search icon
என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    போதைப்பொருளால் சிக்கலாகும் மாணவர்களின் உயர்கல்வி
    X

    போதைப்பொருளால் சிக்கலாகும் மாணவர்களின் உயர்கல்வி

    • டோப் என்று சொல்லப்படும் ஒருவகையான கஞ்சா பழக்கத்துக்கும் மாணவர்கள் அடிமையாகி வருகின்றனர்.
    • கூடாநட்பில் இந்த பழக்கத்துக்கு சிறுவர்கள் அடிமையாவதாக அவர்களது பெற்றோர் தரப்பில் கூறுகின்றனர்.

    போதைப்பழக்கத்தால், மாணவர்கள் மனரீதியான பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக பெற்றோரின் கண்காணிப்பு இல்லாமல் உள்ள மாணவர்களும், ஆசிரியர்களுக்கு பயப்படாத மாணவர்களும் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக இதுசம்பந்தமான உளவியல் ஆய்வுத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

    சமூக வலைத்தளங்களில் போடப்படும் பதிவுகளால் கெத்து காட்ட வேண்டும் என்ற அடிப்படையில் கூடாநட்பில் இந்த பழக்கத்துக்கு சிறுவர்கள் அடிமையாவதாக அவர்களது பெற்றோர் தரப்பில் கூறுகின்றனர். ஒரு சில மாணவர்கள் அந்தந்த பகுதி ரவுடிகள் என அறியப்படுபவர்களுடன் தொடர்பில் இருப்பதை பெருமையாக நினைத்து பழகி வருகின்றனர். இந்த பழக்கம் நாளடைவில் தனது செலவுக்கான பணத்தேவைக்கு திருட்டு, வழிப்பறி போன்ற செயல்களில் ஈடுபட வைக்கிறது. மாணவப்பருவம் என்பதால் ஒரு சில போலீசார், பெற்றோரை வரவழைத்து சம்பந்தப்பட்ட மாணவர்களை கண்டித்து அனுப்புகின்றனர்.

    இது தவிர, டோப் என்று சொல்லப்படும் ஒருவகையான கஞ்சா பழக்கத்துக்கும் மாணவர்கள் அடிமையாகி வருகின்றனர்.

    இங்கு, அங்கு என்றில்லாமல் மதுரை மாநகர பகுதிகளில் வாலிபர்கள் அதிகம் உள்ள இடங்களில் இந்த பழக்கமும் பரவலாக உள்ளது. போதை பொருட்கள் கிடைக்கும் வழிகளை அடைக்க வேண்டிய போலீசார், ஹெல்மெட் அணியாமல் வரும் இருசக்கர வாகன ஓட்டிகளிடம்தான் கடுமை காட்டுகிறார்களே தவிர, இதுபோன்ற போதைப்பொருள் நடமாட்டத்தை தடுக்க முழுமூச்சாக களம் இறங்கவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

    இதனால், சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கும் இதுபோன்ற போதைப்பழக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

    குறிப்பாக பள்ளிக்கூடங்களின் அருகில் உள்ள கடைகளில் இந்த போதைப்பொருள்கள் தாராளமாக கிடைத்து வருவதாக கூறப்படுகிறது. அதாவது, மிட்டாய் போன்ற ஒருவகையான போதைப்பொருள் மாணவர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதனை வாய்க்குள், ஒரு ஓரத்தில் வைத்து மெதுவாக சுவைக்கும்போது அதிலிருந்து பற்பசை போன்ற சாறு போதையை ஏற்படுத்துகிறது.

    விவரம் அறிந்த பெற்றோர்கள் உடனடியாக தங்களது பிள்ளைகளை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று அந்த பழக்கத்தில் இருந்து மீட்டெடுக்க சிகிச்சை பெறுகின்றனர்.

    பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியான பிறகு, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு அல்லாடும் ஒரு சில மாணவர்கள், இதுபோன்ற போதைப்பழக்கத்தால் மதிப்பெண் எடுக்க முடியாமல் போனதாக வருத்தப்படுகின்றனர். அவர்கள், ஒவ்வொரு கல்லூரியாக ஏறி, இறங்கி தான் விரும்பும் படிப்பில் சேர்க்கை பெற அலைவதில் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

    போதைப்பழக்கத்துக்கு அடிமையாகும் முன்பே மாணவர்களை கண்டறிந்து, அதில் இருந்து அவர்களை விடுபட வைக்க தேவையான முயற்சிகளை பெற்றோர், ஆசிரியர்கள் எடுக்க வேண்டும். இதில் சில வாரங்கள் தாமதம் ஏற்பட்டாலும் மாணவர்கள் கையை மீறிப்போகும் ஆபத்து அதிகம் என மருத்துவ துறையினர் எச்சரிக்கின்றனர்.

    மாணவர்களை அவர்களது போக்கில் செயல்பட தொடர்ந்து அனுமதித்தால், போதைப்பழக்கம் அவர்களது உயர்கல்வி வாய்ப்பை பறித்துவிடும். எதிர்காலத்தையும் கேள்விக்குறி ஆக்கிவிடு்ம் எனவும் எச்சரிக்கைகள் மருத்துவ துறை மூலம் வந்து கொண்டிருக்கின்றன.

    எனவே, மதுரையில் பள்ளிக்கூடங்களுக்கு அருகில் உள்ள கடைகள் மற்றும் சந்தேகத்துக்கு இடமான வகையில் சுற்றித்திரியும் போதைப்பொருள் விற்பனை செய்யும் நபர்களை கண்டறிந்து கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். சிறுவர்களை பாதை மாற்றும் போதைப்பொருளை தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோரின் கோரிக்கையாக உள்ளது.

    Next Story
    ×