search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "P Chidambaram"

    • ஏக்நாத் ஷிண்டே மகாராஷ்டிர மாநில அரசை டிரிபிள் என்ஜின் அரசு என்கிறார்
    • அஜித் பவார் உள்ளிட்ட 9 பேருக்கு இன்னும் இலாகா ஒதுக்கப்படவில்லை

    மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியை உடைத்து, அக்கட்சியை தனக்குரியதாக்கிக் கொண்ட ஏக்நாத் ஷிண்டே, பா.ஜனதாவுடன் கைக்கோர்த்து முதலமைச்சராக உள்ளார். பா.ஜனதாவின் தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்வராக உள்ளார்.

    தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவை ஏற்படுத்திய அஜித் பவார், ஷிண்டே அரசில் ஐக்கியமாகி துணை முதல்வராக பதவி ஏற்றுள்ளார். அவருடன் மேலும் 8 தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.-க்கள் மந்திரியாக பதவி ஏற்றனர்.

    ஏக்நாத் ஷிண்டே அரசில் தேசியவாத காங்கிரசின் அஜித் பவார் குரூப் இணைந்தது, மூன்று கட்சிக்குள்ளேயே சலசலப்பை ஏற்படுத்தியது.

    இருந்தாலும் அஜித் பவார் இணைந்த பிறகு முதல்வராக இருக்கும் ஏக்நாத் ஷிண்டே, ''இரண்டு என்ஜின் அரசு தற்போது டிரிபிள் என்ஜின் அரசாகியுள்ளது. இதனால் மாநில வளர்ச்சி அசுர வேகத்தில் இருக்கும். தற்போது நாங்கள் ஒரு முதல்வர், இரண்டு துணைமுதல்வர்களை பெற்றுள்ளோம். இது மாநில வளர்ச்சிக்கு உதவும்'' எனக் கூறியிருந்தார்.

    இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ப.சிதம்பரம் இந்த கூட்டணியை கிண்டல் அடித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ''மகாராஷ்டிர மாநிலத்தின் முதல்வர் மற்றும் இரண்டு துணைமுதல்வர்கள், அவர்கள் அரசை டிரிபிள் என்ஜின் அரசு எனக் கூறி வருகிறார்கள். ஆனால், 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் மூன்று கால்களை உடைய விலங்கு ஓடுவதைபோல் நான் பார்க்கிறேன்.

    மகாராஷ்டிரா அரசில் இணைந்த 9 மந்திரிகளுக்கு எந்த வேலையும் இல்லை. ஏனென்றால், அவர்களுக்கு எந்த இலாகாக்களும் ஒதுக்கப்படவில்லை.

    தேவேந்திர பட்னாவிஸ் உள்பட 20 மந்திரிகளும் தங்களுடைய இலாகாக்களை விட்டுக்கொடுக்க விரும்பவில்லை. ஒரு தீர்வு உள்ளது. அது, 9 பேரும் இலாகா இல்லாத மந்திரி என அறிவிக்கலாம்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.

    • ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கின் முழு நோக்கமும் அவரை பாராளுமன்றத்தில் இருந்து தகுதி நீக்கம் செய்வதற்காகத்தான்.
    • இந்திய தண்டனை சட்டம் அமலில் உள்ள 162 ஆண்டுகளில், அவதூறு வழக்குக்கு நீதிமன்றம் அதிகபட்சமாக 2 ஆண்டுகள் தண்டனை விதித்துள்ளது.

    சென்னை:

    காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கின் முழு நோக்கமும் அவரை பாராளுமன்றத்தில் இருந்து தகுதி நீக்கம் செய்வதற்காகத்தான். இதனைத்தொடர்ந்து நடைபெற்ற அனைத்தும் அந்த தகுதி நீக்கத்தை நியாயப்படுத்தும் முயற்சியாகும். நான் முன்பு கூறியதை மீண்டும் சொல்கிறேன்.

    இந்திய தண்டனை சட்டம் அமலில் உள்ள 162 ஆண்டுகளில், அவதூறு (வாய்மொழி அவதூறு) வழக்குக்கு நீதிமன்றம் அதிகபட்சமாக 2 ஆண்டுகள் தண்டனை விதித்துள்ளது. வழக்கு பற்றிய அனைத்தையும், கோர்ட்டு தீர்ப்பும் அந்த உண்மையை கூறுகிறது. ஒரு நாள் நீதி கிடைக்கும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பிரதமர் நாட்டை ஒரு குடும்பத்துக்கு சமமாகக் குறிப்பிட்டுள்ளார்.
    • பொது சிவில் சட்டம் என்பது ஒரு அபிலாசை.

    புதுடெல்லி :

    காஷ்மீருக்கு சிறப்பு உரிமை அளிக்கும் அரசியல் சட்டத்தின் பிரிவு 370-ஐ நீக்குவது, அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது, பொது சிவில் சட்டம் கொண்டு வருவது ஆகிய மூன்றும் பா.ஜ.க.வின் தேர்தல் இலக்கு திட்டங்களாக இருந்து வந்தது.

    இவற்றில் முதல் இலக்கை நிறைவேற்றி விட்டது. இரண்டாவது இலக்கை நிறைவேற்றி வருகிறது. மூன்றாவது இலக்கான பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வருவதில்தான் இழுபறி நிலை நீடித்து வருகிறது.

