search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    திருப்பரங்குன்றம்-முதல் படைவீடு
    X

    திருப்பரங்குன்றம்-முதல் படைவீடு

    • முருகனின் அறுபடை வீடுகளில் முதலாவது படை வீடாக திகழ்வது திருப்பரங்குன்றம்.
    • முருகப் பெருமான் தெய்வானையை திருமணம் செய்து கொண்ட தலம்

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதலாவது படை வீடாகத் திகழ்வது திருப்பரங்குன்றம். முருகப் பெருமான் தெய்வானையை திருமணம் செய்து கொண்ட தலம் இது.

    அறுபடை வீடுகளை நம் உடல் ஆதாரங்களுடன் ஒப்பிட்ட நம் முன்னோர்கள் இந்த தலத்தை மூலாதாரம் என்று கூறியுள்ளனர்.

    மூலாதாரம் என்பது ஒரு பிரமாண்ட கட்டிடத்துக்கு போடப்படும் அடித்தளம் போன்றது. அதாவது மூலாதார சக்கரம் எல்லாவற்றுக்கும் வேர் போன்று உள்ளது.

    அந்த அடிப்படையில் பார்த்தால் திருப்பரங்குன்றம் தலம், தமிழ்நாட்டில் உள்ள அறுபடை வீடுகளான மற்ற 5 தலங்களுக்கும் அடித்தளமாக உள்ளது.

    பொதுவாக மூலாதாரத்தை நிலத்துடன் தொடர்புடையதாக சொல்வார்கள். திருப்பரங்குன்றம் மலை லிங்க வடிவில் கருதப்பட்டாலும் முருகன் வீற்றிருப்பது தரைப்பகுதியில் உள்ள நிலத்தில்தான்.

    லிங்க வடிவில் இருக்கும் இக்கோவில் அமைந்துள்ள மலையைப் பற்றி சைவ சமயக் குரவர்களில் முக்கியமானவர்களான சுந்தரமூர்த்தி நாயனார், திருஞானசம்பந்தப் பெருமான் ஆகியோர் சிறப்பித்துப் பாடியுள்ளனர். சங்ககாலப் புலவரான நக்கீரர் இத்தலத்து முருகப் பெருமானை வழிபட்டு தனது குறை நீக்கிக்கொண்டார் என்றும் கூறுகிறார்கள்.

    இலக்கியங்களில் தண்பரங்குன்று, தென்பரங்குன்று, பரங்குன்று, பரங்கிரி, திருப்பரங்கிரி பரமசினம், சத்தியகிரி, கந்தமாதனம், கந்த மலை என்று பல்வேறு பெயர்களில் திருப்பரங்குன்றம் அழைக்கப்படுகிறது.

    அமைவிடம்:

    சங்கம் அமைத்து தமிழ் வளர்த்த மதுரையில் இருந்து தென்மேற்கில் 9 கிலோமீட்டர் தொலைவில் திருப்பரங்குன்றம் அமைந்துள்ளது. திரு + பரம் + குன்றம் என்பதே திருப்பரங் குன்றம் என்று வழங்கப்படுகிறது. இதில், பரம் என்றால் பரம் பொருளான சிவபெருமானையும், குன்றம் என்பது குன்று வாகிய மலையையும், திரு என்பது அதன் சிறப்பை உணர்த்தும் அடைமொழியையும் குறிக்கிறது.

    இந்த குன்றானது சிவலிங்க வடிவில் காணப்படுவதால், அந்த சிவபெருமானே குன்றின் உருவில் காட்சியளிப்பதாக கருதப்பட்டு வணங்கப்பட்டு வருகிறது. இந்த மலையின் உயரம் சுமார் 190 மீட்டராகும். இந்த மலையை அனுதினமும் வலம் வந்து வழிபட்டால் தொழுவாரின் வினைகள் எல்லாம் தீர்ந்துவிடும் என்று தனது தேவாரத்தில் குறிப்பிடுகிறார் திருஞான சம்பந்தர்.

    அன்னையை நோக்கி தவம்:

    கயிலாயத்தில் ஒருநாள், பார்வதி தேவிக்கு, சிவபெருமான் பிரணவ மந்திரத்தின் உட்பொருளை உபதேசிக்கும்போது, தன் தாயாரின் மடி மீது முருகப்பெருமான் அமர்ந்திருந்தார். தாய்க்கு தந்தையார், பிரணவ மந்திர உபதேசம் செய்தபோது முருகப்பெருமானும் அந்த உபதேசத்தை கேட்டார்.

