search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வீடுபேறு அருளும் திருஞானசம்பந்தர் திருமணம்
    X

    வீடுபேறு அருளும் திருஞானசம்பந்தர் திருமணம்

    வைகாசி மூல நட்சத்திர நன்னாளில் சம்பந்தர் திருமணமும், சம்பந்தர் சிவஜோதியில் கலக்கும் வைபவமும் வெகு சிறப்பாக பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் முன்னிலையில் நடக்கிறது.
    31-5-2018 சம்பந்தர் கலந்த சிவஜோதி

    சீர்காழியில் சிவபாத இருதயரின் மகனாக வேதநெறியும், சைவமும், தமிழும் தழைக்க முருகப்பெருமான் திருஅவதாரமாக அவதரித்தவர், திருஞானசம்பந்தர். மூன்று வயதில் அம்பிகையால் ஞானப்பால் ஊட்டப்பட்டு சிவஞானம் பெற்றவர். ஈசனின் அருளால் அடியார்களுடன் சிவத்தலங்கள் பல சென்று பதிகம் பாடி, அற்புதங்கள் நிகழ்த்தினார்.

    அவருக்கு 16 வயது நடக்கும் போது, அவரை திருமணம் செய்து கொள்ளும்படி தந்தை கூறினார். முதலில் மறுத்த சம்பந்தர், பின் ‘ஈசனின் விளையாட்டு தான் இது’ என்று கருதி சம்மதித்தார். சீர்காழியில் இருந்து வடகிழக்கே எட்டு மைல் தொலைவில் உள்ள திருநல்லூரில் வசித்த நம்பாண்டார் நம்பியின் பெண் ஸ்தோத்திர பூர்ணாம்பிகையை மணம் முடித்து வைக்க ஏற்பாடு செய்தார். வைகாசி மாதம் மூல நட்சத்திரத்தன்று பெருமணம் சிவாலயத்தில் வைத்து திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

    திருமண நாளும் வந்தது. திருநீலகண்ட யாழ்ப்பாணர், முருக நாயனார், திருநீலநக்க நாயனார் மற்றும் சம்பந்தரின் உறவினர்களும், அடியவர்களும் ஒருங்கே திருநல்லூர் எனும் அந்த ஊரில் உள்ள பெருமணம் சிவாலயத்தில் திரண்டனர். அப்போது அன்னை உமையவள், சம்பந்தரின் திருமணம் காணவந்த அனைவருக்கும் அங்கு தோன்றி திருநீறு அளித்தாளாம். எனவேதான் இத்தல அம்பிகைக்கு ‘திருவெண்ணீற்று உமையம்மை’ என்னும் திருநாமம் வந்தது. இதன் பொருட்டே இன்றும் இத்தல அம்பிகை சன்னிதியில் குங்குமத்திற்குப் பதிலாக திருநீறே பிரசாதமாக கிடைக்கிறது. ஆம்! ஆச்சாள் எனும் அம்பிகையே, சம்பந்தர் திருமணத்திற்கு நேரில் வந்திருந்து அனைவருக்கும் திருநீறு வழங்கி அருளியதால் இத்தலம் அதுமுதல் ‘ஆச்சாள்புரம்’ என வழங்கலாயிற்று.

    மணமேடையில் சம்பந்தரின் அருகில் மணமகளை அமர வைத்தனர். சம்பந்தரின் திருமணக் கோலத்தை கண்டு அவையோர் மகிழ்ந்தனர். வேள்வி சடங்குகள் நடந்தன. திருநீலநக்க நாயனார் மணவிழா சடங்குகளை செய்தார். சம்பந்தர் அக்னியை வலம் வரும் போது, ‘இருவினைக்கு வித்தாகிய இல்வாழ்க்கை நம்மை சூழ்ந்ததே. இனி இவளோடும் அந்தமில் சிவன் தாள் சேர்வேன்' என்று கூறி, ‘கல்லூர்ப் பெருமணம்' எனத் தொடங்கும் பதிகம் பாடி சிவனின் திருவடியில் சேரும் நினைவோடு ஈசனை வழிபட்டார்.

    அப்போது அங்கு அசரீரி யாவருக்கும் கேட்கும் வண்ணம் ஒலித்தது. ‘சம்பந்தா! இப்போது கருவறையில் எமது லிங்கம் பிளந்து பெருஞ்ஜோதி தோன்றும். அந்த ஜோதியில் யாம் ஒரு திருவாயிலையும் அமைத்திருப்போம். அந்த வாசலின் வழியே நீயும், உம் திருமணம் காணவந்த அனை வரும் மற்றும் அடியவர்களும் சிவஜோதியில் புகுந்து எம்முள் கலந்திடுக' என்றது.

