search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "murder attempt"

    களியக்காவிளை அருகே தங்களுக்கு எதிராக சாட்சி கூறக்கூடாது என வாலிபரை கம்பியால் அடித்து கொல்ல முயற்சி செய்த சம்பவம் குறித்து 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    நாகர்கோவில்:

    களியக்காவிளை அடுத்த அயக்கோடுவிளை பகுதியை சேர்ந்தவர் எட்வின்ராஜ் (வயது 35).

    இவர் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் அவரது அண்ணன் பெனட் டிக்ராஜ் என்பவருடன் வந்து கொண்டிருந்தார். களியக்காவிளையை அடுத்து ஒற்றா மரம் அருகே வரும்போது அவர்களை 2 பேர் வழி மறித்து தகராறில் ஈடுபட்டனர். மேலும் எங்களுக்கு எதிராக சாட்சி கூறக்கூடாது என மிரட்டினர்.

    இதில் அவர்களுக்குள் தகராறு முற்றியது. தகராறு முற்றவே ஆத்திரமடைந்த அந்த வாலிபர் கம்பியால் எட்வின்ராஜை சரமாரி தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். மேலும் மோட்டார் சைக்கிளையும் சேதப்படுத்தினர்.

    இதுகுறித்து களியக்காவிளை போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் சொர்ண லதா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் எட்வின்ராஜை கம்பியால் தாக்கியது அதே பகுதியை சேர்ந்த ஜெயன் (30), சஜின் (30) என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர். #tamilnews
    விழுப்புரம் அருகே மணல் கடத்தலை தடுத்த போலீஸ்காரரை லாரி ஏற்றி கொல்ல முயற்சி செய்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு திருட்டு தனமாக லாரிகளில் மணல் கடத்தப்பட்டு வருகிறது. இதை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின் பேரில் தனிப்பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.

    இதில் இடம் பெற்றுள்ள துணை போலீஸ் சூப்பிரண்டு வீமராஜ் மற்றும் போலீசார் மணல் கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இரவு நேரத்தில் பல்வேறு இடங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் நேற்று இரவு விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையம் அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஜானகிபுரம் என்ற இடத்தில் போலீசார் வாகன சோதனை நடத்தி கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மணல் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வேகமாக வந்தது. இதையறிந்ததும் போலீஸ்காரர் ராம்குமார் என்பவர் அந்த லாரியை மறிக்க முயன்றார்.

    அப்போது லாரி டிரைவர் போலீஸ்காரர் ராம்குமார் மீது லாரியை மோதுவது போல் வேகமாக வந்தார். திடுக்கிட்டு போன ராம்குமார் அங்கிருந்து விலகி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். பின்னர் போலீசார் ஜீப்பில் விரட்டி சென்று மணல் கடத்தல் லாரியை மடக்கி பிடித்தனர்.

    லாரியில் இருந்து விழுப்புரம் அருகே தில்லூர் கிராமத்தை சேர்ந்த ஜெய்கணேஷ் (வயது 37) காவணிபாக்கத்தை ராமச்சந்திரன் ஆகியோரை போலீசார் பிடித்து விழுப்புரம் தாலுகா போலீசில் ஒப்படைத்தனர்.

    இன்ஸ்பெக்டர் ராஜன் வழக்குபதிவு செய்து போலீஸ்காரர் மீது லாரியை ஏற்றி கொல்ல முயன்ற ராமச்சந்திரன், ஜெய்கணேஷ் ஆகியோரை கைது செய்தார். மேலும் மணல் கடத்தல்பட்ட லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது. #tamilnews
    வேலூர் அருகே ஜெயிலில் இருந்து ஜாமீனில் வந்த ரவுடி கார் மீது நாட்டு வெடிகுண்டுகள் வீசி தாக்குதல் நடத்தியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    வேலூர்:

    வேலூர் சத்துவாச்சாரியை சேர்ந்தவர் பிரபல ரவுடி வீச்சு என்கிற தினேஷ் (வயது 32). இவர் மீது கொலை, கொள்ளை, ஆட் கடத்தல் என பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தோட்டப்பாளையத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சந்தோஷ்குமாரை கொன்று பாலாற்றில் புதைத்த வழக்கு உள்ளது.

