search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "MGR"

    • ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெறாது என எம்ஜிஆர் பேரன் ராமச்சந்திரன் தெரிவித்தார்
    • இப்போது ஒற்றை தலைமை வேண்டும் என்று சொல்வது ஏன்? என ராமச்சந்திரன் கேள்வி எழுப்பினார்

    சென்னை:

    ஒற்றை தலைமை விவகாரத்தால் அதிமுகவில் ஏற்பட்ட மோதல் உச்சகட்டத்தை எட்டி உள்ளது. கட்சியின் பெரும்பாலான நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக உள்ளனர். ஓ.பி.எஸ். பக்கம் மிக குறைவான ஆதரவாளர்களே உள்ளனர். இந்நிலையில், கட்சியில் ஒற்றை தலைமை என்பதை தவிர்க்க வேண்டும். அப்படியே ஒற்றை தலைமை அவசியம் என்றால் அதில் ஒபிஎஸ்தான் தலைமை ஏற்க வேண்டும் என்று எம்.ஜி.ஆரின் பேரன் ராமச்சந்திரன் கூறியுள்ளார்.

    இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த எம்.ஜி.ஆரின் பேரன் ராமச்சந்திரன் கூறியதாவது:-

    ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெறாது. என் ஆதரவும் தொண்டர்களின் ஆதரவும் ஓ.பன்னீர்செல்வத்துக்கே. இதனால் என் பதவி பறிபோனாலும் கவலையில்லை. ஓ.பன்னீர்செல்வத்தை எப்போது வேண்டுமானாலும் சந்திக்க முடியும். எடப்பாடி பழனிசாமியை சாதாரணமாக சந்திக்க முடியாது.

    கட்சி இரண்டாக பிரியக்கூடாது. உடையக்கூடாது என என் தாத்தா (எம்ஜிஆர்) நினைத்தார். அவர் கட்டிக்காத்த இயக்கம் இது. இப்போது ஒற்றை தலைமை வேண்டும் என்று சொல்வது ஏன்? என்று எங்களுக்கு புரியவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காட்பாடியில் எம்.ஜி.ஆருக்கு அ.தி.மு.க.வை சேர்ந்த ஒருவர் கோவில் கட்ட அடிக்கல் நாட்டியுள்ளார்.
    • குஷ்புவுக்கு கோவில் கட்டும்போது எம்ஜிஆருக்கு கோவில் கட்டுவது தவறு இல்லை.

    வேலூர்:

    வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள நவீன கேமரா கட்டுப்பாட்டு அறையை அமைச்சர் துரைமுருகன் இன்று திறந்து வைத்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஹெல்மெட் அணிவது மிகவும் அவசியமானது. 100ல் 80 பேர் ஹெல்மெட் அணிவது இல்லை. பெரும்பாலானோர் செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுகின்றனர். சென்னையில் வாகன ஓட்டிகள் அதிகளவில் ஹெல்மெட் அணிந்து செல்கின்றனர். அனைத்து மாவட்டங்களிலும் ஹெல்மெட் அணியவேண்டும்.

    ஹெல்மெட் அணியாதவர்களை பிடித்து போலீசார் அபராதம் விதிக்க வேண்டும். பட்டியலின பெண்ணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்தால் தனிப்பட்ட முறையில் நான் அதை வரவேற்கிறேன்.

    காட்பாடியில் எம்.ஜி.ஆருக்கு அ.தி.மு.க.வை சேர்ந்த ஒருவர் கோவில் கட்ட அடிக்கல் நாட்டியுள்ளார். குஷ்புவுக்கு கோவில் கட்டும்போது எம்ஜிஆருக்கு கோவில் கட்டுவது தவறு இல்லை.

    திராவிட கொள்கைகளை உண்மையிலே கடைபிடிக்கும் கட்சியாக தி.மு.க மட்டுமே உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன், கதிர் ஆனந்த் எம்.பி. கார்த்திகேயன் எம்.எல்.ஏ. மேயர் சுஜாதா ஆனந்தகுமார் துணை மேயர் சுனில்குமார் மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் உட்பட பலர் உடனிருந்தனர்.

    எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு லீலாவதி சென்னையில் பெருங்குடிப் பகுதியில் தனது இரண்டு மகள்களுடன் வாழ்ந்து வந்தார்.

    சென்னை:

    எம்.ஜி.ஆருக்கு சிறுநீரகம் தானம் செய்தவரும், எம்.ஜி.ஆரின் அண்ணன் மகளுமான லீலாவதி (வயது 72) சென்னையில் இன்று மரணம் அடைந்தார்.

    எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது அவருக்கு சிறுநீரகப் பாதிப்பு ஏற்பட்டது. சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் சொன்ன போது திருமணமாகியிருந்த நிலையிலும் லீலாவதி கணவரின் ஒப்புதலுடன் தனது சித்தப்பா எம்.ஜி.ஆருக்குச் சிறுநீரக தானம் செய்ய முன் வந்தார்.

    மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பின்னர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தனக்குச் சிறுநீரக தானம் கொடுத்தது லீலாவதிதான் என முதலில் எம்.ஜி.ஆருக்குத் தகவல்கள் சொல்லப்படவில்லை.

    சில நாட்களுக்குப் பின்னர், உடல்நலம் பெற்றுத் திரும்பிய எம்ஜிஆருக்கு, நாளிதழ் ஒன்றின் மூலமே தகவல் தெரிய வந்தது.

    எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு லீலாவதி சென்னையில் பெருங்குடிப் பகுதியில் தனது இரண்டு மகள்களுடன் வாழ்ந்து வந்தார். வயோதிகத்தின் காரணமாக அடிக்கடி மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு அவருக்கு உடல் நலக்கோளாறு ஏற்பட்டு ஜெம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். போகும் வழியிலேயே அவர் உயிர் பிரிந்தது.

