search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cine history"

    வாலியின் நாடகம் ஒன்றுக்குத் தலைமை தாங்கிய எம்.ஜி.ஆர்., "சென்னைக்கு வாருங்கள். உங்கள் தமிழ், திரை உலகுக்குத் தேவை'' என்று அழைப்பு விடுத்தார்.

    வாலியின் நாடகம் ஒன்றுக்குத் தலைமை தாங்கிய எம்.ஜி.ஆர்., "சென்னைக்கு வாருங்கள். உங்கள் தமிழ், திரை உலகுக்குத் தேவை'' என்று அழைப்பு விடுத்தார். ஓவியக் கல்லூரி படிப்பை ஓராண்டுடன் முடித்துக்கொண்ட வாலி,
    திருச்சியில் நாடகங்கள் எழுதி மேடை ஏற்றுவதில் முழு மூச்சுடன் ஈடுபட்டார்.

    ஸ்ரீரங்கம் உயர்நிலைப்பள்ளியில் இவர் நடத்திய "மிஸ்டர் சந்தோஷம்'' என்ற நாடகத்துக்கு, திரைப்பட நடிகரும், டைரக்டருமான ஜாவர் சீதாராமன் தலைமை தாங்கினார். நாடகத்தை அவர் வானளாவப் புகழ்ந்து பேசியதால், வாலி உற்சாகம் அடைந்தார்.

    நாடகங்கள் எழுதியதோடு, "கலைமகள்'', "குமுதம்'' முதலான பத்திரிகைகளில் கதைகளும் எழுதினார், வாலி.

    அந்தக் காலத்தில், வானொலியில் எழுத்தாளர்களின் சிறுகதைகளை படிக்கும் நிகழ்ச்சி இடம் பெற்றிருந்தது. வாலி எழுதி அனுப்பிய "வராளி வைகுண்டம்'' என்ற சிறுகதை, வானொலியால் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஒலிபரப்பப்பட்டது. அந்தக் கதை சிறப்பாக இருந்ததால், தொடர்ந்து கதைகள் எழுதும்படி வானொலி நிலையத்தில் உயர் அதிகாரியாகப் பணியாற்றிய எழுத்தாளரும், கவிஞருமான "துறைவன்'' உற்சாகப்படுத்தினார். அதனால், வாலி நிறைய கதைகளும், நாடகங்களும் வானொலிக்கு எழுதினார்.

    வானொலியின் பொங்கல் விழா சிறப்பு நிகழ்ச்சிக்கு பாடல் எழுதினார், வாலி. அந்தப் பாடலை டி.எம்.சவுந்தரராஜன் பாடினார். "நிலவுக்கு முன்னே...'' என்று தொடங்கும் அந்தப் பாடலை டி.எம்.எஸ். வெகுவாக ரசித்தார். "சென்னைக்கு வந்து, திரைப்படத் துறையில் நுழையுங்கள். கவிஞராகப் புகழ் பெறலாம்'' என்று வாலியிடம் கூறினார், டி.எம்.எஸ்.

    ரேடியோவில் நாடகங்கள் எழுதி வந்த அதே காலக்கட்டத்தில், மேடை நாடகங்களையும் வாலி தொடர்ந்து எழுதி வந்தார்.

    பிற்காலத்தில் எம்.ஜி.ஆரின் மந்திரிசபையில் அமைச்சராக பதவி வகித்த திருச்சி சவுந்தரராஜன், வாலியின் நாடகத்தில் நடித்தவர்.

    அம்பிகாபதி -அமராவதி காதலை வைத்து வாலி எழுதிய "கவிஞனின் காதலி'' என்ற நாடகத்தில் திருச்சி சவுந்தரராஜன் அம்பிகாபதியாகவும், புலியூர் சரோஜா அமராவதியாகவும், நடிகை சந்திரகாந்தாவின் சகோதரர் சண்முகசுந்தரம் கம்பராகவும் நடித்தனர்.

    வாலி ஸ்ரீரங்கத்தில் இருந்தபோது, இந்த நாடகம் சென்னையில் நடந்தது. திருச்சி சவுந்தரராஜனின் முயற்சியால், இந்த நாடகத்துக்கு எம்.ஜி.ஆர். தலைமை தாங்கினார். மூன்று மணி நேரமும் அமர்ந்து நாடகத்தை பார்த்தார்.

