search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சிதம்பரம் நடராஜர் கோவிலில் விதிமீறல் நடக்கும்போது அரசு தலையிடும்- அமைச்சர் சேகர்பாபு பேட்டி
    X

    சிதம்பரம் நடராஜர் கோவிலில் விதிமீறல் நடக்கும்போது அரசு தலையிடும்- அமைச்சர் சேகர்பாபு பேட்டி

    • பக்தர்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படும்போதும், விதிமீறல்கள் நடக்கும்போதும் தான் இந்து சமய அறநிலையத்துறை தலையிடுகிறது.
    • சிதம்பரம் கோவில் தீட்சிதர்களிடம் துறை ஒப்படைக்கும்போது வைப்பு நிதியாக ரூ.3.5 கோடியாக இருந்தது.

    சென்னை:

    இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் ஆணையர் அலுவலகத்தில் துறையின் செயல்பாடுகள், சட்டமன்ற அறிவிப்புகளின் பணிமுன்னேற்றம் குறித்த சீராய்வுக்கூட்டம் நடை பெற்றது.

    பின்னர் அமைச்சர் பி.கே. சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்து சமய அறநிலையத்துறை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு 2 ஆண்டுகளில் 812 கோவில்களில் குடமுழுக்குகள் நடை பெற்றுள்ளதோடு, ரூ.4,754 கோடி மதிப்பீட்டிலான 5,060 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.

    சிதம்பரம் கோவிலை பொறுத்தவரை தீட்சிதர்கள் தாக்குதல் நடத்தியது அத்துமீறல் இல்லையா? கொரோனா காலத்திற்கு பின்பும் கனக சபை மீதேறி தரிசனம் செய்ய அனுமதி மறுத்த நிலையில் உயர்நீதிமன்றம் இந்து சமய அறநிலையத்துறை உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்திய நிலையிலே அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

    பின்னரும் கனசபை மீதேறி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது அத்துமீறல் இல்லையா? இந்து சமய அறநிலையத்துறை சட்டப்படி தான் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. எதிலும் சட்ட மீறல் இல்லை. அது தீட்சிதர்களிடம் தான் உள்ளது. சிதம்பரம் நடராஜர் திருக்கோயில் விஷயத்தில் எந்த விளைவுகளையும் சந்திக்க அரசு தயங்காது, எங்கள் இயக்கமும் தயங்காது. பக்தர்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படும்போதும், விதிமீறல்கள் நடக்கும்போதும் தான் இந்து சமய அறநிலையத்துறை தலையிடுகிறது.

    சிதம்பரம் கோவில் தீட்சிதர்களிடம் துறை ஒப்படைக்கும்போது வைப்பு நிதியாக ரூ.3.5 கோடியாக இருந்தது. தற்போது எவ்வளவு நிதி உள்ளது என்பதனை கூற தீட்சிதர்கள் மறுக்கிறார்கள். கோவிலுக்கு சொந்தமான நிலங்களின் மூலம் கிடைக்கும் வருவாயை வசூலிக்க தனி வட்டாட்சியர் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது ரூ.6.36 லட்சம் வருவாய் வசூல் செய்யப்பட்டுள்ளது. மேலும், கட்டளைகள் மற்றும் திருவிழாக்கள் போன்ற நிகழ்ச்சிகளுக்கு எழுதிவைத்தி ருக்கின்ற இடங்களில் இருந்து வருகின்ற வருமானங்களும் கோவிலுக்கு செலுத்தப்படுகின்றன. இந்த வருவாயில் இருந்துதான் அந்த கோயிலின் மின்சார கட்டணம் செலுத்தப்படுகிறது.

    சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களின் பணிகள், நடவடிக்கைகள் நியாயப்படி செல்லுகின்ற பொழுது அதில் இந்து சமய அறநிலைத்துறை தலையிடுவதற்கு ஒன்றுமே இல்லை. அவர்களின் செயல்கள், பணிகள் அனைத்தும் அத்து மீறுகின்றபோதும், அடாவடித்தனங்கள் நிகழ்கின்ற போதும், பக்தர்களை துன்புறுத்து கின்றபோதும் நாங்கள் தலையிட வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். இந்த நிலை தொடர்ந்தால் திருக்கோயிலை துறை மீட்பது குறித்து பரீசிலிக்கப்படும்.

    இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள கோவில்களில் திருப்பணிகளை மேற்கொண்டு குட முழுக்குகளை நடத்திட மாதந்தோறும் இருமுறை மாநில அளவிலான வல்லுநர் குழு கூடி அனுமதி வழங்கி வருகிறது. அப்படி வழங்கப்பட்ட அனுமதிகளின் அடிப்படையில் பணிகளை துரிதப்படுத்துவதற்கு மாதந்தோறும் சீராய்வு கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.

    ஆடி கிருத்திகையை முன்னிட்டு திருத்தணி, சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்திட அறங்காவலர் குழு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அக்கோயிலுக்கு மாற்று மலைப்பாதை, திருமண மண்டபங்கள், தங்கும் விடுதிகளை மேம்படுத்துதல் தொடர்பா கவும் துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.

    அதேபோல திருச்செந்தூர் கோவில் எச்.சி.எல் நிறுவனத்தின் மூலம் ரூ.200 கோடி மதிப்பீட்டில் மேம்பாட்டு பணிகள் நடை பெற்று வருகின்றன. திருக்கோயில் நிதி ரூ.100 கோடியில் பணிகளை மேற்கொள்ள அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அப்பணிகள் விரைவில் தொடங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×