search icon
என் மலர்tooltip icon

  முக்கிய விரதங்கள்

  • துளசி மாலை சார்த்துங்கள்.
  • விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்யுங்கள்.

  அம்பாள் மட்டுமின்றி, மகாவிஷ்ணுவும் தன் பக்தர்களின் தேவைகளை, வேண்டுதல்களை, பிரார்த்தனைகளை உடனுக்குடன் நிறைவேற்றித் தருகிறார், இந்த ஆடி மாதத்தில்!

  ஆமாம்... அம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில், மகாவிஷ்ணுவுக்கு உகந்த நாளாக சுக்ல பட்ச துவாதசி முக்கியத்துவம் வாய்ந்தது. ஆடி மாதம் துளசி வழிபாடு அரிதான பல பலன்களைத் தரும். ஆடி மாதம் வளர்பிறை நாட்களில் விரதம் இருந்து(துவாதசி வரையில்) துளசியை வழிபட்டு வந்தால், ஐஸ்வர்யம் பெருகும். நீண்ட ஆயுள் கிடைக்கும்.

  ஆடி மாத சுக்ல பட்ச துவாதசியில், மகாவிஷ்ணுவை நினைத்து விரதம் மேற்கொண்டால், நினைத்ததெல்லாம் நடக்கும், கேட்டதெல்லாம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

  சுக்ல பட்ச துவாதசி திதியில், காலையில் வீட்டில் விளக்கேற்றுங்கள். வீட்டில் உள்ள பெருமாள் படத்துக்கு சந்தனம் குங்குமமிடுங்கள். துளசி மாலை சார்த்துங்கள். விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்யுங்கள். இயலாதவர்கள், விஷ்ணு சகஸ்ர நாமத்தை ஒலிக்க வைத்து கேட்டு பெருமாளை வழிபடலாம்.

  துளசியால் அர்ச்சனை செய்யுங்கள். புளியோதரை அல்லது தயிர்சாதம் நைவேத்தியம் செய்யுங்கள். முடியுமெனில், சுக்ல பட்ச ஏகாதசியிலும் மறுநாள் துவாதசியிலும் என இரண்டு நாட்களும் பெருமாளை வழிபடலாம். காலையிலேயே நீராடி, பெருமாளின் திவ்விய நாமங்களைச் சொல்லி துளசியால் அர்ச்சித்து வழிபடுங்கள்.

  ஏகாதசி அன்று புளியோதரையும் துவாதசி அன்று தயிர்சாதமும் என பிரித்துக் கொண்டு நைவேத்தியம் செய்து மகாவிஷ்ணுவை வழிபடுங்கள். ஏகாதசி நாளில், அன்னதானம் செய்வது மகத்தான பலன்களை வழங்கும். உங்கள் கோரிக்கைகளை நிவர்த்தி செய்து அருளுவார் வேங்கடாசலபதி.

  ஏகாதசி திதியில், மகாவிஷ்ணுவை வழிபட்ட பின்னர், ஐந்து பேருக்கேனும் உணவுப் பொட்டலம் வழங்குங்கள். தனம் - தானியம் பெருகும். அசையாப் பொருட்கள் வீடு மனை என வாங்கும் யோகம் கிட்டும்.

  வீட்டில் சிக்கல், பிரச்சினை என்றிருந்த கடன் தொல்லையில் இருந்து மீள்வீர்கள். நல்ல உத்தியோகம் கிடைக்கப் பெறுவீர்கள். ஆடி மாத சுக்ல பட்ச ஏகாதசி, துவாதசி என்றில்லாமல், மாதந்தோறும் ஏகாதசி, துவாதசியில் பெருமாள் வழிபாடு செய்வதும் ஏகாதசி திதி நாளில், ஐந்து பேருக்கோ உங்களால் முடிந்த அளவுக்கோ ஏதேனும் உணவுப்பொட்டலம் வழங்கி வருவதும் பாவங்களையெல்லாம் போக்கும். புண்ணிய பலன்கள் பெருகும்.

  வேங்கடவனை ஏகாதசியிலும் துவாதசியிலும் வேண்டுங்கள். வேதனைகளையெல்லாம் தீர்த்தருள்வார் ஸ்ரீமந் நாராயணர்.

  இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
  • ஆடி மாதம் அம்மனை வழிபட உகந்த மாதமாகும்.
  • அம்மன் வழிபாடு நம் துன்பங்களை போக்கும்.

  ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகள் அம்பாளுக்குத் தனிச்சிறப்பு கொண்டவையாகக் கருதப்படுகின்றன. ஆடிமாதத்தின் சிறப்புகளையும், அம்மனை வழிபடவேண்டிய முறைகளையும் காணலாம்.

  * ஆடி கடைசி வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு உகந்த வரலட்சுமி விரதம் இருப்பது கூடுதல் பலன்களை தரும்.

  * ஆடி மாதம் ஏதாவது ஒரு வெள்ளிக்கிழமை அம்மனை ஆவாகனம் செய்து வீட்டுக்கு வரவழைத்து வழிபடுவது சிறப்பை தரும்.

  * ஆடி மாதம் குத்துவிளக்கை லட்சுமியாக பாவித்து அலங்கரித்து வழிபடுதல் வேண்டும்.

