search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Murugan"

    • காவடி எடுப்பவர்கள் வரும் வழிகளில் பாடும் பாடல்கள் காவடிசிந்து என்று அழைக்கப்படுகின்றன.
    • தைப்பூசம் பத்து நாட்கள் நடைபெறும் முக்கிய விழாவாகும்.

    பழனி (திருவாவினன்குடி-சக்திகிரி) முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாகும். திண்டுக்கல் மாவட்டம், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி கோவில் ஒரு மலைக் கோவிலாகும். மூலவர் அருள்மிகு தண்டாயுதபாணி. பதினெட்டு சித்தர்களில் ஒருவரான போகர் மூலவர் சிலையை நவபாஷாணத்தால் செய்து நிறுவியுள்ளார்.

    இக்கோவிலில் தைப்பூசம் பத்து நாட்கள் நடைபெறும் முக்கிய விழாவாகும். ஏழாம் நாள் விழாவில் தேரோட்டம் நடைபெறும். முருகன் தன இரு துணைவியரான வள்ளி மற்றும் தெய்வயானையுடன் திருமணக்கோலத்தில் ரதவீதிகளில் தேரில் பவனி வருகிறார். பத்தாம் நாள் தெப்போற்சவம் நடைபெறுகிறது.

    தைப்பூசத்தன்று மக்கள் பழனியில் குவிவது வாடிக்கை. பகதர்கள் பல பகுதிகளில் இருந்து பாத யாத்திரையாக பழனிக்கு வருகிறார்கள். நேர்த்திக் கடனாக முருகனுக்கு காவடி எடுக்கிறார்கள். பக்தர்கள் பலநாட்கள் விரதமிருந்து காவடி எடுக்கிறார்கள். காவடி எடுப்பவர்கள் வரும் வழிகளில் பாடும் பாடல்கள் காவடிசிந்து என்று அழைக்கப்படுகின்றன. காவடிகளில் பல வகை உண்டு.

    அலகு குத்துதல் - நாக்கு, கன்னம், கை, உடம்பின் பிற பகுதிகளில் சிறிய பெரிய வேல் வடிவமுடைய ஊசியால் குத்திக்கொண்டு கோவிலுக்கு வருதல். சிலர் சின்ன ரதம் போன்ற வண்டியை பக்தர்களின் முதுகில் கொக்கிகளால் இணைத்து இழுத்து வருகிறார்கள்.

    சர்க்கரை காவடி - சர்க்கரை பக்தர்களால் கால்நடையாக எடுத்து வரப்படுகிறது.

    தீர்த்தக் காவடி - கொடுமுடியில் இருந்து (கரூர் மாவட்டம்) காவிரி தீர்த்தம் பக்தர்களால் கால்நடையாக எடுத்து வரபபடுகிறது.

    பறவைக் காவடி - அலகு குத்தியவர் தொங்கியவாறு ஒரு வாகனத்தில் அழைத்து வரப்படுகிறார்.

    பால் காவடி - பால்குடம் காவடியாக பக்தர்களால் கால்நடையாக எடுத்து வரப்படுகிறது.

    மச்சக்காவடி - மீன் நீருடன் பக்தர்களால் கால்நடையாக எடுத்து வரபபடுகிறது.

    மயில் காவடி - மயில் தொகையால் அலங்கரிக்கப்பட்ட காவடி பக்தர்களால் கால்நடையாக எடுத்து வரபபடுகிறது.

    • முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்
    • தைப்பூசத்தன்று குருவழிபாடு செய்வது மிகுந்த பலனைத் தரும்.

    தைப்பூசம் என்பது உலகெங்கும் பரவி உள்ள சைவ சமயத்தை சார்ந்த தமிழர்களால் கொண்டாடப்பட்டு வரும் ஒரு விழாவாகும். தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும்.

    முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம் என்பர். தை பூசம் ஒவ்வொரு வருடத்திலும் தை மாதம் (தமிழ் பஞ்சாங்கப்படி பத்தாவது மாதம். இது பூஸா மாதம் என்றும் அறியப்படும்) பூச நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகனுக்கு (சுப்பிரமணியன் அல்லது கார்த்திகேயன்) எடுக்கப்படும் விழாவாகும்.

    நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரமாகும். இவ்விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது.தைப்பூசத்தன்று தான் உலகம் தோன்றியதாக ஐதீகம்.

    முருகன் தமிழ்க்கடவுள் ஆவார்.முருகன் என்றால் அழகு என்று பொருள். முருகன் தேவ சேனாதிபதி (தேவர்களின் சேனாதிபதி) ஆகையால் இவர் ஒரு போர்க்கடவுள் ஆவார். தை பூசத்தன்று முருகன் தருகாசுரனை வதம் செய்த நிகழ்வு ஒரு விழாவாக பழனியில் அனுஷ்டிக்கப்படுகிறது.

    சிவபெருமான் உமாதேவியுடன் இருந்து சிதம்பரத்தில் ஆனந்த நடனம் ஆடி, தரிசனம் அளித்த நாள் தைப்பூசம் என்பர்.

    சிதம்பரத்திற்கு வந்து அரும்பெரும் திருப்பணிகள் செய்து, நடராஜரை இரணியவர்மன் என்னும் மன்னன் நேருக்கு நேராகத் தரிசித்தது இந்நாளிலேயே. இக்காரணங்களுக்காகவே சிவன் கோயில்களில் தைப்பூசத்தன்று சிறப்பு அபிஷேகங்களுடன் பூஜைகள் நடத்தப்படுகின்றன.

    தேவர்களில் குருவாகிய பிரகஸ்பதியின் நட்சத்திரம் பூசம் என்பதால் தைப்பூசத்தன்று குருவழிபாடு செய்வது மிகுந்த பலனைத் தரும் என்பர்.

    வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் ஒரு தை மாத வெள்ளிக்கிழமை புனர்பூச நட்சத்திரத்தன்று தான் ஒளியானார். இதனைக் குறிக்கும் விதமாக அவர் ஒளியான வடலூருக்கு அருகில் உள்ள மேட்டுக்குப்பத்தில், தைப்பூசத்தன்று லட்சக்கணக்கானோர் கூடி வள்ளலார் விழாவைக் கொண்டாடுகிறார்கள்.

    தைப்பூச விரத முறை

    தைப்பூசத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு, திருநீறு, உருத்திராட்சம் அணிந்து சிவபெருமானை வழிபடுவர். தேவாரம், திருவாசகம் போன்றவற்றைப் பாராயணம் செய்வர். உணவு உண்ணாமல் 3 வேளைகளிலும் பால், பழம் சாப்பிடலாம். மாலையில் கோயிலுக்குச் சென்று சிவ பூஜையில் பங்கேற்று சிவனை தரிசித்து விரதத்தை நிறைவு செய்வர்.

    • அகத்திய முனிவருக்கே தமிழ் இலக்கணம் போதித்த முதல் ஆசிரியன்.
    • தாரகாசூரன் சிங்கமுகன் சூரபதுமன் முதலான அசுரர்களை அழித்தவன்.

    சிவபெருமானின் நெற்றிக்கண் தீப்பொறியில் இருந்து அவதரித்த சிவக்குமரன், சக்தி பார்வதிதேவி சேர்த்தெடுத்து ஞானப்பாலூட்டி வளர்த்த சக்திமைந்தன் தான் முருகன். இவர் விநாயகப்பெருமானின் இளைய சகோதரன், ஐயப்ப சுவாமியின் அண்ணன்.

    திருமாலின் மருமகன், இந்திரனின் மாப்பிள்ளை, தேவயானை எனும் தேவியின் கணவன். வள்ளிக்குற மகளின் காதலன், வீரபாகு முதலான நவ வீரவாகுத்தேவர்கள் 9 பேரின் தோழன், தேவர்களுக்கு இன்னல்கள் விளைத்த தாரகாசூரன் சிங்கமுகன் சூரபதுமன் முதலான அசுரர்களை அழித்தவன்.

    அகத்திய முனிவருக்கே தமிழ் இலக்கணம் போதித்த முதல் ஆசிரியன்,

    அவ்வைப்பிராட்டிக்கு தத்துவ ஞானத்தை நாவல்பழம் மூலம் போதித்தவன்.

    நக்கீரர், அருணகிரியார், குமரகுருபரர், கச்சியப்பசிவசாரியார் போன்ற ஞானிகளுக்கே தமிழ் நூல்கள் எழுத போதித்த சற்குரு.

    அப்பனுக்கே ஞானம் சொன்ன சுப்பன். தமிழகத்திற்கும் தமிழ்மொழிக்கும் தமிழ் மக்களுக்கும் உண்மையான தமிழ்த்தலைவன், வடக்கே பிறந்து தெற்கே வந்தாலும் முற்றிலும் செந்தமிழ் நாட்டிற்கே உரியவன்.

    சித்தர்கள் பரம்பரையை துவக்கி வைத்த பெருமை முருகனுக்கு உண்டு.

    முருகப்பெருமான் குன்றுகள் இருக்குமிடம் தோறும் வீற்றிருக்கிறான்.

    முருகனை மந்திரவடிவிலும், யந்திர வடிவிலும், யாக நெருப்பிலும், பற்பல சிற்ப வடிவிலும், ஓவிய வடிவிலும், தமிழ் மக்கள் வழிபாடு செய்து வருகிறார்கள்.

