search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ravi Shankar Prasad"

    பீகார் மாநிலம் பாட்னா மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் மத்திய மந்திரி ரவி சங்கர் பிரசாத் போட்டியிடுகிறார். #NDACandidates #Bihar #RaviShankarPrasad
    பாட்னா:

    பாராளுமன்றத் தேர்தலில் பீகார் மாநிலத்தில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட்டனர். மொத்தம் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளில் இன்று 39 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை மாநில பாஜக பொறுப்பாளர் பூபேந்திர யாதவ் அறிவித்தார்.



    பாட்னா தொகுதியில் பாஜக சார்பில் மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த தொகுதியில் பாஜக சார்பில் ஏற்கனவே வெற்றி பெற்ற சத்ருகன் சின்காவுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

    நவடா எம்பி கிரிராஜ் இந்த முறை பெகுசராய் தொகுதியில் போட்டியிடுகிறார். பாடலிபுத்திரத்தில் ராம்கிரிபால் யாதவ், அர்ராஹ் தொகுதியில் ஆர்.கே.சிங், புக்சார் தொகுதியில் அஸ்வனி சவுபே, கிழக்கு சம்பரன் தொகுதியில் ராதா மோகன் சிங், சரன் தொகுதியில் ராஜீவ் பிரதாப் ரூடி போட்டியிடுகின்றனர்.

    லோக் ஜனசக்தி கட்சியின் சந்தன் குமார் நவடா தொகுதியிலும், சிரக் பஸ்வான் ஜமுய் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். #NDACandidates #Bihar #RaviShankarPrasad
    உலக கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தை இந்திய அணி புறக்கணிக்குமா? என்ற கேள்விக்கு மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் பதில் அளித்தார். #RaviShankarPrasad #IndiaVsPakistan #Cricket
    புதுடெல்லி:

    காஷ்மீரில் உள்ள புலவாமா மாவட்டத்தில் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் இந்திய துணை ராணுவ படை வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டனர். இதனால் இந்தியா-பாகிஸ்தான் இடையே மீண்டும் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. பாகிஸ்தானுடன் விளையாட்டு உறவை துண்டிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் குரல் கொடுத்துள்ளனர்.

    இங்கிலாந்தில் நடக்க உள்ள 12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது ஜூன் 16-ந்தேதி மான்செஸ்டரில் நடக்கும் லீக்கில் இந்திய அணி, பாகிஸ்தானுடன் மோத வேண்டி இருக்கிறது. இந்த ஆட்டத்தை இந்திய அணி புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

    இது தொடர்பாக மத்திய சட்டத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத்திடம் நேற்று கேள்வி எழுப்பப்பட்ட போது அவர் அளித்த பதிலில் ‘கிரிக்கெட் விவகாரத்தில் நான் எந்த கருத்தும் சொல்லமாட்டேன். இது சர்வதேச கிரிக்கெட் தொடர். இதில் விளையாடுவதா? வேண்டாமா? என்பதை இந்திய கிரிக்கெட் வாரியமும், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலும் (ஐ.சி.சி.) பாதுகாப்பு மற்றும் நிலைமைக்கு தக்கபடி இறுதி முடிவை மேற்கொள்ளும்’ என்று பதில் அளித்தார்.

    மேலும் அவர் கூறும் போது, ‘உலக கோப்பையில் பாகிஸ்தானுடன் விளையாடக்கூடாது என்ற வேண்டுகோள் கொஞ்சம் நியாயமானது தான். பல சினிமா படங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதை நீங்கள் பார்த்து இருக்கலாம். விஷயம் வழக்கமான நிலையில் இல்லை. அவர்களின் கவலையை நான் புறக்கணிக்க விரும்பவில்லை. விளையாட வேண்டாம் என்று சொல்வதற்குரிய நேரம் தான் இது. இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கண்டனம் கூட தெரிவிக்கவில்லை’ என்றார்.

    இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரிய மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘உலக கோப்பை போட்டி நெருங்கும் போது, பாகிஸ்தானுடன் விளையாடுவோமா, இல்லையா என்பது தெளிவாக தெரிய வரும். உலக கோப்பை போட்டி அட்டவணையில் மாற்றம் ஏதும் செய்யமாட்டோம் என்று ஐ.சி.சி. ஏற்கனவே கூறி விட்டது. எனவே பாகிஸ்தானுடன் இந்திய அணி விளையாடக்கூடாது என்று மத்திய அரசு விரும்பினால், நாங்கள் விளையாட மாட்டோம். அவ்வாறு ஆட முடியாமல் போனால் அதற்குரிய புள்ளியை நாம் இழக்க நேரிடும். ஒரு வேளை இறுதிப்போட்டியில் நாம் பாகிஸ்தானுடன் மோத வேண்டி இருந்து, அதையும் புறக்கணித்தால் இறுதி ஆட்டத்தில் விளையாடாமலேயே பாகிஸ்தான் உலக கோப்பையை வென்று விடும். இந்த விஷயத்தில் இப்போதைக்கு எந்த முடிவும் எடுக்கவில்லை.’ என்றார்.

    ஐ.சி.சி. கூட்டம் வருகிற 27-ந்தேதி முதல் மார்ச் 2-ந்தேதி வரை துபாயில் நடக்கிறது. இந்த கூட்டத்தில், இந்தியா-பாகிஸ்தான் உலக கோப்பை மோதல் குறித்து விவாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
    அயோத்தியில் சர்ச்சைக்குரிய வழிபாட்டுத்தல நிலம் தொடர்பான விவகாரத்தில் விரைவில் தீர்வு காணப்பட வேண்டும் என இந்த நாட்டின் குடிமகனாக விரும்புகிறேன் என ரவிசங்கர் பிரசாத் குறிப்பிட்டுள்ளார். #Ayodhyacase #RaviShankarPrasad
    பாட்னா:

    அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராமஜென்மபூமி-பாபர் மசூதி நில உரிமை தொடர்பான மேல்முறையீட்டு மனுக்களை விசாரிப்பதற்கு சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் அரசியல் சாசன அமர்வு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த அமர்வு முன் நாளை (செவ்வாய்க்கிழமை) இந்த வழக்கு விசாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.



    ஆனால் இந்த அமர்வில் இடம்பெற்றுள்ள நீதிபதி எ.ஏ.பாப்டேவுக்கு நாளைய விசாரணையில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளது. எனவே, நாளை நடைபெறுவதாக இருந்த விசாரணை திடீரென ரத்து செய்யப்படுவதாக சுப்ரீம் கோர்ட்டு பதிவாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள நோட்டீசில் கூறப்பட்டு உள்ளது.

    இந்நிலையில், மத்திய சட்டத்துறை மந்திரி  ரவிசங்கர் பிரசாத் பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

    ‘ராமஜென்ம பூமியில் ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என்பதை இந்த நாட்டு மக்கள் மிகவும் எதிர்பார்க்கின்றனர். இவ்விவகாரம் சட்டப்படித்தான் தீர்க்கப்பட வேண்டும். எனினும், இந்த சர்ச்சை 70 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகின்றது.

    கோவில் கட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் பல ஆண்டுகளாக எழுந்து வருகிறது. எனவே, இந்த நாட்டின் குடிமகன் என்ற முறையில் கூற வேண்டுமானால் இந்த விவகாரத்துக்கு கூடிய விரைவில் தீர்வு காணப்பட வேண்டும் என நான் விரும்புகிறேன்.

    சபரிமலை வழக்கு உள்பட சில விவகாரங்களில் சுப்ரீம் கோர்ட் மிக அவசரமான விசாரணைகளை நடத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநில போலீசார் பலரை கைது செய்த வழக்கு, மெஜாரிட்டியே இல்லாத எடியூரப்பா கர்நாடக மாநிலத்தில் ஆட்சி அமைப்பது தொடர்பான வழக்கில் இரவு முழுவதும் விசாரணை நடத்தப்பட்டது. இதெல்லாம் நல்ல விஷயம்தான்.

