search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இழப்பீடு"

    • 200 ஏக்கரில் பயிரிடப்பட்ட 5 ஆயிரம் வாழை மரங்கள் முறிந்து சாய்ந்து விழுந்தன.
    • சேதமடைந்த வாழை மரங்களை கணக்கிட்டு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் திருவையாறு மற்றும் சுற்றி உள்ள பகுதிகளான ஆச்சனூர், மருவூர், வடுககுடி ஆகிய இடங்க ளில் நேற்று இரவு பலத்த மழை கொட்டியது. சூறாவ ளி காற்றுடன் மழை பெய்ததால் சுமார் 200 ஏக்கரில் பயிரிடப்பட்ட 5 ஆயிரம் வாழை மரங்கள் முறிந்து சாய்ந்து விழுந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

    இது குறித்து விவசாயிகள் கூறும்போது,

    இன்னும் 20 நாட்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் வாழை மரம் வேரோடு சாய்ந்தும் முறிந்ததில் 5000 வாழைகள் சேதமடைந்துள்ளன.

    இயற்கை இடர்பாடின் காரணமாக திருவையாறு சுற்றுவட்டார பகுதியில் மூன்றாவது முறையாக அடித்த சூறாவளி காற்றினால் ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் சேதம் அடைந்துள்ளது. இது குறித்து அதிகாரிகளை அனுப்பி சேதமடைந்த வாழை மரங்களை கணக்கிட்டு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். நெல் பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்வதுபோல் வாழை மரத்திற்கும் காப்பீடு செய்வதற்கு வழிவகை செய்ய வேண்டும்.

    • ஏறத்தாழ 2 லட்சம் ஏக்கர் பரப்பளவில் உள்ள நிலையில் விலை வீழ்ச்சி, நோய்த்தாக்குதல் உள்ளிட்ட காரணங்களினால் விவசாயிகள் பாதித்து வந்தனர்.
    • நீர் இன்றி பல ஆயிரக்கணக்கான மரங்கள் காய் பிடிக்காமலும், காய்ந்தும் வருகிறது.

     உடுமலை:

    திருப்பூர் மாவட்டத்தில் தென்னை சாகுபடி பிரதானமாக உள்ளது. ஏறத்தாழ 2 லட்சம் ஏக்கர் பரப்பளவில் உள்ள நிலையில் விலை வீழ்ச்சி, நோய்த்தாக்குதல் உள்ளிட்ட காரணங்களினால் விவசாயிகள் பாதித்து வந்தனர்.இந்நிலையில் கோடை மழை, தென்மேற்கு பருவ மழை ஏமாற்றியதால் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது. நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்திற்கு சென்று கிணறு, போர்வெல்களில் நீரின்றியும், புதிதாக போர்வெல்கள் அமைத்தாலும் நீர் இன்றி, நிலைப்பயிரான தென்னையை காப்பாற்ற முடியாமல் விவசாயிகள் திணறி வருகின்றனர்.

    பல கிராமங்களில் பல ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள் காய்ந்து, வெட்டி அகற்றும் அவல நிலை உள்ளது.

    இது குறித்து தென்னை விவசாயிகள் சங்க மாநிலத்தலைவர் மதுசூதனன் கூறியதாவது:-

    திருப்பூர் மாவட்டத்தில் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளதால், நீர் இன்றி பல ஆயிரக்கணக்கான மரங்கள் காய் பிடிக்காமலும், காய்ந்தும் வருகிறது. ஒரு சில மாதங்கள் இதே நிலை நீடித்தால் தென்னை மரங்கள் அடியோடு காய்ந்து கருகும்.

    நீண்ட கால பயிரான தென்னையை காக்க தண்ணீர் லாரிகள் வாயிலாக ஒரு லாரி ரூ.4,500 விலை கொடுத்து வாங்கி ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை செலவழித்து, மரங்களின் உயிரை காப்பாற்ற விவசாயிகள் முயற்சித்து வருகின்றனர். எனவே தென்னை விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தென்னை மரத்திற்கு உரிய இழப்பீடும், மறு நடவிற்கான திட்டங்களையும் நடைமுறைப்படுத்த வேண்டும்.

