search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கல்வி"

    • உலக குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம் பனியன் நிறுவனத்தில் அனுசரிக்கப்பட்டது.
    • குழந்தைகளை வேலைக்கு பணியமர்த்துவதை தடுக்க வேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் அலகு-2 சார்பாக உலக குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம் பனியன் நிறுவனத்தில் அனுசரிக்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் வரவேற்புரை நிகழ்த்தினார். சிறப்பு விருந்தினராக தொழில் அதிபர் மெஜஸ்டிக் கந்தசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் கூறுகையில், குழந்தைகள் நமக்கு தெய்வம் தந்த வரம், அவர்கள் எதிர்காலம் சிறக்க நல்ல குழந்தைகளாக வளர்க்க வேண்டும். குழந்தைகளை வேலைக்கு பணியமர்த்துவதை தடுக்க வேண்டும்.அவர்களுக்கு நல்ல கல்வியை தரவேண்டும். பள்ளிக்கு செல்லாத குழந்தைகளை கண்டறிந்து அவர்களை பள்ளிக்கு செல்ல ஊக்குவிக்க வேண்டும் என்றார்.

    மேலும் ஒவ்வொரு குழந்தை தொழிலாளி உருவாகும் போது எண்ணற்ற சாதனையாளர்களை இழக்கிறோம்.நாட்டின் எதிர்காலம் இருண்டு விடும் என்றார். பிறகு மாணவ செயலர்கள் விஜய், ராஜபிரபு, பூபதிராஜா ஆகியோர் தலைமையில் பனியன் தயாரிக்கும் நிறுவனத்தில் அனைவருக்கும் சமூகநீதி, குழந்தை தொழிலாளர் முறைக்கு முடிவு கட்டுங்கள் என்ற மைய கருத்தை வலியுறுத்தி அங்குள்ள தொழிலாளர்களுடன் இணைந்து உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.

    • நீலகிரியில் 10ம் வகுப்பு முடிக்கும் மாணவ - மாணவிகள் பலர் துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும், பெங்களூருக்கும் சென்று தங்கி விடுகின்றனர்.
    • ஊட்டி, குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட இடங்களில் ஏராளமான தோட்ட தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர்.

    திருப்பூர்:

    நீலகிரி உள்ளிட்ட மலைப்பிரதேசங்களில் மேல்நிலைக் கல்வி பயில்வோர் எண்ணிக்கை குறைகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் 10, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வெழுதியோர் எண்ணிக்கையில் நீலகிரி மாவட்டம் தான் கடைசி இடத்தில் உள்ளது. 10-ம் வகுப்பில் 7,090 பேர் தேர்வெழுதியதில் 6,297 பேர், பிளஸ் 1ல் 6,199 பேர் தேர்வெழுதியதில் 5,588 பேர், பிளஸ் 2ல் 7,989 பேர் தேர்வெழுதியதில் 6,559 பேர் தேர்ச்சி பெற்றனர்.

    திருப்பூர் மாவட்ட ஜே.இ.இ., மற்றும் ஐ.ஐ.டி., தேர்வு ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் கூறியதாவது:-

    நீலகிரியில் 10ம் வகுப்பு முடிக்கும் மாணவ - மாணவிகள் பலர் துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும், பெங்களூருக்கும் சென்று தங்கி விடுகின்றனர். பலர் 10ம் வகுப்பு முடித்த நிலையில் சுய தொழில் மீது ஆர்வம் கொண்டு மேல் கல்வியை தொடராமல் இருக்கின்றனர்.பள்ளி இடைநிற்றல் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.

    இருப்பினும் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட இடங்களில் ஏராளமான தோட்ட தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். அவர்களது குழந்தைகள் பள்ளிக்கல்வியை தொடர்கின்றனரா என்பதை கண்காணித்து உறுதிப்படுத்த வேண்டும். பலர் வேலை தேடி கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட தொழில் நகரங்களுக்கு குடும்பத்துடன் வந்துவிடுகின்றனர்.நீலகிரி மட்டுமின்றி மலை மாவட்டங்கள், சுற்றுலா தலங்களில் மாணவ - மாணவிகளின் மேல்நிலை மற்றும் உயர்கல்வியை உறுதிப்படுத்தும் வகையில் ஆய்வு நடத்தப்படுவது சிறந்தது. இவ்வாறு அவர் கூறினார். 

    • டோப் என்று சொல்லப்படும் ஒருவகையான கஞ்சா பழக்கத்துக்கும் மாணவர்கள் அடிமையாகி வருகின்றனர்.
    • கூடாநட்பில் இந்த பழக்கத்துக்கு சிறுவர்கள் அடிமையாவதாக அவர்களது பெற்றோர் தரப்பில் கூறுகின்றனர்.

    போதைப்பழக்கத்தால், மாணவர்கள் மனரீதியான பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக பெற்றோரின் கண்காணிப்பு இல்லாமல் உள்ள மாணவர்களும், ஆசிரியர்களுக்கு பயப்படாத மாணவர்களும் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக இதுசம்பந்தமான உளவியல் ஆய்வுத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

    சமூக வலைத்தளங்களில் போடப்படும் பதிவுகளால் கெத்து காட்ட வேண்டும் என்ற அடிப்படையில் கூடாநட்பில் இந்த பழக்கத்துக்கு சிறுவர்கள் அடிமையாவதாக அவர்களது பெற்றோர் தரப்பில் கூறுகின்றனர். ஒரு சில மாணவர்கள் அந்தந்த பகுதி ரவுடிகள் என அறியப்படுபவர்களுடன் தொடர்பில் இருப்பதை பெருமையாக நினைத்து பழகி வருகின்றனர். இந்த பழக்கம் நாளடைவில் தனது செலவுக்கான பணத்தேவைக்கு திருட்டு, வழிப்பறி போன்ற செயல்களில் ஈடுபட வைக்கிறது. மாணவப்பருவம் என்பதால் ஒரு சில போலீசார், பெற்றோரை வரவழைத்து சம்பந்தப்பட்ட மாணவர்களை கண்டித்து அனுப்புகின்றனர்.

