search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "womens entitlement amount"

    • சில திட்டங்கள் தொடங்கப்பட்டு சில காலத்திற்குப் பிறகே பலன் தர ஆரம்பிக்கும்.
    • தகுதியுள்ள ஒவ்வொருவரும் திட்டத்தில் இணைக்கப்படுவதற்கான வாய்ப்போடும் இத்திட்டம் செயல்படுத்தப்படுவதே இதன் தனிச்சிறப்பு.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் கடந்த மார்ச் 27-ந்தேதி சட்டசபையில் மகளிர் உரிமைத்தொகை குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. குடும்பத்திற்காக வாழ்நாள் முழுவதும் ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களின் உழைப்பிற்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில், அவர்களுக்கு ஆண்டிற்கு ரூ.12 ஆயிரம் உரிமைத்தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டமானது பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத்தரத்தை உயர்த்தி, சமூகத்தில் அவர்கள் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்கும் உயரிய நோக்கம் கொண்டது.

    தமிழ்நாடு அரசின் ஒவ்வொரு மக்கள் நலத்திட்டமும், தேவையுள்ள ஒருவர் கூட விடுபடாமல் தகுதியான பயனாளிகளை சென்றுசேர வேண்டும் என்பதில் தமிழ்நாடு அரசு அதிக அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது.

    அதுபோலவே, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கும் தகுதியான பயனாளிகளை கண்டறிவதற்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டு, 1.63 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டு, விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.

    அவற்றில் 1.06 கோடி தகுதியான பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கான உரிமைத் தொகையானது ஒவ்வொருவருக்கும் தலா ரூ.1,000 வீதம் முதல் தவணை அவர்களின் வங்கிக் கணக்கின் வாயிலாக அளிக்கப்பட்டுள்ளது. இத்தனை பயனாளிகளுக்கு ஒரே நேரத்தில் வங்கிக் கணக்கில் அரசின் நலத்திட்ட நிதி வரவு வைக்கப்பட்டது இதுவே முதன்முறையாகும்.

    நடப்பு அக்டோபர் மாதத்திற்கான மகளிர் உரிமைத்தொகை வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட வேண்டிய 15-ந்தேதி, அரசு விடுமுறை நாள் என்பதால், இத்திட்டத்தின் கீழ் பயனடையும், அனைத்து மகளிருக்கும், ஒரு நாள் முன்னதாகவே உரிமைத் தொகையினை அனுப்பி வைக்கத் தாயுள்ளத்தோடு முதலமைச்சரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தகுதியான பயனாளி ஒருவர் கூட விடுபட்டுவிடக் கூடாது என்ற நோக்கில், திருநங்கைகள் உள்ளிட்ட பல்வேறு தகுதியான குடும்ப தலைவியர் கண்டறியப்பட்டு, அக்டோபர் மாதத்திற்கான கூடுதல் பயனாளிகளாக 5,041 பேர் இத்திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளனர். உரிமைத்தொகை பெற்றுக்கொண்டவர்களில் இறந்து போனவர்கள் மற்றும் தகுதியற்றவர்கள் எனக் கண்டறியப்பட்ட 8,833 பெயர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளன.

    நடப்பு அக்டோபர் மாதத்திற்கான 1,06,48,406 மகளிருக்கான உரிமைத்தொகையானது ஒரு நாள் முன்னதாக அக்டோபர் 14 அன்றே அவர்களது வங்கிக்கணக்கில் நேரடியாகக் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது. இப்பயனாளிகளில் முறையான வங்கிக் கணக்கினைக் கொண்டிராத 87,785 பயனாளிகளுக்கு அஞ்சல் பணவிடை மூலமாகவும் உரிமைத்தொகை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    சில திட்டங்கள் தொடங்கப்பட்டு சில காலத்திற்குப் பிறகே பலன் தர ஆரம்பிக்கும். ஆனால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்டமானது, திட்டம் தொடங்கப்பட்ட நாள் முதலே பொதுமக்கள் மத்தியில், குறிப்பாகக் குடும்பத் தலைவிகள் மத்தியில் சிறப்பான நல்ல விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது என்பதே இத்திட்டத்தின் மாபெரும் வெற்றியாகும்.

    இத்திட்டம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குடும்பத் தலைவிகள் மத்தியிலும் மிகுந்த வரவேற்பினைப் பெற்றுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. தகுதியுள்ள பயனாளிகள் அனைவருக்கும் மாதந்தோறும் உரிமைத்தொகை சென்று சேர்வதோடு, தகுதியுள்ள ஒவ்வொருவரும் திட்டத்தில் இணைக்கப்படுவதற்கான வாய்ப்போடும் இத்திட்டம் செயல்படுத்தப்படுவதே இதன் தனிச்சிறப்பு.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் மற்ற மாநிலங்களுக்கு முன் உதாரணமாக விளங்கி வருகிறது.
    • மழைக்காலங்களில் பள்ளி விடுமுறை குறித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்களே முடிவு எடுத்து கொள்ளலாம் என அறிவுறுத்தி உள்ளோம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அடுத்த தளவாய்பாளையத்தில் இன்று கத்திரி நத்தம் ஊராட்சி மன்ற அலுவலக விரிவாக்க கட்டிடம் மற்றும் கூட்ட அறையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-

    இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் மற்ற மாநிலங்களுக்கு முன் உதாரணமாக விளங்கி வருகிறது. முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தால் 31 ஆயிரம் பள்ளிகளை சேர்ந்த 17 லட்சம் மாணவ-மாணவிகள் பயனடைந்து வருகின்றனர். தமிழ்நாட்டைப் பின்பற்றி இந்த மாதத்தில் தெலுங்கானா மாநிலத்திலும் பள்ளிகளில் காலை உணவு திட்டம் தொடங்கப்பட உள்ளது.

