search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Car Festival-2023"

    • பஸ்சில் இருந்த மந்திரமூர்த்தியின் பாக்கெட்டில் இருந்த பர்சை 4 பெண்கள் திருடினர்.
    • ஆறுமுகம் என்பவரிடம் 3 பெண்கள் ரூ.7 ஆயிரத்தை பிக்பாக்கெட் அடித்தனர்.

    நெல்லை:

    நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவில் ஆனித்தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

    பிக்பாக்கெட்

    இந்த விழாவில் பங்கேற்பதற்காக நேற்று பேட்டை எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த மந்திரமூர்த்தி (வயது 56) என்பவர் பஸ்சில் டவுனுக்கு சென்றார். அப்போது அவரது பாக்கெட்டில் இருந்த பர்சை 4 பெண்கள் திருடினர். உடனே சுதாரித்துக்கொண்ட அவர் கத்தி கூச்சலிடவே பஸ்சில் இருந்த மற்ற பயணிகள் அவர்கள் 4 பேரையும் பிடித்து சந்திப்பு போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர்.

    விசாரணையில் அவர்கள் கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த ஆஷா(37), திவ்யா(40), சுசீலா(47), லட்சுமி (20) என்பது தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து பர்சை மீட்டு மந்திர மூர்த்தியிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

    மேலும் 3 பேர் கைது

    இதேபோல் சந்திப்பு உடையார்பட்டியில் இருந்து டவுனுக்கு கோவிலுக்கு சென்ற ஆறுமுகம் என்பவரிடம் பஸ்சில் பயணம் செய்த திருச்சி சமயபுரத்தைச் சேர்ந்த முத்துமாரி, ஜெயந்தி, விஜயலட்சுமி ஆகிய 3 பெண்கள் ரூ.7 ஆயிரத்தை பிக்பாக்கெட் அடித்தனர். அவர்களையும் போலீசார் கைது செய்தனர்.

    நேற்று ஒரே நாளில் தேரோட்ட திருவிழாவில் பங்கேற்பதற்காக வந்த 2 முதியவர்களிடம் பிட்பாக்கெட் அடித்த 7 பெண்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • நேற்று இரவு முதல் இன்று காலை வரையிலும் சுமார் 100-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டு சுகாதார பணிகளை மேற்கொண்டனர்.
    • சாலையின் இரு புறங்களிலும் சுத்தப்படுத்தப்பட்டு ப்ளீச்சிங் பவுடர் தூவப்பட்டது.

    நெல்லை:

    தேரோட்டத்தை ஒட்டி மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி உத்தரவின் பேரில், டவுன் உதவி கமிஷனர் வெங்கட் ராமன் அறிவுறுத்தலின் பேரில் சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் 4 ரத வீதிகளிலும் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப் பட்டது.

    நேற்று இரவு முதல் இன்று காலை வரையிலும் சுமார் 100-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டு சுகாதார பணிகளை மேற்கொண்டனர்.

    சாலைகளை சுத்தம் செய்தல், ப்ளீச்சிங் பவுடர் தூவுதல், சாக்கடைகள் அப்புறப்படுத்தப்படுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்ட னர். இது தவிர டவுன் தொண்டர் சன்னதியில் இருந்து நயினார் குளம் சாலை வரையிலும் சாலையின் இரு புறங்களிலும் சுத்தப்படுத்தப்பட்டு ப்ளீச்சிங் பவுடர் தூவப்பட்டது.

    மேலும் மவுண்ட் ரோடுகளிலும் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் சாலைகளை சுத்தம் செய்தனர்.

    மேலும் ஆங்காங்கே சின்டெக்ஸ் தொட்டிகள் அமைத்து குடிநீர் வழங்கி பக்தர்களின் தாகம் தீர்த்தனர். இதையடுத்து மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தியை பக்தர்களும், தன்னார்வலர்களும் பாராட்டினர்.

    • தேரின் முன்பாக போலீஸ் வேனில் சுழலும் காமிராக்கள் பொருத்தப்பட்டு போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
    • ஜாதி ரீதியிலான பனியன்கள், ரிப்பன்கள் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது.