    முடிவில், நாடகத்தைப் பாராட்டி எம்.ஜி.ஆர். பேசும்போது, வாலியை வெகுவாக புகழ்ந்தார். "நாடகத்தை எழுதிய வாலி, ஸ்ரீரங்கத்தில் இருக்கிறாராம். அவர் எப்போது சென்னைக்கு வந்தாலும் என்னைப் பார்க்கலாம். அவருடைய தமிழ், சினிமாவுக்குத் தேவை'' என்று குறிப்பிட்டார்.

    திருச்சியில் "கோமதிராணி பிக்சர்ஸ்'' என்ற சினிமா கம்பெனியை ராஜ்குமார் என்பவர் தொடங்கி, வாலியின் நாடகம் ஒன்றை படமாக்கும் முயற்சியில் இறங்கினார். அது வெற்றி பெறவில்லை.

    ராஜ்குமார் மூலமாக வாலிக்கு எம்.ஏ.ராஜாராம் என்ற திரைப்பட இயக்குனர் அறிமுகமானார். அவர் அவ்வப்போது சென்னையில் இருந்து வாலிக்கு 10 ரூபாய் மணியார்டர் அனுப்புவார். ஸ்ரீரங்கத்தில் வசித்து வந்த வாலி, சென்னைக்கு ரெயிலில் சென்று, ராஜாராம் தயாரிக்கத் திட்டமிட்டிருந்த படத்துக்கு வசனம் எழுதிக் கொடுத்து விட்டு வருவார்.

    அப்போது (1956) சில பாடல்களையும் வாலி எழுதினார். அவற்றை சி.என்.பாண்டுரங்கன் இசை அமைப்பில் ஏ.எம்.ராஜா, சீர்காழி கோவிந்தராஜன், சூரமங்கலம் ராஜலட்சுமி ஆகியோர் பாட, ரேவதி ஸ்டூடியோவில் ஒலிப்பதிவு செய்யப்பட்டன.

    (ராஜாராம் படம் எடுக்க இயலாததால், இந்தப்பாடல்கள் அப்போது பயன்படுத்தப்படவில்லை. எனினும், பிற்காலத்தில் அவர் தயாரித்த "புரட்சி வீரன் புலித்தேவன்'' என்ற படத்தில் பயன்படுத்திக்கொண்டார்.)

    1956-ம் ஆண்டு தீபாவளிக்கு மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பான "பாசவலை'' படம் வெளியாயிற்று.

    அந்தப் படத்தில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய "குட்டி ஆடு தப்பி வந்தா குள்ள நரிக்கு சொந்தம்; குள்ள நரி தப்பி வந்தா குறவனுக்கு சொந்தம்; தட்டுக்கெட்ட மனிதர் கண்ணில் பட்டதெல்லாம் சொந்தம்; சட்டப்படி பார்க்கப்போனா எட்டடிதான் சொந்தம்'' என்ற பாடலில், மனதைப் பறிகொடுத்தார், வாலி.

    அதுபற்றி அவர் எழுதியிருப்பதாவது:-

    "குணங்குடி மஸ்தானும், சித்தர் பெருமக்களும் யாத்தளித்துள்ள எத்தனையோ தத்துவப் பாடல்களை, அடியேன் அந்த நாளிலேயே அறிவேன். ஆயினும், பாசவலை படப்பாட்டில், பாமரனுக்கும் புரியுமாறு போதிக்கப்பட்டிருந்த தத்துவ வரிகள் இருக்கின்றனவே, அவை ஒரு ஞானக்கோவையை சாறு பிழிந்தெடுத்து, வெள்ளித்திரை மூலம் ஊருக்கெல்லாம் விநியோகித்தது போலிருந்தது.

    இந்தப் பாடல்களை எழுதியிருந்தவர் பட்டுக்கோட்டை. அடேயப்பா! சவுக்கெடுத்து சொடுக்கி விட்டது போல என்ன சொல் வீச்சு? அசந்து போனேன். அன்றைய படவுலகுக்குப் புதிய வரவான பட்டுக்கோட்டையின் மேல், என்னையும் அறியாமலே காதலாகி கசிந்துருகிப்போனேன்.

