search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vairamuthu"

    • ஸ்ரீபதிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
    • உன் முறுக்கிய முயற்சியில் இருக்கிற சமூகம் பாடம் கற்கட்டும்.

    சென்னை:

    திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையை அடுத்த புலியூர் கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீபதி (வயது 23) என்ற பழங்குடியின பெண் சிவில் நீதிபதியாக தேர்வாகி உள்ளார். இவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் கவிஞர் வைரமுத்துவுக்கும் ஸ்ரீபதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வைரமுத்து எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    இரும்பைப் பொன்செய்யும்

    இருட்கணம் எரிக்கும்

    சனாதன பேதம்

    சமன் செய்யும்

    ஆதி அவமானம் அழிக்கும்

    விலங்குகட்குச் சிறகுதரும்

    அடிமைப் பெண்ணை

    அரசியாக்கும்

    விளக்குமாறு விளங்கிய கையில்

    செங்கோல் வழங்கும்

    கல்வியால் நேரும்

    இவையென்று காட்டிய

    பழங்குடிப் பவளமே ஸ்ரீபதி

    உன் முறுக்கிய முயற்சியில்

    இருக்கிற சமூகம்

    பாடம் கற்கட்டும்

    வளர்பிறை வாழ்த்து!


    • மாநில சுயாட்சிக்கான காரணங்கள் இன்னும் காலமாகிவிடவில்லை.
    • நிழல் விழுந்தால் பொருள் இருக்கிறது என்று பொருள்.

    சென்னை:

    பேரறிஞர் அண்ணாவின் 55-வது நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி கவிஞர் வைரமுத்து எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    இருமொழிக்கொள்கை

    இறந்துபடவில்லை

    மாநில சுயாட்சிக்கான

    காரணங்கள் இன்னும்

    காலமாகிவிடவில்லை

    பகுத்தறிவின் வேர்கள்

    பட்டுவிடவில்லை

    இனமானக் கோட்டை

    இற்றுவிடவில்லை

    சமூக நீதிக்கொள்கை

    அற்றுவிடவில்லை

    மதவாத எதிர்ப்பு

    மாண்டுவிடவில்லை

    எப்படி நீமட்டும்

    இறந்துபடுவாய் அண்ணா?

    நிழல் விழுந்தால்

    பொருள் இருக்கிறது

    என்று பொருள்

    லட்சியம் வாழ்ந்தால்

    அந்த மனிதன் வாழ்கிறான்

    என்று பொருள்

    இன்னும் நீ இருக்கிறாய்

    அண்ணா!

    எங்கள் கொள்கை வணக்கம்

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


    • பின்னணி பாடகியாக வலம் வந்தவர் பவதாரிணி.
    • இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்.

    இளையராஜாவின் மகளும் பின்னணி பாடகியுமான பவதாரிணி பல பாடல்களை பாடியுள்ளார். மேலும் சில படங்களுக்கு இசையமைத்தும் உள்ளார். இவரது கணவர் விளம்பர நிர்வாகியாக உள்ளார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.


    47 வயதான பாடகி பவதாரிணி புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர். இவர் ஆயுர்வேத மருத்துவ சிகிச்சைக்காக இலங்கைக்கு அழைத்து செல்லப்பட்டார். கடந்த 5 மாதங்களாக உடல் நல பிரச்சனையில் இருந்த பவதாரிணி இலங்கையில் நேற்று காலமானார். இவரது மறைவு திரைத்துறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது உடல் இன்று மாலை சென்னைக்கு கொண்டு வரப்படுகிறது.


    இவரது மறைவிற்கு திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "தேசிய விருதுபெற்ற

    பாடகி பவதாரிணியின் மறைவு

    அதிர்ச்சியும் கவலையும் தருகிறது

    துயர்ப்படும்

    உள்ளங்களுக்கெல்லாம்

    ஆழ்ந்த இரங்கல்" என்று குறிப்பிட்டுள்ளார்.


    • மும்மொழி கொள்கை என்றால் திணிப்பு என்பதே தமிழர்களின் தீர்க்கமான எண்ணம்.
    • இந்தி திணிக்கப்படாத வரை கற்க வேண்டியவர்கள் கற்றுக் கொள்வார்கள்.

