search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gyanesh Kumar"

    • இந்திய தேர்தல் ஆணையத்தில் இரண்டு தேர்தல் ஆணையர்களுக்கு பதவி காலியாக இருந்தது.
    • பஞ்சாப் மாநிலத்தின் சுக்பிர் சந்து, கேரள மாநிலத்தின் ஞானேஷ் குமார் ஆகியோர் தேர்தல் ஆணையர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை ஆணையராக ராஜீவ் குமார் உள்ளார். இவருக்கு அடுத்தப்படியாக அருண் கோயல் மற்றும் சந்திரா பாண்டே ஆகியோர் இருந்தனர்.

    சந்திரா பாண்டே கடந்த வருடம் ஓய்வு பெற்றார். இதனால் இரண்டு ஆணையர்களுடன் இயங்கி வந்தது. இரண்டு ஆணையர்களும் தேர்தல் தேதியை அறிவிப்பதற்கான பணிகளை துரிதமாக செய்து கொண்டிருந்தனர். இன்னும் ஓரிரு நாட்களுக்குள் தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருக்கும் நிலையில் அருண் கோயல் கடந்த 9-ந்தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    இந்திய தேர்தல் ஆணையத்தில் இரண்டு தேர்தல் ஆணையர்களுக்கு பதவி காலியாக இருந்தது. இரண்டு ஆணையர்களை தேர்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் இன்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது.

    அதில், பஞ்சாப் மாநிலத்தின் சுக்பிர் சந்து, கேரள மாநிலத்தின் ஞானேஷ் குமார் ஆகியோர் தேர்தல் ஆணையர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    தேர்தல் ஆணையரை தேர்வு செய்வதற்கான கூட்டத்தில் பிரதமர் மோடி, அமித் ஷா, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் இடம் பிடித்திருந்தனர்.

    இந்நிலையில் புதிய தேர்தல் ஆணைய நியமனம் தொடர்பாக சிபிஎம் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி விமர்சித்துள்ளார்.

    இது தொடர்பாக அவரது எக்ஸ் பக்கத்தில், பதிவொன்றை அவர் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், "சுக்பீர் சந்துவையும் ஞானேஷ் குமாரையும் அவசர அவசரமாக தேர்தல் ஆணையர்களாக நியமித்திருக்கிறார் மோடி. ராமர் கோவில் கட்டுவதற்கான அறக்கட்டளையை உருவாக்க முக்கியப் பங்காற்றியவர் ஞானேஷ் குமார். ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட போது உள்துறை அமைச்சகத்தின் ஜம்மு காஷ்மீர் பிரிவுக்காக அமித் ஷாவுக்குக் கீழ் பணியாற்றியவர் என்று தெரிவித்துள்ளார்.

    மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் அவர்களும் இதை விமர்சித்துள்ளார். அதில்,

    பிரதமர், எதிர்க்கட்சி தலைவர், உச்ச நீதிமன்ற நீதிபதி ஆகியோர் அடங்கிய தேர்தல் ஆணையர்களை நியமனம் செய்வதற்கான குழுவில் இருந்து, தலைமை நீதிபதியை நீக்கி விட்டு அவருக்கு பதிலாக மத்திய அமைச்சர் ஒருவர் இடம் பெறுவார் என்று மோடி அரசு சட்டம் கொண்டு வந்தது. அந்த சட்டம் அரசியலமைப்புக்கு முரணாக உள்ளது எனக்கூறி, உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு வருவதற்கு முன்பே புதிய தேர்தல் ஆணையர்களை மோடி நியமித்துள்ளார். புதிய தேர்தல் ஆணையர் பதவிகளில் பட்டியலிடப்பட்ட 6 பெயர்களில் 2 பேர் பத்தே நிமிடங்களில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றனர்" என்று பதிவிட்டுள்ளார்.

    ×