    பாசவலை படத்தை, பத்து தடவை பார்த்தேன்; பாடல்களுக்காகத்தான்!

    பட்டுக்கோட்டையின் பாடல், என்னுள் பூசிக் கிடந்த சிறுகதை எழுதும் ஆசை, ஓவியம் வரையும் ஆசை, நாடகம் எழுதும் ஆசை அனைத்தையும் ஒருசேர ஒரே நாளில் கழுவி விட்டது.

    பாடல்கள் எழுத வேண்டும், அதுவும் படப்பாடல்களை எழுத வேண்டும், இந்த முயற்சியையே ஒரு தவமாகப் பழகி, இதில் காரியசித்தி பெற வேண்டும் என்னும் புதியதோர் வேட்கை வேர்விட்டது.''

    இவ்வாறு வாலி எழுதியுள்ளார்.

    "பாசவலை'' படத்தில் எம்.கே.ராதா, ஜி.வரலட்சுமி, எம்.என்.ராஜம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தாலும், இளம் கதாநாயகனாக நடித்தவர் வி.கோபாலகிருஷ்ணன்.

    அவர் நடிப்பு வாலிக்கு மிகவும் பிடித்திருந்தது. அவரை பாராட்டி கடிதம் எழுதினார். அதற்கு கோபாலகிருஷ்ணன் பதில் எழுதினார்.

    கடிதப் போக்குவரத்து, அவர்கள் இடையே நட்புறவை வளர்த்தது. இந்த நட்புறவு, வாலியின் திரை உலகப் பிரவேசத்துக்கு வழி வகுத்தது.
    எம்.ஜி.ஆரின் "உலகம் சுற்றும் வாலிபன்" படம் மகத்தான வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து, வெளிநாட்டு ரசிகர்களை சந்திக்க எம்.ஜி.ஆருடன் பல நாடுகளில் லதா சுற்றுப்பயணம் செய்தார்.

    எம்.ஜி.ஆரின் "உலகம் சுற்றும் வாலிபன்" படம் மகத்தான வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து, வெளிநாட்டு ரசிகர்களை சந்திக்க எம்.ஜி.ஆருடன் பல நாடுகளில் லதா சுற்றுப்பயணம் செய்தார்.

    "உலகம் சுற்றும் வாலிபன்" படப்பிடிப்புக்காக சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான் போன்ற நாடுகளுக்குச் சென்ற லதா, அங்கே பள்ளி மாணவிக்கே உரிய மனநிலையில் அந்த இயற்கை சூழ்நிலையை அனுபவித்தார்.

    ஒருமுறை, இஷ்டத்துக்கு ஐஸ்கிரீம் சாப்பிட்டுவிட்டு எம்.ஜி.ஆரிடம் மாட்டிக்கொண்டார்.

    அந்த அனுபவம் பற்றி லதா கூறியதாவது:-

    "ஒருநாள் படப்பிடிப்பு முடிந்து வந்ததும் ரூமில் நானும், மஞ்சுளாவும் அரட்டையடித்துக் கொண்டிருந்தோம். அப்போது 'ஐஸ்கிரீம்' சாப்பிடலாமா என்று கேட்டார், மஞ்சுளா. எனக்கும் ஐஸ்கிரீம் என்றால் கொள்ளை ஆசை. எனவே, "சாப்பிடலாமே" என்றேன்.

    உடனே ரூமில் இருந்த இன்டர்காமில் ஐஸ்கிரீம் ஆர்டர் கொடுத்தேன். நான் கேட்ட 'வெண்ணிலா' ஐஸ்கிரீம் கிடைத்தது. நானும், மஞ்சுளாவும் சேர்ந்து இஷ்டத்துக்கு ஐஸ்கிரீமை வெட்டினோம்.

    இரண்டாவது நாளும் படப்பிடிப்பு முடிந்து வந்ததும், இதே கதைதான். இப்போது ஆர்டர் கொடுத்த ஐஸ்கிரீம், அறைக்கு வந்து சேர்ந்ததும், ஆர்வத்துடன் சாப்பிடத் தொடங்கினோம்.

    அப்போது பார்த்து கதவு 'தட் தட்' என தட்டப்பட்டது. திறந்து யாரென்று பார்த்தால், வெளியே எம்.ஜி.ஆர். நின்று கொண்டிருக்கிறார்!