    பள்ளிகளில் பழுதடைந்த சுவர்கள், விரிசல் ஏற்பட்ட கட்டிடம் , பழுது அடைந்த கட்டிடங்களை அகற்றும் பணி ஏற்கனவே நடைமுறையில் இருந்து வருகிறது. தற்போது மழைக்காலம் தொடங்கப்பட உள்ளதால் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் அந்தப் பணிகள் நடந்து வருகிறது. மழைக்காலங்களில் பள்ளி விடுமுறை குறித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்களே முடிவு எடுத்து கொள்ளலாம் என அறிவுறுத்தி உள்ளோம்.

    ஒரு திட்டத்தில் மேல்முறையீடு செய்யலாம் என்று ஒரு திட்டத்தை கூறினால் அது கலைஞர் மகளிர் உரிமை திட்டம் தான். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் திட்டத்திற்கு மேல்முறையீடு செய்ய முடியாது. தகுதி வாய்ந்த பெண்கள் அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை விடுபடாமல் கிடைக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வரும் 18-ந் தேதி முதல் ஒவ்வொரு ஊரிலும் மக்கள் சக்தியுடன் கண்டன ஆர்ப்பாட்டங்கள் பல்வேறு தேதிகளில் நடைபெற இருக்கின்றன.
    • விழுப்புரம் பெருங்கோட்ட பா.ஜ.க. நிர்வாகிகளும் தொண்டர்களும் போராட்டத்தில் பெருந்திரளாக கலந்து கொண்டு வெற்றியடையச் செய்ய கேட்டுக்கொள்கிறேன்.

    சென்னை:

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ஆயிரம் வீதம் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று தி.மு.க. அறிவித்த வாக்குறுதியும் மக்களின் பெரும் கோபத்திற்கும் ஏமாற்றத்திற்கும் இடையே பல குழப்பங்களுடன் அரைகுறையாக செயல்படுத்தப்படுகிறது.

    பெண்களுக்கு திருமண வயது 18 என்ற நிலையில், திருமணமாகி குடும்பத் தலைவிகளாகிவிட்ட 18 முதல் 21 வயது வரை உள்ள பெண்களை குடும்பத் தலைவிகளாக அங்கீகரிக்க இந்த தி.மு.க. அரசு மறுக்கிறது.

    விழுப்புரம் மாவட்டத்திலும் சுற்றுப்பகுதிகளிலும் திறனற்ற தி.மு.க. அரசின் திடீர் தகுதி அறிவிப்பால் ஏமாற்றமடைந்த ஏழை கிராம மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் வேண்டுகோளுக்கிணங்க விழுப்புரம் பெருங்கோட்டத்திற்கு உட்பட்ட மாவட்டங்களில் பெருங்கோட்டப் பொறுப்பாளர் வினோத் பி.செல்வம், ஒருங்கிணைப்பில் திண்டிவனம், விழுப்புரம் பண்ருட்டி கங்கைகொண்டான், ஸ்ரீபெரும்புதூர், முடிச்சூர், செய்யூர், திருவள்ளூர், செங்குன்றம் ஆகிய பகுதிகளில் வரும் 18-ந் தேதி முதல் ஒவ்வொரு ஊரிலும் மக்கள் சக்தியுடன் கண்டன ஆர்ப்பாட்டங்கள் பல்வேறு தேதிகளில் நடைபெற இருக்கின்றன. விழுப்புரம் பெருங்கோட்ட பா.ஜ.க. நிர்வாகிகளும் தொண்டர்களும் இந்த போராட்டத்தில் பெருந்திரளாக கலந்து கொண்டு வெற்றியடையச் செய்ய கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • தமிழகத்தில் சுமார் 80 லட்சம் பெண்களுக்கு ரூ.1000 உதவித்தொகை கிடைக்கவில்லை.
    • தி.மு.க.வுக்கு எதிராக உள்ள மக்களை கவர்ந்திழுக்க என்னென்ன செய்ய வேண்டுமோ அனைத்தையும் செய்ய வேண்டும் என்று அண்ணாமலை கேட்டுக் கொண்டார்.

    சென்னை:

    அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து விலக்கப்பட்ட பா.ஜனதா கட்சி தமிழகத்தில் புதிய அணியை உருவாக்க திட்டமிட்டு உள்ளது. இதற்கிடையே தமிழக அரசியல் களத்தில் பிரதான எதிர்க்கட்சியாக மாற பா.ஜனதா தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளது.

    அதன் ஒரு பகுதியாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பாத யாத்திரை மூலம் செல்வாக்கை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொண்டு உள்ளார். மேலும் தி.மு.க.வுக்கு எதிரான நடவடிக்கைகளை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    இதற்கான ஆலோசனை கூட்டம் நேற்று சென்னையில் நடந்தது. அப்போது பா.ஜ.க. நிர்வாகிகளுக்கு சில அறிவுறுத்தல்களை அண்ணாமலை வெளியிட்டு உள்ளார்.

