search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆடி மாதம்"

    • சேலம் ஏழு பேட்டைகளில் ஆடிப் பெருவிழா மிகவும் விசேஷம்.
    • உடம்பில் சேற்றைப் பூசிக் கொண்டு வந்து அம்மனை வணங்குவார்கள்.

    மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் ஆடி முளைகொட்டு விழா பத்து நாட்கள் மிகச்சிறப்பாக நடைபெறும்.

    விழா நாட்களில் அம்மன் வீதி வலம் வருவது சிறப்பான ஒன்றாகும்.

    சேலம் ஏழு பேட்டைகளில் ஆடிப் பெருவிழா மிகவும் விசேஷம்.

    ஒவ்வொரு பேட்டையிலும் ஒவ்வொரு விழா.

    இங்குள்ள அன்னதானப் பட்டியில் ஆடிப் பெருவிழாவின் பொங்கல் படையல், அடுத்த நாளில் குகை வண்டி வேடிக்கை ஒரு சிறப்பான விழாவாகும்.

    அந்த ஒருநாள் மட்டும் வேறு எந்த ஊரிலும் இல்லாத விதமாக செருப்படித் திருவிழா நடக்கும்.

    வேண்டுதல் செய்த பக்தர்கள் ஒரு தட்டில் ஒரு ஜோடி செருப்பு, துடைப்பம், முறம், வேப்பிலை வைத்து பூசாரியிடம் தர, அவர் அதை பக்தர்கள் தலையில் மூன்று முறை நீவிவிடுவார்.

    இதுதான் செருப்படித் திருவிழாவாகும்.

    உடம்பில் சேற்றைப் பூசிக் கொண்டு வந்து அம்மனை வணங்குவார்கள்.

    இதற்கு சேத்துமுட்டி விழா என்று பெயர். அடுத்த விழா சத்தாபரண விழா.

    இப்படி பல விழாக்கள் வித விதமான மாங்கனிகள் தரும் சேலத்தில் நடைபெறுகின்றன.

    • “ஆனி முற்சாரல் ஆடி அடைசாரல்’ என்பார்கள்.
    • இவ்வாலய இரு விமானங்கள் காசி ஆலய விமானம்போல அமைந்துள்ளது.

    திருக்குற்றாலத்தில் ஆடி மாதம் மிகவும் விசேஷமாகும்.

    சுற்றுலா செல்ல ஏற்ற மாதம் இது. "ஆனி முற்சாரல் ஆடி அடைசாரல்' என்பார்கள்.

    குற்றால அருவி நீரில் மூலிகைச் சத்துகள் கலந்து வருவதால் அது மக்களுக்கு அதிக நன்மை தரும்.

    அதனால் குற்றால அருவி நீராடல் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

    திருச்சியருகேயுள்ள திருநெடுங்கள நாதர் ஆலயத்தில் ஆடி மாதம் முழுதும் சூரிய ஒளி மூலவர் மீது பட்டு சூரிய பூஜை நடைபெறும்.

    இது ஒரு சிறப்பு என்றால், இவ்வாலய இரு விமானங்கள் காசி ஆலய விமானம்போல அமைந்துள்ளது மற்றொரு சிறப்பு ஆகும்.

    "ஆடிப் பட்டம் தேடி விதை', "ஆடியில் காற்றடித் தால் ஐப்பசியில் மழை வரும்', "ஆடிக் காற்றில் அம்மியும் பறக்கும்', "ஆடிச் செவ்வாய் தேடிக் குளி, அரைத்த மஞ்சள் பூசிக் குளி', "ஆடிக் கூழ் அமிர்தமாகும்"

    போன்ற பல்வேறு பழமொழிகளும் ஆடி மாதத்தின் சிறப்புகளை விளக்குகின்றன.

    • ஆடி சீர் செய்து மாப்பிள்ளை-பெண்ணை தாய் வீட்டிற்கு அழைத்து வருவார்கள்.
    • ஆடியில் கருத்தரித்தால் சித்திரையில் குழந்தை பிறக்கும்.,

    ஆடி மாதத்தில் என்னதான் சிறப்புகள் என்று நாம் கூறினாலும், புதுமணத் தம்பதிகளுக்கு ஆடி மாதம் ஒரு கஷ்ட காலமாகவே இருக்கும்.

    ஆடி மாத முதல் நாள் புதுமணத் தம்பதிகளுக்கு ஆடி சீர் செய்து மாப்பிள்ளை-பெண்ணை தாய் வீட்டிற்கு அழைத்து வருவார்கள்.

    அங்கு விருந்து வைத்து, மாப்பிள்ளைக்கு ஆடிப் பால் என்ற தேங்காய்ப் பாலை வெள்ளி டம்ளரில் கொடுத்து அவரை மட்டும் அனுப்பி விட்டு,

    பெண்ணைத் தாய் வீட்டிலேயே ஆடி முழுதும் தங்க வைத்துக் கொள்வார்கள்.