    அவருடைய ஹேமா முரளி என்ற மகள் மஸ்கட்டில் கணவருடன் வசித்து வருகிறார். மினி நந்தன் என்ற மகள் சென்னையில் வசித்து வருகிறார். லீலாவதியின் உடல் பெருங்குடியில் அவரது மகள் வீட்டில் வைக்கப்பட்டிருக்கிறது. இன்று மாலை 5 மணியளவில் ஏரிக்கரை மயானத்தில் உடல் தகனம் செய்யப்படுகிறது.

    ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-

    நம்மை எல்லாம் ஆளாக்கிய அ.தி.மு.க. நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆரின் மூத்த சகோதரர் எம்.ஜி.சக்கரபாணியின் மகள் லீலாவதி அம்மையார் உடல்நலக் குறைவால் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு ஆறறொணாத் துயரமும், மிகுந்த மனவேதனையும் அடைந்தோம். எம்.ஜி.ஆர். 1984-ல் நோய்வாய்ப்பட்டு அமெரிக்காவில் புரூக்ளின் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தபோது அவருக்கு தன்னுடைய ஒரு சிறுநீரகத்தை அளித்து நம் புரட்சித் தலைவரை வாழவைத்த போற்றுதலுக்குரிய பண்பாளர் லீலாவதி அம்மையார். 37 ஆண்டுகள் இப்பூவுலகில் ஒரு சிறுநீரகத்தோடு வாழ்ந்து, இன்று இயற்கை எய்தியதை அறிந்து எம்.ஜி.ஆரின் கோடானு கோடி அன்புத் தொண்டர்கள் அனைவரது நெஞ்சங்களும் மிகுந்த வேதனை கொள்கிறது.

    அன்பு சகோதரி லீலாவதி அம்மையாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது உற்றார்-உறவினர்களுக்கும் இந்தத் துயரத்தை தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தியையும், தைரியத்தையும் அளிக்க வேண்டும் என்றும், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெறவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.

    இதையும் படியுங்கள்... மழை தொடர்ந்து பெய்வதால் கொளத்தூர் பகுதியில் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு

    தென்சென்னை தொகுதியில் அனைத்து தேர்தல்களிலும் வாக்களித்த பெருமைக்குரிய 102 வயது மூதாட்டி வாழ்கிறார். #Loksabhaelections2019
    சென்னை:

    தேர்தல் களம் பரபரப்பும், சுவாரஸ்யமும் நிறைந்தது. அது வெளிப்படும்போது மக்கள் மத்தியில் ஆச்சரியமாக பார்க்கப்படும்.

    நாளை மறுநாள் (18-ந் தேதி) 17-வது பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது. இதுவரை நடந்த அனைத்து தேர்தல்களையும் பார்த்தவர்களும், ஓட்டளித்தவர்களும் இருப்பது அரிது.

    தென்சென்னை தொகுதியில் அனைத்து தேர்தல்களிலும் வாக்களித்த பெருமைக்குரிய கண்ணம்மாள் என்ற மூதாட்டி வாழ்கிறார். 102 வயதாகும் அவர் பேரன், பேத்தி, கொள்ளுப்பேரன்களை பார்த்தவர். கந்தன்சாவடி அண்ணா நெடுஞ்சாலையில் வசித்து வருகிறார்.

    அந்த பகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் ஜெயவர்தனுக்கு ஆதரவு திரட்டி வரும் முன்னாள் எம்.எல்.ஏ. கே.பி.கந்தன் இன்று கண்ணம்மாள் வீட்டுக்கு சென்றார். தள்ளாத வயதிலும் தன்னை பார்க்க வருபவர்களை அடையாளம் பார்த்து அவர்களிடம் பேசுகிறார். அவரிடம் பாட்டி ஓட்டு கேட்க வந்திருக்கிறோம் என்றதும் உற்சாகத்தில் பேச தொடங்கினார்.

    பேராண்டி, அந்த காலத்தில் இருந்தே ஓட்டு போடுகிறேன். அப்பெல்லாம் இப்படி கிடையாது. இப்ப திருவிழா மாதிரி நடக்குதே... என்று கூறி சந்தோஷப்பட்டார். அவரிடம் பிளாஸ்டிக்கால் ஆன இரட்டை இலை சின்னத்தை கொடுத்து பாட்டி மறக்காம இரட்டை இலைக்கு ஓட்டு போடுங்க என்றதும் கண்ணம்மாளின் கண்களில் அப்படி ஒரு ஆனந்தம். “மவராசன் எம்.ஜி.ஆர். அவருக்கு நிறைய தடவை இரட்டை இலையில் ஓட்டு போட்டிருக்கேன். நீங்களும் அந்த மவராசன் சின்னத்துக்குத்தான் ஓட்டு கேட்டு வந்திருக்கீங்களா... கண்டிப்பா இரட்டை இலைக்கு போடுவேன்பா என்றார்.

    102 வயதிலும் எம்.ஜி.ஆரையும் அவர் அறிமுகப்படுத்திய இரட்டை இலை சின்னத்தையும் கண்ணம்மாள் பாட்டி நினைவில் வைத்திருந்ததை பார்த்ததும் வாக்கு கேட்டு சென்ற அ.தி.மு.க. நிர்வாகிகள் மெய்சிலிர்த்து போனார்கள்.

    இதுபற்றி கே.பி.கந்தன் கூறும்போது, இதுதான் இரட்டை இலையின் வெற்றி. இது வெறும் சின்னம் மட்டுமல்ல, மக்களின் எண்ணம். எந்த காலத்திலும் அவர்கள் உணர்வில் இருந்து இரட்டை இலை மறைய போவதில்லை என்றார். பின்னர் கண்ணம்மாளிடம் ஆசி பெற்று அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். #Loksabhaelections2019
    சென்னையில் முன்னாள் எம்.பி. ஒருவரின் மகன் குடியிருக்க வீடு கூட இல்லாமல் தெருவில் வசிக்கும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளார்.
    சென்னை:

    எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வாரிசு மட்டும் அல்ல சாதாரண வார்டு கவுன்சிலர் வாரிசுகள் கூட இன்று பல கோடி ரூபாய் சொத்துக்களுக்கு அதிபதிகளாக இருக்கிறார்கள்.