    தென்னை வளர்ச்சி வாரியத்தின் சார்பில் தென்னை காப்புறுதி திட்டத்தில் தென்னை வளர்ச்சி வாரியம் 50 சதவீதம் மற்றும் தலா 25 சதவீதம், மாநில அரசும், விவசாயிகளும் செலுத்தும் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது. இத்திட்டமும் முறையாக செயல்படுத்தப்படவில்லை.

    எனவே பயிர்க்காப்பீட்டு திட்டத்தில், மாவட்டத்திலுள்ள அனைத்து விவசாயிகளும் இணையும் வகையில், அரசு துறைகளை ஒருங்கிணைத்து துரித நடவடிக்கை எடுக்கவும், காப்பீட்டுத்தொகையாக ஒரு மரத்திற்கு ரூ.10 ஆயிரம் நிர்ணயிக்கவும் வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • இனிப்பு மற்றும் காரவகை உணவு பண்டங்களின் பொட்டலங்களில் உற்பத்தி தேதி, காலாவதியாகும் தேதி உள்ளிட்ட விவரங்கள் இல்லாமல் விற்பனை
    • இதன் மூலம் ஒரே நாளில் உணவு சம்மந்தப்பட்ட 10 வழக்குகளில் நாமக்கல் நுகர்வோர் கோர்ட்டில் சமரச தீர்வு ஏற்பட்டுள்ளது.

    நாமக்கல்:

    இனிப்பு மற்றும் காரவகை உணவு பண்டங்களின் பொட்டலங்களில் உற்பத்தி தேதி, காலாவதியாகும் தேதி உள்ளிட்ட விவரங்கள் இல்லாமல் விற்பனை செய்ததாக நாமக்கல், திருச்சி, கோவை மாவட்டங்களில் உள்ள கடைகளின் மீது ஏற்கனவே தொடரப்பட்ட பல வழக்குகள் நாமக்கல் நுகர்வோர் கோர்ட்டில் நிலுவையில் உள்ளன.

    இந்த வழக்குகள் உட்பட 53 வழக்குகளில் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் நேற்று நீதிபதி டாக்டர் ராமராஜ் மற்றும் உறுப்பினர் ரத்தினசாமி ஆகியோர் முன்னிலையில் சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    ரூ.1 லட்சம் இழப்பீடு

    நாமக்கல்லில் இனிப்பு மற்றும் கார வகைகளை விற்பனை செய்யும் 6 பேக்கரி உரிமையாளர்கள், திருச்சி மாவட்டத்தில் உள்ள 2 கடை உரிமையாளர்கள், கோவையில் உள்ள 2 கடை உரிமையாளர்கள் சமரச பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டு பாதிக்கப்பட்ட நுகர்வோர்களுக்கு கோர்ட்டு உத்தரவுப்படி ரூ.1 லட்சம் இழப்பீடு செலுத்தினர். இதன் மூலம் ஒரே நாளில் உணவு சம்மந்தப்பட்ட 10 வழக்குகளில் நாமக்கல் நுகர்வோர் கோர்ட்டில் சமரச தீர்வு ஏற்பட்டுள்ளது.

    மற்றொரு வழக்கு

    நாமக்கல்லில் உள்ள மின்சாதன பொருட்கள் விற்பனை செய்யும் ஒரு கடையில் வாங்கப்பட்ட பொருட்களுக்கான ரசீதில் விற்பனை செய்த பொருட்கள் திரும்ப வாங்கப்படமாட்டாது என அச்சிடப்பட்டது தவறு என நுகர்வோர் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கில் கடை உரிமையாளர் நுகர்வேருக்கு ரூ.10 ஆயிரம் இழப்பீடு வழங்கினார்.