    இது தவிர, டோப் என்று சொல்லப்படும் ஒருவகையான கஞ்சா பழக்கத்துக்கும் மாணவர்கள் அடிமையாகி வருகின்றனர்.

    இங்கு, அங்கு என்றில்லாமல் மதுரை மாநகர பகுதிகளில் வாலிபர்கள் அதிகம் உள்ள இடங்களில் இந்த பழக்கமும் பரவலாக உள்ளது. போதை பொருட்கள் கிடைக்கும் வழிகளை அடைக்க வேண்டிய போலீசார், ஹெல்மெட் அணியாமல் வரும் இருசக்கர வாகன ஓட்டிகளிடம்தான் கடுமை காட்டுகிறார்களே தவிர, இதுபோன்ற போதைப்பொருள் நடமாட்டத்தை தடுக்க முழுமூச்சாக களம் இறங்கவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

    இதனால், சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கும் இதுபோன்ற போதைப்பழக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

    குறிப்பாக பள்ளிக்கூடங்களின் அருகில் உள்ள கடைகளில் இந்த போதைப்பொருள்கள் தாராளமாக கிடைத்து வருவதாக கூறப்படுகிறது. அதாவது, மிட்டாய் போன்ற ஒருவகையான போதைப்பொருள் மாணவர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதனை வாய்க்குள், ஒரு ஓரத்தில் வைத்து மெதுவாக சுவைக்கும்போது அதிலிருந்து பற்பசை போன்ற சாறு போதையை ஏற்படுத்துகிறது.

    விவரம் அறிந்த பெற்றோர்கள் உடனடியாக தங்களது பிள்ளைகளை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று அந்த பழக்கத்தில் இருந்து மீட்டெடுக்க சிகிச்சை பெறுகின்றனர்.

    பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியான பிறகு, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு அல்லாடும் ஒரு சில மாணவர்கள், இதுபோன்ற போதைப்பழக்கத்தால் மதிப்பெண் எடுக்க முடியாமல் போனதாக வருத்தப்படுகின்றனர். அவர்கள், ஒவ்வொரு கல்லூரியாக ஏறி, இறங்கி தான் விரும்பும் படிப்பில் சேர்க்கை பெற அலைவதில் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

    போதைப்பழக்கத்துக்கு அடிமையாகும் முன்பே மாணவர்களை கண்டறிந்து, அதில் இருந்து அவர்களை விடுபட வைக்க தேவையான முயற்சிகளை பெற்றோர், ஆசிரியர்கள் எடுக்க வேண்டும். இதில் சில வாரங்கள் தாமதம் ஏற்பட்டாலும் மாணவர்கள் கையை மீறிப்போகும் ஆபத்து அதிகம் என மருத்துவ துறையினர் எச்சரிக்கின்றனர்.

    மாணவர்களை அவர்களது போக்கில் செயல்பட தொடர்ந்து அனுமதித்தால், போதைப்பழக்கம் அவர்களது உயர்கல்வி வாய்ப்பை பறித்துவிடும். எதிர்காலத்தையும் கேள்விக்குறி ஆக்கிவிடு்ம் எனவும் எச்சரிக்கைகள் மருத்துவ துறை மூலம் வந்து கொண்டிருக்கின்றன.

    எனவே, மதுரையில் பள்ளிக்கூடங்களுக்கு அருகில் உள்ள கடைகள் மற்றும் சந்தேகத்துக்கு இடமான வகையில் சுற்றித்திரியும் போதைப்பொருள் விற்பனை செய்யும் நபர்களை கண்டறிந்து கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். சிறுவர்களை பாதை மாற்றும் போதைப்பொருளை தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோரின் கோரிக்கையாக உள்ளது.

    • பள்ளி செல்லா குழந்தைகளின் பெற்றோரிடம் கல்வியின் அவசியம் குறித்து எடுத்து கூறப்பட்டது.
    • அனைத்து பள்ளி ஆசிரியர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த ஆதனூர் ஊராட்சியில் 6 முதல் 18 வயது வரை உள்ள பள்ளி செல்லாத மற்றும் இடைநிற்றல் குழந்தைகளை கண்டறிந்து பள்ளியில் சேர்ப்பது குறித்த ஆலோசனை கூட்டம் ஊராட்சி தலைவர் சந்திரா சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.

    துணைத்தலைவர் ரவிக்குமார் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் வட்டார வளமைய மேற்பார்வை யாளர் அசோக்கு மார், தலைமையாசிரியர்கள் தனலட்சுமி, ரவீந்திரன், ஊராட்சி உறுப்பினர்கள் ரேணுகா குமரகுரு, நீலவண்ணன், அங்கன்வாடி அமைப்பாளர் கஸ்தூரி மற்றும் மகளிர் சுய உதவிக்குழுவினர்கள், கிராம நிர்வாக அலுவலர், அனைத்து பள்ளி ஆசிரியர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர், ஆதனூர் ஊராட்சியில் பள்ளி செல்லா குழந்தைகளின் பெற்றோரிடம் கல்வியின் அவசியம் குறித்து எடுத்து கூறப்பட்டது.

    • நம்முடைய தமிழ்நாட்டில் பல்வேறு கல்வி முறைகள் இருக்கின்றன.
    • நிறைய பெற்றோர் தங்களின் குழந்தைகள் மூலமாக கல்வி அறிவு பெற்றிருக்கிறார்கள்.

