search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "thirugnanasambandar"

    • திருஞானசம்பந்தர் சிக்கல் சிங்கார வேலவர் கோவிலுக்கு சென்று பதிகம் பாடினார்.
    • இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் அந்த பதிகம் படிப்பதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

    திருஞானசம்பந்தர் சிக்கல் சிங்கார வேலவர் கோவிலுக்கு சென்று பதிகம் பாடினார். இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் அந்த பதிகம் படிப்பதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

    வானுலா வும்மதி வந்துலா வும்மதில் மாளிகை

    தேனுலா வும்மலர்ச் சோலைமல் குந்திகழ் சிக்கலுள்

    வேனல்வே ளைவிழித் திட்டவெண் ணெய்ப்பெரு மானடி

    ஞானமா கந்நினை வார்வினை யாயின நையுமே.

    வானத்தே உலாவும் மதிவந்து பொருந்தும் மதில்கள் சூழ்ந்த

    மாளிகைகளும், தேன்பொருந்திய மலர்களை உடைய சோலைகளும்

    நிறைந்து விளங்கும்.

    திருச்சிக்கல் என்னும் தலத்தில், வேனிற் காலத்துக் குரியவனாகிய மன்மதனை நெற்றி விழியால் எரித்தழித்த வெண்ணெய்ப் பெருமான் திருவடிகளை அவனருளால் விளைந்த பக்தி ஞானத்தாலே நினைப்பவர் வினைகள் நைந்துஅறும்.

    மடங்கொள்வா ளைகுதி கொள்ளும் மணமலர்ப் பொய்கைசூழ்

    திடங்கொள் மாமறை யோரவர் மல்கிய சிக்கலுள்

    விடங்கொள் கண்டத்து வெண்ணெய்ப்பெரு மானடி மேவியே

    அடைந்து வாழுமடி யாரவர் அல்லல் அறுப்பரே.

    இளமை பொருந்திய வாளைமீன்கள் துள்ளிக் குதித்துக் களிக்கும் மணம்

    பொருந்திய மலர்கள் நிறைந்த பொய்கைகள் சூழ்ந்ததும்

    மனஉறுதியுடைய சிறந்த மறையவர்கள் நிறைந்துள்ளதுமான

    சிக்கலில் எழுந்தருளிய, விடம் தங்கிய கண்டத்தினை உடைய

    வெண்ணெய்ப் பெருமான் திருவடிகளை மனத்தால் விரும்பியவராய்

    அடைந்து வாழும் அடியவர்கள் அல்லல்கள் நீங்குவர்.

    நீலநெய் தல்நில விம்மல ருஞ்சுனை நீடிய

    சேலுமா லுங்கழ னிவ்வள மல்கிய சிக்கலுள்

    வேலவொண் கண்ணியி னாளையொர் பாகன்வெண் ணெய்ப்பிரான்

    பாலவண் ணன்கழ லேத்தநம் பாவம்ப றையுமே.

    நீலநிறம் பொருந்திய நெய்தல் மலர்கள் விளங்கி மலரும் சுனைகள் பலவற்றைக் கொண்டதும், சேல்மீன்கள் துள்ளும் வயல் வளம் நிறைந்ததுமான சிக்கல் என்னும் திருப்பதியில் வேல் போன்ற ஒளிநிறைந்த கண்களை உடைய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்ட வெண்ணெய்ப் பிரானாகிய பால்வண்ண நாதனின் திருவடிகளை ஏத்தின் நம் பாவங்கள் நீங்கும்.

    கந்தமுந் தக்கைதை பூத்துக் கமழ்ந்து சேரும்பொழிற்

    செந்துவண் டின்னிசை பாடல்மல் குந்திகழ் சிக்கலுள்

    வெந்தவெண் ணீற்றண்ணல் வெண்ணெய்ப்பி ரான்விரை யார்கழல்

    சிந்தைசெய் வார்வினை யாயின தேய்வது திண்ணமே.

    மணம் முற்பட்டுச் சென்று பரவுமாறு தாழைகள் பூத்துக் கமழும்

    பொழில்களில் வண்டுகள் செந்து என்னும் ஒருவகைப் பண்ணோடு பாடும்.

    பாடல்களைக் கொண்டு விளங்கும் சிக்கல் என்னும் தலத்தில், கற்பம்

    செய்தமைத்த திருவெண்ணீற்றை அணிந்த தலைமையாளனாகிய

    வெண்ணெய்ப்பிரானின் மணம் பொருந்திய திருவடிகளை நினைபவர்

    வினைப்கள் தேய்வது திண்ணம்.

