search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "minister sekar babu"

    • உயர்த்தப்பட்ட ஓய்வூதியத் தொகையான ரூ.4 ஆயிரம் மற்றும் உயர்த்தப்பட்ட குடும்ப ஓய்வூதியத் தொகையான ரூ.2 ஆயிரம் ஆகியவற்றிற்கான காசோலைகளை ஓய்வூதியம் பெறும் பணியாளர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் வழங்கினார்.
    • ஆண்டொன்றுக்கு 2,454 ஓய்வூதியதாரர்களும், 304 குடும்ப ஓய்வூதியதாரர்களும் பயன்பெறுவர்.

    சென்னை:

    இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஓய்வுபெறும் கோவில் பணியாளர்களுக்கு வழங்கப்படும் மாத ஓய்வூதியம் இதுவரை ரூ.3000 ஆகும்.

    "கோவில் பணியாளர்களின் நலன் கருதி அவர்களுக்கு வழங்கப்படும் மாத ஓய்வூதியம் ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.4 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்" என்றும், "ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற்று வந்த பணியாளர் இறந்துவிட்டால் அவரின் வாரிசுதாரருக்கு மாதந்தோறும் ரூ.1500 குடும்ப மாத ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருவதை ரூ.1500-ல் இருந்து ரூ.2 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்" என்றும் சட்டசபையில் அறிவிக்கப்பட்டது.

    அந்த அறிவிப்புகளை செயல்படுத்திடும் வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவில்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு உயர்த்தப்பட்ட ஓய்வூதியத் தொகையான ரூ.4 ஆயிரம் மற்றும் உயர்த்தப்பட்ட குடும்ப ஓய்வூதியத் தொகையான ரூ.2 ஆயிரம் ஆகியவற்றிற்கான காசோலைகளை ஓய்வூதியம் பெறும் பணியாளர்களின் குடும்பத்தினருக்கு வழங்கினார். இதன்மூலம் ஆண்டொன்றுக்கு 2,454 ஓய்வூதியதாரர்களும், 304 குடும்ப ஓய்வூதியதாரர்களும் பயன்பெறுவர்.

    நிகழ்ச்சியில், அமைச்சர் பி.கே. சேகர்பாபு, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் மணிவாசன், ஆணையர் முரளீதரன், கூடுதல் ஆணையர் சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • வல்லுநர் குழுவால் 7,142 கோவில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளன.
    • 2,235 கோவில்களில் ரூ.1,120 கோடி மதிப்பீட்டிலான 5,855 திட்ட மதிப்பீடுகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

    சென்னை:

    இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றபின், தமிழர்களின் கலை, பண்பாடு மற்றும் கலாசாரத்தை பறைசாற்றும் பெட்டகங்களான கோவில்களைப் புனரமைத்து பாதுகாத்திடும் வகையில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகம் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

    அந்த வகையில், 1,000-வது குடமுழுக்காக சென்னை மேற்கு மாம்பலம், காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகம் வருகின்ற 10-ந் தேதி அன்று வெகு விமரிசையாக நடைபெற உள்ளது என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவித்து உள்ளார்.

    2022-2023-ம் நிதியாண்டில் ரூ.140 கோடி மதிப்பீட்டில் 113 தொன்மையான கோவில்களும், 2023-24-ம் நிதியாண்டில் ரூ.150 கோடி மதிப்பீட்டில் 84 கோவில்களும் அரசு மானியம், கோவில் நிதி மற்றும் உபயதாரர்கள் பங்களிப்புடன் புனரமைத்து பாதுகாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    கிராமப்புற கோவில்கள் மற்றும் ஆதிதிராவிடர்கள் பழங்குடியினர் வசிக்கின்ற பகுதியில் இருக்கின்ற கோவில்களுக்கு திருப்பணிகள் மேற்கொள்ள 1,250 கிராமப்புற மற்றும் 1,250 ஆதிதிராவிடர்கள் (ம) பழங்குடியினர் வசிக்கின்ற பகுதியில் இருக்கின்ற கோவில்களை கண்டறியும் பணி நடைபெற்று வருகின்றது.

    வல்லுநர் குழுவால் 7,142 கோவில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளன. அதில் 2,235 கோவில்களில் ரூ.1,120 கோடி மதிப்பீட்டிலான 5,855 திட்ட மதிப்பீடுகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் 274-வது குழுமக் கூட்டம் நடைபெற்றது.
    • கூட்டத்தில் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    சென்னை:

    அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் 274-வது குழுமக் கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் பொது மக்களின் போக்குவரத்து இணைப்பினை மேம்படுத்துதல், சென்னை தீவுத் திடலை மேம்படுத்துதல், விளையாட்டு நகரம் அமைத்தல், சென்னை பெருநகர மாநகராட்சிக்கு திடக்கழிவு மேலாண்மையை மேம்படுத்த நிதியளித்தல் போன்றவை குறித்து பேசப்பட்டது.

