search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rajasthan"

    • ஆம்புலன்ஸ் மூலம் மாவட்ட மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார்.
    • நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு, ஊர் திரும்பும் போது இந்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

    ஓடும் ரெயிலில் இளம் வாலிபர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ராஜஸ்தான் மாநிலத்தின் சித்தோகர் பகுதியில் வசித்து வந்த அக்ஷய் என்ற 22 வயது வாலிபர் ராமேஸ்வரத்தில் மத நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு, ஊர் திரும்பும் போது இந்த துயர சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

    ராமேஸ்வரத்தில் நடைபெற்ற பகவத் சொற்பொழிவு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அக்ஷய் மற்றும் சித்தோகர் பகுதியை சேர்ந்த மேலும் பலர் ராஜஸ்தானில் இருந்து கிளம்பியுள்ளனர். சொற்பொழிவு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முடித்த பிறகு, அங்கிருந்து ராஜஸ்தானுக்கு திரும்ப அக்ஷய் மற்றும் அவருடன் வந்த குழுவினர் கஜூராஹோ எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறியுள்ளனர்.

    ரெயில் பயணத்தின் போது அக்ஷய்-க்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. பிறகு, ஆம்புலன்ஸ் மூலம் மாவட்ட மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். உயிரிழந்த நிலையில், அக்ஷய் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு, அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    மருத்துவம் படிக்க விரும்பிய அக்ஷய் அடுத்த மாதம் செர்பியாவுக்கு சென்று மருத்துவ படிப்பை தொடர இருந்த நிலையில் அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. 

    • மோகன் தாஸ் அக்கிராமத்தில் தனியாக வசித்து வந்தார்
    • கொலை குற்றமாக வழக்கு பதிவு செய்து போலீஸ் விசாரணையை துவங்கியது

    இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தின் மத்திய-மேற்கு பகுதியை சேர்ந்தது குச்சமான் நகரம்.

    இங்குள்ள ரஸல் கிராமத்தில் 15 வருடங்களாக வசித்து வந்தவர் 72 வயதான மோகன் தாஸ் எனும் ஆன்மிக குரு. இவர் அக்கிராமத்தில் உறவினர்கள் இருந்தாலும் தனியாக வசித்து வந்தார்.

    நேற்று மாலை கிராமவாசிகளிடம் பேசி கொண்டிருந்தார். அதற்கு பிறகு உறங்க சென்றார்.

    இன்று காலை அவரை காண கிராமவாசிகள் சென்ற போது அவர் தரையில் கிடந்தார். அவர் கைகள், கால்கள் மற்றும் வாய் கட்டப்பட்ட நிலையில் கிடந்தார்.

    அவர் உயிரிழந்து கிடந்ததை பார்த்து மக்கள் அதிர்ச்சி அடைந்து, போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    தகவலின் பேரில் ஆசிரமத்திற்கு விரைந்த காவல் துறையினர், உயிரிழந்த ஆன்மிக குருவின் சடலத்தை மீட்டனர்.

    "இச்சம்பவம் கொலையாக இருக்குமோ என்று சந்தேகிக்கிறோம். கொலை குற்றமாக வழக்கு பதிவு செய்து விசாரணையை துவங்கி இருக்கிறோம். உடற்கூராய்வு நடந்து முடிந்ததும் அவர் உடல், ரஸல் கிராமத்திலேயே வசிக்கும் அவரின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும்" என குச்சமான் நகர காவல்துறை அதிகாரி சுரேஷ் குமார் தெரிவித்தார்.

    • அப்பெண்ணின் ஆதிக்க கட்டுப்பாடுகள் பிடிக்காமல் அவரை விட்டு பிரிய விரும்பினார் கேஷவ்
    • சட்ட வல்லுனர்கள் மற்றும் மாந்திரீகவாதிகளின் உதவியையும் கேஷவ் நாடியிருக்கிறார்

    ராஜஸ்தான் மாநிலத்தின் கோடா மாவட்டத்தில் உள்ளது ராம்கஞ்ச் மண்டி. இப்பகுதியை சேர்ந்தவர் புஷ்பேந்திரா என்கிற கேஷவ் (25).