    மங்குல்தங் கும்மறை யோர்கள்மா டத்தய லேமிகு

    தெங்குதுங் கப்பொழிற் செல்வமல் குந்திகழ் சிக்கலுள்

    வெங்கண்வெள் ளேறுடை வெண்ணெய்ப்பி ரானடி மேவவே

    தங்குமேன் மைசர தந்திரு நாளுந்த கையுமே.

    மேகங்கள் தங்கும் மறையவரின் மாடவீடுகளையும் அவற்றின் அருகே

    உயர்ந்து வளர்ந்துள்ள தென்னைகளை உடைய சோலைகளையும்

    கொண்டு செல்வம் நிறைந்துவிளங்கும் சிக்கல் என்னும் தலத்தில்

    சினம்மிக்க கண்களை உடைய வெள்ளேற்று ஊர்தியை உடைய

    வெண்ணெய்ப் பெருமான் திருவடிகளை அடையின், மேலான

    கதி கிடைத்தல் உறுதி. செல்வம் நாள்தோறும் பெருகும்.

    வண்டிரைத் தும்மது விம்மிய மாமலர்ப் பொய்கைசூழ்

    தெண்டிரைக் கொள்புனல் வந்தொழு கும்வயற் சிக்கலுள்

    விண்டிரைத் தம்மல ராற்றிகழ் வெண்ணெய்ப் பெருமானடி

    கண்டிரைத் தும்மன மேமதி யாய்கதி யாகவே.

    மணம் பொருந்திய சோலைகள் சூழ்ந்த காழிப் பதியுள் தோன்றிய

    ஞானசம்பந்தன் செவ்விய தண்மையான அழகிய பொழில்கள் சூழ்ந்த

    சிக்கலில் விளங்கும் வெண்ணெய்ப் பெருமான் திருவடிகளைப் போற்றி

    இசையோடு பாடிய இச்செந்தமிழ்ப் பதிகத்தை ஓதவல்லவர்

    சிவலோகத்தில் கற்பமுறையில் உண்டான திருவெண்ணீற்றை அணிந்துள்ள சிவபெருமான் திருவடிகளை மேவுவர்.

    திருக்களம்பூரில், திருஞானசம்பந்தருக்காக தீபாவளி அன்று இரவில் நடக்க வேண்டிய அர்த்தஜாம பூஜையை, மறுநாள் அதிகாலை உஷத் காலத்தில் ஏற்று அருள்புரிந்துள்ளார், சிவபெருமான்.
    சிவபெருமானின் ஆரண்ய தலங்கள் ஐந்து. ‘ஆரண்யம்’ என்றால் ‘காடு’ என்று பொருள். ஈசன் முல்லை வனத்தில் அருளும் திருக்கருகாவூர், பாதிரி வனத்தில் அருளும் திருஅவளிவநல்லூர், வன்னி வனத்தில் அருளும் திருஅரதைப்பெரும்பாழி (அரித்துவார மங்கலம்), பூளை வனத்தில் அருளும் திருஇரும்பூளை (ஆலங்குடி), வில்வ வனத்தில் அருளும் திருக்கொள்ளம்புதூர் (திருக்களம்பூர்) ஆகிய இந்த ஐந்து தலங்களும் ‘பஞ்சாரண்ய தலங்கள்’ என்றும் அழைக்கப்படுகின்றன.

    ஒரே நாளில் இந்த ஐந்து தலங்களையும் தரிசித்தால் திருக்கயிலையை தரிசித்த பெரும்பேறு கிட்டும். இதில் முதலாவதாகத் தரிசிக்க வேண்டிய ஆலயம் திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை சமேத மாதவிவனேஸ்வரர் திருக்கோவில். இங்கு உஷத் காலமாகிய காலை 5 மணி முதல் 6 மணிக்குள் வழிபட வேண்டும். இரண்டாவது அவளிவநல்லூர் சவுந்தர்யநாயகி சமேத சாட்சிநாதர் திருக்கோவில். இங்கு காலசந்தியில் காலை 8.30 மணி முதல் 9.30 மணிக்குள் வழிபாடு செய்ய வேண்டும். மூன்றாவது அரித்துவாரமங்கலம் அலங்காரவல்லி சமேத பாதாளேஸ்வரர் ஆலயம். இந்த தலத்தில் உச்சிகாலத்தில் பகல் 11 மணி முதல் நண்பகல் 12.30 மணிக்குள் தரிசனம் செய்ய வேண்டும். நான்காவதாக ஆலங்குடி ஏலவார்குழலி சமேத ஆபத்சகாயேஸ்வரர் கோவில். இங்கு சாயரட்சையில் மாலை 5 மணி முதல் 6 மணிக்குள் வழிபாட்டை முடிக்க வேண்டும். ஐந்தாவதாக திருக்களம்பூர் கவுந்தர்யநாயகி சமேத வில்வவனநாதர் திருக்கோவில். இங்கு அர்த்த ஜாமத்தில் இரவு 7.30 மணி முதல் இரவு 8.30 மணிக்குள் வழிபட வேண்டும்.

