search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kidnapping"

    • மளிகை கடைக்கு அடிக்கடி சென்று பொருட்கள் வாங்கியபோது சிறுமியிடம் பேச்சு கொடுத்து பழகி வந்துள்ளனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே பவளத்தனூர் பகுதியை சேர்ந்த ஒரு தம்பதியின் 17 வயது மகள் பிளஸ்-1 படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார்.

    இந்நிலையில் ஜல்ஜீவன் திட்டத்தில் பைப்லைன் அமைக்கும் பணிக்காக ஓமலூர் அருகே குதிரை குத்திபள்ளம் பகுதியைச் சேர்ந்த வாலிபர்கள் மோகன், பெருமாள் ஆகியோர் கடந்த சில மாதங்களாக அந்த பகுதியில் வேலை செய்து வந்துள்ளனர்.

    அப்போது அவர்கள் அருகில் இருந்த மளிகை கடைக்கு அடிக்கடி சென்று பொருட்கள் வாங்கியபோது சிறுமியிடம் பேச்சு கொடுத்து பழகி வந்துள்ளனர்.

    இந்நிலையில் சம்பந்தபட்ட சிறுமி நேற்று முன்தினம் வீட்டிலிருந்து மாயமானார்.

    இதுகுறிதது சிறுமியின் பெற்றோர் தாரமங்கலம் போலீசில் புகார் அளித்தனர். அதில் தங்களது மகளை ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்றதாக பெருமாள் (25) என்பவர் மீது புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இருசக்கர வாகனத்தில் மூட்டைகளை கட்டி கொண்டு சென்ற நபர்களை நிறுத்தி சோதனை செய்தனர்.
    • 55 கிலோ பொருட்களை வாகனத்துடன் பறிமுதல் செய்தனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனிடையே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்திரா அறிவுறுத்தலின் பேரில் தனிப்படை போலீ சார் அறிவழகன் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது இருசக்கர வாகனத்தில் மூட்டைகளை கட்டி கொண்டு சென்ற நபர்களை நிறுத்தி சோதனை செய்தனர்.

    அதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களைகடலி மெயின் ரோட்டில் உள்ள ஒருவரின் கடைக்கு கடத்தியது தெரியவந்தது .

    இதனிடையே இருசக்கர வாகனத்தில் கடத்தி வந்த காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு பகுதியை சேர்ந்த ராஜா, மணிமாறன் மற்றும் ஜெயராஜ் ஆகிய மூவரையும் கைது செய்து கடத்தி வந்த தடை செய்யப்பட்ட 55 கிலோ பொருட்களை வாகனத்துடன் பறிமுதல் செய்தனர்.

    தொடர்ந்து பெரம்பூர் காவல் துறையினரிடம் குற்றவா ளிகள் ஒப்படைக்கப்பட்ட நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • செம்மண் திருடப்படுவதாக உளுந்தூர்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு மகேசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • செம்மண் கடத்தலில் ஈடுபட்ட மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    திருநாவலூர் அருகே உள்ள மட்டிகை கிராமத்தில் செம்மண் திருடப்படுவதாக உளுந்தூர்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு மகேசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து திருநாவலூர் இன்ஸ்பெக்டர் அசோகன், சப்-இன்ஸ்பெக்டர் சாமிநாதன் மற்றும் போலீசார் மட்டிகை கிராமத்திற்கு விரைந்தனர். அப்போது போலீசார் வருவதை கண்ட மர்நபர்கள் செம்மண் கடத்தலுக்கு பயன்படுத்திய ஜே.சி.பி., லாரி போன்றவைகளை நிறுத்திவிட்டு தப்பியோடிவிட்டனர். வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார், லாரியின் பதிவு எண்ணை வைத்து அதன் உரிமையாளரிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து, செம்மண் கடத்தலில் ஈடுபட்ட மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

    • திருமணஆசை காட்டி கடத்தி சென்ற வாலிபர்
    • பெற்றோர் அளித்த புகாரின்பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை

    கோவை,

    கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள சிறுமுகை ரோட்டை சேர்ந்தவர் 17 வயது மாணவி. இவர் அந்த பகுதி யில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

    நேற்று காலை மாணவி வழக்கம் போல தனது பெற்றோரிடம் பள்ளிக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். ஆனால் பள்ளி முடிந்து நீண்ட நேரம் ஆகியும் அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. மாணவியை அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இது குறித்து மாணவியின் பெற்றோர் மாயமான தங்களது மகளை கண்டுபிடித்து தரும்படி மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் மாணவி பள்ளிக்கு செல்லும் போது சுரேஷ் என்ற வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. அவர் மாணவியை அடிக்கடி பின் தொடர்ந்து சென்று காதலிப்பதாக கூறி வந்துள்ளார்.