    அடுத்த சில மாதங்களில் நாடு மக்களவை தேர்தலை சந்திக்க உள்ள நிலையில் இந்த விவகாரத்தை மத்தியில் அமைந்துள்ள பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. கூட்டணி அரசு இப்போது கையில் எடுத்துள்ளது.

    அந்த வகையில், சமீபத்தில் பொது சிவில் சட்டம் கொண்டு வருவது தொடர்பாக 22-வது மத்திய சட்டக்கமிஷன், பொதுமக்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்டுள்ள மத அமைப்புகளின் கருத்துக்களை கேட்க முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்டது. அதே நேரத்தில் 21-வது மத்திய சட்டக்கமிஷன், இந்த தருணத்தில் பொது சிவில் சட்டம் என்பது தேவையற்றது, விரும்பத்தக்கது அல்ல என்று கருத்து தெரிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது.

    இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலம், போபாலில் நேற்று முன்தினம் பா.ஜ.க. தொண்டர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசினார்.

    அப்போது அவர், "2 வகையான சட்டங்களால் நாட்டை வழிநடத்த முடியாது, பொது சிவில் சட்டம் அவசியம்" என ஆணித்தரமாக குறிப்பிட்டது, பெரும் அதிர்வுகளை அரசியல் அரங்கில் உருவாக்கி உள்ளது.

    இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ப.சிதம்பரம் நேற்று கருத்து தெரிவித்து டுவிட்டரில் பதிவுகளை வெளியிட்டுள்ளார். அவற்றில் அவர் கூறி இருப்பதாவது:-

    பொது சிவில் சட்டம் கொண்டு வருவது பற்றி கருத்து வெளியிட்ட மரியாதைக்குரிய பிரதமர் நாட்டை ஒரு குடும்பத்துக்கு சமமாகக் குறிப்பிட்டுள்ளார். சுருக்கமாக அர்த்தப்படுத்தினால், அவரது ஒப்பீடு உண்மையாக இருக்கலாம். ஆனால் உண்மை மிகவும் மாறுப்பட்டது.

    குடும்பம் என்பது ரத்த உறவுகளால் பிணைக்கப்பட்டுள்ளது. ஆனால் நாடு, அரசியல், சட்ட ஆவணமான அரசியல் சாசனத்தால் ஒன்றுபடுத்தப்பட்டுள்ளது.

    ஒரு குடும்பத்தில்கூட பன்முகத்தன்மை இருக்கிறது. இந்திய அரசியல் சாசனம், இந்திய மக்களிடையே பன்முகத்தன்மையை அங்கீகரித்துள்ளது.

    பொது சிவில் சட்டம் என்பது ஒரு அபிலாசை. அதை ஒரு செயல் திட்டத்தால் நாட்டை வழிநடத்தும் பெரும்பான்மை அரசால், மக்கள் மீது வலுக்கட்டாயமாக திணிக்க முடியாது.

    பொது சிவில் சட்டம் கொண்டு வருவது ஒரு எளிதான நடவடிக்கை என்பது போல பிரதமர் அதை தோன்றச்செய்துள்ளார். அவர் கடந்த சட்டக்கமிஷன் அறிக்கையில், "இந்த தருணத்தில் பொது சிவில் சட்டம் கொண்டு வருவது சாத்தியம் அல்ல" என்று கூறி இருப்பதை வாசிக்க வேண்டும்.

    நாடு தற்போது பா.ஜ.க.வின் வார்த்தைகளாலும், செயல்களாலும் பிளவுபட்டுள்ளது. பொதுமக்களிடம் பொது சிவில் சட்டத்தை திணித்தால் அது பிளவுகளை விரிவுபடுத்தி விடும்.

    பொது சிவில் சட்டத்துக்கு ஆதரவாக பிரதமர் ஓங்கிக் குரல் கொடுத்திருப்பதன் நோக்கம், விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், வெறுப்புணர்வு குற்றங்கள், பாகுபாடு, மாநிலங்களின் உரிமைகளை மறுத்தல் போன்ற பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புவதுதான். மக்கள் உஷாராக இருக்க வேண்டும்.

    நல்லாட்சி தருவதில் தோல்வி கண்டுவிட்டு, பா.ஜ.க. இப்போது வாக்காளர்களை பிளவுபடுத்தி, அடுத்த தேர்தல்களில் வெற்றிபெற பொது சிவில் சட்டத்தை களம் இறக்குகிறது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • விமான டிக்கெட்டுகளின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாக பயணிகள் தெரிவித்தனர்.
    • பயண கட்டணங்கள் உயர்வுக்கு விமான நிறுவனங்களை ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

    சென்னை:

    சமீப காலமாக விமான டிக்கெட்டுகளின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாக பயணிகள் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், டெல்லி - சென்னை விமானங்களுக்கு 63,000 ரூபாய் வரை டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படுவதாக முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

    இதுதொடர்பாக ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், டெல்லி - சென்னை பிசினஸ் கிளாஸ் விமான டிக்கெட்டுகள் விஸ்தாராவில் 6,300 ரூபாய்க்கும், ஏர் இந்தியாவில் 5,700 ரூபாய்க்கும் நியாயமான விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன.