    மற்றொரு வழக்கில் நாமக்கல்லில் உள்ள தனியார் சூப்பர் மார்க்கெட் நிர்வாகம் வாடிக்கையாளரிடம் கேரி பேக் கொடுத்ததற்கு ரூ.10 வசூலித்தது தவறு என தொடரப்பட்ட வழக்கில் அந்த நிறுவனம் நுகர்வோருக்கு இழப்பீடாக ரூ.2,000 செலுத்தியது. முதல் சுற்று பேச்சு வார்த்தையில் சமரசம் ஏற்பட வாய்ப்பில்லாத சில வழக்குகள் 2-வது சுற்று பேச்சு வார்த்தைக்காக வரும் அக்டோபர் 6-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    • கருகிய பயிர்கள் ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் வழங்க வேண்டும்.
    • கிழக்கு கடற்கரை சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் தலைஞாயிறு அருகே உள்ள அருந்தவம்புலம் கடைத்தெ ருவில் கருகி வரும் குறுவை நெற்பயிரை காப்பாற்ற உரிய தண்ணீர் திறந்து விடக்கோரியும் கருகி போன நெற்பயிருக்கு நிவாரண தொகையாக ஏக்கர் ஒன்றுக்கு ரூ.35 ஆயிரம் வழங்க வேண்டி மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஒன்றிய செயலாளர் சந்தானகிருஷ்ணன் தலைமையில் சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது.

    மறியல் போராட்டத்தில் கட்சியின் நிர்வாகிகள் சம்பந்தம் ,மகேந்திரன், மங்கையர்கரசி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டனர் .

    இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வேதார ண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுபாஷ் சந்திர போஸ், இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், தாசி ல்தார் சுரேஷ் ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தையில் உரிய நடவடிக்கை எடுப்ப தாக உறுதி அளித்ததின் பேரில் சாலை மறியல் போராட்டம் கைவிட ப்பட்டது.

    இதனால் திருத்து றைப்பூண்டி_ நாகப்ப ட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • பருவம் தவறி பெய்த மழையால் பயறு, எள், கடலை பயிர்கள் பாதிப்படைந்துள்ளது.
    • தண்ணீரின்றி பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தபால் நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட நிர்வாகக்குழு நாராயணன், ஒன்றிய துணைச் செயலாளர் பாலகுரு ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் உச்சநீதிமன்ற தீா்ப்பின் படி ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தமிழகத்திற்கு தர வேண்டிய காவிரி நீரை கர்நாடகா அரசு உடன் திறந்து விட வேண்டும்.

    கடந்த 2 மாதங்களாக கூட்டு குடிநீர் சரிவர வராத காரணத்தினால் அவதிப்படும் கிராம மக்களை பாதுகாத்திட பருவம் தவறி பெய்த மழையால் பயறு, எள், கடலை மற்றும் பாதிப்படைந்த பயிர்களுக்கு தமிழக அரசால் ஒதுக்கப்பட்ட நிதியை உடன் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.

    தண்ணீர் இல்லாமல் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    இதில் மாவட்ட செயலாளர் சிவகுரு.பாண்டியன் சிறப்புரையாற்றினார். விவசாய சங்க ஒன்றியச் செயலாளர் செங்குட்டுவன், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றியச் செயலாளர் முருகானந்தம், மாவட்டக்குழு கருணாநிதி, விவசாய சங்க ஒன்றியச் செயலாளர் அருள்ஒளி, நகரச் செயலாளர் ராஜேந்திரன்.

    இளைஞா் பெருமன்ற மாவட்டத் தலைவர் கார்த்திகேயன், ஒன்றியச் செயலாளா் பழனியப்பன், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றியத் தலைவர் இளவரசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தங்கள் குழந்தை பட்ட அவஸ்தைக்கு நிவாரணம் கேட்டு மெக்டொனால்டு நிறுவனம் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
    • மெக்டொனால்டு நிறுவனம் அஜாக்கிரதையாக செயல்பட்டதால் இந்த சம்பவம் நடந்ததாக குற்றச்சாட்டு.

    அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள மெக்டொனால்டு உணவகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, பிலானா-ஹம்பர்டோ தம்பதியர் சிக்கன் நக்கெட்ஸ் பார்சல் வாங்கி உள்ளனர். பார்சலை பெற்றுக்கொண்டு காருக்கு சென்ற அவர்கள் இருக்கையில் வைத்துள்ளனர். அதில் ஒரு சிக்கன் நக்கெட்ஸ் துண்டு இருக்கையில் சிக்கியிருக்கிறது. அதன்மீது அவர்களின் 4 வயது குழந்தை ஒலிவியாவின் கால் பட்டதால் குழந்தையின் கால் வெந்துள்ளது.

    குழந்தை வலியால் துடித்ததால் பெற்றோர் மிகவும் வேதனை அடைந்தனர். அத்துடன் சூடான சிக்கன் நக்கெட்டை சரியாக பார்சல் செய்து வழங்காத மெக்டொனால்டு நிறுவனத்தின் மீது அவர்களுக்கு கோபம் ஏற்பட்டது. தங்கள் குழந்தை பட்ட அவஸ்தைக்கு நிவாரணம் கேட்டு மெக்டொனால்டு நிறுவனம் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

    விசாரணையின்போது மெக்டொனால்டு நிறுவனம் அஜாக்கிரதையாக செயல்பட்டதால் இந்த சம்பவம் நடந்ததாகவும், 1.5 கோடி டாலர் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர். ஆனால் எந்த தவறும் செய்யவில்லை என நிறுவனம் தரப்பில் வாதிடப்பட்டது.

    கடந்த 4 ஆண்டுகளாக நீடித்த இந்த வழக்கின் வாதங்கள் சமீபத்தில் நிறைவடைந்தது. விசாரணையின் முடிவில், மெக்டொனால்டு நிறுவனம், பாக்கெட்டில் சரியான எச்சரிக்கை வாசகத்தை அச்சிடாததும், பாதுகாப்பற்ற முறையில் உணவை கொடுத்ததும் குழந்தையின் காயத்திற்கு காரணம் என தெரியவந்தது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு 8 லட்சம் டாலர் இழப்பீடாக வழங்க வேண்டும் என மெக்டொனால்டு நிறுவனத்திற்கு நீதிபதி உத்தரவிட்டார். அத்துடன், இனி நக்கெட்சை பாதுகாப்பாக வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

    • ரூ. 75 லட்சம் இழப்பீடு வழங்க மனு கொடுத்துஇருந்தார்.
    • ரூ.52.50 லட்சம் இழப்பீடாக வழங்க நியூ இந்தியா அசூரன்ஸ் காப்பீட்டு நிறுவனத்தினர் ஒப்பு கொண்டனர்.

    திருப்பூர்

    தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுக்களின் உத்தரவின் பேரிலும் முதன்மை மாவட்ட நீதிபதி மற்றும் திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் ஸ்வர்ணம் ஜெ.நடராஜன் வழிகாட்டுதலின்படி இன்று திருப்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் சிறப்பு தேசிய மக்கள் நீதிமன்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் பல்லடம் பி. வடுகபாளையம் பகுதியை சேர்ந்த சக்தி பிரவீன் (வயது 26) என்பவர் பல்லடத்தில் உள்ள தனியார் ஒர்க்ஷாப்பில் மெக்கானிக்காக பணியாற்றி வந்தார்.கடந்த 29.5.2022 அன்று கோவை-திருச்சி ரோட்டில் சோளியப்பக்கவுண்டன்புதூர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற போது எதிரே வந்த கார் மோதியதில் வலது கால் துண்டானது. இதற்கு இழப்பீடு கேட்டு மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாய நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருந்தார்.தனக்கு ரூ. 75 லட்சம் இழப்பீடு வழங்க மனு செய்து இருந்தார்.