    எனக்கு அதிர்ச்சி. எம்.ஜி.ஆரை பார்த்ததும் பயந்துபோன மஞ்சுளா, அந்த பதட்டத்திலும் ஐஸ்கிரீமை மறைத்து வைத்து விட்டார்.

    உள்ளே வந்த எம்.ஜி.ஆர், "ஐஸ்கிரீம்னா ரொம்ப பிடிக்கும் போலிருக்கிறதே" என்று சொல்லி எங்கள் இருவர் முகத்தையும் பார்த்தார். நாங்கள் எதுவுமே நடக்காததுபோல் முகத்தை அப்பாவித்தனமாக வைத்துக்கொண்டிருந்தோம்.

    நாங்கள் ஆர்டர் கொடுத்து, ஐஸ்கிரீம் வரவழைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்ததை தெரிந்து கொண்டுதான் அவர் எங்கள் அறைக்கு வந்திருக்கிறார்.

    அருகில் இருந்த நாற்காலியை இழுத்து போட்டுக்கொண்டு உட்கார்ந்தார், எம்.ஜி.ஆர். என்னை அருகில் அழைத்தார். "என்ன லூசு! நீங்க ரூம்ல இருந்து ஏதாவது வேணும்னு ஆர்டர் கொடுத்தால், அதுக்கான பில் எங்ககிட்ட தானே வரும். எனக்கும் ஐஸ்கிரீம் அதுவும் வெண்ணிலா ஐஸ்கிரீம்னா ரொம்பப் பிடிக்கும். சரி சரி! ஒளிச்சு வெச்சிருக்கிறதை எடுங்க! சேர்ந்து சாப்பிடலாம்" என்றபோது எங்கள் முகத்தில் ஈயாடவில்லை.

    இப்படி ஐஸ்கிரீம் சாப்பிடுவதில் எங்கள் குழந்தை மனதை தெரிந்து கொண்டவர், அவரும் குழந்தை மாதிரி எங்களுடன் ஐஸ்கிரீம் சாப்பிட்டதை இப்போது நினைத்தாலும் மனசுக்குள் 'ஜில்'லென்ற அனுபவமாக இருக்கிறது."

    இவ்வாறு லதா கூறினார்.

    உலகம் சுற்றும் வாலிபன் படத்துக்காக வெளிநாட்டில் முதலில் எடுத்தது 'சிரித்து வாழவேண்டும். பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே' பாட்டுதான். இந்தப் பாடல் காட்சியில் எம்.ஜி.ஆர், நாகேஷ், வெளிநாட்டு குழந்தைகளுடன் லதாவும் ஆடிப்பாடி நடித்தார்.

    இந்தப் பாடல் காட்சியின்போது ஏற்பட்ட அனுபவம் குறித்து லதா கூறியதாவது:-

    "நடிகர் நாகேஷ் திறமையான நடிகர். ரசிகர்களை சிரிக்க வைப்பார் என்பது தெரியும். ஆனால், நகைச்சுவை என்பது எப்போதும் அவரிடம் குடிகொண்டிருக்கிறது என்பதை அவருடன் பங்குகொண்ட அந்த படப்பிடிப்பின்போதுதான் அனுபவரீதியாக உணர்ந்து கொண்டேன். திடீர் திடீரென அவர் அடிக்கிற கமெண்டுகளுக்கு எப்பேர்ப்பட்டவராக இருந்தாலும் சிரிக்காமல் இருக்க முடியாது.

    எம்.ஜி.ஆர் - நான் - நாகேஷ் இருக்கிற நேரங்களில் இப்படி நாகேஷ் அடிக்கிற ஜோக்குகளுக்கு நான் சத்தம் போட்டு சிரித்து விடுவேன். இரண்டொரு முறை இதை கண்டு கொள்ளாமல் விட்ட எம்.ஜி.ஆர், அடுத்த முறை நான் சிரித்தபோது, "என்ன நீ! வயசுப்பொண்ணு இப்படியா சத்தமா 'கெக்கேபிக்கே'ன்னு சிரிக்கிறது?" என்று கேட்டார். கேள்வியில் கொஞ்சம் கோபம் இருந்தது. அப்புறம் நான் ஏன் வாயை திறக்கப்போகிறேன்?

