search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rainfall"

    • செம்பரம்பாக்கம் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 37.20 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
    • ஏரியின் நீர் மட்ட 22 அடியை தாண்டி உள்ளதால் தண்ணீர் வரத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

    காஞ்சிபுரம்:

    வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் குடிநீர் ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது.

    நேற்று இரவும் புறநகர் பகுதியில் பலத்த மழை கொட்டியது. செம்பரம்பாக்கம் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 37.20 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    இதனால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு இன்று காலை நிலவரப்படி தண்ணீர் வரத்து 532 கனஅடியாக உயர்ந்தது.

    செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த உயரம்24 அடி. இதில் 22.19 அடிக்கு தண்ணீர் உள்ளது. ஏரியின் மொத்த கொள்ளளவான 3645 மில்லியன் கனஅடியில் தற்போது 3170 மி.கனஅடி தண்ணீர் உள்ளது குறிப்பிடத்தக்கது. 162 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்ட 22 அடியை தாண்டி உள்ளதால் தண்ணீர் வரத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

    இதே போல் புழல், பூண்டி, சோழவரம் ஏரிகளுக்கும் தண்ணீரு வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3300 மி.கனஅடி. இதில் 2788 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு நீர் வரத்து 281 கனஅடியாக உள்ளது. 189 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவான 1081 மி.கனஅடியில் 743 மி.கன அடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 174 கனஅடி தண்ணீர் வருகிறது. 12 கனஅடி வெளியேற்றப்படுகிறது.

    பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3231மி.கனஅடி. இதில் 1886 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 100 கனஅடி தண்ணீர் வருகிறது. 38 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் மொத்த கொள்ளளவான 500 மி.கனஅடியில் 437 மி.கனஅடிக்கு தண்ணீர் நிரம்பி இருக்கிறது. ஏரிக்கு 15 கனஅடி நீர் வருகிறது. 10 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    • மாலை 6 மணிக்கு தொடங்கிய மழை பின்னர் விட்டுவிட்டு கனமழையாக கொட்டி தீர்த்தது.
    • திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 260 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சாரல் மழை விட்டுவிட்டு பெய்து வந்த நிலையில் தற்போது வடகிழக்கு பருவமழை காரணமாக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் நேற்று மாலை 6 மணிக்கு தொடங்கிய மழை பின்னர் விட்டுவிட்டு கனமழையாக கொட்டி தீர்த்தது.

    இதன்காரணமாக திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் மட்டுமின்றி கொடைக்கானல், பழனி, நத்தம், நிலக்கோட்டை, வேடசந்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்ததால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    கொடைக்கானல் பகுதியில்பெய்து வரும் மழை காரணமாக பல கிராமங்களில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டது. அதனை மின்வாரிய அதிகாரிகள் சரிசெய்து வருகின்றனர். மேலும் மழை சமயத்தில் மரங்கள் மற்றும் மின்வயர்கள் விழுந்து சேதம் ஏற்பட்டால் அதனை கண்காணித்து சீரமைக்கவும் அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளனர்.

    இதனிடையே தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் மழை காரணமாக சாலையோரம் வியாபாரம் செய்யும் தொழிலாளர்கள் மிகுந்த பாதிப்படைந்து வருகின்றனர். மேலும் மார்க்கெட், பஸ்நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ளி வியாபாரிகளும் சிரமம் அடைந்துள்ளனர்.

    திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 260 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது. திண்டுக்கல் 65.6, கொடைக்கானல் ரோஸ்கார்டன் 5, பழனி 24, சத்திரப்பட்டி 10.2, நத்தம் 75.5, நிலக்கோட்டை 26, வேடசந்தூர் 15.6, புகையிலைஆராய்ச்சி நிலையம் 14, காமாட்சிபுரம் 14.2, பிரையண்ட் பூங்கா 5 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.

    குறிஞ்சிப்பாடி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகின்றது. நாளை முதல் வருகிற 6-ம் தேதி வரை மிக கனமழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் கடலூர், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, சிதம்பரம், சேத்தியாத்தோப்பு, புவனகிரி குறிஞ்சிப்பாடி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள், வாகன ஓட்டிகள் என அனைத்து தரப்பு மக்களும் அவதி அடைந்தனர். மாவட்டம் முழுவதும் விவசாய பணிகள் பாதிப்படைந்து வருகின்றது.