    சம்பவத்தன்று மாணவி பள்ளிக்கு புறப் பட்டு சென்று கொண்டு இருந்த போது அவரை பின் தொடர்ந்து சென்று திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அவரது மோட்டார் சைக்கிளில் மாணவியை கடத்தி சென்றது தெரிய வந்தது.

    இதனையடுத்து போலீசார் வாலிபர் மாணவியுடன் எங்கு உள்ளார் என தேடி வருகின்றனர்.

    • கடத்தலுக்கு பயன்படுத்திய 7 வாகனங்க ள்பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
    • 24 மணி நேரம் கட்டுப்பாட்டு அறை இயங்கி வருகிறது.

    தஞ்சாவூர்:

    தமிழக குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை டி.ஜி.பி. வன்னியப்பெருமாள் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது :-

    எனது உத்தரவின்பேரில் திருச்சி மண்டல போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா அறிவுறுத்தலின்படி திருச்சி மண்டலத்திற்குட்பட்ட திருச்சி, கரூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் , அரியலூர், மயிலாடு துறை ஆகிய மாவட்ட ங்களில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க தொடர்ந்து குடிமைபொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதில் ஆகஸ்ட் 13ஆம் தேதி அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தாலுகா சின்னவளையம் மேம்பாலம் அருகே லோடு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 1300 கிலோ ரேஷன் அரிசியும், 16ஆம் தேதி திருச்சி மாவட்டம் புளியஞ்சோலை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்ட 1800 கிலோ ரேஷன் அரிசியும், 22 ஆம் தேதி திருச்சி லால்குடி பகுதியில் 1050 கிலோ ரேஷன் அரிசியும் கைப்பற்றி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    26 ஆம் தேதி திருச்சி மணப்பாறை ஆனம்பட்டி பகுதியில் ஒரு தனியார் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1000 கிலோ ரேஷன் அரிசியும், 30ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடி வெட்டன்விடுதி சாலையில் புதுபட்டி கடைவீதி அருகே நான்கு சக்கர வாகனத்தில் கடத்திவரப்பட்ட 1650 கிலோ ரேஷன் அரிசியும் பறிமுதல் செய்யப்பட்டது.

    இந்த மாதம் செப்டம்பர் 4ஆம் தேதி திருச்சி மணச்சநல்லூர் பகுதியில் தனியார் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4000 கிலோ ரேஷன் அரிசியும் கைப்பற்றப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    திருச்சி மண்டலத்தில் கடந்த மாதத்தில் ரேஷன் அரிசி கடத்தியதாக 138 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 213 குவிண்டால் ரேஷன் அரிசி கைப்பற்றப்பட்டது.

    இதுவரை கடத்தலில் ஈடுபட்ட 140 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய 7 வாகனங்க ள்பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    குடிமை பொருள் கடத்தல் தொடர்பான தகவல் பொதுமக்கள் தெரிவிக்கும் பொருட்டு கட்டணம் இல்லா தொலைபேசி எண் 1800 599 5950 தலைமை இடத்தில் செயல்பட்டு வருகிறது.

    இதனை முறையாக பயன்படுத்தும் பொருட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் அனைத்து கிராமங்கள் மற்றும் நகரங்களிலும் சுவரொட்டிகள் மூலம் விளம்பரம் படுத்தப்பட்டுள்ளது.

    இதன் மூலம் வரும் புகார்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்கும் பொருட்டு 24 மணி நேரம் கட்டுப்பாட்டறை இயங்கி வருகிறது.

    இதனால் கடத்தல் தொடர்பாக கிடைக்கும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு ஆய்வறிக்கை வாரம் தோறும் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

    மேலும் திருச்சி மண்ட லத்திற்குட்பட்ட பொதுமக்கள் அனைவரும் மேற்படி கட்டணமில்லா தொலைபேசி மூலம் புகார் கொடுக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இலங்கை வம்சாவளியை சேர்ந்தவர்கள் என்றும் துபாயிலிருந்து தங்கம் கடத்தியது தெரியவந்தது.
    • கடத்தல்காரர்களை கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதி:

    சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு அடிக்கடி தங்கம் கடத்தப்பட்டு வருகிறது. இதனை தடுக்க ஆந்திர மாநில சங்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    ஆந்திர மாநிலம் விஜயவாடா சோதனை சாவடியில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது சென்னையிலிருந்து விஜயவாடா நோக்கி சென்ற காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 4.3 கிலோ எடையுள்ள தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது.