    மன்னிக்கவும், விஸ்தாராவில் 63,000 ரூபாய்க்கும், ஏர் இந்தியாவில் 57,000 ரூபாய்க்கும் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

    பொதுவாக சுதந்திர சந்தைகளில் தேவை அதிகரிக்கும்போதெல்லாம் விநியோகமும் அதிகரிக்கும். ஆனால் இந்தியாவின் சுதந்திர சந்தையில் தேவை அதிகரிக்கும்போதெல்லாம் விலை அதிகரிக்கிறது.

    விமான நிறுவனங்கள் தங்களது வழித்தடங்களை விரிவாக்கம் செய்துவிட்டு, பழைய வழித்தடங்களில் விமானங்களை குறைத்து, டிக்கெட் கட்டணத்தை உயர்த்துகின்றனர். ஏகபோக முதலாளித்துவத்தில் மட்டும் உலகிற்கே இந்தியா விஷ்வகுருவாக மாறும் என பதிவிட்டுள்ளார்.

    • பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் இல்லாத மாநிலங்களோடு மத்திய பாரதிய ஜனதா அரசு மோதிக்கொண்டே இருந்தால் மோதல் தான்.
    • நாள்தோறும் மோதல் என்றால் எப்படி இந்த மாநிலங்களில் திட்டங்களை நிறைவேற்ற முடியும்.

    வில்லிவாக்கம்:

    சென்னை கிழக்கு மாவட்டம் வில்லிவாக்கம் கிழக்கு பகுதி தி.மு.க. செயலாளர் வே.வாசு தலைமையில் அயனாவரத்தில் கருணாநிதி நூற்றாண்டு பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, முன்னாள் மத்திய நிதி அமைச்சரும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினருமான ப.சிதம்பரம், சி.பி.எம் மாநில குழு உறுப்பினர் கே.பாலபாரதி, வில்லிவாக்கம் எம்.எல்.ஏ. வெற்றி அழகன், விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ. ஆளூர் ஷாநவாஸ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    கூட்டத்தில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பேசியதாவது:-

    அரசியல் சாசனத்தை படித்தவர்கள் இந்தியாவை இந்திய யூனியன் என்று சொன்னார்கள், மத்திய அரசு இருக்கும். மாநில அரசுகளும் இருக்கும். மத்திய அரசுக்கு மாநில அரசு குறைந்த அரசு அல்ல. சளைத்த அரசு அல்ல.

    குறிப்பாக பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் இல்லாத மாநிலங்களோடு மத்திய பாரதிய ஜனதா அரசு மோதிக்கொண்டே இருந்தால் மோதல் தான். நாள்தோறும் மோதல் என்றால் எப்படி இந்த மாநிலங்களில் திட்டங்களை நிறைவேற்ற முடியும். இன்றைக்கு அதன் காரணமாகவே பல வகையிலே தமிழ்நாடு உட்பட தென் மாநிலங்கள் பல புறக்கணிக்கப்படுகின்றன. பா.ஜனதா அல்லாத அரசுகளின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன. இதனால் பல மாநிலங்களின் வளர்ச்சி தடைபட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • டெல்லியில் மல்யுத்த வீரர்களை கைது செய்தது கண்டனத்துக்குரியது.
    • தமிழகத்தில் கள்ளச்சாராயத்தை இன்னும் முழுமையாக ஒடுக்க வேண்டும்.

    புதுக்கோட்டை :

    முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் எம்.பி. புதுக்கோட்டையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- எம்.பி.க்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதியை அதிகரிக்க வேண்டும். அதே நேரத்தில் ரூ.5 கோடி நிதியை குறைக்காமல் இருந்தாலே பெரிய விஷயம்.

    செங்கோல் விவகாரத்தில் நிறைய புனைக்கதைகள் வருகிறது. புனைக்கதைகளை நம்ப வேண்டாம். தமிழக கவர்னர் புனைகதைக்கு மேலும் ஜோடித்து ஒரு கதை சொல்கிறார். உண்மையில் நடந்தது என்ன என்பதை நேரு, ராஜாஜியின் வரலாற்றில் வரலாற்று ஆசிரியா்கள் எழுதியிருக்கின்றனர்.

    வரலாற்று ஆசிரியர்கள் சொன்னதில் திருவாவடுதுறை ஆதீனம் இங்கிருந்து ரெயிலில் பயணம் செய்து 1947-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 14-ந் தேதி மாலையில் ஜவஹர்லால் நேருவின் வீட்டுக்கு சென்றுள்ளார். நேருவும் வந்து பார்த்துள்ளார். வந்த இடத்தில் இந்த செங்கோலை கொடுத்து உங்களுக்கு நினைவு பரிசாக தருகிறேன் என்று கூறியிருக்கிறார். அதனை நேருவும் வாங்கியிருக்கிறார். அந்த நேரத்தில் நேருவுக்கு பல நூறு நினைவு பொருட்கள் வந்தன.