    கடலூர் மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு மில்லிமீட்டரில் பின்வருமாறு- அண்ணாமலைநகர் - 74.2 சிதம்பரம் - 38.6 கடலூர் - 33.4 லால்பேட்டை - 25.0 பரங்கிப்பேட்டை - 22.5 ஆட்சியர் அலுவலகம் - 21.8 காட்டுமன்னார்கோயில் - 17.0 புவனகிரி - 15.0 எஸ்ஆர்சி குடிதாங்கி - 13.5 கொத்தவாச்சேரி - 12.0 மீ-மாத்தூர் - 12.0 சேத்தியாதோப்பு - 8.2 வானமாதேவி - 8.0 வடக்குத்து - 6.4 குறிஞ்சிப்பாடி - 5.0 பண்ருட்டி - 3.0 கீழச்செருவாய் - 3.0 பெல்லாந்துறை - 2.0 விருத்தாசலம் - 1.0 குப்பநத்தம் - 1.0 தொழுதூர் - 1.0 மொத்தம் - 323.80 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகி உள்ளது.

    • மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
    • மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.

    கடலூர்:

    இலங்கை மற்றும் அதையொட்டிய குமரிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் 29, 30 ஆகிய நாட்களில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வருகிற 31 மற்றும் நவ.1-ந் தேதிகளில் சில இடங்களிலும், நவ. 2, 3-ந் தேதிகளில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது.

    கடலூர், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, புவனகிரி, லால்பேட்டை, பரங்கிப்பேட்டை, சிதம்பரம், தொழுதூர், வானமாதேவி, புவனகிரி, அண்ணாமலை நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு முதல் அதிகாலை வரை மழை பெய்ந்தது. கடலூர் மாவட்டத்தில் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்தது. இந்த திடீர் மழை காரணமாக ஆங்காங்கே வேளாண்மை பணிகள் பாதிப்படைந்தது. மேலும் தொடர் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. கடலூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:- வனமாதேவி - 14,தொழுதூர் - 8, சிதம்பரம் -7.9,பரங்கிப்பேட்டை -5.4 , அண்ணாமலை நகர் -5,புவனகிரி - 3,பண்ருட்டி -2,லால்பேட்டை -2,கடலூர் கலெக்டர் அலுவலகம் - 0.4 என மொத்தம் 47.70 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகி உள்ளது.

    • பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
    • இதனால் அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

    மதுரை

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந் துள்ள நிலையில் தமிழ்நாட் டில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரண மாக இன்றும், நாளையும் மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட பல்வேறு மாவட் டங்களில் கனமழை பெய் யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள் ளது.

    205 மி.மீ. மழை பதிவு

    இந்தநிலையில் மதுரை மாவட்டத்தில் இன்று காலை முதலே வானம் மேகமூட்டத் துடனும் குளிர்ந்த காற்றும் வீசுகிறது. பல இடங்களில் மழை பெய்து வருகிறது. மதுரை மாவட்டத்தில் ஒரு சில இடங்களை தவிர மாவட்டம் முழுவதும் 205 மி.மீட்டர் மழை பதிவாகியுள் ளது.

    இதில் அதிகபட்சமாக பேரையூரில் 103 மில்லி மீட்டரும், கள்ளிக்குடியில் 52.20 மில்லி மீட்டரும், எழு மலையில் 39.80 மீட்டர் மழையும் பதிவானது. மேலும் மதுரை விமான நிலையம், விரகனூர், சிட் டம்பட்டி, இடையபட்டி, கள்ளந்திரி, தல்லாகுளம், மேலூர், புலிப்பட்டி, தனியா மங்க லம், சாத்தையாறு அணைப்பகுதி, மேட்டுப் பட்டி, ஆண்டிப்பட்டி, சோழவந்தான், வாடிப்பட்டி, உசிலம்பட்டி, குப்பனம் பட்டி, திருமங்கலம் உள் ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.

    மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று காலை 8 மணி முதல் சார லுடன் கூடிய மழை பெய் தது. வாரத்தின் முதல் நாள் என்பதால் பள்ளி, கல்லூரி, வேலைக்கு செல்லும் அனை வரும் மழையில் நனைந்து கொண்டே சென்றனர். இந்த நிலையில் மதுரை மாவட்டத்தில் சம்பா, குருவை சாகுபடி செய்த விவசாயிகள் போதிய மழை இல்லாததால் சம்பா குறுவை சாகுபடி செய்வதில் பாதிப்பு ஏற்பட்டது.