    திருவள்ளுவர் தினத்தையொட்டி சென்னை பெசன்ட் நகரில் அமைந்துள்ள, சென்னை மாநகராட்சி பூங்காவில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு கவிப்பேரரசு வைரமுத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,

    ஆண்டுக்கு ஆண்டு திருவள்ளுவர் திருநாளுக்கு பெருகி வரும் ஆதரவு திருவள்ளுவரின் செல்வாக்கு பெருகுவதை காட்டுகிறது. திருவள்ளுவர் பண்பாட்டின் வரலாற்று அடையாளம். கடந்த வாரம் அதிகம் பேசப்பட்ட இரு மொழி கொள்கை குறித்து பேச வேண்டும். திருக்குறளை படிக்கும்போது நாங்கள் தமிழையே படிக்கிறோம். மும்மொழி கொள்கை என்றால் திணிப்பு என்பதே தமிழர்களின் தீர்க்கமான எண்ணம் எனக் கூறினார்.

    இந்தி திணிக்கப்படாத வரை கற்க வேண்டியவர்கள் கற்றுக் கொள்வார்கள். இங்கிருந்து வட மாநிலத்திற்கு செல்வர்கள் இந்தியை கற்றுக் கொள்கிறார்கள். அங்கிருந்து இங்கு தொழிலுக்காக வருபவர்கள் தமிழை கற்றுக் கொள்கிறார்கள். மூன்றாவது மொழி என்பது சூழலாலே உருவாகிறது என்றார்.

    எப்படி கரையான் புகுந்து ஒரு மரத்தை அரிக்கிறதோ, அதுபோல் வடமொழி நிலத்தை அரித்து விட்டது. அப்படி நாங்கள் அதிகம் இழந்திருக்கிறோம். இனியும் எங்கள் மொழியையும், நிலத்தையும், இனத்தையும் இழக்க தயாராக இல்லை. இந்தி மொழி மீது எங்களுக்கு கோபம் இல்லை. அச்சம் தான் உள்ளது. இந்த நியாயமான அச்சத்தை உலகம் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

    மேலும், இந்தி மொழியை திணித்து தமிழர்களுக்கு அச்சத்தை கொடுக்காமல் பாதுகாப்பை கொடுக்க வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக் கொள்கிறோம் என்றார்.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட, முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் பெற்றுக் கொண்டர்.
    • விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவிஞர் வைரமுத்துவை பாராட்டி பேசினார்.

    சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் கவிஞர் வைரமுத்து எழுதிய 'மகா கவிதை' நூல் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.

    இந்த நூலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட, முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் பெற்றுக் கொண்டர்.

    விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவிஞர் வைரமுத்துவை பாராட்டி பேசினார். அப்போது, மழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு தொடர்பாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    வானிலை மைய அதிகாரிகள் அதிகனமழை பெய்யும் என சொன்னார்களே தவிர, எவ்வளவு மழை பெய்யும் என சொல்லவில்லை. 100 ஆண்டுகள் இல்லாத மழை பெய்தது என்கிறார்கள். ஆனால், அவ்வளவு மழை பெய்ததற்கான காரணத்தை யாரும் சொல்லவில்லை. ஏரி உடைந்ததைப் போல், வானம் உடைந்து கொட்டியது போல மழை பெய்துள்ளது.

    காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. சுற்றுச்சூழலில் தமிழ்நாடு அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள காலநிலை மாற்ற நிர்வாகக் குழு எனது தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • 1979-ம் ஆண்டு எம்.ஏ.காஜாவின் இயக்கத்தில் வெளியான `இனிக்கும் இளமை’ படத்தில் நடித்து, தன் திரைப்பயணத்தைத் தொடங்கியவர் விஜயகாந்த்.
    • விஜயகாந்தின் நூறாவது படமான ‘கேப்டன் பிரபாகரன்’ நூறுநாள் கடந்தும் வெற்றிகரமாக ஒடி வசூலில் பெரும் சாதனைப் படைத்தது.

    ஏழைப் பங்காளனாகவும், கோபக்கார இளைஞனாகவும், ஆக்ஷன் படங்களிலும், புரட்சிப் படங்களிலும் நடித்த நடிகர் விஜயகாந்த். சிறு வயது முதல் சினிமா பார்க்கிற வாய்ப்பு அமைந்ததால், பார்த்த சினிமாக்களை நண்பர்களிடம் காட்சிவாரியாக பேசி மகிழ்வார். அதிலும் எம்.ஜி.ஆரின் ஆக்ஷன் படங்கள் அவரை வெகுவாக கவர்ந்தன. அந்தப் படங்களை பலமுறைப் பார்த்து ரசித்திருக்கிறார்.