    கடத்தல் காரர்களிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் அவர்கள் இலங்கை வம்சாவளியை சேர்ந்தவர்கள் என்றும் துபாயிலிருந்து தங்கம் கடத்தியது தெரியவந்தது.

    மேலும் கடத்தலை மறைக்க தங்க கட்டிகள் மீது இருந்த அடையாளங்களை அழித்து உள்ளனர்.

    சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மற்றொரு காரை நிறுத்தி சோதனை செய்தனர்.

    அதில் 6.8 கிலோ எடையுள்ள தங்க நகைகள், குவைத், கத்தார் ரியால், ஓமன் ரியாஸ் உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சிகள் ரூ.1.5 லட்சம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கடத்தல்காரர்களை கைது செய்தனர்.அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சூரியகலாவுடன் நெருங்கி பழகுவது போல் நடித்து, அவருக்கு உணவு கொடுத்துள்ளார்.
    • சுமார் 500-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து பின் தொடர்ந்தனர்.

    வேலூர்:

    திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலத்தை சேர்ந்தவர் சுந்தர். இவரது மனைவி சூரியகலா. இவரால் சரியாக பேச முடியாது. காதும் கேட்காது. இவருக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு கண்ணமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆண் குழந்தை பிறந்தது.

    பின்னர் கருத்தடை சிகிச்சைக்காக சூரியகலா வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். வார்டில் சூரியகலாவுடன் குழந்தையும் இருந்தது.

    மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில் உணவு இடைவேளை தவிர மற்ற நேரத்தில் நோயாளிகளின் உறவினர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. நோயாளிகளுக்கு உதவியாக பெண்கள் ஒருவர் மட்டுமே வார்டில் உடன் இருக்க அனுமதிக்கப்படுகின்றனர்.

    இந்நிலையில் நேற்று மாலை சுமார் 5.30 மணிக்கு சூரியகலா இருந்த வார்டுக்கு ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கத்தை அடுத்த அய்யம்பேட்டைசேரியை சேர்ந்த திருநாவுக்கரசு மனைவி பத்மா என்பவர் வந்தார்.

    சூரியகலாவுடன் நெருங்கி பழகுவது போல் நடித்து, அவருக்கு உணவு கொடுத்துள்ளார். அந்த உணவை சாப்பிட்ட சூரியகலா சிறிது நேரத்திலேயே மயக்கமாகிவிட்டார்.

    இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சூரியகலாவின் ஆண் குழந்தையை பத்மா கடத்தி சென்றுவிட்டார். சூரியகலா கண் விழித்து பார்த்தபோது குழந்தை காணாமல் போனதை அறிந்த அவர் கதறி அழுது துடித்தார். இதுகுறித்து வேலூர் தாலுகா போலீசில் புகார் தெரிவித்தனர்.

    தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    இதனை தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவின் பேரில் வேலூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு பிரசன்ன குமார் தலைமையில், வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு மேற்பார்வையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

    போலீசார் ஆஸ்பத்திரியில் பொறுத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் பத்மா, குழந்தையை கடத்திக்கொண்டு வேக வேகமாக ஆஸ்பத்திரியில் இருந்து வெளியே செல்வது பதிவாகி இருந்தது.

    இதனை தொடர்ந்து போலீசார் கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, குழந்தையை கடத்தி சென்ற பத்மா திருவண்ணாமலை செல்லும் பஸ்சில் ஏறி தப்பி சென்றது தெரிந்தது.

    பத்மா பயணம் செய்த வழித்தடங்களில் உள்ள அண்டை மாவட்டங்கள் உள்பட சுமார் 500-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து பின் தொடர்ந்தனர்.

    கண்காணிப்பு கேமராவின் தொடர்ச்சியை வைத்து இறுதியாக 8 மணி நேரத்தில் காஞ்சிபுரத்தில் பத்மா இருப்பதை கண்டுபிடித்தனர். விரைந்து சென்ற தனிப்படை போலீசார் பத்மா மற்றும் அவரது கணவர் திருநாவுக்கரசு ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து குழந்தையை மீட்டனர்.