    புனிதமான மந்திரத்தின் பொருளை குருவின் மூலமாகவே அறிந்து கொள்ளவேண்டும். மறைமுகமாக அறிந்து கொள்ளுதல் முறையாகாது. அது பாவம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

    இந்த குற்றத்திற்கு பரிகாரம் தேடும் பொருட்டு முருகப் பெருமான் திருப்பரங்குன்றத்திற்கு வந்து தவம் செய்தார்.

    இந்த நிகழ்வும் கூட ஒருவகையில் நம் உடல் ஆதாரங்களில் முக்கியமானதுமான மூலாதாரத்தையே உணர்த்துகிறது. அதாவது நம் உடம்பில் முதுகெலும்பின் அடிப்பாகத்தில் உள்ள மூலாதார சக்கரத்தில் தான் உயிர் வாழ வேண்டும் என்ற ஆசையும், பிடிவாதமும் உற்பத்தி ஆவதாக கண்டு பிடித்துள்ளனர். இந்த உலக உயிர்கள் உய்யும் பொருட்டு முருகப் பெருமான் திருப்பரங்குன்றத்துக்கு வந்து பிடிவாதமாக தவம் இருந்ததாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

    மூலாதாரத்துக்கும், திருப்பரங்குன்றத்துக்கும் உள்ள அரிய தொடர்பை உறுதிப்படுத்த இது ஒன்றே போதுமானதாகும்.

    உலக ஆதாரத்தை இயக்க முருகன் இத்தலத்துக்கு வந்ததை தொடர்ந்து சிவபெருமானும், பார்வதிதேவியும் தோன்றி, முருகப் பெருமானுக்கு காட்சி தந்து அருளினார்கள். அவர்கள் இங்கு பரங்கிநாதர் என்றும், ஆவுடை நாயகி என்றும் பெயர் பெற்றார்கள். அவர்களுடைய ஆலயம் இன்றும் திருப்பரங்குன்றத்தில் மீனாட்சி-சுந்தரேஸ்வரர் ஆலயம் என்னும் பெயரில் அழைக்கப்பட்டு வருகிறது.

    எனவே திருப்பரங்குன்றம் செல்லும் பக்தர்கள் முதலில் சிவன்-பார்வதியை தரிசனம் செய்த பிறகே முருகப்பெருமான் ஆலயத்திற்கு செல்ல வேண்டும் என்பது ஐதீகம்.

    இதிலும் மூலாதாரத்தின் ஒரு அம்சம் வெளிப்படுகிறது. அதாவது மூலாதார சக்கரம் தூய்மைப்படும் போது குண்டலினி விடு பட்டு மேலெழும்புகிறது. ஆகவே இந்த சக்கரம் குண்டலினியின் தூய்மை யையும் , மங்களத் தன்மையையும் பாதுக்காக்கிறது.

    மூலாதார சக்கரம் மற்ற எல்லா சக்கரங்களுக்கும் வேர் போன்ற தாகும். தெளிவான சிந்தனையுடன், கள்ளம் கபடம் இல்லாமல் இருந்தால் மட்டுமே மூலாதார செயல்படும்.

    மூலாதாரம் என்பது எல்லா உயிரினங்களின் பரிணாம வளர்ச்சிக்கு ஆதாரமானது. இந்த சக்கரம் சக்திகளை பெறும் போது, காந்த ஷக்தியாக வெளிப்படுகிறது. இந்த சக்தியை ஒவ்வொரு வரும் உணரலாம். அதாவது சிவனிடம் இருந்து முருகன் அருள் பெற்றதை இது குறிக்கிறது.

    முருகப்பெருமானுக்கு சிவபெருமான் தை மாதத்தில் பூசம் நட்சத்திரம் அன்று காட்சித் தந்தார். அதனால், தைப்பூசம் அன்று சிவபெருமானையும், முருகப் பெருமானையும் வழிபடுகின்றவர்கள் வேண்டும் வரம் பெறுவார்கள் என்பது நம்பிக்கை. இந்த தைப்பூச விழா திருப்பரங்குன்றத்தில் 10 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    Next Story
    ×