  * ஆடி மாதம் வெள்ளிக்கிழமை அம்மனுக்கு பால் பாயாசம், சர்க்கரைப் பொங்கல் வைத்து வணங்குதல் வேண்டும்.

  * அம்மனை வழிபடும் போது மறக்காமல் 'லலிதாசகஸ்ர நாமம்' சொல்ல வேண்டும்.

  * ஆடி மாதத்தை "பீடை மாதம்" என்று ஒதுக்குவது, அறியாமையால் வந்த பழக்கம். உண்மையில், "பீட மாதம்" என்றுதான் பெயர். அதாவது மனமாகிய பீடத்தில் இறைவனை வைத்து வழிபடவேண்டிய மாதம் என்பதே சரியானது.

  * ஆடி மாதம் வெள்ளிக்கிழமை அம்பிகையை வழிபட்டால் வீட்டில் சுப காரியங்கள் தங்கு தடையின்றி நடைபெறும்.

  * ஆடி மாதம் அம்மனுக்கு சாற்றப்படும் வளையல்களைப் பெண்கள் அணிந்து கொண்டால் திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், நீங்காத செல்வம் மற்றும் சகல நன்மைகளையும் பெறலாம் என்பது ஐதீகம்.

  * ஆடி பவுர்ணமியன்று சிவபெருமானுக்கு திரட்டுப்பால் அபிஷேகம் செய்து, கருப்புப் பட்டாடை, நூறு முத்துக்கள் கோர்த்த மணி மாலை, கருஊமத்தம் பூமாலை அணிவித்து, மூங்கில் அரிசிப் பாயசம் படைத்து வழிபட்டால் எப்பேர்ப்பட்ட பகையும் விலகும்.

  * பொதுவாகவே வெள்ளிக்கிழமைகள் அம்பாளுக்குரிய சிறந்த நாட்களாகும். இதனோடு அயனத்துக்குரிய சிறப்பும் சேருவதால் ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகள் அம்பாளுக்குத் தனிச்சிறப்பு கொண்டவையாகக் கருதப்படுகின்றன.

  * ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் அதிகாலையில் எழுந்து குளித்து, தூய ஆடை அணிந்து, சாணத்தைப் பிள்ளையாராகப் பிடித்து, செவ்வரளி, செம்பருத்தி, அறுகு கொண்டு சூர்யோதயத்திற்கு முன்னர் விநாயகரை பூஜிக்க வேண்டும். வாழையிலை மீது நெல்லைப்பரப்பி அதன் மீது கொழுக்கட்டை வைத்து விநாயகரை வழிபட செல்வம் கொழிக்கும்.

  * பெரியபாளையம் கோவிலில் எந்த அம்மன் தலத்திலும் இல்லாத வகையில் 2 மாதங்கள் ஆடி திருவிழா நடைபெறும்.

  * ஆடி மாதம் வீட்டில் சிறப்பு பூஜைகள் செய்யும் போது சிறு பெண் குழந்தைகளை அம்மனாக பாவித்து, உணவு கொடுத்து, ரவிக்கை, சீப்பு, குங்குமச்சிமிழ், கண்ணாடி, வளையல், தாம்பூலம் கொடுக்க வேண்டும்.

  • கருடனை வழிபடுவதால் சகல தோஷங்களும் நீங்கும்.
  • யாரெல்லாம் கருடனை வணங்கவேண்டும் என்று அறிந்து கொள்ளலாம்.

  கருடாழ்வாரை பெரிய திருவடி என்றும் ஸ்ரீஅனுமனை சிறிய திருவடி என்றும் சொல்வார்கள். பெரிய திருவடியான கருடாழ்வார் பிறந்தது ஆடி மாதம் சுவாதி நட்சத்திர நாளில் என்கிறது புராணம் இன்று ஆடி சுவாதி அனுஷ்டிக்கப்படுகிறது.

  இந்த நன்னாளில், விரதம் இருந்து கருட தரிசனம் செய்வதாலும், கருடனை வழிபடுவதாலும் சகல தோஷங்களும் நீங்கும். மாங்கல்ய பாக்கியம் நிலைத்திருக்கும்!

  மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆடி முளைகொட்டு விழா பத்து நாட்களுக்கு நடைபெறும். நான்கு ஆடி வீதிகளிலும் அம்பாள் வீதியுலா வருவாள். அதேபோல், ஆடி சுவாதி தினத்தில் சுந்தர மூர்த்தி சுவாமிகளுக்கு ஆராதனையும், புறப்பாடும் நடைபெறும். இன்று ஸ்ரீரங்கம், ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீபெரும்புதூர், நாச்சியார்கோயில் திருவல்லிக்கேணி போன்ற அனைத்து வைஷ்ணவ ஸ்தலங்களிலும் கருட ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. கருடாழ்வார் பிறந்த ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தன்று கருட வழிபாடு செய்தால் சகல தோஷங்களும் நீங்கும்.

  யாரெல்லாம் கருடனை வணங்கவேண்டும்?

  1. ராகுவின் சாரம் பெற்ற திருவாதிரை, ஸ்வாதி, சதயம் நக்ஷத்திரங்களிலும் கேதுவின் சாரம் பெற்ற அஸ்வினி, மகம், மூலம் நக்ஷத்திரங்களிலும் ராசி அல்லது லக்னம் அமைய பெற்றவர்கள்.

