என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Soldier"

    • அவர் கோச் உதவியாளர் சுபைர் என்பவரிடம் ஒரு போர்வை மற்றும் படுக்கை விரிப்பைக் கேட்டார்.
    • இரத்தப்போக்கு காரணமாக ஜிகர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    ரெயில் ஏசி கோச்சில் போர்வை கேட்டதற்கு ராணுவ வீரரை கோச் உதவியாளர் கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் அரங்கேறி உள்ளது.

    ராணுவ வீரர் ஜிகர் சவுத்ரி விடுப்பில் வீடு செல்வதற்காக இந்த மாதம் 2 ஆம் தேதி, ஜம்மு தாவி-சபர்மதி எக்ஸ்பிரஸின் 2nd ஏசி கோச்சில் சொந்தமாநிலமான குஜராத்துக்கு பயணம் செய்து கொண்டிருந்தார்.

    பயணத்தின் நடுவில், அவர் கோச் உதவியாளர் சுபைர் என்பவரிடம் ஒரு போர்வை மற்றும் படுக்கை விரிப்பைக் கேட்டார். படுக்கை விரிப்பு கொடுத்த சுபைர், போர்வை கொடுக்க மறுத்துவிட்டார்.

    இந்த விஷயத்தில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த சுபைர், தன்னிடம் இருந்த கத்தியால் ஜிகர் சவுத்ரியைத் சரமாரியாக குத்தினார். கடுமையான இரத்தப்போக்கு காரணமாக ஜிகர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    டிக்கெட் பரிசோதகரின் புகாரின் அடிப்படையில், ரெயில்வே போலீசார் எப்ஐஆர் பதிவு செய்து பிகானர் ரெயில் நிலையத்தில் வைத்து கோச் உதவியாளர் சுபைரை கைது செய்தனர். சுபைர் ஒப்பந்தத்தின் அடிப்படையில் பணியமர்த்தப்பட்டவர் என்றும் அவரை பணிநீக்கம் செய்துள்ளதாகவும் ரெயில்வே விளக்கம் அளித்துள்ளது. 

    இதுபற்றிய பற்றிய புகாரைப் பெற்ற தேசிய மனித உரிமைகள் ஆணையம், ரெயில்வே வாரியத் தலைவர் மற்றும் ரெயில்வே பாதுகாப்புப் படையின் இயக்குநர் ஜெனரல் ஆகியோருக்கு தற்போது நோட்டீஸ் அனுப்பியதன் மூலம் இந்த சம்பவம் கவனம் பெற்றுள்ளது. 

    • ஆஷிஷ் குமார் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஆபரேஷன் அலர்ட் நடவடிக்கையின்போது வீரமரணமடைந்தார்.
    • பாரம்பரியமாக ஒரு சகோதரன் செய்ய வேண்டிய அனைத்துக் கடமைகளையும் வீரர்கள் செய்தனர்.

    இமாச்சலப் பிரதேசத்தில் நடந்த ஒரு பெண்ணின் திருமணம் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

    இமாச்சலப் பிரதேசத்தின் சிர்மௌர் மாவட்டத்தில் உள்ள பர்லி கிராமத்தில் ஆராதனா என்ற அந்த பெண்ணின் திருமணம் அண்மையில் நடைபெற்றது.

    அருணாச்சல பிரதேசத்தில் ராணுவ வீரராக பணியில் இருந்த ஆராதனாவின் அண்ணன் ஆஷிஷ் குமார் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஆபரேஷன் அலர்ட் நடவடிக்கையின்போது வீரமரணமடைந்தார்.

    இந்நிலையில் அண்ணன் இன்றி ஆராதனா திருமணம் நடக்கக்கூடாது என்று கருதிய ஆஷிஷ் குமார் பணியாற்றிய படைப்பிரிவில் உடன் பணியாற்றிய வீரர்கள் இமாசலப் பிரதேசம் புறப்பட்டனர்.

    ஆராதனாவுக்கு அண்ணனாக முன்னின்று அவர்கள் அனைத்துக் கடமைகளையும் செய்தனர். மணமகனை திருமண மேடைக்கு அழைத்துச் செல்வது, சடங்குகள் முடியும் வரை அருகில் நிற்பது, பின்னர் புகுந்த வீட்டுக்குச் செல்லும் போதும் கூடச் செல்வது வரை, பாரம்பரியமாக ஒரு சகோதரன் செய்ய வேண்டிய அனைத்துக் கடமைகளையும் வீரர்கள் செய்தனர்.

    இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    சகோதரனின் பாசத்தையும், பாதுகாப்பையும் வெளிப்படுத்தும் விதமாக, வீரர்கள் ஆராதனாவிற்கு திருமணப் பரிசாக நிலையான வைப்புத் தொகை (Fixed Deposit) இருப்பை வழங்கினர்.

    வீரர்களின் இந்த செயல், திருமணத்துக்கு வந்திருந்த அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

    இதுபற்றி வீரர்களிடம் கேட்கையில், "ஆராதனாவிற்கு அண்ணனாக நின்று ஆஷிஷின் நினைவைப் போற்றுவது எங்களது தார்மீகக் கடமை" என்று பதிலளித்தனர்.

    • பாகிஸ்தானியர்களால் அவனைக் கொல்ல முடியவில்லை, ஆனால் நம் சொந்தப் படைகள் அவன் உயிரைப் பறித்துவிட்டன என்று அவரின் தந்தை தெரிவித்தார்.
    • லடாக்கில் நடந்த இந்தக் கொலைகள் குறித்து பாரபட்சமற்ற நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும்.

    லடாக்கில் மாநில அந்தஸ்து உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த புதன்கிழமை லேவில் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போலீசார் உடனான மோதலில் 20 பேர் கொல்லப்பட்டனர்.

    இந்த போராட்டத்தில் உயிரிழந்தவர்களில் முன்னாள் ராணுவ வீரரான ட்சேவாங் தார்ச்சின் என்பவரும் ஒருவர். 1999 முதல் 2017 வரை அவர் ராணுவத்தில் பணியாற்றினார். சியாச்சின் பனிமலையில் பணியாற்றியவர் ஆவார். கார்கில் போரில் அவர் பங்குபெற்றார். அவரது தந்தையும் இந்திய ராணுவத்தில் பணியாற்றியவர்.

    மகன் இறப்பு குறித்து தந்தை அளித்த பேட்டியில், "என் மகன் ஒரு தேசபக்தன். அவன் கார்கில் போரில் போராடினான். மூன்று மாதங்கள் போர்முனையில் இருந்தான்.

    டா டாப் மற்றும் டோலோலிங்கில் பாகிஸ்தானியர்களுடன் சண்டையிட்டான். பாகிஸ்தானியர்களால் அவனைக் கொல்ல முடியவில்லை, ஆனால் நம் சொந்தப் படைகள் அவன் உயிரைப் பறித்துவிட்டன" என்று ஆதங்கத்துடன் கூறினார்.

    அவரின் பேட்டியை பகிர்ந்து மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்ட பதிவில், "தந்தை ராணுவத்தில், மகன் ராணுவத்தில் - தேசபக்தி அவர்களின் இரத்தத்தில் ஊறுகிறது.

    லடாக்கிற்காகவும் அவரது உரிமைகளுக்காகவும் குரல் கொடுத்த ஒரே காரணத்திற்காக பாஜக அரசு இந்த துணிச்சலான தேச மகனை சுட்டுக் கொன்றது. 

    தந்தையின் வலி நிறைந்த கண்கள் ஒரு கேள்வியைக் கேட்கின்றன: இன்று தேசத்திற்கு சேவை செய்ததற்கான வெகுமதி இதுதானா?

    லடாக்கில் நடந்த இந்தக் கொலைகள் குறித்து பாரபட்சமற்ற நீதி விசாரணை நடத்தப்பட்டு, குற்றவாளிகளுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம்.

    மோடி ஜி, நீங்கள் லடாக் மக்களுக்கு துரோகம் இழைத்துவிட்டீர்கள். அவர்கள் தங்கள் உரிமைகளைக் கோருகிறார்கள். அவர்களுடன் தொடர்பு கொள்ளுங்கள் - வன்முறை மற்றும் பயத்தின் அரசியலை நிறுத்துங்கள்" என்று தெரிவித்துள்ளார். 

    • பாலத்திலிருந்து விழுந்த அக்னிவீர் ஸ்டீபன் சுப்பா மலை ஓடையில் அடித்துச் செல்லப்பட்டார்.
    • நீரில் மூழ்கிக் கொண்டிருந்த சுப்பாவை காப்பாற்ற லெப்டினன்ட் சஷாங்க் திவாரி தண்ணீரில் குதித்தார்.

    சிக்கிமில் ஆற்றில் விழுந்த சக ராணுவ வீரரை காப்பாற்ற முயன்றபோது, நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டு இளம் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார்.

    இறந்தவர் உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியைச் சேர்ந்த லெப்டினன்ட் சஷாங்க் திவாரி ஆவார். 23 வயதான சஷாங்க் திவாரி, இந்திய ராணுவத்தின் சிக்கிம் ஸ்கவுட்ஸில் சேர்ந்து ஆறு மாதங்கள் மட்டுமே ஆகிறது.