    தி.மு.க.வுக்கு எதிராக உள்ள மக்களை கவர்ந்திழுக்க என்னென்ன செய்ய வேண்டுமோ அனைத்தையும் செய்ய வேண்டும் என்று அண்ணாமலை கேட்டுக் கொண்டார். குறிப்பாக மகளிர் ரூ.1000 உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் பணம் கிடைக்காத பெண்களிடம் பேசி அவர்களது ஆதரவை பா.ஜனதா பக்கம் திருப்ப வேண்டும் என்று அண்ணாமலை அறிவுறுத்தியதாக தெரிய வந்துள்ளது.

    தமிழகத்தில் சுமார் 80 லட்சம் பெண்களுக்கு ரூ.1000 உதவித்தொகை கிடைக்கவில்லை. அந்த 80லட்சம் பெண்களிடமும் பா.ஜ.க. நிர்வாகிகள் பேச வேண்டும் என்று அண்ணாமலை அறிவுறுத்தியதாக கூட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

    இதுதவிர வரும் நாட்களில் தி.மு.க.-அ.தி.மு.க. இரு திராவிட கட்சிகளுக்கும் எதிராக அதிக அளவு குற்றச்சாட்டுக்களை வெளியிடவும் அண்ணாமலை திட்டமிட்டு இருப்பதாக அந்த நிர்வாகி குறிப்பிட்டார்.

    • மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்களுக்கு எந்த காரணத்திற்காக மனு நிராகரிக்கப்பட்டது என்ற தகவல் எஸ்.எம்.எஸ். மூலம் தெரிவிக்கப்பட்டது.
    • உதவி மையங்களில் சென்று அதற்கான காரணத்தை தெரிந்து கொண்ட பெண்கள் மீண்டும் விண்ணப்பித்தனர்.

    சென்னை:

    கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் கடந்த 15-ந்தேதி தொடங்கி வைக்கப்பட்டது. சென்னையில் 9.55 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். ஆனால் 7 லட்சம் பெண்களுக்கு உரிமை தொகை கிடைத்தது. தகுதி உள்ளவர்களுக்கு உரிமைத் தொகை கிடைக்காமல் இருக்கக் கூடாது என்பதற்காக மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்களுக்கு எந்த காரணத்திற்காக மனு நிராகரிக்கப்பட்டது என்ற தகவல் எஸ்.எம்.எஸ். மூலம் தெரிவிக்கப்பட்டது.

    உதவி மையங்களில் சென்று அதற்கான காரணத்தை தெரிந்து கொண்ட பெண்கள் மீண்டும் விண்ணப்பித்தனர். சென்னையில் 2 வாரத்தில் 30 ஆயிரம் பேர் மேல்முறையீடு செய்துள்ளனர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி கூறியதாவது:-

    ஏற்கனவே 30 ஆயிரம் பெண்களின் மனுக்கள் நிலுவையில் உள்ள நிலையில் தற்போது மேலும் 30 ஆயிரம் பேர் மீண்டும் விண்ணப்பித்துள்ளனர். மொத்தம் 60 ஆயிரம் பெண்களின் மனுக்கள் கள ஆய்வு செய்து தகுதியாக இருப்பின் உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேல்முறையீடு செய்துள்ள இவர்களின் வீடுகளுக்கு அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி தகுதி இருப்பின் உடனே வழங்கப்படும் என்றார்.

    • ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத்தொகை பயனுள்ள திட்டமாகும்.
    • அனைத்து இடங்களிலும் திருநங்கைகளுக்கும் பணி வழங்க வேண்டும் என்கிற உத்தரவையும் அரசு பிறப்பித்து அதனை நடைமுறைப்படுத்த வேண்டும்.

    சென்னை:

    தமிழக அரசு சார்பில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகையாக மாதம் ரூ 1000 தகுதி வாய்ந்த பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஒரு கோடிக்கும் அதிகமான பெண்கள் இந்த திட்டத்தின் கீழ் பயனடைந்து உள்ளனர். இந்த திட்டத்தின் கீழ் பயனடையாத பலர் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பலர் விண்ணப்பித்து உள்ளனர்.

    இதற்கிடையே திருநங்கைகள் பலரும் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்காக விண்ணப்பித்து உள்ளனர். ஆனால் திருநங்கைகள் அனைவருக்கும் இந்த உரிமைத்தொகை கிடைக்கவில்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக சென்னை கண்ணகி நகரில் உள்ள திருநங்கை விழிகள் அமைப்பு சென்னை மாவட்ட கலெக்டர் ராஸ்மி சித்தார்த்தை நேரில் சந்தித்து மனுவும் அளித்துள்ளது.

    அந்த அமைப்பைச் சேர்ந்த நிர்வாகியான துர்கா ஸ்ரீ இதுதொடர்பாக கூறியதாவது:-

    ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத்தொகை பயனுள்ள திட்டமாகும். திருநங்கைகள் பலர் தற்போது பலரிடமும் கையேந்தி காசு வாங்கி பிழைப்பு நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவதன் மூலம் திருநங்கைகளுக்கு அது பயனுள்ளதாக இருக்கும். சென்னையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்காக விண்ணப்பித்து விட்டு சுமார் 4000 திருநங்கைகள் காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு அரசு ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகையை வழங்குவதற்கு உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

    இது தொடர்பாக சென்னை மாவட்ட கலெக்டரை சந்தித்து முறையிட்டுள்ளோம். அவரும் இது தொடர்பாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளார் என்றார்.