  2. ஜெனன ஜாதகத்தில் ராகு அல்லது கேதுவை திரிகோணங்களான லக்னம், பூர்வ புண்ணியம், பாக்கியம் மற்றும் பித்ரு ஸ்தானங்களில் ராகு/ கேது அமைய பெற்றவர்கள்.

  3. ராகுவை ஆத்மகாரகனாக கொண்டவர்கள்

  4. சூரியன் மற்றும் சந்திரனுடன் ராகு/கேது சேர்க்கை பெற்றவர்கள்

  5. கால ஸர்ப தோஷத்தில் பிறந்தவர்கள்

  6. பெண் ஜாதகங்களில் கணவனை குறிக்கும் செவ்வாயோடு ராகு சேர்க்கை பெற்றவர்கள்.

  7. கோசார ராகு/கேதுவினால் பில்லி சூனியம் போன்ற அபிசார தோஷங்களால் பாதிக்கப்பட்டவர்கள், தீராத நோய் ஏற்பட்டவர்கள்

  8. ஜெனன ஜாதகத்திலோ அல்லது கோசாரத்திலோ புதன்-கேது சேர்க்கை பெற்று தைரிய குறைவினால் பகைவர்களிடம் பயந்து நடுங்குபவர்கள்

  கருடன் 16 வகையான விஷத்தைத் தீர்க்க கூடிய மாபெரும் சக்தி பெற்றவர். விஷ ஜந்துக்களிடம் இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ளவும், பிறருக்கு ஏறிய விஷங்களை இறக்கவும் முற்காலத்தில் ஞானிகள் பலவகை கருட மந்திரங்களை லட்சக்கணக்கில் ஜெபித்து சித்தி செய்து வைத்திருந்தனர்.

  • ஆடி மாதம் வளர்பிறை நாட்களில் தினமும் துளசியை வழிபட்டு வந்தால் குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும்.
  • விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்யலாம்.

  அம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில், மகாவிஷ்ணுவுக்கு உகந்த நாளாக சுக்ல பட்ச துவாதசி முக்கியத்துவம் வாய்ந்ததாகச் சொல்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

  ஆடி மாத சுக்ல பட்ச துவாதசியில், மகாவிஷ்ணுவை நினைத்து விரதம் மேற்கொண்டால், நினைத்ததெல்லாம் நடக்கும், கேட்டதெல்லாம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

  தட்சிணாயினத்தின் முதல் ஏகாதசியாக வருவது 'தேவசயனி ஏகாதசி'. இந்த நாளில் மகாவிஷ்ணு அரிதுயில் பயிலத் தொடங்குவார் என்றும் நான்கு மாதங்களுக்குப் பின்வரும் பிரபோதினி ஏகாதசி அன்றுதான் கண்விழிப்பார் என்பது ஐதிகம். அப்படிப்பட்ட தேவசயனி ஏகாதசி தினத்தன்று விரதம் இருந்தால் வாழ்வில் இக்கட்டான தருணங்களிலிருந்து தப்பிக்க உதவும் வலிமை உண்டாகும் என்கின்றன ஞான நூல்கள்.

  ஆடி மாதம் துளசி வழிபாடு அரிதான பல பலன்களைத் தரும். ஆடி மாதம் வளர்பிறை நாட்களில் (துவாதசி வரையில்) தினமும் தவறாமல் துளசியை வழிபட்டு வந்தால் குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும். நீண்ட ஆயுள் கிடைக்கும்.

  சுக்ல பட்ச துவாதசி திதியில், காலையில் வீட்டில் விளக்கேற்றி வீட்டில் உள்ள பெருமாள் படத்துக்கு சந்தனம் குங்குமமிட்டு, துளசி மாலை சாற்றி விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்யலாம். இயலாதவர்கள், விஷ்ணு சகஸ்ர நாமத்தை ஒலிக்க வைத்து கேட்டு பெருமாளை வழிபடலாம்.

  துளசியால் அர்ச்சனை செய்யுங்கள். புளியோதரை அல்லது தயிர்சாதம் நைவேத்தியம் செய்யுங்கள். முடியுமெனில், சுக்ல பட்ச ஏகாதசியிலும் மறுநாள் துவாதசியிலும் என இரண்டு நாட்களும் பெருமாளை வழிபடலாம். காலையிலேயே நீராடி, பெருமாளின் திவ்விய நாமங்களைச் சொல்லி துளசியால் அர்ச்சித்து வழிபடுங்கள்.

  ஆடி மாதம் சுக்லபட்ச ஏகாதசியில் ஆடி கோபத்ம விரதம் கடைப் பிடிக்கப்படுவது, இந்த தினத்தில் பெண்கள் பசுவை வழிபடுவதால், லட்சுமி கடாட்சம் கிட்டும். அதே போல், ஆடி வெள்ளிக் கிழமைகளில் புற்றுக்கு பால் தெளித்து, பூஜை செய்தால் பெண்களின் ஜாதகத்தில் காணப்படும் நாகதோஷம் நிவர்த்தி யாகும்.