    முருகப்பெருமானைப் பற்றி நாம் மேலும் அறிய வேண்டுமானால் கச்சியப்பரின் கந்தபுராணம், நக்கீரரின் திருமுருகாற்றுப்படை, அருணகிரியாரின் திருப்புகழ், குமரகுருபரரின் கந்தர்கலிவெண்பா முதலான படைப்புகளை சலிப்பே இல்லாமல் படித்து, அதை நுணுக்கமாக ஆராய வேண்டும். அப்போது தான் முருகன் என்பவன் யார் என்பது மிகத்தெளிவாக தெரியவரும்.

    • ஓம் புண்ணிய மூர்த்தியே வரதா போற்றி ஓம் யோக சித்தியே அழகே போற்றி
    • ஓம் வெண்நீறணியும் விசாகா போற்றி ஓம் கண்ணின் மணியே கனியே போற்றி

    ஓம் அழகா போற்றி

    ஓம் அறிவே போற்றி

    ஓம் அரன் மகனே போற்றி

    ஓம் அயன்மால் மருகா போற்றி

    ஓம் சக்திவேலவா சரவணா போற்றி

    ஓம் முக்தி அருளும் முருகா போற்றி

    ஓம் பன்னிருகை வேலவா போற்றி

    ஓம் பவழ வாய் சிரிப்பு பாலகா போற்றி

    ஓம் ஆறிரு தடந்தோள் போற்றி

    ஓம் ஆறெழுத்து மந்த்ரம் போற்றி

    ஓம் இடும்பனை வென்றவனே போற்றி

    ஓம் இடர் களைவோனே போற்றி

    ஓம் உமையவள் மகனே போற்றி

    ஓம் உலக நாயகனே போற்றி

    ஓம் ஐயனே போற்றி அருளே போற்றி

    ஓம் ஐங்கரன் தம்பியே போற்றி

    ஓம் ஓம்கார சொருபனே போற்றி

    ஓம் மூலப்பொருளே குகனே போற்றி

    ஓம் ஓதுவார்க் கினியனே போற்றி

    ஓம் ஓங்காரத்துள் வளர் ஒளியே போற்றி

    ஓம் திருவடி தொழுதிட அருள்வாய் போற்றி

    ஓம் குருவடிவான குருவின் உருவே போற்றி

    ஓம் பக்தர்கள் போற்றும் பழம் நீ போற்றி

    ஓம் சித்தர்கள் வசமான செல்வேள் போற்றி

    ஓம் தேவர்கள் சேனைத் தலைவா போற்றி

    ஓம் தேவகுஞ்சரி மணாளா போற்றி

    ஓம் வெண்நீறணியும் விசாகா போற்றி

    ஓம் கண்ணின் மணியே கனியே போற்றி

    ஓம் தண்டபாணி எம் தெய்வமே போற்றி

    ஓம் குண்டல மொளிரும் சுந்தரா போற்றி

    ஓம் வேதப் பொருளே வேந்தே போற்றி

    ஓம் அருந்தமிழ் வளர்த்த ஐயா போற்றி

    ஓம் செந்தில் உறையும் ஸ்கந்த போற்றி

    ஓம் பழனி பதிவாழ் பாலக போற்றி

    ஓம் இருளிடர் போக்கும் பகலவா போற்றி

    ஓம் இன்பமாம் வீடருள் இறைவா போற்றி

    ஓம் அன்பின் உருவமே எம்அரசே போற்றி

    ஓம் ஒளவைக் கருளியவனே போற்றி

    ஓம் சேந்தா குறிஞ்சி வேந்தா போற்றி

    ஓம் கந்தா கடம்பா கார்த்திகேயா போற்றி

    ஓம் கருணாகரனே போற்றி

    ஓம் கதிர் வேலவனே போற்றி

    ஓம் மூலப்பொருளே முருகா போற்றி

    ஓம் சூரனுக் கருளிய சேனாபதியே போற்றி

    ஓம் குன்று தோறாடும் குமரா போற்றி

    ஓம் அறுபடை விடுடையவா போற்றி

    ஓம் கார்த்திகை மைந்தனே போற்றி

    ஓம் கந்தசஷ்டி நாயக போற்றி

    ஓம் இதயக் கோயிலில் இருப்பாய் போற்றி

    ஓம் பக்தர்தம் பகை ஒழிப்பவனே போற்றி

    ஓம் மகா சேனனே போற்றி

    ஓம் மயில் வாகனனே போற்றி

    ஓம் வடிவேலுடனே வருவாய் போற்றி

    ஓம் அடியார் துயரம் களைவாய் போற்றி

    ஓம் வளமான வாழ்வு தருவாய் போற்றி

    ஓம் வள்ளி தெய்வானை மணாளா போற்றி

    ஓம் செஞ்சுடர் மேனிச் செவ்வேள் போற்றி

    ஓம் மலைமகட் கிளைய மகனே போற்றி

    ஓம் அமிர்தாம் தமிழின் தலைவர் போற்றி

    ஓம் தமிழர் தம் கருணை மிகு இறைவா போற்றி

    ஓம் ஆடும் அயில்வேல் அரசே போற்றி

    ஓம் வந்தருள் செய் வடிவேலவா போற்றி

    ஓம் கலியுக வரதா கந்தா போற்றி

    ஓம் கவலைக் கடலை களைவோய் போற்றி

    ஓம் தந்தைக்கு மந்த்ரம் உரைத்தவா போற்றி

    ஓம் எந்தனுக்கு இரங்கி அருள்வாய் போற்றி

    ஓம் சைவம் வளர்த்த சம்பந்தா போற்றி

    ஓம் சரவணபவ சண்முகா போற்றி

    ஓம் வேடர் தம் கொடி மணாளா போற்றி

    ஓம் வனத்தில் வேடனாய் வந்தாய் போற்றி

    ஓம் புனத்தினில் ஆண்டியாய் வந்தவா போற்றி

    ஓம் தேன்திணைமா நெய்வேத்யா போற்றி

    ஓம் தெவிட்டா இன்பமே தென்றலே போற்றி

    ஓம் தேவாதி தேவனே தெய்வமே போற்றி

    ஓம் போகர் நாதனே பொலிவே போற்றி

    ஓம் போற்றப் படுவோனே பொருளே போற்றி

    ஓம் புண்ணிய மூர்த்தியே வரதா போற்றி

    ஓம் யோக சித்தியே அழகே போற்றி

    ஓம் பழனியாண்டவனே பாலகா போற்றி

    ஓம் தென்பரங்குன்றோனே தேவா போற்றி

    ஓம் கருணைமொழி போருர்க் கந்தா போற்றி

    ஓம் அருணகிரிக் கன்பு அருளினை போற்றி

    ஓம் குறிஞ்சி நிலக் கடவுளே போற்றி

    ஓம் குறுமுனி தனக்கருள் குருவே போற்றி

    ஓம் தணிகாசலம் வுறை சண்முகா போற்றி

    ஓம் சிக்கல் மேவிய சிங்காரா போற்றி

    ஓம் நக்கீரர் கருள் நாயகா போற்றி

    ஓம் விராலி மலையுறு வேலவா போற்றி

    ஓம் திருக்கழுக்குன்றின் செல்வா போற்றி

    ஓம் மணம்கமழ் கடம்ப மலையாய் போற்றி

    ஓம் குன்றக்குடி அமர் குகனே போற்றி

    ஓம் குமரகுரு புகழ் அழகா போற்றி

    ஓம் கதிர் காமத்துறை கடவுளே போற்றி

    ஓம் துதிபுரி அன்பென் துணையே போற்றி

    ஓம் பழனி பதிவாழ் பண்டித போற்றி

    ஓம் செந்தூர் பதிவாழ் சுந்தரா போற்றி

    ஓம் மருதாசல மூர்த்தியே மகிழ்வே போற்றி

    ஓம் கந்தாஸ்ரமம் நிறை கந்தா போற்றி

    ஓம் பழமுதிர் சோலைப் பதியே போற்றி

    ஓம் பத்துமலை முத்துக்குமார போற்றி

    ஓம் ஒளவையின் பைந்தமிழ் கேட்டவா போற்றி

    ஓம் அருமையின் எளிய அழகே போற்றி

    ஓம் இரு மயில் மணந்த ஏறே போற்றி

    ஓம் அருள்சேர் இருவினை நீக்குவாய் போற்றி

    ஓம் நீங்கா புகழுடை நிமலா போற்றி

    ஓம் திருப்புகழ் விருப்புடைத் தேவா போற்றி

    ஓம் அருட்பெரும் ஜோதி ஆண்டவா போற்றி

    ஓம் போற்றி... போற்றி... ஜெய ஜெய வேலவா போற்றி

    • இதய கமலமாகிய கர்ப்பகிரஹத்தில் பரமாத்மாவான ஜீவாத்மா கோயில் கொண்டுள்ளார்.
    • ஆலயத்தில் தினமும் ஐந்து வகையான வழிபாடுகள் நடைபெறும்.

    ஆலயம் என்பது நம் உடலைப் போன்றது. ஆலயத்தில் உள்ள கல்யாண மண்டபம், யாக மண்டபம், வியாகரண மண்டபம், நிருத்த மண்டபம், அர்த்த மண்டபம் முதலிய ஆறு மண்டபங்களும் நம் உடம்பில் உள்ள மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை என்ற ஆதாரங்களைப் போன்றதாகும்.

    இதய கமலமாகிய கர்ப்பகிரஹத்தில் பரமாத்மாவான ஜீவாத்மா கோயில் கொண்டுள்ளார். கோயிலின் கொடிமரம் நம் உடம்பில் உள்ள முதுகெலும்பு. இவ்வாறு எல்லா வகையிலும் நம் உடலானது ஆலய அமைப்பினைக் கொண்டுள்ளது.