    இதைத்தொடர்ந்து, பல்வேறு வழக்குகளில் வீச்சு தினேஷ் கைது செய்யப்பட்டார். இதை தொடர்ந்து ஜாமீனில் வெளியில் இருந்த அவர் மீண்டும் குற்ற செயலில் ஈடுபட்டார்.

    சத்துவாச்சாரி ரங்கா புரத்தில் கடந்த 22-ந் தேதி கூட்டாளிகளுடன் சேர்ந்து வீடுகளில் கொள்ளையடிக்க சதி திட்டம் தீட்டி பதுங்கி இருந்தார். அப்போது, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், ரவுடி வீச்சு தினேஷை சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர்.

    வீச்சு மற்றும் கூட்டாளிகள் சத்துவாச்சாரியை சேர்ந்த மணிகண்டன் (27), நவீன் (24) ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.

    அவர்கள் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் இன்று காலை ரவுடி வீச்சு தினேஷ் ஜாமீனில் வெளியே வந்தார். அவரது ஆதரவாளர்கள் காரில் அவரை அழைத்து சென்றனர். கார் ஜெயிலை கடந்து வேலூர் டவுன் நோக்கி சென்றது. தொரப்பாடியில் உள்ள ஏ.டி.எம். அருகே காத்திருந்த 6 பேர் கும்பல் வீச்சு தினேஷ் வந்த கார் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசினர்.

    இதில் ஒரு குண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்தது. உடனே கும்பல் அரிவாள்களுடன் காரை நோக்கி வந்தனர். சுதாரித்து கொண்ட வீச்சு தினேஷ் டிரைவர் காரை நிறுத்தாமல் வேகமாக ஓட்டினார். சத்தம் கேட்டு பொதுமக்கள் ஓடிவந்தனர்.

    சுதாரித்துக்கொண்ட கும்பல் பைக் மற்றும் காரில் தப்பி சென்றுவிட்டனர். குண்டு வீச்சில் வீச்சு தினேஷ் கார் முன்பகுதி சேதமடைந்தது. காரை நிறுத்தாமல் வந்த அவர்கள் தெற்கு போலீஸ் நிலையத்துக்கு அருகே காரை நிறுத்திவிட்டு போலீஸ் நிலையத்துக்குள் சென்றனர். சம்பவம் குறித்து போலீசாரிடம் தெரிவித்தனர்.

    வேலூர் டி.எஸ்.பி. ஸ்ரீதர் இது பற்றி வீச்சு தினேஷிடம் விசாரணை நடத்தினர். மேலும் குண்டு வீசப்பட்ட இடத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். குண்டு வீசி விட்டு தப்பி ஓடிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

    சத்துவாச்சாரி பாலாற்றில் நேதாஜி நகரில் இருந்து காங்கேயநல்லூர் செல்லும் பாதையில் சைதாப்பேட்டையை சேர்ந்த ரவுடி பிச்சை பெருமாள் கொலை செய்யப்பட்டார்.

    இதில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் தொர்பாக வீச்சு தினேசை கும்பல் கொலை செய்ய முயன்றார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் தொரப்பாடியில் உள்ள காண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து குண்டு வீசிய கும்பல் குறித்து துப்புதுலக்கி வருகின்றனர்.

    வேலூரில் ரவுடிகளை ஒழிக்க போலீசார் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து கைது செய்து வருகின்றனர். இந்த நிலையில் பட்டபகலில் ரவுடி கார் மீது கும்பல் வெடிகுண்டு வீசியுள்ளனர்.