    இந்த ஐந்து ஆலயங்களையும் ஒரே நாளில் தரிசித்து வாழ்வில் பெறுதற்கரிய பேறுகளையும், சகல வளங்களையும் பெற்று பெருவாழ்வு வாழலாம் என்பது நம் முன்னோர்களின் திருவாக்கு ஆகும். கூடவே வாழ்வில் எத்தகைய கிரக தோஷங்களுக்கு ஒருவர் ஆட்பட்டிருந்தாலும், ஒரே நாளில் குறிப்பிட்ட நேரத்தில் முறைப்படி இந்த ஐந்து சிவாலயங் களிலும் வழிபட்டால் எத்தகைய கிரக தோஷங்களும் அகன்றுவிடும் என்கிறார்கள்.

    இந்த தலங்களில் ஒன்றான திருக்கொள்ளம்புதூர் என்னும் திருக்களம்பூரில், திருஞானசம்பந்தருக்காக தீபாவளி அன்று இரவில் நடக்க வேண்டிய அர்த்தஜாம பூஜையை, மறுநாள் அதிகாலை உஷத் காலத்தில் ஏற்று அருள்புரிந்துள்ளார், சிவபெருமான்.

    இது என்ன விந்தையான கதை! வாருங்கள் தெரிந்து கொள்வோம்.

    ஒரு தீபாவளி நன்னாளில் ஐப்பசி மாத அமாவாசை அன்று பஞ்சாரண்ய தலங்களில் முதல் நான்கு தலங்களை தரிசித்த திருஞானசம்பந்தர், அன்று அர்த்தஜாம பூஜைக்கு, திருக்களம்பூர் ஈசனைக் காண வந்தார். ஐப்பசி அமாவாசை தீபாவளி இரவில் சம்பந்தர் வருவதை அறிந்த மக்கள் ஊரெங்கும் வீடுகளிலும், வெளியிலும் அகல் விளக்குகளை ஏற்றிவைத்து சம்பந்தரின் வருகைக்காக காத்திருந்தனர். ஆனால் சம்பந்தர் வரும் வழியில் கடும்மழை. இதனால் வழியில் குறுக்கிடும் அகத்திய காவிரி (முள்ளியாறு) என்னும் வெட்டாற் றில், வெள்ளம் கரை புரண்டு ஓடியது.

    ஆகையால் திருஞானசம்பந்தரால் அந்த ஆற்றைக் கடந்து ஊருக்குள் வரமுடியாத நிலை. பெரும் வெள்ளத்தின் காரணமாக, ஆற்றில் ஓடத்தை செலுத்த முடியாததால் ஓடங்கள் அனைத்தும் கரையில் நிறுத்தி வைக்கப் பட்டிருந்தன. நேரமும் அந்தி சாய்ந்து, இரவு பூத்து நள்ளிரவும் வந்தது. ஈசனை தரிசிக்காமல் செல்லக்கூடாது என்பதில் திருஞானசம்பந்தர் உறுதியாய் இருந்தார். எனவே ஆற்றின் கரையில் நிறுத்தியிருந்த ஓடம் ஒன்றில், அந்த நள்ளிரவிலும் தன் அடியவர்களுடன் ஏறினார் சம்பந்தர். ஓடத்தை ஆற்று நீரில் செலுத்த துடுப்பு இல்லை. ஆனாலும் ஓடம் சென்றது!

    ஆம்..சம்பந்தர் கூறிய பஞ்சாட்சரமும், அவர் பாடிய பதிகமும், வெள்ளத்தின் ஊடே துடுப்பு இன்றி ஓடம் பயணிக்க துணை நின்றன.