    பல்வேறு அவமானங்கள், புறக்கணிப்புகளுக்கு மத்தியில், 1979-ம் ஆண்டு எம்.ஏ.காஜாவின் இயக்கத்தில் வெளியான `இனிக்கும் இளமை' படத்தில் நடித்து, தன் திரைப்பயணத்தைத் தொடங்கிய விஜயகாந்த், அதன் பிறகு அன்னக்கிளி ஆர்.செல்வராஜின் அகல்விளக்கு படத்தில் கதாநாயகனாக அறிமுகமானாலும், அவருக்கு முதல் வெற்றிகரமான படம் என்றால், அது எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய சட்டம் ஒரு இருட்டறை படம்தான்.


    தமிழில் மிகப்பரிய வெற்றிப் படமாக அமைந்த அந்தப் படத்தை தெலுங்கு மொழியிலும் சிரஞ்சீவி நடிக்க இயக்கினர், எஸ்.ஏ.சந்திரசேகர். அந்தப் படம் இந்திக்கும் சென்று அமிதாப்பச்சன் நடிப்பில் உருவானது. இந்தப் படத்தைத் தொடர்ந்து சிவப்பு மல்லி', 'நெஞ்சிலே துணிவிருந்தால்', 'சாதிக்கொரு நீதி', 'பட்டணத்து ராஜாக்கள்', 'சாட்சி', 'நீதியின் மறுபக்கம்', 'வசந்தராகம்' எனத் தொடர்ந்து வெற்றிப்படங்களைக் கொடுத்து தமிழின் முன்னணிக் கதாநாயகனாக வலம்வந்தார்.


    வைதேகி காத்திருந்தாள், அம்மன் கோவில் கிழக்காலே, நினைவே ஒரு சங்கீதம்', 'ஊமை விழிகள்', 'கூலிக்காரன்' , 'உழவன் மகன்', 'தெற்கத்திக் கள்ளன்', 'பூந்தோட்ட காவல் காரன்', 'செந்தூரப்பூவே' 'புலன் விசாரணை', 'சின்ன கவுண்டர்', 'வானத்தைப்போல', 'ரமணா', 'சொக்கத்தங்கம்' என எண்ணற்ற படங்கள் விஜயகாந்தின் வெற்றி மகுடத்தை அலங்கரித்துள்ளன. பல நடிகர்களுக்கு நூறாவது படம் வெற்றிப் பெற்றதில்லை. ஆனால், விஜயகாந்தின் நூறாவது படமான 'கேப்டன் பிரபாகரன்' நூறுநாள் கடந்தும் வெற்றிகரமாக ஒடி வசூலில் பெரும் சாதனைப் படைத்தது.


    இவர் நடிகராக மட்டுமல்லாமல் தேமுதிக கட்சியின் தலைவராகவும் இருந்தார். விஜயகாந்த் நேற்று முன்தினம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் ஓரிரு நாளைக்குள் வீடு திரும்புவார் என்றும் தேமுதிக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.

    இதையடுத்து விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டது. விஜயகாந்தின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.


    இதையடுத்து மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் இன்று காலமானார். இவரது மறைவிற்கு திரையுலகினர் பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், கவிஞர் வைரமுத்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "எரிமலை எப்படிப் பொறுக்கும்

    என்ற என் பாடலுக்கு

    உயிர்கொடுத்த கதாநாயகன்

    உயிரிழந்து போனார்

    திரையில் நல்லவர் ;

    அரசியலில் வல்லவர்

    சினிமாவிலும் அரசியலிலும்

    'டூப்' அறியாதவர்

    கலைவாழ்வு பொதுவாழ்வு

    கொடை மூன்றிலும்

    பாசாங்கு இல்லாதவர்

    கலைஞர் ஜெயலலிதா என

    இருபெரும் ஆளுமைகள்

    அரசியல்செய்த காலத்திலேயே

    அரசியலில் குதித்தவர்

    எதிர்க்கட்சித் தலைவர் என்ற

    உயரம் தொட்டவர்

    உள்ளொன்று வைத்துப்

    புறமொன்று பேசாதவரை

    நில்லென்று சொல்லி

    நிறுத்திவிட்டது காலம்

    வருந்துகிறேன்

    கண்ணீர் விடும்

    குடும்பத்தார்க்கும்

    கதறி அழும்

    கட்சித் தொண்டர்களுக்கும்

    என் ஆழ்ந்த இரங்கலைத்

    தெரிவித்துக் கொள்கிறேன்" என்று வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார்.


