search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Plunder"

    விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே பெண்களை கட்டிப்போட்டு மர்மநபர்கள் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.
    கள்ளக்குறிச்சி:

    விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள நல்லாத்தூர் காட்டுகொட்டாய் பகுதியை சேர்ந்தவர் கண்ணகி (வயது 45). இவருக்கு சத்யராஜ் என்ற மகனும், தனலட்சுமி (25) என்ற மகளும் உள்ளனர்.

    சத்யராஜிக்கு திருமணமாகி விட்டது. அவரது மனைவி சுகுணா (26) இவர்கள் அனைவரும் காட்டுகொட்டாய் பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வந்தனர். இவர்களுடன் ஏழுமலை (45) என்பவரும் விவசாய வேலை பார்த்து வந்தார்.

    நேற்று இரவு 9 மணியளவில் அவர்கள் வீட்டில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தனர். அப்போது 5 வாலிபர்கள் அங்கு திடீரென்று வந்தனர். அவர்களில் 2 பேர் வீட்டுக்கு வெளியே நின்றனர். 3 பேர் வீட்டுக்குள் புகுந்தனர்.

    உடனே அவர்கள் அங்கு இருந்தவர்களை கத்தியை காட்டி சத்தம் போட்டால் குத்தி கொன்று விடுவோம் என்று மிரட்டினர்.

    பின்பு அவர்கள் சத்யராஜ், சுகுணா, தனலட்சுமி, கண்ணகி, ஏழுமலை ஆகியோரை கை-கால்களை கட்டினர். பின்பு அவர்கள் சுகுணா, தனலட்சுமி கழுத்தில் கிடந்த செயின் மற்றும் கம்மலை பறித்தனர். அப்போது ஏழுமலையும் கண்ணகியும் கூச்சல் போட்டு அலறினர்.

    இதனால் ஆத்திரம் அடைந்த கொள்ளையர்கள் ஏழுமலையையும், கண்ணகியையும் கட்டையால் தலையில் தாக்கினர். இதில் அவர்கள் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. அப்போது சுகுணா மறைத்து வைத்து இருந்த செல்போனில் உறவினர்களுக்கு கொள்ளையர்கள் வீட்டிற்குள் புகுந்து இருப்பது குறித்து தகவல் தெரிவித்தார். இதை அறிந்ததும் உறவினர்கள் பாண்டியன், கண்ணன் ஆகியோர் காட்டுக்கொட்டாய்க்கு விரைந்து வந்தனர்.

    இதை பார்த்ததும் வீட்டிற்கு வெளியே நின்ற 2 கொள்ளையர்களும் உஷார் அடைந்து பாண்டியன், கண்ணன் ஆகியோரையும் தாக்கி கயிற்றால் கட்டினர். மேலும் அவர்கள் சத்தம் போடாமல் இருக்க வாயில் துணியை திணித்தனர்.

    பின்பு கொள்ளையர்கள் அனைவரும் வீட்டில் இருந்த பீரோவை உடைத்து ரூ.70 ஆயிரத்தையும், 3 பவுன் நகையையும் கொள்ளையடித்து சென்று விட்டனர்.

    இந்த கொள்ளை சம்பவம் குறித்து கச்சிராயப்பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ராமநாதன், இன்ஸ்பெக்டர் வள்ளி, சப்-இன்ஸ்பெக்டர் குணசேகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    தப்பியோடிய கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர். வீடு புகுந்து பெண்களை கட்டிப்போட்டு நகை-பணம் கொள்ளை நடத்திய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    5.78 கோடி ரெயில் கொள்ளையில் கைது செய்யப்பட்ட கொள்ளையனை சிபிசிஐடி போலீசார் விசாரணையின் போது திடீரென மயங்கி விழுந்ததையடுத்து உடனடியாக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். #SalemChennaiTrainRobbery #ChennaiTrainRobbery #RBIMoney

    ராயபுரம்:

    சேலத்தில் இருந்து சென்னை வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் கடந்த 2016-ம் ஆண்டு ரெயில் பெட்டி மேற்கூரையில் துளை போட்டு ரூ.5.78 கோடி கொள்ளையடிக்கப்பட்டது.

    இந்த வழக்கில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த தினேஷ், ரோஹன்பார்த்தி ஆகிய 2 பேர் கடந்த 12-ந்தேதி கைது செய்யப்பட்டனர். மேலும் கொள்ளையில் தொடர்புடைய மோஹர்சிங், ருசிபார்த்தி, காலியா என்ற கிருஷ்ணா, மகேஷ்பார்த்தி, பில்தியா என்ற பிரஜ்மோகன் ஆகியோர் வேறொரு வழக்கில் கைதாகி அங்கு சிறையில் இருப்பது தெரிந்தது.