    முன்பை விட, இப்போது பள்ளிகள் அதிகமாகிவிட்டது. புதுப்புது கல்வி முறைகளும், பாடத்திட்டங்களும் தமிழகத்திற்குள் புகுந்துவிட்டன. இந்நிலையில், குழந்தைகளை புதிதாக பள்ளியில் சேர்க்க இருக்கும் பெற்றோர்களின் மனதில் எழும் இயல்பான சில கேள்விகளுக்கு, மருத்துவர் மற்றும் கல்வியாளராக பணியாற்றும் பார்கவி மூலம் விடையளிக்க முயன்றிருக்கிறோம்.

    புதுக்கோட்டையை சேர்ந்தவரான இவர், மருத்துவர். ராஜஸ்தான் மெடிக்கல் கல்லூரியில், மாணவ-மாணவிகளுக்கு மருத்துவம் கற்றுக்கொடுத்து டீச்சிங் எனப்படும் கற்பித்தல் பணியையும் கற்றுக்கொண்டிருக்கிறார். இவர், இப்போது குழந்தைகளின் கற்றல் திறனையும், ஆசிரியர்களின் கற்பித்தல் திறனையும் ஆய்வு செய்து, அதை மேம்படுத்தும் ஆராய்ச்சிகளில் இறங்கியுள்ளார். அவர் நம்முடைய கேள்விகளுக்கு விடைக்கொடுக்கிறார்.

    * இப்போது என்னென்ன கல்வி முறைகள் நடைமுறையில் இருக்கிறது?

    நம்முடைய தமிழ்நாட்டில் பல்வேறு கல்வி முறைகள் இருக்கின்றன. சி.பி.எஸ்.இ., தமிழ்நாடு ஸ்டேட் போர்ட், மெட்ரிகுலேஷன், இன்டர்நேஷனல் பாக்காலுரேட் (ஐ.பி.), ஐ.ஜி.சி.எஸ்.இ. போன்ற கல்வி முறைகள், எல்லோருக்கும் பரீட்சயமான கல்வி முறைகளாக திகழ்கின்றன. அதேசமயம், மாண்டி சோரி, ரெஜியோ எமிலியா, வால்டோர்ப், பேங்க் ஸ்டீரீட் இப்படியான மழலையர் கல்வி முறைகள்.... கொஞ்சம் கொஞ்சமாக பிரபலமடைந்து வருகின்றன. இவற்றோடு மெட்ரிகுலேஷன் தரத்திலான டெக்னோ பள்ளிகளும் அதிகம் முளைத்துவிட்டன.

    * எந்த கல்வி முறை சிறப்பானதாக இருக்கும்?

    இப்போது எல்லா கல்வி முறைகளும், அப்டேட் ஆகிவிட்டன. சில கல்வி முறைகள் அப்டேட் ஆகிக்கொண்டு இருக்கின்றன. அதனால், எது சிறந்தது என குறிப்பிடுவது, தேர்ந்தெடுப்பது கடினம்தான். இருந்தாலும், பள்ளிக்கும், வீட்டிற்குமான தொலைவு, கல்வி கட்டணம்... போன்றவைதான், பள்ளி தேர்வை நிர்ணயிக்கின்றன.

    முடிந்தவரை, செயல்முறை கல்வி அதிகமாக இருக்கும் கல்விமுறைகளை தேர்ந்தெடுப்பது நல்லது. சி.பி.எஸ்.இ., தமிழ்நாடு ஸ்டேட் போர்ட், மெட்ரிகுலேஷன், இன்டர்நேஷனல் பாக்காலுரேட் (ஐ.பி.), ஐ.ஜி.சி.எஸ்.இ. போன்ற கல்வி முறைகள் சிறப்பானதாக இருக்கும்.

    * குழந்தைகளின் கற்றல் திறனையும், புரிந்து கொள்ளும் ஆர்வத்தையும் எப்படி மேம்படுத்த முடியும்?

    கண்களால் பார்த்து படிப்பது ஒரு ரகம். இது டெக்னோ பள்ளிகளில் நடக்கும். டிஜிட்டல் திரைகளில் ரைம்ஸ் பாடல்கள், கதைகள் ஓடவிட்டு குழந்தைகளுக்கு டிஜிட்டல் கல்வி கற்றுக்கொடுப்பார்கள். அதேபோல கண்களால் பார்த்து படிப்பதுடன், அதை கைகளால் செய்து பார்த்தும், வரைந்து படிப்பதும் மற்றொரு ரகம். உதாரணத்திற்கு, வானவில் பற்றி கற்றுக்கொடுக்கும்போது 6 வண்ணங்கள் இருக்கும், ஒவ்வொரு வண்ணத்திற்கு ஒவ்வொரு பெயர் இருக்கும் என்று சொல்லிக்கொடுப்பதை விட, வண்ண பெயிண்டுகளை கையில் கொடுத்து, அவர்களை வானவில் வரைய சொல்லி, கற்றுக்கொடுக்கும் செய்முறை கல்வி மற்றொரு ரகம். விஷூவல் கல்வியை விட, செய்முறை கல்விக்குதான் ஆற்றல் அதிகம். அதுதான், குழந்தைகளின் கற்றல் திறனை மேம்படுத்தும்.

    * ஆசிரியர்களின் கல்வி கற்பிக்கும் திறனும், குழந்தைகளின் கல்வி கற்றல் திறனும் முன்பும், இப்போதும் எப்படி இருக்கிறது?