    நெல்லை:

    தேரோட்டத்தின் போது பக்தர்களிடம் இருந்து செயின் பறிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக சி.சி.டி.வி காமிராக்கள் கூடுதலாக பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தது. தொடர்ந்து நெல்லையப்பர் தேரின் முன்பாக போலீஸ் வேனில் சுழலும் காமிராக்கள் பொருத்தப்பட்டு போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

    இந்த ஆண்டு ஜாதி ரீதியிலான பனியன்கள், ரிப்பன்கள் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதனால் சில தனியார் நிறுவனங்கள் ஒரே மாதிரியான பனியன்களை வழங்கினர். அதனை அணிந்து தேருக்கு தடி போடுபவர்கள் தடி போட்டனர். மேலும் தேருக்கு முன்பாக நாதஸ்வரம், செண்டை மேளம் முழங்கப்பட்டது. மேலும் சிவனடியார்களும் சங்கொலி எழுப்பினர். தேரோட்டத்தை ஒட்டி 4 ரதவீதிகளிலும் மின்வாரிய ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டு மின் வயர்களை அகற்றி தேரோட்டத்திற்கு வழிவகை செய்தனர்

    • சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் சேகர் பாபு ஆகியோர் ஓதுவார் பயிற்சி பள்ளி பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
    • விடுதியில் உள்ள மாணவிகளிடம் அடிப்படை வசதிகள் குறித்து அமைச்சர் சேகர் பாபு கேட்டறிந்தார்.

    நெல்லை:

    நெல்லையப்பர் கோவில் ஆனி தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதனை சபாநாயகர் அப்பாவு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஆகியோர் வடம் பிடித்து தொடங்கி வைத்தனர்.

    பின்னர் சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் சேகர் பாபு ஆகியோர் மேலப் பாளையம் அருகில் ரூ.1.51 கோடி மதிப்பீட்டில் கட்டப் பட்டு வரும் ஓதுவார் பயிற்சி பள்ளி மற்றும் காந்திமதி அம்பாள் மேல்நிலைப்பள்ளி யில் ரூ.1.99 கோடி மதிப்பில் ஸ்மார்ட் வகுப்பறை, பணியாளர் அறை, விடுதி புதுப்பித்தல், மேல்நிலை வகுப்பறை புதுப்பித்தல் போன்ற பணி களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    அங்கு விடுதியில் உள்ள மாணவிகளிடம் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்த னர். அப்போது உங்களுக்கு தேவையான வசதிகள் தேவைப்பட்டால் உடனடியாக தெரிவியுங்கள்.

    அதுகுறித்து அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டு தேவை யான வசதிகள் அனைத்தும் ஏற்படுத்தி கொடுக்கப்படும் என தெரிவித்தனர். தொடர்ந்து அங்கு நடை பெற்று வரும் பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தர விட்டனர்.

    • சுமார் 12 மணி அளவில் லட்சக்கணக்கான பக்தர்கள் 4 ரத வீதிகளிலும் திரண்டனர்.
    • வானிலை மையம் இன்று முதல் 4-ந் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்திருந்தது.

    நெல்லை:

    நெல்லையப்பர் கோவில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடை பெற்றது.

    காலை 8.30 மணி அளவில் தேரோட்டம் தொடங்கிய நிலையில் பல்லாயிரக்க ணக்கான பக்தர்கள் திரண்டு வந்து வானம் அதிர கோஷங்களிட்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். சிறிது நேரம் செல்ல செல்ல பக்தர்களின் கூட்டம் அதிகமானது.

    ஒரு கட்டத்தில் 4 ரத வீதிகளிலும் தார் சாலையை பார்க்க முடியவில்லை. திரும்பி பார்க்கும் இட மெல்லாம் பக்தர்கள் தலைகள் தான் தென்பட்டது. சுமார் 12 மணி அளவில் லட்சக்கணக்கான பக்தர்கள் 4 ரத வீதிகளிலும் திரண்டனர். வெயிலின் தாக்கமும் குறைந்து காணப்பட்டது.

    ஏற்கனவே வானிலை மையம் இன்று முதல் 4-ந் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்திருந்தது. இந்நிலையில் இன்று வானம் மேக மூட்டத்துடன் காணப் பட்டது. வெயிலின் தாக்கம் மிகவும் குறைவாகவே இருந்தது. இதனால் ஏராளமான பக்தர்கள் தேரோட்ட விழாவில் மிக அதிக அளவில் பங்கேற்றனர். அலைமோதிய பக்தர்கள் கூட்டத்தின் காரணமாக டவுன் மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து சொக்கப்பனை முக்கு வரையிலும் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது.

    இதே போல் டவுன் ஆர்ச்சில் இருந்து அருணகிரி தியேட்டர் வழியாக மவுண்ட் சாலையில் கணேஷ் தியேட்டர் வரையிலும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

    ×