search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்செந்தூர் கோவிலில் காணிக்கையாக செலுத்தப்பட்ட  211 கிலோ பல மாற்று பொன் இனங்கள் தங்கபத்திரத்தில் முதலீடு
    X

    திருச்செந்தூர் கோவிலில் காணிக்கையாக செலுத்தப்பட்ட 211 கிலோ பல மாற்று பொன் இனங்கள் தங்கபத்திரத்தில் முதலீடு

    • பணிகளை கண்காணிப்பதற்கு 3 மண்டலங்கள் ஏற்படுத்தப்பட்டு ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமையிலான குழுக்கள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • பயன்படுத்த இயலாத 211 கிலோ பொன் இனங்கள் இன்று தங்க முதலீட்டு பத்திரத்தில் முதலீடு செய்யப்பட்டது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தமிழகம் முழுவதும் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் திருப்பதி கோவிலுக்கு இணையாக திருச்செந்தூர் கோவிலில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.300 கோடியில் மெகா திட்டப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த பணிகளை அமைச்சர் சேகர்பாபு அவ்வப்போது நேரடியாக சென்று ஆய்வு செய்கிறார்.

    இந்நிலையில் அமைச்சர் சேகர்பாபு இன்று திருச்செந்தூர் கோவிலுக்கு வந்து அங்கு நடைபெற்று வரும் திட்டப்பணிகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து, கோவிலில் பிரித்தெடுக்கப்பட்ட 211 கிலோ பொன் இனங்களை உருக்கி சுத்த தங்கக்கட்டிகளாக மாற்றி தங்க முதலீட்டு பத்திரத்தில் முதலீடு செய்யும் வகையில் அதனை ஸ்டேட் வங்கியிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி இன்று கோவில் வளாகத்தில் நடைபெற்றது.

    அதன்படி 211 கிலோ பல மாற்று பொன் இனங்களை அமைச்சர்கள் சேகர்பாபு, அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஐகோர்ட் முன்னாள் நீதிபதி மாலா முன்னிலையில் ஸ்டேட் வங்கி பொது மேலாளர் கோவிந்த் நாராயண் கோயலிடம் ஒப்படைத்தனர்.

    பின்னர் அமைச்சர்கள் கோவில் வளாகத்தில் உள்ள அர்ச்சகர் பள்ளிக்கு சென்று ஆய்வு செய்தனர். தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

    2021-2022-ம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கையில் கடந்த 10 ஆண்டுகளாக கோவில்களில் காணிக்கையாக வந்த பல மாற்று பொன் இனங்களில் கோவிலுக்கு தேவைப்படும் இனங்கள் தவிர ஏனையவற்றை மும்பையில் உள்ள ஒன்றிய அரசுக்கு சொந்தமான தங்க உருக்காலையில் உருக்கி சொக்கத்தங்கமாக மாற்றி கோவிலுக்கு வருவாய் ஈட்டும் வகையில் வங்கிகளில் முதலீடு செய்து அதில் இருந்து வரும் வட்டி மூலமாக கோவில்களுக்கு திருப்பணிகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது.

    மேலும் இப்பணிகளை கண்காணிப்பதற்கு 3 மண்டலங்கள் ஏற்படுத்தப்பட்டு ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமையிலான குழுக்கள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை செயல்படுத்தும் விதமாக சென்னை, திருச்சி மற்றும் மதுரை என 3 பகுதிகளாக பிரிக்கப்பட்டு ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் துரைச்சாமி ராஜூ, ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதிகள் ரவிச்சந்திரபாபு மற்றும் ஆர்.மாலா தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டன.

    இப்பணிகளை கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் 13-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    அதன்படி விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி மாரியம்மன் கோவில், திருவள்ளூர் மாவட்டம் பவானி அம்மன் கோவில், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவில் மற்றும் மாங்காடு காமாட்சி அம்மன் கோவில்களுக்கு பக்தர்களால் காணிக்கையாக செலுத்தப்பட்ட பொன் இனங்களை சுத்த தங்கமாக மாற்றும் வகையில் முதலீடு செய்யப்பட்டு அதன்மூலம் கிடைக்கும் வட்டி தொகையில் கோவில்களின் மேம்பாட்டுக்காக செலவிடப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு பக்தர்களால் காணிக்கையாக வழங்கப்பட்ட பலமாற்று பொன் இனங்களில் இருந்து கற்கள், அழுக்கு, அரக்கு மற்றும் இதர உலோகங்களை நீக்கி நிகர பொன் இனங்களை கணக்கிடும் பணியானது ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆர்.மாலா முன்னிலையில் நடைபெற்றது.

    அதில் இருந்து பயன்படுத்த இயலாத 211 கிலோ பொன் இனங்கள் இன்று தங்க முதலீட்டு பத்திரத்தில் முதலீடு செய்யப்பட்டது. இதன் மூலம் கிடைக்கப்பெறும் வருவாய் திருச்செந்தூர் கோவிலின் மேம்பாட்டுக்கு பயன்படுத்தப்படும்.

    கோவிலில் தண்ணீர் தொட்டி, கழிவுநீர், பம்பிங் ரூம், நிர்வாக அலுவலகம், முடி காணிக்கை மண்டபம், அன்னதான மண்டபம் என 3 லட்சம் சதுர அடியில் நடைபெற்று வரும் மெகா திட்டப்பணியில் 10-க்கும் மேற்பட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் தற்போது 30 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை சிறப்பு பணி அலுவலர் குமரகுருபரன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் முரளிதரன், மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், மாவட்ட ஊராட்சி தலைவர் பிரம்மசக்தி, மாவட்ட அறங்காவலர்குழு தலைவர் பார்த்தீபன், திருச்செந்தூர் கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் கணேசன், செந்தில்முருகன், இணை ஆணையர்கள் கார்த்திக், அன்புமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×