    ஓடம் ஆற்றின் மறுகரையை அதிகாலையில் அடைந்தது. ஆற்றின் கரையிலேயே ஈசன் உமையுடன் ரிஷப வாகனத்தில் சம்பந்தருக்கும், அவரது அடியார்களுக்கும் அந்த அதிகாலையில் காட்சி கொடுத்தார். பின்பு சம்பந்தர் மீதி பதிகத்தை பாடியபடியே திருக்கொள்ளம்பூதூர் ஆலயத்தை அடைந்தார். ஆலய அர்ச்சகர்களும் தீபாவளி அமாவாசை நாளில் சம்பந்தரின் வருகையை அறிந்து இரவில் காத்திருக்க, நேரம் செல்ல செல்ல சம்பந்தர் வராததால் கலக்கமுற்றனர். ஆனால் சம்பந்தர் வரும்வரை காத்திருக்குமாறு ஈசன் அர்ச்சகருக்கு அசரீரியில் கூறியதால், தீபாவளி அமாவாசை அர்த்த ஜாம பூஜைக்கான நள்ளிரவு நேரம் கடந்து விட்ட போதிலும், பூஜையை தள்ளி வைத்திருந்தனர் அர்ச்சகர்கள். திருஞானசம்பந்தர் வருவதற்குள் மறுநாள் அதிகாலை ஆகிவிட்டதால், சம்பந்தருக்காக தீபாவளி அமாவாசை அர்த்த ஜாமபூஜையானது, மறுநாள் அதிகாலையில் நடந்தேறியது.

    இன்றும் கூட தீபாவளி அமாவாசை திருநாள் இரவில் நடக்க வேண்டிய அர்த்த ஜாமபூஜை, இந்த ஆலயத்தில் மறுநாள் காலையில் தான் நடத்தப்பட்டு வருகிறது. திருஞானசம்பந்தர், திருக்கொள்ளம் பூதூருக்கு எழுந்தருளிய சம்பவத்தை நினைவு கூரும் விதமாக தீபாவளி அமாவாசையில் இந்த ஆலயத்தில் ‘ஓடத் திருவிழா’ நடத்தப்பட்டு வருகிறது.

    தீபாவளி அமாவாசை அன்று இரவு 10 மணிக்கு சம்பந்தரின் உற்சவர் சிலையை படகில் வைத்து, ஓதுவார்கள். தேவாரப் பதிகம் ஓத, வெட்டாற்றின் இக்கரையில் இருந்து அக்கரையில் உள்ள கோவிலுக்குப் படகில் கொண்டு செல்வார்கள். அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பாக சம்பந்தரின் படகு கரைக்கு வந்து சேரும். அங்கே ஆற்றின் கரையில் ரிஷப வாகனத்தில் கயிலைவாசன், சம்பந்தரையும், அவரது அடியார்களையும் எதிர்கொண்டு அழைப்பார். பிறகு அனைவரும் கொள்ளம்பூதூர் கோவிலுக்குள் செல்வார்கள். அதற்கு பிறகுதான் முந்தையநாள் நள்ளிரவு நடைபெற வேண்டிய அர்த்த ஜாம பூஜை நடைபெறும். தீபாவளி அமாவாசையின் மறுநாள் மட்டுமே, அர்த்த ஜாம பூஜை காலம் தாழ்ந்து இங்கு நடை பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஓடத் திருவிழாவில் கலந்து கொண்டால், வாழ்வில் அனைத்து ஐஸ்வரியங்களும் நமக்கு தவறாமல் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    அமைவிடம்

    கும்பகோணத்தில் இருந்து தெற்கே கொரடாச்சேரி வழியாக 20 கிலோமீட்டர் சென்றால் திருக்கொள்ளம்பூதூர் என்னும் திருக்களம்பூரை அடையலாம்.
    வைகாசி மூல நட்சத்திர நன்னாளில் சம்பந்தர் திருமணமும், சம்பந்தர் சிவஜோதியில் கலக்கும் வைபவமும் வெகு சிறப்பாக பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் முன்னிலையில் நடக்கிறது.
    31-5-2018 சம்பந்தர் கலந்த சிவஜோதி

    சீர்காழியில் சிவபாத இருதயரின் மகனாக வேதநெறியும், சைவமும், தமிழும் தழைக்க முருகப்பெருமான் திருஅவதாரமாக அவதரித்தவர், திருஞானசம்பந்தர். மூன்று வயதில் அம்பிகையால் ஞானப்பால் ஊட்டப்பட்டு சிவஞானம் பெற்றவர். ஈசனின் அருளால் அடியார்களுடன் சிவத்தலங்கள் பல சென்று பதிகம் பாடி, அற்புதங்கள் நிகழ்த்தினார்.