    இந்த வழக்கு இன்று நடைபெற்ற சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டு ரூ.52.50 லட்சம் இழப்பீடாக வழங்க நியூ இந்தியா அசூரன்ஸ் காப்பீட்டு நிறுவனத்தினர் ஒப்பு கொண்டதால் சமரச தீர்வு காணப்பட்டது. அதற்கான ஆணையை மகிளா நீதிமன்ற நீதிபதி பாலு மற்றும் மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாய நீதிபதி ஸ்ரீகுமார் வழங்கினர். இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர் தரப்பில் வக்கீல் மோகன் ஆஜராகி வாதாடினார். காப்பீட்டு நிறுவனத்தின் வக்கீல் பாலாஜி கிருஷ்ணன் உடன் இருந்தார். மேலும் நீதிபதிகள் செல்லத்துரை, கண்ணன், ரஞ்சித் குமார் மற்றும் வக்கீல் சங்க தலைவர் ரகுபதி, பத்மநாபன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

    • தேவராஜன் (வயது 42). இவர் சொந்தமாக போர்வெல் அமைக்கும் ரிக் வண்டி வைத்து தொழில் செய்து வருகிறார்.
    • கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் மத்திய பிரதேசத்தில் ஓடிக்கொண்டிருந்தபோது, இவருக்கு சொந்தமான ரிக் வண்டி விபத்துக்குள்ளானது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே உள்ள அகரம் கிராமத்தை சேர்ந்தவர் தேவராஜன் (வயது 42). இவர் சொந்தமாக போர்வெல் அமைக்கும் ரிக் வண்டி வைத்து தொழில் செய்து வருகிறார்.

    கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் மத்திய பிரதேசத்தில் ஓடிக்கொண்டிருந்தபோது, இவருக்கு சொந்தமான ரிக் வண்டி விபத்துக்குள்ளா னது. இது சம்மந்தமாக, மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள சாய்ம்பூர் போலீஸ் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

    விபத்துக்குள்ளான ரிக் வண்டிக்கு இழப்பீடு கேட்டு அவர், வாகன இன்சூரன்ஸ் செய்திருந்த யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு விண்ணப்பம் செய்துள்ளார்.

    ஆனால் அனுமதிக்கப்பட்ட நபர்களை விட கூடுதலாக வாகனத்தில் ஆட்களை ஏற்றிச் சென்றதாக கூறி இழப்பீடு தர முடியாது என இன்சூரன்ஸ் நிறுவனம் மறுத்துவிட்டது. இதனால் வாகன உரிமையாளர் இழப்பீடு கேட்டு நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் கடந்த கடந்த 2018-ம் ஆண்டு வழக்கு தாக்கல் செய்தார்.

    இந்த வழக்கு விசாரணை முடிவடைந்து, நாமக்கல் நுகர்வோர் கோர்ட் உறுப்பினர் ரத்தினசாமி முன்னிலையில் நீதிபதி டாக்டர் ராமராஜ் தீர்ப்பு வழங்கினார். வாகனத்தில், கூடுதலாக 2 நபர்களை அழைத்துச் சென்றதால்தான் விபத்து நடந்தது என்று இன்சூரன்ஸ் நிறுவனம் கோர்ட்டில் நிரூபிக்கவில்லை. ரிக் வண்டி உரிமையாளருக்கு, வாகனத்தை ரிப்பேர் செய்ததற்கான செலவு ரூ.2 லட்சத்து 77 ஆயிரத்தை, 2016 முதல் 6 சதவீத வட்டியுடன் வழங்கவும், சேவை குறைபாட்டால் ஏற்பட்ட சிரமங்களுக்கு இழப்பீடாக ரூ. 50 ஆயிம் வழங்கவும் நுகர்வோர் கோர்ட், இன்சூரன்ஸ் கம்பெனிக்கு உத்தரவிட்டுள்ளது.

    • தஞ்சை மாவட்டத்தில் நேற்று இரவு பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.
    • உடனடியாக சாய்ந்த நெற்பயிர்களை கணக்கீடு செய்து அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றனர்.

    தஞ்சாவூர்:

    காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் சாகுபடி செய்யப்படுகிறது. இது தவிர கோடை கால நெல் சாகுபடியும் நடைபெறும்.

    தஞ்சை மாவட்டத்தில் தற்போது பல்வேறு இடங்களில் சாகுபடி செய்யப்பட்டிருந்த கோடைகால நெற்பயிர்கள் அறுவடை செய்யும் பணி நடந்து வந்தது.