    முன்பை விட, ஆசிரியர்களின் கல்வி கற்பிக்கும் திறன் அதிகரித்திருக்கிறது. இப்போது ஆசிரியர்கள் சிறப்பாக கல்வி கற்றுக்கொடுக்கிறார்கள். குறிப்பாக, வீடியோ காட்சிகள், மாதிரி உபகரணங்களை கொண்டு குழப்பமான பாடங்களையும் எளிதாக கற்றுக்கொடுக்கிறார்கள். அதேபோல குழந்தைகளின் கல்வி கற்கும் ஆர்வமும், அதிகரித்திருக்கிறது. ஆர்வமாக கல்வி கற்கிறார்கள். அதேசமயம், மாணவர்கள்-ஆசிரியர்கள் இவ்விருவரின் கல்வி பயணத்திற்குள், பெற்றோரின் தலையீடும் இப்போது அதிகரித்திருக்கிறது. காரணமில்லாமல் விடுமுறை எடுப்பது, குழந்தைகளுக்கு ஆதரவாக தேர்வுகளை தவறவிடுவது, குழந்தைகளை அடிக்கக்கூடாது, கண்டிக்கக்கூடாது, திட்டக்கூடாது... என நிறைய கண்டிஷன்களை முன்வைப்பது, அவன் படிக்கவில்லை என்றாலும் பராவாயில்லை அவனை கண்டிக்க வேண்டாம் என்பது போன்ற பல தலையீடுகள் அதிகரித்துவிட்டன. இது ஆரோக்கியமான சமூகத்தை கட்டமைக்க உதவாது என்பதையும், தங்களுடைய குழந்தைகளை ஒழுக்கமானவர்களாக வளர்க்க முடியாது என்பதையும் பெற்றோர் மறந்துவிடுகின்றனர்.

    * சமீபகால கல்விமுறை, குழந்தைகளுக்கு பாதிப்பை உண்டாக்குகிறதா?

    நிச்சயமாக, டிஜிட்டல் பள்ளிகளில் டிஜிட்டல் திரை மூலம் பாடம் நடத்தப்படுவதாலும், வீடுகளில் ஸ்மார்ட்போன் பயன்பாடும் அதிகரித்திருப்பதாலும் குழந்தைகளின் கண் பார்வை சிறுவயதிலேயே பாதிக்கப்படுகிறது. இன்றைய குழந்தைகளுக்கு வரப்பிரசாதமாக இருக்கும் டிஜிட்டல் கல்வி முறைகளே, பாதிப்பான கல்வி முறைகளாக மாறி வருவதை எவராலும் மறுக்க முடியாது.

    * எல்லா கல்வி முறையிலும், விளையாட்டிற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதா?

    ஆம்...! இப்போது எல்லா கல்வி முறையிலும், எல்லா பள்ளிகளிலும் விளையாட்டுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஏனெனில் விளையாட்டு அனுபவம், குழந்தைகளின் மன நலம் மற்றும் உடல்நல ஆரோக்கியத்திலும், மூளை வளர்ச்சியிலும் அதிக பங்காற்றுவதால், அதை எல்லா பள்ளிகளும் ஊக்கப்படுத்துகிறார்கள்.

    * கல்வி அறிவு இல்லாத பெற்றோர், சர்வதேச கல்வி முறையில் குழந்தைகளை சேர்க்க முடியாது என்ற கருத்து உண்மையா?

    இது, பள்ளி நிர்வாகத்திற்கு ஏற்ப மாறுபடும். நிறைய பள்ளிகள், இந்த கருத்தை பொய்யாக்கி உள்ளன. அதேசமயம், சில பள்ளிகள் இந்த கருத்தை உண்மை என நிரூபித்துள்ளன. ஆனால், நிறைய பெற்றோர் தங்களின் குழந்தைகள் மூலமாக கல்வி அறிவு பெற்றிருக்கிறார்கள். ஒருசில பெற்றோர், குழந்தைகள் வாயிலாகவே ஆங்கிலம்-இந்தி மொழி பேசும் பழக்கத்தையும் உருவாக்கிக் கொண்டுள்ளனர்.

    * கற்றல் திறன், கற்பித்தல் திறன் சார்பான ஆய்வுகளில் ஈடுபட்டு வருகிறீர்கள். உங்களுடைய ஆசை என்ன?

    குழந்தைகளை, எந்த வகையிலும் பாதிக்காத தொழில்நுட்பங்களை கொண்டு, ஆர்வத்தை தூண்டும் வகையிலான கல்வி முறையை கட்டமைப்பதும், அதற்கேற்ற கற்பித்தல் திறனை வளர்ப்பதும்தான் என்னுடைய ஆசை. இப்போது வரை, ஆய்வின் மூலம் கற்றுணர்ந்த சில நுட்பங்களை பல பள்ளிகளுக்கு சென்று, கற்பித்து வருகிறேன்.

    • தொண்டியில் நடந்த கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியில் சாதனை மாணவ-மாணவிகள் கவுரவிக்கப்பட்டனர்.
    • உயர் கல்வியின் முக்கியத்துவம் பற்றி பேராசிரியர்கள் விளக்கம் அளித்தனர்.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் ஐக்கிய ஜமாஅத் மற்றும் ராமநாத புரம் எகனாமிக் சேம்பர் இணைந்து கல்வி வழி காட்டி நிகழ்ச்சியை நடத் தின. இதில் மாண வர்கள் என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? என்பது பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

    பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ- மாணவிகள் அடுத்து என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? என்பது பற்றிய பல்வேறு துறை சார்ந்த பேராசிரியர்கள் விளக்கம் அளித்தனர்.

    உயர் கல்வியின் முக்கி யத்துவம் பற்றி பேராசிரியர் முகம்மது அப்துல்லாஹ், ஆசிரியப்பணி மற்றும் அரசு பள்ளிகள் பற்றி பேராசிரியர் சுல்தான், மருத்துவம், துணை மருத்துவம் மற்றும் பொறியியல் கல்வி சம்பந்த மாக பேராசிரியர் சுல்தான் ஆகியோர் விளக்கம் அளித்தனர்.

    பள்ளி அளவில் முதல் 3 இடங்களை பிடித்த 17 மாணவ-மாணவிகளை பாராட்டி கேடயம், ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.

    • இந்திய ஒன்றியத்தில் கல்வியில் மிகச் சிறந்த மாநிலமாக தமிழகம் உள்ளது.
    • வேலைவாய்ப்பு வழங்குவதற்கும் முதல்-அமைச்சர் பல்வேறு திட்டங்களையும் வழங்கி வருகிறார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அயல்நாட்டுக் கல்வித் துறை சார்பில் தென்னை விஞ்ஞானி டாக்டர் செல்வம் அறக்கட்ட ளையின் முதலாமாண்டு விழா நடைபெற்றது.