    அவர்கள் 5 பேரையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்து சென்னை அழைத்து வந்தனர். ரெயில் கொள்ளையில் மோஹர்சிங் தலைவனாக செயல்பட்டு இருந்தார்.

    இதையடுத்து மோஹர் சிங், பில்தியா என்ற பிரஜ் மோகன் உள்பட 5 பேரையும் 14 நாள் காவலில் விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் கோர்ட்டில் அனுமதி பெற்றனர். அவர்களிடம் எழும்பூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி. தலைமை அலுவலகத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு விசாரணையின் போது பில்தியா என்கிற பிரஜ்மோகன் திடீரென மயங்கி விழுந்தார். அவரை உடனடியாக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அவருக்கு ஆஸ்பத்திரியில் உள்ள 4-வது மாடியில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவனது உடலில் சோர்வு ஏற்பட்டு இருப்பதாக தெரிகிறது. #SalemChennaiTrainRobbery #ChennaiTrainRobbery #RBIMoney

    வங்கி கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நேபாளத்தைச் சேர்ந்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Robbery #Bankrobbery

    போரூர்:

    கடந்த 1-ந்தேதி ராமாவரம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள தனியார் வங்கியில் கொள்ளை முயற்சி நடந்தது.

    சம்பவம் நடந்த அன்று அதிகாலை 3 மணிக்கு கொள்ளையர்கள் வங்கியின் அலாரத்தை துண்டித்தனர். மும்பையில் உள்ள வங்கியின் தலைமை அலுவலகத்தில் இதை கண்காணித்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

    இதையடுத்து ராமாவரம் போலீசார் அந்த வங்கிக்கு சென்றனர். போலீசை கண்டதும் கொள்ளை கும்பல் தப்பி ஓடி விட்டது. அவர்கள் விட்டுச் சென்ற கியாஸ் சிலிண்டர், கட்டர் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினார்கள்.

    வங்கி கொள்ளை முயற்சி குறித்து ராமாவரம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். அப்போது அண்ணா நகரில் உள்ள ஒரு தனியார் மதுபான பாரில் பணிபுரிந்த 2 பேருக்கு இதில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட கணேஷ் போகத் (21), நாரத் போக் (21) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் இவர்கள் நேபாளத்தைச் சேர்ந்தவர்கள், சென்னையில் காவலாளிகளாக வேலை பார்க்கும் நண்பர்கள் வீட்டில் தங்கி இருந்தது தெரிய வந்தது.

    நேபாளத்தில் உள்ள வங்கி கொள்ளையன் ஒருவன் தூண்டுதலால் இதை செய்ய முடிவு செய்துள்ளனர். இவர்களுடன் சேர்த்து இந்த கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 4 பேர் தப்பி ஓடி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    வளசரவாக்கம் போலீஸ் உதவி கமி‌ஷனர் சம்பத், ராமாவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி ஆகியோர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். தப்பி ஓடிய கொள்ளையர்களின் கூட்டாளிகள் விரைவில் பிடிபடுவார்கள் என்று போலீசார் நம்பிக்கை தெரிவித்தனர். #Robbery #Bankrobbery

    மத்திய பிரதேச மாநிலத்தில் சம்பல் பள்ளத்தாக்கில் நீண்டகாலமாக கொள்ளை போன்ற சம்பவங்களில் ஈடுபட்டுவந்த கொள்ளையனை கிராம மக்கள் சுட்டுக்கொன்றனர்.

    போபால்:

    மத்தியபிரதேச மாநிலம் சம்பல் பள்ளத்தாக்கு பகுதியில் நீண்ட காலமாக கொள்ளைகும்பல் செயல்பட்டு வருகிறது. போலீசாரின் நடவடிக்கையால் கொள்ளையர்கள் கட்டுப்படுத்தப்பட்டனர்.

    கடந்த வாரம் மொரேனா கிராமத்தில் சம்பல் கொள்ளையர்கள் 7 பேர் வந்தனர். அதில் 5 பேர் ஆயுதங்களும் துப்பாக்கிகளும் வைத்திருந்தனர்.

    கிராம மக்களை மிரட்டி ரூ. 50 ஆயிரம் பணம் மற்றும் பொருட்களை பறித்துச் சென்றனர். அதன்பிறகு நேற்று முன்தினம் இரவு மீண்டும் வந்து கிராம மக்களை மிரட்டி பணம் பறிப்பில் ஈடுபட்டனர்.