    அவருக்கு 16 வயது நடக்கும் போது, அவரை திருமணம் செய்து கொள்ளும்படி தந்தை கூறினார். முதலில் மறுத்த சம்பந்தர், பின் ‘ஈசனின் விளையாட்டு தான் இது’ என்று கருதி சம்மதித்தார். சீர்காழியில் இருந்து வடகிழக்கே எட்டு மைல் தொலைவில் உள்ள திருநல்லூரில் வசித்த நம்பாண்டார் நம்பியின் பெண் ஸ்தோத்திர பூர்ணாம்பிகையை மணம் முடித்து வைக்க ஏற்பாடு செய்தார். வைகாசி மாதம் மூல நட்சத்திரத்தன்று பெருமணம் சிவாலயத்தில் வைத்து திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

    திருமண நாளும் வந்தது. திருநீலகண்ட யாழ்ப்பாணர், முருக நாயனார், திருநீலநக்க நாயனார் மற்றும் சம்பந்தரின் உறவினர்களும், அடியவர்களும் ஒருங்கே திருநல்லூர் எனும் அந்த ஊரில் உள்ள பெருமணம் சிவாலயத்தில் திரண்டனர். அப்போது அன்னை உமையவள், சம்பந்தரின் திருமணம் காணவந்த அனைவருக்கும் அங்கு தோன்றி திருநீறு அளித்தாளாம். எனவேதான் இத்தல அம்பிகைக்கு ‘திருவெண்ணீற்று உமையம்மை’ என்னும் திருநாமம் வந்தது. இதன் பொருட்டே இன்றும் இத்தல அம்பிகை சன்னிதியில் குங்குமத்திற்குப் பதிலாக திருநீறே பிரசாதமாக கிடைக்கிறது. ஆம்! ஆச்சாள் எனும் அம்பிகையே, சம்பந்தர் திருமணத்திற்கு நேரில் வந்திருந்து அனைவருக்கும் திருநீறு வழங்கி அருளியதால் இத்தலம் அதுமுதல் ‘ஆச்சாள்புரம்’ என வழங்கலாயிற்று.

    மணமேடையில் சம்பந்தரின் அருகில் மணமகளை அமர வைத்தனர். சம்பந்தரின் திருமணக் கோலத்தை கண்டு அவையோர் மகிழ்ந்தனர். வேள்வி சடங்குகள் நடந்தன. திருநீலநக்க நாயனார் மணவிழா சடங்குகளை செய்தார். சம்பந்தர் அக்னியை வலம் வரும் போது, ‘இருவினைக்கு வித்தாகிய இல்வாழ்க்கை நம்மை சூழ்ந்ததே. இனி இவளோடும் அந்தமில் சிவன் தாள் சேர்வேன்' என்று கூறி, ‘கல்லூர்ப் பெருமணம்' எனத் தொடங்கும் பதிகம் பாடி சிவனின் திருவடியில் சேரும் நினைவோடு ஈசனை வழிபட்டார்.

    அப்போது அங்கு அசரீரி யாவருக்கும் கேட்கும் வண்ணம் ஒலித்தது. ‘சம்பந்தா! இப்போது கருவறையில் எமது லிங்கம் பிளந்து பெருஞ்ஜோதி தோன்றும். அந்த ஜோதியில் யாம் ஒரு திருவாயிலையும் அமைத்திருப்போம். அந்த வாசலின் வழியே நீயும், உம் திருமணம் காணவந்த அனை வரும் மற்றும் அடியவர்களும் சிவஜோதியில் புகுந்து எம்முள் கலந்திடுக' என்றது.

    மறுநொடி கருவறை லிங்கம் பிளந்து அதில் இருந்து தோன்றிய சிவஜோதியைக் கண்டு சிலர் தயக்கமும் அச்சமும் கொள்ள, சம்பந்தர் அவர்களுக்கு நமசிவாய மந்திரத்தின் மேன்மையைக் கூறி, ‘காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி' எனும் நமசிவாய திருப்பதிகம் பாடி தம்முடன் வந்தோரை எல்லாம் கருவறையில் தோன்றிய சிவலிங்க ஜோதியில் புகுமாறு கூறினார். பின்னர் தாமும் தன் மனைவியுடன் அந்த ஜோதியில் புகுந்தார். உடனே கருவறையில் அந்த ஜோதி மறைந்து பிளந்திருந்த சிவலிங்கம் முன்புபோல மீண்டும் ஒன்றாகியது.