    சென்னை பெருநகர எல்லைக்குள் நில உபயோக மாற்ற விண்ணப்பங்களின் மீது பரிசீலித்தும் முடிவுகள் எடுக்கப்பட்டன.

    2023-2024-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறி விக்கப்பட்ட திட்டங்களின் மீதான தொடர் நடவடிக்கைகள் குறித்தும், சென்னை பெருநகர வளர்ச்சி குழு மத்தின் நிர்வாக நடவடிக்கை கள் குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

    இந்த கூட்டத்தில் சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவர் பூச்சி எஸ். முருகன், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வா, தொழில், முதலீட்டு ஊக்கு விப்பு மற்றும் வர்த்தக துறை சிறப்பு செயலாளர் பூஜா குல்கர்னி, சட்டமன்ற உறுப்பினர்கள் (மாதவரம்) எஸ்.சுதர்சனம், (திரு.வி.க.நகர்) பி.சிவக்குமார் என்கிற தாயகம் கவி, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் அன்சூல் மிஸ்ரா, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் பொ.சங்கர், சி.எம்.டி.ஏ முதன்மை செயல் அலுவலர் கவிதா ராமு, , நகர் ஊரமைப்பு இயக்கக இயக்குநர் பா.கணேசன், குழும உறுப்பினர்கள், உயர் அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • சென்னையில் 2 பயணத்திட்டங்களாக ரூ.1,000 மற்றும் ரூ.800 ஆகிய கட்டணங்களில் இச்சுற்றுலா செயல்படுத்தப்படுகிறது.
    • திமுக ஆட்சி ஏற்பட்ட பிறகு இன்றைய தினம் வரை 866 கோவில்களில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளன.

    சென்னை:

    சென்னை, பாரிமுனை, காளிகாம்பாள் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை, சுற்றுலா துறையுடன் ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்துள்ள ஆடி மாத அம்மன் கோவில் ஆன்மிக சுற்றுலாவினை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    பின்னர் அமைச்சர் பி.கே.சேகர்பாபு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இன்றைக்கு காளிகாம்பாள் கோவிலில் இருந்து 10 அம்மன் கோவில்களுக்கு புறப்பட்ட ஆன்மிக சுற்றுலா வில் 47 பக்தர்கள் பங்கேற்றுள்ளனர். அவர்களுக்கு சிறப்பு தரிசனம் செய்யப்பட்டு, கோவில் பிரசாதங்கள் மற்றும் மதிய உணவும் வழங்கப்படுகிறது.

    சென்னையில் 2 பயணத்திட்டங்களாக ரூ.1,000 மற்றும் ரூ.800 ஆகிய கட்டணங்களில் இச்சுற்றுலா செயல்படுத்தப்படுகிறது.

    ஆளவந்தார் அறக்கட்டளையின் சொத்துக்களை பொறுத்தவரை இதுவரை எந்த ஒரு தனியாருக்கும் தரப்படவில்லை. அந்த இடத்தின் ஒரு பகுதி சென்னை பெருநகர குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியத்தின் குடிநீர் திட்டத்திற்கு வழங்கப்பட்டு, அதற்கான நிலுவைத் தொகை ரூ.10 கோடியை இந்த ஆட்சி வந்த பிறகு தான் வசூலித்து அறக்கட்டளைக்கு செலுத்தப் பட்டுள்ளது.

    அதேபோல் ஆளவந்தார் திருவரசை மேம்படுத்த ரூ.1 கோடியும், அறக்கட்டளை சார்பில் பாடசாலை நிறுவுவதற்கு ரூ.1 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆளவந்தாரின் உயிலில் குறிப்பிட்டுள்ளபடி தலசயன பெருமாள் கோவில் மற்றும் திருவிடந்தை, நித்திய கல்யாண பெருமாள் கோவிலுக்கு தேவையான அனைத்து நித்தியப் பணிகளும் செய்யப்பட்டு வருகின்றன.

    அந்த கோவில்களில் திருப்பணிகளும் நடைபெற்று வருகின்றன. ஆளவந்தாரின் சொத்துக்களை பாதுகாப்பதற்கு தான் இந்த ஆட்சி அதிகளவில் அக்கறை செலுத்தி ஆக்கிரமிப்பு அகற்றி ரூ.10 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் அமைக்கின்ற பணியும் நடைபெற்று வருகிறது. ஆளவந்தாரின் நோக்கங்களுக்கு எதிர்மறையாக எந்தவிதமான நடவடிக்கையும் இதுவரையில் தமிழ்நாடு அரசு எடுக்கவில்லை என்பதை ஆணித்தரமாக தெரிவித்துக் கொள்கிறேன்.

    இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு இன்றைய தினம் வரை 866 கோவில்களில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளன. ரூ.4764 கோடி மதிப்பிலான 5,080 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளன.

    கோவிலுக்கு சொந்தமான இதுவரை 1.25 லட்சம் ஏக்கர் நிலங்கள் ரோவர் கருவியின் வாயிலாக அளவீடு செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டு உள்ளன.

    ஆகவே, தி.மு.க. ஆட்சியில் இறை சொத்து இறைவனுக்கே என்ற வகையில் அந்த சொத்துக்களை பாதுகாப்பது அவை எந்த நோக்கத்திற்காக திருக்கோவில்களுக்கு எழுதி வைக்கப்பட்டதோ அந்த நோக்கத்தை நிறைவேற்றுகின்ற பணியில் இந்து சமய அறநிலைத்துறை தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கின்றது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பூம்புகார் நகர் பகுதியில் பெரும்பாலான கால்வாய் பணிகள் முடிக்கப்பட்டு விட்டது.
    • அமைச்சர் சேகர் பாபு 2-வது நாளாக இன்றும் கொளத்தூர் தொகுதியில் ஆய்வு செய்தார்.

    கொளத்தூர்:

    கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட திருமுருகன் நகர், டீச்சர் கில்ட் காலனி, மூகாம்பிகை பிரதான சாலை, பூம்புகார் நகர், ஜி.கே.எம். காலனி பகுதிகளில் மழை நீர் வடிகால் பணி நடந்து வருகிறது.

    மழைநீர் வடிகால் பணியால் குடிநீரில் கழிவுநீர் கலப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைத்தொடர்ந்து நேற்று மாலை அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா ஆகியோர் கால்வாய் பணிகளை ஆய்வு செய்தனர். பின்னர் அமைச்சர் சேகர்பாபு கூறும்போது, கால்வாய் பணியால் குழாய் உடைந்து குடிநீரில் எந்த மாசும் ஏற்படவில்லை. வி.வி.நகர் 1-வது தெரு முதல் 5-வது தெருவரை உள்ள பகுதிகளில் மழைநீர் கால்வாய் பணி நடைபெறவில்லை. எனவே இப்பகுதியில் மாசு ஏதும் இல்லை. மூகாம்பிகை கோவில் பிரதான சாலையில் மழை நீர் கால்வாய் பணி நடைபெற்று வருகிறது. இதல் 80 மீட்டர் கால்வாய் பணி மீதம் உள்ள நிலையில் சேதம் அடைந்த 60 மீட்டர் நீளமுள்ள கழிவுநீர் பிரதான குழாய் மற்றும் 2 எந்திர நுழைவாயில் புதுப்பிக்கப்பட உள்ளது. அங்கு குடிநீர் குழாய்கள் ஏதும் சேதம் ஏற்படவில்லை. குடிநீரும் மாசு அடையவில்லை.

    ஜி.கே.எம்.காலனியில் கால்வாய் பணி நடக்கிறது. அங்கு எந்த புகாரும் இல்லை. பூம்புகார் நகர் பகுதியில் பெரும்பாலான கால்வாய் பணிகள் முடிக்கப்பட்டு விட்டது. அங்கும் குடிநீர் மாசு பற்றி எந்த புகாரும் பெறப்படவில்லை. ஜெயராம் நகர் பகுதியில் கால்வாய் பணி ஏதும் நடைபெறவில்லை. இந்த அனைத்து இடங்களிலும் குடிநீர் வினியோகம் குழாய் மூலம் சீராக வினியோகிக்கப்படுகிறது. இப்பகுதிகளில் லாரிகள் மூலமாக குடிநீர் வினியோகிக்கப்படவில்லை என்றார்.

    இந்த நிலையில் அமைச்சர் சேகர் பாபு 2-வது நாளாக இன்றும் கொளத்தூர் தொகுதியில் ஆய்வு செய்தார். அவர், அகரம் ரங்கசாயி நாயுடு தெருவில் உள்ள அரசு பள்ளி, சோமையா ராஜா தெருவில் உள்ள சுகாதார மருத்துவமனை மற்றும் அரசு பள்ளி, சீனிவாசன் நகரில் உள்ள சுகாதார மருத்துவமனை மற்றும் மாநகராட்சி பள்ளியை பார்வையிட்டார். பின்னர் அங்கிருந்தவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    அப்போது திரு.வி.க. நகர் மண்டல தலைவர் சரிதா மகேஷ், அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் சேகர் பாபு ஆகியோர் ஓதுவார் பயிற்சி பள்ளி பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
    • விடுதியில் உள்ள மாணவிகளிடம் அடிப்படை வசதிகள் குறித்து அமைச்சர் சேகர் பாபு கேட்டறிந்தார்.