    வைகை அணையில் இருந்து குடிநீருக்காக மட் டுமே தண்ணீர் திறக்கப்பட்ட தால் மதுரை மாவட்டத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 67 சதவீதம் சம்பா சாகுபடி பரப்பளவு குறைந் திருந்தது. இதனால் ஏற்பட் டுள்ள பொருளாதர இழப்பை சரி செய்யும் வகையில் பயிர் காப்பீடு வழங்க வேண்டும் என விவ சாயிகள் வலியுறுத்தி வரு கின்றனர்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மதுரை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. கண்மாய், கிணறு உள்ளிட்ட நீர் நிலை களில் தண்ணீர் வேகமாய் நிரம்பி வருவதால் நிலத்தடி நீர்மட்டமும் கணிசமாக உயர்ந்துள்ளது.

    நீர்மட்டம் உயர்வு

    தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாய பணி களை மேற்கொள்ள விவசா யிகள் ஆர்வம் காட்டி வரு கின்றனர். தொடர் மழை யால் முல்லைப் பெரியாறு அணையில் 122.80 அடியும், வைகை அணையில் 55.09 அடியும், சாத்தையாறு அணையில் 17.90 அடியும் நீர் இருப்பு உள்ளது. தொடர்ந்து அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இந்த தொடர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சிய டைந்து உள்ளனர்.

    • திண்டுக்கல்லில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது.
    • மொத்தம் 66.70 மி.மீ மழை பதிவானது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல்லில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று பெய்த கன மழையின் காரணமாக கொடைக்கானல் ரோஸ்கார்டன் 7.5, பழனி 4, நத்தம் 27, வேடசந்தூர் 2.4, புகையிலை நிலையம் 2.4, கொடைக்கானல் பூங்கா 23.2 என மொத்தம் திண்டுக்கல்லில் 66.70 மி.மீ மழை பதிவானது. தொடர்ந்து பெய்து வரும் கன மழையினால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    • பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்து வருகிறது.
    • குண்டேரிப்பள்ளம் அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 41.75 அடியாகும்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணை தமிழகத்தில் 2-வது பெரிய மண் அணையாகும். பவானி ஆற்றின் நடுவில் கட்டப்பட்டுள்ள இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் சுமார் 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இதுதவிர அணையில் ஏராளமான குடிநீர் திட்டப்பணிகளும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    பவானி சாகர் அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடியாகும். அணையின் நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மாவட்ட மலை பகுதி உள்ளது. நீர்பிடிப்பு பகுதிகளில் தற்போது மழை பொழிவு இல்லாததாலும், அணையில் இருந்து அதிகளவில் பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்து வருகிறது.

    இன்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 77.73 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 322 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 1305 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதேபோல் குண்டேரிப்பள்ளம் அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 41.75 அடியாகும். தற்போது 32.44 அடியாக நீர்மட்டம் குறைந்து காணப்படுகிறது. இதே போல் 30.84 அடியாக உள்ள பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 21.72 அடியாகவும், 33.46 அடியாக உள்ள வரட்டுபள்ளம் அணையின் நீர்மட்டம் தற்போது 22.11 அடியாகவும் குறைந்து காணப்பட்டது.

    நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாததால் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். 

    • நாடு முழுவதும் 7 கோடி டன் கொள்ளளவில் சேமிப்பு கிடங்குகள் கட்டப்பட உள்ளன. இதற்காக ரூ.1 லட்சம் கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
    • முதல் கட்டமாக நாடு முழுவதும் 10 மாவட்டங்களில் இத்திட்டம் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட உள்ளது.

    மேலசொக்கநாதபுரம்:

    இந்திய உணவுக்கழகம் விவசாயிகளிடமிருந்து உணவு தானியங்களை கொள்முதல் செய்கிறது. தமிழகத்தில் நுகர்பொருள் வாணிப கழகம் நெல்கொள்முதல் செய்கிறது. பல்வேறு இடங்களில் போதிய கிடங்கு வசதி இல்லாததால் தானியங்கள் திறந்த வெளியில் வைக்கப்படுகின்றன.