    பங்களா, சொகுசு கார் என ‘லக்சரி’ வாழ்க்கை அவர்களை தொற்றி கொள்கிறது.

    ஆனால் சென்னையில் முன்னாள் எம்.பி. ஒருவரின் மகன் குடியிருக்க வீடு கூட இல்லாமல் தெருவில் வசிக்கும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளார்.

    அந்த முன்னாள் எம்.பி.யின் பெயர் எஸ்.கே. சம்பந்தன். 1967-ல் திருத்தணி தொகுதி தி.மு.க. எம்.பி.யாக இருந்தவர். அதற்கு முன்பு காங்கிரசில் இருந்த அவர் எம்.எல்.சி. ஆகவும் இருந்துள்ளார்.

    இவருடைய மகன் பாலு (வயது65) என்பவர் தான் இந்த பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

    இவர் ஆதம்பாக்கம் பஸ் நிலையத்தில் வசித்து வருகிறார். அவரது சொத்தாக அழுக்கு படிந்த 2 கால் சட்டைகளும் ஒரு மேல் சட்டை ஆகியவை மட்டுமே உள்ளன.

    பசி எடுக்கும் போது அருகில் உள்ள அம்மா கேண்டீனில் சாப்பிட்டு கொள்கிறார்.

    இந்த பரிதாப நிலைக்கு ஆளானது எப்படி என்பது குறித்து அவரே விளக்கமாக தெரிவித்தார். அவர் கூறியதாவது:-

    நாங்கள் ஒரு காலத்தில் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான். எங்களுக்கு குறிஞ்சிப்பாடியில் ரைஸ்மில் எல்லாம் இருந்தது.

    எனது தந்தை எம்.எல்.சி., எம்.பி. என பதவிகளில் இருந்தார். ஆனால் அரசியலில் எதுவும் சம்பாதிக்கவில்லை. தனது சொந்த பணத்தையும் கட்சிக்காக செலவிட்டார்.

    அவர் எம்.பி.யாக இருந்தபோது எத்தனையோ தொழில் அதிபர்கள் அவரை சந்திக்க வருவார்கள். அவர் நினைத்து இருந்தால் அதை வைத்து எவ்வளவோ சம்பாதித்து இருக்கலாம். ஆனால் லஞ்ச, ஊழல் அவருக்கு பிடிக்காது. எனவே சாதாரண வாழ்க்கைதான் வாழ்ந்தோம்.

    நான் எனது தந்தையுடன் பல தடவை டெல்லிக்கு சென்று இருக்கிறேன். எனது தந்தைக்கு கார் டிரைவராகவும் பணியாற்றினேன்.

    1971-ல் தி.மு.க. தலைவராக கருணாநிதி தேர்வு செய்யப்பட்டபோது அதை எனது தந்தை விரும்பவில்லை. அப்போது ஏற்பட்ட பிரச்சனையால் அவர் கட்சியில் இருந்து ஒதுங்கி இருந்தார். பின்னர் கட்சியில் இருந்தே விலகினார்.

    எம்.ஜி.ஆர். தி.மு.க.வில் இருந்து விலகி புதிய கட்சி தொடங்கியபோது எம்.ஜி.ஆரே எனது தந்தையை தனது கட்சிக்கு வரும்படி அழைத்தார். மந்திரி பதவி தருவதாகவும் கூறினார். ஆனால் எம்.ஜி.ஆருடன் செல்ல மறுத்து விட்டார்.

    இதன்பிறகு நாங்கள் பணக்கஷ்டத்துக்கு ஆளானோம். எங்களது ரைஸ்மில்லும் மூடப்பட்டது.

    பின்னர் நான் டிரைவர் தொழில் செய்து வாழ்ந்து வந்தேன். எனக்கும் குடும்பம் இருந்தது. என்னால் சிறப்பாக செயல்பட்டு பணம் சம்பாதிக்க முடியவில்லை.

    இந்த நிலையில் என்னை பக்கவாத நோய் தாக்கியது. அதனால் என்னால் தொழில் செய்ய முடியவில்லை.

    பணம் இல்லாததால் உறவினர்களும், குடும்பத்தினரும் என்னை கை விட்டு சென்று விட்டனர்.

    3 ஆண்டுகளாக ஆதரவற்றோர் இல்லம் ஒன்றில் வசித்து வந்தேன். அந்த இல்லத்தை வேறு இடத்துக்கு மாற்றினார்கள். நான் பக்கவாத நோயால் அவதிப்பட்டதால் என்னை புதிய இடத்துக்கு அழைத்து செல்ல மறுத்து விட்டனர்.

    அதில் இருந்து வேறு வழி இல்லாமல் தெருவில் வசித்து வருகிறேன்.

    பழைய நண்பர்கள் சிலர் அவ்வப்போது எனக்கு பணம் கொடுத்து உதவுகின்றனர். அதை வைத்து அம்மா கேண்டீனில் சாப்பிட்டு உயிர் வாழ்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    எம்.ஜி.ஆர். - லதாவை உதாரணமாக வைத்து நடிகை கஸ்தூரி தெரிவித்த கருத்துக்கு கண்டனங்கள் எழுந்த நிலையில், எம்.ஜி.ஆரை விமர்சிக்கும் எண்ணம் தனக்கு இல்லை என்று கஸ்தூரி வருத்தம் தெரிவித்துள்ளார். #Kasthuri
    நடிகை கஸ்தூரி சமூக வலைத்தளங்களில் அடிக்கடி ஏதாவது கருத்துகள் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் கஸ்தூரி தனது சமூக வலைத்தள பக்கத்தில் ‘என்னய்யா இது, பல்லாண்டு வாழ்க படத்துல வாத்தியாரு லதாவை தடவினதை விட அதிகமா தடவுறாங்க.’ என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை விமர்சித்து பதிவு செய்திருந்தார். 