    • கிறிஸ்தவ தேவாலயங்களில், நள்ளிரவு முதல் சிறப்பு வழிபாடு, பிரார்த்தனை நடைபெற்று வருகிறது.
    • இந்த நெறிகளை மதம் சார்ந்தும் வாழலாம்; மதம் கடந்து மனம் சார்ந்தும் வாழலாம்...

    சென்னை :

    கிறிஸ்துமஸ் விழா உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதிலும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில், நள்ளிரவு முதல் சிறப்பு வழிபாடு, பிரார்த்தனை நடைபெற்று வருகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கிறிஸ்துவ மக்களுக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில், கவிஞர் வைரமுத்து இன்று தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    சகிப்புத்தன்மை

    சகமனிதனை மதித்தல்

    தன்னுயிர் போலவே

    மண்ணுயிர் பேணுதல்

    என்பனவெல்லாம்

    நீதி மொழிகள் அல்ல;

    ஏசு பெருமான்

    வாழ்ந்து காட்டிய

    வாழ்வியல் நெறிகள்


    இந்த நெறிகளை

    மதம் சார்ந்தும் வாழலாம்;

    மதம் கடந்து

    மனம் சார்ந்தும் வாழலாம்


    தத்துவம் தந்த

    உத்தமர் பிறந்தநாள்

    வாழ்த்திக்கொள்ள மட்டுமல்ல

    வாழ்வதற்கும்


    இவ்வாறு தனது வாழ்த்து செய்தியில் வைரமுத்து கூறியுள்ளார்.

    • இந்தி பேசாதவர் இந்தியர் இல்லை என்று அரசமைப்பில் இருக்கிறதா?
    • இந்தி பேசும் மாநிலங்களிலேயே இந்தி கல்லாதார் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?

    கோவா விமான நிலையத்தில் தமிழ்ப் பெண் ஒருவரிடம் இந்தியில் பேசி, அவர் இந்தி தெரியாது என்று சொன்னதும் "தமிழ்நாடு இந்தியாவில்தானே இருக்கிறது" என்றும், "இந்தியாவில் உள்ள அனைவரும் இந்தியைக் கற்றாக வேண்டும்" என்றும் பாதுகாப்புப் படை வீரர் மிரட்டும் தொனியில் பேசியுள்ளார். இச்சம்பவத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக கவிஞர் வைரமுத்து இன்று தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது,

    இந்தி பேசாதவர்

    இந்தியர் இல்லை என்று

    அரசமைப்பில் இருக்கிறதா?


    இந்தியா என்ற நாடு

    இந்தி என்ற

    சொல்லடியில்தான் பிறந்ததா?


    எல்லா மாநிலங்களிலும்

    புழங்குவதற்கு

    இந்தி மொழியென்ன

    இந்தியக் கரன்சியா?


    இந்தி பேசும் மாநிலங்களிலேயே

    இந்தி கல்லாதார் எண்ணிக்கை

    எவ்வளவு தெரியுமா?


    வடநாட்டுச் சகோதரர்கள்

    தமிழ்நாட்டுக்குள் வந்தால்

    தமிழ் தெரியுமா என்று

    தெள்ளு தமிழ் மக்கள்

    எள்ளியதுண்டா?


    சிறுநாடுகளும்கூட

    ஒன்றுக்கு மேற்பட்ட

    ஆட்சிமொழிகளால்

    இயங்கும்போது

    இந்தியாவை

    ஓர் ஒற்றை மொழிமட்டும்

    கட்டியாள முடியுமா?


    22 பட்டியல் மொழிகளும்

    ஆட்சிமொழி ஆவதுதான்

    வினாத் தொடுத்த காவலர்க்கும்

    விடைசொன்ன

    தமிழச்சிக்குமான ஒரே தீர்வு


    இவ்வாறு வைரமுத்து கூறியுள்ளார்.

    • புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பிரபலங்கள் பலர் உதவி செய்து வருகின்றனர்.
    • நடிகர்கள் பலர் நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கி வருகின்றனர்.

    கடந்த சில நாட்களாக 'மிச்சாங்' புயல் காரணமாக சென்னை நகரின் பெரும்பாலான பகுதிகள் மழைநீரால் சூழப்பட்டுள்ளன. மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் வழங்கும் பணிகள் அரசு சார்பில் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

    இதைத்தொடர்ந்து, பல திரைப்பிரபலங்களும் புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு, தண்ணீர் என தங்களது உதவிக்கரத்தை நீட்டி வருகின்றனர். மேலும், நடிகர்கள் பலர் நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கி வருகின்றனர்.