  ஏகாதசி அன்று புளியோதரையும் துவாதசி அன்று தயிர்சாதமும் என பிரித்துக் கொண்டு நைவேத்தியம் செய்து மகாவிஷ்ணுவை வழிபாடு செய்யலாம். ஏகாதசி நாளில், அன்னதானம் செய்வது மகத்தான பலன்களை வழங்கும்.

  • ஆடி மாதம் 18ஆம் தேதி ஆடிப்பெருக்கு விழாவாகக் கொண்டாடப்படும்.
  • ஆடி மாதம் என்பது விவசாயிகளுக்கும் உகந்த மாதமாகும்.

  ஆடி மாதத்தில்தான் தட்சிணாயன புண்ணியகாலம் ஆரம்பிக்கிறது. அதாவது சூரியன் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி தனது பயணத்தை துவக்குகிறது.

  இந்த காலக்கட்டத்தில் பகல் பொழுது குறைவாகவும், இரவு நேரம் நீண்டும் காணப்படும். காற்றும் மழையும் அதிகமாக இருக்கும்.

  ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமையும், செவ்வாய்க்கிழமையும் மிகவும் சிறப்பு வாய்ந்தது.

  ஆடி செவ்வாய் தேடிக் குளி என்பது பழமொழி. அதாவது செவ்வாய்க்கிழமை எண்ணெய் தேய்த்து தலை குளித்து, விரதம் இருந்து அம்மனை வழிபட்டு வந்தால் பெண்களின் மாங்கல்ய பலம் கூடும் என்பது நம்பிக்கை.

  ஆடி மாதம் என்றாலே அம்மன் கோவில்களில் திருவிழாவும், கூழ் ஊற்றுதலும், தீ மிதித்தலும் என்று களை கட்டும். ஆடி மாதம் என்பது அம்மனுக்கு உகந்தது என்றாலும், குறிப்பாக மாரியம்மன் வழிபாடு இன்னும் சிறப்பாகும். ஞாயிற்றுக்கிழமைகளில் மாரியம்மனுக்கு கூழ் ஊற்றி வீடுகளில் சிறப்பு பூஜைகள் செய்வார்கள்.

  ஆடி அமாவாசையில் குடும்பத்தின் முன்னோர்களுக்கு திதி கொடுப்பதும் புண்ணியத்தை அளிக்கும்.

  ஆடி மாதம் 18ஆம் தேதி ஆடிப் பெருக்கு விழாவாகக் கொண்டாடப்படும். இந்த நாளில் நதிகளில் நீர்ப் பெருக்கு அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. அந்த நாளில், நதிக்கரை மற்றும் கடற்கரைகளில் குடும்பத்தினருடன் அமர்ந்து இரவு உணவு உண்பதும் மரபாக இருந்து வந்துள்ளது. புதிதாக திருமணமான புதுமணத் தம்பதிகள் நதிக்கரையில் நிலாச் சோறு சாப்பிடுவார்கள்.

  அன்றைய தினம் தாலி மாற்றிப் புதுத் தாலி அணிவதும் வழக்கம். திருமணமாகாத பெண்கள், விரைவில் திருமணமாக வேண்டும் என்று அம்மனை வேண்டிக் கொண்டு மஞ்சள் கயிற்றை கழுத்தில் கட்டிக் கொள்வார்கள்.

  ஆடி மாதம் என்பது விவசாயிகளுக்கும் உகந்த மாதமாகும். விவசாயிகள் தங்கள் பணிகளை இந்த மாதத்தில்தான் துவக்குவார்கள். ஆடிப்பட்டம் தேடி விதை என்ற பழமொழியும் இதனால்தான் உருவாயிற்று.

  தமிழர்களுக்கு, ஆடி மாதம் வந்தாலே பண்டிகைகளின் அணிவகுப்பு ஆரம்பமாகி விடும். ஆடி மாதப் பிறப்பு முதல், தை மாதம் பொங்கல் வரை பலவித வழிபாடுகளிலும், கொண்டாட்டங்களிலும் மக்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்வது தொன்றுதொட்டு இருந்து வரும் வழக்கமாகும்.

  ஆடி மாதத்தை பல தெய்வங்களுடன் தொடர்புபடுத்தி நம் முன்னோர்கள் பல விரதங்களை மேற்கொண்டு வழிபட்டு வந்தனர்.

  ஒரு வருடத்தை இரண்டு அயனங்களாக நம் முன்னோர்கள் வகுத்திருக்கிறார்கள். ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் முடிய தட்சிணாயனம். இது தேவர்களுக்கு இரவாகும். தை மாதம் முதல் ஆனி மாதம் முடிய உத்தராயணம் காலமாகும். இது தேவர்களுக்கு பகலாகும்.

  அதாவது ஆடிமாதமே, தேவர்களின் மாலைக்காலம் (6 மணி முதல்– 8 மணி வரை) இந்த மாலை நேரத்தில் அனைத்து உயிருக்கும் அன்னையான அம்பிகையைத் துதித்து, அவள் அருளை வேண்டுதல் வேண்டும். ஆடி மாதத்தில் தான் பூமாதேவி அவதரித்தாள். பூமியில் வாழும் நமக்கு, மழை இல்லா விட்டால் எதுவும் நடக்காது! மழையே நீ பொழிவாய்!" என்று வேண்டுதல் செய்ய வேண்டும்.

