search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "soldier"

    • ராணுவ வீரரான தாகலே இடிபாடுகளில் சிக்கி கொண்டார்.
    • அதிர்ச்சி அடைந்த சக வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    கவுகாத்தி:

    அருணாசலபிரதேசத்தின் தவாங் பகுதியில் மராட்டியம் மாநிலம் ரத்தினகிரி மாவட்டத்தை சேர்ந்த ராணுவவீரரான தாகலே உள்ளிட்ட குழுவினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது திடீரென அப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ராணுவ வீரரான தாகலே இடிபாடுகளில் சிக்கி கொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த சக வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆனாலும் அவரை உடனடியாக மீட்க முடியவில்லை.

    இதைத்தொடர்ந்து அங்கு சிறப்பு உபகரணங்களுடன் மீட்பு குழுவினர் விரைந்து சென்று ராணுவவீரர் தாகலேவை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

    மீட்புகுழுவினரின் தீவிர போராட்டத்தின் காரணமாக 5 நாட்களுக்கு பிறகு தாகலே சடலமாக மீட்கப்பட்டார். உடலை பிரேத பரிசோதனைக்காக தவாங்கில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    பலியான ராணுவவீரர் தாகலேவுக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.

    • வாலிபர் பெண் போலீசை தகாத வார்த்தைகளால் பேசி கன்னத்தில் தாக்கியதாக கூறப்படுகிறது.
    • காயமடைந்த பிஸ்மி அல்மேரிஸ் தருமபுரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், அரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டரின் ஜீப் டிரைவராக பணிபுரிந்து வருபவர் பிஸ்மி அல்மேரிஸ்.

    நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து தனது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு புறப்பட்டுள்ளார். எதிரில் மற்றொரு இருசக்கர வாகனத்தில் ஒரு வாலிபர் நேராக மோதுவது போல வந்துள்ளார்.

    இதனை பிஸ்மி அல்மேரிஸ் அவரை தடுத்து நிறுத்தி கண்டித்துள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் பெண் போலீசை தகாத வார்த்தைகளால் பேசி கன்னத்தில் தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதில் காயமடைந்த பிஸ்மி அல்மேரிஸ் தருமபுரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து அவர் அரூர் போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் பெண் போலீசை தாக்கியவர் அரூர் அருகேயுள்ள பொய்யப்பட்டியை சேர்ந்த கருணாநிதி (எ) காளிதாஸ் (வயது 29) என்பதும், ராணுவ வீரரான அவர் விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளதும் தெரிய வந்தது.

    இதையடுத்து அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பெண் போலீசை ராணுவ வீரர் தாக்கிய சம்பவம் போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    நகையை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஊர்க்காவல் படை வீரர்

    புதச்சேரி:

    காரைக்கால் மாவட்ட காவல் துறையில், ஊர்க்காவல்படை வீரராக பணிபுரிந்து வருபவர் ராஜேஷ்கண்ணா. இவர் நேற்று முன்தினம், காரைக்கால் காத்தா பிள்ளை கோடி சிக்னலில் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது ரூ. 75 ஆயிரம் மதிப்புடைய தங்க செயின் ஒன்று சாலையில் கிடந்துள்ளது.

    இதனை கண்டெடுத்த ராஜேஷ் கண்ணா, உரிய விசாரணை மற்றும் காவல்துறை தலைமையகம் உத்தரவின் பேரில், உரியவரிடம் ஒப்படைத்தார். இதுகுறித்து தகவல் அறிந்த காரைக்கால் மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு லோகேஸ்வரன் ராஜேஷ் கண்ணாவை பொன்னாடை போர்த்தி பாராட்டினார். விபரம் அறிந்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களும் ராஜேஷ் கண்ணாவை பாராட்டி வருகின்றனர். இந்த விவரம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    • ராணுவ வீரர் கவுரவிப்பு நிகழ்ச்சி நடந்தது.
    • இதில் மாவட்டத்திலேயே ‘‘குப்பை இல்லா தூய்மை பேரூராட்சியாக’’ மாற அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா நெற்குப்பை பேரூராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் 74-ஆவது குடியரசு தின விழா நடந்தது. செயல் அலுவலர் வே.கணேசன் முன்னிலை வகித்தார். பேரூராட்சி மன்ற தலைவர் அ.புசலான் தேசியக்கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியதுடன், நகரின் தூய்மை குறித்து பேசினார்.

    பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத பேரூராட்சியாக மாற அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். முன்னாள் ராணுவ வீரர் சூரியகுமாருக்கு பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டது. இளநிலை உதவியாளர் சேரலாதன், வரித்தண்டலர் துரைராஜ், கவுன்சிலர்கள் கண்ணன், தனபாக்கியம், சேக்கப்பன், அழகு, அமுதா, நிகார்பானு, சித்ரா, தூய்மை பணி மேற்பார்வையாளர் சிற்றரசு மற்றும் அலுவலக பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், ஊர் முக்கியஸ்தர்கள், மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.