    ஆடியில் கருத்தரித்தால் சித்திரையில் குழந்தை பிறக்கும்;

    தாய்க்கும் குழந்தைக்கும் வெயில் காலம் கஷ்டத்தைத் தரும் என்பதால் இவ்வழக்கத்தைக் கடைப்பிடிக்கின்றனர்.

    (ஆடி வரை கருத்தரிக்காத புதுமணப் பெண்ணுக்குத்தான் இவை).

    இதை இன்னமும் பின்பற்றுகின்றனர்.

    இதனால் "ஆடிப் பால் சாப்பிடாத மாப்பிள்ளையைத் தேடிப் பிடி' என்பார்கள்.

    • நம்முடைய ஒரு வருட காலம் என்பது தேவர்களின் ஒரு நாள்தான்.
    • கூழும் விருப்பமானதே. இவை உடல்நலத்திற்கும் வியாதியைத் தடுப்பதற்கும் உதவுபவை.

    வருடத்தை இரு அயனங்களாகப் பிரித்துள்ளனர்.

    தை முதல் ஆனி வரை உத்தராயனம்.

    இதுவே தேவர்களின் பகல் காலமாகும்.

    ஆடி முதல் மார்கழி வரை தட்சிணாயனம்.

    இதுவே தேவர்களின் இரவுக் காலமாகும்.

    நம்முடைய ஒரு வருட காலம் என்பது தேவர்களின் ஒரு நாள்தான்.

    ஆடி மாதம் தேவர்களின் மாலை நேர ஆரம்பமாகும்.

    மழைக்காலத் துவக்கமான ஆடியில் நல்ல மழை வேண்டியும் உடல்நலம் பெறவும் நம் முன்னோர்கள் பல பண்டிகைகளைக் கொண்டாடி அம்மனுக்கு வழிபாடு நடத்தி வந்துள்ளனர்.

    வேம்பும் எலுமிச்சையும் அம்மனுக்குப் பிடித்தமானவை.

    கூழும் விருப்பமானதே. இவை உடல்நலத்திற்கும் வியாதியைத் தடுப்பதற்கும் உதவுபவை.

    இவற்றையே இம்மாதத்தில் அம்மனுக்குப் படைத்து பக்தர்களுக்குத் தருகிறார்கள்.

    ஆடி மாதத்தில் நடைபெறும் முக்கியமான விழாக்கள், ஆடிப் பிறப்பு, ஆடி அஷ்டமி, ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளி,

    ஆடிக் கிருத்திகை, ஆடி அமாவாசை, ஆடிப் பௌர்ணமி, ஆடித் தபசு, ஆடிப் பெருக்கு, ஆடிப் பூரம், ஆடிப் பண்டிகைகளாகும்.

    • ஆடி மாதத்தில் மட்டும் சிவன் சக்திக்குள் அடக்கமாகி விடுகிறார் என்பது ஐதீகம்.
    • பூமிதேவி பூமியில் அம்மனாக அவதரித்த மாதம்.

    தெய்வீகப் பண்டிகைகள் தொடங்குகின்ற மாதம் ஆடி மாதம்.

    அம்மனுக்கு உரிய மாதமாக இது போற்றப்படுகிறது.

    பூமிதேவி பூமியில் அம்மனாக அவதரித்த மாதம்.

    பார்வதியின் தவத்தை மெச்சிய பரமசிவன், ஆடி மாதம் அம்மன் மாதமாக இருக்க வேண்டும் என வரம் கொடுத்தார்.

    சிவனுடைய சக்தியைவிட அம்மனுடைய சக்தி ஆடி மாதத்தில் அதிகமாக இருக்கும்.

    ஆடி மாதத்தில் மட்டும் சிவன் சக்திக்குள் அடக்கமாகி விடுகிறார் என்பது ஐதீகம்.

    இம்மாதத்தில் ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளிகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

    • ஆடி மாதம் என்பது விவசாயிகளுக்கும் உகந்த மாதமாகும்.
    • 'ஆடிப்பட்டம் தேடி விதை' என்ற பழமொழியும் இதனால்தான் உருவாயிற்று.

    ஆடி மாதம் 18ஆம் தேதி ஆடிப் பெருக்கு விழாவாகக் கொண்டாடப்படும்.

    இந்த நாளில் நதிகளில் நீர்ப் பெருக்கு அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.

    அந்த நாளில், நதிக்கரை மற்றும் கடற்கரைகளில் குடும்பத்தினருடன் அமர்ந்து இரவு உணவு உண்பதும் மரபாக இருந்து வந்துள்ளது.

    புதிதாக திருமணமான புதுமணத் தம்பதிகள் நதிக்கரையில் நிலாச் சோறு சாப்பிடுவார்கள்.

    அன்றைய தினம் தாலி மாற்றிப் புதுத் தாலி அணிவதும் வழக்கம்.