    இதற்கு நடிகை லதா தனது கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார். மேலும் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


    இந்த நிலையில், இதுகுறித்து கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில், “எம்.ஜி.ஆர். காதல் காட்சியில் நடித்ததில், கதாநாயகியின் கன்னத்தை, கரத்தை தடவியதில் என்ன தவறு உள்ளது? அதை மேற்கோள் காட்டுவதில் என்ன தவறு உள்ளது? இதில் கண்ணியமும், பெண்ணியமும் என்ன கெட்டுவிட்டது? நான் வாத்தியாரின் காதல் ரசம் சொட்டும் பாடல்களை ரசிக்கும் எண்ணற்றவர்களில் ஒருவள். அவரை விமர்சிக்கும் எண்ணம் சிறிதும் எனக்கு இல்லை.

    இருப்பினும், இதில் யார் மனமும் புண்பட்டிருந்தால், மனமார வருந்துகிறேன்.” என்று கூறியுள்ளார். #Kasthuri #MGR #Latha

    எம்.ஜி.ஆரையும், என்னையும் தவறாக சித்தரித்து கருத்து பதிவிட்ட நடிகை கஸ்தூரிக்கு கண்டனம் தெரிவித்து நடிகை லதா அறிக்கை வெளியிட்டுள்ளார். #Latha #Kasthuri
    நடிகை கஸ்தூரி தனது சமூக வலைத்தள பக்கத்தில் ‘என்னய்யா இது, பல்லாண்டு வாழ்க படத்துல வாத்தியாரு லதாவை தடவினதை விட அதிகமா தடவுறாங்க.’ என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை விமர்சித்து பதிவு செய்திருந்தார். இதற்கு பல கண்டனங்கள் எழுந்து வருகிறது. இந்நிலையில், நடிகை லதா கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், 

    எம்.ஜி.ஆரையும், என்னையும் தவறாக சித்தரித்து கருத்து பதிவிட்ட நடிகை கஸ்தூரிக்கு முதலில் என் கண்டனத்தை தெரிவிக்கிறேன்.

    “நான் 50 வருஷமா நடிச்சிக்கிட்டிருக்கேன். இப்போவரைக்கும் எனக்குன்னு ஒரு மரியாதையை தக்க வைச்சுக்கிட்டிருக்கேன். ‘மக்கள் திலகம்’ எம்.ஜி.ஆரை. தெய்வமா மதிக்கிற கோடானுகோடி ரசிகர்கள் தமிழ்நாட்டுல இருக்காங்க. அவங்களையெல்லாம் ஒட்டு மொத்தமா மன வருத்தப்படுற மாதிரி இப்படியெல்லாம் எழுதலாமா..?



    கஸ்தூரி நடிச்ச அளவுக்கெல்லாம் நான் எந்தப் படத்துலேயும் விரசமா நடிக்கலையே.. அவங்களுக்கு கருத்துச் சொல்ல ஒரு விஷயம் தேவைப்பட்டுச்சுன்னா அவங்க நடிச்ச படத்துல இருந்தே சொல்லியிருக்கலாமே..? எதுக்கு நானும், எம்.ஜி.ஆர் நடிச்ச படத்தைச் சொல்லணும்.

    அவங்கதான் எதுக்கெடுத்தாலும் பெண்ணியம்.. அது… இதுன்னு கருத்துச் சொல்லிட்டிருக்காங்களே.. இதெல்லாம் பெண்ணியம் பேசுறவங்க பேச்சா.. ஒரு பொண்ணே, இன்னொரு பொண்ணை பொதுவெளில அவமானப்படுத்துற மாதிரி பேசலாமா..? கஸ்தூரிக்கு பப்ளிசிட்டி வேணும்ன்னா வேற எதையாவது செய்யலாம். இது அந்தப் பொண்ணுக்குத் தேவையில்லாத வேலை. இதுவொரு சீப்பான பப்ளிசிட்டி.

    இதற்கு நடிகர் சங்கத்தில் இருந்து கண்டன கடிதம் அனுப்பி உள்ளதாக என்னிடம் சொன்னார்கள் அவர்களுக்கு மிக்க நன்றி. அதுமட்டும் இல்லாமல் அனைத்து எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றங்களிலும் இருந்து கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள். 

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    கேரள மாநிலம் பாலக்காட்டில் புனரமைக்கப்பட்ட எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்தை கவர்னர் சதாசிவம் நாளை திறந்து வைக்கிறார். #MGRHouse
    கொழிஞ்சாம்பாறை:

    சினிமா, அரசியல் வரலாற்றில் முக்கிய இடம் பிடித்த மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் சொந்த ஊர் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் வடவனூர் ஆகும்.

    சிறுவயதில் இங்கு எம்.ஜி.ஆர். குடும்பத்தோடு வசித்தார். அவர் வசித்த வீடு தற்போது அங்கன்வாடி மையமாக செயல்பட்டு வருகிறது. நூற்றாண்டு பழமை வாய்த இந்த வீட்டை எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்ரபாணி 2 முறை பராமரித்தார். அதன் பின்னர் அந்த வீட்டை யாரும் கண்டு கொள்ளவில்லை. இதனால் வீடு சிதிலமடைந்து குடியிருக்க முடியாமல் இருந்தது.

    இது குறித்து அறிந்த சென்னை முன்னாள் மேயரும், எம்.ஜி.ஆர். பேரவைத்தலைவருமான சைதை துரைசாமி அந்த வீட்டை பார்வையிட்டார். எம்.ஜி.ஆர். வசித்த வீட்டை புனரமைக்க முடிவு செய்தார்.