    சென்னை தண்டையார்பேட்டையில் 688 திருநங்கைகள் ரூ.1000 மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பித்து உள்ளனர். இவர்களில் 13 பேருக்கு மட்டுமே உரிமைத்தொகை கிடைத்து உள்ளது. மீதம் உள்ளவர்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. அதற்கு 21 வயதுக்கும் குறைவாக நீங்கள் இருக்கிறீர்கள் என்று காரணம் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    திருநங்கைகள் தங்களது வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ள அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் துர்க்கா ஸ்ரீ தெரிவித்துள்ளார்.

    அவர் மேலும் கூறும்போது திருநங்கைகள் உரிய அங்கீகாரம் கிடைக்காத காரணத்தாலேயே பொது இடங்களில் கையேந்துவது. பாலியல் தொழிலில் ஈடுபடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். எனவே அவர்களுக்கு உரிய வேலை வாய்ப்புகளை அரசு செய்து கொடுக்க வேண்டும். குறிப்பாக அனைத்து இடங்களிலும் திருநங்கைகளுக்கும் பணி வழங்க வேண்டும் என்கிற உத்தரவையும் அரசு பிறப்பித்து அதனை நடைமுறைப்படுத்த வேண்டும்.

    இன்று திருநங்கைகள் பலர் சமூகத்தில் நல்ல அந்தஸ்தில் உள்ளனர். அரசின் நடவடிக்கைகள் மூலம் அனைத்து திருநங்கைகளும் நல்ல நிலைக்கு வர வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கம் அதற்காகவே எங்கள் அமைப்பு செயல்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ரூ.1000 கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விவகாரத்தில் தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு அனைத்து திருநங்கைகளுக்கும் உரிமைத்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே திருநங்கைகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    இந்த விவகாரம் தொடர்பாக திருநங்கைகள் கூறும்போது, இ சேவை மையங்களில் சென்று விண்ணப்பிக்கும்போது ஆண், பெண் என்கிற பகுதி உள்ளது. மூன்றாம் பாலினத்தவர் என்று குறிப்பிடுவதற்கு எங்களுக்கு தகுதி இல்லை என்று தெரிவித்து உள்ளனர். ஆனால் அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது மூன்றாம் பாலினத்தவர் என்ற பகுதியும் இருப்பதாக கூறியுள்ளனர்.

    • பெண்களுக்கு தந்தை சொத்தில் பங்கு வாங்கி கொடுத்தது தி.மு.க.
    • அனைவரும் செல்போன் பயன்படுத்துகிறீர்கள். உண்மையான தகவலை அனைவருக்கும் பரப்ப வேண்டும்.

    சேலம்:

    சேலம் அழகாபுரம் கூட்டுறவு மண்டபத்தில் மகளிர் உரிமை திட்ட பயனாளிகள் 500 பேருக்கு ஏ.டி.எம். கார்டுகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கினார். அமைச்சர் கே.என்.நேரு முன்னிலை வகித்தார். இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று 500 பயனாளிகளுக்கு ஏ.டி.எம். கார்டுகளை வழங்கினார். முன்னதாக அவர் பேசியதாவது:

    பொருளாதார சுதந்திரம் அடைய வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் தமிழக முதலமைச்சரால் கொண்டுவரப்பட்ட திட்டம் தான் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம். இந்த திட்டத்தின் பயனாளிகள் 500 பேருக்கு ஏ.டி.எம். கார்டுகள் வழங்குவதில் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த திட்டம் வாழ்க்கை மாற்றத்திற்கு துருப்பு சீட்டாக உள்ளது.

    கர்நாடகா, தெலுங்கானா உள்பட பல மாநிலங்களிலும் இந்த திட்டத்தை எப்படி செயல்படுத்துவது என ஆராய்ந்து வருகிறார்கள். இது ஒரு முன்மாதிரி திட்டம். பெண்களின் கனவு திட்டம், கலைஞர் மற்றும் தற்போதைய முதலமைச்சரால் பெண்கள் வளர்ச்சிக்கு ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

    பெண்களுக்காக குரல் கொடுத்த இயக்கம் தி.மு.க., பெண்களுக்கு தந்தை சொத்தில் பங்கு வாங்கி கொடுத்தது தி.மு.க., இந்த சட்டத்தை கொண்டு வந்ததும் தி.மு.க. தான். தற்போது பெண்கள் சுதந்திரமாக செயல்படும் வகையில் கல்லூரி மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டம், மகளிருக்கு கட்டணமில்லா இலவச பேருந்து, மகளிருக்கு உரிமை தொகை ஆயிரம் ரூபாய், பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

    கலைஞர் மகளிர் உரிமைச் திட்டம் பெண்களுக்கு மகுடம் சூட்டிய திட்டம். இந்தத் திட்டத்தால் சகோதரனாக நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

    அனைவரும் செல்போன் பயன்படுத்துகிறீர்கள். உண்மையான தகவலை அனைவருக்கும் பரப்ப வேண்டும். பொதுமக்கள் அரசியல் குறித்து பேச வேண்டும். உள்ளாட்சியில் 50 சதவீத இடம் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது. இந்த சாதனையை செய்தது தி.மு.க. தான், மகளிர் பகுத்தறிவுடன் செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக நேற்று இரவு சேலம் அரசு கல்லூரி ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். அப்போது மாணவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து இன்று ரூ.1 லட்சம் மதிப்பிலான விளையாட்டு உபகரணங்களை மாணவர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

    • மேல்முறையீட்டு மனுவை ஆர்.டி.ஓ. ஆய்வு செய்து 30 நாட்களுக்குள் முடிவு செய்ய வேண்டும் என்று அரசு உத்தரவிட்டு உள்ளது.
    • உரிமைத் தொகை மறுக்கப்பட்டவர்களுக்கு மற்றொரு வாய்ப்பாக மீண்டும் மேல்முறையீடு செய்யலாம் என்று தமிழக அரசு ஏற்கனவே அறிவித்து இருந்தது.