    இதேபோல், நாட்டு மக்கள் மிக ஆவலுடன் எதிர்பார்க்கும் அயோத்தி நிலம் தொடர்பான வழக்கும் விரைவாக விசாரிக்கப்பட வேண்டும்’ என அவர் குறிப்பிட்டார். #Ayodhyacase #RaviShankarPrasad
     
    மத்திய மந்திரி ரவி சங்கர் பிரசாத் உடல்நிலை சீராக உள்ளதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #RaviShankarPrasad #DelhiAIIMSHospital
    புதுடெல்லி:

    மத்திய சட்டத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறைகளின் மந்திரியாக ரவிசங்கர் பிரசாத் இருந்து வருகிறார். இவருக்கு திங்கள் இரவு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  

    எய்ம்ஸ் மருத்துவமனையின் நுரையீரல் நோய்களுக்குச் சிகிச்சை அளிக்கும் பிரிவில் மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு அவருக்கு தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பின் கீழ் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில் அவரது உடல்நிலை சீராக உள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனை சார்பில் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. #RaviShankarPrasad #DelhiAIIMSHospital
    அயோத்தி பிரச்சனை குறித்து சுப்ரீம் கோர்ட்டு விரைவாக விசாரணை நடத்த வேண்டும் என்று மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் வேண்டுகோள் விடுத்துள்ளார். #RaviShankarPrasad #Ayodhya
    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் அகில பாரதீய வழக்கறிஞர்கள் கவுன்சிலின் 15-வது தேசிய மாநாட்டை மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் தொடங்கிவைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    அயோத்தி ராமஜென்மபூமி பிரச்சினையை உடனடியாக தீர்த்துவைப்பதற்காக இதனை விரைவு கோர்ட்டு போல விரைவாக விசாரணை நடத்த வேண்டும் என்று தனிப்பட்ட முறையில் சுப்ரீம் கோர்ட்டுக்கு எனது வேண்டுகோளை விடுக்கிறேன். சபரிமலை கோவில் வழக்கில் உடனடியாக தீர்ப்பு வழங்கும்போது, ராமஜென்மபூமி பிரச்சினை மட்டும் ஏன் கடந்த 70 ஆண்டுகளாக நிலுவையில் இருக்கிறது.

    நாம் ஏன் பாபரை வணங்க வேண்டும். அரசியல்சாசனத்தில் ராமர், கிருஷ்ணர் ஏன் அக்பர் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் பாபர் பற்றி குறிப்பிடப்படவில்லை. ஆனால் நாட்டில் நாம் இதுபோன்ற பிரச்சினைகளை பேசினால் ஒரு வித்தியாசமான சர்ச்சை உருவாகிறது.



    எதிர்காலத்தில் நீதிபதிகளை நியமிப்பதற்காக அகில இந்திய நீதி சேவைகள் அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும். வழக்கறிஞர்கள் கவுன்சில் உறுப்பினர்கள் ஏழைகள் மற்றும் தேவையுள்ள மக்கள் தொடர்பான வழக்கு களை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உறுதி அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ராமஜென்மபூமி பிரச்சினை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 14 மேல்முறையீட்டு மனுக்கள் மீது விசாரணை நடத்த 3 நீதிபதிகள் அமர்வு அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #RaviShankarPrasad #Ayodhya

    60 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சியில் தொடர்ச்சியாக நடந்த ஊழல்களால் மக்கள்தான் தூங்க முடியாமல் தவித்தனர் என்று ராகுல் விமர்சனத்துக்கு பாஜக பதிலடி கொடுத்துள்ளது. #BJP #RaviShankarPrasad
    புதுடெல்லி:

    விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யும் வரை பிரதமர் மோடியை தூங்க விட மாட்டேன் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் நேற்று கூறினார்.

    இதற்கு பா.ஜ.க. மூத்த தலைவர்கள் பலரும் கடும் கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.

    மத்திய மந்திரியும், பா.ஜ.க. மூத்த தலைவருமான ரவிசங்கர் பிரசாத் இது தொடர்பாக டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-



    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சமீபகாலமாக மிகவும் தரம் தாழ்ந்த வகையில் பேசி வருகிறார். இந்தியாவில் ஒரு பிரதமரை மிக, மிக மோசமாக விமர்சிப்பது வரலாற்றிலேயே இதுவே முதல் தடவையாகும். தரம் தாழ்ந்து விட்ட ராகுலிடம் இருந்து பக்குவமான நிலையை எதிர்பார்க்க முடியாது.

    பிரதமர் மோடியை தூங்க விடமாட்டேன் என்று இப்போது ராகுல் சொல்கிறார். இதற்கு முன்பு 60 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில் என்னென்ன நடந்தது என்பது தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லை.