    இந்நிலையில் தஞ்சை மாவட்டத்தில் நேற்று இரவு பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.

    அதிலும் குறிப்பாக கண்டிதம்பட்டு, புதூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இடைவிடாமல் பெய்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த 30 ஏக்கருக்கும் மேல் கோடைகால நெற்பயிர்கள் வயலிலே தண்ணீர் தேங்கி சாய்ந்தன. மாவட்டம் முழுவதும் கணக்கிட்டால் சாய்ந்த நெற்பயிர்களின் ஏக்கர் அளவு அதிகரிக்கும். இதனால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.

    இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், பயிர்கள் நல்ல முறையில் வளர்ந்து வந்தது. அறுவடை செய்யும் நேரத்தில் நேற்று திடீரென பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் நெற்பயிர்கள் வயலில் சாய்ந்துள்ளது. மேலும் தண்ணீர் தேங்கி நிற்பதால் எந்திரங்களை கொண்டு அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இன்னும் குறைந்தது மூன்று நாட்களுக்காவது மழை இன்றி வெயில் அடித்தால் மட்டுமே தேங்கிய தண்ணீரை வெளியேற்றி பயிர்களை ஓரளவாது காப்பாற்ற முடியும். தற்போது தண்ணீர் தேங்கி பயிர்கள் சாய்ந்து கிடப்பதால் மகசூல் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே உடனடியாக சாய்ந்த நெற்பயிர்களை கணக்கீடு செய்து அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றனர்.

    • விவசாய பம்பு செட்டுகளுக்கான மும்முனை மின்சாரம் 14 மணி நேரம் வழங்கப்பட்டு வந்தது.
    • பயிர்களுக்கு போதிய நீர்ப்பாய்ச்ச முடியாமல் அவதிப்படுகிறார்கள்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் மதுசூதனன் பேசியதாவது:- அவினாசி தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் வாழை, மஞ்சள், சோளம், மரவள்ளிக்கிழங்கு ஆகியவற்றை ஏராளமான விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். இவர்களின் விவசாய பம்பு செட்டுகளுக்கான மும்முனை மின்சாரம் காலை 6 மணி முதல் 12 மணி வரையும், இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரையும் என 14 மணி நேரம் வழங்கப்பட்டு வந்தது. இப்போது தினமும் 9 முதல் 10 மணி நேரம் மட்டுமே குறிப்பிட்ட நேரமில்லாமல் வினியோகிக்கப்படுவதால் விவசாயிகள் சிரமப்படுகிறார்கள். பயிர்களுக்கு போதிய நீர்ப்பாய்ச்ச முடியாமல் அவதிப்படுகிறார்கள். முன்பு போல் 14 மணி நேரம் முறைப்படி மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும்.

    அவினாசி தாலுகாவுக்கு உட்பட்ட சேவூர், பாப்பான்குளம், காசிலிங்கம்பாளையம் பகுதிகளில் மழை பெய்தபோது ஏற்பட்ட சூறாவளிக்காற்றால் வாழை மற்றும் தென்னை மரங்கள் அடியோடு சாய்ந்துவிட்டன. இதுபோல் பல்லடம் தாலுகாவுக்கு உட்பட்ட தெற்கு அவினாசிபாளையம், அலகுமலை, பொங்கலூர் ஊராட்சிகளில் ஏராளமான வாழை, தென்னை மரங்கள் சாய்ந்துவிட்டன. இதன்காரணமாக விவசாயிகளுக்கு லட்சக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. முறையாக கணக்கெடுப்பு செய்து உரிய இழப்பீடு மற்றும் இன்சூரன்சு தொகை பெற்றுத்தர வேண்டும். பயிர்களுக்கு இன்சூரன்சு செய்வதை விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குளத்தில் வண்டல் மண் அள்ளுவதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