    அதன்படி ரூ.50 லட்சம் செலவில் சிதிலமடைந்த வீட்டை புதுப்பொலிவுடன் மாற்றி எம்.ஜி.ஆர். நினைவு இல்லமாக அமைக்கப்பட்டது. இந்த இல்லத்தில் செயல்பட்டு வந்த அங்கன்வாடி மையம் தொடர்ந்து செயல்படும்.


    இது தவிர பார்க்கிங், எம்.ஜி.ஆர். அருங்காட்சியகம், பார்வையாளர்கள் கேலரி, சுகாதார வளாகம் ஆகியவைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இல்லத்தின் முன்பு எம்.ஜி.ஆர். உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. முகப்பில் ‘சத்திய விலாசம்’ என்று பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து எம்.ஜி.ஆரின் சகோதரரின் பேரன் கூறும்போது, எம்.ஜி.ஆரின் நினைவு இல்லத்திறப்பு விழா நாளை நடைபெறுகிறது. இந்த இல்லத்தை கேரள கவர்னர் சதாசிவம் திறந்து வைக்கிறார்.

    கேரள மாநில கலாசார துறை அமைச்சர் பாலன், நீர்பாசன துறை அமைச்சர் கிருஷ்ணன்குட்டி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர் என்றார்.

    எம்.ஜி.ஆரின் நினைவுகளை அங்கிருந்தவர்கள் நினைவு கூர்ந்து வருகிறார்கள்.  #MGRHouse

    சைதை துரைசாமியின் மனிதநேயம் மையத்தின் செலவில், கேரளாவில் உள்ள எம்.ஜி.ஆர். வாழ்ந்த வீடு புதுப்பிக்கப்பட்டது. வருகிற 26-ந் தேதி, கேரளா மாநில கவர்னர் சதாசிவம் இந்த வீட்டை திறந்துவைக்கிறார். #MGRHouse #SaidaiDuraisamy
    சென்னை:

    ‘வாழ்ந்தவர் கோடி... மறைந்தவர் கோடி... மக்களின் மனதில் நிற்பவர் யார்?’, என்ற பாடல் வரிகளுக்கேற்ப எம்.ஜி.ஆர். மறைந்து 32 ஆண்டுகள் ஆகியும், அவரது புகழ் மக்கள் மத்தியில் குறையவில்லை. இன்றைக்கும் எம்.ஜி.ஆரை நினைத்து வருத்தத்துடன் காலத்தை அசைபோடுவோர் ஏராளம். 2015-ம் ஆண்டு மழை வெள்ளத்தால் சென்னையை அடுத்த ராமாவரத்தில் உள்ள எம்.ஜி.ஆர். வீடு பாதிக்கப்பட்டபோது அனைவருமே பதறிப்போனார்கள். அதேபோல கேரளா மாநிலம் பாலக்கோடு மாவட்டம் வடவனூரில், எம்.ஜி.ஆர். குழந்தை பருவத்தில் வாழ்ந்த வீடு சிதிலமடைந்து உள்ளது என்ற செய்தி, படிப்போரை கண்கலங்க செய்தது.

    எம்.ஜி.ஆர். வாழ்ந்த அந்த வீடு அங்கன்வாடி மையமாக செயல்பட்டு வந்தபோதிலும், சிதிலமடைந்து நிற்கும் அந்த வீட்டை யாருமே சீரமைக்க முன்வராதது வேதனை தரும் செய்தியாகி போனது. இதுகுறித்த செய்தி, அப்போதைய பெருநகர சென்னை மாநகராட்சியின் மேயராக பதவி வகித்தவரும், மனிதநேயம் அறக்கட்டளை தலைவருமான சைதை துரைசாமி பார்வைக்கு சென்றது.

    கேரளாவில் உள்ள எம்.ஜி.ஆர். வாழ்ந்த வீடு சிதிலமடைந்த நிலையில் இருக்கும் காட்சி. (பழைய படம்)

    இதையடுத்து சைதை துரைசாமி உடனடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், “எம்.ஜி.ஆர். வாழ்ந்த பழமையான இந்த வீட்டை மனிதநேயம் அறக்கட்டளை சார்பில் சீரமைத்து புதுப்பித்து தருவோம். சீரமைக்கும் பணிகளை துரிதப்படுத்தி வெகுவிரைவில் ‘சத்திய விலாஸ்’ (வீட்டின் பெயர்) வீட்டை புதுப்பித்து உரியவர்களிடம் ஒப்படைப்போம்”, என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

    அதனைத்தொடர்ந்து மனிதநேயம் மையத்தின் செலவில் வீடு புதுப்பிக்கும் பணிகள் தீவிரமானது. சைதை துரைசாமியும் அடிக்கடி கேரளா சென்று அப்பணிகளை பார்வையிட்டார். இந்தநிலையில் எம்.ஜி.ஆர். வாழ்ந்த அந்த வீடு புதுப்பிக்கப்பட்டு வருகிற 26-ந் தேதி திறப்பு விழா காண இருக்கிறது.

    இதுகுறித்து சைதை துரைசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மக்கள் திலகம் புரட்சித்தலைவர் ‘பாரத ரத்னா’ எம்.ஜி.ஆர். தனது இளம் வயதில் தவழ்ந்து விளையாடிய வடவனூர் இல்லம் மிகவும் பழுதடைந்து முட்புதர்கள் மண்டி கிடப்பதாகவும், எந்தவித பராமரிப்பு இன்றி கிடக்கும் இந்த இடத்தை யாருமே சீரமைக்க முன்வரவில்லை என்று செய்திகள் வெளியானது.