    துணைவேந்தர் திருவள்ளுவன் தலைமை வகித்தார்.

    இந்த விழாவில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கலந்து கொண்டு பேசியதாவது:-கல்வியில் நமது மாணவர்கள் முன்னேற வேண்டும் என்பதற்காகத் முதல்-அமைச்சர் அளித்து வருகிற சலுகைகள், திட்டங்கள் அனைத்தும் இந்தியாவிலேயே தமிழகத்தை மிகச் சிறந்த மாநிலமாகக் கொண்டு செல்லும்.

    இந்திய ஒன்றியத்தில் கல்வியில் மிகச் சிறந்த மாநிலமாக தமிழகம் உள்ளது.

    இந்திய ஒன்றிய அரசு உயர் கல்வி பெறுபவர்களின் எண்ணிக்கையை 51 சதவீதமாக உயர்த்த வேண்டும் என இலக்கு நிர்ணயித்தது.

    மற்ற மாநிலங்களில் உயர் கல்வி பெறுபவர்களின் விகிதம் 26 சதவீதமாக இருந்ததே இதற்குக் காரணம். ஆனால், தமிழகத்தில் உயர் கல்வி பெறுபவர்களின் விகிதம் ஏற்கனவே 52 சதவீதமாக உயர்ந்துள்ளது. எனவே, தமிழகத்தில் இன்னும் 5 ஆண்டுகளில் உயர் கல்வி பெறுபவர்களின் எண்ணி க்கை நிச்சயமாக 100 சதவீதத்தை எட்டும்.

    முதல்-அமைச்சர் அறிவித்த புதுமைப் பெண் திட்டத்தின் மூலம், தமிழகத்திலுள்ள பெண் குழந்தைகள் நிச்சயமாக கல்லூரிக் கல்வியை முடிப்பர்.

    பெண் குழந்தைகள் படிப்பதால், அந்தக் கட்டாயத்தின் காரணமாக ஆண் குழந்தைகளும் உயர் கல்வி படிக்கும் சூழல் ஏற்படும்.

    இதன் மூலம், 5 ஆண்டுகளில் தமிழகம் 100 சதவீத உயர் கல்வியைப் பெற்றிருக்கும்.

    இதேபோல, வேலைவாய்ப்பு வழங்கு வதற்கும் முதல்-அமைச்சர் பல்வேறு திட்டங்களையும் வழங்கி வருகிறார் .இவ்வாறு அவர் பேசினார்.

    • செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அவசியம் குறித்து சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
    • தொழில்நுட்பத்தில் சிக்கலைத் தீர்க்கும் நுட்பங்கள் குறித்த படிப்புகள் உள்ளன.

    கணினியை மையப்படுத்தி, உருவாக்கப்பட்டிருக்கும் சில டிஜிட்டல் படிப்புகளையும், அதன் சிறப்புகளையும் இந்த தகவல் தொகுப்பில் தெரிந்து கொள்வோம். செயற்கை நுண்ணறிவு

    செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அவசியம் குறித்து சொல்லித் தெரிய வேண்டியதில்லை. தகவல் தொழில்நுட்பம், வங்கிகள் என அனைத்து துறைகளிலும் வேலைகளிலும் இன்று ஆன்லைனில் ஒரே நேரத்தில் அனைவரும் கையாளக் கூடிய விஷயங்கள் அனைத்துக்கும் காரணம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்.

    செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் டிப்ளமோ, இளங்கலை, முதுகலை, முனைவர் பட்டம் வரை படிப்புகள் உள்ளன. பட்டயப் படிப்பு முடித்தவர்கள், சான்றிதழ் படிப்புகளையும் படிக்கலாம்.

    நிரலாக்கம், இயற்கணிதம், புள்ளியியல், அல்காரிதம் மற்றும் தொழில்நுட்பத்தில் சிக்கலைத் தீர்க்கும் நுட்பங்கள் குறித்த படிப்புகளும் உள்ளன. பெங்களூரு மற்றும் ஐதராபாத்தில் இதற்கென தனித்துவம் பெற்ற கல்லூரிகள் உள்ளன.

    டிஜிட்டல் மார்க்கெட்டிங்- எஸ்.இ.ஓ.டிஜிட்டல்

    மார்க்கெட்டிங் என்பது எஸ்.இ.ஓ. எனப்படும் சர்ச் என்ஜின் ஆப்டிமேஷன் பணியையும் உள்ளடக்கியது. தங்கள் நிறுவனங்களின் இணையதளங்கள் எந்த அளவுக்கு மக்களைச் சென்றடைந்துள்ளன, கூகுள் தேடலில் முன்னுரிமை கிடைக்க வழிகள், சமூக வலைத்தளங்களில் மார்க்கெட்டிங் உள்ளிட்ட தகவல்களைத் தெரிந்து கொள்ள இந்தப் படிப்பு உதவும். டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறைக்குச் செல்பவர்கள் கண்டிப்பாக இது குறித்த அடிப்படை அறிவைப் பெற்றிருக்க வேண்டும். கணினிமயமாக்கலில் எஸ்.இ.ஓ. பணிகளுக்கான வேலைவாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது. எனினும் புதிதாக பணியைத் தொடங்குபவர்கள் அதிக ஊதியத்தை எதிர்பார்க்க முடியாது.

