என் மலர்tooltip icon

    இந்தியா

    2 வருட வேலையை ஒரே மாதத்தில் முடிக்க அழுத்தம்.. அதிகரிக்கும் BLO மரணங்கள் - போராட்டத்தால் ஸ்தம்பித்த கொல்கத்தா
    X

    2 வருட வேலையை ஒரே மாதத்தில் முடிக்க அழுத்தம்.. அதிகரிக்கும் BLO மரணங்கள் - போராட்டத்தால் ஸ்தம்பித்த கொல்கத்தா

    • ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
    • மாரடைப்பு, மன அழுத்தம், தற்கொலைகள். SIR ஒரு சீர்திருத்தம் அல்ல. இது ஒரு திணிக்கப்பட்ட சர்வாதிகாரம் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

    தமிழ்நாடு, மேற்கு வங்கம் உட்பட நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும் வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தத்தில் ( SIR ) அதிகப்படியான பணிச்சுமை மற்றும் குறைபாடுகள் இருப்பதாகக் கூறி , நூற்றுக்கணக்கான வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் ( BLOக்கள் ) கொல்கத்தாவின் தெருக்களில் இன்று பேரணி நடத்தினர் .

    BLOக்கள் , மத்திய கொல்கத்தாவின் கல்லூரித் தெருவிலிருந்து தேர்தல் ஆணைய அலுவலகம் வரை பேரணியாகச் சென்றனர். BLO அதிகார ரக்ஷா குழுவின் ஏற்பாட்டில் இந்த பேரணி நடைபெற்றது.

    இந்த மாத தொடக்கத்தில் SIR தொடங்கப்பட்டதிலிருந்து மேற்குவங்கத்தில் மூன்று பெண் BLOக்கள் இறந்துள்ளனர். அவர்களில் இருவர் தற்கொலை செய்து கொண்டனர். தமிழ்நாடு, கேரளா மற்றும் பாஜக ஆளும் ராஜஸ்தான் மற்றும் குஜராத்திலும் BLOக்கள் தற்கொலை மற்றும் திடீர் மரணங்கள் பதிவாகி உள்ளது.

    கடந்த வாரம், ஜெய்ப்பூரில் 45 வயதான முகேஷ் ஜாங்கிட் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். SIR தொடங்கியதிலிருந்து அவர் தொடர்ந்து ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வேலை செய்ததாக குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

    ராஜஸ்தானின் சவாய் மாதோபூரில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் 3 ஆம் வகுப்பு ஆசிரியராகப் பணியாற்றி வந்த ஹரி ஓம் பர்வா (34), கடந்த வாரம் மயங்கி விழுந்து இறந்தார். SIR நடவடிக்கைகள் தொடங்கியதிலிருந்து அவர் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

    இதுகுறித்து பேசிய BLO அதிகார ரக்ஷா குழுவின் அதிகாரி, "குறுகிய காலத்தில் பணியை முடிக்குமாறு எங்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், இதுபோன்ற பணிகள் பொதுவாக இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகும்," என்று கூறினார்.

    தேர்தல் ஆணையம் காலக்கெடுவை நீட்டிக்காவிட்டால் அல்லது BLOக்கள் எழுப்பிய கவலைகளை நிவர்த்தி செய்யாவிட்டால், தொடர்ச்சியான போராட்டத்தை தொடங்குவோம் என்று BLO குழு எச்சரித்துள்ளது.

    இதற்கிடையே மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, BLOக்கள் மனிததன்மையற்று அதிக வேலை வாங்கப்படுவதாக கூறி SIR செயல்முறையை தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    இந்த செயல்முறையால் இதுவரை நாடு முழுவதும் 16 BLOக்கள் இறந்துவிட்டதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், "மாரடைப்பு, மன அழுத்தம், தற்கொலைகள். SIR ஒரு சீர்திருத்தம் அல்ல. இது ஒரு திணிக்கப்பட்ட சர்வாதிகாரம்" என்று தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×