    இந்நிலையில், கவிஞர் வைரமுத்து முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ஒரு லட்ச ரூபாய் வழங்கியுள்ளார். இதனை அவர் தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளார். அந்த பதிவில், "'தண்ணீர் தண்ணீர்

    எங்கணும் தண்ணீர்

    குடிக்கத்தான் இல்லை ஒருதுளி'

    எனும் ஆங்கிலக் கவிதை

    நினைவின் இடுக்கில் கசிகிறது

    வீட்டுக்குத் தண்ணீர் இல்லை

    என்பது சிறுதுயரம்

    வீட்டுக்குள்ளேயே தண்ணீர்

    என்பது பெருந்துயரம்

    விடியும் வடியும் என்று

    காத்திருந்த

    பெருமக்களின் துயரத்தில்

    பாதிக்கப்படாத நானும்

    பங்கேற்கிறேன்

    என் கடமையின் அடையாளமாக

    முதலமைச்சரின்

    பொது நிவாரண நிதிக்கு

    ஒரு லட்ச ரூபாய் வழங்குகிறேன்

    பொருள்கொண்டோர்

    அருள்கூர்க

    சக மனிதனின் துயரம்

    நம் துயரம்

    இடர் தொடராதிருக்க

    இனியொரு விதிசெய்வோம்;

    அதை எந்தநாளும் காப்போம்" என்று குறிப்பிட்டுள்ளார்.


    • வைரமுத்து பல படங்களுக்கு பாடல் எழுதி வருகிறார்.
    • அந்த வரிசையில் சீனு ராமசாமி படத்திற்கும் பாடல் எழுதுகிறார்.

    1980-ஆம் ஆண்டு வெளியான நிழல்கள் படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானவர் வைரமுத்து. அதன்பின்னர் ரஜினி, கமல், பிரசாந்த், அஜித், விஜய், சூர்யா, தனுஷ் என தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள் பலரின் படங்களுக்கு பாடல்களை எழுதி ரசிகர்களை கவர்ந்தார். இவர் முதல் மரியாதை, ரோஜா, கருத்தம்மா, பவித்ரா, சங்கமம், கண்ணத்தில் முத்தமிட்டால், தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை உள்ளிட்ட படங்களுக்காக சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதை பெற்றார்.



    வைரமுத்து தற்போது பல படங்களுக்கு பிசியாக பாடல் எழுதி வருகிறார். அந்த வரிசையில் இயக்குனர் சீனு ராமசாமி படத்திற்கும் பாடல் எழுதியுள்ளார். இது குறித்து அவர் தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "சீனுராமசாமி

    நல்லதொரு கதைசொல்லி

    அவள் பானை விற்கிறவள்;

    இவன் கோழி விற்கிறவன்

    பானைக்காரிக்குக்

    கோழிக்காரன்மீது

    ஒருதலைக் காதல்

    அவனோ

    வாழ்வில் நொந்துபோனவன்;

    பால்யத்தில் நரைத்தவன்

    அவளுக்குப் புரிகிற மொழியில்

    காதலை நிராகரிக்க வேண்டும்

    அதுதான் பாட்டு

    ரகுநந்தன் மெட்டுக்கு

    வட்டார வழக்கில்

    எழுதினேன்

    அவரவர் தொழில்வழி

    இயங்கியது தமிழ்:

    "ஒடைஞ்ச பானைக்கு

    ஒலை எதுக்கு? – அடி

    அறுத்த கோழிக்கு

    அடை எதுக்கு?"

    படித்ததும் –

    சீனிச்சேவு

    சாப்பிட்ட குழந்தைமாதிரி

    சிரித்தார் சீனு" என்று குறிப்பிட்டுள்ளார்.


    • கையெழுத்து இயக்கத்தில் எல்லா தரப்பினரும் கலந்து கொள்ள வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
    • கவிஞர் வைரமுத்துவும் நீட் தேர்வுக்கு எதிரான இந்த இயக்கத்தில் பங்கேற்று கையெழுத்திட்டார்.

    சென்னை:

    நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தி.மு.க. இளைஞரணி, மாணவரணி, மருத்துவ அணி சார்பில் மாபெரும் கையெழுத்து இயக்கம் மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் நபராக கையெழுத்து போட்டு இயக்கத்தை தொடங்கி வைத்தார். நீட் தேர்வுக்கு எதிரான இந்த கையெழுத்து இயக்கத்தில் எல்லா தரப்பினரும் கலந்து கொள்ள வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

    தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்கள் இந்த இயக்கத்தில் பங்கேற்று கையெழுத்திட்டனர்.