    ஆலயத்திற்குத் தூய்மை வேண்டும். அதேபோல் நம் உடம்பிற்கும் தூய்மை வேண்டும். ஆலயத்தில் பக்தி வளரும். நம் உடம்பிலும் பக்தி பரவ வேண்டும்.

    ஆலயத்தில் தினமும் ஐந்து வகையான வழிபாடுகள் நடைபெறும். அதேபோல நாமும் ஐம்புலன் அடக்கத்துடன் வாழ வேண்டும்.

    இந்த நிலையில் மனித வாழ்க்கைக்கு உறுதுணையாக அமைவது ஆலயமும், வழிபாடும் தான்.

    இல்லறத்தில் மனைவி, மக்கள், பதவி என்று அல்லற்படுவது சிற்றின்பம். இறைவனின் திருவடியை மறவாமல் இருப்பது பேரின்பம். சிற்றின்பத்தை சிறுகச் சிறுக விட்டுவிட்டால் பேரின்பம் பெருகும். அந்த மனப்பக்குவம் வருவதற்கு ஞானம் வேண்டும். ஞானத்தால் அஞ்ஞானம் விலகி ஈசனைத் தரிசிக்கலாம்.

    கடவுளின் பேரருளைப் பெறுவதற்கு - அவன் திருவடித் தாமரைகளை அடைவதற்கு - நான்கு மார்க்கங்கள் கூறப்படுகின்றன. அவை சரியை, கிரியை, யோகம், ஞானம் என்பனவாகும்.

    சரியை என்றால் நாம் நம் உடலால் இறைவனுக்கு உழவாரப்பணி செய்வது. ஆலயத்தைச் சுத்தப்படுத்தல் - மெழுகிக் கோலமிடுதல் மலர்வனம் அமைத்தல் - திருக்குளத்தைச் சுத்தப்படுத்துதல் பூமாலைகள் தொடுத்துக் கொடுத்தல் முதலிய திருப்பணிகளைச் செய்வதாகும்.

    கிரியை என்றால் இறைவனைத் தாயாகவும், தந்தையாகவும் பாவித்து வழிபடுவதாகும். அருமறை ஓதுதல், எம்பெருமானின் புகழ் பாடுதல், மெய்மறந்து சங்கீர்த்தன பஜனை செய்து ஆடிப்பாடுதல், பிரவசனம் செய்தல் முதலியன கிரியை எனப்படும். இந்த மார்க்கத்தால் நாம் இறைவனின் அணுக்கத் தொண்டராக இருக்கும் பெரும் பாக்கியத்தைப் பெறுகின்றோம்.

    யோகம் என்பது ஐம்புலன் அடக்கத்துடன் தியானத்தில் அமர்ந்து, யோகன நிலையில், பகவானை நம் ஆன்மாவினால் வணங்குதல். இதுவே சாரூபம்! சாரூபம் என்றால் இறைவனின் பேருருவத்தை நாம் உள்ளத்தால் கண்டு களித்து பக்தி செய்வதாகும்.

    நான்காவது வழியான ஞானம் என்பபடுவது, புராண நூல்களையும், சாஸ்திரங்களையும் வேத, உபநிஷதங்களையும் கற்றுணர்ந்து எம்பெருமானின் கல்யாண குண விசேஷ வைபங்களை நமக்குள்ளே எண்ணி வணங்கி மகிழ்தல் ஆகும். இதனால் நாம் இறைவனுடன் இரண்டறக் கலந்துவிடும் முக்தி நிலையைப் பெறலாம்.

    • சிவபெருமான் லிங்கத் திருமேனியுடன் அருள் பாலிக்கிறார்.
    • திருப்பரங்குன்றத்தில் திருமணம் செய்து கொள்வது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    முருகப்பெருமான் அவதாரத்தின் நோக்கமே அசூரன் சூரபத்மனையும், அவனது சேனைகளையும் அழித்து தேவர்களைக் காப்பதுதான். அதன்படி, முருகப்பெருமான் அவதாரம் செய்து, சூரபத்மனை அழித்து, அவனை மயில் மற்றும் சேவலாக மாற்றி, மயிலை வாகனமாகவும், சேவலை கொடியாகவும் ஏற்றுக் கொண்டு அருளினார்.

    சூரபத்மனை முருகப்பெருமான் சம்ஹாரம் செய்ததால் தேவர்கள் துயரம் நீங்கினர். முருகப்பெருமானுக்குத் தன்னுடைய நன்றியைச் செலுத்தும் வகையில் இந்திரன் தனது மகளாகிய தெய்வயானையை திருமணம் செய்து கொடுக்க விரும்பினான். அதன்தொடர்ச்சியாக, முருகப்பெருமான் - தெய்வானை திருமணம் திருப்பரங்குன்றத்தில் இனிதே நடந்தது.

    திருமண விழாவில் பிரம்மா விவாக காரியங்கள் நிகழ்த்த... சூரிய, சந்திரர்கள் ரத்ன தீபங்கள் தாங்கி நிற்க... பார்வதி பரமேஸ்வரர் பரமானந்தம் எய்தி நிற்க... இந்திரன் தெய்வயானையை தாரை வார்த்து கொடுக்க... முருகப்பெருமான், தெய்வயானையைத் திருமணம் செய்து கொண்டதாக கூறுகிறது திருப்பரங்குன்றத்துப் புராணம்.

    இதுவும் நம் உடல் ஆதாரமான மூலாதா ரத்தை நமக்கு உணர்த்துகிறது. மூலாதாரத்தின் தன்மை ``உல்லாசம்'' என்பதாகும்.அது மட்டுமின்றி முருகப்பெருமான் நல்துணை வடிவம் கொண்டு அருள்பாலிப்பதாக ஐதீகம். முருகன் - தெய்வானை திருமணம் இந்த இரண்டையும் உறுதி படுத்துகிறது.

    பாவங்கள் போக்கும் சரவணப்பொய்கை:

    திருப்பரங்குன்றம் மலையடிவாரத்தில் கிழக்கு பக்கம் சரவணப்பொய்கை அமைந்துள்ளது. இந்த தீர்த்தம் முருகனின் கைவேலினால் உண்டானது என்றும் இந்த தீர்த்தத்தைக் கண்டாலும், அதில் நீராடினாலும் பாவங்கள் நீங்கிவிடும், வேண்டுதல் சட்டென்று நிறைவேறும் என்றும் சொல்கிறார்கள்.

    இக்கோவில் கருவறை மற்ற கோவில்களை போன்று அல்லாமல் பெரிய அளவில் ஐந்து தெய்வத்திரு உருவங்களின் இருப்பிடமாக காணப்படுகிறது. மூலவரான முருகப்பெருமானுக்கு என தனியாக கருவறை இல்லாமல், பாறையில் இடது புறம் முருகப் பெருமான் தெய்வானையுடன் திருமண கோலத்தில் காட்சி தர... அவர்களை அடுத்து, பக்கத்தில் பிற தெய்வ உருவங்கள் உள்ளன. அதாவது, முருகப் பெருமானின் திருமணக்கோலத்தை அனைத்து தெய்வங்களும் காணுமாறு இங்குள்ள கருவறை அமைந்துள்ளது.

    கருவறையின் இடது புறத்தில் கிழக்கு நோக்கியவாறு மலையை குடைந்து சத்திய கிரீசுவரர் என்னும் பெயர் கொண்டவராக சிவபெருமான் லிங்கத் திருமேனியுடன் அருள் பாலிக்கிறார்.

    இக்கோவில் மூலவரை, பாறையினை குடைந்து உருவாக்கி உள்ளதால், அதாவது தனியாக சிலை வடித்து வைக்காத காரணத்தால், இந்த மூலவருக்கு அபிஷேகம் செய்வது கிடையாது. எண்ணெய், புனுகு மட்டுமே சாத்தப்படுகிறது. அதேநேரம், இந்த வேலவனின் கையில் உள்ள வேலுக்கு மட்டுமே அபிஷேகம் உள்ளிட்ட மற்ற எல்லாவற்றையும் செய்கிறார்கள்.

    கருவறையில் முருகப் பெருமான் காலடியில் யானை ஒன்று காணப்படுகிறது. இது, இந்திரனுடைய ஐராவதம் என்றும், இந்திரனின் மகள் என்பதால் தெய்வயானையைப் பிரிய மனமில்லாது முருகனுக்குத் தொண்டாற்ற அது வந்தது என்றும் கூறுகிறார்கள்.

    கருவறையில் முருகப் பெருமானை வழிபட்டுவிட்டு, இடது புறம் உள்ள வாயில் வழியாக கீழே இறங்கினால் கீழ்ப் பகுதியில் குகைக்கோவில் ஒன்று அமைந்துள்ளது. அங்கே அன்னபூரணி, உலக உயிர்களை உணவு அளித்துக் காக்கும் தெய்வமாக காட்சித் தருகிறாள்.

    இந்த நிகழ்வும் கூட மூலாதாரத்துடன் தொடர்புடையது தான். மூலாதார சக்கரத்திற்கு உரிய தேவதை ஸ்ரீ கணேசர். யானைத் தலையைக் கொண்ட குழந்தை. இவர் குழந்தை உள்ளம் கொண்டவர். 'குண்டலினி' என்னும் கவுரி மாதாவை காவல் காத்து வருகிறார். இவர் தான் குண்டலினி மாதாவை விழிப்பு நிலை அடைய வைக்கிறார்.