    திருமணமாகாத பெண்கள், விரைவில் திருமணமாக வேண்டும் என்று அம்மனை வேண்டிக் கொண்டு மஞ்சள் கயிற்றை கழுத்தில் கட்டிக் கொள்வார்கள்.

    ஆடி மாதம் என்பது விவசாயிகளுக்கும் உகந்த மாதமாகும்.

    விவசாயிகள் தங்கள் பணிகளை இந்த மாதத்தில்தான் துவக்குவார்கள்.

    'ஆடிப்பட்டம் தேடி விதை' என்ற பழமொழியும் இதனால்தான் உருவாயிற்று.

    திருநெல்வேலி மாவட்டம் சங்கரன் கோயில் தபசு விழா இந்த மாதத்தின் சிறப்புகளுக்கு சிறப்பு சேர்க்கும் விழாவாகும்.

    • ஆடி மாதத்தில்தான் தட்சிணாயன புண்ணியகாலம் ஆரம்பிக்கிறது.
    • "ஆடி செவ்வாய் தேடிக் குளி" என்பது பழமொழி.

    தமிழ் வருடங்கள் 60, தமிழ் மாதங்கள் 12.

    இதில் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு.

    பல மாதங்களுக்கு பழமொழிகளும் உண்டு.

    தை பிறந்தால் வழி பிறக்கும், புரட்டாசியில் மண் உருக மழை பெய்யும், பொன் உருக வெயில் காயும், ஆடிப்பட்டம் தேடி விதை என்று பழமொழிகள் உள்ளன.

    ஆடி மாதத்தில்தான் தட்சிணாயன புண்ணியகாலம் ஆரம்பிக்கிறது.

    அதாவது சூரியன் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி தனது பயணத்தை துவக்குகிறது.

    இந்த காலக்கட்டத்தில் பகல் பொழுது குறைவாகவும், இரவு நேரம் நீண்டும் காணப்படும்.

    காற்றும் மழையும் அதிகமாக இருக்கும்.

    ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமையும், செவ்வாய்க்கிழமையும் மிகவும் சிறப்பு வாய்ந்தது.

    "ஆடி செவ்வாய் தேடிக் குளி" என்பது பழமொழி.

    அதாவது செவ்வாய்க்கிழமை எண்ணெய் தேய்த்து தலை குளித்து, அம்மனை வழிபட்டு வந்தால்,

    பெண்களின் மாங்கல்ய பலம் கூடும் என்பது நம்பிக்கை.

    ஆடி மாதம் என்றாலே அம்மன் கோயில்களில் திருவிழாவும், கூழ் ஊற்றுதலும், தீ மிதித்தலும் என்று களை கட்டும்.

    ஆடி மாதம் என்பது அம்மனுக்கு உகந்தது என்றாலும், குறிப்பாக மாரியம்மன் வழிபாடு இன்னும் சிறப்பாகும்.

    ஞாயிற்றுக்கிழமைகளில் மாரியம்மனுக்கு கூழ் ஊற்றி வீடுகளில் சிறப்பு பூஜைகள் செய்வார்கள்.

    ஆடி அமாவாசையில் குடும்பத்தின் முன்னோர்களுக்கு திதி கொடுப்பதும் புண்ணியத்தை அளிக்கும்.

    • வேப்பஞ்சேலை வழிபாடு மேல்மலையனூரில் ஆதிகாலத்தில் தொடங்கப்பட்ட பழக்கமல்ல.
    • இத்தகைய வழிபாடுகள் எல்லாம் பாவாடைராயனுக்கே சென்று சேருகிறது.

    தலைமுடி காணிக்கை

    மேல்மலையனூர் அங்காளம்மனை குல தெய்வமாக ஏற்றுக் கொண்டவர்கள் தங்கள் குடும்பத்தின் ஒவ்வொரு நிகழ்வையும் மலையனூர் மாகாளி முன்பு செய்கிறார்கள். பெரும்பாலானவர்கள் இத்தலத்தில் வைத்தே திருமணம் செய்து கொள்கிறார்கள்.

    குழந்தை பிறந்ததும், அந்த குழந்தையை மேல்மலையனூருக்கு அழைத்து வந்து முதல் மொட்டை போட்டு தலை முடியை காணிக்கையாக கொடுக்கவும் பக்தர்கள் தவறுவது இல்லை.

    அதிலும் குறிப்பாக இந்த ஆடி மாதம் முழுவதும் இத்தலத்துக்கு வந்து மொட்டை போட்டுக் கொள்வோர்கள் ஏராளம். அங்காளம்மனை தீவிரமாக நேசிப்பவர்கள் குடும்பத்தோடு மொட்டை போட்டுக் கொள்வதுண்டு.

    அது போல சிறுமியருக்கு காது குத்துவதையும் பெரும்பாலான பக்தர்கள் இந்த தலத்திலேயே வைத்து நடத்துகிறார்கள்.