  உலகிற்கெல்லாம் தாயான அன்னை பராசக்திக்கு எம்மைக் காத்திட வேண்டி அவள் அருள் பெற ஆடி மாதம் பிறந்ததும் கூழ் காய்ச்சி கொழுக்கட்டை பிடித்து அவித்து அம்மனுக்கு படைப்பார்கள்.

  காற்றாலும் வெப்பத்தாலும் ஏற்படும் நோய்களை குணப்படுத்த அந்த முத்துமாரி அம்மன் மனது வைக்க வேண்டும் என்று வேண்டுதல் பண்ணுவர். வேப்பிலை மாலை சாற்றுதலும் எலுமிச்சைக்கனி மாலை சாற்றி வெப்பு நோய் தீர்க்க வழிபடுவதும் கால காலமாய் நடைபெற்று வரும் வழக்கமாகும்.

  எலுமிச்சைசாறு, கரும்பு, இளநீர், பால், தயிர், சந்தனம், குங்குமம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்து அம்மனை குளிரச்செய்வர். பட்டுப்பாவாடை உடுத்தி பூமாலை சூட்டி அழகுபடுத்துவர். அம்மனுக்கு பிடித்தது வேப்பிலை. மாலை அதை அழகுற அணிவித்து அழகாக்குவர்.

  தயிர்சாதம், எலுமிச்சைசாதம், கூழ் கஞ்சி போன்றவைகளை படையல் இட்டு அன்னபூரணி எமக்கு என்றும் குறைவில்லாத வாழ்வை வளமுடன் தந்திட நிவேதனம் செய்து பழங்கள், வெற்றிலை, பாக்கு, தேங்காய், மஞ்சள், குங்குமம் ஆகியவற்றையும் சேர்த்து படைத்து தூபம் தீபம் காட்டி பூச்சொரிந்து பூமலர்களால் அர்ச்சித்து வழிபட வேண்டும்.

  • கந்தசஷ்டி கவசம் படியுங்கள்.
  • கஷ்டங்கள் அனைத்தும் தவிடு பொடியாகும்.

  சஷ்டி விரதம் மிகவும் விசேஷம். அதிலும் ஆடி மாத சஷ்டி அற்புதமான நன்னாள். இந்தநாளில், கந்தபெருமானை வழிபடுவோம். கவலைகளையெல்லாம் தீர்த்து வைப்பான்

  பொதுவாகவே, சஷ்டி என்பது முருகப்பெருமானை விரதம் இருந்து வழிபடுவதற்கு உரிய அற்புதமான நாள். மாதந்தோறும் வருகிற சஷ்டி திதியில், முருகப்பெருமானுக்கு விரதம் இருப்பார்கள் பக்தர்கள். சஷ்டி கவசம் பாராயணம் செய்து முருகனைப் போற்றுவார்கள்.

  செவ்வாய்க்கிழமை என்பதும் கந்தனை வழிபடுவதற்கு உரிய அருமையான நாள்.

  ஆடி மாத சஷ்டி தினமான இன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வணங்கி வழிபடுவது விசேஷம்.

  விரதம் மேற்கொள்ள இயலாதவர்கள், வீட்டில் விளக்கேற்றி, முருகப்பெருமானைத் துதிக்கும் பாடல்களைப் பாராயணம் செய்யுங்கள். கந்தசஷ்டி கவசம் படியுங்கள். எதிர்ப்புகள் விலகும். கஷ்டங்கள் அனைத்தும் தவிடு பொடியாகும். வேண்டியது அனைத்தையும் தந்தருள்வான் வேலவன்.

  இன்னும் இயலுமெனில், இந்த சஷ்டி நாளில், நான்குபேருக்கேனும் எலுமிச்சை சாதம் அல்லது தயிர்சாதப் பொட்டலம் வழங்குங்கள். நமக்கு வந்த தடைகளையெல்லாம் தகர்த்துவிடுவான் வேலவன். கண்ணுக்குத் தெரியாத எதிர்ப்புகளையும் எதிர்ப்புகளையும் விரட்டி அருள்வான் முருகப்பெருமான்!

  • ஆடி மாதத்தில், பூரம் நட்சத்திரம் உச்சமாக இருக்கும்.
  • அம்மனை வழிபாடு செய்தால், கேட்ட வரம் கிடைக்கும்.

  ஆடி மாதம் முழுவதுமே அம்மனை வழிபடக்கூடிய மாதமாக உள்ளது. ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திர நாளை, 'ஆடிப்பூரம்' என்ற பெயரில் அம்மன் ஆலயங்கள் தோறும் கொண்டாடுவார்கள். ஆடி மாதத்தில் சிவனை விட அம்மனையே அதிகமாக வழிபாடு செய்வார்கள். பூமியில் அவதரித்த அம்மன், ஆடி மாதத்தில் தான் பூப்படைந்ததாகவும், சூலுக்கு தயாரானதாகவும் கூறப்படுகிறது. அதை குறிப்பதாக ஆடிப்பூரம் திருவிழா நடைபெறும் 10 நாட்களும், அம்மன் தினமும் ஒரு கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி தருவதாக நம்பிக்கை.