    "உலகம் சுற்றும் வாலிபன்" படம் ரிலீஸ் ஆகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. அத்துடன் அந்தப்படம் வெளிநாடுகளிலும் ரிலீசாகி வெற்றி பெற்றதை அறிந்தேன்.

    ஒருநாள் எம்.ஜி.ஆர். என்னிடம் "வெளிநாட்டு ரசிகர்களை சந்திக்க வேண்டும். எனவே தயாராக இரு" என்றார்.

    வெளிநாடுகளில் எடுக்கப்பட்ட ஒரு படத்தின் வெற்றிக்காக மறுபடியும் வெளிநாடு போகும் வாய்ப்பு என்பது எனக்கு எதிர்பாராதவிதமாக கிடைத்தது. பாரீஸ், லண்டன், சுவிட்சர்லாந்து, ரஷியா என இந்த வெற்றிப்பயணம் தொடர்ந்தது. ரசிகர்களிடம் எம்.ஜி.ஆர். எத்தனை அன்பு கொண்டவர் என்பதை இந்தப் பயணத்தில் கண்கூடாக உணர முடிந்தது.

    இந்தப் பயணத்தில் நான் பட்ட ஒரே சிரமம், சாப்பாட்டு கஷ்டம்தான். அதுவும் ரஷியாவில் சாப்பாடு காரமோ காரம். இங்குள்ள 'ஆந்திர உணவு'தான் நமக்கு காரமாக தெரியும். ஆனால் ரஷிய உணவை சாப்பிட்டுப் பார்த்தவர்கள் ஆந்திர உணவை 'காரம்' என்று சொல்லவேமாட்டார்கள். அந்த அளவுக்கு காரமானது ரஷிய உணவு.

    இந்த சாப்பாட்டு விஷயத்தில் 2 நாள் சமாளித்துப் பார்த்தேன். பிறகு முடியவில்லை.

    ஒரு கட்டத்தில் எம்.ஜி.ஆரிடம் சண்டைக்கே போய்விட்டேன். "போதும்! இனியும் என்னால் தாக்குப்பிடிக்க முடியாது. என்னை ஊருக்கு அனுப்பி வெச்சிருங்க" என்று அழாத குறையாக முறையிட்டேன். என் உணர்வுகளை புரிந்து கொண்ட எம்.ஜி.ஆர், "நீ வெளியே சொல்கிறாய். என்னால் இந்த கஷ்டத்தை வெளியே சொல்ல முடியவில்லை. எனக்காக கொஞ்சம் பொறுமையாக இரு" என்று என்னை ஆறுதல்படுத்தினார்.

    ஒரு வழியாக லண்டனுக்கு வந்து சேர்ந்தோம். அங்கிருந்த இந்திய உணவகத்துக்கு அழைத்துப்போன எம்.ஜி.ஆர், "இப்போது உன் சாப்பாட்டுக் கவலை தீர்ந்தது. உன் இஷ்டத்துக்கு எது வேண்டுமானாலும் சாப்பிடு" என்றார். அவரும் இந்திய உணவு வகைகளை விரும்பி சாப்பிட்டார்.

    சுவிட்சர்லாந்து சுற்றுப்பயணத்தின் போதுதான் 'தாய்மை'க் குணம் கொண்ட எம்.ஜி.ஆரை பார்த்தேன். அங்கிருந்த பனிமலையை சுற்றிப் பார்க்க எம்.ஜி.ஆருடன் செருப்பு அணிந்தபடி கிளம்பினேன். போன பிறகுதான் 'ஷூ' இல்லாமல் நடக்க முடியாது என்று தெரிந்தது. பனிமலை பயணத்தில் குளிர் தாக்கி நடுங்கவும் ஆரம்பித்து விட்டேன். உடனே அவர் போட்டிருந்த கோட்டை கழற்றி என்னை போட்டுக்கொள்ளச் சொன்னார்.

    இப்படி பாதி தூரம் கடந்த நிலையில், 'இனி என்னால் நடக்க முடியாது' என்றேன். என் நிலையை புரிந்து கொண்டவர், என்னை அலாக்காக தூக்கியபடி நடந்து, பாதுகாப்பான இடம் வந்ததும் இறக்கி விட்டார். அவர் மட்டும் அன்றைக்கு இப்படி செய்திராவிட்டால், அந்த குளிரிலேயே விரைத்துப் போயிருப்பேன்."