    இவருடைய கோபக்கனல் தான் வெப்பக்காற்றாக பரவி நரம்பு மண்டலங்கள் மூலமாக எதிர் மறை சக்திகள் நுழையும் போது கைகளில் வெளிப்படுகிறது. எல்லா தடைகளையும் நீக்க கூடிய தெய்வமாக விளங்குகிறார்.

    இவர் தான் எல்லாக் கணங்களுக்கும் அரசனாக இருந்து ஆட்சி செய்கிறார். இத்தடைகளை நீக்கினால் தான் நாம் பரிபூரணத்துவம் பெற முடியும்.

    கணேசரின் ஞானம் மிகவும் பரி பூரணமான ஞானமாகும். அறிவுகளுக்கு எல்லாம் இதயம் போன்றவர். (உண்மையான பொருளை அறிந்து கொள்ளும் திறன் ) கணேஷர் தெய்வ குழந்தை ஆதலால் விளையாட்டுத் தன்மையும், பேரானந்தமமும், கொண்ட குழந்தையாக விளங்குகிறார். அன்பே வடிவானவராகவும் விளங்குகிறார்.

    கோவில் சிறப்புகள்:

    முருகப் பெருமான் தெய்வயானையை திருமணம் செய்து கொண்ட தலம் இது என்பதால், இந்த தலத்தில் திருமணம் செய்து கொள்வது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    மூலாதாரச் சக்கரம் பிறப்பு உறுப்புகள் , கழிவு உறுப்புகள் ஆகியவற்றைப் பாதுகாக்கின்றன. இது மக்களின் பாலுணர்வை வெளிப்படுத்தும் சக்கரம் எனலாம்.

    பாலுணர்வு என்பது மிகவும் மென்மையானது. இது அன்பை வெளிப்படுத்தக் கூடிய ஸ்தூல சரீர உணர்வே ஆகும் . இதை திருமண பந்தத்தின் மூலம் புனிதத் தன்மையுடன் வெளிப்படுத்த வேண்டும் . பிறப்பு - இறப்பு இதன் மூலம் செயல்படுகிறது .

    சமநிலையற்ற பாலுணர்வு நம்மை அடிமைப்படுத்துகிறது. ஆன்ம தரிசனம் பெற்றவர்கள் சரியான சமநிலையில் கற்புடன் வாழ்க்கை நடத்து வதை மூலாதாரமாக கொள்ள வேண்டும் என்று இந்த சக்கரம் நமக்கு உணர்த்துகிறது.

    இக்கோவிலில் மற்ற கோவில்களைப் போன்று சுற்றுப் பிரகாரங்கள் கிடையாது. மூலவரை தரிசிக்க வேண்டும் என்றால் படிக்கட்டுகள் வழியாக மேலே... மேலே... என்று ஏறிக்கொண்டே போக வேண்டும். அத்துடன், கருவறை, மூலவர், உற்சவர் ஆகியோரை வலம் வருவதும் இங்கு முடியாது.

    இக்கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானம் செய்தால் செல்வம் பெருகி வாழ்வில் வளம் சேரும் என்பது நம்பிக்கை. அதனால், செவ்வாய்க்கிழமைகளில் முருகப் பெருமானை நினைந்து வீட்டில் தயிர் சாதம் செய்து இங்கே கொண்டு வந்து ஏழை மக்களுக்கு வழங்குவதைப் பலரும் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

    விழாக்கள் விவரம்:

    தைப்பூசம், கார்த்திகைத் திருநாள், தெய்வயானையை மணந்து கொண்ட பங்குனி உத்திர நாள் ஆகியவை சிறப்பான விழாக்களாக இங்க கொண்டாடப்படுகின்றன.

    மேலும், இந்த குன்றத்து முருகப் பெருமான் உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவில் அன்னை மீனாட்சி திருக்கல்யாணத்தை காண மதுரை சென்று திரும்புவதும் முக்கிய விழாவாகும்.

    திருக்கார்த்திகை தீபம் அன்று இங்குள்ள குன்றின் உச்சியில் ஏற்றப்படும் பிரம்மாண்ட தீபத்தை சுற்று வட்டார மக்கள் கண்டு தரிசனம் செய்வது மறக்க முடியாத நிகழ்ச்சியாகும்.

    • முருகனின் அறுபடை வீடுகளில் முதலாவது படை வீடாக திகழ்வது திருப்பரங்குன்றம்.
    • முருகப் பெருமான் தெய்வானையை திருமணம் செய்து கொண்ட தலம்

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதலாவது படை வீடாகத் திகழ்வது திருப்பரங்குன்றம். முருகப் பெருமான் தெய்வானையை திருமணம் செய்து கொண்ட தலம் இது.

    அறுபடை வீடுகளை நம் உடல் ஆதாரங்களுடன் ஒப்பிட்ட நம் முன்னோர்கள் இந்த தலத்தை மூலாதாரம் என்று கூறியுள்ளனர்.

    மூலாதாரம் என்பது ஒரு பிரமாண்ட கட்டிடத்துக்கு போடப்படும் அடித்தளம் போன்றது. அதாவது மூலாதார சக்கரம் எல்லாவற்றுக்கும் வேர் போன்று உள்ளது.

    அந்த அடிப்படையில் பார்த்தால் திருப்பரங்குன்றம் தலம், தமிழ்நாட்டில் உள்ள அறுபடை வீடுகளான மற்ற 5 தலங்களுக்கும் அடித்தளமாக உள்ளது.

    பொதுவாக மூலாதாரத்தை நிலத்துடன் தொடர்புடையதாக சொல்வார்கள். திருப்பரங்குன்றம் மலை லிங்க வடிவில் கருதப்பட்டாலும் முருகன் வீற்றிருப்பது தரைப்பகுதியில் உள்ள நிலத்தில்தான்.

    லிங்க வடிவில் இருக்கும் இக்கோவில் அமைந்துள்ள மலையைப் பற்றி சைவ சமயக் குரவர்களில் முக்கியமானவர்களான சுந்தரமூர்த்தி நாயனார், திருஞானசம்பந்தப் பெருமான் ஆகியோர் சிறப்பித்துப் பாடியுள்ளனர். சங்ககாலப் புலவரான நக்கீரர் இத்தலத்து முருகப் பெருமானை வழிபட்டு தனது குறை நீக்கிக்கொண்டார் என்றும் கூறுகிறார்கள்.

    இலக்கியங்களில் தண்பரங்குன்று, தென்பரங்குன்று, பரங்குன்று, பரங்கிரி, திருப்பரங்கிரி பரமசினம், சத்தியகிரி, கந்தமாதனம், கந்த மலை என்று பல்வேறு பெயர்களில் திருப்பரங்குன்றம் அழைக்கப்படுகிறது.

    அமைவிடம்:

    சங்கம் அமைத்து தமிழ் வளர்த்த மதுரையில் இருந்து தென்மேற்கில் 9 கிலோமீட்டர் தொலைவில் திருப்பரங்குன்றம் அமைந்துள்ளது. திரு + பரம் + குன்றம் என்பதே திருப்பரங் குன்றம் என்று வழங்கப்படுகிறது. இதில், பரம் என்றால் பரம் பொருளான சிவபெருமானையும், குன்றம் என்பது குன்று வாகிய மலையையும், திரு என்பது அதன் சிறப்பை உணர்த்தும் அடைமொழியையும் குறிக்கிறது.

    இந்த குன்றானது சிவலிங்க வடிவில் காணப்படுவதால், அந்த சிவபெருமானே குன்றின் உருவில் காட்சியளிப்பதாக கருதப்பட்டு வணங்கப்பட்டு வருகிறது. இந்த மலையின் உயரம் சுமார் 190 மீட்டராகும். இந்த மலையை அனுதினமும் வலம் வந்து வழிபட்டால் தொழுவாரின் வினைகள் எல்லாம் தீர்ந்துவிடும் என்று தனது தேவாரத்தில் குறிப்பிடுகிறார் திருஞான சம்பந்தர்.

    அன்னையை நோக்கி தவம்:

    கயிலாயத்தில் ஒருநாள், பார்வதி தேவிக்கு, சிவபெருமான் பிரணவ மந்திரத்தின் உட்பொருளை உபதேசிக்கும்போது, தன் தாயாரின் மடி மீது முருகப்பெருமான் அமர்ந்திருந்தார். தாய்க்கு தந்தையார், பிரணவ மந்திர உபதேசம் செய்தபோது முருகப்பெருமானும் அந்த உபதேசத்தை கேட்டார்.

    புனிதமான மந்திரத்தின் பொருளை குருவின் மூலமாகவே அறிந்து கொள்ளவேண்டும். மறைமுகமாக அறிந்து கொள்ளுதல் முறையாகாது. அது பாவம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

    இந்த குற்றத்திற்கு பரிகாரம் தேடும் பொருட்டு முருகப் பெருமான் திருப்பரங்குன்றத்திற்கு வந்து தவம் செய்தார்.

    இந்த நிகழ்வும் கூட ஒருவகையில் நம் உடல் ஆதாரங்களில் முக்கியமானதுமான மூலாதாரத்தையே உணர்த்துகிறது. அதாவது நம் உடம்பில் முதுகெலும்பின் அடிப்பாகத்தில் உள்ள மூலாதார சக்கரத்தில் தான் உயிர் வாழ வேண்டும் என்ற ஆசையும், பிடிவாதமும் உற்பத்தி ஆவதாக கண்டு பிடித்துள்ளனர். இந்த உலக உயிர்கள் உய்யும் பொருட்டு முருகப் பெருமான் திருப்பரங்குன்றத்துக்கு வந்து பிடிவாதமாக தவம் இருந்ததாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

    மூலாதாரத்துக்கும், திருப்பரங்குன்றத்துக்கும் உள்ள அரிய தொடர்பை உறுதிப்படுத்த இது ஒன்றே போதுமானதாகும்.