    சென்னை:

    தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகையாக மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது. இந்த திட்டத்துக்கு விண்ணப்பம் செய்ததில் 57 லட்சம் பெண்களுக்கு ரூ.1000 உரிமைத் தொகை மறுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு என்ன காரணத்துக்காக உரிமைத் தொகை நிராகரிக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்து விண்ணப்பதாரர்களுக்கு செல்போனில் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டு வருகிறது.

    அதில் கார் வைத்திருப்பது, சொத்து அதிகம் இருப்பது, மின்சாரம் அதிகம் பயன்படுத்தியது போன்ற காரணங்கள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.

    உரிமைத் தொகை மறுக்கப்பட்டவர்களுக்கு மற்றொரு வாய்ப்பாக மீண்டும் மேல்முறையீடு செய்யலாம் என்று தமிழக அரசு ஏற்கனவே அறிவித்து இருந்தது.

    இ-சேவை மையம் வழியாகத்தான் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அதில் நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து இ-சேவை மையங்களிலும் பெண்கள் கூட்டம் அலை மோத தொடங்கி உள்ளது.

    இ-சேவை மையம் திறப்பதற்கு பல மணி நேரத்துக்கு முன்பே பெண்கள் காத்து நிற்கின்றனர். வருகிற 30-ந் தேதிக்குள் மேல் முறையீடு செய்ய வேண்டும் என்று தேதி நிர்ணயிக்கப்பட்டு உள்ளதால் அரசு நடத்தும் இ-சேவை மையங்கள், தனியார் இ-சேவை மையங்கள், இண்டர்நெட் மையங்களிலும் பெண்கள் கூட்டம் தினமும் அதிகரித்து வருகிறது.

    நூற்றுக்கணக்கான பெண்கள் திரண்டு விடுவதால் தள்ளுமுள்ளு ஏற்படுகிறது. மணலி மண்டல அலுவலகத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் அங்கிருந்த கதவு கண்ணாடி உடைந்தது. இ-சேவை மையத்தில் இருந்த கம்ப்யூட்டர் மற்றும் பொருட்களும் கீழே விழுந்து உடைந்துவிட்டது.

    இ-சேவை மைய ஊழியர் கீதாவை பெண்கள் நெருக்கியதால் அவர் மயங்கி விழுந்துவிட்டார். இப்போது அவர் ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இப்படி ஒவ்வொரு இ-சேவை மையங்களிலும் பெண்கள் பொறுமை இழந்து வாக்குவாதம் செய்யும் சம்பவங்கள் தினமும் அரங்கேறி வருகிறது.

    மேல்முறையீடு செய்ய வரும் பெண்கள் ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றுடன் செல்போனில் வந்துள்ள குறுஞ்செய்தியை காண்பித்து விண்ணப்பித்து விட்டு செல்கின்றனர்.

    இந்த மேல்முறையீட்டு மனுவை ஆர்.டி.ஓ. ஆய்வு செய்து 30 நாட்களுக்குள் முடிவு செய்ய வேண்டும் என்று அரசு உத்தரவிட்டு உள்ளது. இந்த விண்ணப்பங்களை தேர்வு செய்ய அவர்களது வீடுகளுக்கு சென்று விசாரிக்க தேவையான ஊழியர்களை தாசில்தார் ஏற்பாடு செய்து வருகிறார்.

    இதன் அடிப்படையில் கள ஆய்வு செய்யும் பணிகள் தொடங்கப்பட உள்ளது. இந்த ஆய்வுக்கு பிறகு தகுதியான பயனாளிகள் உரிமைத் தொகை திட்டத்தில் சேர்க்கப்பட உள்ளனர்.

    இதற்கிடையே மேல் முறையீடு செய்த பெண்கள், எம்.எல்.ஏ.க்களை அணுகி எனக்கு பணம் வரவில்லை. பணம் கிடைக்க ஏற்பாடு செய்யுங்கள் என்று சிபாரிசுக்கு வந்து செல்கின்றனர்.

    இதே போல் கவுன்சிலர்கள் மற்றும் உள்ளூர் தலைவர்களிடமும் நிலைமையை எடுத்து கூறி ரூ.1000 பணம் கிடைக்க உதவிடுமாறு கேட்டு வருகின்றனர்.

