என் மலர்
நீங்கள் தேடியது "ப.சிதம்பரம்"
- விமான டிக்கெட்டுகளின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாக பயணிகள் தெரிவித்தனர்.
- பயண கட்டணங்கள் உயர்வுக்கு விமான நிறுவனங்களை ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
சென்னை:
சமீப காலமாக விமான டிக்கெட்டுகளின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாக பயணிகள் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், டெல்லி - சென்னை விமானங்களுக்கு 63,000 ரூபாய் வரை டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படுவதாக முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், டெல்லி - சென்னை பிசினஸ் கிளாஸ் விமான டிக்கெட்டுகள் விஸ்தாராவில் 6,300 ரூபாய்க்கும், ஏர் இந்தியாவில் 5,700 ரூபாய்க்கும் நியாயமான விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன.
மன்னிக்கவும், விஸ்தாராவில் 63,000 ரூபாய்க்கும், ஏர் இந்தியாவில் 57,000 ரூபாய்க்கும் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
பொதுவாக சுதந்திர சந்தைகளில் தேவை அதிகரிக்கும்போதெல்லாம் விநியோகமும் அதிகரிக்கும். ஆனால் இந்தியாவின் சுதந்திர சந்தையில் தேவை அதிகரிக்கும்போதெல்லாம் விலை அதிகரிக்கிறது.
விமான நிறுவனங்கள் தங்களது வழித்தடங்களை விரிவாக்கம் செய்துவிட்டு, பழைய வழித்தடங்களில் விமானங்களை குறைத்து, டிக்கெட் கட்டணத்தை உயர்த்துகின்றனர். ஏகபோக முதலாளித்துவத்தில் மட்டும் உலகிற்கே இந்தியா விஷ்வகுருவாக மாறும் என பதிவிட்டுள்ளார்.
- ஒடிசா ரெயில் விபத்து குறித்து பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதியுள்ளார்.
- இந்தக் கடிதத்துக்கு கர்நாடகத்தை சேர்ந்த 4 பா.ஜ.க. பாராளுமன்ற உறுப்பினர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
புதுடெல்லி:
ஒடிசாவில் நடந்த 3 ரெயில்கள் மோதிக் கொண்ட கோர விபத்து உலகையே உலுக்கியது. பல உயிர்களை பலி வாங்கிய இந்த விபத்து சம்பந்தமாக காங்கிரஸ் கட்சி தலைவர்கள் ஆளும் பா.ஜ.க. மீது கடும் விமர்சனங்களை வைத்துள்ளனர்.
இதுதொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடிக்கு மூத்த காங்கிரஸ் தலைவரும், ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே பல கேள்விகளை எழுப்பி ஒரு கடிதம் எழுதியிருந்தார்.
அந்தக் கடிதத்தில், ரெயில்வேயின் அடித்தளத்தை பலப்படுத்துவதற்கு பதில் ஊடகங்களில் எப்பொழுதும் காட்சியளிப்பதற்காகவே மேலோட்டமான பூச்சு வேலைகள் மட்டும் நடைபெற்றதாகவும், ரெயில் பாதுகாப்பு சம்பந்தமாக ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவின் பாதுகாப்பு குறித்த கோஷங்கள் அனைத்தும் வெற்று கூற்றுக்கள் என வெட்ட வெளிச்சமாகியுள்ளது என தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக முன்னாள் கர்நாடக முதல்வர் சதானந்த கவுடா உட்பட கர்நாடகத்தை சேர்ந்த 4 பா.ஜ.க. பாராளுமன்ற உறுப்பினர்கள், கார்கேயின் கடிதம், உண்மைக்கு மாறாகவும் வெற்று கோஷங்கள் மட்டுமே நிறைந்ததாகவும் இருப்பதாக குற்றம் சாட்டியிருந்தனர்.
பி.சி.மோகன், எஸ்.முனிஸ்வாமி, தேஜஸ்வி சூர்யா, சதானந்த கவுடா ஆகியோர் கார்கேவிற்கு எழுதியுள்ள பதில் கடிதத்தில் "தங்களைப் போன்ற உயர்ந்த தலைவர் ஒருவர், 'வாட்ஸ் அப் பல்கலைக்கழகம்' தருகின்ற ஆதாரமற்ற செய்திகளை தருவது உங்கள் அந்தஸ்துக்கு பொருந்தாத செயல். இருப்பினும், ஒருவேளை வாட்ஸ் அப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராகி விட்ட காரணத்தினாலோ என்னவோ, அதில் படிப்பதை அப்படியே உங்கள் கடிதத்தில் தாங்கள் கொட்டிவிட்டீர்கள்" என எழுதியிருந்தனர்.