    நெல்லை:

    நெல்லையப்பர் கோவில் ஆனி தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதனை சபாநாயகர் அப்பாவு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஆகியோர் வடம் பிடித்து தொடங்கி வைத்தனர்.

    பின்னர் சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் சேகர் பாபு ஆகியோர் மேலப் பாளையம் அருகில் ரூ.1.51 கோடி மதிப்பீட்டில் கட்டப் பட்டு வரும் ஓதுவார் பயிற்சி பள்ளி மற்றும் காந்திமதி அம்பாள் மேல்நிலைப்பள்ளி யில் ரூ.1.99 கோடி மதிப்பில் ஸ்மார்ட் வகுப்பறை, பணியாளர் அறை, விடுதி புதுப்பித்தல், மேல்நிலை வகுப்பறை புதுப்பித்தல் போன்ற பணி களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    அங்கு விடுதியில் உள்ள மாணவிகளிடம் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்த னர். அப்போது உங்களுக்கு தேவையான வசதிகள் தேவைப்பட்டால் உடனடியாக தெரிவியுங்கள்.

    அதுகுறித்து அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டு தேவை யான வசதிகள் அனைத்தும் ஏற்படுத்தி கொடுக்கப்படும் என தெரிவித்தனர். தொடர்ந்து அங்கு நடை பெற்று வரும் பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தர விட்டனர்.

    • பக்தர்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படும்போதும், விதிமீறல்கள் நடக்கும்போதும் தான் இந்து சமய அறநிலையத்துறை தலையிடுகிறது.
    • சிதம்பரம் கோவில் தீட்சிதர்களிடம் துறை ஒப்படைக்கும்போது வைப்பு நிதியாக ரூ.3.5 கோடியாக இருந்தது.

    சென்னை:

    இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் ஆணையர் அலுவலகத்தில் துறையின் செயல்பாடுகள், சட்டமன்ற அறிவிப்புகளின் பணிமுன்னேற்றம் குறித்த சீராய்வுக்கூட்டம் நடை பெற்றது.

    பின்னர் அமைச்சர் பி.கே. சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்து சமய அறநிலையத்துறை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு 2 ஆண்டுகளில் 812 கோவில்களில் குடமுழுக்குகள் நடை பெற்றுள்ளதோடு, ரூ.4,754 கோடி மதிப்பீட்டிலான 5,060 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.

    சிதம்பரம் கோவிலை பொறுத்தவரை தீட்சிதர்கள் தாக்குதல் நடத்தியது அத்துமீறல் இல்லையா? கொரோனா காலத்திற்கு பின்பும் கனக சபை மீதேறி தரிசனம் செய்ய அனுமதி மறுத்த நிலையில் உயர்நீதிமன்றம் இந்து சமய அறநிலையத்துறை உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்திய நிலையிலே அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

    பின்னரும் கனசபை மீதேறி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது அத்துமீறல் இல்லையா? இந்து சமய அறநிலையத்துறை சட்டப்படி தான் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. எதிலும் சட்ட மீறல் இல்லை. அது தீட்சிதர்களிடம் தான் உள்ளது. சிதம்பரம் நடராஜர் திருக்கோயில் விஷயத்தில் எந்த விளைவுகளையும் சந்திக்க அரசு தயங்காது, எங்கள் இயக்கமும் தயங்காது. பக்தர்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படும்போதும், விதிமீறல்கள் நடக்கும்போதும் தான் இந்து சமய அறநிலையத்துறை தலையிடுகிறது.

    சிதம்பரம் கோவில் தீட்சிதர்களிடம் துறை ஒப்படைக்கும்போது வைப்பு நிதியாக ரூ.3.5 கோடியாக இருந்தது. தற்போது எவ்வளவு நிதி உள்ளது என்பதனை கூற தீட்சிதர்கள் மறுக்கிறார்கள். கோவிலுக்கு சொந்தமான நிலங்களின் மூலம் கிடைக்கும் வருவாயை வசூலிக்க தனி வட்டாட்சியர் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது ரூ.6.36 லட்சம் வருவாய் வசூல் செய்யப்பட்டுள்ளது. மேலும், கட்டளைகள் மற்றும் திருவிழாக்கள் போன்ற நிகழ்ச்சிகளுக்கு எழுதிவைத்தி ருக்கின்ற இடங்களில் இருந்து வருகின்ற வருமானங்களும் கோவிலுக்கு செலுத்தப்படுகின்றன. இந்த வருவாயில் இருந்துதான் அந்த கோயிலின் மின்சார கட்டணம் செலுத்தப்படுகிறது.

    சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களின் பணிகள், நடவடிக்கைகள் நியாயப்படி செல்லுகின்ற பொழுது அதில் இந்து சமய அறநிலைத்துறை தலையிடுவதற்கு ஒன்றுமே இல்லை. அவர்களின் செயல்கள், பணிகள் அனைத்தும் அத்து மீறுகின்றபோதும், அடாவடித்தனங்கள் நிகழ்கின்ற போதும், பக்தர்களை துன்புறுத்து கின்றபோதும் நாங்கள் தலையிட வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். இந்த நிலை தொடர்ந்தால் திருக்கோயிலை துறை மீட்பது குறித்து பரீசிலிக்கப்படும்.

    இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள கோவில்களில் திருப்பணிகளை மேற்கொண்டு குட முழுக்குகளை நடத்திட மாதந்தோறும் இருமுறை மாநில அளவிலான வல்லுநர் குழு கூடி அனுமதி வழங்கி வருகிறது. அப்படி வழங்கப்பட்ட அனுமதிகளின் அடிப்படையில் பணிகளை துரிதப்படுத்துவதற்கு மாதந்தோறும் சீராய்வு கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.

    ஆடி கிருத்திகையை முன்னிட்டு திருத்தணி, சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்திட அறங்காவலர் குழு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அக்கோயிலுக்கு மாற்று மலைப்பாதை, திருமண மண்டபங்கள், தங்கும் விடுதிகளை மேம்படுத்துதல் தொடர்பா கவும் துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.

    அதேபோல திருச்செந்தூர் கோவில் எச்.சி.எல் நிறுவனத்தின் மூலம் ரூ.200 கோடி மதிப்பீட்டில் மேம்பாட்டு பணிகள் நடை பெற்று வருகின்றன. திருக்கோயில் நிதி ரூ.100 கோடியில் பணிகளை மேற்கொள்ள அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அப்பணிகள் விரைவில் தொடங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பணிகளை கண்காணிப்பதற்கு 3 மண்டலங்கள் ஏற்படுத்தப்பட்டு ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமையிலான குழுக்கள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • பயன்படுத்த இயலாத 211 கிலோ பொன் இனங்கள் இன்று தங்க முதலீட்டு பத்திரத்தில் முதலீடு செய்யப்பட்டது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தமிழகம் முழுவதும் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் திருப்பதி கோவிலுக்கு இணையாக திருச்செந்தூர் கோவிலில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.300 கோடியில் மெகா திட்டப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த பணிகளை அமைச்சர் சேகர்பாபு அவ்வப்போது நேரடியாக சென்று ஆய்வு செய்கிறார்.

    இந்நிலையில் அமைச்சர் சேகர்பாபு இன்று திருச்செந்தூர் கோவிலுக்கு வந்து அங்கு நடைபெற்று வரும் திட்டப்பணிகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து, கோவிலில் பிரித்தெடுக்கப்பட்ட 211 கிலோ பொன் இனங்களை உருக்கி சுத்த தங்கக்கட்டிகளாக மாற்றி தங்க முதலீட்டு பத்திரத்தில் முதலீடு செய்யும் வகையில் அதனை ஸ்டேட் வங்கியிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி இன்று கோவில் வளாகத்தில் நடைபெற்றது.

    அதன்படி 211 கிலோ பல மாற்று பொன் இனங்களை அமைச்சர்கள் சேகர்பாபு, அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஐகோர்ட் முன்னாள் நீதிபதி மாலா முன்னிலையில் ஸ்டேட் வங்கி பொது மேலாளர் கோவிந்த் நாராயண் கோயலிடம் ஒப்படைத்தனர்.

    பின்னர் அமைச்சர்கள் கோவில் வளாகத்தில் உள்ள அர்ச்சகர் பள்ளிக்கு சென்று ஆய்வு செய்தனர். தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

    2021-2022-ம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கையில் கடந்த 10 ஆண்டுகளாக கோவில்களில் காணிக்கையாக வந்த பல மாற்று பொன் இனங்களில் கோவிலுக்கு தேவைப்படும் இனங்கள் தவிர ஏனையவற்றை மும்பையில் உள்ள ஒன்றிய அரசுக்கு சொந்தமான தங்க உருக்காலையில் உருக்கி சொக்கத்தங்கமாக மாற்றி கோவிலுக்கு வருவாய் ஈட்டும் வகையில் வங்கிகளில் முதலீடு செய்து அதில் இருந்து வரும் வட்டி மூலமாக கோவில்களுக்கு திருப்பணிகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது.