    இதையொட்டி கவிஞர் வைரமுத்துவும் நீட் தேர்வுக்கு எதிரான இந்த இயக்கத்தில் பங்கேற்று கையெழுத்திட்டார். இதுகுறித்து அவர் பதிவிட்ட கருத்துக்கள் வருமாறு:-

    நீட் தேர்வுக்கு எதிராக எனது கையெழுத்து இடம் பெறுவதில் மகிழ்ச்சி. தேர்வு எழுதியே மாணவர்கள் வாழ்நாள் கழிந்து விடுகிறது. கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும். நீட் தேர்வு சமூகத்திற்கு எதிரானது. சமூக நீதிக்கு எதிரானது. மாணவர்களுக்கு எதிரானது என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.

    • இ.வி.கணேஷ்பாபு, இயக்கி நடித்துள்ள திரைப்படம் “கட்டில்”.
    • இப்படத்திற்கு ஶ்ரீகாந்த்தேவா இசையமைத்துள்ளார்.

    பிரபல எடிட்டர் பி.லெனின் கதை, திரைக்கதையில், இ.வி.கணேஷ்பாபு, இயக்கி நடித்துள்ள திரைப்படம் "கட்டில்". மேப்பிள் லீப்ஸ் புரொடக்ஷன்ஸ் (Maple Leafs Productions) தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஶ்ரீகாந்த்தேவா இசையமைத்துள்ளார். வைட் ஆங்கிள் ரவிசங்கர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இவ்விழாவினில் தமிழ் திரையுலகின் முன்னணி பிரபலங்கள் பலர் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.

    இந்த நிகழ்ச்சியில் கவிஞர் வைரமுத்து பேசியதாவது, கட்டில் மாதிரியான சிறு படங்கள் ஓடினால் தான் தமிழ் சினிமாவிற்கு நல்லது. இது மாதிரி படங்களில் தான் புதிய கலைஞர்கள் நமக்கு கிடைப்பார்கள். பெரிய படங்கள் திட்டமிட்டுப் பார்க்க வைக்கப்படுகிறது, துப்பாக்கி சத்தங்களுக்கு மத்தியில் கணேஷ்பாபு புல்லாங்குழல் வாசித்துக் கொண்டிருக்கிறார். சிறு படங்கள் தான் நம்மைச் சிறகடித்துப் பறக்கவைக்கும் நம் சிந்தனையை வளர்க்கும். பழைய படங்களின் போஸ்டர் பார்த்தால் அதில் எல்லாமே பெண்களும் முக்கியமாக இடம் பெற்றிருப்பார்கள்.


    ஆனால், இப்போது சினிமாக்களில் பெண்களின் படங்களைப் பார்க்க முடிகிறதா? பெண்ணுக்கு சரிசமமான இடம் தந்த சினிமா தான் தமிழ் சினிமாவின் பொற்காலம், அந்த பொற்காலத்தை தன் கட்டில் மூலம் மீட்டுக்கொண்டு வந்திருக்கிறார் கணேஷ்பாபு . இது மாதிரியான சின்னப்படங்கள் ஜெயிப்பது தான் மக்களுக்கு மகிழ்வைத்தரும் என் போல் சமூக செயல்பாட்டாளர்கள் அதைத்தான் ஆசைப்படுகிறோம். கண்ணதாசன், வாலி இருந்தபோது அவர்களோடு போட்டி போட்டு அவர்களோடு நான் நின்றேன் அவர்களை ஜெயிக்க முடியாது எனத் தெரியும், ஆனால் அவர்களோடு நானும் இருக்கிறேன் என நின்றேன்.

    அது மட்டும் போதுமா ? இப்போது நான் மதன்கார்கியோடு போட்டிபோடுகிறேன். அவரை ஆஸ்திரேலியாவிற்கு படிக்க அனுப்பினேன். விஞ்ஞானம் படித்துவிட்டு வந்து பேராசிரியர் ஆனார். ஆனால் எனக்குப் போட்டியாக வருவார் என நினைக்கவில்லை. இந்தப்படத்தில் அருமையான வரிகள் தந்துள்ளார். அவருக்கு இந்தப்படத்திற்குத் தேசியவிருது கிடைக்க வாழ்த்துக்கள். கணேஷ்பாபு நினைவுகளின் வலியை இப்படம் மூலம் பதிவு செய்துள்ளார். அவர் வெற்றி பெற வாழ்த்துக்கள் என்று பேசினார்.

    ×