    உலக ஆதாரத்தை இயக்க முருகன் இத்தலத்துக்கு வந்ததை தொடர்ந்து சிவபெருமானும், பார்வதிதேவியும் தோன்றி, முருகப் பெருமானுக்கு காட்சி தந்து அருளினார்கள். அவர்கள் இங்கு பரங்கிநாதர் என்றும், ஆவுடை நாயகி என்றும் பெயர் பெற்றார்கள். அவர்களுடைய ஆலயம் இன்றும் திருப்பரங்குன்றத்தில் மீனாட்சி-சுந்தரேஸ்வரர் ஆலயம் என்னும் பெயரில் அழைக்கப்பட்டு வருகிறது.

    எனவே திருப்பரங்குன்றம் செல்லும் பக்தர்கள் முதலில் சிவன்-பார்வதியை தரிசனம் செய்த பிறகே முருகப்பெருமான் ஆலயத்திற்கு செல்ல வேண்டும் என்பது ஐதீகம்.

    இதிலும் மூலாதாரத்தின் ஒரு அம்சம் வெளிப்படுகிறது. அதாவது மூலாதார சக்கரம் தூய்மைப்படும் போது குண்டலினி விடு பட்டு மேலெழும்புகிறது. ஆகவே இந்த சக்கரம் குண்டலினியின் தூய்மை யையும் , மங்களத் தன்மையையும் பாதுக்காக்கிறது.

    மூலாதார சக்கரம் மற்ற எல்லா சக்கரங்களுக்கும் வேர் போன்ற தாகும். தெளிவான சிந்தனையுடன், கள்ளம் கபடம் இல்லாமல் இருந்தால் மட்டுமே மூலாதார செயல்படும்.

    மூலாதாரம் என்பது எல்லா உயிரினங்களின் பரிணாம வளர்ச்சிக்கு ஆதாரமானது. இந்த சக்கரம் சக்திகளை பெறும் போது, காந்த ஷக்தியாக வெளிப்படுகிறது. இந்த சக்தியை ஒவ்வொரு வரும் உணரலாம். அதாவது சிவனிடம் இருந்து முருகன் அருள் பெற்றதை இது குறிக்கிறது.

    முருகப்பெருமானுக்கு சிவபெருமான் தை மாதத்தில் பூசம் நட்சத்திரம் அன்று காட்சித் தந்தார். அதனால், தைப்பூசம் அன்று சிவபெருமானையும், முருகப் பெருமானையும் வழிபடுகின்றவர்கள் வேண்டும் வரம் பெறுவார்கள் என்பது நம்பிக்கை. இந்த தைப்பூச விழா திருப்பரங்குன்றத்தில் 10 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    • முருகு அல்லது முருகன் என்னும் சொல் மிகமிகத் தொன்மையானது.
    • ஒளி வீசுவது போன்ற பேரழகு வாய்ந்த தெய்வீக வடிவம் கொண்டவன் முருகன்.

    முருகு அல்லது முருகன் என்னும் சொல் மிகமிகத் தொன்மையானது.

    `முருகு' என்ற சொல்லுக்கு அழியாத அழகும், குன்றாத இளமையும், இயற்கை மணமும், எல்லாப் பொருள்களிலும் கடவுள் தன்மை உண்டு என பல பொருள்கள் உண்டு.

    `மு' என்பது திருமாலையும் `ரு' என்பது சிவபெருமானின் அம்சத்தையும் `க' என்பது பிரம்மனையும் குறிக்கும் என்பர்.

    அதுபோல உருவ வழிபாட்டில் தொன்மையானதும் முருகன் வழிபாடாகும். முருகன் குறிஞ்சி நிலக்கடவுள், மலையும் மலை சார்ந்த இடங்களின் கடவுள் முருகன். அதனால் முருகனைக் `குறிஞ்சிக் கிழவன்' `மலைகிழவோன்' என்று தமிழ் நூல்கள் கூறுகின்றன.

    மனித இனம் முதன் முதலில் தோன்றிய இடம் குறிஞ்சி நிலமாகும். ஆகவே முதன் முதலில் மக்கள் குறிஞ்சி நிலத்திலேயே தெய்வ வழிபாடு தொடங்கினார்கள். ஒரு குழந்தை வடிவம் படைத்து அதை கடவுளாக வழிபாடு செய்தது முருகன் வழிபாடு என சொல்கிறார்கள்.

    முருகன் தமிழ்க் கடவுள். முருகனே தமிழ் மொழியை முதன் முதலில் அகத்தியருக்கு அறிவுறுத்தினான் என்பது வரலாறு. மேலும் சிவபிரானுக்குப் பிரணவப் பொருளைத் தமிழிலேயே முருகன் உபதேசித்தான்.

    தமிழின் மெய்யெழுத்துக்கள் பதினெட்டும் தன்னுடைய கண்களாகவும், தமிழில் வல்லினம், மெல்லினம், இடையினம் விளங்கும் எழுத்துக்கள் ஆறும் முகங்களாகவும், தனி நிலை எனப்படும் ஆய்தமே ஒப்புயர்வற்றுத் திகழும் வேலாகவும் கொண்டு, தமிழ்த் தெய்வமாகிய முருகன் தமிழ் வடிவாக விளங்குகின்றான்.

    ஞானமே உடலாகவும், இச்சாசக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி என்னும் முச்சக்திகளே மூன்று கண்களாகவும், இப்பெரிய உலகமே கோயிலாகவும் கொண்டு நிற்கும் ஒப்பற்ற தனிச்சுடராகத் திகழ்பவன் முருகன்.

    அவனுடைய ஆறு திருமுகங்களில் உலகுக்கு ஒளியையும் ஆன்மாக்களுக்கு அழியாத பேரின்ப ஒளியையும் தருவது ஒரு முகம்.

    ஆன்மாக்களுக்கு எல்லாம் அவற்றின் வினைகளைப் போக்கி வேண்டும் வரங்களை அளிப்பது ஒரு முகம்.

    வேள்விகள் வேத ஆகமச் சடங்குகள் இவற்றை ஐயமின்றி முற்று பெறச் செய்வது ஒரு முகம்.

    முனிவர்களுக்கு நூற்பொருளை விளக்குவது ஒரு முகம்.

    நேசமுடன் போகம் நுகரும் வள்ளி தெய்வானை அம்மையர்க்கு மோகம் தருவது ஒரு முகம்.

    அசுரரை அழித்துக் களவேள்வி செய்கிறது ஒரு முகம்.

    சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் நூறாயிரம் சூரியன்கள் ஒரே காலத்தில் ஒளி வீசுவது போன்ற பேரழகு வாய்ந்த தெய்வீக வடிவம் கொண்டவன் முருகன்.

    முருகன் ஒரு தொகுப்புத் தெய்வம். முருகனை வணங்கினால் பல கடவுளரை வணங்கி அடையும் பயன்களை எல்லாம் நாம் ஒருங்கே பெறலாம். மகனுக்குச் செய்யும் சிறப்பால், தந்தை தாயாகிய சிவபிரானும் உமாதேவியும், தம்பியைப் போற்றுதலால் சகோதரனாகிய விநாயகரும், மருமகனை வழிபடுதலால் மாமனாகிய திருமாலும், தலைவனை வணங்குதலால் தேவரும், முனிவரும் ஆகிய அனைவரும் மகிழ்ச்சி அடைவர். எனவே முருகன் வழிபாடு மிக்க சிறப்புடையது.

    முருகன் தன் அடியவர் வேண்டும் நலங்களை எல்லாம், அவர்கள் வேண்டியவாறே விரும்பிக் கொடுத்தருளும் பெருந்தன்மை வாய்ந்தவன்.

    அவன் நம் உள்ளத்தைக் கவரும் பண்புடையான் என்று உணர்ந்து முருகனை அடைந்தால் அவன் நம் காமத்தைப் போக்குவான் நம் துன்பத்தை அழிப்பான்.

    முருகனை அன்புடன் வழிபட்டு முருகா முருகா எனப் பலகாலும் கூறித் தியானிப்பவர்கள் என்றும் குறையாத பெருஞ்செல்வத்தை பெறுவார்கள், அவர்களை ஒருபோதும் எத்தகைய துன்பமும் அணுகாது.

    • திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில் மூலவரின் நெஞ்சில் சிறிய பள்ளம் இருக்கின்றது.
    • முத்தமிழால் வைதாரையும், வாழ வைப்பான் முருகன்

    1. முருகனின் திருவுருவங்கள்: 1, சக்திதரர், 2. கந்த சுவாமி, 3. தேவசேனாதிபதி, 4. சுப்பிரமணியர், 5. கஜவாகனர், 6. சரவணபவர், 7. கார்த்திகேயர், 8. குமாரசுவாமி, 9. சண்முகர், 10. தாரகாரி, 11. சேனாபதி, 12. பிரமசாத்தர், 13. வள்ளி கல்யாண சுந்தரர், 14. பாலசுவாமி, 16. கிரவுஞ்ச பேதனர், 16. சிகிவாகனர் எனப்படும்.

    2. முருகன் அழித்த ஆறு பகைவர்கள் ஆணவம், கன்மம், குரோதம், லோபம், மதம், மாற்சர்யம்.

