என் மலர்

  சினிமா

  எம்.ஜி.ஆர். பாராட்டிய வாலியின் நாடகம்
  X

  எம்.ஜி.ஆர். பாராட்டிய வாலியின் நாடகம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வாலியின் நாடகம் ஒன்றுக்குத் தலைமை தாங்கிய எம்.ஜி.ஆர்., "சென்னைக்கு வாருங்கள். உங்கள் தமிழ், திரை உலகுக்குத் தேவை'' என்று அழைப்பு விடுத்தார்.

  வாலியின் நாடகம் ஒன்றுக்குத் தலைமை தாங்கிய எம்.ஜி.ஆர்., "சென்னைக்கு வாருங்கள். உங்கள் தமிழ், திரை உலகுக்குத் தேவை'' என்று அழைப்பு விடுத்தார். ஓவியக் கல்லூரி படிப்பை ஓராண்டுடன் முடித்துக்கொண்ட வாலி,
  திருச்சியில் நாடகங்கள் எழுதி மேடை ஏற்றுவதில் முழு மூச்சுடன் ஈடுபட்டார்.

  ஸ்ரீரங்கம் உயர்நிலைப்பள்ளியில் இவர் நடத்திய "மிஸ்டர் சந்தோஷம்'' என்ற நாடகத்துக்கு, திரைப்பட நடிகரும், டைரக்டருமான ஜாவர் சீதாராமன் தலைமை தாங்கினார். நாடகத்தை அவர் வானளாவப் புகழ்ந்து பேசியதால், வாலி உற்சாகம் அடைந்தார்.

  நாடகங்கள் எழுதியதோடு, "கலைமகள்'', "குமுதம்'' முதலான பத்திரிகைகளில் கதைகளும் எழுதினார், வாலி.

  அந்தக் காலத்தில், வானொலியில் எழுத்தாளர்களின் சிறுகதைகளை படிக்கும் நிகழ்ச்சி இடம் பெற்றிருந்தது. வாலி எழுதி அனுப்பிய "வராளி வைகுண்டம்'' என்ற சிறுகதை, வானொலியால் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஒலிபரப்பப்பட்டது. அந்தக் கதை சிறப்பாக இருந்ததால், தொடர்ந்து கதைகள் எழுதும்படி வானொலி நிலையத்தில் உயர் அதிகாரியாகப் பணியாற்றிய எழுத்தாளரும், கவிஞருமான "துறைவன்'' உற்சாகப்படுத்தினார். அதனால், வாலி நிறைய கதைகளும், நாடகங்களும் வானொலிக்கு எழுதினார்.

  வானொலியின் பொங்கல் விழா சிறப்பு நிகழ்ச்சிக்கு பாடல் எழுதினார், வாலி. அந்தப் பாடலை டி.எம்.சவுந்தரராஜன் பாடினார். "நிலவுக்கு முன்னே...'' என்று தொடங்கும் அந்தப் பாடலை டி.எம்.எஸ். வெகுவாக ரசித்தார். "சென்னைக்கு வந்து, திரைப்படத் துறையில் நுழையுங்கள். கவிஞராகப் புகழ் பெறலாம்'' என்று வாலியிடம் கூறினார், டி.எம்.எஸ்.

  ரேடியோவில் நாடகங்கள் எழுதி வந்த அதே காலக்கட்டத்தில், மேடை நாடகங்களையும் வாலி தொடர்ந்து எழுதி வந்தார்.

  பிற்காலத்தில் எம்.ஜி.ஆரின் மந்திரிசபையில் அமைச்சராக பதவி வகித்த திருச்சி சவுந்தரராஜன், வாலியின் நாடகத்தில் நடித்தவர்.

  அம்பிகாபதி -அமராவதி காதலை வைத்து வாலி எழுதிய "கவிஞனின் காதலி'' என்ற நாடகத்தில் திருச்சி சவுந்தரராஜன் அம்பிகாபதியாகவும், புலியூர் சரோஜா அமராவதியாகவும், நடிகை சந்திரகாந்தாவின் சகோதரர் சண்முகசுந்தரம் கம்பராகவும் நடித்தனர்.

  வாலி ஸ்ரீரங்கத்தில் இருந்தபோது, இந்த நாடகம் சென்னையில் நடந்தது. திருச்சி சவுந்தரராஜனின் முயற்சியால், இந்த நாடகத்துக்கு எம்.ஜி.ஆர். தலைமை தாங்கினார். மூன்று மணி நேரமும் அமர்ந்து நாடகத்தை பார்த்தார்.

  முடிவில், நாடகத்தைப் பாராட்டி எம்.ஜி.ஆர். பேசும்போது, வாலியை வெகுவாக புகழ்ந்தார். "நாடகத்தை எழுதிய வாலி, ஸ்ரீரங்கத்தில் இருக்கிறாராம். அவர் எப்போது சென்னைக்கு வந்தாலும் என்னைப் பார்க்கலாம். அவருடைய தமிழ், சினிமாவுக்குத் தேவை'' என்று குறிப்பிட்டார்.