    அந்த நினைவு பொருட்கள் அனைத்தையும் வரிசைப்படுத்தி பத்திரமாக அலகாபாத் அருங்காட்சியகத்தில் வைத்தார். ஆகஸ்டு 14-ந் தேதி மவுண்ட்பேட்டன் பிரபு டெல்லியிலேயே இல்லை. அவர் பாகிஸ்தான் சென்றிருந்தார். அன்று பாகிஸ்தான் நாட்டின் சுதந்திரதின நிகழ்ச்சியை முடித்துவிட்டு இரவு 7 மணிக்கு டெல்லி வந்தார். அதன்பின் வீட்டிற்கு சென்று விட்டு இந்திய சுதந்திர தின நிகழ்ச்சிக்கு இரவு 11 மணிக்கு மேல் வருகிறார். 12 மணிக்கு சுதந்திரம் கிடைக்கிறது. அதன்பின் நேரு உரையாற்றினார். நடந்தது அவ்வளவு தான்.

    அலகாபாத் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த ஒரு பேழையில் `நேருவுக்கு அளிக்கப்பட்ட தங்க கோல்' என எழுதப்பட்டிருந்தது. அதில் ஒன்றும் `வாக்கிங் ஸ்டிக்' என எழுதப்படவில்லை. வரலாற்று ஆசிரியர்கள் எழுதினால் அது வரலாறு. மற்றவர்கள் எழுதுவது எல்லாம் புனைகதைகள். அந்த செங்கோல் பாராளுமன்றத்தில் வைக்கப்பட்டிருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி தான்.

    மணிப்பூர் கலவரங்களை நிறுத்துவதற்கு அமித்ஷா சென்றிருப்பது மகிழ்ச்சி. பிரதமர் ஒரு வார்த்தைக்கூட பேசாமல் மவுனம் காப்பது வருத்தத்தை தருகிறது. டெல்லியில் மல்யுத்த வீரர்களை கைது செய்தது கண்டனத்துக்குரியது. பாராளுமன்ற புதிய கட்டிட திறப்பு விழாவுக்கு ஜனாதிபதிக்கு அழைப்பிதழ் அனுப்பாதது ஏன்?.

    தமிழகத்தில் கள்ளச்சாராயத்தை இன்னும் முழுமையாக ஒடுக்க வேண்டும். வருமான வரித்துறை சோதனைகள் பெரும்பகுதி ஜோடிக்கப்பட்டவை. சில சோதனைகள் உண்மையாக இருக்கலாம். அது சோதனை முடிந்த பின் தெரியவரும். மணல் கடத்தலை தடுக்கும் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்துவது கண்டிக்கத்தக்கது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நாடு தழுவிய வேலையின்மை விகிதம் தற்போது 7.45 சதவீதமாக உள்ளது.
    • ப.சிதம்பரம் கருத்துக்கு நிர்மலா சீதாராமன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    மும்பை :

    ரிசர்வ் வங்கி சமீபத்தில் புழக்கத்தில் இருந்த ரூ.2 ஆயிரம் நோட்டுகளை திரும்ப பெறுவதாக அறிவித்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் மும்பை வந்த காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான ப.சிதம்பரம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஒரு மதச்சார்பற்ற ஜனநாயக நாட்டில் ஆட்சியும், கொள்கையும் அனைத்து அலைகளையும் தாங்கி நிற்கும் படகை உருவாக்க வேண்டும். அந்த வகையில் கடந்த 9 ஆண்டுகளில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு முற்றிலும் தோல்வி அடைந்துவிட்டது.

    கொடுமை என்னவென்றால் அரசு தனது தவறுகளை சரிசெய்து அனைத்து மக்களுக்குமான ஆட்சியை செய்ய முயற்சி எடுக்கவில்லை.

    ரூ.2 ஆயிரம் நோட்டுகள் அறிமுகப்படுத்தியது மற்றும் அதை திரும்ப பெற்றது இந்திய பணத்தின் மீதான நேர்மை மற்றும் ஸ்திரத்தன்மை மீது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    2022-23-ம் ஆண்டின் முதல் மூன்று காலாண்டில் வளர்ச்சி சதவீதம் முறையே 13.2, 6.3 மற்றும் 4.4 என சரிவை நோக்கி செல்கிறது. 2004-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் இருந்த சராசரி 9 சதவீத வளர்ச்சி விகிதத்தை எட்டுவது தற்போதைய நிலையில் வெகு தொலையில் உள்ளது.

    அதிகரித்துவரும் வேலையில்லா திண்டாட்டம், தொடர் பணவீக்கத்தால் அதிகரிக்கும் ஏற்றத்தாழ்வுகள் மற்றும் தடுமாற்றத்தில் இருக்கும் நலத்திட்டப்பணிகள் குறித்து மிக கடுமையான கேள்விகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் கட்டாயப்படுத்தப்பட்டு உள்ளன. நாடு தழுவிய வேலையின்மை விகிதம் தற்போது 7.45 சதவீதமாக உள்ளது. விலைவாசி உயர்வு காரணமாக மக்கள் நுகர்வு குறைந்துள்ளது.

    அதுமட்டும் இன்றி பொதுமக்களின் பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் அரசின் அச்சுறுத்தல் மற்றும் வழக்குகள் மூலம் கடுமையாக கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. இயற்கை நீதிக்கு பதிலாக தற்போது புல்டோசர் நீதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ப.சிதம்பரம் கருத்துக்கு நிர்மலா சீதாராமன் கண்டனம்

    ரூ.2 ஆயிரம் நோட்டு அறிமுகம் மற்றும் வாபஸ் நடவடிக்கை நமது பணத்தின் நேர்மை மற்றும் ஸ்திரத்தன்மை மீதான சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது என்று ப.சிதம்பரம் குற்றம்சாட்டினார்.