    • விண்ணப்பித்தவர்களில் மூன்றில் இரு பங்கிற்கும் குறைவானவர்களுக்கு மட்டும் உரிமைத் தொகை வழங்குவது எந்த வகையிலும் சரியல்ல.
    • இந்தியாவில் பொது வினியோகத் திட்டத்தை வருமான வரம்பு இல்லாமல் அனைவருக்கும் செயல்படுத்திய முதல் மாநிலம் தமிழ்நாடு தான்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வீதம் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தில் நடைபெறும் குளறுபடிகள் தமிழ்நாடு முழுவதும் பெண்களிடையே பெரும் ஏமாற்றத்தையும், கோபத்தையும் ஏற்படுத்தி உள்ளது. தகுதி இருந்தும் மகளிர் உரிமைத் தொகை மறுக்கப்படுவது ஒருபுறம் இருக்க, மேல்முறையீடு செய்யச் செல்லும் இடங்களில் அவர்கள் நடத்தப்படும் விதம் கண்டிக்கத்தக்கதாகும்.

    கடந்த 18-ந் தேதி முதல் மேல்முறையீடு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. அங்கு அவர்கள் மரியாதைக்குறைவாக நடத்தப்படுவதுடன், தொழில்நுட்பக் குறைபாடு உள்ளிட்ட காரணங்களைக் காட்டி அலைக்கழிக்கப்படுகின்றனர். இது தமிழ்நாட்டு ஏழைக் குடும்பத்து பெண்களிடம் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

    மகளிர் உரிமைத் தொகை என்பதே அனைவருக்கும் அடிப்படை வருவாய் என்ற தத்துவத்தின் அடிப்படையிலானது ஆகும். பல நாடுகளில் இந்த உரிமைத் தொகை திட்டம் அனைவருக்கும் தான் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையிலும் கூட இந்த திட்டம் அனைவருக்கும் செயல்படுத்தப்படும் என்று தான் கூறப்பட்டிருந்ததே தவிர, கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு செயல்படுத்தப்படும் என்று எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை. அதற்கு மாறாக, மொத்த குடும்பங்களின் எண்ணிக்கையில் பாதிக்கும் குறைவாகவும், விண்ணப்பித்தவர்களில் மூன்றில் இரு பங்கிற்கும் குறைவானவர்களுக்கு மட்டும் உரிமைத் தொகை வழங்குவது எந்த வகையிலும் சரியல்ல.

    அதுமட்டுமின்றி, இந்தியாவில் பொது வினியோகத் திட்டத்தை வருமான வரம்பு இல்லாமல் அனைவருக்கும் செயல்படுத்திய முதல் மாநிலம் தமிழ்நாடு தான். அதற்காக உச்சநீதி மன்றத்தின் பாராட்டுகளையும் தமிழகம் பெற்று உள்ளது. அதே அணுகுமுறை தான் மகளிர் உரிமைத் தொகை வழங்குவதிலும் தொடர வேண்டும். அதன் படி, தமிழ்நாட்டில் அரிசி குடும்ப அட்டை வைத்துள்ள அனைத்து குடும்பங்களின் தலைவிகளுக்கும் மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்க வேண்டும். குறைந்த பட்சம், ஏற்கனவே விண்ணப்பித்தவர்களுக்கும், இனி விண்ணப்பிக்க இருப்பவர்களுக்கும் எந்த வகையான கட்டுப்பாடும் இல்லாமல் ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டவர்கள், இணைய சேவை மையங்களை அணுகி மேல்முறையீடு செய்ய வழி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
    • குறுஞ்செய்தி பெறப்பட்ட 30 நாட்களுக்குள் இணைய சேவை மையங்களின் வழியே மேல்முறையீடு செய்யலாம் என்றும் கூறப்பட்டு உள்ளது.

    சென்னை:

    கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் தமிழகம் முழுவதும் நடைமுறைக்கு வந்துள்ளது.

    1.06 கோடி மகளிர் தகுதியானவர்களாக அடையாளம் காணப்பட்டனர். 57 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளன. விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணம், செல்போனுக்கு குறுஞ்செய்தியாக வரும் என அறிவிக்கப்பட்டது.

    நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு கடந்த 18-ந்தேதி முதல் குறுஞ்செய்தி வரும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் பெரும்பாலானவர்களுக்கு குறுஞ்செய்தி வரவில்லை எனக் கூறப்படுகிறது.

    இதனால் விண்ணப்பதாரர்கள் பலர் பதற்றம் அடைந்தனர். தங்களுக்கு ரூ.1000 பணம் கிடைக்காமல் போய் விடுமோ என்று நினைத்தனர். இதையடுத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும், சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகங்களிலும் குவியத் தொடங்கி உள்ளனர்.

    அங்கு அமைக்கப்பட்டு உள்ள உதவி மையங்களில் விண்ணப்பத்தின் நிலை பற்றி விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. இதில் அவ்வப்போது சர்வர் பிரச்சனை எழுவதால் அனைவருக்கும் விண்ணப்ப நிலையை உடனுக்குடன் தெரிந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டவர்கள், இணைய சேவை மையங்களை அணுகி மேல்முறையீடு செய்ய வழி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. குறுஞ்செய்தி பெறப்பட்ட 30 நாட்களுக்குள் இணைய சேவை மையங்களின் வழியே மேல்முறையீடு செய்யலாம் என்றும் கூறப்பட்டு உள்ளது.