    3. முருகனைப் பூஜிப்பதால் சிறப்புப் பெற்ற தலம் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள திருவிடைக்கழி. இங்கு முருகப்பெருமானுக்குப் பின்புறம் சிவலிங்கம் உள்ளது. (குரா மரத்தடியில் முருகன் பூஜித்தது) அதுபோல் திருவேற்காட்டில் வேல மரத்தடியில் முருகன் பூஜித்த சிவலிங்கம் முருகனுக்கு முன்புறமாக உள்ளது.

    4. முருகப்பெருமான் போர் புரிந்து அசுரர்களை அழித்த இடம் மூன்றாகும். 1. சூரபத்மனை வதம் செய்தது-திருச்செந்தூர், 2. தாரகாசுரனை வதம் செய்தது- திருப்பரங்குன்றம், 3. இந்த இருவரின் சகோதரனான சிங்க முகாசுரனை வதம் செய்தது போரூர் ஆகும்.

    5. திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில் மூலவரின் நெஞ்சில் சிறிய பள்ளம் இருக்கின்றது. சூரனை வதம் செய்யும் போது அவனோடு மோதியதால் இப் பள்ளம் ஏற்பட்டது.

    6. செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் அதிகாலையில் குளித்து முடித்துத் தூய்மையுடன் ஸ்ரீஸ்ரீசுப்பிரமண்ய அஷ்டகம் ஓத வேண்டும். இதனால் தோஷம் விலகி நன்மை உண்டாகும்.

    7. முருகப்பெருமானின் வலப்புறம் உள்ள ஆறு கரங்களில் அபயகரம், கோழிக்கொடி, வச்சிரம், அங்குசம், அம்பு, வேல் என்ற ஆறு ஆயுதங்களும், இடப்புறம் உள்ள ஆறு கரங்களில் வரமளிக்கும் கை, தாமரை, மணி, மழு, தண்டாயுதம், வில் போன் றவையும் இருக்கும்.

    8. ஈரோடு அருகே வெண்ணைமலை உள்ளது. அங்கு முருகன் யார் துணையும் இல்லாமல் தன்னந் தனியாகத் தண்டாயுதபாணியாகக் காட்சியளிக்கிறார். வெண்ணெய் மலையை வலம் வருபவர்கள் கயிலையை வலம் வந்த பலனைப் பெறுவார்கள்.

    9. முருகன் இறைபணிச் செல்வர்கள்: 1. அகத்தியர், 2. அருணகிரி நாதர், 3. ஒளவையார், 4. பாம்பன் சுவாமிகள், 5. அப்பர் அடிகளார், 6. நக்கீரர், 7. முசுகுந்தர், 8. சிகண்டி முனிவர், 9. குணசீலர், 10. முருகம்மையார், 11. திருமுருக கிருபானந்த வாரியார், 12. வள்ளிமலைச் சுவாமிகள், 13. குன்றக்குடி அடிகளார் ஆகியோர் ஆவார்கள்.

    10. திருப்பங்குன்றத்தில் பிரம்மகூபம் என்று அழைக்கப்படும் சந்தியாசிக் கிணற்று நீரே முருகப் பெருமானுக்கு அபிஷேகத்திற்காகப் பயன்படுகின்றது. இக்கிணற்று நீரில் குளிப்போருக்கு முருகனது அருளால் வெண்குஷ்டம், நீரிழிவு போன்ற நோய்களும் நீங்குகின்றன என்பது அதிசயமாகும்.

    11. திருச்செந்தூரில் நடைபெறும் ஆவணித் திருவிழாவின் 7-ஆம் நாள் விழாவில் தங்கப் பல்லகக்கில் எழுந்தளும் முருகப் பெருமான் முன்புறம் ஆறுமுகனின் தோற்றத்திலும், பின்புறம் நடராஜர் தோற்றத்திலும் காட்சி அளிப்பார்.

    12. கந்தபுராணத்தில் வரும் சுப்பிரமணிய ஸ்தோத்திரம் தினசரி அதிகாலையில் படிப்பவர்களது அனைத்துப் பாவங்களும் நிவர்த்தியாகும்.

    13. முருகப் பெருமானை வணங்கத் திதி, சஷ்டி, விசாகம், கார்த்திகை, திங்கள், செவ்வாய், ஆகிய உகந்த நாட்கள் ஆகும்.

    14. முருகன் கங்கையால் தாங்கப்பட்டான். இதனால் காங்கேயன் என்று பெயர் பெற்றான். சரவணப் பொய்கையில் உதித்தான். ஆகையினால் சரவண பவன் என்று அழைக்கப்பட்டான். கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டதால் `கார்த்திகேயன்' என்றும் சக்தியினால் ஆறு உருவமும் ஓர் உருவ மாக ஆக்கப்பட்டதால் கந்தன் என்றும் பெயர் கொண்டான்.

    15. குமரக்கோட்டம் என்பதே சண்முகப் பெருமானின் வாசஸ்தலமாகும். இது காஞ்சீபுரத்தில் உள்ளது.

    16. வேலன், கந்தன், சுப்பிரமணியன், கார்த்திகேயன், சரவணபவன், குமரன், சண்முகன், தாரகாரி, கிரௌஞ்ச போதனன், சக்திதரன், தேவசேனாபதி, சேனாதிபதி, காக வாகனம், மயில் வாகனன், சேனாளி, பிரம்ம சாஸ்தா, பாலசுவாமி, சிகிவாகனன், வள்ளி கல்யாண சுந்தரன், அக்கினி ஜாதன், சாரபேயன், குகன், பிரம்மசாரி, தேசிகன், காங்கேயன் ஆகியவை முருகனின் வேறு பெயர்களாகும்.

    17. கந்தப் பெருமானின் புகழ் சொல்லும் நூலான `திருப்புகழ்' நூலினை இயற்றியவர் அருண கிரிநாதர்.

    18.`முத்தமிழால் வைதாரையும், வாழ வைப்பான் முருகன்' என்று அருட்கவி அருணகிரி பாடியுள்ளார்.

    19. அக்கினி, இந்திரன், வருணன், பிரகஸ்பதி, ஹிரண்ய கர்ப்பம் ஆகியோரின் கூட்டுக் கலவையே முருகன் ஆவான்.

    20. அதர்வண வேதத்தில் முருகன் அக்கினியின் புதல்வன் எனவும், சதமத பிராமணத்தில் ருத்திரனின் புதல்வன் எனவும் சித்திரிக்கப்பட்டுள்ளான்.

    21. முருகனைக் குறித்துக் `குமார சம்பவம்' என்கிற பெயரில் காவியம் இயற்றியவர் மகாகவி களிதாசர்.

    22. யானை மேல் வீற்றிருக்கும் முருகன் உருவம் மாமல்லபுரத்துப் பாறைகளில் செதுக்கப்பட் டுள் ளது.

    23. கதம்ப அரசர்கள் கார்த்திகேயனை வழி பட்டனர்.

    24. முருகப் பெருமானின் திருவருளால் சாப விமோசனம் பெற்ற பராசர முனிவரின் ஆறு புதல்வர்கள் தப்தர், அனந்தர், நந்தி, சதுர்முகர், சக்ரபாணி, மாலி முதலி யோர் இவர்கள் மீனாய் இருந்து, முருகன் அருளால் மீண்டும் மனிதர் ஆகினர்.

    25. முருகனின் கையில் உள்ள வேல் இறைவனின் ஞானசக்தி எனப் பெயர் பெறும்.

    26. முருகனே திருஞான சம்பந்தராய் அவதாரம் செய்தார் என்று பலர் பாடியுள்ளனர்.

    27. பிரமசரிய-கிருகஸ்த-சந்நியாசக் கோலங்களில் முருகனை மட்டுமே காண முடியும். பிற கடவுள்களுக்கு இல்லாத சிறப்பு இது.

    28. தமிழகத்தில் முருகனுக்குக்குடவரைக் கோயில்கள் உள்ள இடங்கள் கழுகுமலை, திருக்கழுக்குன்றம், குன்றக்குடி, குடுமியான்மலை, சித்தன்னவாசல், வள்ளிக் கோயில், மாமல்லபுரம்.

    29. முருகக் கடவுளின் அடையாளப் பூ காந்தள் மலர்க் கண்ணியாகும்.

    30. கந்தர் சஷ்டித் திருவிழா வேதியர், சைவர், முனிவர் ஆகிய பெருமக்கள் எல்லாரும் மகிழ்ந்து ஏற்றுக் கொண்டாடி வரும் திருவிழா ஆகும்.

    31. தமிழ் மண்ணில் முருகன் குறிஞ்சி நிறக் கடவுள் என்றும், செந்நிற மேனியன், சேவற்கொடியோன், சூரியனுக்கு ஒப்பானவன் என்றும் பேசப்படுகின்றார்.

    32. பசிபிக், சிஷில்ஸ், பிஜி, மடகாஸ்கர் நாடுகளிலும் முருகன் வழிபாடு உள்ளது.

    33. மலைகளில் குடி கொண்டுள்ள குமரனுக்குச் சிலம்பன் என்றோரு பெயர் உள்ளது.

    34. முருகனுக்கு விசாகன் என்றும் ஒரு பெயர் உண்டு. விசாகன் என்றால் மயிலில் சஞ்சரிப்பவன் என்பது பொருளாகும்.

    35. முருகனின் கோழிக் கொடிக்கும் குக்குடம் என்றோர் பெயருண்டு. இந்தக் கோழியே வைகறைப் பொழுதில் ஒங்கார மந்திரத்தை ஒளி வடிவில் உணர்த்துவது ஆகும்.