    நெட்வொர்க் அண்ட் சைபர் செக்யூரிட்டி

    எந்தவொரு துறை வளர்ச்சி அடைகிறதோ அந்த அளவுக்கு அச்சுறுத்தல்களும் அதிகமாகவே இருக்கும். அந்த வகையில் முழுக்க முழுக்க தொழில்நுட்பங்கள் மூலமாக இயங்கும் கணினியில் அதே மாதிரியான மற்றொரு தொழில்நுட்பம் மூலமாக பாதுகாப்பு அச்சுறுத்தல்களும் வரும். எனவே, வேறு யாரும் நமது தரவுகளை பயன்படுத்தாத வண்ணம் பாதுகாக்கவே நெட்ஒர்க் அண்ட் சைபர் செக்யூரிட்டி படிப்புகள் பயன்படுகின்றன.

    பாதுகாப்பான ஆன்லைன் பரிவர்த்தனைகள் முதல் ஆன்லைன் வணிகம் வரை அனைத்தும் இதில் அடங்கும். இதற்கான ஆன்லைன் சான்றிதழ் படிப்புகளும் தற்போது அதிகம் இருக்கின்றன.

    மொபைல் அப்ளிகேஷன் டெவலப்மென்ட்

    ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு அதிகரித்துவிட்ட நிலையில், பயனர்கள் எளிதாகப் பயன்படுத்தும் பொருட்டும், ஆன்லைன் தளங்களைப் போலவே செல்பேசிகளுக்கான செயலிகளும் அதிகரித்துவிட்டன. செல்பேசியில் பயன்படுத்துவதெற்கென பிரத்யேகமாக செயலிகள் வடிவமைக்கப்படுகின்றன.

    'அப்ளிகேஷன் டெவலப்பர்' எனும் இந்த பணியில் ஆண்ட்ராய்டு, ஐ.ஓ.எஸ்., விண்டோஸ் போன்ற ஓ.எஸ். தொழில்நுட்பங்களில் இணையதளங்களுக்கான செயலிகளை வடிவைமைக்க வேண்டும்.

    இதற்காக சி, சி++, ஜாவா போன்ற கணினி மொழிகளை அறிந்திருக்க வேண்டும். கணினி அறிவியல் தொடர்பான ஒரு பட்டப்படிப்பை முடித்த பின்னர் தனியார் கல்வி நிறுவனங்களில் இந்த படிப்பை படிக்கலாம்.

    வெப் டிசைனிங் அண்ட் டெவலப்மென்ட்

    வணிக நிறுவனங்களுக்காகவோ தனிப்பட்ட பயன்பாட்டுக்காகவோ ஓர் இணையதளத்தை உருவாக்கும் வேலையே வெப் டிசைனிங் அண்ட் டெவலப்மென்ட். மொபைல் செயலிகளுக்கே அடித்தளமாக இருப்பவை இணையதளங்களே.

    சிறு, குறு தொழில் செய்வோரும் தங்கள் பொருள்களை ஆன்லைனில் விளம்பரப்படுத்த, விற்க இணையதளங்கள் அவசியம். எனவே, வருங்காலத்தில் வெப் டிசைனிங் அண்ட் டெவலப்மென்ட் படிப்பின் தேவை அதிகமாகவே இருக்கும். இதற்காக பி.எச்.பி, பைதான், ஏ.எஸ்.பி.நெட், ஜாவா, அடோப் போட்டோஷாப் போன்றவற்றைப் படிக்க வேண்டும். கணினி அறிவியல் தொடர்பான பட்டப்படிப்பு முடித்து இதனையும் சான்றிதழ் படிப்பாக முடித்திருக்க வேண்டும்.

    வி.எப்.எக்ஸ். அண்ட் அனிமேஷன்

    ஆன்லைன் கேமிங் துறை, 3-டி தொழில்நுட்பம் ஆகியவற்றில் விஷுவல் எபெக்ட்ஸ் மற்றும் அனிமேஷனின் பயன்பாடு பெரிதும் முக்கியமானது. இதற்காக வி.எப்.எக்ஸ். மற்றும் அனிமேஷன் படிப்புகளை முடித்த பின்னர் மாயா, அடோப் போட்டோஷாப் மற்றும் சினிமா 4-டி ஆகியவற்றைப் பயன்படுத்துவது உங்கள் திறமைகளை வளர்க்க உதவும். இது தொடர்பான டிப்ளமோ படிப்புகளும் உள்ளன.

    கம்ப்யூட்டர் ஹார்ட்வேர்

    ஒரு மென்பொருள் இயங்க கணினி சரியான நிலையில் இருக்க வேண்டும். தரவுகளை செயல்படுத்தும் மதர்போர்டுகள், சேமித்து வைக்கும் ஹார்ட் டிஸ்க்குகள் என கணினியின் செயல்பாடுகளைக் கண்காணித்து சரி செய்யக் கூடிய பணியைச் செய்ய விரும்புபவர்கள், பட்டப்படிப்பை முடித்த பிறகு கணினி வன்பொருள் படிப்பை முடிக்க வேண்டும். குறைந்தது 6 மாதங்கள் முதல் 12 மாதங்கள் வரை படிக்க வேண்டியதிருக்கும்.

    டேலி அண்ட் எம்.எஸ். ஆபீஸ்

    எம்.எஸ். ஆபீஸ் என்பது கணினியில் வேலை செய்வதற்கான அடிப்படை அறிவாகும். அதுபோன்று அக்கவுண்ட்ஸ் பணிகளைச் செய்வதற்கு அவசியம் டேலி படிக்க வேண்டும். அதிகபட்சமாக மூன்று மாதங்களில் கற்றுக்கொள்ளலாம். பட்டப்படிப்பு முடித்த பின்னர் இந்த பயிற்சிகளையும் கற்றுக் கொண்டால் எளிதாக வேலை கிடைக்கும்.