    கேஷவும் ஒரு பெண்ணும் 5 வருடங்களாக காதலித்துள்ளனர். நாட்கள் செல்ல செல்ல, கேஷவ் மீது அப்பெண் நண்பர் ஆதிக்கம் செலுத்த தொடங்கினார். கேஷவ் பிற நண்பர்களுடன் பழகுவதையும் தடை செய்தார். இதனால் இருவருக்குமிடையே பல முறை சண்டை நடந்திருக்கிறது.

    கேஷவ், அந்த பெண் நண்பரின் பெயரை "லடாக்கு விமானம்" (போர் விமானம்) என்ற பெயரில் தனது அலைபேசியில் வைத்திருந்திருக்கிறார்.

    அப்பெண்ணின் ஆதிக்க கட்டுப்பாடுகள் பிடிக்காமல் அவரைவிட்டு பிரிய விரும்பிய கேஷவ், பிரேக்அப் செய்வதற்கான வழிகளை ஆராய்ந்திருக்கிறார்.

    கூகுள், யூடியூப் போன்றவற்றில் தேடியதோடு இல்லாமல், சட்ட வல்லுனர்கள் மற்றும் மாந்திரீகவாதிகளின் உதவியையும் அவர் நாடியிருக்கிறார். ஆனால் அவருக்கு இதில் சாதகமான வழி பிறக்கவில்லை.

    இந்நிலையில் கேஷவை வீட்டில் விட்டு விட்டு மற்ற குடும்ப உறுப்பினர்கள் ஒரு குடும்ப நிகழ்ச்சிக்காக சென்றிருக்கிறார்கள்.

    திரும்பி வந்தபோது எத்தனை முறை அழைத்தாலும், கேஷவ் வந்து கதவை திறக்கவில்லை.

    அலைபேசியை தொடர்பு கொண்டபோதும் கேஷவிடமிருந்து பதிலில்லை.

    சந்தேகமடைந்து ஜன்னல் வழியாக உள்ளே பார்த்தபோது, தூக்கில் சடலமாக தொங்கினார்.

    கேஷவை தற்கொலைக்கு தூண்டியதாக கேஷவின் காதலி மீது குற்றம் சாட்டி கேஷவின் தந்தை காவல்துறையிடம் புகாரளித்துள்ளார்.

    ஆனால், இதனை அந்த பெண் மறுத்துள்ளார். கேஷவ் இறப்பு குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் கேஷவிற்கு பொருளாதார சிக்கல்கள் இருந்ததாகவும், அவருக்கு யாரும் உதவ முன் வரவில்லை என்று தெரிவித்துள்ளார்.

    • சென்னை எழும்பூரில இருந்து சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக ஜோத்பூருக்கு சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது
    • ஏப்ரல் 30 மற்றும் மே 7ந் தேதி ஜோத்பூரில் இருந்து எழும்பூர் வந்து சேரும்.

    திருப்பூர் :

    பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்க சென்னை எழும்பூரில இருந்து சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக ஜோத்பூருக்கு சிறப்பு ரெயில் (எண்:06056) இயக்கப்பட உள்ளது.நேற்று மற்றும் மே 4ந் தேதி சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் ரெயில், பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை ரெயில் நிலையங்களில் நின்று கேரள மாநிலம் பாலக்காடு, காசர்கோடு வழியாக மங்களூரு சென்றடையும். அங்கிருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் செல்லும். மறுமார்க்கமாக ஏப்ரல் 30 மற்றும் மே 7ந் தேதி ஜோத்பூரில் இருந்து எழும்பூர் வந்து சேரும்.

    வழக்கமாக வடமாநிலங்களுக்கு சிறப்பு ரெயில் சென்னையில் இருந்து இயக்கப்படும். ஆந்திரா வழியாக பயணிக்கும். ஆனால் இந்த ரெயில் தமிழகத்தின் மேற்கு மாவட்டங்கள் வழியாக பயணித்து ராஜஸ்தான் செல்கிறது.