    அவரின் கருத்து குறித்து மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனிடம் நிருபர்கள் கேட்டனர். அப்போது அவர் ப.சிதம்பரத்துக்கு கண்டனம் தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது:-

    பண மதிப்பிழப்பு, மத்திய வங்கியின் முடிவு போன்றவை குறித்து அனுமானத்தை வெளியிடுவது முன்னாள் நிதி மந்திரிக்கு அழகு அல்ல. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 10 ஆண்டுகள் ஆட்சியில் நீடித்தது. அந்த ஆட்சிகாலத்தில் பெரும்பகுதி ப.சிதம்பரம் நிதி மந்திரியாக இருந்துள்ளார். நாங்கள் பாராளுமன்றத்தில் அவரிடம் பல கேள்விகளை எழுப்பி உள்ளோம். அதற்கு சரியான பதில் கிடைக்கவில்லை. நாம் அனைவரும் நிலைமையை புரிந்துகொள்ளவேண்டும். அவர் தான் வகித்த பொறுப்புக்கு ஏற்றவாறு கருத்துகளை வெளியிடுவது நல்லது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காவல்துறையினர் நடவடிக்கை மூர்க்கத்தனமான சுதந்திர மீறல் என்று குற்றச்சாட்டு
    • சட்டவிரோத நடவடிக்கை குறித்து டெல்லி காவல்துறையிடம் காங்கிரஸ் புகார்

    காங்கிரஸ் முன்னாள் தலைவரும், அக்கட்சியின் எம்.பியுமான ராகுல்காந்தி கடந்த மூன்று நாட்களாக மத்திய அமலாக்கத் துறையினரின் விசாரணையை எதிர்கொண்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் காங்கிரஸ் எம்.பிக்கள், மூத்த தலைவர்கள், தொண்டர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

    நேற்று நடைபெற்ற போராட்டத்தின்போது மூத்த தலைவர்கள் உட்பட சுமார் 240 பேர் கைது செய்யப்பட்டதாக டெல்லி சட்டம் ஒழுங்கு காவல்துறை சிறப்பு பிரிவு அதிகாரி சாகர் ப்ரீத் ஹூடா, தெரிவித்தார்.

    இந்நிலையில் நேற்று அக்பர் சாலையில் காங்கிரசார் போராட்டம் நடத்திய நிலையில், அவர்களை தடுத்து நிறுத்த முயன்ற காவல்துறை அதிகாரிகள் சிலர் காங்கிரஸ் தலைமை அலுவலகத்திற்குள் புகுந்ததாக புகார் எழுந்துள்ளது. அங்கிருந்த தொண்டர்கள் மற்றும் தலைவர்களை விரட்டி அடித்த போலீசார், சிலரை வெளியே இழுத்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

    காங்கிரஸ் தலைமையகத்தில் காவல்துறையின் நடவடிக்கை மூர்க்கத்தனமான சுதந்திர மீறல் என்று முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். ஜனநாயகத்தின் அனைத்து சட்ட மற்றும் அரசியல் விதிமுறைகளும் மீறப்பட்டுள்ளது என்றும் தமது விட்டர் பதவியில் அவர் கூறியுள்ளார்.

    போலீசாரிடம் வாரண்ட் எதுவும் இல்லாத நிலையில் அவர்கள் கட்சி தலைமை அலுவலகத்திற்குள் நுழைந்து, எம்.பி.க்கள் உட்பட காங்கிரஸ் தலைவர்கள், உறுப்பினர்களை வெளியே இழுத்து சாலையில் வீசினர் என்றும் அவர் குற்றம் சாட்டினார். போலீசார் முரட்டுத்தனம் வீடியோவில் படம்பிடிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    காங்கிரஸ் தலைமை செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா கூறுகையில், இது அப்பட்டமான கிரிமினல் அத்துமீறல் என்றும், டெல்லி காவல்துறையின் அராஜகம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    இந்நிலையில் காங்கிரஸ் தலைமை அலுவலகத்திற்குள் காவல்துறை அதிகாரிகள் புகுந்தது தொடர்பாக டெல்லி துக்ளக் சாலை காவல் நிலையத்தில் காங்கிரஸ் நேற்று அதிகாரப்பூர்வ முறையில் புகார் அளித்தது.

    கிரிமினல் அத்துமீறலுக்காக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டும் என்றும், தவறு செய்த காவலர்களை சஸ்பெண்ட் செய்யவும், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த புகாரில் காங்கிரஸ் குறிப்பிட்டுள்ளது.

    கே.எஸ்.அழகிரியை பொறுத்தவரை பஞ்சாயத்து தலைவர், ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் என்று கட்சியின் அடிமட்டத்தில் இருந்து உயர்ந்த இடத்துக்கு வந்தவர்.
    சென்னை:

    மேல்சபை காங்கிரஸ் வேட்பாளராக ப.சிதம்பரம் அறிவிக்கப்பட்டு இன்று மனுதாக்கலும் செய்து விட்டார்.

    இந்த பதவியை கைப்பற்ற பலர் முயற்சித்தாலும் கடைசி வரை போராடியது ப.சிதம்பரமும், கே.எஸ்.அழகிரியும்தான். இருவரும் டெல்லியிலேயே முகாமிட்டு காய்களை நகர்த்தினார்கள். இருவரும் தனித்தனியாக சோனியாவை சந்தித்து பேசினார்கள்.