    36. பொருள், வீரியம், புகழ், திரு, ஞானம், வைராக்கியம் என்கிற ஆறு குணங்களே ஆறுமுகம்.

    37. பல்லவ மன்னர்கள் முருகனைப் பரம பாகவதன், பரம மகேஸ்வரன், பரம வைஷ்ணவன், பரம பிரம்மண்யன் என்று அழைத்தார்கள் என்று செப்பேடுகள் கூறு கின்றன.

    38. எத்தனை துன்பம் எதிர் கொண்டு வந்தாலும் சரவணப் பொய்கையில் நீராடிய நொடிப் பொழுதிலேயே துன்பங்கள் எல்லாம் தொலைந்து போகும் என்று முருகன் கோயிலின் திருக்குளம் குறித்துத் தணிகை யாற்றுப் படை கூறுகின்றது.

    39. வட அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஜெர்மன், இலங்கை, பாரிஸ், ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் முதலிய நாடுகளில் முருகன் கோவில்கள் உள்ளன.

    40. முருகப் பெருமானுக்கு உகந்த மலர்கள் முல்லை, சாமந்தி, ரோஜா, காந்தன் முதலியவை ஆகும்.

    41. முருகனை ஒரு முறையே வலம் வருதல் வேண்டும்.

    42. முருகனைப் போன்று கருப்¬ப வாசம் செய்யாத வேறு தெய்வம் வீரபத்திரர்.

    43. பத்துமலை என்ற பெரியமலை மீது முருகன் உள்ளார். இந்த கோயில் (மலேசியா), கோலாலம்பூரில் இருந்து 18 கி.மீ. தூரத்தில் உள்ளது. தைப்பூசம் இங்கு விசேஷம்.

    44. முருகப் பெருமானுக்காகக் கட்டப்பட்ட முதல் திருக்கோவில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒற்றைக் கண்ணூர்த் திருக்கோவில் ஆகும். முத லாம் ஆதித்த சோழன் இதனைக் கட்டினான். இந்த கோவிலில் முருகனுக்கு யானை வாகனமாக உள்ளது. ஒரு திருக்கரத்தில் ஜபமாலையும், மறு கையில் சின்முத்திரையும் கூடிய நிலையில் இங்கே அருள்பாலிக்கிறார்.

    45. சிறுவாபுரி சென்னை-நெல்லூர் வழியில் பொன் னேரிக்கு 20 கி.மீ. தூரமுள்ளது புதுமனை புகுவோர் முன்னர் இவ்வூரில் முருகனுக்குப் பால் அபிஷேகம் செய்தால் வீட்டில் சகல சவுபாக்கியங்களும் முருகனால் உண்டாகும்.

    46. சிவகாசி அருகே 51 படிக்கட்டுகள் கொண்ட மலைமீது முருகன் கோவில் உள்ளது. 108 வைஷ்ணவத் திருப்பதிகளில் ஒன்று இது. இங்கு சிவன் கோவிலும் உண்டு. இந்த தலத்தின் பெயர் திருத்தங்கள் ஆகும்.

    47. தமிழ்நாட்டில் முதல் தங்கத்தேர் பழனி முருகன் கோவிலில் 1957-ல் இழுக்கப்பட்டது.

    48. முருகனுக்கு உருவமில்லாத கோவில் விருத்தா சலத்தில் உள்ளது. பெயர் கொளஞ்சியப்பர். அருவுருவ நிலைப் பிரார்த்தனை தலம் என்று இதனைக் கூறுவார்கள்.

    49. கந்தர் சஷ்டி கவசத்தை எழுதியவர் தேவராயன் ஆவார்.

    50. முருக வழிபாடு என்பது ஷண்மதம் என்று சொல் லப்படுகின்றது.

    51. கோபுரத்து இளையனார் என்கிற முருகன் சந்நிதி திருவண்ணாமலையில் உள்ளது.

    52. முருகன் வீற்றிருக்கும் மிக நீண்ட மலை திருத்தணி பள்ளிப்பட்டு ரோட்டில் அமைந்துள்ள நெடியமலை ஆகும்.

    53. முருகன் சிறிது காலம் நான்முகனுக்குப் பதில் படைப்புத் தொழிலையும் செய்திருக்கிறார். இதனை உணர்த்தும் வகையில் திண்டுக்கல்லில் இருந்து ஏழு மைல் தூரத்தில் உள்ள சின்னாளப்பட்டியில் நான்கு தலையுள்ள முருகன் ஆலயம் அமைந்துள்ளது.

    54. கந்தனுக்குரிய விரதங்கள்: 1. வார விரதம், 2. நட்சத்திர விரதம், 3. திதி விரதம்.

    55. முருகனின் மூலமந்திரம் ஓம் சரவணபவாய நம என்பதாகும்.

    56. வேலும் மயிலும் இல்லாத வேலவன் ஆண்டார் குப்பத்தில் உள்ளார்.

    57. முருகப் பெருமான் தோன்றிய இடம் சரவணப் பொய்கை.

    58. வேடுபறி என்பது முருகப் பெருமான் வள்ளியைச் சிறை எடுத்ததைக் கொண்டாடும் விழாவாகும்.

    59. பொன்னேரிக்கு அருகில் உள்ள பெரும்பேடு முருகன் கோவிலில் முருகன் 6 அடி உயரத்தில் உள்ளார். இங்கு தெய்வானை கிரீடத்துடனும் வள்ளிக் குறத்தி கொடையுடனும் காட்சி தருகிறார்கள். இப்படி வேறு எங்குமில்லை.

    60. முருகப் பெருமானின் திருவடி பட்ட இடம் ஞானமலை ஆகும்.

    • கந்தசஷ்டி கவசம் படியுங்கள்.
    • கஷ்டங்கள் அனைத்தும் தவிடு பொடியாகும்.

    சஷ்டி விரதம் மிகவும் விசேஷம். அதிலும் ஆடி மாத சஷ்டி அற்புதமான நன்னாள். இந்தநாளில், கந்தபெருமானை வழிபடுவோம். கவலைகளையெல்லாம் தீர்த்து வைப்பான்

    பொதுவாகவே, சஷ்டி என்பது முருகப்பெருமானை விரதம் இருந்து வழிபடுவதற்கு உரிய அற்புதமான நாள். மாதந்தோறும் வருகிற சஷ்டி திதியில், முருகப்பெருமானுக்கு விரதம் இருப்பார்கள் பக்தர்கள். சஷ்டி கவசம் பாராயணம் செய்து முருகனைப் போற்றுவார்கள்.

    செவ்வாய்க்கிழமை என்பதும் கந்தனை வழிபடுவதற்கு உரிய அருமையான நாள்.

    ஆடி மாத சஷ்டி தினமான இன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வணங்கி வழிபடுவது விசேஷம்.

    விரதம் மேற்கொள்ள இயலாதவர்கள், வீட்டில் விளக்கேற்றி, முருகப்பெருமானைத் துதிக்கும் பாடல்களைப் பாராயணம் செய்யுங்கள். கந்தசஷ்டி கவசம் படியுங்கள். எதிர்ப்புகள் விலகும். கஷ்டங்கள் அனைத்தும் தவிடு பொடியாகும். வேண்டியது அனைத்தையும் தந்தருள்வான் வேலவன்.

    இன்னும் இயலுமெனில், இந்த சஷ்டி நாளில், நான்குபேருக்கேனும் எலுமிச்சை சாதம் அல்லது தயிர்சாதப் பொட்டலம் வழங்குங்கள். நமக்கு வந்த தடைகளையெல்லாம் தகர்த்துவிடுவான் வேலவன். கண்ணுக்குத் தெரியாத எதிர்ப்புகளையும் எதிர்ப்புகளையும் விரட்டி அருள்வான் முருகப்பெருமான்!

    • திருஞானசம்பந்தர் சிக்கல் சிங்கார வேலவர் கோவிலுக்கு சென்று பதிகம் பாடினார்.
    • இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் அந்த பதிகம் படிப்பதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

    திருஞானசம்பந்தர் சிக்கல் சிங்கார வேலவர் கோவிலுக்கு சென்று பதிகம் பாடினார். இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் அந்த பதிகம் படிப்பதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

    வானுலா வும்மதி வந்துலா வும்மதில் மாளிகை

    தேனுலா வும்மலர்ச் சோலைமல் குந்திகழ் சிக்கலுள்

    வேனல்வே ளைவிழித் திட்டவெண் ணெய்ப்பெரு மானடி

    ஞானமா கந்நினை வார்வினை யாயின நையுமே.

    வானத்தே உலாவும் மதிவந்து பொருந்தும் மதில்கள் சூழ்ந்த

    மாளிகைகளும், தேன்பொருந்திய மலர்களை உடைய சோலைகளும்

    நிறைந்து விளங்கும்.

    திருச்சிக்கல் என்னும் தலத்தில், வேனிற் காலத்துக் குரியவனாகிய மன்மதனை நெற்றி விழியால் எரித்தழித்த வெண்ணெய்ப் பெருமான் திருவடிகளை அவனருளால் விளைந்த பக்தி ஞானத்தாலே நினைப்பவர் வினைகள் நைந்துஅறும்.

    மடங்கொள்வா ளைகுதி கொள்ளும் மணமலர்ப் பொய்கைசூழ்

    திடங்கொள் மாமறை யோரவர் மல்கிய சிக்கலுள்

    விடங்கொள் கண்டத்து வெண்ணெய்ப்பெரு மானடி மேவியே

    அடைந்து வாழுமடி யாரவர் அல்லல் அறுப்பரே.