    பொங்கல் வழிபாடு

    ஆடி மாதம் அம்மன் மாதம் என்பார்கள். இந்த மாதத்தில் அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்தால் அம்மன் கேட்ட வரங்கள் மட்டுமின்றி கேட்காத வரங்களையும் அள்ளி தருவாள் என்று பெண்கள் நம்புகிறார்கள். இதனால்தான் ஆடி வெள்ளி, செவ்வாய், ஞாயிற்றுக்கிழமைகளில் பெண்கள் அதிகளவில் அம்மன் ஆலயங்களில் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபாடுகள் செய்வதுண்டு.

    மேல்மலையனூர் தலத்திலும் அம்மனுக்கு பொங்கல் வழிபாடு வைப்பது ஆதிகாலத்தில் இருந்தே நடைமுறையில் உள்ளது. சமீப ஆண்டுகளாக ஆடி வெள்ளிக்கிழமைகளில் மலையனூர் மாகாளிக்கு பொங்கல் வைக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளது.

    இதையடுத்து மேல்மலையனூர் தலத்தில் பொங்கல் வைப்பதற்காகவே தனிப்பட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. வெளியூர் செல்பவர்கள் அங்கு பொங்கல் வைத்து அங்காளம்மனை மனதார வழிபட்டு வரலாம். அதிகாலை முதல் மாலை வரை பொங்கல் வைத்து வழிபடலாம்

    என்றாலும், ராகு காலத்தில் மட்டும் பொங்கல் வைத்து வழிபட வேண்டாம் என்று சொல்கிறார்கள். பொங்கல் பிரசாதம் படைப்பவர்களில் பெரும்பாலானவர்கள் அதை வீடுகளுக்கு எடுத்து சென்று விடுகிறார்கள்.

    ஆனால் பொங்கல் நைவேத்தியத்தை அங்காளம்மனுக்கு படைத்து வழிபட்ட பிறகு அதை கோவிலில் உள்ள பக்தர்களுக்கு பகிர்ந்து அளிப்பது நல்லது. பக்தர்களுக்கு இந்த பிரசாதத்தை வினியோகிப்பது மூலம் பொங்கல் வழிபாடு செய்பவர்களுக்கு நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம்.

    ஆடு&கோழி பலி

    மேல்மலையனூர் தலத்தில் ஆடி மாதம் ஆடு, கோழி பலியிடுவது வழக்கத்தில் உள்ளது. ஆனால் கோவிலுக்குள் எத்தகைய பலி வழிபாடுகளும் நடப்பதில்லை. கோவிலுக்கு வெளியே தூரத்தில்தான் அவற்றை செய்கிறார்கள்.

    மேல்மலையனூர் தலத்தில் காவல் தெய்வமாக இருக்கும் பாவாடைராயனுக்கு ஆடு, கோழிகளை பலியிட்டு பக்தர்கள் சமர்ப்பிப்பார்கள். அங்காளம்மன் ஒருதடவை, "எனக்கு படைக்கப்படும் உணவுகள் உன்னைச் சாரும்" என்று, பாவாடைராயனிடம் கூறி இருந்தாளாம். எனவே இத்தகைய வழிபாடுகள் எல்லாம் பாவாடைராயனுக்கே சென்று சேருகிறது.

    ஆடி மாதம் அங்காளம்மனை வழிபடுபவர்கள் மறக்காமல் பாவாடைராயனையும் வழிபட்டு வர வேண்டும். அவர் நம் வழிப்பயணத்துக்கு துணை இருப்பார் என்பது ஐதீகம்.

    ஆடு& கோழி சுற்றி விடுதல்

    சமீப காலமாக பக்தர்கள் ஆடு, கோழி பலியிடுவதை குறைத்து வருகிறார்கள். அதற்குபதிலாக கோவில் அருகில் சென்று ஆடு, கோழிகளை சுற்றி விட்டுவிட்டு வந்து விடுகிறார்கள்.

    இதன் மூலம் தங்கள் பிரார்த்தனை நிறைவுபெறுவதாக நம்புகிறார்கள். அதுமட்டுமின்றி இந்த சுற்றிவிடும் வழிபாடு மிக எளிய பரிகாரமாக இருப்பதால் பெரும்பாலானவர்கள் இந்த வழிபாட்டை பின்பற்றுகிறார்கள்.

    கடந்த சில மாதங்களாக மேல்மலையனூர் தலத்தில் ஆடு, கோழி மட்டுமின்றி மாடுகளையும் கூட சுற்றி விட்டு நேர்த்தி கடன் செய்கிறார்கள்.

    வேப்பஞ்சேலை வழிபாடு

    அங்காளம்மனை வழிபடும் பெண்கள் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றகோரி ஆலயத்தில் வேப்பஞ்சேலை அணிந்து வழிபாடு செய்வதுண்டு. பொதுவாக வேப்பஞ்சேலை வழிபாடு மேல்மலையனூர் கோவிலில் ஆதிகாலத்தில் இருந்து தொடங்கப்பட்ட பழக்கமல்ல. சென்னை அருகே உள்ள பெரியபாளையம் கோவிலில்தான் இந்த வழிபாடு அதிகஅளவில் நடக்கிறது.

