search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    இந்தி மொழி மீது எங்களுக்கு கோபம் இல்லை, அச்சம் தான் உள்ளது - வைரமுத்து
    X

    "இந்தி மொழி மீது எங்களுக்கு கோபம் இல்லை, அச்சம் தான் உள்ளது" - வைரமுத்து

    • மும்மொழி கொள்கை என்றால் திணிப்பு என்பதே தமிழர்களின் தீர்க்கமான எண்ணம்.
    • இந்தி திணிக்கப்படாத வரை கற்க வேண்டியவர்கள் கற்றுக் கொள்வார்கள்.

    திருவள்ளுவர் தினத்தையொட்டி சென்னை பெசன்ட் நகரில் அமைந்துள்ள, சென்னை மாநகராட்சி பூங்காவில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு கவிப்பேரரசு வைரமுத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,

    ஆண்டுக்கு ஆண்டு திருவள்ளுவர் திருநாளுக்கு பெருகி வரும் ஆதரவு திருவள்ளுவரின் செல்வாக்கு பெருகுவதை காட்டுகிறது. திருவள்ளுவர் பண்பாட்டின் வரலாற்று அடையாளம். கடந்த வாரம் அதிகம் பேசப்பட்ட இரு மொழி கொள்கை குறித்து பேச வேண்டும். திருக்குறளை படிக்கும்போது நாங்கள் தமிழையே படிக்கிறோம். மும்மொழி கொள்கை என்றால் திணிப்பு என்பதே தமிழர்களின் தீர்க்கமான எண்ணம் எனக் கூறினார்.

    இந்தி திணிக்கப்படாத வரை கற்க வேண்டியவர்கள் கற்றுக் கொள்வார்கள். இங்கிருந்து வட மாநிலத்திற்கு செல்வர்கள் இந்தியை கற்றுக் கொள்கிறார்கள். அங்கிருந்து இங்கு தொழிலுக்காக வருபவர்கள் தமிழை கற்றுக் கொள்கிறார்கள். மூன்றாவது மொழி என்பது சூழலாலே உருவாகிறது என்றார்.

    எப்படி கரையான் புகுந்து ஒரு மரத்தை அரிக்கிறதோ, அதுபோல் வடமொழி நிலத்தை அரித்து விட்டது. அப்படி நாங்கள் அதிகம் இழந்திருக்கிறோம். இனியும் எங்கள் மொழியையும், நிலத்தையும், இனத்தையும் இழக்க தயாராக இல்லை. இந்தி மொழி மீது எங்களுக்கு கோபம் இல்லை. அச்சம் தான் உள்ளது. இந்த நியாயமான அச்சத்தை உலகம் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

    மேலும், இந்தி மொழியை திணித்து தமிழர்களுக்கு அச்சத்தை கொடுக்காமல் பாதுகாப்பை கொடுக்க வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக் கொள்கிறோம் என்றார்.

    Next Story
    ×