  ஆடி பூரத்தன்று அம்மன் கோவிலுக்குச் சென்று அம்மனுக்கு கண்ணாடி வளையல்கள் வாங்கி அளிப்பது மிகவும் புண்ணியம். வளையல்களை அம்மனுக்கு படைத்து வழிபட்டு, அவளது பிரசாதமாக சில வளையல்களைப் பெற்று அணிந்து கொண்டால், மனம்போல மாங்கல்யம் அமையவும், மங்கலங்கள் நிலைக்கவும் செய்யும். அதோடு, அம்பிகை தாய்மைக் கோலம் கொண்ட நாள் என்பதால் குழந்தை பாக்கியமும் நிச்சயம் கிட்டும் என்பது ஐதீகமாக உள்ளது.

  திருமணமாகாத பெண்கள், நல்ல கணவன் துணையாக அமைய வேண்டும் என்றும், தீர்க்க சுமங்கலியாக வாழ வேண்டும் என்றும் வேண்டிக்கொண்டால், அந்த வரத்தை ஆதிசக்தியான அன்னை அருள்வதாக நம்பிக்கை. இந்த அற்புத திருநாளில் எழை, எளிய சுமங்கலிப் பெண்களுக்கு புடவை, குங்குமம், மஞ்சள், வெற்றிலை பாக்கு, பணம் வைத்து கொடுப்பதும் உண்டு. பலர் மஞ்சள் தாலி கட்டிக் கொள்வர்.

  ஆடி மாதத்தில், பூரம் நட்சத்திரம் உச்சமாக இருக்கும். இந்நாளில் வயதில் மூத்த சுமங்கலிப் பெண்களுக்கு புடவை, மஞ்சள், குங்குமம், வெற்றிலை பாக்கு, பணம் வைத்து கொடுத்து ஆசிபெறுவது நல்லது. ஆடிப்பூரம் அன்று சக்தி பீடங்கள் என்று அழைக்கப்படும் அம்மன் ஆலயங்களுக்குச் சென்று வழிபாடு செய்தால், கேட்ட வரம் கிடைக்கும். ஆரோக்கியமும், செல்வ செழிப்பும் உண்டாகும்.

  ஆடிப்பூரமான இன்று விரதம் இருந்து ஆலயத்திற்குச் சென்று அம்மனை வழிபட இயலாதவர்கள், தங்கள் வீடுகளில் பூஜை அறையில் உள்ள அம்மன் படத்திற்கு முன்பு, பட்டு வஸ்திரம், வளையல், பூக்கள் படைத்து வணங்கலாம். இளம்பெண்கள், திருமணமான பெண்களுக்கு வளையல் கொடுத்தால் நம்முடைய வீட்டிலும் வளைகாப்பு நடைபெறும் என்பது நம்பிக்கையாகும். அன்னைக்கு பிரியமான பிரசாதமாக பானகம், நீர் மோர், சர்க்கரைப் பொங்கல், கூழ், ஆகியவற்றை படைத்து வேண்டிக்கொண்டால் சகலவிதமான நன்மைகளையும் பெறலாம்.

  திருமணமாகாத பெண்கள், ஆடிப்பூர நாளில் விரதம் இருந்து ஆண்டாளை வணங்கினால் விரைவில் திருமணம் கைகூடும்.

  • இன்று ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை.
  • பிரிந்த தம்பதியை ஒன்று சேர்த்து வைப்பாள்.

  ஆடி மாதம் என்பது சக்திக்கு உரிய வழிபாடு. இந்த மாதத்தில் உலகெங்கும் மகாசக்தியின் அளப்பரிய சக்தியானது வியாபித்திருக்கும். ஆடி மாதத்தில் வரும் செவ்வாய்க்கிழமையும் வெள்ளிக்கிழமையும் மகத்துவம் நிறைந்த நாட்களாகும்.

  இன்று ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை. இன்று விரதம் இருந்து அம்மனை ஆராதிக்க வேண்டும். காலையில் ஆலயத்துக்கு சென்று ஐந்துமுக திரி வைத்து விளக்கு ஏற்றுங்கள். நெய்விளக்கேற்றுவது மிக, மிக நல்லது. அம்மனுக்கு வேண்டிக் கொண்டவர்கள் அல்லது நினைத்தது நடக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் இன்று மாவிளக்கு போடுங்கள்.

  அம்பாளுக்கு மிகவும் பிடித்தது செந்நிற மலர்கள்தான். எனவே சிவப்பு நிறத்தில் மலர்களை வாங்கி சாத்துங்கள். குடும்பமாக எல்லோரும் அமர்ந்து, பூஜித்து வணங்குங்கள்.

  ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருந்து அம்மன் வழிபாடு செய்து சுமங்கலிகளுக்கு புடவை, ஜாக்கெட் முதலான மங்களப் பொருட்களும் சேர்த்துக் கொடுப்பது நல்லது. கணவரின் ஆயுள் பெருகும். தடைப்பட்ட மங்கள சுபகாரியங்கள் அனைத்தும் தங்கு தடை இல்லாமல் விரைவில் கை கூடி வரும்.