    • 10 ஆண்டுகளாக இந்த சிலை அமைக்கும் பணிகள் நடைபெற்றன.
    • சிலைக்கு உள்ளே சென்று பக்தர்கள் பார்க்க லிப்ட் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலம் உலகிலேயே உயரமான சிவன் சிலை அமைக்கப் பட்டுள்ளது. தியான தோற்றத்தில் ஒரு குன்றின் மீது சிவன் அமர்ந்திருப்பது போல வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சிலை 369 அடி உயரமுள்ளது. ராஜ்சமந்த் மாவட்டத்தில் உள்ள நத்வாரா நகரில், அமைக்கப்பட்டுள்ள இந்த பிரம்மாண்ட சிலைக்குள் 4 லிப்டுகள், 3 வரிசை படிக்கட்டுகளும் இடம் பெற்றுள்ளன. இதன் மூலம் பக்தர்கள் சிலைக்கு உள்ளே சென்று பார்க்கலாம்.

    சிலைக்கு உள்ளே ஒரு அரங்கும் அமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 3 ஆயிரம் டன் உருக்கு மற்றும் இரும்பு, கான்கிரீட் மற்றும் மணல் ஆகியவற்றை பயன்படுத்தி, 10 ஆண்டுகளில் இந்த சிலை கட்டமைக்கப்பட்டுள்ளது. . இரவிலும் இந்தச் சிலையை காணக்கூடிய வகையில் லேசர் ஒளி விளக்குகள் சிலையை சுற்றி அமைக்கப்பட்டுள்ளன.

    இந்த சிலை அமைந்துள்ள பகுதியில் சுற்றுலா பயணிகளுக்கு பல்வேறு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இன்று நடைபெறும் சிலை திறப்பு விழாவில் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் முதலமைச்சர் அசோக் கெலாட் கலந்து கொள்கிறார்.

    • டெம்போ-டேங்கர் லாரி மோதியதில் கணவன் மனைவி உள்பட மூன்று பேர் பலி.
    • காரும் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.

    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலம் டோங்க் மாவட்டத்தில் உள்ள சதர் காவல் நிலையப் பகுதியில் பேருந்து ஒன்று பைக் மீது மோதியதில் அதில் வந்து கொண்டிருந்த ராதாகிருஷ்ணன் (70), அவரது மனைவி சாகுதேவி (65) உள்பட மூன்று பேர் உயிரிழந்தனர்.

    பிகானேர் நகரில் உள்ள கங்காஷாஹர் பகுதியில் நடைபெற்ற மற்றொரு சம்பவத்தில் டெம்போவும் டேங்கர் லாரி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டெம்போவில் இருந்த சுந்தர்லால் புரா (58), அவரது மனைவி ராஜு தேவி (55) மற்றும் ஜான்வர்லால் புரா (70) ஆகியோர் உயிரிழந்தனர். மேலும் இருவர் காயமடைந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். இதேபோல்

    ஜுன்ஜுனுவின் சதார் காவல் நிலையப் பகுதியில் நடந்த மற்றொரு விபத்தில்,காரும் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இருவர் உயிரிழந்தனர். இறந்தவர்கள் ராஜ்குமார் (42) மற்றும் மந்தீப் (28) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    • கிராமப்புறங்களில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு வழங்கப்படும் இலவச சானிட்டரி நாப்கின் அளவுகளில் எந்த மாற்றமும் இல்லை.
    • 31 மாவட்டங்களில் உள்ள 26,220 பள்ளிகளுக்கும், 23 மாவட்டங்களில் உள்ள 31,255 அங்கன்வாடி மையங்களுக்கும் இலவச சானிட்டரி நாப்கின்களை வழங்கியுள்ளது.

    பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு இலவச சானிட்டரி நாப்கின்களை வழங்க ராஜஸ்தான் அரசு 2022-23 பட்ஜெட்டில் ரூ. 200 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது என்று மாநில அமைச்சர் மம்தா பூபேஷ் தெரிவித்தார்.

    இதுகுறித்து மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மம்தா பூபேஷ் கூறியதாவது:-

    மாநிலம் முழுவதும் 'நான் சக்தி உதான்' திட்டம் படிப்படியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுபோன்ற திட்டம் பெரிய அளவில் செயல்படுத்தும் முதல் மாநிலமாக ராஜஸ்தானில் உள்ளது.

    கிராமப்புறங்களில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு வழங்கப்படும் இலவச சானிட்டரி நாப்கின் அளவுகளில் எந்த மாற்றமும் இல்லை.