    இந்த பயங்கர சம்பவம் பெரும் பரபரப்பையும் பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

    வாலாஜாவில் முன்னாள் ஊராட்சி மன்ற துணை தலைவரை கத்தியால் வெட்டிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    வாலாஜா:

    வாலாஜா குடிமல்லூர் ஒத்தவாடை தெருவை சேர்ந்தவர் மீனாட்சி சுந்தரம் (வயது 56). குடிமல்லூர் ஊராட்சி மன்ற முன்னாள் துணை தலைவரான இவர், தண்ணீர் கேன் கம்பெனியும் வைத்துள்ளார். இவருக்கும், குடிமல்லூர் வேளாளர் தெருவை சேர்ந்த கார்த்திகேயன் (43) மற்றும் இவருடைய கூட்டாளியான குடிமல்லூர் குட்டி முதலி தெருவை சேர்ந்த சதீஷ் (28) ஆகியோருக்கும் முன்விரோதம் இருந்தது.

    கடந்த மாதம் காரில் வந்த மீனாட்சி சுந்தரத்தை 2 பேரும் வழிமறித்து தாக்கினர். இதுதொடர்பாக, வாலாஜா போலீசில் அவர் புகார் அளித்தார். தாக்குதல் நடத்திய 2 பேரும் தலைமறைவாகிவிட்டனர்.

    இந்த நிலையில், நேற்றிரவு பைக்கில் வாட்டர் கம்பெனியில் இருந்து அணைக்கட்டு ரோடு வழியாக மீனாட்சி சுந்தரம் பழக்கடைக்கு வந்து கொண்டிருந்தார்.

    அப்போது திடீரென அங்கு வந்த கார்த்திகேயனும், சதீசும் உருட்டுக்கட்டையால் மீனாட்சி சுந்தரத்தை சரமாரியாக தாக்கியதுடன் கத்தியால் வெட்டி கொல்ல முயன்றனர்.

    இதில் இடது கையில் பலத்த காயத்துடன் மீனாட்சி சுந்தரம் தப்பி ஓடி உயிர் பிழைத்தார். அப்பகுதி மக்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    வாலாஜா போலீசார் விரைந்து சென்று கார்த்திகேயன் மற்றும் சதீஷை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். 2 பேர் மீதும் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
    கோவை செல்வபுரம் அருகே மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்து அவரை கொலை செய்ய முயன்ற ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    கோவை:

    கோவை செல்வபுரம் அருகே உள்ள சொக்கம்புதூரை சேர்ந்தவர் சேகர் (வயது 28). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி சுகன்யா (24). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    இந்தநிலையில் சேகருக்கு அவரது மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதில் மனவேதனை அடைந்த சுகன்யா கணவரை பிரிந்து கடந்த 10 நாட்களாக பக்கத்து தெருவில் உள்ள தாய் வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

    சம்பவத்தன்று சேகர் தனது குழந்தைகளை பார்ப்பதற்காக சுகன்யாவின் தாய் வீட்டுக்கு சென்றார். அப்போது சுகன்யா உறவினர் ஒருவருடன் பேசிக்கொண்டு இருந்தார்.

    இதனை பார்த்து ஆத்திரம் அடைந்த சேகர் அங்கு இருந்த எல்.இ.டி. டி.வி.யை எடுத்து சுகன்யாவின் தலையில் அடித்தார். பின்னர் தரதரவென வெளியே இழுத்து சென்று அங்கு கிடந்த கல்லால் 2 கால்களில் தாக்கினார். பின்னர் அங்கு இருந்து தப்பி ஓடிவிட்டார்.

    தலை மற்றும் உடலில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிய சுகன்யாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இது குறித்து செல்வபுரம் போலீசார் மனைவியை தாக்கிய சேகர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். #tamilnews
    தொழில் அதிபரை கொல்ல முயன்ற வழக்கில் 5 டாக்டர்கள் சிக்கி இருப்பது தஞ்சையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    தஞ்சாவூர்:

    தஞ்சை அருளானந்தம் நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 62). இவர் தஞ்சையில் அபி அண்ட் அபி என்ற பெயரில் கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார். மேலும் தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் மோட்டார் சைக்கிள் விற்பனை ஷோருமையும் நடத்தி வருகிறார்.

    இந்நிலையில் நேற்று இளங்கோவன், தனது மோட்டார் சைக்கிள் ஷோரூமுக்கு வந்தார். அப்போது அங்கு நடைபெற்ற போர்வெல் பணிகளை பார்வையிட்டார்.