    இதுதொடர்பான தகவல் கிடைத்ததும், நானே நேரில் சென்று அந்த இடத்தை பார்வையிட்டு, எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்கரபாணி குடும்பத்தினரிடம் முறையான ஒப்புதல் பெற்று, மனிதநேயம் ஐ.ஏ.எஸ். கட்டணமில்லா கல்வி மையம் சார்பில் வீட்டின் தொன்மை மாறாமல் சீரமைத்தது. எம்.ஜி.ஆர். காலமெல்லாம் நேசித்த மழலையர் அங்கன்வாடி மையம், உணவுக்கூடம், மழலையர் விளையாட்டு திடல், அழகிய புல்வெளி, எம்.ஜி.ஆரின் அருமையான சுவர் ஓவியங்கள் என கண்ணையும், மனதையும் கவரும் வகையில் இந்த நினைவு இல்ல வளாகம் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

    தற்போது இந்த நினைவு இல்லம் சுற்றுலா பயணிகள் கண்டுகளிக்கும் அளவுக்கு பொலிவு பெற்றுள்ளது. எம்.ஜி.ஆரின் மார்பளவு பளிங்கு சிலையும், அவரின் தாய் சத்தியபாமா, தந்தை கோபாலகிருஷ்ணன் ஆகியோரின் பளிங்கு சிலைகளும் இந்த வளாகத்தில் அமைக்கப்பட உள்ளன.

    எம்.ஜி.ஆரின் பன்முகத்தன்மையை பறைசாற்றும் அரிய காட்சிகள் அடங்கிய ஒளி நாடாக்கள், அவரது ஆட்சிக்கால சாதனைகளின் ஒளிநாடா காட்சிகள், அவரது அபூர்வ புகைப்படங்களின் கண்காட்சி, எம்.ஜி.ஆர். நடித்த வெற்றி திரைப்படங்களின் சி.டி.க்கள் வெளியீடு என பல்வேறு நவீன சிறப்பு அம்சங்கள் இடம்பெற்று உள்ளன. இதுதவிர எம்.ஜி.ஆர். குறித்த பல்வேறு பிரபலங்கள், எழுத்தாளர்கள் எழுதிய நூல்கள் அடங்கிய நூலகம் ஒன்றும் அமைக்கப்பட உள்ளது.

    சபரிமலை செல்லும் பக்தர்கள் பார்வையிடவும், அவர்கள் விரும்பினால் தங்குவதற்கும், எம்.ஜி.ஆர். பக்தர்கள் தங்கள் இல்ல திருமணங்களை நடத்துவதற்கும், சுற்றுலா பயணிகள் தங்கி இளைப்பாறவும் உரிய வசதிகள் செய்யப்பட உள்ளன. வழிநெடுக பல்வேறு திருத்தலங்களுக்கு செல்பவர்கள், தரிசித்து செல்லும் மற்றொரு திருக்கோவிலாக எம்.ஜி.ஆர். இல்லம் புனரமைக்கப்பட்டுள்ளது.

    இந்த நினைவு இல்லத்தை கேரளா மாநில கவர்னர் பி.சதாசிவம் வருகிற 26-ந் தேதி காலை 10.30 மணியளவில் திறந்து வைக்க இருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்கரபாணியின் குடும்பத்தினர் கவுரவிக்கப்பட இருக்கிறார்கள்.

    நம் நெஞ்சமெல்லாம் நீக்கமற நிறைந்துள்ள நம் அன்புத்தலைவன் வாழ்ந்த நினைவு இல்ல திறப்பு விழாவில் நாடெங்கும் உள்ள எம்.ஜி.ஆர். பக்தர்கள், அபிமானிகள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும். இந்த நினைவு இல்லத்தை 26-ந் தேதி முதல் தினமும் பொதுமக்கள் பார்வையிட தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. நிகழ்ச்சி பற்றி விவரங்கள் அறிய 9884612307 எனும் எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.  #MGRHouse #SaidaiDuraisamy
    மற்றவர்களை குறை சொல்லியே எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் ஆட்சிக்கு வந்ததாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. #MGR #Jayalalithaa #DindigulSreenivasan
    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது:-

    கிராம மக்கள் வாழ்க்கையில் பொருளாதாரம் அடையவேண்டும் என்பதற்காக கறவை பசுக்கள் வழங்கப்பட்டு வருகின்றன. கறவை பசுக்கள் மட்டுமின்றி இலவச ஆடுகளும் வழங்கப்படுகின்றன.

    தமிழக பட்ஜெட்டில் கல்விக்கென ரூ.28 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    செம்பட்டியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி நாரயாணசாமிக்கு மாற்று உறுப்பு அறுவை சிகிச்சை செய்து கைகள் பொருத்தப்பட்டுள்ளது. அவருக்கு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் 58 வயது வரை அரசு வேலை வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்தியாவிலேயே சுகாதாரத் துறையில் தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளது.



    மற்றவர்களை குறை சொல்லியே ஆட்சிக்கு வந்தவர் எம்.ஜி.ஆர். அவரது வழியில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவும் ஆட்சி செய்தார்.

    இவ்வாறு பேசியதும் கூட்டத்தில் இருந்த தொண்டர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.

    அமைச்சர் சீனிவாசன் பேசும் கூட்டங்களில் எல்லாம் இதுபோன்ற சர்ச்சை பேச்சுகள் தொடர்ந்து வரும் நிலையில் ஒட்டன்சத்திரத்தில் நடந்த கூட்டத்திலும் சீனிவாசன் பேசிய பேச்சால் தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    அதனைத்தொடர்ந்து நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-

    துணை சபாநாயகர் தம்பிதுரை மத்திய பட்ஜெட்டை பற்றி விமர்சனம் செய்திருப்பது அவரது சொந்த கருத்து. அதைப்பற்றி அவரிடமே கேட்டுக்கொள்ளுங்கள். தினகரனுக்கு பட்ஜெட் என்றாலே என்ன என்று தெரியாது. அவர் தமிழக பட்ஜெட்டை குறைசொல்ல வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக பேசி வருகிறார்.

