காயம் அடைந்தது தெரியாமல் என்னை அடித்தது யார்? என கேட்டு போலீசுடன் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.

    போலீசார் அவரிடம் விபத்தில் சிக்கியதை எடுத்துக்கூறுவதற்குள் படாத பாடுபட்டனர். இதையடுத்து வாலிபரின் பெயர் உள்ளிட்ட விவரங்களை போலீசார் கேட்டனர். அவரது பெயர் ரியாஸ் அகமது என்பதும் ராயப்பேட்டையை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. போதையில் கார் ஓட்டிய குற்றத்துக்காக ரியாஸ் அகமதுக்கு ரூ. 10 ஆயிரம் அபராதமும், உரிய ஆவணங்களை காட்டாததற்காக ரூ. 500-ம் அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்காத குற்றத்துக்காக ரூ. 1,500ம் என தனிதனியாக அபராதம் விதிக்கப்பட்டது. இது தொடர்பாக பாண்டி பஜார் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×