    அந்த சமயத்தில் திடீரென 4 பேர் கொண்ட கும்பல் அவரை சுற்றி வளைத்து உருட்டுக்கட்டையால் தாக்கியது. இதில் நிலை குலைந்து கீழே விழுந்த அவரை, கும்பல் அரிவாளால் வெட்டினர். கை, கால், தலையில் வெட்டப்பட்ட இளங்கோவன் கூச்சல் போட்டு அலறினார்.

    உடனே சத்தம் கேட்டு, அப்பகுதி பொதுமக்கள் வந்ததால், மர்ம கும்பல் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டனர்.

    அரிவாள் வெட்டில் காயமடைந்த இளங்கோவனை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் பற்றி வல்லம் போலீஸ் டி.எஸ்.பி. ஜெயச்சந்திரன் தலைமையில் பெரியசாமி, ராஜகோபால், பழனிச்சாமி ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது இந்த தனிப்படை போலீசார் ஷோரூமில் இருந்த கண்காணிப்பு காமிராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

    இதற்கிடையே போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், தஞ்சை திலகர் திடலில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியை ஏலம் எடுப்பது தொடர்பாக இளங்கோவனை கொல்ல முயற்சி நடந்துள்ளது தெரியவந்தது.

    இதனையடுத்து அந்த ஆஸ்பத்திரியின் உரிமையாளர் பாரதிமோகன் மற்றும் ஆனந்த சேகர் உள்பட 5 டாக்டர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் 5 டாக்டர்களும், இளங்கோவனை கூலிப்படையை ஏவி கொல்ல திட்டமிட்டுள்ளதும் தெரியவந்தது.

    இதற்கிடையே கூலிப்படையை சேர்ந்த தஞ்சை கோரிகுளத்தை சேர்ந்த முருகன், திருமங்கல கோட்டை பகுதியை சேர்ந்த கவுதமன், சூரக்கோட்டையை சேர்ந்த கார்த்திக் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள சிலரை போலீசார் தேடி வருகின்றனர். #tamilnews
    உத்தரப்பிரதேசத்தில் மாட்டை கடத்தி செல்வதாக கருதி 4 பேரை கிராம மக்கள் ஒன்றுசேர்ந்து தாக்கியபோது போலீசார் உடனடியாக விரைந்ததால் அவர்கள் உயிர் தப்பினர்.
    புதுடெல்லி:

    உத்தரப்பிரதேச மாநிலம் புர்தில் நாகர் பகுதியில் நாக்ல மண்டாதி கிராமத்தில் அடிக்கடி மாடுகள் திருட்டு போனது. இதனால் உள்ளூர் மக்கள் விழிப்புடன் இருந்து கண்காணித்தனர்.

    இந்த நிலையில் இந்த கிராமத்தின் அருகே ஹத் ராஸ் என்ற இடத்தில் இறந்த எருமை மாட்டை 4 பேர் சேர்ந்து ஒரு வேனில் ஏற்றிச் சென்றனர். இதை அறிந்த கிராம மக்கள் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் மாட்டை திருடி அடித்துக் கொன்று விற்பனைக்கு எடுத்துச் செல்வதாக கருதி 4 பேரையும் சூழ்ந்து கொண்டு தாக்கினார்கள்.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து சென்றனர். 4 பேரையும் மீட்க முயன்றபோது கிராம மக்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை சமாதானம் செய்தனர். போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்துவதாகவும், அதில் மாடு திருடர்கள் என தெரிய வந்தால் நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்தனர்.

    இதையடுத்து 4 பேரையும் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்த 4 பேரில் 2 பேர் முஸ்லிம்கள், 2 பேர் இந்துக்கள்.

    தக்க சமயத்தில் போலீசார் சென்றதால் 4 பேரும் கொலை முயற்சியில் இருந்து காப்பாற்றப்பட்டனர். அவர்கள் மாடு திருடர்களா? என விசாரணை நடந்து வருகிறது.
    மதுரையில் முன்னாள் மண்டல தலைவரை கொலை செய்ய சதி திட்டம் தீட்டி குண்டு தயாரித்தபோது வெடித்ததில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
    மதுரை:

    மதுரை காமராஜர்புரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜபாண்டியன், அ.தி.மு.க. முன்னாள் மாநகராட்சி கிழக்கு மண்டல தலைவர்.