    நேற்று காலை 11 மணியளவில் ஒரு மரப் பாலத்தைக் கடக்கும்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த குழுவின் உறுப்பினர்களில் ஒருவர் கால் தவறி ஆற்றில் விழுந்தார்.

    பாலத்திலிருந்து விழுந்த அக்னிவீர் ஸ்டீபன் சுப்பா மலை ஓடையில் அடித்துச் செல்லப்பட்டார்.பாலத்திலிருந்து விழுந்த அக்னிவீர் ஸ்டீபன் சுப்பா மலை ஓடையில் அடித்துச் செல்லப்பட்டார். நீரில் மூழ்கிக் கொண்டிருந்த சுப்பாவை காப்பாற்ற லெப்டினன்ட் சஷாங்க் திவாரி தண்ணீரில் குதித்தார்.

    மற்றொரு சிப்பாய் நாயக் காட்டேலும் குதித்தார். அவர்கள் நீரில் மூழ்கிக் கொண்டிருந்த அக்னிவீரை மீட்டனர். சுப்பா பாதுகாப்பாகக் கொண்டுவரப்பட்டபோதும், லெப்டினன்ட் சஷாங்க் திவாரி பலத்த நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டார்.

    அவரது உடல் சுமார் 30 நிமிடங்களுக்குப் பிறகு 800 மீட்டர் கீழ்நோக்கி கண்டெடுக்கப்பட்டது. அவரது மறைவுக்கு உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு அறிவித்தார். 

    • காம்போஜ் இன்ஸ்டாகிராம் மூலமாக சுக்சரண் சிங் உடன் பழக்கமாகி குண்டு தயாரிக்க கற்றுக்கொள்வது வரை சென்றுள்ளார்.
    • அவர் 5 நாள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்.

    பஞ்சாப் மாநிலம் ஜலத்தினரில் யுடியூபர் ஒருவரின் வீட்டில் கடந்த மாதம் மர்ம நபர் கையெறி குண்டை (GRENADE) வீசி எறிந்தார். ஆனால் அதிர்ஷ்டவசமாக அந்த குண்டு வெடிக்கவில்லை. குண்டு வீசிய மர்ம நபர் ஹர்திக் காம்போஜ் என்று அடையாளம் காணப்பட்டார்.

    காம்போஜிடம் பஞ்சாப் போலீஸ் நடத்திய விசாரணையில் அவருக்கு GRENADE தயாரிக்க ஜம்மு காஷ்மீரில் இருந்து பஞ்சாபின் முக்த்சார் மாவட்டத்தை சேர்ந்த ராணுவ வீரர் சுக்சரண் சிங் என்பவர் ஆன்லைனில் பயிற்சி அளித்தது தெரியவந்தது.

    காம்போஜ் இன்ஸ்டாகிராம் மூலமாக சுக்சரண் சிங் உடன் பழக்கமாகி குண்டு தயாரிக்க கற்றுக்கொள்வது வரை சென்றுள்ளார்.

    இந்நிலையில் நேற்று ராணுவ வீரர் சுக்சரண் சிங் பஞ்சாப் போலீசார் கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் 5 நாள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார். பஞ்சாபில் சமீக காலமாக குண்டுவீச்சு சம்பவங்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    • தென்காசி அருகே உள்ள அழகப்பபுரம் மெயின்ரோட்டை சேர்ந்தவர் சுப்பையா. இவர் கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார்.
    • உறவினர்கள் அவரை மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    நெல்லை:

    தென்காசி அருகே உள்ள அழகப்பபுரம் மெயின்ரோட்டை சேர்ந்தவர் சுப்பையா(வயது 61). இவர் ராணுவ வீரராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

    கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிப்பால் அவதிப்பட்டு வந்த இவர் 21-ந்தேதி விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உடனே அவரது உறவினர்கள் அவரை மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் இறந்தார். இதுதொடர்பாக தென்காசி போலீசார் வழக்குப்பதிவு செய்து சுப்பையாவின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • ஆந்திர மாநிலத்தில் உயிரிழந்த ராணுவ வீரரின் உடல் சொந்தஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
    • இவருக்கு மோகனப்பி ரியா(வயது34) என்ற மனைவியும், 7 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் முத்துமகேசுவரன்(35). இவர் 2005-ம் ஆண்டு ராணுவத்தில் மெட்ராஸ் ரெஜிமெண்ட் பிரிவில் பணியில் சேர்ந்தார். தற்போது ஆந்திர மாநிலம் செகந்திராபாத்தில் உள்ள 10-வது என்ஜினீயர் ரெஜிமெண்டில் ஹாவில்தா ராக பணியாற்றினார்.