    • கைப்பற்றிய நிலங்களுக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டது.
    • மேலூரில் இருந்து காரைக்குடி வரை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் 4 வழிச் சாலை அமைத்து வருகிறது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் கல்லல் ஒன்றியத்தில் உள்ள பாதரக்குடி ஊராட்சியில் சுமார் 500 குடும்பங்களை சேர்ந்த 2 ஆயிரம் பேர் வசித்து வருகிறார்கள். தற்போது மேலூரில் இருந்து காரைக்குடி வரை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் 4 வழிச் சாலை அமைத்து வருகிறது. இந்த சாலையானது ஊரின் மையப்பகுதியில் செல்கிறது. இதனால் வீடுகள், கடைகள் அகற்றப்பட்டன. புஞ்சை, நஞ்சை நிலங்கள் கையகப்படுத்தும் நேரத்தில் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இதனால் கலெக்டர்-ஆணைய அதிகாரிகள் நேரடியாக மக்களை சந்தித்து கைப்பற்றப்படும் நிலங்களுக்கு சந்தை மதிப்பு தருவதாக உத்தரவாதம் அளித்ததின் பேரில் போராட்டத்தை கைவிட்டனர்.

    இந்த நிலையில் நெடுஞ்சாலைத் துறை ஆணையம் பாதிக்கப்பட்ட மக்களின் வங்கி கணக்கில் ரூ.3 லட்சம் விலை போகும் சென்ட் இடத்திற்கு ரூ.2 ஆயிரத்து 500 செலுத்தியுள்ளனர். இதை கண்டித்து பாதரக்குடி ஊராட்சியில் இந்த மாதம் நடந்த கிராம சபை கூட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தின் இத்தகைய செயலுக்கு எதிராக கண்டன தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. சாலைப் பணிக்காக நிலங்களை இழந்தவர்கள் கலெக்டரை சந்தித்து கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றித்தர வேண்டும், தங்களது நிலங்களுக்கு சந்தை மதிப்பில் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்றும் மனு கொடுத்தனர்.

    • உத்தரவு பிறப்பித்த தேதியிலிருந்து 9 சதவீத வருட வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும்.
    • காப்பீட்டு நிறுவனத்தின் மீது திருவாரூர் மாவட்ட குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    திருவாரூர்:

    மன்னார்குடி அசேஷம் ராஜராஜன் நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன்.

    இவரது மனைவி பிரேமா. பிரேமா வுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக கடந்த 20.7.22 முதல் 24.07.22 வரை மன்னார்குடி பாலகிருஷ்ண நகரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்றார்.

    இதற்கான செலவு ரூ.19,494-ஐ வழங்கக்கோரி இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு விண்ணப்பித்துள்ளார்.

    விண்ணப்பித்தும் காப்பீட்டுத்தொகை கொடுக்காததன் காரணமாக, ராஜேந்திரன் சென்னையில் காப்பீட்டு நிறுவனத்தின் மீது திருவாரூர் மாவட்ட குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    வழக்கை நுகர்வோர் ஆணையத்தலைவர் சக்கரவர்த்தி மற்றும் உறுப்பினர்கள் லட்சுமணன், பாக்கியலட்சுமி ஆகியோர் விசாரித்தனர்.

    பின்னர் அவர்கள் கூறியதாவது, புகார்தாரரின் மனைவி பிரேமாவுக்கு மருத்துவ காப்பீட்டு தொகை ரூ. 19,494-ஐ இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்க வேண்டும்.

    புகார்தாரருக்கு எதிர்தரப்பினால் ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் பொருள் நஷ்டத்துக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடாக வழங்க வேண்டும்.

    வழக்கு செலவு தொகையாக ரூ.5000 வழங்க வேண்டும்.

    இந்த உத்தரவு பிறப்பித்த நாளிலிருந்து 6 வார காலத்துக்குள் மேற்படி தொகைகளை புகார்தாரருக்கு வழங்க வேண்டும்.

    தவறினால் வழக்கு செலவு தொகை நீங்கலாக மற்றவைகளுக்கு உத்தரவு பிறப்பித்த தேதியிலிருந்து 9 சதவீத வருட வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

    ×