    மகளிர் உரிமைத் தொகைத் திட்ட விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்களை விண்ணப்பதாரர்களே அறிந்து கொள்ள தனி இணைய தளம் (https://kmut.tn.gov.in) தொடங்கப்பட்டது. இந்த இணையதளத்தில் ஆதார் எண்ணையும், பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்ணையும் குறிப்பிட்டால் ஒரு முறை பயன்படுத்தும் கடவு எண் கைப்பேசிக்கு வரும். இதைக் கொண்டு விண்ணப்ப நிலையை அறிந்து கொள்ளலாம்.

    இந்த இணையதளம் ஓரிரு நாட்களாக பயன்பாட்டில் இல்லாமல் முடங்கி உள்ளது. இணையதளம் பராமரிப்பில் இருப்பதாகவும், விரைவில் பயன்பாட்டுக்கு வரும் எனவும் இணையப் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனால் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வரப்பெற்றவர்கள், இணைய சேவை மையங்களை நாடினாலும் மேல்முறையீடு செய்ய முடியாத நிலை உள்ளது.

    இதுகுறித்து இணைய சேவை மையத்தினர் கூறுகையில், "மேல்முறையீட்டுக்கான வசதி இணைய சேவை மையங்களில் இதுவரை ஏற்படுத்தித் தரவில்லை. விண்ணப்பத்தின் நிலையை மட்டுமே இலவசமாக பார்த்து விண்ணப்பதாரர்களுக்கு கூறி வருகிறோம்" என்றனர்.

    விண்ணப்பங்களின் நிலையை அறிய வட்டாட்சியர் அலுவலகங்கள், மாநகராட்சி அலுவலகங்களில் மகளிர் குவிந்திருக்க, விண்ணப்பங்கள் நிகாகரிக்கப்பட்டவர்களோ மேல்முறையீடு செய்வது எங்கே என தெரியாமல் தவிக்கிறார்கள்.

    எனவே இதற்கான உரிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு விரைந்து வெளியிட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

    இதற்கிடையே விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டவர்களுக்காக சிறப்பு முகாம்களை நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகத் கூறப்படுகிறது.

    விண்ணப்பப் படிவங்களை வட்டாட்சியர் அலுவலகங்கள், மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் பெற்று, பூர்த்தி செய்த படிவங்களை சிறப்பு முகாம்களில் அளிக்க யோசனைகள் முன் வைக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

    • வங்கி கணக்கில் அரசு ரூ.1000 செலுத்தியதில் பலரது கணக்கில் அவற்றை வங்கிகள் பிடித்தம் செய்து கொண்டன.
    • வங்கியில் 2 வகையான சேமிப்பு கணக்குகள் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது.

    சென்னை:

    தமிழக அரசு சார்பில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்படி குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படுகிறது.

    முதல் கட்டமாக ஒரு கோடியே 6 லட்சம் பெண்கள் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்டுள்ளது.

    வங்கி கணக்கில் அரசு ரூ.1000 செலுத்தியதில் பலரது கணக்கில் அவற்றை வங்கிகள் பிடித்தம் செய்து கொண்டன. கணக்கில் இதுவரையில் பணம் இல்லாமல் பண பரிவர்த்தனை மேற்கொள்ளாமல் இருந்ததால் அபராதமாக பிடிக்கப்பட்டது. இது பெண்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    தங்கள் கணக்கில் செலுத்தப்பட்ட ரூ.1000-ம் குறைந்தபட்சம் இருப்பு வைத்திருக்க வேண்டும் என்ற அடிப்படையில் பலரது வங்கி கணக்கிற்கு பணம் செலுத்தப்பட்டதும் தானாகவே அபராத தொகையாக வசூலிக்கப்பட்டு விட்டன.

    இதனால் இத்திட்டத்தின் பயன் குடும்ப தலைவிகளுக்கு முழுமையாக கிடைக்காமல் போய் விடக்கூடாது என்பதற்காக அரசு வங்கி தலைமை அதிகாரிகளுக்கு தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கை எடுத்தது.

    இந்தநிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு வங்கி ஊழியர் சம்மேளன தலைவர் சி.எச்.வெங்கடாசலம் கடிதம் எழுதி உள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

    மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் தகுதியுள்ள பெண்கள் வங்கி கணக்கில் பணம் செலுத்தியதை எடுக்கும்போது சில கஷ்டங்களும், பிரச்சினைகளும் ஏற்படுகின்றன.

    வங்கியில் 2 வகையான சேமிப்பு கணக்குகள் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது.

    'ஜீரோ பேலன்ஸ்' கணக்கு என்று சொல்லக் கூடியதாகும். அதாவது கணக்கில் சிறு தொகை கூட இருப்பு இல்லாமல் முழுமையாக எடுக்கவும், டெபாசிட் செய்யக்கூடிய வசதியாகும். இவ்வகை வங்கி கணக்கில் இருந்து முழுமையான தொகை எடுத்தாலும கூட அபராதம் எதுவும் வசூலிக்கப்பட மாட்டாது.

    மற்றொரு வகை சாதாரண சேமிப்பு கணக்காகும். இந்த கணக்கில் குறைந்தபட்சம் ரூ.500 அல்லது ரூ.1000 இருப்பு இருக்க வேண்டும். குறைந்தபட்ச இருப்பை விட பணம் குறையும்போது அபராதம் வசூலிக்கப்படும் நடைமுறை உள்ளது.

    வங்கி விதிகளின்படி ஜீரோ பேலன்ஸ் கணக்கை சாதாரண சேமிப்பு கணக்கிற்கு மாற்றலாம். ஆனால் சாதாரண சேமிப்பு கணக்கை ஜீரோ பேலன்ஸ் கணக்கிற்கு மாற்றம் செய்ய இயலாது.