    ராணுவவீரர் முத்து மகேசுவரனுக்கு கடந்த டிசம்பர் மாதத்தில் திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டது. செகந்திராபாத்தில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நேற்று மாலை அவர் உடல் ஆம்புலன்சு மூலம் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு கொண்டு வரப்பட்டது.

    அங்கு முத்துமகேசுவரன் உடலுக்கு ராணுவ அதி காரிகள் மலர் வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினர். அவரது உடல் இருந்த பெட்டியில் போர்த்தப்பட்டிருந்த தேசிய கொடி குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் ராணுவவீரரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

    மரணமடைந்த ராணுவவீரர் முத்துமகே சுவரனுக்கு மோகனப்பி ரியா(வயது34) என்ற மனைவியும், 7 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

    • கோவை விமான நிலையத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட கலெக்டர் சமீரன் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
    • காலை 9 மணிக்கு கோவை ராணுவ பிரதேசப்படை மூலம் இவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, அவரது மனைவியிடம் தேசியக்கொடி ஒப்படைக்கும் நிகழ்வு நடைபெற்றது.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே காரமடை தேவி நகரை சேர்ந்தவர் மைக்கேல்சாமி (48). ராணுவ வீரர்.

    இவர் புனேயில் உள்ள ராணுவ மையத்தில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் சிக்கிம் மாநிலத்தில் உள்ள கூர்க்கா படை பிரிவுக்கு பணியிட மாறுதல் செய்யப்படடார்.

    இதையடுத்து 20 நாள் விடுமுறையில் காரமடையில் உள்ள தனது வீட்டுக்கு வந்து விட்டு கடந்த 4-ந் தேதி சிக்கிம் புறப்பட்டு சென்றார்.

    அங்கு பங்கர் பகுதியிலுள்ள இந்தியா-சீனா ராணுவ எல்லை பகுதியில் 17,000 மலை உச்சியில் பனிப்பொழிவு நிறைந்த இடத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார். அங்கு நிலவிய கடும் குளிரான காலநிலையால் உடல்நலம் பாதிக்கப்பட்டு, அங்குள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த புதன்கிழமை உயிரிழந்தார்.

    இதையடுத்து அவரது உடல் விமானம் மூலம் கோவைக்கு கொண்டு வரப்பட்டது. கோவை விமான நிலையத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட கலெக்டர் சமீரன் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். இதனை தொடர்ந்து அவரது உடல் காரமடையில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது.

    தொடர்ந்து இன்று காலை 9 மணிக்கு கோவை ராணுவ பிரதேசப்படை மூலம் இவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, அவரது மனைவியிடம் தேசியக்கொடி ஒப்படைக்கும் நிகழ்வு நடைபெற்றது.

    தொடர்ந்து அவரது உடல் வீட்டில் இருந்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கோவை-ஊட்டி சாலையில் உள்ள ஆர்.சி.கல்லறை பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு ராணுவ வீரர்கள் 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தினர். இதையடுத்து அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

    இதில் ஏ.கே.செல்வராஜ் எம்.எல்.ஏ, மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ், கூர்க்கா ரெஜிமென்ட் முன்னாள் கமென்டிங் அதிகாரி கர்ணல் லலித்ஜெயின், கோவை வடக்கு கோட்டாட்சியர் ரூபா, தாசில்தார் மாலதி மற்றும் அரசு அதிகாரிகள், உறவினர்கள் மலர் வளையம் வைத்து ராணுவ வீரருக்கு மரியாதை செலுத்தினர்.

    கோவை ராணுவ பிரதேச படை லெப்டனென்ட் ஜென்ரல் சாந்தனு தலைமையில் ராணுவ வீரர்கள் கலந்து கொண்டனர்.

    இவர் கடந்த 1994 ஆம் ஆண்டு ராணுவ பணியில் சேர்ந்துள்ளார். இவருக்கு அனிதா ஜோசி(58) என்ற மனைவியும், மோனிகா என்ற மகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ராணுவ வீரர் கவுரவிப்பு நிகழ்ச்சி நடந்தது.
    • இதில் மாவட்டத்திலேயே ‘‘குப்பை இல்லா தூய்மை பேரூராட்சியாக’’ மாற அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா நெற்குப்பை பேரூராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் 74-ஆவது குடியரசு தின விழா நடந்தது. செயல் அலுவலர் வே.கணேசன் முன்னிலை வகித்தார். பேரூராட்சி மன்ற தலைவர் அ.புசலான் தேசியக்கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியதுடன், நகரின் தூய்மை குறித்து பேசினார்.

    பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத பேரூராட்சியாக மாற அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். முன்னாள் ராணுவ வீரர் சூரியகுமாருக்கு பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டது. இளநிலை உதவியாளர் சேரலாதன், வரித்தண்டலர் துரைராஜ், கவுன்சிலர்கள் கண்ணன், தனபாக்கியம், சேக்கப்பன், அழகு, அமுதா, நிகார்பானு, சித்ரா, தூய்மை பணி மேற்பார்வையாளர் சிற்றரசு மற்றும் அலுவலக பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், ஊர் முக்கியஸ்தர்கள், மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.

    இதில் மாவட்டத்திலேயே ''குப்பை இல்லா தூய்மை பேரூராட்சியாக'' மாற அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    நகையை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஊர்க்காவல் படை வீரர்

    புதச்சேரி:

    காரைக்கால் மாவட்ட காவல் துறையில், ஊர்க்காவல்படை வீரராக பணிபுரிந்து வருபவர் ராஜேஷ்கண்ணா. இவர் நேற்று முன்தினம், காரைக்கால் காத்தா பிள்ளை கோடி சிக்னலில் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது ரூ. 75 ஆயிரம் மதிப்புடைய தங்க செயின் ஒன்று சாலையில் கிடந்துள்ளது.

    இதனை கண்டெடுத்த ராஜேஷ் கண்ணா, உரிய விசாரணை மற்றும் காவல்துறை தலைமையகம் உத்தரவின் பேரில், உரியவரிடம் ஒப்படைத்தார். இதுகுறித்து தகவல் அறிந்த காரைக்கால் மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு லோகேஸ்வரன் ராஜேஷ் கண்ணாவை பொன்னாடை போர்த்தி பாராட்டினார். விபரம் அறிந்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களும் ராஜேஷ் கண்ணாவை பாராட்டி வருகின்றனர். இந்த விவரம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    • வாலிபர் பெண் போலீசை தகாத வார்த்தைகளால் பேசி கன்னத்தில் தாக்கியதாக கூறப்படுகிறது.
    • காயமடைந்த பிஸ்மி அல்மேரிஸ் தருமபுரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், அரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டரின் ஜீப் டிரைவராக பணிபுரிந்து வருபவர் பிஸ்மி அல்மேரிஸ்.

    நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து தனது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு புறப்பட்டுள்ளார். எதிரில் மற்றொரு இருசக்கர வாகனத்தில் ஒரு வாலிபர் நேராக மோதுவது போல வந்துள்ளார்.

    இதனை பிஸ்மி அல்மேரிஸ் அவரை தடுத்து நிறுத்தி கண்டித்துள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் பெண் போலீசை தகாத வார்த்தைகளால் பேசி கன்னத்தில் தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதில் காயமடைந்த பிஸ்மி அல்மேரிஸ் தருமபுரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து அவர் அரூர் போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் பெண் போலீசை தாக்கியவர் அரூர் அருகேயுள்ள பொய்யப்பட்டியை சேர்ந்த கருணாநிதி (எ) காளிதாஸ் (வயது 29) என்பதும், ராணுவ வீரரான அவர் விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளதும் தெரிய வந்தது.

    இதையடுத்து அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பெண் போலீசை ராணுவ வீரர் தாக்கிய சம்பவம் போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • ராணுவ வீரரான தாகலே இடிபாடுகளில் சிக்கி கொண்டார்.
    • அதிர்ச்சி அடைந்த சக வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    கவுகாத்தி:

    அருணாசலபிரதேசத்தின் தவாங் பகுதியில் மராட்டியம் மாநிலம் ரத்தினகிரி மாவட்டத்தை சேர்ந்த ராணுவவீரரான தாகலே உள்ளிட்ட குழுவினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது திடீரென அப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ராணுவ வீரரான தாகலே இடிபாடுகளில் சிக்கி கொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த சக வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆனாலும் அவரை உடனடியாக மீட்க முடியவில்லை.

    இதைத்தொடர்ந்து அங்கு சிறப்பு உபகரணங்களுடன் மீட்பு குழுவினர் விரைந்து சென்று ராணுவவீரர் தாகலேவை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

    மீட்புகுழுவினரின் தீவிர போராட்டத்தின் காரணமாக 5 நாட்களுக்கு பிறகு தாகலே சடலமாக மீட்கப்பட்டார். உடலை பிரேத பரிசோதனைக்காக தவாங்கில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    பலியான ராணுவவீரர் தாகலேவுக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.

    ×