    60 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சியில் எத்தனை, எத்தனை ஊழல்கள் நடந்தன. தொடர்ச்சியாக நடந்த ஊழல்களால் மக்கள்தான் தூங்க முடியாமல் தவித்தனர். இது ராகுலுக்கு தெரியுமா?

    தொடர் ஊழல் பற்றி தெரியாவிட்டால் காங்கிரஸ் மூத்த தலைவர்களிடம் கேட்டு அவர் தெரிந்து கொள்ள வேண்டும்.

    ரபேல் போர் விமானம் வாங்குவதற்கு செய்யப்பட்ட ஒப்பந்தத்தில் ஊழல் நடந்து விட்டதாக ராகுல் அடிக்கடி சொல்கிறார். ஒப்பந்தம் கை மாறியதால்தான் அவர் இப்படி பேசி வருகிறார் என்று நினைக்கிறேன்.

    இதுபற்றி பாராளுமன்றத்தில் நேருக்கு நேர் விவாதம் நடத்துவதற்கு நாங்கள் தயாராக உள்ளோம். ஆனால் எங்களிடம் நேரில் பேசும் தைரியம் ராகுலுக்கு இல்லை.

    இதனால் ராகுல் விவாதிக்க வராமல் ஓடி ஒளிகிறார். கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்று சொல்லி நழுவுகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார். #BJP #Congress #RahulGandhi #PMModi
    5 மாநில சட்டசபைகளுக்கு நடைபெறும் தேர்தல்களில் பா.ஜ.க. வரலாறு காணாத வெற்றிபெறும். சத்தீஸ்கர், ம.பி., ராஜஸ்தானில் மீண்டும் ஆட்சி அமைக்கும் என ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். #5statepolls #BJP # RaviShankarPrasad
    புதுடெல்லி:

    சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், மிஜோரம், தெலுங்கானா ஆகிய 5 மாநில சட்டசபைகளுக்கான தேர்தல் தேதியை டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஓ.பி.ராவத் இன்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

    இந்நிலையில், இந்த தேர்தல்களில் பா.ஜ.க. வரலாறு காணாத வெற்றிபெற்று சத்தீஸ்கர், ம.பி., ராஜஸ்தானில் மீண்டும் ஆட்சி அமைக்கும் என மத்திய சட்டத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

    டெல்லியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ரவிசங்கர் பிரசாத், இந்த தேர்தல்களில் பா.ஜ.க.வுக்கு எதிராக வலிமையான கூட்டணியை அமைக்க தவறிய காங்கிரஸ் தலைமையை  குற்றம்சாட்டியுள்ளார்.

    வலிமையான கூட்டணிக்கான உறவுகளை உருவாக்கவும், பாதுகாக்கவும் தவறிவிட்ட காங்கிரஸ் கட்சியை ஒரு குடும்பத்தினருக்கான கட்சி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    மத்தியில் முன்னர் காங்கிரஸ் ஆட்சி செய்தபோது நோயாளி மாநிலங்களாக நொடிந்துப்போய் கிடந்த ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் தற்போது வெகுவாக முன்னேற்றம் அடைந்துள்ளன.

    சமீபத்தில் உருவாக்கப்பட்ட மிகச்சிறிய மாநிலமான சத்தீஸ்கரில் நடைபெறும் பா.ஜ.க. அரசு நாட்டிற்கே முன்னோடியாக பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வந்துள்ளது.

    ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க. ஆட்சி நல்லமுறையில் நடைபெற்றதாகவும், இந்த தேர்தலிலும் இம்மூன்று மாநிலங்களிலும் பா.ஜ.க. வெற்றிபெற்று, மீண்டும் ஆட்சி அமைக்கும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். #5statepolls #BJP # RaviShankarPrasad
    பாகிஸ்தான், சீனாவின் விளையாட்டுப் பொருளாக ராகுல் காந்தி மாறிவருவதாக குற்றம்சாட்டியுள்ள பா.ஜ.க., காங்கிரஸ் ஆட்சி காலத்திலேயே ரபேல் ஒப்பந்தத்தில் அம்பானி குழுமம் இருந்ததாக தெரிவித்துள்ளது. #RSPrasad #RafaleDeal #RahulGandhi
    புதுடெல்லி:

    இந்திய விமானப்படைக்கு பிரான்சிடம் இருந்து 36 ரபேல் ரக போர் விமானங்களை வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. ரூ.58 ஆயிரம் கோடிக்கு இந்த விமானங்கள் வாங்கப்படுகின்றன.
     