  ஆடி மாதத்தின் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் சுமங்கலிகளுக்கு மங்கலப் பொருட்கள் வழங்கி நமஸ்கரிப்பதும் ஆசீர்வதிப்பதும் சிறப்பு வாய்ந்தது.

  வீட்டில் வறுமை நிலை மாறி, சகல செல்வங்களும் பெருகும். லலிதா சகஸ்ர நாம பாராயணம், கனகதாரா ஸ்தோத்திரம் பாராயணம் செய்யுங்கள். பால் பாயாசம், கேசரி, சர்க்கரைப் பொங்கல் என ஏதேனும் ஒன்றை நைவேத்தியம் செய்து, அக்கம் பக்கத்து குழந்தைகளுக்கு வழங்குங்கள். இன்று முதல் வெள்ளிக்கிழமை இவற்றையெல்லாம் கடை பிடித்தால் ஆன்மிக ஞானம் அதிகரிக்கும்.

  ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையான இன்று மறக்காமல், அம்பாளை, அன்னையை, மகாசக்தியை, உலகாளும் நாயகியை ஆத்மார்த்தமாக வணங்குங்கள். இல்லத்திலும் உள்ளத்திலும் ஒளியேற்றுவாள். பிரிந்த தம்பதியை ஒன்று சேர்த்து வைப்பாள். இதுவரை வீட்டில் இல்லாமல் இருந்த ஒற்றுமையை பலப்படுத்திக் கொடுப்பாள்.

  • ஒவ்வொரு வியாழக்கிழமையும் ராகவேந்திரரை விரதமிருந்து வேண்டிக்கொள்ளுங்கள்.
  • பக்தர்கள் கேட்காததையும் தந்து அருள்பாலிக்கிறார் மகான்.

  கேட்டதும் பக்தர்களுக்கு அருளும் கற்பக விருட்சமாகத் திகழ்பவர் மகான் ஸ்ரீ ராகவேந்திரர். சுவாமிகள் தன் தவ பலத்தால் பல்வேறு அற்புதங்களைச் செய்தார். இதன் மூலம் அநேகர் அவரை நோக்கி வரத் தொடங்கினர். அன்பு ஒன்றையே தன் கொள்கையாகக் கொண்டு உபதேசம் செய்தார். துங்கபத்ரா நதிக்கரையில் அமைந்த மாஞ்சாலி கிராமமே இன்று மந்திராலயமாகப் போற்றப்படுகிறது. இங்குதான் மகான் ராகவேந்திரரின் பிருந்தாவனம் அமைந்துள்ளது. 700 ஆண்டுகள் அந்த பிருந்தாவனத்தில் சூட்சுமமாய்த் தங்கியிருந்து பக்தர்களுக்கு அருள்வேன் என்ற சுவாமிகள் இன்றும் தன்னை வேண்டிக்கொள்ளும் பக்தர்களுக்கு அற்புதங்கள் நிகழ்த்தி வருகிறார்.

  ராகவேந்திரா சுவாமிகளை விஷ்ணு பக்தரான பிரகலாதரின் அவதாரமாக கருதப்படுகிறார். ராகவேந்திரா சுவாமிகளை பின்பற்றவர்கள் ராகவேந்திரா சுவாமிகள் தனது பக்தர்களுக்கும் ஆசியும் அருளும் புரிந்து கொண்டே இருக்கின்றார் என்று நம்புகிறார்கள்.

  இத்தகைய சிறப்பு வாய்ந்த ராகவேந்திர மகானை குருவாரத்தில், வியாழக்கிழமைகளில் விரதம் இருந்து வணங்கித் துதித்தால், சகல செளபாக்கியங்களும் கிடைக்கப் பெறலாம் என்கிறார்கள் மகான் ராகவேந்திரரின் பக்தர்கள்.

  மந்திராலய மகான் என்று போற்றப்படுகிறார் ஸ்ரீராகவேந்திரர். அமைதியும் தயாள குணமுமே பக்திக்கான எளிய வழிமுறைகள் என்பதை மக்களுக்கு எடுத்துரைத்தார். அமைதியாக இருக்க இருக்க அதுவே ஆன்மிகம் என்றும் அதுவே இறைவனை அடைவதற்கான வழி என்றும் நமக்குச் சொல்லி வழிகாட்டினார் பகவான் ஸ்ரீராகவேந்திரர்.

  'என்னை நாடி வரும் பக்தர்களுக்கு எல்லா வரங்களையும் நான் தருவேன்' என்பது ராகவேந்திரர் வாக்கு. இந்த அருள் நிறைந்த பொருள் நிறைந்த வார்த்தையை ராகவேந்திர மகான் எப்போது சொன்னார் தெரியுமா?

  மந்திராலயத்தில், ஜீவசமாதியில் இறங்கி முக்தி அடைந்தார் ஸ்ரீராகவேந்திரர். அப்படி ஜீவ சமாதியில் இறங்குவதற்கு முன்னதாக, தன் சீடர்களையும் பக்தர்களையும் பார்த்து பகவான் ராகவேந்திரர் அருளிச் சொன்ன வார்த்தைகள் இவை. சத்திய வார்த்தையாக இன்றைக்கும் போற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

  ராகவேந்திர மகானை யாரெல்லாம் மனமுருகி வேண்டுகிறார்களோ, எவரெல்லாம் விரதம் மேற்கொண்டு அவரை வேண்டுகிறார்களோ அவர்களுக்கு அவர்கள் கேட்டதையெல்லாம் தந்தருள்கிறார் ராகவேந்திரர். பக்தர்கள் கேட்காததையும் தந்து அருள்பாலிக்கிறார் மகான்.