    இந்த முறை கிராம மக்கள் உஷார் ஆனார்கள். கொள்ளையர்களை எதிர்த்து கிராம மக்கள் சிலர் துப்பாக்கியால் சுட்டனர். சினிமாவில் வருவது போல் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டனர்.

    அதில் ஒரு கொள்ளையன் சுட்டுக் கொல்லப்பட்டான். மற்றவர்கள் தப்பி ஓடி விட்டனர். அந்த பகுதியில் 500 மீட்டர் சுற்றளவுக்கு ரத்தம் சிதறிக் கிடந்தது. எனவே மேலும் கொள்ளையர்கள் துப்பாக்கி குண்டு காயத்துடன் தப்பிச் சென்று இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

    அந்தப் பகுதியில் கொள்ளையர் நடமாட்டம் இருப்பதால் கிராம மக்கள் தற்காப்புக்கு துப்பாக்கி வைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. சிலரிடம் 19-ம் நூற்றாண்டு துப்பாக்கிகளும் உள்ளன. இதை வைத்து தான் எதிர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

    பாரீஸ் ஓட்டலில் சவுதி அரேபியா இளவரசியின் ரூ.7 கோடி நகைகள் கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #saudiarabiaprincess

    பாரீஸ்:

    சவுதி அரேபியாவை சேர்ந்த இளவரசி ஒருவர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள ‘ரிட்ஸ்’ என்ற 5 நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்தார்.

    இந்தநிலையில் அவர் தங்கி இருந்த ஆடம்பர அறையின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் அறையில் வைத்திருந்த தங்கம் மற்றும் வைர நகைகளை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

    அவற்றின் மதிப்பு ரூ.7 கொடி (9 லட்சத்து 30 ஆயிரம் டாலர்) என மதிப்பிடப் பட்டுள்ளது. இந்த ஓட்டலில் இந்த ஆண்டில் மட்டும் 2-வது தடவையாக கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.

    கடந்த ஜனவரியில் இந்த ஓட்டலுக்குள் உள்ள கடைகளில் இருந்து ஒரு கும்பல் ரூ.4 கோடி மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்து சென்றது குறிப்பிடத்தக்கது.#saudiarabiaprincess

    அரியானாவில் கோவிலுக்குள் 2 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சண்டிகர்:

    அரியானா மாநிலம் கர்ணால் மாவட்டத்தில் மாங்கலார் என்ற கிராமம் உள்ளது. இங்கு புகழ் பெற்ற கோவில் ஒன்று அமைந்துள்ளது.

    இந்த கோவிலில் பூசாரியாக வினோத் என்பவரும், அவருக்கு உதவியாக சுல்தான் என்பவரும் பணியாற்றி வந்தனர். மேலும், கர்ஜிந்தர், ரவீந்தர்சர்மா, அஜய்சர்மா ஆகியோர் ஊழியர்களாக இருந்தனர்.

    அவர்கள் இரவில் கோவிலிலேயே தங்கிக் கொள்வது வழக்கம்.

    சம்பவத்தன்று இரவு மர்ம நபர்கள் கோவிலுக்குள் நுழைந்தனர். அவர்கள் கோவிலில் இருந்த 5 பேரையும் கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களால் தாக்கினார்கள். இதில் வினோத், சுல்தான் ஆகியோர் இறந்துவிட்டனர்.

    மற்ற 3 பேருடைய நாக்குகளையும் துண்டித்தனர். பின்னர் கோவில் கதவை வெளிப்பக்கமாக பூட்டிவிட்டு சென்றுவிட்டனர்.

    மறுநாள் காலை குழந்தைகளும், ஒரு குடும்பத்தினரும் கோவிலுக்கு சென்றார்கள். அப்போது கோவில் வெளிப்பக்கமாக பூட்டி இருந்தது. உள்ளே இருந்து முனகல் சத்தம் கேட்டது.

    இதுபற்றி ஊர் மக்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். அங்கே 2 பேர் இறந்து கிடப்பதும், 3 பேர் நாக்கு அறுந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தது தெரியவந்தது. 3 பேரையும் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    கோவிலில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு இருந்தது. எனவே கொள்ளையர்கள் பணத்தை திருடிவிட்டு அவர்களையும் தாக்கி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    நாக்கு துண்டிக்கப்பட்டதால் 3 பேராலும் பேச முடியவில்லை. மேலும் அவர்களுக்கு அதிக அளவில் ரத்தம் வெளியேறி இருப்பதால் அபாய கட்டத்தில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்கள் குணமானதற்கு பிறகு தான் நடந்த சம்பவம் என்ன என்பது பற்றிய முழு விவரமும் தெரியவரும்.