    இதனால் மழையில் நனைந்து வீணாகி வருவதால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது. நாடு முழுவதும் 33 கோடி டன் உணவு தானியங்களை உற்பத்தி செய்து வரும் நிலையில் அதனை சேமித்து வைக்க போதிய கிடங்கு வசதி இல்லை.

    இதனால் தானியங்கள் வீணாகி வருகின்றன. இதனை தடுக்க மத்திய கூட்டுறவு அமைச்சகம் சார்பில் நாடு முழுவதும் 7 கோடி டன் கொள்ளளவில் சேமிப்பு கிடங்குகள் கட்டப்பட உள்ளன. இதற்காக ரூ.1 லட்சம் கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

    வேளாண் அமைச்சகம் மற்றும் உணவு, பொது வினியோக அமைச்சகம் பல்வேறு திட்டங்களை ஒருங்கிணைத்து கூட்டுறவு அமைச்சகம் சார்பில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    முதல் கட்டமாக நாடு முழுவதும் 10 மாவட்டங்களில் இத்திட்டம் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட உள்ளது. அதில் ஒன்றாக தேனி மாவட்டம் போடி அருகே உள்ள சில்லமரத்துப்பட்டி தொடக்க கூட்டுறவு கடன் சங்கம் வாயிலாக 1000 டன் கொள்ளளவில் சேமிப்பு கிடங்கு கட்டப்பட உள்ளது.

    இதற்காக 4 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டு 1 ஏக்கரில் கிடங்கு கட்டுவதற்கான வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தை தேசிய வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியின் துணை நிறுவனமான நாப்கான் ஆய்வு செய்துள்ளது. விரிவான அறிக்கை தயாரிக்கும் பணி முடிவடைந்ததும் ரூ.2 கோடி செலவில் சாலைப் போக்குவரத்து உள்பட அனைத்து வசதிகளுடன் கூடிய கிடங்கு கட்டப்படும். இங்கு போடி மற்றும் சில்லமரத்துப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் உணவு தானியங்கள் இருப்பு வைக்கப்படும்.

    ஒவ்வொரு தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கம் வாயிலாக கிடங்கு அமைக்கப்படுவதால் நாடு முழுவதும் பரவலாக சேமிப்பு வசதிகள் கிடைக்கும். விவசாயிகள் விளைவிக்கும் தானியங்கள் உள்ளூரிலேயே உடனுக்குடன் பாதுகாப்பாக இருப்பு வைக்கப்படும். தானியங்கள் வீணாவது தடுக்கப்படுவதுடன் விவசாயிகளுக்கு போக்கு வரத்து செலவு குறையும்.

    மேலும் விளை பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்க வழிவகை செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • அரிசி கொம்பன் உணவு சாப்பிடும் போது மயக்க ஊசி செலுத்தி பிடிக்க திட்டமிட்டு இருந்தனர்.
    • யானை முகாமிட்டுள்ள பகுதியில் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் அதனை பிடிக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.

    உத்தமபாளையம்:

    கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே உள்ள சின்னக்கானல், சாந்தம்பாறை பகுதியில் சுற்றித் திரிந்து 11 உயிர்களை பலி வாங்கிய அரிசி கொம்பன் யானையை கேரள வனத்துறையினர் கடந்த மாதம் பிடித்து தேக்கடி வனப்பகுதியில் விட்டனர்.

    அங்கிருந்து வெளியேறிய அரிசி கொம்பன் மேகமலை வனப்பகுதியில் சுற்றித் திரிந்தது. கடந்த 27-ந் தேதி கம்பம் நகருக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்திய அரிசி கொம்பன் அதன் பிறகு சுருளிப்பட்டி வழியாக கூத்தநாச்சியம்மன் கோவில் பகுதிக்கு வந்தது.

    நாராயணத்தேவன் பட்டி, காமயகவுண்டன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தோட்டங்களில் இருந்த பயிர்களை சேதப்படுத்தி அங்கிருந்த வேலிகளை சேதப்படுத்தியதில் அதன் துதிக்கையில் காயம் ஏற்பட்டது.

    மேலும் தற்போது வலது கண்ணில் பார்வை குறைபாடு ஏற்பட்டுள்ளது. அதற்கு விரும்பிய உணவு கிடைக்கச் செய்யும் வகையில் வனத்துறையினர் அது சுற்றித் திரியும் இடங்களில் பலாப்பழம், அரிசி, கரும்பு ஆகியவற்றை வைத்து வருகின்றனர்.