  பிருந்தாவன நாயகனை, மந்த்ராலய மகானை, குரு ராகவேந்திரரை மனதார வேண்டுவோம். ஆத்மார்த்தமாக பூஜிப்போம். அற்புத மகான் ராகவேந்திரர் நம் வாழ்வில் பல அற்புதங்களையெல்லாம் நிகழ்த்தி அருளுவார்.

  தொடர்ந்து ஒவ்வொரு வியாழக்கிழமையும் ராகவேந்திரரை விரதமிருந்து வேண்டிக்கொள்ளுங்கள். உங்கள் பிரார்த்தனைகளை விரைவில் நிறைவேற்றித் தந்தருள்வார் பூஜ்யஸ்ரீ ராகவேந்திர மகான்!

  ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional

  • ஆடி மாத செவ்வாய்க் கிழமைகளை திருநாளாக கொண்டாடுவது தனிச்சிறப்பு.
  • இவ்விரதம் இருப்பவர்களுக்கு அம்மன் அருள் கிட்டும்.

  ஆடியில், செவ்வாய்க்கிழமைதோறும் சுமங்கலிப் பெண்கள் மஞ்சள் பூசிக் குளிப்பதால், மாங்கல்ய பலம் கூடும். அதேபோன்று ஆடி மாதச் செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் அவ்வையார் விரதம் கடைப்பிடிக்கும் வழக்கமும் உண்டு.

  கணவனின் ஆயுள் நீடிக்கவும், குழந்தை வரம் வேண்டியும், குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கவும், கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமண வரம் கிடைக்கவும் இந்த விரத வழிபாட்டின் மூலம் பிரார்த்தித்துக் கொள்வார்கள். வசதியுள்ளவர்கள், கடைசி செவ்வாய்க்கிழமை (ஆகஸ்டு 15)அன்று குழந்தைகளை வீட்டுக்கு வரவழைத்து அவர்களை தெய்வமாக வழிபட்டு விருந்தளிப்பார்கள்.

  கடைசி ஆடிச்செவ்வாய் அன்று வருடத்திற் கொருமுறை கிராமத்தில் உள்ள வசதி படைத்த வீட்டார்கள் முறைப்படி ஒவ்வொருவராக எல்லாக் குழந்தைகளையும் தங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்று அவர்களைத் தெய்வமாக வழிபட்டு வடை, பாயாசத்துடன் விருந்தளிப்பர். சிலர் புதிய பாவாடை, சட்டைகள் வாங்கிக் கொடுப்பதுடன் அதனுடன் வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய், மஞ்சள், காசு வைத்துக் கொடுப்பதும் வழக்கமாக இருந்து வருகிறது. காலத்தின் மாற்றங்களினால் இத்திருவிழா அநேக இடங்களில் கொண்டாடப்படாமல் நின்று விட்டது சில கிராமங்களில் மட்டும் இதை மறைய விடாமல் பெரியோர்கள் நடத்தி வருகிறார்கள்.

  இந்த ஆண்டு ஆடி மாதம் 5 செவ்வாய்க்கிழமை வருகிறது. அதாவது ஜூலை மாதம் 18, 25 ஆகஸ்டு மாதம் 1, 8, 15-ந் தேதிகளில் செவ்வாய்க்கிழமை வருகிறது. இந்த செவ்வாய்க்கிழமைகளில் அம்பாளை வழிபட்டு, மங்கல கவுரி விரதம் கடைப்பிடிப்பதாலும் விசேஷ பலன்கள் கைகூடும்.

  செவ்வாய்க்கிழமைகளில் அம்பாளை வழிபட்டு, மங்கல கௌரி விரதம் கடைப்பிடிப்பதாலும் விசேஷ பலன்கள் கைகூடும். ஆடி செவ்வாய்கிழமைகளில் அன்னதானம் செய்தால், பிற நாட்களில் செய்வதைவிட 48 மடங்கு அதிக பலன் கிடைக்கும் என்பது ஒருவித நம்பிக்கை. இந்த தானத்தில் அனைத்துவித காய்கறிகளையும் ஒன்றாக சேர்த்து சமைத்த சோறு கொடுப்பது மிக மிக நன்று.

  ஜாதகத்தில் செவ்வாய் தோஷமும், அங்காரக தோஷமும், செவ்வாய் நீச்சமடைந்தவர்கள், செவ்வாய் திசை நடப்பவர்கள் செவ்வாய்க்கிழமை விரதம் இருக்க வேண்டும். அதிகாலை எழுந்து குளித்து சிவப்பு நிற ஆடை அணிந்து அம்மன் கோவிலுக்குச் சென்று, செந்நிற மலர் அல்லது செண்பக மலர்களால் அர்ச்சனை செய்யவேண்டும். நிவேதனத்திற்குச் செந்நிறக் கனிகளே உகந்தது. காலையில் அம்மனையும் மாலையில் முருகனையும் வழிபடவேண்டும்.