    புதுப்பேட்டையில் பெண்ணிடம் நகை பறித்த கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    சென்னை:

    புதுப்பேட்டை திருவேங்கடம் தெருவை சேர்ந்தவர் சாந்தி (வயது47). இவர் நேற்று இரவு அதே பகுதியில் உள்ள கடைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர். அவர்களில் பின்னால் அமர்ந்திருந்த வாலிபர் சாந்தியின் கழுத்தில் கிடந்த 10 பவுன் செயினை பறித்தான். பின்னர் இருவரும் தப்பி ஓடிவிட்டனர்.

    இதுபற்றி சாந்தி எழும்பூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளில் வந்த கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

    செயின் பறிப்பு சம்பவங்களை கட்டுப்படுத்த போலீசார் கேமராக்களை பொருத்தி நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இருப்பினும் செயின் பறிப்பு சம்பவங்கள் தினமும் அரங்கேறிக் கொண்டே இருக்கின்றன.
    முதுகுளத்தூர் சந்தையில் தொடர் திருட்டில் ஈடுபட்ட கொள்ளையர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    முதுகுளத்தூர்:

    முதுகுளத்தூர் வாரசந்தை நாளான ஒவ்வொரு வியாழக் கிழமைகளிலும் கிராம பகுதியிலிருந்து சந்தைக்கு பொருட்களை வாங்க வரும் நபர்களிடம் செல்போன், பணம், நகைகள் திருடுபோயின.

    இதையடுத்து முதுகுளத்தூர் டி.எஸ்.பி., உதயசூரியன் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் பெரிய சாமி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சுதர்சன் மற்றும் போலீசார் வாரசந்தையில் சீருடை இல்லாமல் ரோந்து வந்தனர்.

    அப்போது சந்தைக்கு வந்த சாயல்குடி ஜெயேந்திரபாண்டியிடம் இருந்து, செல்போனை திருடும் போது, போலீசார் பிக்பாக்கெட் திருடர்களைகையும், களவுமாக பிடித்தார்.

    பிக் பாக்கெட் திருடர்களான மதுரை திருப்பரங்குன்றம் ராஜேந்திரன், (52), ராமநாதபுரம் பசும்பொன் நகரை சேர்ந்த செல்வக்குமார் (41), ஆகிய இருவரிடம் இருந்து 2 செல்போன்கள், 5 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

    இருவர் மீதும் வழக்கு பதிந்து, முதுகுளத்தூர் கிளை சிறையில், போலீசார் அடைத்தனர். பிக் பாக்கெட் திருடர்களான திருப்பரங்குன்றம் முருகேசன், ராமநாதபுரம் செல்வக்குமார் இருவரும் திண்டுக்கல், கரூர், திருச்சி, பரமக்குடி, முதுகுளத்தூர் பகுதியில் தொடர் திருட்டுக்களில் ஈடுபட்டுள்ளனர்.

    முருகேசன் ஒரு வாரத்திற்கு முன்பு தான் திருச்சி சிறையிலிருந்து வெளியே வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஓய்வு பெற்ற முன்னாள் விமான படை வீரர் வீட்டில் நகை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    அம்மாபேட்டை:

    தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள நிலமகள்நகரைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 61). விமான படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி பாக்கியலெட்சுமி (55).

    இந்தநிலையில் சரவணன் மற்றும் பாக்கியலெட்சுமி ஆகிய இருவரும் குடும்பத்தோடு நேற்று காலை வேளாங்கண்ணி கோவிலுக்கு சென்றிருந்தனர். பின்னர் இரவு 8 மணிக்கு வீடு திரும்பினர்.

    அப்போது வீட்டின் முன்பக்க கதவில் உள்ள பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த இருவரும் வீட்டின் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அங்கு இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 18½ பவுன் நகை கொள்ளை போயிருந்தது தெரியவந்தது.

    இதைதொடர்ந்து சரவணன் அம்மாபேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் அங்கு விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் ரமேஷ், சப்-இன்ஸ்பெக்டர் பக்கிரிசாமி மற்றும் போலீசார் வீட்டை சோதனை இட்டனர்.

    பின்னர் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    ஓய்வு பெற்ற விமான படை வீரர் வீட்டில் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×