    தமிழகத்தில் உள்ள 80 ஆயிரம் கிராமத்தில் இதுவரை யாரும் பஸ் மறியலில் ஈடுபடவில்லை. தமிழக பட்ஜெட்டை பிரதமர் மோடியே பாராட்டி உள்ளார். தமிழக அரசியல் கட்சியினர் எங்கள் மீது காழ்ப்புணர்ச்சி காரணமாக குறை கூறி வருகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார். #MGR #Jayalalithaa #DindigulSreenivasan
    வாலியின் நாடகம் ஒன்றுக்குத் தலைமை தாங்கிய எம்.ஜி.ஆர்., "சென்னைக்கு வாருங்கள். உங்கள் தமிழ், திரை உலகுக்குத் தேவை'' என்று அழைப்பு விடுத்தார்.

    வாலியின் நாடகம் ஒன்றுக்குத் தலைமை தாங்கிய எம்.ஜி.ஆர்., "சென்னைக்கு வாருங்கள். உங்கள் தமிழ், திரை உலகுக்குத் தேவை'' என்று அழைப்பு விடுத்தார். ஓவியக் கல்லூரி படிப்பை ஓராண்டுடன் முடித்துக்கொண்ட வாலி,
    திருச்சியில் நாடகங்கள் எழுதி மேடை ஏற்றுவதில் முழு மூச்சுடன் ஈடுபட்டார்.

    ஸ்ரீரங்கம் உயர்நிலைப்பள்ளியில் இவர் நடத்திய "மிஸ்டர் சந்தோஷம்'' என்ற நாடகத்துக்கு, திரைப்பட நடிகரும், டைரக்டருமான ஜாவர் சீதாராமன் தலைமை தாங்கினார். நாடகத்தை அவர் வானளாவப் புகழ்ந்து பேசியதால், வாலி உற்சாகம் அடைந்தார்.

    நாடகங்கள் எழுதியதோடு, "கலைமகள்'', "குமுதம்'' முதலான பத்திரிகைகளில் கதைகளும் எழுதினார், வாலி.

    அந்தக் காலத்தில், வானொலியில் எழுத்தாளர்களின் சிறுகதைகளை படிக்கும் நிகழ்ச்சி இடம் பெற்றிருந்தது. வாலி எழுதி அனுப்பிய "வராளி வைகுண்டம்'' என்ற சிறுகதை, வானொலியால் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஒலிபரப்பப்பட்டது. அந்தக் கதை சிறப்பாக இருந்ததால், தொடர்ந்து கதைகள் எழுதும்படி வானொலி நிலையத்தில் உயர் அதிகாரியாகப் பணியாற்றிய எழுத்தாளரும், கவிஞருமான "துறைவன்'' உற்சாகப்படுத்தினார். அதனால், வாலி நிறைய கதைகளும், நாடகங்களும் வானொலிக்கு எழுதினார்.

    வானொலியின் பொங்கல் விழா சிறப்பு நிகழ்ச்சிக்கு பாடல் எழுதினார், வாலி. அந்தப் பாடலை டி.எம்.சவுந்தரராஜன் பாடினார். "நிலவுக்கு முன்னே...'' என்று தொடங்கும் அந்தப் பாடலை டி.எம்.எஸ். வெகுவாக ரசித்தார். "சென்னைக்கு வந்து, திரைப்படத் துறையில் நுழையுங்கள். கவிஞராகப் புகழ் பெறலாம்'' என்று வாலியிடம் கூறினார், டி.எம்.எஸ்.

    ரேடியோவில் நாடகங்கள் எழுதி வந்த அதே காலக்கட்டத்தில், மேடை நாடகங்களையும் வாலி தொடர்ந்து எழுதி வந்தார்.

    பிற்காலத்தில் எம்.ஜி.ஆரின் மந்திரிசபையில் அமைச்சராக பதவி வகித்த திருச்சி சவுந்தரராஜன், வாலியின் நாடகத்தில் நடித்தவர்.

    அம்பிகாபதி -அமராவதி காதலை வைத்து வாலி எழுதிய "கவிஞனின் காதலி'' என்ற நாடகத்தில் திருச்சி சவுந்தரராஜன் அம்பிகாபதியாகவும், புலியூர் சரோஜா அமராவதியாகவும், நடிகை சந்திரகாந்தாவின் சகோதரர் சண்முகசுந்தரம் கம்பராகவும் நடித்தனர்.

    வாலி ஸ்ரீரங்கத்தில் இருந்தபோது, இந்த நாடகம் சென்னையில் நடந்தது. திருச்சி சவுந்தரராஜனின் முயற்சியால், இந்த நாடகத்துக்கு எம்.ஜி.ஆர். தலைமை தாங்கினார். மூன்று மணி நேரமும் அமர்ந்து நாடகத்தை பார்த்தார்.

    முடிவில், நாடகத்தைப் பாராட்டி எம்.ஜி.ஆர். பேசும்போது, வாலியை வெகுவாக புகழ்ந்தார். "நாடகத்தை எழுதிய வாலி, ஸ்ரீரங்கத்தில் இருக்கிறாராம். அவர் எப்போது சென்னைக்கு வந்தாலும் என்னைப் பார்க்கலாம். அவருடைய தமிழ், சினிமாவுக்குத் தேவை'' என்று குறிப்பிட்டார்.

    திருச்சியில் "கோமதிராணி பிக்சர்ஸ்'' என்ற சினிமா கம்பெனியை ராஜ்குமார் என்பவர் தொடங்கி, வாலியின் நாடகம் ஒன்றை படமாக்கும் முயற்சியில் இறங்கினார். அது வெற்றி பெறவில்லை.