    மேலும் இப்பணிகளை கண்காணிப்பதற்கு 3 மண்டலங்கள் ஏற்படுத்தப்பட்டு ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமையிலான குழுக்கள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை செயல்படுத்தும் விதமாக சென்னை, திருச்சி மற்றும் மதுரை என 3 பகுதிகளாக பிரிக்கப்பட்டு ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் துரைச்சாமி ராஜூ, ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதிகள் ரவிச்சந்திரபாபு மற்றும் ஆர்.மாலா தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டன.

    இப்பணிகளை கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் 13-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    அதன்படி விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி மாரியம்மன் கோவில், திருவள்ளூர் மாவட்டம் பவானி அம்மன் கோவில், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவில் மற்றும் மாங்காடு காமாட்சி அம்மன் கோவில்களுக்கு பக்தர்களால் காணிக்கையாக செலுத்தப்பட்ட பொன் இனங்களை சுத்த தங்கமாக மாற்றும் வகையில் முதலீடு செய்யப்பட்டு அதன்மூலம் கிடைக்கும் வட்டி தொகையில் கோவில்களின் மேம்பாட்டுக்காக செலவிடப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு பக்தர்களால் காணிக்கையாக வழங்கப்பட்ட பலமாற்று பொன் இனங்களில் இருந்து கற்கள், அழுக்கு, அரக்கு மற்றும் இதர உலோகங்களை நீக்கி நிகர பொன் இனங்களை கணக்கிடும் பணியானது ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆர்.மாலா முன்னிலையில் நடைபெற்றது.

    அதில் இருந்து பயன்படுத்த இயலாத 211 கிலோ பொன் இனங்கள் இன்று தங்க முதலீட்டு பத்திரத்தில் முதலீடு செய்யப்பட்டது. இதன் மூலம் கிடைக்கப்பெறும் வருவாய் திருச்செந்தூர் கோவிலின் மேம்பாட்டுக்கு பயன்படுத்தப்படும்.

    கோவிலில் தண்ணீர் தொட்டி, கழிவுநீர், பம்பிங் ரூம், நிர்வாக அலுவலகம், முடி காணிக்கை மண்டபம், அன்னதான மண்டபம் என 3 லட்சம் சதுர அடியில் நடைபெற்று வரும் மெகா திட்டப்பணியில் 10-க்கும் மேற்பட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் தற்போது 30 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை சிறப்பு பணி அலுவலர் குமரகுருபரன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் முரளிதரன், மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், மாவட்ட ஊராட்சி தலைவர் பிரம்மசக்தி, மாவட்ட அறங்காவலர்குழு தலைவர் பார்த்தீபன், திருச்செந்தூர் கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் கணேசன், செந்தில்முருகன், இணை ஆணையர்கள் கார்த்திக், அன்புமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • திருப்பதி வெங்கடாசலபதி கோவிலை போன்று திருச்செந்தூர் கோவிலை தரம் உயர்த்த அறநிலையத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
    • கூடுதலாக பேட்டரி கார்களை இன்று அமைச்சர் சேகர்பாபு கொடியைசத்து தொடங்கி வைத்தார்.

    திருச்செந்தூர்:

    அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் தரிசனம் செய்வதற்காக தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கிறார்கள்

    இதைத்தொடர்ந்து திருப்பதி வெங்கடாசலபதி கோவிலை போன்று திருச்செந்தூர் கோவிலை தரம் உயர்த்த அறநிலையத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக திருப்பதியை போன்று திருச்செந்தூரில் பக்தர்கள் அமர்ந்து சென்று தரிசனம் செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இதைப்போன்று ரூ.250 கோடி மதிப்பில் பக்தர்கள் வசதிக்கு பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. திருச்செந்தூர் கோவிலில் முழு அன்னதான திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது.

    இந்நிலையில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று திருச்செந்தூர் கோவிலில் ஆய்வு செய்தார். திருச்செந்தூர் கோவில் வடபுறம் மற்றும் தென்புறத்தில் 2 இடங்களில் பக்தர்கள் தங்கும் விடுதி (யாத்ரிகள் நிவாஸ்) கட்டப்பட்டு வருகிறது. அதனை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார்.