    இவ்வாறு லதா கூறினார்.
    "உலகம் சுற்றும் வாலிபன்" படப்பிடிப்புக்காக, எம்.ஜி.ஆருடன் லதா, மஞ்சுளா, சந்திரகலா ஆகியோர் ஜப்பான் பயணம் ஆனார்கள்.

    அப்போது ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து லதா கூறியதாவது:-

    "நடனம், நடிப்பு என்று 4 மாத கால பயிற்சிக்குப் பிறகு ஜப்பானுக்கு 'உலகம் சுற்றும் வாலிபன்' படத்திற்கு எம்.ஜி.ஆர். எங்களை அழைத்துச் செல்வதாக இருந்தார்.

    பயணத்துக்கு சில நாட்கள் இருந்த நிலையில், திடீரென ஒரு நாள் நடிகர் அசோகனின் படத்தில் நான் நடிக்க வேண்டியிருக்கும் என்றார்கள்.

    எனக்கு குழப்பம். ஒரு படத்தை முடித்த பிறகுதான் அடுத்த படத்தை தொடங்குவார்கள் என்று அதுவரை எண்ணிக் கொண்டிருந்தேன். அதனால், உலகம் சுற்றும் வாலிபன் படத்தை முடித்த பிறகுதான் அடுத்த படம் பற்றி பேசுவார்கள் என்று நினைத்த நேரத்தில், நடிகர் அசோகன் "நேற்று இன்று நாளை" என்றொரு படம் தயாரிக்கிறார். அதில் எம்.ஜி.ஆருடன் நானும் மஞ்சுளாவும் கதாநாயகிகளாக நடிக்கிறோம் என்றார்கள்.

    இதுபற்றி அரசல்புரசலாக கேள்விப்பட்டிருந்த ஒருநாளில் திடீரென "நாளையே படப்பிடிப்பு" என்றார்கள். அதுவும் பாடல் காட்சி படப்பிடிப்பு என்றார்கள்.

    மறுநாள் கார் வந்து அழைத்துப் போனது. சத்யா ஸ்டூடியோவில் இறங்கியபோது அங்கே பிரமாண்ட செட் போட்டிருந்தார்கள். எம்.ஜி.ஆர். மேக்கப்பில் தயாராக இருந்தார். டைரக்டர் ப.நீலகண்டன் என்னைப் பார்த்ததும், "இப்போது ஒரு பாடல் காட்சி எடுக்கப்போகிறோம். நீயும் எம்.ஜி.ஆரும் பாடி நடிக்கிறீர்கள்" என்றார்.

    ஏற்கனவே, நடனப்பயிற்சி இருந்ததால், டான்ஸ் மாஸ்டர் சொல்லிக் கொடுத்த 'மூவ்மெண்ட்'களை சுலபத்தில் கற்றுக்கொண்டேன். அதன் பிறகு 'ரோமியோ ஜுலியட்' என்ற அந்தப் பாடலுக்கான படப்பிடிப்பு நடந்தது. 'ரோமியோ ஜுலியட்' என்ற வசன வரிகளைத் தொடர்ந்து 'இன்னொரு வானம் இன்னொரு நிலவு' என அந்தப் பாடல் தொடங்கும்.

    குறித்த நேரத்தில் பாடல் காட்சி முடிந்ததும், ஜப்பான் போகும் தேதி உறுதியாகிவிட்ட தகவலை தெரிவித்தார்கள்.

    நாளைக்கு புறப்பட இருந்த நேரத்தில் ஒருநாள் முன்னதாக அம்மாவையும் என்னையும் கம்பெனிக்கு வரச்சொன்னார் எம்.ஜிஆர். நாங்கள் போய் அவரைச் சந்தித்தபோது, அம்மாவிடம், "உங்கள் மகள் என் படத்தில் நடிப்பது தொடர்பாக 5 வருடம் காண்டிராக்ட் போட்டுக்கொள்வோம்" என்றார்.