  திருச்சியில் "கோமதிராணி பிக்சர்ஸ்'' என்ற சினிமா கம்பெனியை ராஜ்குமார் என்பவர் தொடங்கி, வாலியின் நாடகம் ஒன்றை படமாக்கும் முயற்சியில் இறங்கினார். அது வெற்றி பெறவில்லை.

  ராஜ்குமார் மூலமாக வாலிக்கு எம்.ஏ.ராஜாராம் என்ற திரைப்பட இயக்குனர் அறிமுகமானார். அவர் அவ்வப்போது சென்னையில் இருந்து வாலிக்கு 10 ரூபாய் மணியார்டர் அனுப்புவார். ஸ்ரீரங்கத்தில் வசித்து வந்த வாலி, சென்னைக்கு ரெயிலில் சென்று, ராஜாராம் தயாரிக்கத் திட்டமிட்டிருந்த படத்துக்கு வசனம் எழுதிக் கொடுத்து விட்டு வருவார்.

  அப்போது (1956) சில பாடல்களையும் வாலி எழுதினார். அவற்றை சி.என்.பாண்டுரங்கன் இசை அமைப்பில் ஏ.எம்.ராஜா, சீர்காழி கோவிந்தராஜன், சூரமங்கலம் ராஜலட்சுமி ஆகியோர் பாட, ரேவதி ஸ்டூடியோவில் ஒலிப்பதிவு செய்யப்பட்டன.

  (ராஜாராம் படம் எடுக்க இயலாததால், இந்தப்பாடல்கள் அப்போது பயன்படுத்தப்படவில்லை. எனினும், பிற்காலத்தில் அவர் தயாரித்த "புரட்சி வீரன் புலித்தேவன்'' என்ற படத்தில் பயன்படுத்திக்கொண்டார்.)

  1956-ம் ஆண்டு தீபாவளிக்கு மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பான "பாசவலை'' படம் வெளியாயிற்று.

  அந்தப் படத்தில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய "குட்டி ஆடு தப்பி வந்தா குள்ள நரிக்கு சொந்தம்; குள்ள நரி தப்பி வந்தா குறவனுக்கு சொந்தம்; தட்டுக்கெட்ட மனிதர் கண்ணில் பட்டதெல்லாம் சொந்தம்; சட்டப்படி பார்க்கப்போனா எட்டடிதான் சொந்தம்'' என்ற பாடலில், மனதைப் பறிகொடுத்தார், வாலி.

  அதுபற்றி அவர் எழுதியிருப்பதாவது:-

  "குணங்குடி மஸ்தானும், சித்தர் பெருமக்களும் யாத்தளித்துள்ள எத்தனையோ தத்துவப் பாடல்களை, அடியேன் அந்த நாளிலேயே அறிவேன். ஆயினும், பாசவலை படப்பாட்டில், பாமரனுக்கும் புரியுமாறு போதிக்கப்பட்டிருந்த தத்துவ வரிகள் இருக்கின்றனவே, அவை ஒரு ஞானக்கோவையை சாறு பிழிந்தெடுத்து, வெள்ளித்திரை மூலம் ஊருக்கெல்லாம் விநியோகித்தது போலிருந்தது.

  இந்தப் பாடல்களை எழுதியிருந்தவர் பட்டுக்கோட்டை. அடேயப்பா! சவுக்கெடுத்து சொடுக்கி விட்டது போல என்ன சொல் வீச்சு? அசந்து போனேன். அன்றைய படவுலகுக்குப் புதிய வரவான பட்டுக்கோட்டையின் மேல், என்னையும் அறியாமலே காதலாகி கசிந்துருகிப்போனேன்.

  பாசவலை படத்தை, பத்து தடவை பார்த்தேன்; பாடல்களுக்காகத்தான்!

  பட்டுக்கோட்டையின் பாடல், என்னுள் பூசிக் கிடந்த சிறுகதை எழுதும் ஆசை, ஓவியம் வரையும் ஆசை, நாடகம் எழுதும் ஆசை அனைத்தையும் ஒருசேர ஒரே நாளில் கழுவி விட்டது.

  பாடல்கள் எழுத வேண்டும், அதுவும் படப்பாடல்களை எழுத வேண்டும், இந்த முயற்சியையே ஒரு தவமாகப் பழகி, இதில் காரியசித்தி பெற வேண்டும் என்னும் புதியதோர் வேட்கை வேர்விட்டது.''

  இவ்வாறு வாலி எழுதியுள்ளார்.

  "பாசவலை'' படத்தில் எம்.கே.ராதா, ஜி.வரலட்சுமி, எம்.என்.ராஜம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தாலும், இளம் கதாநாயகனாக நடித்தவர் வி.கோபாலகிருஷ்ணன்.

  அவர் நடிப்பு வாலிக்கு மிகவும் பிடித்திருந்தது. அவரை பாராட்டி கடிதம் எழுதினார். அதற்கு கோபாலகிருஷ்ணன் பதில் எழுதினார்.

  கடிதப் போக்குவரத்து, அவர்கள் இடையே நட்புறவை வளர்த்தது. இந்த நட்புறவு, வாலியின் திரை உலகப் பிரவேசத்துக்கு வழி வகுத்தது.
  Next Story
  ×