    இதில் மாவட்டத்திலேயே ''குப்பை இல்லா தூய்மை பேரூராட்சியாக'' மாற அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    • கோவை விமான நிலையத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட கலெக்டர் சமீரன் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
    • காலை 9 மணிக்கு கோவை ராணுவ பிரதேசப்படை மூலம் இவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, அவரது மனைவியிடம் தேசியக்கொடி ஒப்படைக்கும் நிகழ்வு நடைபெற்றது.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே காரமடை தேவி நகரை சேர்ந்தவர் மைக்கேல்சாமி (48). ராணுவ வீரர்.

    இவர் புனேயில் உள்ள ராணுவ மையத்தில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் சிக்கிம் மாநிலத்தில் உள்ள கூர்க்கா படை பிரிவுக்கு பணியிட மாறுதல் செய்யப்படடார்.

    இதையடுத்து 20 நாள் விடுமுறையில் காரமடையில் உள்ள தனது வீட்டுக்கு வந்து விட்டு கடந்த 4-ந் தேதி சிக்கிம் புறப்பட்டு சென்றார்.

    அங்கு பங்கர் பகுதியிலுள்ள இந்தியா-சீனா ராணுவ எல்லை பகுதியில் 17,000 மலை உச்சியில் பனிப்பொழிவு நிறைந்த இடத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார். அங்கு நிலவிய கடும் குளிரான காலநிலையால் உடல்நலம் பாதிக்கப்பட்டு, அங்குள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த புதன்கிழமை உயிரிழந்தார்.

    இதையடுத்து அவரது உடல் விமானம் மூலம் கோவைக்கு கொண்டு வரப்பட்டது. கோவை விமான நிலையத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட கலெக்டர் சமீரன் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். இதனை தொடர்ந்து அவரது உடல் காரமடையில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது.

    தொடர்ந்து இன்று காலை 9 மணிக்கு கோவை ராணுவ பிரதேசப்படை மூலம் இவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, அவரது மனைவியிடம் தேசியக்கொடி ஒப்படைக்கும் நிகழ்வு நடைபெற்றது.

    தொடர்ந்து அவரது உடல் வீட்டில் இருந்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கோவை-ஊட்டி சாலையில் உள்ள ஆர்.சி.கல்லறை பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு ராணுவ வீரர்கள் 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தினர். இதையடுத்து அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

    இதில் ஏ.கே.செல்வராஜ் எம்.எல்.ஏ, மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ், கூர்க்கா ரெஜிமென்ட் முன்னாள் கமென்டிங் அதிகாரி கர்ணல் லலித்ஜெயின், கோவை வடக்கு கோட்டாட்சியர் ரூபா, தாசில்தார் மாலதி மற்றும் அரசு அதிகாரிகள், உறவினர்கள் மலர் வளையம் வைத்து ராணுவ வீரருக்கு மரியாதை செலுத்தினர்.

    கோவை ராணுவ பிரதேச படை லெப்டனென்ட் ஜென்ரல் சாந்தனு தலைமையில் ராணுவ வீரர்கள் கலந்து கொண்டனர்.

    இவர் கடந்த 1994 ஆம் ஆண்டு ராணுவ பணியில் சேர்ந்துள்ளார். இவருக்கு அனிதா ஜோசி(58) என்ற மனைவியும், மோனிகா என்ற மகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ஆந்திர மாநிலத்தில் உயிரிழந்த ராணுவ வீரரின் உடல் சொந்தஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
    • இவருக்கு மோகனப்பி ரியா(வயது34) என்ற மனைவியும், 7 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் முத்துமகேசுவரன்(35). இவர் 2005-ம் ஆண்டு ராணுவத்தில் மெட்ராஸ் ரெஜிமெண்ட் பிரிவில் பணியில் சேர்ந்தார். தற்போது ஆந்திர மாநிலம் செகந்திராபாத்தில் உள்ள 10-வது என்ஜினீயர் ரெஜிமெண்டில் ஹாவில்தா ராக பணியாற்றினார்.

    ராணுவவீரர் முத்து மகேசுவரனுக்கு கடந்த டிசம்பர் மாதத்தில் திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டது. செகந்திராபாத்தில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நேற்று மாலை அவர் உடல் ஆம்புலன்சு மூலம் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு கொண்டு வரப்பட்டது.