    • மதுரையில் ரோட்டரி சார்பில் கல்வி ஆய்வு மையம் கட்டப்பட்டுள்ளது.
    • ஊராட்சி தலைவர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மதுரை

    ரோட்டரி கிளப் ஆப் மதுரை மெட்ரோ ஹெரி டேஜ் மூலம், திருமால் புரத்தில் 1,700 சதுர அடி பரப்பளவில் கல்வி ஆய்வு மையம் கட்டப்பட்டுள்ளது. இதனை அமைச்சர் மூர்த்தி திறந்து வைத்தார். அவர் பேசுகையில், இந்த மையம் பல அரசு அதிகாரிகளை உருவாக்கும். வசதி குறைந்தவர்களுக்கு சம வாய்ப்புகளை உருவாக்கும் என்றார்.

    ரோட்டரி கிளப் ஆப் மதுரை மெட்ரோ ஹெரிடேஜ் தலைவர் வெங்கடேஷ் பேசுகையில், திருமால்புரம் ஆர்.சி.சி மையத்தில் டி.என்.பி.எஸ்.சி. பயிற்சி, இளந்தளிர் - கிராமப்புற பள்ளிகளுக்கான கலாச்சார நிகழ்ச்சி, மருத்துவ முகாம்கள், கிராமப்புற மாணவர்களுக்கு 12-ம் வகுப்பு வரை இலவச பயிற்சி ஆகியவை வழங்கப்படும் என்றார்.

    இதில் ரோட்டரி மாவட்ட ஆளுநர் ராஜா கோவிந்தசாமி, செயலாளர் அல்லிராணி பாலாஜி, மாவட்ட ரோட்டரி கல்வி மையம் பூங்கோதி மலை வீரன், செட்டிகுளம் ஊராட்சி தலைவர் மற்றும் ரவி பார்த்தசாரதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • உலக சுகாதாரம் மற்றும் கல்வி பாதுகாப்பு அமைப்பின் தொடக்க விழா விழுப்புரத்தில் உள்ள தனியார் கூட்டரங்கில் நடைபெற்றது.
    • ஊராட்சி மன்ற தலைவர் கனிமொழி வெங்கடேசன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றினார்கள்

    விழுப்புரம்:

    உலக சுகாதாரம் மற்றும் கல்வி பாதுகாப்பு அமைப்பின் தொடக்க விழா விழுப்புரத்தில் உள்ள தனியார் கூட்டரங்கில் நடைபெற்றது. விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வேலூர் காவல்துறை சரகஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி. கவிஞர் கனககேசன்,பார்த்திபன், ஆனாங்கூர் ஊராட்சி மன்ற தலைவர் கனிமொழி வெங்கடேசன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றினார்கள். அதனைத் தொடர்ந்து டிஎஸ்பி பேசியதாவது,  சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் .

    அதுபோல் நாம் உடல் ஆரோக்கியத்துடன் இருந்தால்தான் அனைத்து செல்வங்களையும் பெற முடியும் குறிப்பாக நாம் இருக்கும் வீடு நாம் இருக்கும் சுற்றுப்புறம் நாம் இருக்கும் பகுதி நாம் இருக்கும் ஊர் சுகாதாரமாக இருக்க வேண்டும். மேலும் இந்த அமைப்பு தொடங்கப்பட்டதன் நோக்கம் மிக அற்புதமாக உள்ளது. இந்த அமைப்பு அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என நான் கருதுகிறேன் இவ்வாறு அவர் பேசினார்.முன்னதாக இவ்வமைப்பின் நிறுவனர் மணிகண்டன் அனைவரையும் வரவேற்று பேசினார். இதில்அய்யனாரப்பன்,சுரேஷ்,சங்கீத்குமார்,ராகவேந்திரன், அய்யனார். சுரேந்திரன் பாஸ்கரன் சிவராஜ் சரத்குமார் சக்திவேல் ஐயப்பன் கந்தன் கல்யாண சுந்தரம் அபூபக்கர் சாந்தமுருகன், மணிகண்டன், ராம்குமார் உள்ளிட்டர் பலர் கலந்து கொண்டனர்.

    • ஒரு குழந்தைக்கு கல்வி தருவதில் பெற்றோரின் பங்கு முதலிடம்.
    • மாணவர்கள் எதையும் புரிந்து படித்து, படித்தவற்றை செயல்முறைக்கு கொண்டு வரவேண்டும்.

    கல்வி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும். தொடக்கக் கல்வி முதல் உயர்கல்வி வரை ஒரு நாட்டில் வாழும் அனைத்து தரப்பினருக்கும் ஜாதி, மத, இன, பொருளாதார வேறுபாடில்லாமல் சென்றடைய வேண்டும். இவ்வகையில் பார்க்கும்போது இந்தியா ஓரளவிற்கு முன்னேறி வருகிறது எனலாம். அதே நேரத்தில் இன்னமும்கூட இந்தியாவின் சில குக்கிராமங்களில் குழந்தைகள் பல கிலோ மீட்டர் நடந்து பள்ளிக்கு செல்ல வேண்டும் என்ற நிலை இருக்கிறது என்பதையும் நோக்க வேண்டும். உயர்கல்வி பற்றின விழிப்புணர்வு எல்லாத் தரப்பினருக்கும் சென்றடைய வேண்டும்.

    நம் கல்வித் திட்டம் ஒரு மனிதனை சுயசார்புடையவனாக வளர்க்க வேண்டும். இவ்வுலகில் சக மனிதர்களோடு வளைந்து கொடுத்து, அதாவது அனைவரின் கருத்திற்கும் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து அதே நேரத்தில் நேர்மை தவறாமல் எப்போதும் மகிழ்வுடன் வாழ வழிகாட்ட வேண்டும். தனிமனித வளர்ச்சிக்கும் ஒரு நாட்டின் சமூக, கலாச்சார, பொருளாதார, அறிவியல் தொழில்நுட்ப, அரசியல் என ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் அடித்தளமாக இருப்பது கல்விதான். இந்த கல்வி சிறப்பாய் செம்மையாய் இருக்கும் பட்சத்தில் நாட்டின் வருங்காலம் ஒளிமயமாகும் என்பது வெளிப்படையான உண்மை.