    சமீப காலமாக மேல்மலையனூர் கோவிலுக்கு வரும் பெண்களும் இந்த வழிபாட்டை பின்பற்ற தொடங்கி இருக்கிறார்கள். இந்த வழிபாடு செய்தால் அம்மன் மனம் இறங்கி வேண்டும் வரம் தருவாள் என்பது நம்பிக்கை.

    தீச்சட்டி ஏந்துதல்

    மலையனூரில் பிரார்த்தனைக்கு வருபவர்கள் தீச்சட்டி ஏந்தி கோவிலை வலம் வந்து வழிபடுவதுண்டு. ஆடி மாதம் தீச்சட்டி எடுத்து நேர்த்திகடன் நிறைவேற்றும் பக்தர்களின் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என்று கோவில் நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

    இந்த நேர்த்திகடன் செய்பவர்கள் முதலில் அக்னி குளத்தில் நீராடி அங்கிருந்து தீச்சட்டி ஏந்தி வருவார்கள். சிலர் அழகு குத்தியும் தீச்சட்டி ஏந்தி வருவதுண்டு.

    பித்ரு தர்ப்பணத்தை மேம்படுத்தும் அம்மன்

    நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) ஆடி அமாவாசை தினமாகும். இந்த நாள் மறைந்த முன்னோர்களான பித்ருகளை நினைத்து வழிபாடு செய்வதற்கு மிகவும் உகந்த நாள்.

    நாளை காலை புண்ணிய தீர்த்தங்கள், நதிகள், கடலோர பகுதிகளில் பித்ருகளுக்கு தர்ப்பணம் செய்யும் நிகழ்வு நடைபெறும். அதன் பிறகு வீடுகளிலும் முன்னோர்களுக்கு சிலர் படையல் செய்து வழிபடுவது உண்டு.

    ஆனால் பித்ரு தர்ப்பணம் செய்த பிறகு வீட்டிற்கு வராமல் நேரடியாக மேல்மலையனூர் அங்காளம்மன் தலத்துக்கு சென்று அம்மனை வழிபட்டால் பித்ரு தர்ப்பணத்தை மேம்படுத்தும் பலன் கிடைக்கும்.

    அதாவது நாம் பித்ருக்களுக்கு செய்த தர்ப்பணங்கள் முழுமையாக அவர்களை சென்று சேர அங்காளம்மன் உதவுவாள் என்பது ஐதீகம். ஆதிகாலத்தில் அங்காளம்மன் இத்தலத்தில் அவதாரம் எடுத்து பல்வேறு ஆத்மாக்களுக்கு ஞானம் வழங்கி உயர்வு கொடுத்தாள்.

    எனவேதான் பித்ரு தர்ப்பணத்திற்கு பிறகு அங்காளம்மனை வழிபடுவது நல்லது என்று சொல்கிறார்கள்.

    மஞ்சள் ஆடை

    ஆடி மாதம் மலையனூர் தலத்துக்கு செல்பவர்கள் அம்மனுக்கு புடவை சாத்தி வழிபாடு செய்யலாம். அம்மனுக்கு மிகவும் உகந்தது மஞ்சள் நிற உடையாகும். அது கிடைக்காத பட்சத்தில் சிவப்பு கலரில் புடவைகள் வாங்கி சாத்தலாம்.

    புற்றை சுற்றினால் பித்து நீங்கும்

    மேல்மலையனூரில் புற்றுக்கும் அங்காளம்மனுக்கும் அபிஷேகம் செய்து வழிபாடு செய்வது சிறப்பானதாக கருதப்படுகிறது. ஆடி மாதம் இந்த அபிஷேகத்தை செய்தால் மிகவும் நல்லது. அங்காளம்மனுக்கு செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் அபிஷேகம் செய்ய இயலாது. மற்ற சாதாரண நாட்களில்தான் இந்த வழிபாட்டை நடத்த முடியும்.

    அம்மனுக்கு அபிஷேகம் சாதாரண நாட்களில் எந்த நேரத்திலும் நீங்கள் விரும்பும் நேரத்திலே அமைத்து கொள்ள முடியும். இந்த வழிபாடு செய்வதால் கடன் பிரச்சினைகள் தீரும் என்பது ஐதீகம்.

    அதுபோல அங்காளம்மன் தலத்தில் உள்ள புற்றுக்கும் அபிஷேக வழிபாடுகள் செய்யலாம். புதிய புற்று மண் தூவி அதன் மேல் மஞ்சள் தண்ணீர் தெளித்து குங்குமம் பூசுவார்கள். இதுவும் அம்மனை குளிர வைக்கும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள்.