    அங்கு முத்துமகேசுவரன் உடலுக்கு ராணுவ அதி காரிகள் மலர் வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினர். அவரது உடல் இருந்த பெட்டியில் போர்த்தப்பட்டிருந்த தேசிய கொடி குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் ராணுவவீரரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

    மரணமடைந்த ராணுவவீரர் முத்துமகே சுவரனுக்கு மோகனப்பி ரியா(வயது34) என்ற மனைவியும், 7 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

    • தென்காசி அருகே உள்ள அழகப்பபுரம் மெயின்ரோட்டை சேர்ந்தவர் சுப்பையா. இவர் கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார்.
    • உறவினர்கள் அவரை மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    நெல்லை:

    தென்காசி அருகே உள்ள அழகப்பபுரம் மெயின்ரோட்டை சேர்ந்தவர் சுப்பையா(வயது 61). இவர் ராணுவ வீரராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

    கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிப்பால் அவதிப்பட்டு வந்த இவர் 21-ந்தேதி விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உடனே அவரது உறவினர்கள் அவரை மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் இறந்தார். இதுதொடர்பாக தென்காசி போலீசார் வழக்குப்பதிவு செய்து சுப்பையாவின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • திருமங்கலம் அருகே வயலில் இறந்த ராணுவ வீரர் சுருண்டு விழுந்தார்.
    • போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே ஆஸ்டின்பட்டி பக்கம் உள்ள கரடிக்கல் புன்னனம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மதுரை வீரன் (வயது40). இவருக்கு ஆதிலட்சுமி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.

    ராணுவ வீரரான இவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தான் பணி ஓய்வு பெற்று ஊருக்கு திரும்பினார். அதன்பிறகு ஊரில் உள்ள தன்னுடைய வயலில் விவசாயம் செய்து வந்தார். புன்னனம்பட்டியில் உள்ள தனது வயலில் தற்போது சோளம் விதைத்துள்ளார். நேற்று வயலுக்கு சென்றிருந்த அவர் திடீரென நெஞ்சு வலிப்பதாக கூறி சுருண்டு விழுந்தார். இதையடுத்து அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆட்டோ மூலம் திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு மதுரை வீரனை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இந்த சம்பவம் குறித்து அவரது மனைவி ஆதிலட்சுமி ஆஸ்டின்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உடல்நிலை பாதிப்பால் விபரீதம்
    • போலீசார் விசாரணை

    கண்ணமங்கலம்,

    கண்ணமங்கலம் அருகே உள்ள ஒண்ணுபுரம் கிராமத்தை சேர்ந்தவர் தனசேகர். அவரது மகன் கோகுல்குமார் (வயது 30), ராணுவ வீரர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கோகுல்குமார் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 25-ந்தேதி வயிற்று வலி காரணமாக சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையிலும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து கண்ணமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஏர்வாடி அருகே உள்ள திருக்குறுங்குடியை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 30). இவர் மத்திய பிரதேசத்தில் ராணுவத்தில் வேலை பார்த்து வருகிறார்.
    • கிருஷ்ணபேரி சாலையில் வந்த போது இவரது பின்னால் ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் மாரியப்பன் மீது உரசுவது போல் வந்துள்ளனர்.

    நெல்லை:

    ஏர்வாடி அருகே உள்ள திருக்குறுங்குடியை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 30). இவர் மத்திய பிரதேசத்தில் ராணுவத்தில் வேலை பார்த்து வருகிறார். விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த மாரியப்பன் நேற்று மோட்டார் சைக்கிளில் நெல்லை பேட்டைக்கு வந்தார்.

    கிருஷ்ணபேரி சாலையில் வந்த போது இவரது பின்னால் ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் மாரியப்பன் மீது உரசுவது போல் வந்துள்ளனர். இதனால் அவர்களை மாரியப்பன் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த 3 பேரும் மாரியப்பனை சரமாரியாக தாக்கி விட்டு தப்பியோடி விட்டனர்.

    இதுகுறித்து அவர் பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி மாரியப்பனை தாக்கிய அதே பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் என்ற வாலிபர் மற்றும் பாலிடெக்னிக் மாணவர் உள்பட 2 சிறுவர்களை கைது செய்தனர்.

    • ரெமி ஜூலியன் (வயது 43). காஷ்மீர் மாநிலம் லே லடாக்கில் வழக்கம்போல் பணியில் இருந்தார்.
    • ரெமி ஜூலியனுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு உடனடியாக ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    திருச்சி :

    திருச்சி மாவட்டம் லால்குடி அருகேயுள்ள நெய் குப்பை கிராமத்தைச் சேர்ந்தவர் ரெமி ஜூலியன் (வயது 43). ராணுவ வீரரான இவருக்கு திருமணம் ஆகி ஜான்சி ராணி என்ற மனைவியும், ஜெனி ஜோயல் (9) என்ற மகனும் உள்ளனர். கடந்த 1999 ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தில் சேர்ந்த ரெமி ஜூலியன் தற்போது என்ஜினீயரிங் ரெஜிமென்ட் யூனிட்டில் ஹவில்தாரராக பணியில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் அவர் காஷ்மீர் மாநிலம் லே லடாக்கில் வழக்கம்போல் பணியில் இருந்தார். அப்போது அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு உடனடியாக ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த ரெமி ஜூலியன் சிகிச்சை பலனின்றி கடந்த 29-ந்தேதி உயிரிழந்தார்.

