என் மலர்
இந்தியா

ரெயிலில் போர்வை கேட்ட ராணுவ வீரரை கத்தியால் குத்திக் கொன்ற ஊழியர் - விளக்கம் கேட்கும் மனித உரிமை ஆணையம்
- அவர் கோச் உதவியாளர் சுபைர் என்பவரிடம் ஒரு போர்வை மற்றும் படுக்கை விரிப்பைக் கேட்டார்.
- இரத்தப்போக்கு காரணமாக ஜிகர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ரெயில் ஏசி கோச்சில் போர்வை கேட்டதற்கு ராணுவ வீரரை கோச் உதவியாளர் கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் அரங்கேறி உள்ளது.
ராணுவ வீரர் ஜிகர் சவுத்ரி விடுப்பில் வீடு செல்வதற்காக இந்த மாதம் 2 ஆம் தேதி, ஜம்மு தாவி-சபர்மதி எக்ஸ்பிரஸின் 2nd ஏசி கோச்சில் சொந்தமாநிலமான குஜராத்துக்கு பயணம் செய்து கொண்டிருந்தார்.
பயணத்தின் நடுவில், அவர் கோச் உதவியாளர் சுபைர் என்பவரிடம் ஒரு போர்வை மற்றும் படுக்கை விரிப்பைக் கேட்டார். படுக்கை விரிப்பு கொடுத்த சுபைர், போர்வை கொடுக்க மறுத்துவிட்டார்.
இந்த விஷயத்தில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த சுபைர், தன்னிடம் இருந்த கத்தியால் ஜிகர் சவுத்ரியைத் சரமாரியாக குத்தினார். கடுமையான இரத்தப்போக்கு காரணமாக ஜிகர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
டிக்கெட் பரிசோதகரின் புகாரின் அடிப்படையில், ரெயில்வே போலீசார் எப்ஐஆர் பதிவு செய்து பிகானர் ரெயில் நிலையத்தில் வைத்து கோச் உதவியாளர் சுபைரை கைது செய்தனர். சுபைர் ஒப்பந்தத்தின் அடிப்படையில் பணியமர்த்தப்பட்டவர் என்றும் அவரை பணிநீக்கம் செய்துள்ளதாகவும் ரெயில்வே விளக்கம் அளித்துள்ளது.
இதுபற்றிய பற்றிய புகாரைப் பெற்ற தேசிய மனித உரிமைகள் ஆணையம், ரெயில்வே வாரியத் தலைவர் மற்றும் ரெயில்வே பாதுகாப்புப் படையின் இயக்குநர் ஜெனரல் ஆகியோருக்கு தற்போது நோட்டீஸ் அனுப்பியதன் மூலம் இந்த சம்பவம் கவனம் பெற்றுள்ளது.