    அவருடன் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் சென்றனர். தொடர்ந்து ஒவ்வொரு பகுதிகளாக சென்று அங்கு நடைபெறும் பணிகளை அமைச்சர்கள் பார்வையிட்டனர். பின்னர் கோவில் வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள சுகாதார அலுவலகத்தை அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்தார்.

    தொடர்ந்து பக்தர்கள் வசதிக்காக செய்யப்பட்டு வரும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப்பணிகள் குறித்து கம்ப்யூட்டரில் வரைபடம் மூலம் அமைச்சர் சேகர்பாபுக்கு அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

    திருச்செந்தூர் கோவிலில் வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்வதற்காக நுழைவுவாயிலில் இருந்து கோவில் வரை பேட்டரி கார்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கூடுதலாக பேட்டரி கார்களை இன்று அமைச்சர் சேகர்பாபு கொடியைசத்து தொடங்கி வைத்தார்.

    பின்னர் பேட்டரி காரில் அமைச்சர்கள் சேகர்பாபு, அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் பயணம் செய்தனர்.

    முன்னதாக ஆத்தூரில் பிரசித்தி பெற்ற சோமசுந்தரி சமேத சோமநாத சுவாமி கோவிலில் அமைச்சர் சேகர் பாபு பார்வையிட்டார். தொடர்ந்து கோவிலை பார்வையிட்டு சாமி தரிசனம் செய்தார்.

    பின்னர் அவர் கோவில் தெப்பக்குளத்தை சுற்றி மரம் நடவேண்டும், கோவில் பராமரிப்பிற்கான நிதி ஆதாரத்தை பெருக்க வேண்டும் என அறிவுறுத்திார்.

    தொடர்ந்து அவர் ஆத்தூர் அருகே உள்ள சேர்ந்த பூ மங்கலத்தில் புகழ்பெற்ற நவக்கிரக ஆலயங்களில் ஒன்றான கைலாசநாதர் ஆலயத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

    திருக்கோயில் நிர்வாகத்தால் அனுமதிக்கப்பட்ட நாள் முதல் 36 நாட்களுக்கு காலநீட்டிப்பு செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

    சென்னை:

    இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கொரோனா நோய்தொற்று காலங்களில் வார இறுதி நாட்களில் திருக்கோயில்கள் மூடப்பட்டதால் பொது ஏலம், ஒப்பந்தப்புள்ளி தொகை முழுவதும் வசூல் செய்யப்பட்டு 36 நாட்கள் கடைகள் திறக்கப்படாமல் இருந்தது. இதனால் உரிமைதாரர்களுக்கு இழப்பு ஏற்படுவதை கருத்தில் கொண்டு 36 நாட்கள் காலநீட்டிப்பு செய்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் நடைமுறையில் இருந்த ஊரடங்கு 09.08.2021 அன்று முடிவடைந்து நோய்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்குடன் அதிகளவில் பொதுமக்கள் ஒரே இடத்தில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் அனைத்து திருக்கோயில்களிலும் பொது மக்கள் வழிபாட்டிற்கு தடை விதிக்கப்பட்டது.

    கோவில்களில் பக்தர்களுக்கான தரிசனம் ரத்து செய்யப்பட்டு மூடப்பட்டதாலும், திருக்கோயில்கள் வழக்கமாக அனைத்து நாட்களிலும் திறக்கப்பட்டுள்ளதாலும், பொது ஏலம்/ஒப்பந்தப்புள்ளி நடத்தப்பட்டு தொகை முழுவதும் வசூல் செய்யப்பட்ட ஆண்டு தோறும் நடைபெறும் பலவகை உரிம இனங்களின் உரிமைதாரர்களுக்கு இழப்பு ஏற்பட்ட 36 நாட்களுக்கு ஈடாக அந்தந்த திருக்கோயில் நிர்வாகத்தால் அனுமதிக்கப்பட்ட நாள் முதல் 36 நாட்களுக்கு காலநீட்டிப்பு செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

    திருக்கோயில் செயல் அலுவலர்கள் ஏலதாரர்களுக்கு உரிய அனுமதி வழங்கி அதன் நகலினை மண்டல இணை ஆணையர் அலுவலகத்திற்கும், ஆணையர் அலுவலகத்திற்கும் அனுப்பிட அலுவலர் களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

    மேலும், தொகை முழுவதும் வசூல் செய்யப்பட்ட இனங்களுக்கு மட்டும் காலநீட்டிப்பு வழங்கப்பட வேண்டும். தொகை முழுவதும் வசூல் செய்யப்படாத இனங்களுக்கு காலநீட்டிப்பு வழங்கப்பட்டால் ஏற்படும் இழப்பிற்கு தொடர்புடைய அலுவலரே பொறுப்பாக்கப்படுவார் எனவும், உரிம இனங்களுக்கு கால நீட்டிப்பு வழங்கப்படும் நாட்கள் போக மீதமுள்ள நாட்களுக்கு கோவில்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதை தவிர்க்கும் பொருட்டு வழக்கமான பொது ஏலம், ஒப்பந்தப்புள்ளி திறப்பிற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளவும், கால நீட்டிப்பு வழங்கப்படும்.