இந்நிலையில், கர்நாடக எம்.பி.க்களின் கடிதத்தை காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கண்டித்துள்ளார்.
எந்த விமர்சனத்தையும் பொறுத்துக் கொள்ள முடியாத காவிக் கட்சி பா.ஜ.க. கார்கேவின் கேள்விகளுக்கு பதிலாக பா.ஜ.க. எம்.பி.க்கள் எழுதியுள்ள பதில் கடிதம் ஆதாரபூர்வமற்றதாகவும், பலமில்லாத தர்க்கவாதங்களைக் கொண்டதாகவும் உள்ளது.
ராஜ்யசபை எதிர்க்கட்சி தலைவராக உள்ள கார்கே அவர்களுக்கு பிரதமருக்கு கடிதம் எழுத எல்லா உரிமையும் உண்டு. ஜனநாயகம் உள்ள நாட்டில் பிரதமர் இதுபோன்ற கடிதத்திற்கு பதிலளிக்க வேண்டும். ஆனால் நம் நாட்டு ஜனநாயகத்தில் பிரதமர் பதில் கடிதம் எழுத வேண்டிய அளவிற்கு காங்கிரஸ் கடிதம் முக்கியத்துவம் வாய்ந்தது அல்ல என கருதுகிறார். பிரதமருக்கு பதிலாக 4 எம்.பி.க்கள் பதில் கடிதம் எழுதுகின்றனர்.
கார்கே எழுதியுள்ள கடிதத்திற்கு சான்றாக தலைமை கணக்கு தணிக்கையாளர் டிசம்பர் 2022 அன்று சமர்ப்பித்த கடிதங்களே போதுமானது. தென்மேற்கு ரெயில்வேயின் தலைமை செயல் அதிகாரி 2023, பிப்ரவரி 9 அன்று எழுதிய கடிதம் பாலசோரில் நடந்த விபத்துகளை முன்கூட்டியே எச்சரித்து இருந்தது. ஆனால் அக்கடிதம் தொடப்படாமல் இருந்திருக்கிறது. அதன்மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என 4 உறுப்பினர்களும் சொல்வார்களா?
குற்றங்களை துப்பு துலக்குவதற்குத்தான் சி.பி.ஐ. உள்ளதேயன்றி ரெயில் விபத்துக்களை துப்பறிவதற்கு அல்ல. சி.பி.ஐ. உள்பட சட்டத்தை அமலாக்கும் எந்த துறையும் தொழில்நுட்ப ரீதியான, அமைப்பு ரீதியான மற்றும் அரசியல் ரீதியான குறைபாடுகளை கண்டுபிடித்து, எவரையும் பொறுப்பேற்க செய்யமுடியாது. அதுமட்டுமல்லாமல் ரெயில்வே துறையில் உள்ள பாதுகாப்பு, சமிக்ஞைகள் மற்றும் பராமரிப்பு நடைமுறைகள் சம்பந்தமானவை பற்றிய தொழில்நுட்ப திறன் சி.பி.ஐ. வசம் கிடையாது என தெரிவித்துள்ளார்.
- அக்னிபாத் திட்டத்திற்கு முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் எதிர்ப்பு
- இத்திட்டம் ஆயுதப் படைகளின் நீண்டகால பாரம்பரியங்கள் மற்றும் நெறிமுறைகளை சீர்குலைக்கிறது.
புதுடெல்லி:
அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவத்துக்கான ஆட்சேர்ப்பு திட்டத்திற்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பீகார் மாநிலத்தில் இன்று நடந்த போராட்டத்தில் கடும் வன்முறை வெடித்தது. இந்த திட்டத்தை எதிர்க்கட்சி தலைவர்கள் கடுமையாக எதிர்த்துள்ளனர்.
இத்திட்டம் தொடர்பாக முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கூறியதாவது:-
அக்னிபாத் திட்டம் சர்ச்சைக்குரியது. பல ஆபத்துகளை கொண்டுள்ளது. ஆயுதப் படைகளின் நீண்டகால பாரம்பரியங்கள் மற்றும் நெறிமுறைகளை சீர்குலைக்கிறது. இத்திட்டம் ராணுவ பயிற்சியை கேலி செய்வதாக தோன்றுகிறது.
இந்த திட்டத்தின் கீழ் பணியமர்த்தப்பட்ட வீரர்களுக்கு நாட்டை பாதுகாக்க ஊக்கம் அளிக்கப்படும் என்பதற்கும், சிறந்த பயிற்சி அளிக்கப்படும் என்பதற்கும் எந்த உத்தரவாதமும் இல்லை. இந்த திட்டத்தை கைவிடவேண்டும்.
இவ்வாறு சிதம்பரம் கூறினார்.