    புற்றுக்கு அபிஷேகம் செய்வதால் குழந்தை பாக்கியம், திருமண யோகம் கைகூடும் என்பது ஐதீகமாகும்.

    மலையனூரில் உள்ள புற்றை சுற்றி வந்து வணங்கினால் பித்து நீங்கும் என்பது பலமொழியாக சொல்லப்பட்டு வருகிறது. எனவே மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த புற்று மண்ணை பூசி விட்டால் குணமாகும் என்ற நம்பிக்கையும் உள்ளது.

    மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மேல்மலையனூர் தலத்துக்கு அழைத்து சென்று ஓர் இரவு தங்க வைத்தாலே போதும் குணம் அடைந்து விடுவார்கள் என்று கூறப்படுகிறது. இப்படி பலன் அடைந்தவர்கள் ஏராளமானவர்கள் ஆவர்.

    • ஆடி அழைக்கும் தை துரத்தும் என்ற ஒரு பழமொழி உள்ளது.
    • வேம்பும், மஞ்சளும் அம்மனின் அம்சங்கள் என கருதப்படுகின்றன.

    ஆடி மாதம் பிறந்து விட்டாலே அம்மனை வழிபாடு செய்யும் பொது மக்களுக்கு திருவிழா மனநிலை ஏற்பட்டு விடுகிறது. அதற்கு ஏற்றார் போல ஆடி மாதத்தில் ஏராளமான திருவிழாக்கள் அம்மனுடைய பெயரிலேயே அமைந்திருக்கின்றன. திருவிழா மாதமான ஆடியில் திருமணம் போன்ற சுப காரியங்களை பொதுவாக செய்வதில்லை. ஏன் என்று கேட்டால் மனிதர்களுடைய ஒரு வருட காலம் என்பது தேவர்களுக்கு ஒரு நாளாக சொல்லப்படுகிறது.

    அந்த வகையில் ஆடி மாதம் என்பது தேவர்களுக்கான மாலை வேலையாக குறிப்பிடப்படுகிறது. அதனால் அது சுபகாரியங்களுக்கு ஏற்றதாக இல்லை என்பதால் திருமணம் போன்ற விஷயங்களை ஆடி மாதத்தில் பொதுவாக செய்யப்படுவதில்லை.

    பூமியினுடைய சுற்றுவட்ட பாதை வடக்கு திசையில் இருந்து தெற்கு திசை நோக்கி மாற்றிப் பயணிக்கும் காலம் ஆடி மாதத்தின் முதல் நாளாகும். அதை தட்சிணாயன புண்ணிய காலம் என்று சொல்வார்கள். அதன் அடிப்படையில் ஆடி மாதத்தில் பண்பாட்டு ரீதியாக கடைபிடிக்கப்படும் பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப பல்வேறு பழமொழிகள் இருக்கின்றன.

    ஆடி அழைக்கும் தை துரத்தும் என்ற ஒரு பழமொழி உள்ளது. அதாவது ஆடி மாதத்தில் அவரவர்களது குடும்ப முன்னோர்களை அழைத்து வரக்கூடிய மாதமாகவும், தை முதல் நாளான உத்திராயண புண்ணிய காலத்தில் அவர்களை அவர்களுடைய உலகத்திற்கு அனுப்பி வைக்கும் நாளாகவும் குறிப்பிடப்படுகிறது. இந்தக் காலத்தில், பகல் பொழுது குறைவாகவும், இரவுப் பொழுது நீண்டும் இருக்கும்.

    மேலும் தேவர்களுக்கு உரிய மாதமான ஆடியில் மழைக்காலம் தொடங்கிவிடும். வேளாண் பணிகளில் மக்கள் ஈடுபடும் காரணத்தால் வீடுகளில் சுப காரிய நிகழ்ச்சிகள் நடந்தால் அதன் காரணமாக வேளாண்மை பணிகளுக்கு தடை ஏற்படும். அதனால், ஆடி மாதத்தில் மங்களகரமான நிகழ்ச்சிகளை வீடுகளில் செய்யாமல், கோவில் திருவிழாக்களை நடத்தி ஊர் கூடி பொது நலனுக்காக வழிபாடு செய்தார்கள்.

    காற்றடிக்கும் மாதமான ஆடியில் பிராண வாயுவின் சக்தி வழக்கத்தை விட கூடுதலாகவே இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. அதன் காரணமாக ஆடி மாதத்தில் அம்மனுக்கு உகந்த வேப்பிலை, எலுமிச்சம் பழம், கூழ் ஆகியவை அம்மனுக்கு அர்ப்பணிக்கப்படுகின்றன. இவைகளை உபயோகப்படுத்துவதில், அறிவியல் ரீதியான காரணம் உண்டு.