    மேலும், குழந்தையை கடத்திய பத்மா மற்றும் அவரது கணவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குழந்தை கடத்தலில் ஈடுபட்ட பத்மா போலீசில் சிக்காமல் இருக்க ஆஸ்பத்திரியில் இருந்து வெளியே வந்த பின்னர் பஸ் மூலம் திருவண்ணாமலை சென்று, அங்கிருந்து வந்தவாசி வழியாக காஞ்சிபுரம் சென்றுள்ளார். அவர் தெளிவாக திட்டமிட்டு குழந்தையை கடத்தி சென்றுள்ளார்.

    அதேபோல் காஞ்சிபுரத்தில் பத்மாவின் கணவரும் சுற்றித் திரிந்ததுள்ளார். பத்மா காஞ்சிபுரம் செல்லும் நேரத்தில், அவரது கணவர் தயார் நிலையில் இருந்தது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இவர்கள் தொடர் குழந்தை கடத்தலில் ஈடுபடுபவர்களா அல்லது குழந்தை கடத்தல் கும்பலாக செயல்படுபவர்களா என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.

    • போலீசார் விசாரணை
    • சம்பவத்தன்று வீட்டிலிருந்து மாணவி திடீரென மாயமானார்.

    புதுச்சேரி:

    புதுவை அருகே தமிழக பகுதியான திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இங்கு துருவை கிராமத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் படித்து வருகிறார். சம்பவத்தன்று வீட்டிலிருந்து மாணவி திடீரென மாயமானார். அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் மாணவியை காணவில்லை.

    இது குறித்து மாணவியின் தாய் ஆரோவில் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் இன்ஸ்பெ க்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். அதில், காணாமல் போன அன்று மாணவியை அதே கல்லூரியில் படிக்கும் ராயபுதுப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு மாணவனும் அவரது நண்பர் ஒருவரும் பைக்கில் கடத்திச் சென்றது தெரியவந்தது. இது குறித்து 2 பேர் மீதும் கடத்தல் பிரிவில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவியை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

    • குழந்தைகள் இருவரையும் அந்த பெண் கவனித்து கொள்வதை நினைத்து நம்பி மேற்கொண்டு எதுவும் கேட்காமல் இருந்துவிட்டனர்.
    • பெண்ணை பிடிக்க காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம், உத்திரமேரூர் நெடுஞ்சாலையி்ல் உள்ள வெங்கடாச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி.

    இருளர் இனத்தை சேர்ந்த இவரது மனைவி காமாட்சி (வயது 28). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த காமாட்சியை பிரசவத்திற்காக மூர்த்தி 4 நாட்களுக்கு முன்பு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்திருந்தார்.

    காமாட்சியை பரிசோதித்த மருத்துவர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதிக்க அறிவுறுத்தினார்கள். அதன் பேரில் காமாட்சி மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். மூர்த்தியும் அவரது 3 வயது மகன் சக்திவேலும் உடன் இருந்தனர்.

    இந்த நிலையில் காமாட்சிக்கு உதவி செய்வதற்காக மூர்த்தியின் சகோதரர் அண்ணாமலையின் மனைவி குலாம்மாள் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு வந்தார். அவருடன் அவரது 6 வயது மகள் சவுந்தர்யாவும் உடன் வந்தாள்.

    மூர்த்தியும், குலாம்மாளும் காமாட்சியை கவனித்து கொள்ள மருத்துவமனைக்குள் சென்ற நிலையில் சக்திவேலும், சவுந்தர்யாவும் மருத்துவமனை வளாகத்தில் விளையாடி பொழுதை போக்கினார்கள். இரவில் அவர்கள் மருத்துவமனை வளாகத்திலேயே வராண்டாவில் பெற்றோருடன் தங்கி இருந்தனர்.

    இந்நிலையில் மருத்துவமனை வளாகத்தில் இருந்த ஒரு மர்ம பெண் சக்திவேலுடனும், சவுந்தர்யாவுடனும் நெருங்கி பழகினார். அவர்களை அழைத்து சென்று மருத்துவமனையின் பல்வேறு இடங்களையும் சுற்றி காண்பித்தார். மூர்த்தியும், குலாம்மாளும் பேறு கால பிரிவில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால் குழந்தைகள் இருவரையும் அந்த பெண் கவனித்து கொள்வதை நினைத்து நம்பி மேற்கொண்டு எதுவும் கேட்காமல் இருந்துவிட்டனர்.