    கே.எஸ்.அழகிரியை பொறுத்தவரை பஞ்சாயத்து தலைவர், ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் என்று கட்சியின் அடிமட்டத்தில் இருந்து உயர்ந்த இடத்துக்கு வந்தவர். 3 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக காங்கிரஸ் தலைவராக இருக்கிறார். பொதுவாக காங்கிரஸ் தலைவராக யார் இருந்தாலும் அவரை மாற்ற வேண்டும் என்று போர்க்கொடி தூக்குவார்கள். இப்போது அப்படி எதுவும் நடைபெறவில்லை.

    எம்.பி. தேர்தலிலும், எம்.எல்.ஏ. தேர்தலிலும் காங்கிரசுக்கு குறிப்பிட்டத்தக்க வெற்றியும் கிடைத்தது. 9 எம்.பி.க்கள், 18 எம்.எல்.ஏ.க்கள் வெற்றி பெற்றனர்.

    இதனால் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று கருதினார். கடைசி நேரத்தில் அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. கே.எஸ்.அழகிரியை பொறுத்தவரை இந்த மாதிரி கடைசி நேரத்தில் ஏமாற்றத்தை சந்திப்பது இது 3-வது முறையாகும்.

    1980 சட்டமன்ற தேர்தலில் முகையூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கொடுத்தும் கடைசி நேரத்தில் வேட்பாளர் மாற்றப்பட்டார்.

    அதே போல் 1984 சட்டமன்ற தேர்தலில் கடலூர் தொகுதி ஒதுக்கப்பட்டது. ஆனால் சிவாஜி மன்றத்தினர் பிடிவாதமாக அந்த தொகுதியை கேட்டதால் கடைசி நேரத்தில் வாய்ப்பு பறிபோனது.

    3 முறை ஏமாற்றம் அடைந்துள்ளார். அதே நேரம் 1991, 1996 ஆகிய 2 முறை எம்.எல்.ஏ.வாகவும், 2009-ல் எம்.பி.யாகவும் வெற்றி பெற்றார்.

    ஒரு காலத்தில் ப.சிதம்பரத்தின் சிஷ்யராக இருந்தவர்தான் கே.எஸ்.அழகிரி. இப்போது நடந்த போட்டியில் குரு வென்றுள்ளார்.

    எங்களுக்கு ஆதரவு தருகின்ற தி.மு.க. அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் தோழமை கட்சியினருக்கு என் இதயம் நிறைந்த நன்றி என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
    சென்னை:

    மேல்சபை எம்.பி. தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக ப.சிதம்பரம் நேற்று மாலை அறிவிக்கப்பட்டார்.

    முன்னதாகவே மனு தாக்கலுக்கான ஏற்பாடுகளை செய்யும்படி கட்சி மேலிடம் அவரிடம் சொல்லி உள்ளது. எனவே ப.சிதம்பரம் அதற்கான பணிகளில் ஈடுபட்டார். சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கு.செல்வபெருந்தகை உள்பட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை சந்தித்து அவர்களுக்கு பொன்னாடை போர்த்தினார்.

    தனக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பளித்த சோனியாவுக்கு எனது உளமார்ந்த நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.

    அதே போல் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்து உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    எங்களுக்கு ஆதரவு தருகின்ற தி.மு.க. அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் தோழமை கட்சியினருக்கு என் இதயம் நிறைந்த நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.

    இன்று பகல் 12 மணியளவில் தலைமை செயலகத்தில் சட்டசபை செயலாளரிடம் ப.சிதம்பரம் மனுதாக்கல் செய்தார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 10 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வேட்பாளர் பெயரை முன்மொழிந்து கையெழுத்து போட்டனர். மற்ற எம்.எல்.ஏ.க்களும் கலந்து கொண்டனர்.

    முன்னதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ப.சிதம்பரம் வாழ்த்து பெற்றார்.

    காங்கிரஸ் தலைமை ப.சிதம்பரத்தை வேட்பாளராக்க முடிவு செய்துள்ளது. இதையடுத்து சென்னை சென்று மனு தாக்கலுக்கான ஏற்பாடுகளை செய்யும்படி சிதம்பரத்திடம் தெரிவித்துள்ளனர்.
    சென்னை:

    டெல்லி மேல்சபை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த ஒரு இடத்துக்கு காங்கிரஸ் தலைவர்களிடையே கடும் போட்டி நிலவியது. வாய்ப்பு கேட்டு பலரும் காய்நகர்த்தி வந்தார்கள்.

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ம், முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரமும் இந்த ரேசில் முன்னணியில் இருந்தனர்.

    ப.சிதம்பரத்துக்கும் எம்.பி. பதவி நிறைவடைவதால் அவருக்கே வாய்ப்பு வழங்கப்படும் என்று ஆரம்பத்தில் இருந்தே பேச்சு அடிபட்டது. பாராளுமன்றத்தில் பொருளாதாரம், அரசியல் உள்பட அனைத்து துறைகள் சார்ந்த விஷயங்களையும் விவாதிக்க ப.சிதம்பரமே தகுதியானவர். அவர் பாராளுமன்றத்தில் இருக்கவேண்டும் என்ற கட்டாய சூழல். இதனால் அவருக்குத்தான் வாய்ப்பு வழங்கப்படும் என்று கட்சி வட்டாரத்தில் பேசப்பட்டுவந்தது.