    இத்திட்டத்தில் பெரும்பாலான பயனாளிகள் கொடுத்துள்ள வங்கி கணக்கு சாதாரண சேமிப்பு கணக்காகும். 'ஜீரோ பேலன்ஸ்' கணக்கு வைத்திருக்கவில்லை. அதனால் குறைந்தபட்ச இருப்பு இல்லாத காரணத்திற்காக குறிப்பிட்ட சிறு தொகை அபராதமாக வசூலிக்கப்படுகிறது.

    எனவே வங்கிகள் குறைந்த இருப்பிற்காக வசூலிக்கப்படும் அபராதத்தை தள்ளுபடி செய்ய வேண்டும். அல்லது சாதாரண சேமிப்பு கணக்கு வைத்துள்ள பெண்களின் கணக்கை 'ஜீரோ பேலன்ஸ்' கணக்காக மாற்ற அரசு வங்கிகளுக்கு ஆலோசனை வழங்க வேண்டும்.

    இத்திட்டத்தில் பயன் அடையும் பெண்கள் எவ்வித கஷ்டமும் இல்லாமல் அபராத கட்டணமும் இன்றி முழுமையாக பணத்தை பெற இந்த இரண்டு வழிகளில் ஏதாவது ஒன்றை பின்பற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார்.

    • மகளிர் உரிமைத்தொகை குறுஞ்செய்தி கிடைப்பதில் நடக்கும் குளறுபடியை தவிர்க்க தமிழக அரசு இந்த புதிய இணைய தளத்தை தொடங்கி உள்ளது.
    • மேல்முறையீட்டுக்கு விண்ணப்பிக்க தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள இ-சேவை மையங்கள் மூலமாகத்தான் விண்ணப்பிக்க முடியும்.

    சென்னை:

    தி.மு.க. அரசு தனது தேர்தல் அறிக்கையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என்று அறிவித்தது. இந்த திட்டம் கடந்த 15-ந் தேதி பேரறிஞர் அண்ணா பிறந்த நாளன்று தொடங்கப்பட்டது. காஞ்சீபுரத்தில் நடந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கிவைத்து மகளிருக்கு ரூ.1,000 உதவித்தொகைக்கான ஆணை மற்றும் அதற்கான பிரத்யேக ஏ.டி.எம். கார்டுகளை வழங்கினார்.

    தமிழகம் முழுவதும் 1 கோடியே 6 லட்சம் பேருக்கு இந்த மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டுள்ளது. அதாவது விண்ணப்பித்தவர்களில் 65 சதவீதம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. 35 சதவீத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளன. எனவே தகுதி இருந்தும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டால் அவர்கள் மேல்முறையீடு செய்யலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

    இதற்கிடையே மகளிர் உரிமைத்தொகைக்கான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது ஏன்? என்பதை தெரிந்து கொள்ளும் வகையில் https://kmut.tn.gov.in என்ற புதிய இணையதளம் ஒன்றை தமிழக அரசு தொடங்கி உள்ளது.

    இதுதொடர்பாக அதிகாரிகள் கூறியதாவது:-

    அரசு உருவாக்கி உள்ள இந்த புதிய இணையதளம் மூலம் மகளிர் உரிமைத்தொகை தனக்கு எதனால் கிடைக்கவில்லை என்பதை தாங்களாகவே தெரிந்து கொள்ளலாம். அதாவது அந்த இணையதளத்தில் ஆதார் எண்ணை உள்ளீடு செய்ய வேண்டும். அதில் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பத்தில் கொடுத்த ஆதார் எண்ணை பதிவிட வேண்டும். ஆதாருடன் இணைக்கப்பட்ட செல்போன் எண்ணுக்கு ஓ.டி.பி. வரும். அதை வைத்து என்ன காரணத்துக்காக பணம் வரவில்லை என்பதை பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம்.

    மகளிர் உரிமைத்தொகை குறுஞ்செய்தி கிடைப்பதில் நடக்கும் குளறுபடியை தவிர்க்க தமிழக அரசு இந்த புதிய இணைய தளத்தை தொடங்கி உள்ளது. நேற்று மதியம் முதல் பயன்பாட்டுக்கு வந்த இந்த புதிய இணையதள பணிகள் இன்னும் முழுமையடைவில்லை.

    அந்த பணிகள் இன்னும் ஓரிரு நாளில் முடிவடையும். அதன்பிறகு எந்தவொரு சிக்கலும் இல்லாமல் மகளிர் உரிமைத்தொகை வராதது ஏன் என்பதை மட்டும் தெரிந்து கொள்ளலாம்.

    இதுதொடர்பான மேல்முறையீட்டுக்கு விண்ணப்பிக்க தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள இ-சேவை மையங்கள் மூலமாகத்தான் விண்ணப்பிக்க முடியும். அப்படி மேல்முறையீட்டுக்கு விண்ணப்பிக்கும் போது எந்தவொரு கட்டணமும் வசூலிக்கப்படாது. இதுதொடர்பாக அந்தந்த இ-சேவை மையங்களுக்கு கட்டணம் எதுவும் வசூலிக்க கூடாது எனவும் அரசு சார்பில் அறிவுறுத்தி உள்ளோம்.

    இவ்வாறு அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×