    ரபேல் விமானங்களை வாங்க காங்கிரஸ் ஆட்சி காலத்திலேயே ஒப்பந்தம் போடப்பட்டது. பின்னர் அந்த ஒப்பந்த்தை மாற்றி அமைத்து கடந்த 2015-ம் ஆண்டில் பாரதிய ஜனதா ஆட்சியில் புதிய ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.

    பிரான்ஸ் நாட்டில் இருந்து வாங்கப்படும் போர் விமானங்களை பராமரிக்கும் பொறுப்பை இந்திய அரசுக்கு சொந்தமான எச்.ஏ.எல். நிறுவனத்துக்கு வழங்காமல் விமானத்துறையில் முன் அனுபவம் இல்லாத அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் குழுமத்துக்கு அளிக்கும் வகையில் இந்த ஒப்பந்தம் உருவாக்கப்பட்டுள்ளது.

    மேலும், அதிக தொகை கொடுத்து விமானத்தை வாங்க ஒப்பந்தம் செய்திருப்பதாகவும், இதில் ஊழல் நடந்திருப்பதாகவும் காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. இதுதொடர்பாக, டெல்லியில் இன்று காரசாரமாக பேட்டியளித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நாட்டின் காவலாளியான பிரதமர் மோடி திருடராக மாறிவிட்டதாக குறிப்பிட்டார்.

    இதற்கு பதிலடி தந்துள்ள பா.ஜ.க. மூத்த தலைவரும் மத்திய மந்திரியுமான ரவி சங்கர் பிரசாத், சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து, ராகுல் காந்தியைத் தவிர எந்த கட்சியின் தலைவரும்  இந்த நாட்டின் பிரதமரை இவ்வளவு மட்டரகமாக விமர்சித்தது இல்லை. தலைவர் பதவிக்கான தகுதி அவருக்கு கிடையாது. குடும்பத்தின் பெயரை வைத்து இன்று அவர் தலைவர் பதவியில் இருக்குறார் என்று தெரிவித்துள்ளார்.

     
    ரபேல் ஊழல் தொடர்பாக பாராளுமன்ற கூட்டுகுழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்னும் ராகுல் காந்தியின் கோரிக்கையை நிராகரித்த ரவி சங்கர் பிரசாத், அரைகுறை விவகாரங்களை வைத்துகொண்டு பேசும் ஒருவரை திருப்திப்படுத்துவதற்காக இதை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. 

    கடந்த 2012-ம் ஆண்டில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு அரசின் ஆட்சிக் காலத்திலேயே  ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் அம்பானி குழுமம் இடம் பெற்றிருந்தது. ரபேல் போர் விமானம் தொடர்பாக விபரங்கள் தேவை என்பதன் மூலம் பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளின் கையில் விளையாட்டுப் பொருளாக அவர் மாறிவிட்டார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். #RSPrasad #RafaleDeal #RahulGandhi
    பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு சர்வதேச பிரச்சினைகளே காரணம் என மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் கூறினார். #BharathBandh #PetrolDieselPriceHike #BJP #RaviShankarPrasad
    புதுடெல்லி:

    நாள்தோறும் அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலையை கண்டித்து எதிர்க்கட்சிகள் சார்பில் நேற்று நாடு தழுவிய முழு அடைப்பு (பாரத் பந்த்) போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டம் முற்றிலும் தோல்வியடைந்து விட்டதாக மத்திய அரசும், பா.ஜனதாவும் கூறியுள்ளன.

    டெல்லியில் உள்ள பா.ஜனதா தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத், இது தொடர்பாக மேலும் கூறியதாவது:-

    எதிர்க்கட்சிகளின் முழு அடைப்பு போராட்டம் தோல்வியடைந்து விட்டது. இதற்கு மக்களிடம் ஆதரவு கிடைக்காததால், போராட்டத்தை வெற்றி பெறச்செய்வதற்காக வேறு வழிகளை கையாண்டனர். பாரத் பந்த் என்ற பெயரில் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறையும், அராஜக சம்பவங்களும் வேதனையை ஏற்படுத்தி உள்ளன.

    பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் சந்தித்து வரும் துயரங்கள் குறித்து மோடி அரசுக்கும் நன்கு தெரியும். இதற்கு ஒரு தீர்வு காண்பதற்காக தொடர்ந்து முயன்று வருகிறோம். இதற்கு நிச்சயம் ஒரு தீர்வு காணப்படும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

    வெனிசூலாவில் அரசியல் நிலைத்தன்மை இல்லாமை, ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்தது போன்ற காரணிகளால், எண்ணெய் உற்பத்தி செய்யும் இந்த நாடுகள் உற்பத்திக்கு கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. அமெரிக்காவின் ஷேல் கியாஸ் உற்பத்தி இன்னும் தொடங்கவில்லை.

    எண்ணெய் இறக்குமதியை சார்ந்து வாழும் நாடு இந்தியா. ஆனால் எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள், தங்கள் சொந்த பிரச்சினைகளால் உற்பத்திக்கு கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. எண்ணெய் வளக்குறைவு காரணமாக உலகம் முழுவதும் பெட்ரோல் உற்பத்தி சரிந்துள்ளது.

    இத்தகைய சர்வதேச பிரச்சினைகளே பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணம். ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கூட 2008-க்கும் 2014-க்கும் இடைப்பட்ட காலத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தது. அப்படி இது ஒரு முக்கியமான பிரச்சினையாக உள்ளது. ஆனால் இதற்கான தீர்வு எங்கள் கைகளில் இல்லை.

    இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் கூறினார்.

    இதற்கிடையே பாரத் பந்த் மூலம் நாட்டில் குழப்பத்தையும், வதந்தியையும் பரப்ப முயல்வதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மீது பா.ஜனதா புகார் கூறியுள்ளது. காங்கிரஸ் ஒரு ஊழல் நிறைந்த கப்பல் எனவும், அதனுடன் இணையும் கட்சிகளும் காங்கிரசுடன் சேர்ந்து மூழ்கும் என்றும் பா.ஜனதா தலைவர்களில் ஒருவரும், மத்திய மந்திரியுமான முக்தர் அப்பாஸ் நக்வி கூறியுள்ளார்.  #BharathBandh #PetrolDieselPriceHike #BJP #RaviShankarPrasad
    கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரியை மத்திய மந்திரி ரவி சங்கர் பிரசாத் கூகுள் நிறுவன தலைமையகத்தில் சந்தித்து பேசினார். #RaviShankarPrasad #Google



    கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சையை மத்திய மந்திரி ரவி சங்கர் பிரசாத் கூகுள் நிறுவன தலைமையகத்தில் சந்தித்து பேசினார்.

    இந்தியாவில் டிஜிட்டல் வில்லேஜ் போன்று பல்வேறு இதர திட்டங்களில் கூகுளின் பங்களிப்பு இருக்க வேண்டும், என சுந்தர் பிச்சையிடம் தெரிவித்ததாக மத்திய மந்திரி ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார். 

    "கலிபோர்னியாவில் உள்ள கூகுள் தலைமையகத்தில் கூகுள் நிறுவன குழுவினருடன் சிறப்பான சந்திப்பு. இந்தியாவில் டிஜிட்டல் வில்லேஜ் போன்ற பல்வேறு திட்டங்களில் கூகுளின் பங்களிப்பு இருக்க வேண்டும் என சுந்தர் பிச்சையிடம் கேட்டுக் கொண்டேன்," என ரவி சங்கர் பிரசாத் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

    நவீன விவசாய முறை மற்றும் வானிலை குறித்த விவரங்களை இந்திய விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த கூகுளிடம் கேட்டுக் கொண்டேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

    அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவிற்கு மூன்று நாட்கள் அலுவல் ரீதியிலான சுற்றுப் பயணம் மேற்கொண்ட ரவி சங்கர் பிரசாத், தொழில்நுட்பத் துறையின் முக்கிய அதிகாரிகளை சந்தித்து இந்தியாவின் டிஜிட்டல் பரிணாமத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவது குறித்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளார்.
    சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா விரைவில் ஓய்வு பெற உள்ள நிலையில், அடுத்த தலைமை நீதிபதியை பரிந்துரைக்கக் கோரி சட்ட மந்திரி ரவி ஷங்கர் பிரசாத் கடிதம் எழுதியுள்ளார். #SC #CJI #DipakMisra
    புதுடெல்லி:

    சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதியாக உள்ள தீபக் மிஸ்ராவின் பதவிக்காலம் வரும் அக்டோபர் மாதம் 2-ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில், அவருக்கு அடுத்ததாக தலைமை நீதிபதியாக நியமிக்க உள்ளவரை பரிந்துரைக்க வேண்டும் என தீபக் மிஸ்ராவுக்கு மத்திய சட்ட மந்திரி ரவி ஷங்கர் பிரசாத் கடிதம் எழுதியுள்ளார்.

    தீபக் மிஸ்ராவுக்கு அடுத்த நிலையில் நீதிபதி ரஞ்சன் கோகோய் உள்ளார். சில மாதங்களுக்கு முன்னர் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை அடுக்கி ஊடகங்களை சந்தித்த நீதிபதிகளில் கோகோயும் ஒருவர். இதனால், அவர் தலைமை நீதிபதியாக நியமிக்கப்படுவதில் எதேனும் சர்ச்சை நிகழலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    எனினும், மூத்த நீதிபதிகளுடன் தலைமை நீதிபதி கலந்து ஆலோசித்த பின்னரே அடுத்த தலைமை நீதிபதிக்கான பெயரை பரிந்துரைப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 
    இந்தியாவில் வாட்ஸ்அப் செயலியில் மாற்றங்களை கொண்டு வரும் நோக்கில் வாட்ஸ்அப் சி.இ.ஒ. மற்றும் மத்திய மந்திரி ரவி சங்கர் பிரசாத் இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். #WhatsApp


    வாட்ஸ்அப் செயலி தவறாக பயன்படுத்தப்படுவது குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வாட்ஸ்அப் நிறுவனம் இந்திய சட்ட அமைப்புகளுடன் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என மத்திய தகவல் தொழில்நுட்ப மந்திரி ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார்.

    இந்தியா வந்துள்ள வாட்ஸ்அப் தலைமை செயல் அதிகாரி க்ரிஸ் டேனியல்ஸ் இன்று மத்திய தகவல் தொழில்நுட்ப மந்திரி ரவி சங்கர் பிரசாத்தை சந்தித்தார். சந்திப்புக்கு பின் பேசிய மத்திய மந்திரி வாட்ஸ்அப் தளம் தவறாக பயன்படுத்தப்படுவதை குறைக்க புதிய சட்டம் மற்றும் வழிமுறைகளை கண்டறியப்பட வேண்டும் என தெரிவித்தார்.

    இந்திய சட்ட விதிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் பல்வேறு குற்றசம்பவங்களுக்கு வாட்ஸ்அப் பயன்படுத்தப்படுகிறது, இவற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய தீர்வுகள் கண்டறியப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார். 

    இவற்றை கருத்தில் கொண்ட வாட்அஸ்அப் தலைமை செயல் அதிகாரியிடம் மூன்று அம்சங்களை செய்ய பரிந்துரை வழங்கியதாக மத்திய மந்திரி தெரிவித்தார். அதன்படி குறைகளை களைய இந்தியாவுக்கான அதிகாரி, கார்ப்பரேட் நிறுவன கட்டமைப்பு மற்றும் இந்திய விதிகளுக்கு உட்பட்டு செயல்பட வேண்டும் என ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார்.

    வாட்ஸ்அப் தலைமை செயல் அதிகாரியுடனான சந்திப்பு சிறப்பான ஒன்றாக அமைந்தது. இந்தியாவில் வாட்ஸ்அப் பயன்பாடு ஏற்படுத்தியிருக்கும் நன்மைகளை விளக்கி அவரிடம் நன்றி தெரிவித்ததாகவும் மத்திய மந்திரி ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார்.

    க்ரிஸ் டேனியல்ஸ் வாட்ஸ்அப் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்று உறுதியளித்ததாக மந்திரி ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார்.
    ×