    இதற்கிடையில் பேரறிவாளன் விடுதலையும் அதை தி.மு.க.வினர் வரவேற்று கொண்டாடியதும் காங்கிரஸ் தொண்டர்களை கொந்தளிக்க வைத்தது. எம்.பி. பதவியை திருப்பி கொடுக்க வேண்டும் என்ற கோஷங்களும் ஒலித்தன. இதனால் காங்கிரஸ் எம்.பி. பதவியை ஏற்குமா என்ற கேள்வியும் எழுந்தது.

    ஆனால் அரசியலில் கூட்டணி என்று வரும்போது சில விஷயங்களில் சமரசம் ஆவதை தவிர வழியில்லை என்று மேலிடத்தலைவர்கள் மவுனம் காத்தனர்.

    இதற்கிடையில் எம்.பி. பதவிக்கு யாரை தேர்வு செய்யலாம் என்ற விவாதங்களும் தொடர்ந்தன.

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ப.சிதம்பரம் இருவரும் டெல்லியில் முகாமிட்டு இருந்தனர். இருவரும் தனித்தனியாக சோனியாவையும் சந்தித்தனர்.

    காங்கிரஸ் தலைமை ப.சிதம்பரத்தை வேட்பாளராக்க முடிவு செய்துள்ளது. இதையடுத்து சென்னை சென்று மனு தாக்கலுக்கான ஏற்பாடுகளை செய்யும்படி சிதம்பரத்திடம் தெரிவித்துள்ளனர். அவர் நேற்று இரவே சென்னை திரும்பினார்.

    வேட்புமனுவை முன்மொழிய 10 எம்.எல்.ஏ.க்கள் கையெழுத்து தேவை. அதற்காக இன்று எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.

    இன்று மாலைக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    நாளை மறுநாள் (திங்கள்) தலைமை செயலகத்தில் ப.சிதம்பரம் வேட்புமனு தாக்கல் செய்கிறார். இதற்கான வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் ராகுல்காந்தியின் முடிவு முக்கியமானதாக கருதப்படுகிறது. அவர் தற்போது இங்கிலாந்தில் இருக்கிறார். இன்று இரவுதான் டெல்லிக்கு திரும்புகிறார்.
    சென்னை:

    பாராளுமன்ற மேல்-சபை எம்.பி.க்களில் 57 பேரின் பதவிக்காலம் முடிவடைகிறது.

    இதையொட்டி புதிதாக 57 எம்.பி.க்களை தேர்வு செய்ய தமிழகம் உள்பட 15 மாநிலங்களில் வருகிற 10-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

    தமிழகத்தில் மாநிலங்களவை தி.மு.க. எம்.பி.க்களான டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, கே.ஆர்.என்.ராஜே‌ஷ்குமார், அ.தி.மு.க. எம்.பி.க்களான ஏ.நவநீதகிருஷ்ணன், எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன், ஏ.விஜயகுமார் ஆகியோரது பதவிக்காலம் வருகிற ஜூன் 29-ந்தேதியுடன் நிறைவடைகிறது.

    காலியாகும் இந்த 6 இடங்களுக்கான தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் நாளை (செவ்வாய்க்கிழமை)தொடங்குகிறது. வேட்பு மனுக்களை தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் மே 31. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை ஜூன் 1-ந்தேதி, மனுக்களை திரும்ப பெறுவதற்கான கடைசி நாள் ஜூன் 3 என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    போட்டி இருக்கும் பட்சத்தில் வாக்குப்பதிவு ஜூன் 10-ந்தேதி நடைபெறும். தேர்தல் நடவடிக்கைகள் அனைத்தும் ஜூன் 13-ந்தேதி நிறைவடையும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    தமிழகத்தில் ஒரு மாநிலங்களவை உறுப்பினரை தேர்வு செய்ய 34 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. அந்த வகையில் தி.மு.க.வுக்கு 4 இடங்களும், அ.தி.மு.க.வுக்கு அதன் கூட்டணி கட்சிகள் ஒத்துழைப்புடன் 2 இடங்களும் கிடைக்கும். தனக்கு கிடைக்க உள்ள 4 இடங்களில் ஒன்றை கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு தி.மு.க. தலைமை அளித்துள்ளது.

    தி.மு.க. வேட்பாளர்களாக தஞ்சை சு.கல்யாண சுந்தரம், கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், ஆர்.கிரிராஜன் ஆகியோரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அவர்கள் விரைவில் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர்.

    மேல்சபை தேர்தலில் இரு இடங்களில் போட்டியிட உள்ள அ.தி.மு.க. இதுவரை வேட்பாளர்களின் பெயர்களை அறிவிக்கவில்லை. இன்று (திங்கள் கிழமை) அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதேபோல ஓரு இடத்தில் போட்டியிட உள்ள காங்கிரஸ் கட்சியும் வேட்பாளரின் பெயரை அறிவிக்கவில்லை. காங்கிரஸ் கட்சியிலும் எம்.பி. பதவியை பிடிக்க கடும் போட்டி நிலவுகிறது.

    தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தனக்கு எம்.பி. பதவி வேண்டும் என்று ஏற்கனவே சோனியா, ராகுலிடம் தெரிவித்துள்ளார். சில வாரங்களுக்கு முன்பு அவர் இது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினையும் சந்தித்து பேசி இருந்தார்.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து எம்.பி. பதவிக்கு தேர்வான ப.சிதம்பரம் தமிழகத்தில் இருந்து தேர்வாக வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக உள்ளார்.

    ப.சிதம்பரம் எம்.பி.யாகும் பட்சத்தில் பாராளுமன்றத்தில் பா.ஜனதா கட்சியின் பொருளாதார கொள்கைக்கு காங்கிரஸ் சார்பில் சரியான பதிலடி கொடுக்க முடியும் என்று மேலிட தலைவர்கள் கருதுகிறார்கள்.

    எனவே மேல்சபை எம்.பி. பதவியை ப.சிதம்பரத்துக்கு கொடுக்க மேலிட தலைவர்கள் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

    இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரியும் மேல்சபை எம்.பி. பதவியை கேட்கிறார். இதற்காக அவர் நேற்று இரவு சென்னையில் இருந்து புறப்பட்டு டெல்லி சென்றுள்ளார். இன்று (திங்கட்கிழமை) அவர் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியை சந்தித்து பேச உள்ளார். அப்போது எம்.பி. பதவியை கேட்டு அவர் சில விளக்கமும் அளிக்க திட்டமிட்டு இருக்கிறார்.

    கே.எஸ்.அழகிரி மூன்று விஷயங்களுக்காக தனக்கு மேல்சபை எம்.பி. பதவி தர வேண்டும் என்று கூறுவதாக தெரிகிறது.

    1. மூன்று ஆண்டுகள் தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருக்கும் தனக்கு எதிராக யாரும் எந்த அதிருப்தியும் தெரிவிக்கவில்லை. இந்த 3 ஆண்டுகளில் எதிர்ப்பு கோஷ்டியினர் யாரும் தன்னை பதவி விலக சொல்லவில்லை.

    2. இந்த 3 ஆண்டு காலத்தில் தமிழக காங்கிரசுக்கு 18 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்களை பெற்று கொடுத்து இருப்பதால் காங்கிரசுக்கு மிகப்பெரிய வெற்றியை தேடி கொடுத்து உள்ளேன். இதை கருத்தில் கொண்டு மேல்சபை எம்.பி. பதவி தர வேண்டும்.

    3. பாராளுமன்ற தேர்தல் 2019-ம் ஆண்டு நடந்தபோது தேர்தலில் போட்டியிடாமல் தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்தேன். அப்போது எம்.பி. பதவியை தியாகம் செய்து இருந்தேன். எனவே மேல்சபை எம்.பி. பதவி தர வேண்டும்.

    இப்படி 3 விதமான கோரிக்கைகளை கே.எஸ்.அழகிரி தெரிவித்து வருகிறார்.

    கே.எஸ்.அழகிரியின் இந்த கோரிக்கையால் காங்கிரஸ் மேல்சபை வேட்பாளர் தேர்வில் ப.சிதம்பரம், கே.எஸ்.அழகிரி இடையே கடும் போட்டி உருவாகி இருக்கிறது. கே.எஸ்.அழகிரியின் கோரிக்கை ஏற்கப்படுமா? என்பது இன்னும் ஓரிரு நாட்களில் தெரிந்து விடும். இதற்கிடையே சுதர்சன நாச்சியப்பன், இளங்கோவன், விஸ்வநாதன் ஆகியோரும் மேல்சபை எம்.பி. பதவியை கேட்கிறார்கள்.

    தமிழகத்தில் இருந்து மேல்சபைக்கு காங்கிரஸ் சார்பில் தலித் வேட்பாளர்கள் நிறுத்தப்படவில்லை. எனவே தனக்கு அந்த வாய்ப்பு தர வேண்டும் என்று விஸ்வநாதன் வலியுறுத்தி வருகிறார். இதனால் காங்கிரஸ் வேட்பாளர் வாய்ப்பு ப.சிதம்பரத்திடம் இருந்து நழுவி செல்லுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் ராகுல்காந்தியின் முடிவு முக்கியமானதாக கருதப்படுகிறது. அவர் தற்போது இங்கிலாந்தில் இருக்கிறார். இன்று இரவுதான் டெல்லிக்கு திரும்புகிறார். நாளை அவர் மேல்சபை எம்.பி. வேட்பாளர் தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளார்.

    ஏற்கனவே கர்நாடகா உள்பட பல மாநில காங்கிரஸ் தலைவர்கள் மேல்சபை எம்.பி. பதவி கேட்டு டெல்லியில் குவிந்து இருக்கிறார்கள். தமிழக தலைவர்களும் டெல்லியில் முகாமிட்டு உள்ளனர்.

    எனவே நாளை ராகுல் தலைமையில் விறுவிறுப்பான ஆலோசனை நடைபெற உள்ளது. அப்போது தமிழக மேல்சபை வேட்பாளர் குறித்து முடிவாகிறது. என்றாலும் வேட்பாளர் பெயர் விவரம் வெளியாக ஓரிரு நாட்கள் தாமதம் ஆகும் என்று தெரிகிறது.

    ×