    தற்போது அது முகாமிட்டுள்ள இடம் வாழை, தென்னை, கொய்யா, கரும்பு, திராட்சை தோட்டங்கள் சூழ்ந்த பகுதியாகும். இந்த வாசனை யானைகளுக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் அரிசி கொம்பன் கடந்த 4 நாட்களாக அங்கேயே உள்ளது.

    யானையை பிடிக்க ஊட்டி தெப்பக்காட்டில் இருந்து பயிற்சி பெற்ற 20க்கும் மேற்பட்டோர் கம்பம் வந்துள்ளனர். அரிசி கொம்பன் உணவு சாப்பிடும் போது மயக்க ஊசி செலுத்தி பிடிக்க திட்டமிட்டு இருந்தனர். ஆனால் வனத்துறையினருக்கு சவால் விடும் வகையில் சிறிது நேரம் உணவு சாப்பிட்டு விட்டு அது மின்னல் வேகத்தில் மறைந்து விடுகிறது.

    சண்முகா நதி அணையை ஒட்டி அமைந்துள்ள ஒரு தொழிலதிபரின் வாழைத் தோட்டத்தில் புகுந்து 50க்கும் மேற்பட்ட செவ்வாழைத்தார்களை சாப்பிட்டது. பின்னர் சின்ன ஓவுலாபுரம் மலைப்பகுதியில் உள்ள பெருமாள் கோவில் அருகே நின்றது. இன்று காலை வரை அதே இடத்தில் இருப்பதால் யானையின் நகர்வினை கம்பம் வனச்சரக அலுவலகத்தில் உள்ள ரேடியோ காலர் ரிசவர் மூலம் உறுதி செய்து வருகின்றனர். கம்பம் வனச்சரக அலுவலகத்தில் 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு சென்னை முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் அலுவலகம், மதுரை மண்டல தலைமை வனப்பாதுகாவலர் அலுவலகங்களுடன் இணைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.

    யானை முகாமிட்டுள்ள பகுதியில் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் அதனை பிடிக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. யானை ஒரே இடத்தில் இருப்பதால் சுருளிப்பட்டி, காமயகவுண்டன்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, சுருளி அருவி உள்ளிட்ட பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தோட்ட தொழிலாளர்களையும் வேலைக்கு செல்ல வேண்டாம் என வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.

    தேனி மாவட்டம் அரசரடி, சோலைத்தேவன்பட்டி, முந்தல் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மலைவாழ் மக்கள் காட்டு யானையைப்பற்றி நன்கு அறிந்தவர்கள். இவர்கள் யானையின் போக்கு மற்றும் நடமாட்டத்தை அறிந்து அதனை விரட்டும் தன்மை கொண்டவர்கள். மேலும் ஓரிரு நாட்களில் யானையை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் வல்லமை படைத்தவர்கள். அது போன்ற பழங்குடி இன மக்கள் மற்றும் முதுமலைப்பகுதியில் இருந்து வரழைக்கப்பட்ட மக்களை யானை முகாமிட்டுள்ள பகுதிக்கு வரவழைத்து வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

    குறிப்பிட்ட இடத்துக்கு வந்தவுடன் மயக்க ஊசி செலுத்தி வனப்பகுதிக்குள் விரட்டவும் மருத்துவக்குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். இயற்கை காரணிகள் பாதகமாக இருப்பதால் மயக்க ஊசி செலுத்தும் முயற்சி தொடர்ந்து தோல்வியடைந்து வருவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

    • திட்டக்குடி பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்த 350 ஏக்கர் நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதமானதால் மீள முடியாத சோகத்தில் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
    • 3 நாட்களாக பெய்து வரும் தொடர்மழை காரணமாக. நெற்பயிர்கள் நிலங்களில் சாய்ந்தது. இதில் 350-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பில் நெற்பயிர்கள் மழைநீரில் முழ்கி உள்ளது.