    அதே பகுதியைச் சேர்ந்தவர் வி.கே.குருசாமி. தி.மு.க. பிரமுகரான இவரும் முன்னாள் கிழக்கு மண்டல தலைவர் ஆவார்.

    இருவருக்கும் இடையே கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இரு தரப்பிலும் அடுத்தடுத்து கொலைகள் நடந்துள்ளன. இதுவரை சுமார் 14 பேர் வரை கொல்லப்பட்ட நிலையில் இருதரப்பிலும் பழிக்குப் பழி வாங்கும் போக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    கடந்த 4-ந்தேதி வி.கே.குரு சாமியின் ஆதரவாளரான சுமைதூக்கும் தொழிலாளி வேல்குமார் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

    இந்த கொலை வழக்கில் முன்னாள் மண்டல தலைவர் ராஜபாண்டியனின் ஆதரவாளர்கள் தேடப்பட்டு வருகிறார்கள். இதனிடையே இதற்கு பழிக்கு பழி வாங்க வி.கே.குருசாமியின் ஆதரவாளர்கள் சதி திட்டம் தீட்டினர். இதற்காக காமராஜபுரம் வாழைதோப்பு பகுதியில் வி.கே.குருசாமியின் ஆதரவாளர் முனுசாமி வீட்டில் நாட்டு வெடிகுண்டுகளை தயாரித்துள்ளனர்.

    முனுசாமி மற்றும் திருத்தங்கல்லை சேர்ந்த பட்டாசு தயாரிக்கும் தொழிலாளி நரசிம்மன் (38) ஆகிய இருவரும் குண்டுகளை தயார் செய்தபோது எதிர் பாராதவிதமாக வெடி குண்டுகள் வெடித்தன.

    குண்டு வெடிப்பில் வீட்டின் மேற்கூரை பறந்தது. முனுசாமியும், நரசிம்மனும் பலத்த காயம் அடைந்தனர். பயங்கர சத்தத்துடன் குண்டுகள் வெடித்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுதொடர்பாக தெப்பக்குளம் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    அங்கிருந்த 5 நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் குண்டு தயாரிக்க வைத்திருந்த வெடிபொருட்களையும் கைப்பற்றினர். படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த முனுசாமி, நரசிம்மன் ஆகியோரைமீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் முன்னாள் மண்டல தலைவர் ராஜபாண்டியன் மற்றும் அவரது ஆதரவாளர்களை பழிக்குப்பழியாக கொல்லும் நோக்கில் இந்த நாட்டு வெடிகுண்டுகளை தயார் செய்தது தெரியவந்துள்ளது.

    இதுதொடர்பாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் 2 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    மனைவியின் கழுத்தை அறுத்து, வாலிபர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    கடலூர்:

    கடலூர் முதுநகர் சுத்துக்குளம் பெரியார் நகரை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 36), பாத்திரக் கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மாலதி (32). திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகிறது.

    இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். வேல்முருகனுக்கு குடிப்பழக்கம் உண்டு. அவர் வேலைக்கு செல்லாமல் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்தார்.

    மேலும் மனைவி மாலதியின் நடத்தையில் சந்தேகம் அடைந்தார். இதனால் கணவன்- மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். நேற்று மாலை மாலதி வீட்டில் இருந்தார். அப்போது அங்கு வந்த வேல்முருகன் மனைவியிடம் தகராறு செய்தார். பின்னர் அவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாலதியின் கழுத்தை அறுத்தார். மாலதி ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார்.

    பின்னர் வேல்முருகன் போலீசார் தன்னை பிடித்து விடுவார்கள் என்று பயந்து, மதுவில் வி‌ஷம் கலந்து குடித்து மயங்கி விழுந்தார். 2 பேரும் வீட்டில் மயங்கி கிடப்பதை அக்கம் பக்கத்தினர் பார்த்தனர்.

    உடனடியாக அவர்கள் 2 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து முதுநகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×