    சர்வகலாசாலையில் பல பட்டங்களை பெறுவது மட்டுமே கல்வியல்ல என்பதை உணர்தல் வேண்டும். கற்றல் என்பது எந்த கணப்பொழுதும் நிகழக்கூடியது. எனவே நாம் எப்போதும் கற்பதற்கு தயாராய் இருக்க வேண்டும் என மாணவப் பருவத்திலேயே நமக்கு அறிவுறுத்தும்படி நம் பள்ளிக் கல்வி அமைய வேண்டும்.

    ஒரு குழந்தைக்கு கல்வி தருவதில் பெற்றோரின் பங்கு முதலிடம். பிறகே ஆசிரியரின் பங்கு. சொல்லப் போனால் ஒரு மனிதனை செதுக்குவதில் மேற்படி இருவருக்குமே, இரண்டு சிற்பிகளுக்குமேதான், முக்கிய பங்கு. ஆனால் தற்போது நிலைமை குழந்தைகள் சரியானபடி பயிலாதபோது ஒருவர் மேல் மற்றவர் குறை சொல்லி தப்பித்துக் கொள்ள முயல்கின்றனர். இந்நிலை முற்றாக மாறவேண்டும். புத்தகத்தில் இருப்பதை அப்படியே மனப்பாடம் செய்து ஒப்பித்து விடாமல் புத்திசாலி என நம்பும் பலரின் அறியாமை மாற வேண்டும்.

    மாணவர்கள் எதையும் புரிந்து படித்து, படித்தவற்றை செயல்முறைக்கு கொண்டு வரவேண்டும். அவ்வாறு செயல்முறை படுத்தும்போது அவரவரின் புத்துருவாக்கத்திற்கு அதில் முக்கிய இடம் கொடுக்க வேண்டும். இப்படிப்பட்ட கல்விதான் முதுகெலும்புள்ள, சுயசிந்தனையை வளர்க்கக்கூடிய ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபடக்கூடிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தக்கூடிய மனிதனை உருவாக்கும். ஒவ்வொரு மனிதனிடமும் அறிய திறமைகள் பொதிந்துள்ளன. அதை வெளிக்கொண்டு வருபவர்தான் உண்மையான ஆசிரியர் என்கிறார் விவேகானந்தர் எனவே நன்றாக படிக்கும் மாணவர்களை மற்றும் படித்த பெற்றோர்களின் குழந்தைகளை மட்டுமே தங்கள் பள்ளியில் சேர்த்துக் கொண்டு நூறு சதவிகித தேர்ச்சி காண்பிப்பதில் ஆசிரியருக்கு என்ன பங்கு இருக்கிறது. எனவே கல்வி கற்க சிரமப்படும் மாணவர்களை நன்கு பயிற்றுவித்து அவர்களை நன்கு தேர்ச்சி பெற செய்வதில்தான் ஒரு ஆசிரியரின் வெற்றி இருக்கிறது என்பதை எல்லா ஆசிரியர்களும் உணர வேண்டும்.

    முழுமையான கல்வி என்பது ஒருவனுக்கு முதலில் தான் என்கிற தன் முனைப்பை அழிக்கும். ஜாதி, மத பேதங்களை அவனுள்லிருந்து அறவே நீக்கும். இந்தியா என் நாடு என்பதைவிட இந்த உலகம் என் வீடு எனும் பரந்த மனப்பான்மையை ஏற்படுத்தும். பல புத்துருவாக்கங்களுக்கான வீரிய வித்துக்களை விதைப்பவனாக மாற்றும். இப்படிப்பட்ட கல்வியை கொணர்வது நம் அனைவருடைய சமூக பொறுப்பு.

    இலவச மற்றும் கட்டாய கல்வி திட்டத்தில் குழந்தைகள் விண்ணப்பிக்கலாம்.

    கீழக்கரை

    தமிழகம் முழுவதும் இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் படி ஏழை, எளிய குழந்தைகள் தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளியில் படிப்பதற்காக இலவச மற்றும் கட்டாய கல்வியை மத்திய அரசு அறிவித்தது. 

    இதன்படி எல்.கே.ஜி.வகுப்பில் சேர்க்க கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் பள்ளிக்கு 38 இடங்கள் ஒதுக்கப்பட்டது. இது குறித்த அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து கடந்த ஏப்ரல் 20-ந் தேதி முதல் மே 25-ந் தேதி வரை அறிவிக்கப்பட்ட ஆவணங்களுடன் பெற்றோர்கள் இணைய தளத்தில் பதிவு செய்தனர். 

    இஸ்லாமியா பள்ளியில் சேருவதற்காக மொத்தம் 211 மனுக்கள் கல்வித்துறையால் பெறப்பட்டது. இதில் மாவட்ட கல்வித்துறை அதிகாரி அலுவலகத்தில் 10 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது, மீதமுள்ள 28 இடங்களுக்கு மாவட்ட கல்வி துறையால் பரிந்துரை செய்யப்பட்ட 163 பெயர்கள் எழுதப்பட்டு குலுக்கல்  நடந்தது. 

    ஏராளமான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் பெயர் தேர்வு செய்யப்படுமா? என்ற ஆவலில் பள்ளி வளாகத்தில் காத்திருந்தனர். பள்ளி தாளாளர் எம்.எம்.கே. முகைதீன் இப்ராஹிம் ஆலோசனையின் படி முதல்வர் மேபல் ஜஸ்டஸ், மாவட்ட கல்வித்துறை அலு வலக பார்வையாளர் மாயா முன்னிலையில் குலுக்கல் நடந்தது. இதில் 28 பேர் தேர்வு செய்யப்பட்டனர். 

    பள்ளி நிர்வாக அலுவலர் மலைச்சாமி தேர்வு செய்யப்பட்ட குழந்தை களின் பெயரை அறிவிப்பு செய்தார். பின்னர் பள்ளி யில் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டது.
    ×