    கடலூர்:

    திட்டக்குடி பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்த 350 ஏக்கர் நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதமானதால் மீள முடியாத சோகத்தில் விவசாயிகள் தவித்து வருகின்றனர். கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த நாவலூர், மருதாத்தூர், ஆதமங்கலம், மேலூர், தொளார். புத்தேரி உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெலிங்டன் நீர்த்தேக்க பாசனத்தை கொண்டு நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இது தற்போது அறுவடைக்கு தயாராக இருந்தது.அதன்படி அறுவடை எந்திரங்கள் விவசாய நிலங்களில் நிற்கும் நிலையில், 3 நாட்களாக பெய்து வரும் தொடர்மழை காரணமாக அறுவடை செய்ய முடியாமல் உள்ளது. மேலும், இந்த மழையினால் நெற்பயிர்கள் நிலங்களில் சாய்ந்தது. இதில் 350-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பில் நெற்பயிர்கள் மழைநீரில் முழ்கி உள்ளது.

    இதனால் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.25 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் செலவு செய்த விவசாயிகள் மீள முடியாத சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். மழையால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். திட்டக்குடி பகுதியில் முறையான வடிகால் வாய்க்கால் வசதி இல்லாததால் மழையை பார்த்து மகிழ்ச்சி அடைய வேண்டிய விவசாயிகள் வேதனை அடைய வேண்டிய அவல நிலை தொடர்கிறது.

    • இன்று காலை முதல் தொடர்ந்து பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது.
    • அதிராம்பட்டினத்தில் 153 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நள்ளிரவு முதல் கனமழை கொட்டியது.

    விடிய விடிய மழை பெய்தது.

    இன்று காலை முதல் தொடர்ந்து பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது.

    இந்த நிலையில் மாவட்டத்தில் ஒரே நாளில் 1202.40 மி.மீ. மழை பெய்துள்ளது.

    அதிகபட்ச மாக அதிராம்பட்டினத்தில் 153 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த மழையின் அளவு மி.மீ.யில் வருமாறு:-

    அதிராம்பட்டினம்-153, திருக்காட்டுப்பள்ளி -127.60, பூதலூர் -114.60, மதுக்கூர் -90.29, பட்டுக்கோட்டை -83, வெட்டிக்காடு -64.60, தஞ்சாவூர் -41 ஆகும்.

    • மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை தொடர்ந்து மழை பெய்ததால் மழை நீர் சாலையில் ஓடியது.
    • இரவு 8 மணி முதல் நடுஇரவு 1 மணி வரை மின் விநியோகம் பாதிக்கப்பட்டது.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் பகுதியில் கடந்த சில தினங்களாக பகல் நேரங்களில் கடுமையான வெயிலின் தாக்கம் இருந்து வந்தது. இதை குளிர்விக்கும் வகையில் நேற்று இரவு 3 மணி நேரம் தொடர்ந்து இடி மின்னலுடன் கனமழை பெய்தது.நேற்று மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை தொடர்ந்து மழை பெய்ததால் மழை நீர் சாலையில் ஓடியது. இத னால் கல்லாங்காட்டுவலசு, குமா ரவலசு, உப்புபா ளையம் ரோடு குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது.உப்புப்பா ளையம் ரோட்டில் வீட்டிற்குள் மழை நீர் புகுந்தது.வீட்டிற்குள் மழை நீர் புகுந்ததால் பாதுகாப்பிற்காக ஒரு சில குடும்பத்தினர் இரவோடு இரவாக மேடான பகுதியில் உள்ள தங்களது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டனர்.மழைநீர் வீட்டிற்குள் சென்றதால் வீட்டிற்குள் இருந்த கழிவறையில் நீர் புகுந்து சுகாதாரக் கேடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.கனமழையின் காரணமாக சேனாபதிபாளையம் கிராமம் சக்திபாளையத்தில் உள்ள நல்லசாமி என்பவருக்கு சொந்தமான பசு மாடு ஒன்று இடி தாக்கி இறந்தது. இதன் மதிப்பு ரூ.50 ஆயிரம் இருக்கும். தீத்தாம்பாளையத்தில் வேப்ப மரம் விழுந்தன. இதனால் அப்பகுதியில் இருந்த 4 மின்கம்பங்கள் சாய்ந்தன.

    சேரன் நகரில் இடி தாக்கி டிரான்ஸ்பார்மர் பழுதடைந்தன. இதனால் நேற்று இரவு 8 மணி முதல் நடுஇரவு 1 மணி வரை மின் விநியோகம் பாதிக்கப்பட்டது. மின் வாரிய ஊழியர்களால் டிரான்ஸ்பார்மர் சரி செய்யப்பட்டு மீண்டும் வினியோகம் செய்யப்பட்டது.நேற்று வெள்ளகோவில் பகுதியில் 76 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது.

    ×