    ராஜ்குமார் மூலமாக வாலிக்கு எம்.ஏ.ராஜாராம் என்ற திரைப்பட இயக்குனர் அறிமுகமானார். அவர் அவ்வப்போது சென்னையில் இருந்து வாலிக்கு 10 ரூபாய் மணியார்டர் அனுப்புவார். ஸ்ரீரங்கத்தில் வசித்து வந்த வாலி, சென்னைக்கு ரெயிலில் சென்று, ராஜாராம் தயாரிக்கத் திட்டமிட்டிருந்த படத்துக்கு வசனம் எழுதிக் கொடுத்து விட்டு வருவார்.

    அப்போது (1956) சில பாடல்களையும் வாலி எழுதினார். அவற்றை சி.என்.பாண்டுரங்கன் இசை அமைப்பில் ஏ.எம்.ராஜா, சீர்காழி கோவிந்தராஜன், சூரமங்கலம் ராஜலட்சுமி ஆகியோர் பாட, ரேவதி ஸ்டூடியோவில் ஒலிப்பதிவு செய்யப்பட்டன.

    (ராஜாராம் படம் எடுக்க இயலாததால், இந்தப்பாடல்கள் அப்போது பயன்படுத்தப்படவில்லை. எனினும், பிற்காலத்தில் அவர் தயாரித்த "புரட்சி வீரன் புலித்தேவன்'' என்ற படத்தில் பயன்படுத்திக்கொண்டார்.)

    1956-ம் ஆண்டு தீபாவளிக்கு மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பான "பாசவலை'' படம் வெளியாயிற்று.

    அந்தப் படத்தில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய "குட்டி ஆடு தப்பி வந்தா குள்ள நரிக்கு சொந்தம்; குள்ள நரி தப்பி வந்தா குறவனுக்கு சொந்தம்; தட்டுக்கெட்ட மனிதர் கண்ணில் பட்டதெல்லாம் சொந்தம்; சட்டப்படி பார்க்கப்போனா எட்டடிதான் சொந்தம்'' என்ற பாடலில், மனதைப் பறிகொடுத்தார், வாலி.

    அதுபற்றி அவர் எழுதியிருப்பதாவது:-

    "குணங்குடி மஸ்தானும், சித்தர் பெருமக்களும் யாத்தளித்துள்ள எத்தனையோ தத்துவப் பாடல்களை, அடியேன் அந்த நாளிலேயே அறிவேன். ஆயினும், பாசவலை படப்பாட்டில், பாமரனுக்கும் புரியுமாறு போதிக்கப்பட்டிருந்த தத்துவ வரிகள் இருக்கின்றனவே, அவை ஒரு ஞானக்கோவையை சாறு பிழிந்தெடுத்து, வெள்ளித்திரை மூலம் ஊருக்கெல்லாம் விநியோகித்தது போலிருந்தது.

    இந்தப் பாடல்களை எழுதியிருந்தவர் பட்டுக்கோட்டை. அடேயப்பா! சவுக்கெடுத்து சொடுக்கி விட்டது போல என்ன சொல் வீச்சு? அசந்து போனேன். அன்றைய படவுலகுக்குப் புதிய வரவான பட்டுக்கோட்டையின் மேல், என்னையும் அறியாமலே காதலாகி கசிந்துருகிப்போனேன்.

    பாசவலை படத்தை, பத்து தடவை பார்த்தேன்; பாடல்களுக்காகத்தான்!

    பட்டுக்கோட்டையின் பாடல், என்னுள் பூசிக் கிடந்த சிறுகதை எழுதும் ஆசை, ஓவியம் வரையும் ஆசை, நாடகம் எழுதும் ஆசை அனைத்தையும் ஒருசேர ஒரே நாளில் கழுவி விட்டது.

    பாடல்கள் எழுத வேண்டும், அதுவும் படப்பாடல்களை எழுத வேண்டும், இந்த முயற்சியையே ஒரு தவமாகப் பழகி, இதில் காரியசித்தி பெற வேண்டும் என்னும் புதியதோர் வேட்கை வேர்விட்டது.''

    இவ்வாறு வாலி எழுதியுள்ளார்.

    "பாசவலை'' படத்தில் எம்.கே.ராதா, ஜி.வரலட்சுமி, எம்.என்.ராஜம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தாலும், இளம் கதாநாயகனாக நடித்தவர் வி.கோபாலகிருஷ்ணன்.

    அவர் நடிப்பு வாலிக்கு மிகவும் பிடித்திருந்தது. அவரை பாராட்டி கடிதம் எழுதினார். அதற்கு கோபாலகிருஷ்ணன் பதில் எழுதினார்.

    கடிதப் போக்குவரத்து, அவர்கள் இடையே நட்புறவை வளர்த்தது. இந்த நட்புறவு, வாலியின் திரை உலகப் பிரவேசத்துக்கு வழி வகுத்தது.
    முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் பிறந்த தினத்தை முன்னிட்டு, அவரது உருவம் பொறித்த சிறப்பு நாணயத்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். #MGR #MGRCommemorativeCoin
    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் பிறந்த தினம் இன்று மாநிலம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அனைத்து பகுதிகளிலும் எம்ஜிஆர் உருவச்சிலைகளுக்கு மாலைகள் அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்படுகின்றன. இதுதவிர அதிமுக கிளைக் கழகங்கள் சார்பில் அனைத்து பகுதிகளிலும் எம்ஜிஆர் உருவப்படங்கள் அலங்கரித்து வைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்படுகின்றன.



    சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக  தலைமை அலுவலகத்தில், எம்ஜிஆர்  சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார்.

    அதன்பின்னர் தமிழக அரசின் சார்பில், எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள, எம்ஜிஆர் சிலைக்கு கீழ், அலங்கரித்து வைக்கப்பட்ட உருவப்படத்திற்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

    பின்னர், அங்கு நடந்த விழாவில், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நினைவாக, அவரது உருவம் பொறித்த சிறப்பு நாணயத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வெளியிட்டனர். #MGR #MGRCommemorativeCoin

    ×