    காலம் முடிந்த மறுநாள் முதலே அந்தந்த உரிமங்களுக்கு அங்கீகரிக்கப்படும் புதிய உரிமைதாரர், உரிமம் ஏற்க தவறாது ஆவண செய்யும் வகையில் உரிய அங்கீகாரம் முன்கூட்டியே பெற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    சேவையை பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை 04428339999 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு கோவில் தொடர்பான கோரிக்கைகளை தெரிவித்து பயன்பெறலாம்.

    சென்னை:

    இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் (25.05.2021) அன்று பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் வசதிக்கான பொதுமக்கள் குறைகேட்பு சிறப்பு மையம் தொடங்கி வைக்கப்பட்டது.

    இந்த சேவையை பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை 04428339999 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு கோவில் தொடர்பான கோரிக்கைகளை தெரிவித்து பயன்பெறலாம்.

    இதுவரை சிறப்பு மையம் தொடங்கப்பட்டு பொதுமக்களிடமிருந்து 4077 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதில் முழுமையாக நடவடிக்கை எடுத்து முடிக்கப்பட்ட மனுக்கள் 351, நடவடிக்கை மேற்கொள்ளபட்டு வரும் மனுக்கள் 3279, நிராகரிப்பட்ட மனுக்கள் 447. இக்குறைக் கேட்பு மையத்தில் கோவில்களின் திருப்பணிகள் மற்றும் ஆக்கிரமிப்புகள் பற்றிய புகார்கள் அதிகம் வரப்பெற்றுள்ளன. மேலும், 1550 கோரிக்கைகளில் கோவில் பற்றிய தகவல்கள், திறந்திருக்கும் நேரம், இருப்பிடம், வழித்தடம், தங்கும் விடுதிகள் பற்றிய கேள்விகள் கேட்கப்பட்டன. அனைத்து கேள்விகளுக்கும் நிர்வாகத்தின் சார்பில் பதில்கள் அளிக்கப்பட்டன.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    செங்குத்தான மலைப்பாதையில் பக்தர்கள் ஏறுவதற்கு சில இடங்களில் கடினமான சூழ்நிலை இருப்பதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
    கோவை வெள்ளிங்கிரியில் உள்ள 7 மலைகளை தாண்டி அங்குள்ள சிவனை பக்தர்கள் வழிபட்டு வருவார்கள். கரடு முரடாகவும், செங்குத்தாகவும் காணப்படும் இந்த மலையில் பக்தர்கள் பிடிமானத்துக்காக குச்சியை ஊன்றியபடியே மலையேறுவார்கள்.

    சிறப்புமிக்க இந்த வெள்ளிங்கிரி கோவிலில் மலைப்பாதை அமைக்க சாத்தியக்கூறுகள் குறித்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்குள்ள 7 மலைகளிலும் ஏறிச்செல்வது என அவர் முடிவு செய்தார். அதன்படி காலை 7 மணிக்கு மலையேற தொடங்கினார். பிற்பகல் 2 மணி அளவில் அவர் 6-வது மலைக்கு சென்றடைந்தார். அங்குள்ள ஆண்டி சுனையில் குளித்தார். பின்னர் மீண்டும் மலையேற தொடங்கி மாலையில் 7-வது மலையை அடைந்து சுவாமி தரிசனம் செய்தார்.

    இந்த பயணம் குறித்து அமைச்சர் சேகர்பாபு கூறுகையில் வெள்ளிங்கிரி மலை ஏற்றம் புதிய அனுபவம் அளித்தது எனவும், அதிக காற்று, அதிக குளிர் இருப்பதாகவும் தெரிவித்தார். செங்குத்தான மலைப்பாதையில் பக்தர்கள் ஏறுவதற்கு சில இடங்களில் கடினமான சூழ்நிலை இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

    தமிழக வரலாற்றில் அமைச்சர் ஒருவர் 7 மலைகளை ஏறி இறங்கியது இதுவே முதன்முறை என்கிறார்கள் பக்தர்கள். இதனால் அமைச்சர் சேகர்பாபுவுக்கு சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.


    ×