    இத்திட்டத்திற்காக 2022-23 நிதியாண்டில் ரூ. 200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 33 மாவட்டங்களில் உள்ள 60,361 அங்கன்வாடி மையங்களில் 1.15 கோடி பயனாளிகளுக்கும், மாநிலத்தில் உள்ள 34,104 அரசுப் பள்ளிகளில் 26.48 லட்சம் பயனாளிகளுக்கும் இலவச சானிட்டரி நாப்கின்கள் வழங்குவதற்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.

    கடந்த ஓராண்டில், ராஜஸ்தான் மெடிக்கல் சர்வீசஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் சார்பில் 31 மாவட்டங்களில் உள்ள 26,220 பள்ளிகளுக்கும், 23 மாவட்டங்களில் உள்ள 31,255 அங்கன்வாடி மையங்களுக்கும் இலவச சானிட்டரி நாப்கின்களை வழங்கியுள்ளது. இதற்காக மொத்தம் ரூ. 104.78 கோடியை ஆர்எம்எஸ்சிஎல் செலவிட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கடந்த ஞாயிற்றுக்கிழமை பெண்ணின் காதலன் போஜாசா பகுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
    ராஜஸ்தான்:

    ராஜஸ்தான் மாநிலம், பிகானேர் மாவட்டத்தில் திருமணமான 45 வயது பெண், ஸ்ரீதுங்கர்கர் பகுதியில் ஓடும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். 

    அவரது உடலை கைப்பற்றிய போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இது குறித்து போலீசார் கூறுகையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்த பெண்ணின் காதலன் போஜாசா பகுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டது. 

    அதன் பின்னர் நடைபெற்ற விசாரணையில் பெண்ணின் கணவர் தான், காதலனை கொலை செய்தது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அந்த பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார்  தெரிவித்தனர்.

    தனது காதலனை கணவர் கொலை செய்ததை அறிந்த அந்த பெண் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் கண்டறியப்பட்டது.

    அந்த பெண்ணின் உடல் பிகானேரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், உடற்கூறு ஆய்விற்கு பின்னர் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படும் என்றும் போலீசார் கூறியுள்ளனர்.



    ராஜஸ்தானில் முதல் மந்திரி அசோக் கெலாட்டிற்கும், கட்சியின் முக்கிய தலைவரான சச்சின் பைலட்டிற்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாகக் கூறப்படுகிறது.
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அசோக் கெலாட் முதல் மந்திரியாக பதவி வகித்து வருகிறார். இவருக்கும் சச்சின் பைலட்டுக்கும் இடையே பனிப்போர் நிலவி வருகிறது.

    இதற்கிடையே, எதிர்க்கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு அமைச்சரவையில் முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டு வருகிறது என விமர்சிக்கும் சச்சின் பைலட், அமைச்சரவையில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். 

    எனவே, நவம்பர் 11-ம் தேதி முதல் மந்திரி அசோக் கெலாட் டெல்லி சென்று காங்கிரஸ் கட்சியின் தற்காலிக தலைவர் சோனியா காந்தியை சந்தித்துப் பேசினார்.

    இந்நிலையில், ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான அமைச்சரவையில் இடம் பிடித்துள்ள 21 அமைச்சர்களும் இன்று ராஜினாமா செய்துள்ளனர். நாளை அமைச்சரவை மாற்றி அமைப்பதற்கு ஏதுவாக, அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா செய்துள்ளனர். 

    நாளை பதவியேற்கும் புதிய அமைச்சரவையில் சச்சின் பைலட் ஆதரவாளர்கள் 12-க்கும் மேற்பட்டோருக்கு இடம் கிடைக்கும் என கூறப்படுகிறது. 

    ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. 7 தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளனர்.
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 25 பாராளுமன்றத் தொகுதிகளில் பாஜக 24 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. ஒரு தொகுதியில் ராஷ்டிரிய லோக்தாந்திரிக் கட்சி முன்னிலையில் உள்ளது. அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் பின்தங்கி உள்ளது.

