search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "State Honour"

    • கோவை விமான நிலையத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட கலெக்டர் சமீரன் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
    • காலை 9 மணிக்கு கோவை ராணுவ பிரதேசப்படை மூலம் இவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, அவரது மனைவியிடம் தேசியக்கொடி ஒப்படைக்கும் நிகழ்வு நடைபெற்றது.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே காரமடை தேவி நகரை சேர்ந்தவர் மைக்கேல்சாமி (48). ராணுவ வீரர்.

    இவர் புனேயில் உள்ள ராணுவ மையத்தில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் சிக்கிம் மாநிலத்தில் உள்ள கூர்க்கா படை பிரிவுக்கு பணியிட மாறுதல் செய்யப்படடார்.

    இதையடுத்து 20 நாள் விடுமுறையில் காரமடையில் உள்ள தனது வீட்டுக்கு வந்து விட்டு கடந்த 4-ந் தேதி சிக்கிம் புறப்பட்டு சென்றார்.

    அங்கு பங்கர் பகுதியிலுள்ள இந்தியா-சீனா ராணுவ எல்லை பகுதியில் 17,000 மலை உச்சியில் பனிப்பொழிவு நிறைந்த இடத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார். அங்கு நிலவிய கடும் குளிரான காலநிலையால் உடல்நலம் பாதிக்கப்பட்டு, அங்குள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த புதன்கிழமை உயிரிழந்தார்.

    இதையடுத்து அவரது உடல் விமானம் மூலம் கோவைக்கு கொண்டு வரப்பட்டது. கோவை விமான நிலையத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட கலெக்டர் சமீரன் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். இதனை தொடர்ந்து அவரது உடல் காரமடையில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது.

    தொடர்ந்து இன்று காலை 9 மணிக்கு கோவை ராணுவ பிரதேசப்படை மூலம் இவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, அவரது மனைவியிடம் தேசியக்கொடி ஒப்படைக்கும் நிகழ்வு நடைபெற்றது.

    தொடர்ந்து அவரது உடல் வீட்டில் இருந்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கோவை-ஊட்டி சாலையில் உள்ள ஆர்.சி.கல்லறை பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு ராணுவ வீரர்கள் 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தினர். இதையடுத்து அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

    இதில் ஏ.கே.செல்வராஜ் எம்.எல்.ஏ, மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ், கூர்க்கா ரெஜிமென்ட் முன்னாள் கமென்டிங் அதிகாரி கர்ணல் லலித்ஜெயின், கோவை வடக்கு கோட்டாட்சியர் ரூபா, தாசில்தார் மாலதி மற்றும் அரசு அதிகாரிகள், உறவினர்கள் மலர் வளையம் வைத்து ராணுவ வீரருக்கு மரியாதை செலுத்தினர்.

    கோவை ராணுவ பிரதேச படை லெப்டனென்ட் ஜென்ரல் சாந்தனு தலைமையில் ராணுவ வீரர்கள் கலந்து கொண்டனர்.

    இவர் கடந்த 1994 ஆம் ஆண்டு ராணுவ பணியில் சேர்ந்துள்ளார். இவருக்கு அனிதா ஜோசி(58) என்ற மனைவியும், மோனிகா என்ற மகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×