    மறுநொடி கருவறை லிங்கம் பிளந்து அதில் இருந்து தோன்றிய சிவஜோதியைக் கண்டு சிலர் தயக்கமும் அச்சமும் கொள்ள, சம்பந்தர் அவர்களுக்கு நமசிவாய மந்திரத்தின் மேன்மையைக் கூறி, ‘காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி' எனும் நமசிவாய திருப்பதிகம் பாடி தம்முடன் வந்தோரை எல்லாம் கருவறையில் தோன்றிய சிவலிங்க ஜோதியில் புகுமாறு கூறினார். பின்னர் தாமும் தன் மனைவியுடன் அந்த ஜோதியில் புகுந்தார். உடனே கருவறையில் அந்த ஜோதி மறைந்து பிளந்திருந்த சிவலிங்கம் முன்புபோல மீண்டும் ஒன்றாகியது.

    ஆம்! சம்பந்தர் மற்றும் அவரது திருமணத்திற்கு வந்த அனைவருக்கும் இத்தல ஈசன் சிவலோகம் எனும் முக்தி தந்தருளியதால் இத்தல ஈசனுக்கு ‘சிவலோக தியாகேசர்’ என்னும் திருநாமம் வந்தது. இப்படி தம்முடைய சிவலிங்க பிளவுக்குள் சம்பந்தர், அவர்தம் மனைவி, திருநீலகண்ட யாழ்ப்பாணர், முருக நாயனார், திருநீலநக்க நாயனார் மற்றும் பல அடியவர்களையும் உள்வாங்கி இன்றும் கருவறையில் சிவலோக தியாகேசர் நமக்கு நல்லருள், நல்வாழ்வு தந்து காத்தருள்கிறார்.

    சம்பந்தர் தமது கல்யாணத்திற்கு வந்த அனைவருடனும் ஈசனின் கருவறையில் உள்ள மூலவர் சிவலிங்கத்தில் தோன்றிய சிவ ஜோதியில் கலந்து, அனைவருக்கும் சிவலோக கயிலாசம் (முக்தி) கிடைக்கச் செய்தார். இதனால் ‘கூண்டோடு கயிலாசம்’ என்ற வார்த்தையும் தோன்றியது.

    முருகன் வழிபட்ட ஆலயம்

    ஒருமுறை சிவபெருமானிடம் முருகப்பெருமான், ‘தந்தையே! பூலோகத்தில் உங்களுக்கு மிகவும் விருப்பமான தலம் எது?’ என வினவிட, ‘காவிரிக்கரையில் சீர்காழிக்கு வடக்கில் உள்ள சிவலோகநல்லூர் (ஆச்சாள்புரம்)’ என பதிலுரைத்து அருளினாராம் சிவபெருமான்.

    அதைக் கேட்ட முருகப்பெருமான், ‘தந்தையே! திருக் கயிலாய திருக்காட்சியுடன் இத்தலத்தில் எழுந்தருள வேண்டும்’ எனக் கேட்டார். அவ்விதமே திருக்கயிலாய திருக்காட்சி நல்க, முருகப்பெருமான் இத்தலத்தை மும்முறை வலம்வந்து அருளாசிபெற்றார். எனவே, இத் தலத்தை திங்கட்கிழமை, பிரதோஷ நாட்கள், சிவராத்திரி, பவுர்ணமி நாட்களில் வலம்செய்து முறைப்படி வழிபட்டால் வாழும் போதும், வாழ்க்கைக்குப் பிறகும் நற்பதம் கிட்டும் என்கிறார்கள்.

    இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் வைகாசி மூல நட்சத்திர நன்னாளில் சம்பந்தர் திருமணமும், சம்பந்தர் சிவஜோதியில் கலக்கும் வைபவமும் வெகு சிறப்பாக பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் முன்னிலையில் நடக்கிறது. இந்த ஆண்டுக்கான விழா வருகிற 31-ந் தேதி (வியாழக்கிழமை) வருகிறது. காலை 7 மணி முதல் 8.45 மணி வரை திருஞான சம்பந்தர் உபநயனமும்; மாலை 5 மணிக்கு திருமுறைகள் வீதிவலமும்; 6.30 மணிக்கு மாலை மாற்றும் வைபவமும்; இரவு 9 மணி முதல் 10.30 மணிக்குள் சம்பந்தர் திருமணமும் நடைபெறுகிறது. பின்பு அதிகாலை 2 மணிக்கு தேவார திருமுறை சம்பந்தர் உடன் ஆலய வீதி உலா நடக்கும். பின்பு அதிகாலை 4.45 மணிக்கு சம்பந்தர் சிவஜோதியில் கலத்தலை தரிசித்து பெரும் புண்ணிய பேறு பெறுவார்கள்.

    அமைவிடம்

    சீர்காழியில் இருந்து வடகிழக்கில் 13 கிலோமீட்டர் தூரத்திலும், சிதம்பரத்தில் இருந்து தென்கிழக்கில் 13 கிலோமீட்டர் தொலைவிலும் ஆச்சாள்புரம் அமைந்துள்ளது. சிதம்பரம் -சீர்காழி வழிப்பாதையில் வரும் கொள்ளிடத்தில் இருந்து கிழக்கில் திருமகேந்திரப்பள்ளி எனும் சிவாலயம் செல்லும் வழியில் 5 கிலோமீட்டர் தூரத்தில் ஆச்சாள்புரம் இருக்கிறது. 
    Next Story
    ×