    அம்மா இந்த மாதிரியான விஷயத்தை எதிர்பார்க்கவில்லை என்பது அவரது விழிகளில் தெரிந்தது. சட்டென அதை புரிந்து கொண்ட எம்.ஜி.ஆர், "நான் ஒரு புது ஹீரோயினை என் செலவில் கஷ்டப்பட்டு உருவாக்குவேன். ஒரு படத்தில் நடித்ததும் கிடைத்த பெயருக்கு, அடுத்தடுத்து பல படங்களில் நடிக்க அழைப்பு வரும். நடிகைகளும் உடனே நடிக்கப் போய்விடுகிறார்கள். கடைசியில் பெரிய ஹீரோயின் ஆக்கிய எனக்கே கால்ஷீட் கிடைக்காது. இது எனக்கு தேவையா?"

    இப்படிச் சொன்னவர், மிகவும் கனிந்த குரலில், "ஒருவரின் வளர்ச்சி என்பது என் மூலமாகவே இருந்தாலும், அவர்களின் அடுத்தடுத்த வளர்ச்சிக்கு நான் ஒருபோதும் தடையாக இருக்க மாட்டேன். இந்த காண்டிராக்டு என்பது, ஒரு பாதுகாப்புக்காகத்தான். என் படங்கள் தவிர மற்ற படங்களில் வாய்ப்பு வந்தால், என்னிடம் ஒரு வார்த்தை சொல்லி விட்டு நடியுங்கள். நான் தடுக்கப் போவதில்லை" என்றார்.

    அதன் பிறகு சந்தோஷமாக அந்த காண்டிராக்ட்டில் கையெழுத்து போட்டார், அம்மா.

    உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் நான், மஞ்சுளா, சந்திரகலா என 3 நாயகிகள். மூவருமே ஒன்றாகத்தான் ஜப்பானுக்கு பயணம் ஆனோம்.

    பார்த்த மாத்திரத்திலேயே மஞ்சுளா படபடவென பேசி என்னை கவர்ந்து விட்டார். சந்திரகலா அமைதியாக தெரிந்தார். ஓரளவு பழகிய பிறகு தொடர்ந்து நட்பு பாராட்டினார். விமானப் பயணத்துக்கு முன்பே நாங்கள் மூவரும் நல்ல தோழிகளாகி விட்டோம்.

    விமானப் பயணத்தின்போது என்னை வழியனுப்ப வந்த அம்மாவை தன் அருகில் அழைத்த எம்.ஜி.ஆர், "கவலைப்படாதீங்கம்மா. உங்க பொண்ணை எப்படி கூட்டிட்டுப் போறேனோ அப்படியே திரும்ப உங்களிடம் ஒப்படைப்பேன்" என்றார். அம்மாவுக்கு கண்கள் கலங்கிவிட்டன. எம்.ஜி.ஆருடன் அவரது மனைவி ஜானகியம்மாவும் வந்திருந்தார். "உங்க குழந்தையை நான் பார்த்துக்கறேன்" என்று அவரும் அம்மாவிடம் சொன்னார்.

    வெளிநாட்டில் நாங்கள் போனது படப்பிடிப்புக்காக என்பதை மறந்து விட்டோம். பள்ளி நாட்களில், கல்லூரிக் காலத்தில் 'சுற்றுலா' வருபவர்கள் எப்படி ஜாலியாக அதைக் கொண்டாடுவார்களோ அந்த நிலையில்தான் நான், மஞ்சுளா, சந்திரகலா மூவருமே இருந்தோம்.படப்பிடிப்பு நேரம் தவிர மற்ற நேரங்களில் சதா ஜாலிதான். மஞ்சுளா எப்போதும் ஏதாவது பேசிக்கொண்டேயிருப்பார். நான் அமைதி என்றால் அமைதி... அப்படி ஓர் அமைதியாக இருப்பேன்.

    சந்திரகலா எங்கள் இருவருக்கும் அப்பாற்பட்டு 'மெச்சூர்டாக' இருப்பார்.படப்பிடிப்பினூடே ஒருமுறை எங்கள் இருவரையும் பார்த்த எம்.ஜி.ஆர், "ஒண்ணு (நான்) பேசவே மாட்டேங்குது. ஒண்ணு (மஞ்சுளா) பேச்சை நிறுத்த மாட்டேங்குது" என்று கிண்டலாக சொல்லிவிட்டுப் போனார். அதற்குப்பிறகு நான் கொஞ்சம் பேச ஆரம்பித்தேன்."

    இவ்வாறு லதா கூறினார்.
    ×