    இது குறித்து ரெமி ஜூலியன் குடும்பத்தாருக்கு ராணுவத்தினர் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து நேற்று மாலை அவரது உடல் லடாக்கில் இருந்து விமானம் மூலம் ஐதராபாத் வழியாக திருச்சி வந்த இண்டிகோ விமானத்தில் கொண்டுவரப்பட்டது. அங்கு ராணுவ பட்டாலியனை சேர்ந்த ராணுவ வீரர்கள் அதிகாரி அழகர்சாமி மற்றும் மயில்வாகனன் தலைமையில் திருச்சி உடலுக்கு ராணுவ மரியாதை அளித்தனர்.

    பின்னர் அவரது உடல் மாலை 5.30 மணிக்கு ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊரான நெய் குப்பை கிராமத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு ரெமி ஜூலியன் உடலுக்கு லால்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சௌந்தரபாண்டியன் மற்றும் அதிகாரிகள், பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து இன்று காலை அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

    • சியாச்சின் பகுதி, உலகத்திலேயே உயரமான போர்க்களமாக உள்ளது.
    • ராணுவ வீரரின் உடல், லே நகருக்கு கொண்டுவரப்பட்டது.

    புதுடெல்லி :

    சந்திரசேகர் ஹர்போலா என்ற அந்த வீரர், கடந்த 1984-ம் ஆண்டு தனது சக வீரர்கள் 19 பேருடன் அங்கு ரோந்து சென்றபோது ஒரு பனிச்சரிவில் சிக்கினார்.

    அதில் 15 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், மற்றவர்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்படவில்லை.

    இந்நிலையில், 38 ஆண்டுகளுக்கு பின் தற்போது ராணுவ வீரர் சந்திரசேகர் ஹர்போலாவின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவரது உடலுடன் மற்றொரு உடலும் கண்டெடுக்கப்பட்டுள்ளது என்றாலும், அது யாருடையது என்று தெரியவில்லை.

    சந்திரசேகர் ஹர்போலாவின் உடலை அவரது குடும்பத்தினரிடம் கொண்டு சென்று ஒப்படைப்பதற்கான நடவடிக்கையை ராணுவம் மேற்கொண்டது. நேற்று அவரது உடல், லே நகருக்கு கொண்டுவரப்பட்டது.

    உத்தரகாண்ட் மாநிலத்தின் ஹல்டுவானி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் சந்திரசேகர் ஹர்போலாவின் குடும்பத்தினர் வசிக்கின்றனர் அங்கு முழு ராணுவ மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்படும். இத்தனை ஆண்டுகள் கழித்து சந்திரசேகர் ஹர்போலாவின் உடல் கிடைத்திருப்பது தங்கள் துக்கத்தை கிளறிவிட்டிருந்தாலும், ஒருவிதத்தில் நிம்மதி அளிப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

    சியாச்சினில் ஒரு ராணுவ வீரரின் உடல் பல ஆண்டுகளுக்குப் பின் கண்டுபிடிக்கப்படுவது இது முதல் முறையல்ல. துக்காராம் வி.பாட்டீல் என்ற இந்திய ராணுவ வீரரின் உடல், அவர் மாயமான 21 ஆண்டுகள் கழித்து கடந்த 2014-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

    இந்த சியாச்சின் பகுதி, உலகத்திலேயே உயரமான போர்க்களமாக உள்ளது. இந்த கொடும் பனிப்பகுதியை பாதுகாக்கும் முனைப்பில் இந்திய-பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் எதிரெதிராக நின்றுகொண்டிருக்கின்றனர்.

    ஆனால் இங்கு பரஸ்பர மோதலைவிட, பனிப்புயல்களாலும், பனிச்சரிவுகளாலும் இரு நாட்டு வீரர்களும் இறப்பதே அதிகம் என்பதுதான் விந்தையான சோகம்.

    இங்கு கடந்த 2012-ம் ஆண்டு நடந்த பெரும் பனிச்சரிவில் சிக்கி 129 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். அதேபோன்ற விபத்தில் இந்திய தரப்பில் 2016-ம் ஆண்டில் 10 வீரர்களும், 2019-ம் ஆண்டில் 4 வீரர்களும் பலியாகி உள்ளனர்.

    ×