    ஆம்! சம்பந்தர் மற்றும் அவரது திருமணத்திற்கு வந்த அனைவருக்கும் இத்தல ஈசன் சிவலோகம் எனும் முக்தி தந்தருளியதால் இத்தல ஈசனுக்கு ‘சிவலோக தியாகேசர்’ என்னும் திருநாமம் வந்தது. இப்படி தம்முடைய சிவலிங்க பிளவுக்குள் சம்பந்தர், அவர்தம் மனைவி, திருநீலகண்ட யாழ்ப்பாணர், முருக நாயனார், திருநீலநக்க நாயனார் மற்றும் பல அடியவர்களையும் உள்வாங்கி இன்றும் கருவறையில் சிவலோக தியாகேசர் நமக்கு நல்லருள், நல்வாழ்வு தந்து காத்தருள்கிறார்.

    சம்பந்தர் தமது கல்யாணத்திற்கு வந்த அனைவருடனும் ஈசனின் கருவறையில் உள்ள மூலவர் சிவலிங்கத்தில் தோன்றிய சிவ ஜோதியில் கலந்து, அனைவருக்கும் சிவலோக கயிலாசம் (முக்தி) கிடைக்கச் செய்தார். இதனால் ‘கூண்டோடு கயிலாசம்’ என்ற வார்த்தையும் தோன்றியது.

    முருகன் வழிபட்ட ஆலயம்

    ஒருமுறை சிவபெருமானிடம் முருகப்பெருமான், ‘தந்தையே! பூலோகத்தில் உங்களுக்கு மிகவும் விருப்பமான தலம் எது?’ என வினவிட, ‘காவிரிக்கரையில் சீர்காழிக்கு வடக்கில் உள்ள சிவலோகநல்லூர் (ஆச்சாள்புரம்)’ என பதிலுரைத்து அருளினாராம் சிவபெருமான்.

    அதைக் கேட்ட முருகப்பெருமான், ‘தந்தையே! திருக் கயிலாய திருக்காட்சியுடன் இத்தலத்தில் எழுந்தருள வேண்டும்’ எனக் கேட்டார். அவ்விதமே திருக்கயிலாய திருக்காட்சி நல்க, முருகப்பெருமான் இத்தலத்தை மும்முறை வலம்வந்து அருளாசிபெற்றார். எனவே, இத் தலத்தை திங்கட்கிழமை, பிரதோஷ நாட்கள், சிவராத்திரி, பவுர்ணமி நாட்களில் வலம்செய்து முறைப்படி வழிபட்டால் வாழும் போதும், வாழ்க்கைக்குப் பிறகும் நற்பதம் கிட்டும் என்கிறார்கள்.

    இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் வைகாசி மூல நட்சத்திர நன்னாளில் சம்பந்தர் திருமணமும், சம்பந்தர் சிவஜோதியில் கலக்கும் வைபவமும் வெகு சிறப்பாக பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் முன்னிலையில் நடக்கிறது. இந்த ஆண்டுக்கான விழா வருகிற 31-ந் தேதி (வியாழக்கிழமை) வருகிறது. காலை 7 மணி முதல் 8.45 மணி வரை திருஞான சம்பந்தர் உபநயனமும்; மாலை 5 மணிக்கு திருமுறைகள் வீதிவலமும்; 6.30 மணிக்கு மாலை மாற்றும் வைபவமும்; இரவு 9 மணி முதல் 10.30 மணிக்குள் சம்பந்தர் திருமணமும் நடைபெறுகிறது. பின்பு அதிகாலை 2 மணிக்கு தேவார திருமுறை சம்பந்தர் உடன் ஆலய வீதி உலா நடக்கும். பின்பு அதிகாலை 4.45 மணிக்கு சம்பந்தர் சிவஜோதியில் கலத்தலை தரிசித்து பெரும் புண்ணிய பேறு பெறுவார்கள்.

    அமைவிடம்

    சீர்காழியில் இருந்து வடகிழக்கில் 13 கிலோமீட்டர் தூரத்திலும், சிதம்பரத்தில் இருந்து தென்கிழக்கில் 13 கிலோமீட்டர் தொலைவிலும் ஆச்சாள்புரம் அமைந்துள்ளது. சிதம்பரம் -சீர்காழி வழிப்பாதையில் வரும் கொள்ளிடத்தில் இருந்து கிழக்கில் திருமகேந்திரப்பள்ளி எனும் சிவாலயம் செல்லும் வழியில் 5 கிலோமீட்டர் தூரத்தில் ஆச்சாள்புரம் இருக்கிறது. 
    ×