    இளமை பொருந்திய வாளைமீன்கள் துள்ளிக் குதித்துக் களிக்கும் மணம்

    பொருந்திய மலர்கள் நிறைந்த பொய்கைகள் சூழ்ந்ததும்

    மனஉறுதியுடைய சிறந்த மறையவர்கள் நிறைந்துள்ளதுமான

    சிக்கலில் எழுந்தருளிய, விடம் தங்கிய கண்டத்தினை உடைய

    வெண்ணெய்ப் பெருமான் திருவடிகளை மனத்தால் விரும்பியவராய்

    அடைந்து வாழும் அடியவர்கள் அல்லல்கள் நீங்குவர்.

    நீலநெய் தல்நில விம்மல ருஞ்சுனை நீடிய

    சேலுமா லுங்கழ னிவ்வள மல்கிய சிக்கலுள்

    வேலவொண் கண்ணியி னாளையொர் பாகன்வெண் ணெய்ப்பிரான்

    பாலவண் ணன்கழ லேத்தநம் பாவம்ப றையுமே.

    நீலநிறம் பொருந்திய நெய்தல் மலர்கள் விளங்கி மலரும் சுனைகள் பலவற்றைக் கொண்டதும், சேல்மீன்கள் துள்ளும் வயல் வளம் நிறைந்ததுமான சிக்கல் என்னும் திருப்பதியில் வேல் போன்ற ஒளிநிறைந்த கண்களை உடைய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்ட வெண்ணெய்ப் பிரானாகிய பால்வண்ண நாதனின் திருவடிகளை ஏத்தின் நம் பாவங்கள் நீங்கும்.

    கந்தமுந் தக்கைதை பூத்துக் கமழ்ந்து சேரும்பொழிற்

    செந்துவண் டின்னிசை பாடல்மல் குந்திகழ் சிக்கலுள்

    வெந்தவெண் ணீற்றண்ணல் வெண்ணெய்ப்பி ரான்விரை யார்கழல்

    சிந்தைசெய் வார்வினை யாயின தேய்வது திண்ணமே.

    மணம் முற்பட்டுச் சென்று பரவுமாறு தாழைகள் பூத்துக் கமழும்

    பொழில்களில் வண்டுகள் செந்து என்னும் ஒருவகைப் பண்ணோடு பாடும்.

    பாடல்களைக் கொண்டு விளங்கும் சிக்கல் என்னும் தலத்தில், கற்பம்

    செய்தமைத்த திருவெண்ணீற்றை அணிந்த தலைமையாளனாகிய

    வெண்ணெய்ப்பிரானின் மணம் பொருந்திய திருவடிகளை நினைபவர்

    வினைப்கள் தேய்வது திண்ணம்.

    மங்குல்தங் கும்மறை யோர்கள்மா டத்தய லேமிகு

    தெங்குதுங் கப்பொழிற் செல்வமல் குந்திகழ் சிக்கலுள்

    வெங்கண்வெள் ளேறுடை வெண்ணெய்ப்பி ரானடி மேவவே

    தங்குமேன் மைசர தந்திரு நாளுந்த கையுமே.

    மேகங்கள் தங்கும் மறையவரின் மாடவீடுகளையும் அவற்றின் அருகே

    உயர்ந்து வளர்ந்துள்ள தென்னைகளை உடைய சோலைகளையும்

    கொண்டு செல்வம் நிறைந்துவிளங்கும் சிக்கல் என்னும் தலத்தில்

    சினம்மிக்க கண்களை உடைய வெள்ளேற்று ஊர்தியை உடைய

    வெண்ணெய்ப் பெருமான் திருவடிகளை அடையின், மேலான

    கதி கிடைத்தல் உறுதி. செல்வம் நாள்தோறும் பெருகும்.

    வண்டிரைத் தும்மது விம்மிய மாமலர்ப் பொய்கைசூழ்

    தெண்டிரைக் கொள்புனல் வந்தொழு கும்வயற் சிக்கலுள்

    விண்டிரைத் தம்மல ராற்றிகழ் வெண்ணெய்ப் பெருமானடி

    கண்டிரைத் தும்மன மேமதி யாய்கதி யாகவே.

    மணம் பொருந்திய சோலைகள் சூழ்ந்த காழிப் பதியுள் தோன்றிய

    ஞானசம்பந்தன் செவ்விய தண்மையான அழகிய பொழில்கள் சூழ்ந்த

    சிக்கலில் விளங்கும் வெண்ணெய்ப் பெருமான் திருவடிகளைப் போற்றி

    இசையோடு பாடிய இச்செந்தமிழ்ப் பதிகத்தை ஓதவல்லவர்

    சிவலோகத்தில் கற்பமுறையில் உண்டான திருவெண்ணீற்றை அணிந்துள்ள சிவபெருமான் திருவடிகளை மேவுவர்.

    • ஒவ்வொரு படைவீடும் ஒவ்வொரு தனிச்சிறப்புகளை கொண்டுள்ளது.
    • முருகனின் 3-ம் படைவீடான பழநி, சித்தர்கள் வாழ்ந்த புண்ணிய பூமியாகும்.

    முருகப் பெருமானின் திருவிளையாடல்களும், அவரின் தோற்றமும் மனிதர்கள் வாழ்க்கையில் உணர்ந்து கொள்ள வேண்டிய வாழ்க்கை தத்துவத்தை உணர்த்துவதாக அமைந்துள்ளது. ஆறுபடை வீடுகளை கொண்ட முருகப்பெருமானுக்கு அதன் ஒவ்வொரு படைவீடும் ஒவ்வொரு தனிச்சிறப்புகளை கொண்டுள்ளது. அதன் விபரம் வருமாறு:-

    முதல்படை வீடு

    ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் முருகன், சூரபத்மனை போரில் வென்ற பின்னர் இந்திரன் தன் மகள் தெய்வானையை முருகனுக்கு மணமுடித்து வைக்கிறார். இங்கு தெய்வானையுடன் மணக்கோலத்தில் காட்சி தருகிறார். இங்கு மலைவடிவில் சிவபெருமான் அருள் புரிகிறார். அமர்ந்த கோலத்தில் முருகன் காட்சியளிப்பது சிறப்பாகும்.

    இரண்டாம் படைவீடு

    முருகனின் 2-ம் படைவீடான திருச்செந்தூர் கடலோரத்தில் அமைந்துள்ளதால் திருச்சீலைவாய் என்றும், ஜயந்திபுரம் என்றும் பெயருண்டு. இங்கு முருகப்பெருமான் சூரபத்மனை அழித்ததாக கந்தபுராணம் கூறுகிறது. குரு தலமாகவும் விளங்குகிறது.

    மூன்றாம் படைவீடு

    முருகனின் 3-ம் படைவீடான பழநி, சித்தர்கள் வாழ்ந்த புண்ணிய பூமியாகும். பழநி முருகர் சிலை போகர் சித்தரால் நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டது. ஞானப்பழம் அடைய வேண்டிய போட்டியில், தமையன் பிள்ளையாருடன் தோற்ற கோபத்தில் பழநியில் தண்டாயுதபாணியாக காட்சி தருகிறார். இவரின் தோற்றம் உலக உண்மைகளை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது. இங்கு அபிஷேகம் செய்யப்பட்ட பஞ்சாமிர்தம், பால், தீர்த்தம் பிரசாதமாக சாப்பிட்டால் சகல நோய்களும் தீரும்.

    நான்காம் படைவீடு

    தன்னைவிட தன் பிள்ளைகள் அறிவுடையவர்களாக இருப்பது தந்தைக்கு மகிழ்ச்சியை தரும். அது மனிதர்களுக்கு மட்டுமல்ல, இறைவனுக்கும் அப்படி தான் போலும். தன் பிள்ளையின் வாயால் பிரணவ மந்திரத்தின் பொருளை கேட்க பிள்ளையை குருவாக ஏற்று, தான் சீடனாக அமர்ந்து குருவின் விளக்கத்தை கேட்ட இடம் சுவாமிமலை.அதனால் இந்த சுவாமிமலை முருகன் 'சிவகுருநாதன்' என்ற பெயரால் வணங்கப்பட்டு வருகின்றார்.

    ஐந்தாவது படைவீடு

    திருச்செந்தூரில் சூரனை வதம் செய்த முருகன் திருத்தணிக்கு சென்று தன் கோபத்தை தணித்துக் கொண்டு சாந்தமானதால், தணிகை என்று இந்த ஊருக்கு பெயர் வந்தது. மேலும், வேடர் குலத்தில் பிறந்த வள்ளியை, அண்ணன் கணேசனின் உதவியுடன் காதல் திருமணம் செய்து கொண்ட இடம் திருத்தணி ஆகும். இந்த கோவில் அருணகிரிநாதர், முத்துச்சாமி தீட்சிதர் உள்ளிட்டோரால் பாடல் பெற்ற தலம்.

    ஆறாவது படைவீடு

    அறுபடை வீடுகளில் கடைசியாக வரும் படைவீடு அழகர் மலை மீது இருக்கக்கூடிய சோலைமலையாகும். இங்கு ஒளவை பாட்டியிடம் சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? என்று கேட்ட முருகனின் ஞானத்தை பார்த்து நீ சாதாரண மானிடராக இருக்க முடியாது என தெரிந்து கொண்டார். இந்த தலத்தில் உலக வாழ்கைக்கு தேவை கல்வி அறிவு மட்டும் போதாது இறையருள் என்ற மெய் அறிவை உணர வேண்டும் என்பதை தன் திருவிளையாடலால் உணர்த்திய இடம்.

    ×