என் மலர்tooltip icon

    வழிபாடு

    Arupadai Veedu Murugan Temples: முருகனின் அறுபடை வீடுகளின் பெருமைகள் & சிறப்புகள்
    X

    Arupadai Veedu Murugan Temples: முருகனின் அறுபடை வீடுகளின் பெருமைகள் & சிறப்புகள்

    • ஒவ்வொரு படைவீடும் ஒவ்வொரு தனிச்சிறப்புகளை கொண்டுள்ளது.
    • முருகனின் 3-ம் படைவீடான பழநி, சித்தர்கள் வாழ்ந்த புண்ணிய பூமியாகும்.

    முருகப் பெருமானின் திருவிளையாடல்களும், அவரின் தோற்றமும் மனிதர்கள் வாழ்க்கையில் உணர்ந்து கொள்ள வேண்டிய வாழ்க்கை தத்துவத்தை உணர்த்துவதாக அமைந்துள்ளது. ஆறுபடை வீடுகளை கொண்ட முருகப்பெருமானுக்கு அதன் ஒவ்வொரு படைவீடும் ஒவ்வொரு தனிச்சிறப்புகளை கொண்டுள்ளது. அதன் விபரம் வருமாறு:-

    முதல்படை வீடு

    ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் முருகன், சூரபத்மனை போரில் வென்ற பின்னர் இந்திரன் தன் மகள் தெய்வானையை முருகனுக்கு மணமுடித்து வைக்கிறார். இங்கு தெய்வானையுடன் மணக்கோலத்தில் காட்சி தருகிறார். இங்கு மலைவடிவில் சிவபெருமான் அருள் புரிகிறார். அமர்ந்த கோலத்தில் முருகன் காட்சியளிப்பது சிறப்பாகும்.

    இரண்டாம் படைவீடு

    முருகனின் 2-ம் படைவீடான திருச்செந்தூர் கடலோரத்தில் அமைந்துள்ளதால் திருச்சீலைவாய் என்றும், ஜயந்திபுரம் என்றும் பெயருண்டு. இங்கு முருகப்பெருமான் சூரபத்மனை அழித்ததாக கந்தபுராணம் கூறுகிறது. குரு தலமாகவும் விளங்குகிறது.

    மூன்றாம் படைவீடு

    முருகனின் 3-ம் படைவீடான பழநி, சித்தர்கள் வாழ்ந்த புண்ணிய பூமியாகும். பழநி முருகர் சிலை போகர் சித்தரால் நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டது. ஞானப்பழம் அடைய வேண்டிய போட்டியில், தமையன் பிள்ளையாருடன் தோற்ற கோபத்தில் பழநியில் தண்டாயுதபாணியாக காட்சி தருகிறார். இவரின் தோற்றம் உலக உண்மைகளை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது. இங்கு அபிஷேகம் செய்யப்பட்ட பஞ்சாமிர்தம், பால், தீர்த்தம் பிரசாதமாக சாப்பிட்டால் சகல நோய்களும் தீரும்.

    நான்காம் படைவீடு

    தன்னைவிட தன் பிள்ளைகள் அறிவுடையவர்களாக இருப்பது தந்தைக்கு மகிழ்ச்சியை தரும். அது மனிதர்களுக்கு மட்டுமல்ல, இறைவனுக்கும் அப்படி தான் போலும். தன் பிள்ளையின் வாயால் பிரணவ மந்திரத்தின் பொருளை கேட்க பிள்ளையை குருவாக ஏற்று, தான் சீடனாக அமர்ந்து குருவின் விளக்கத்தை கேட்ட இடம் சுவாமிமலை.அதனால் இந்த சுவாமிமலை முருகன் 'சிவகுருநாதன்' என்ற பெயரால் வணங்கப்பட்டு வருகின்றார்.

    ஐந்தாவது படைவீடு

    திருச்செந்தூரில் சூரனை வதம் செய்த முருகன் திருத்தணிக்கு சென்று தன் கோபத்தை தணித்துக் கொண்டு சாந்தமானதால், தணிகை என்று இந்த ஊருக்கு பெயர் வந்தது. மேலும், வேடர் குலத்தில் பிறந்த வள்ளியை, அண்ணன் கணேசனின் உதவியுடன் காதல் திருமணம் செய்து கொண்ட இடம் திருத்தணி ஆகும். இந்த கோவில் அருணகிரிநாதர், முத்துச்சாமி தீட்சிதர் உள்ளிட்டோரால் பாடல் பெற்ற தலம்.

    ஆறாவது படைவீடு

    அறுபடை வீடுகளில் கடைசியாக வரும் படைவீடு அழகர் மலை மீது இருக்கக்கூடிய சோலைமலையாகும். இங்கு ஒளவை பாட்டியிடம் சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? என்று கேட்ட முருகனின் ஞானத்தை பார்த்து நீ சாதாரண மானிடராக இருக்க முடியாது என தெரிந்து கொண்டார். இந்த தலத்தில் உலக வாழ்கைக்கு தேவை கல்வி அறிவு மட்டும் போதாது இறையருள் என்ற மெய் அறிவை உணர வேண்டும் என்பதை தன் திருவிளையாடலால் உணர்த்திய இடம்.

    Next Story
    ×