    இந்த நாட்களில் வெப்பநிலை அதிகமாக இருக்கும். அம்மனுக்கு படைத்த ஆடிக்கூழை சாப்பிடும் பொழுது, வெப்பம் குறைத்து, உடலை சீரான நிலையில் வைக்கும். எலுமிச்சம்பழத்திற்கு ஆன்டி ஆக்ஸிடன்ட் சக்தி உண்டு. வேப்பிலை தீய சக்திகளையும், உடலுக்குக் கேடு விளைவிக்கும் பாக்டீரியாக்களையும் அழிக்கும் மருத்துவ குணம் கொண்டது.

    வேம்பும், மஞ்சளும் அம்மனின் அம்சங்கள் என கருதப்படுகின்றன. ஆடிக் காற்றில் அம்மியும் பறக்கும் என்ற பழமொழியும் உண்டு. ஆடி, காற்று காலமாகும். எனவே ஆடி காற்று வழியாக தொற்று நோய்கள் பரவலாம். அதைத் தடுப்பதற்காகவே ஆடி மாதத்தில் வீட்டின் முன் வேப்பிலை கட்டி வைப்பதும், வாசலில் மஞ்சள் நீர் தெளிப்பதும் வழக்கமாக இருந்தன. இவை இரண்டும் பெரிய கிருமி நாசினிகள் என்பதால் கிருமிகள் வீட்டில் வருவது தடுக்கப்படும். மேலும், ஆடி மாதத்தில் மட்டுமாவது சுமங்கலி பெண்கள் மஞ்சள் தேய்த்து குளிக்க வேண்டும் என்ற வழக்கமும் இருக்கிறது.

    ஆடி முதல் நாள் ஆடிப்பண்டிகையைத் தொடர்ந்து, ஆடி அமாவாசை, ஆடிப்பூரம், நாக பஞ்சமி, ஆடிப்பெருக்கு, வரலக்ஷ்மி விரதம், ஆடித்தபசு, ஹயக்ரீவர் ஜெயந்தி, மகா சங்கடஹர சதுர்த்தி, கோகுலாஷ்டமி மற்றும் ஆடிக்கிருத்திகை என்று பல சுப நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன.

    பெண்கள், ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளி ஆடி ஞாயிறு ஆகிய நாட்களில் விரதம் இருந்தும், வேப்பிலை ஆடை அணிந்தும், அலகு குத்தியும், பூ மிதி (தீ மிதி) விழா எடுத்தும் தங்களின் கோரிக்கையை அம்மனிடம் வேண்டிக் கொள்கிறார்கள்.

    • திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோவிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக செல்கின்றனர்.
    • பக்தர்களின் எண்ணிக்கை வழக்கத்தைவிட அதிகமாக உள்ளது.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே மிகவும் பிரசித்தி பெற்ற பாகம்பிரியாள் சமேத ஸ்ரீவன்மீக நாதர் கோவில் உள்ளது.

    சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தி யப்பட்ட இக்கோவிலுக்கு தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். வெள்ளி, செவ்வாய் கிழமைமைகளில் வழக்கத்தை விட அதிகமான பக்தர்கள் வருகின்றனர். இங்குள்ள வாசுகி என்ற புனித தீர்த்த குளத்தில் நீராடுவதால் தீராத நோய்கள் தீருவதாக நம்பப் படுகிறது. தற்போது ஆடி மாதத்தை முன்னிட்டு கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகமாக உள்ளது. குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு ஊர்களில் இருந்தும் பக்தர்கள் பாதயாத்திரை யாக பாகம்பிரியாள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள். நினைத்த காரியம் நிறைவேற வேண்டி பாதயாத்திரையாக கோவிலுக்கு வருவதாக அவர்கள் கூறினார்.

    இவ்வாறு வரும் பக்தர்கள் வியாழக்கிழமை இரவு கோவில் மண்டபத்தில் தங்கி வெள்ளிக்கிழமை சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். ராமநாதபுரம் மாவட்ட எல்லையான எஸ்.பி பட்டிணம் என்று அழைக்கப் படும் சுந்தரபாண்டிய பட்டிணம் பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் கிழக்கு கடற்கரை சாலை வழியாக பாத யாத்திரை மேற்கொண்டனர்.

    • பக்தர்கள் நெய் விளக்கேற்றி வேண்டுதல் நிறைவேற்றினார்கள்.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனர்.

    கிருஷ்ணகிரி,

    ஆடி மாத பிறப்பை யொட்டி மாவட்டத்தில் அம்மன் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    ஆடி மாதம் நேற்று பிறந்தது. இந்த மாதத்தில் அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடை பெறுவது வழக்கம். வேண்டுதல்களை நிறைவேற்ற பக்தர்கள் தீச்சட்டி எடுத்தல், தீ மிதித்தல், பொங்கல் வைத்தல் என இந்த மாதம் முழுவதும் அம்மனை வேண்டி பக்தர்கள் வழிபடுவார்கள்.

    நேற்று ஆடி மாத பிறப்பை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடந்தன.