    7 தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளனர். இதில் சந்திர பிரகாஷ் ஜோஷி (சித்தோர்கர்), நிகல் சந்த் (கங்காநகர்), தேவ்ஜி பட்டேல் (ஜலூர்), துஷ்யந்த் சிங் (ஜல்வாரா பரன்), பிபி சவுத்ரி (பாலி) மற்றும் தியா குமாரி (ராஜ்சமந்த்) ஆகிய 6 பேர் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளனர். பில்வாரா தொகுதி பாஜக வேட்பாளர் சுபாஸ் பகேரியா 214184 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றார்.



    ஜோத்பூரில் முதலமைச்சர் அசோக் கெலாட்டின் மகன் வைபவ் கெலாட், பாஜக வேட்பாளர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை விட 64341 வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கி உள்ளார். பாஜகவில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்த மன்வேந்திர சிங், ராஜ்புத் தொகுதியில் 87145 வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கியிருந்தார். அந்த தொகுதியில் பாஜக வேட்பாளர் கைலாஷ் சவுத்ரி முன்னிலையில் உள்ளார்.

    ஜெய்ப்பூர் (ஊரகபகுதி) தொகுதியில் மத்திய மந்திரி ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் 91493 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். இதேபோல் மத்திய மந்திரி அர்ஜூன் ராம் மேக்வால் (பிகானர்) 86919 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
    வடமாநிலங்களில் பெய்து வரும் புயல் மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். #RainStrom
    புதுடெல்லி:

    வடமாநிலங்களில் தற்போது புயல் மற்றும் கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து, ராஜஸ்தான், குஜராத், மத்தியப்பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் கனமழையில் சிக்கி மக்கள் பலியாகி வருகின்றனர்.

    ராஜஸ்தானின் பல்வேறு பகுதிகளில் நேற்று புயல் தாக்கியதுடன் கனமழை பெய்தது. இதனால் பல இடங்களில் சாலைகள், மரங்கள், மின்கம்பங்கள் சேதமடைந்தன.

    ராஜஸ்தானில் அதிகபட்சமாக 25 பேரும், மத்தியப்பிரதேசத்தில் 15 பேரும், குஜராத்தில் 10 பேரும் பலியாகினர். மேலும் மகாராஷ்டிராவில் 3 பேர் மழைக்கு உயிரிழந்தனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    புயல் மழையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார். அத்துடன்  மழையால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என அறிவித்தது குறிப்பிடத்தக்கது. #RainStrom
    ராஜஸ்தானில் இரண்டு பேர் சொந்தம் கொண்டாடியதால் நீதிமன்றத்தில் கன்றுடன் பசு ஆஜர்படுத்தப்பட்டது சுவாரசியத்தை ஏற்படுத்தியது. #Cowbroughttocourt
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலம் மாண்டோர் காவல் நிலையத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒரு புகார் பதிவானது. அதில், கான்ஸ்டபிள் ஓம் பிரகாஷ் மற்றும் ஆசிரியர் ஷியாம் சிங் ஆகியோர் ஒரு பசுவை சொந்தம் கொண்டாடினர். எனவே பசுவின் உரிமையாளரை கண்டுபிடிக்க வேண்டும்  என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    போலீசார் பசுவின் உரிமையாளரை கண்டுபிடிக்கவில்லை. இதையடுத்து இந்த வழக்கு ஜோத்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.



    இந்நிலையில், இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது சொந்தம் கொண்டாடிய பசுமாட்டை கன்றுடன் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தினர்..

    இதுகுறித்து வழக்கறிஞர்கள் கூறுகையில், பசுவின் உரிமையாளர் யார் என முடிவாகவில்லை. இதையடுத்து பசுவை விலங்குகள் நல காப்பகத்தில் சேர்க்க இருவரும் ஒப்புதல் அளித்துள்ளனர். அடுத்த கட்ட விசாரணை வரும் 15ம் தேதி நடைபெறும் என நீதிபதி தெரிவித்தார்.

    ஒரு பசுவை இரண்டு பேர் சொந்தம் கொண்டாடியதால் நீதிமன்றத்தில் கன்றுடன் அந்த பசு ஆஜர்படுத்தப்பட்டது அப்பகுதியில் சுவாரசியத்தை ஏற்படுத்தியது. #Cowbroughttocourt 
    ×