    அதன்படி, கிருஷ்ணகிரி பெரிய மாரியம்மன் கோவிலில், அதிகாலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பக்தர்கள் நெய் விளக்கேற்றி வேண்டுதல் நிறைவேற்றினார்கள்.

    இதே போல், ஜோதி விநாயகர் கோவில் தெருவில் உள்ள முத்துமாரியம்மன் கோவில், பழையபேட்டை நேதாஜி சாலையில் உள்ள சமயபுர மாரியம்மன் கோவில் உள்பட பல்வேறு மாரியம்மன் கோவில்களில் அபிஷேகம், சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடந்தன. இதில், திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    இதே போல கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் அம்மன் கோவில்களில் நேற்று ஆடி மாத பிறப்பை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனர்.

    • சென்னையில் 2 பயணத்திட்டங்களாக ரூ.1,000 மற்றும் ரூ.800 ஆகிய கட்டணங்களில் இச்சுற்றுலா செயல்படுத்தப்படுகிறது.
    • திமுக ஆட்சி ஏற்பட்ட பிறகு இன்றைய தினம் வரை 866 கோவில்களில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளன.

    சென்னை:

    சென்னை, பாரிமுனை, காளிகாம்பாள் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை, சுற்றுலா துறையுடன் ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்துள்ள ஆடி மாத அம்மன் கோவில் ஆன்மிக சுற்றுலாவினை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    பின்னர் அமைச்சர் பி.கே.சேகர்பாபு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இன்றைக்கு காளிகாம்பாள் கோவிலில் இருந்து 10 அம்மன் கோவில்களுக்கு புறப்பட்ட ஆன்மிக சுற்றுலா வில் 47 பக்தர்கள் பங்கேற்றுள்ளனர். அவர்களுக்கு சிறப்பு தரிசனம் செய்யப்பட்டு, கோவில் பிரசாதங்கள் மற்றும் மதிய உணவும் வழங்கப்படுகிறது.

    சென்னையில் 2 பயணத்திட்டங்களாக ரூ.1,000 மற்றும் ரூ.800 ஆகிய கட்டணங்களில் இச்சுற்றுலா செயல்படுத்தப்படுகிறது.

    ஆளவந்தார் அறக்கட்டளையின் சொத்துக்களை பொறுத்தவரை இதுவரை எந்த ஒரு தனியாருக்கும் தரப்படவில்லை. அந்த இடத்தின் ஒரு பகுதி சென்னை பெருநகர குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியத்தின் குடிநீர் திட்டத்திற்கு வழங்கப்பட்டு, அதற்கான நிலுவைத் தொகை ரூ.10 கோடியை இந்த ஆட்சி வந்த பிறகு தான் வசூலித்து அறக்கட்டளைக்கு செலுத்தப் பட்டுள்ளது.

    அதேபோல் ஆளவந்தார் திருவரசை மேம்படுத்த ரூ.1 கோடியும், அறக்கட்டளை சார்பில் பாடசாலை நிறுவுவதற்கு ரூ.1 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆளவந்தாரின் உயிலில் குறிப்பிட்டுள்ளபடி தலசயன பெருமாள் கோவில் மற்றும் திருவிடந்தை, நித்திய கல்யாண பெருமாள் கோவிலுக்கு தேவையான அனைத்து நித்தியப் பணிகளும் செய்யப்பட்டு வருகின்றன.

    அந்த கோவில்களில் திருப்பணிகளும் நடைபெற்று வருகின்றன. ஆளவந்தாரின் சொத்துக்களை பாதுகாப்பதற்கு தான் இந்த ஆட்சி அதிகளவில் அக்கறை செலுத்தி ஆக்கிரமிப்பு அகற்றி ரூ.10 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் அமைக்கின்ற பணியும் நடைபெற்று வருகிறது. ஆளவந்தாரின் நோக்கங்களுக்கு எதிர்மறையாக எந்தவிதமான நடவடிக்கையும் இதுவரையில் தமிழ்நாடு அரசு எடுக்கவில்லை என்பதை ஆணித்தரமாக தெரிவித்துக் கொள்கிறேன்.

    இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு இன்றைய தினம் வரை 866 கோவில்களில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளன. ரூ.4764 கோடி மதிப்பிலான 5,080 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளன.

    கோவிலுக்கு சொந்தமான இதுவரை 1.25 லட்சம் ஏக்கர் நிலங்கள் ரோவர் கருவியின் வாயிலாக அளவீடு செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டு உள்ளன.

    ஆகவே, தி.மு.க. ஆட்சியில் இறை சொத்து இறைவனுக்கே என்ற வகையில் அந்த சொத்துக்களை பாதுகாப்பது அவை எந்த நோக்கத்திற்காக திருக்கோவில்களுக்கு எழுதி வைக்கப்பட்டதோ அந்த நோக்கத்தை நிறைவேற்றுகின்ற பணியில் இந்து சமய அறநிலைத்துறை தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கின்றது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×