    நேற்று முன்தினம் இரவு அந்த மர்ம பெண் சக்திவேல், சவுந்தர்யா இருவரையும் தனது அருகில் படுக்க வைத்துக் கொண்டார். இரண்டு நாட்கள் தங்களுடன் இருந்ததால் மூர்த்தியும் அந்த பெண்ணை நம்பிவிட்டார். நேற்று காலை அந்த மர்ம பெண்ணும், இரண்டு குழந்தைகளும் மாயமாகி இருந்தனர்.

    இதையறிந்து மூர்த்தியும், குலாம்மாளும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். மருத்துவமனை வளாகம் முழுக்க தேடி பார்த்தனர். மர்ம பெண் பற்றி மருத்துவமனையில் விசாரித்தபோது யாருக்கும் எந்த தகவலும் தெரியவில்லை.

    உணவு வாங்கி கொடுத்து பாசமாக கவனித்து கொண்ட அந்த மர்ம பெண் இரு குழந்தைகளையும் கடத்தி சென்றிருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து விஷ்ணு காஞ்சி போலீஸ் நிலையத்தில் மூர்த்தி இது தொடர்பாக புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். மர்ம பெண் பற்றி அறிய அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள சி.சி.டி.வி. கேமிராவை ஆய்வு செய்ய முடிவு செய்தனர்.

    அப்போது மருத்துவமனை வளாகத்தில் உள்ள பல சி.சி.டி.வி. கேமராக்கள் பழுதாகி இருப்பது தெரிய வந்தது. சில சி.சி.டி.வி. கேமராக்கள் மட்டுமே இயங்கின. அதில் உள்ள காட்சிகளை பார்க்க முயற்சி செய்த போது மின்சார தடை காரணமாக பதிவுகள் அனைத்தும் அழிந்து போயிருப்பது தெரிய வந்தது.

    கண்காணிப்பு கேமரா காட்சி உதவிகள் கிடைக்காததால் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையை சுற்றி வந்த மர்ம பெண் பற்றிய தகவல்கள் போலீசாருக்கு முழுமையாக கிடைக்கவில்லை. அந்த பெண் திட்டமிட்டு குழந்தைகளுடன் பழகி கடத்தி சென்றிருப்பது உறுதி படுத்தப்பட்டுள்ளது.

    சில இடங்களில் கண்காணிப்பு கேமரா காட்சிகள் கிடைத்து உள்ளன. ஆனால் செவ்வாய்க்கி ழமை இரவு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை பகுதியில் பலத்த மழை பெய்ததால் காட்சிகள் தெளிவாக தெரியவில்லை. இதனால் இரண்டு குழந்தைகளை கடத்திய மர்ம பெண் யார் என்று இதுவரை கண்டுபிடிக்க இயலவில்லை. அந்த பெண் 2 குழந்தைகளையும் எங்கே கடத்தி சென்றிருப்பார் என்பதும் தெரியவில்லை. அந்த பெண்ணை பிடிக்க காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    • காரில் இருந்து இறங்கிய 2 பெண்கள் உள்பட 4 பேர் பஸ்சுக்குள் சென்றனர்.
    • வாகன சோதனையின்போது காரில் இளம்பெண் கடத்தி கொண்டுவரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது

    களக்காடு:

    தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பகுதியை சேர்ந்த ஒரு 20 வயது இளம்பெண் நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு கன்னியாகுமரி பஸ்சில் ஏறி சென்று கொண்டிருந்தார்.

    காரில் ஏற்றி

    நாங்குநேரி அருகே அரசு பஸ் சென்றபோது, அதன் குறுக்காக ஒரு கார் நிறுத்தப்பட்டு, அதில் இருந்து இறங்கிய 2 பெண்கள் உள்பட 4 பேர் பஸ்சுக்குள் சென்றனர்.

    அவர்கள் வழுக்கட்டாயமாக கயத்தாறு இளம்பெண்ணை பிடித்து இழுத்து காரில் ஏற்றி கடத்தி சென்றனர். இதுதொடர்பாக அப்பகுதியில் நின்றவர்கள் நாங்குநேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் போலீசார் விரைந்து சென்றனர். கார் குறித்து நெல்லை மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவே, வாகன சோதனை நடத்தப்பட்டது.

    கடத்தியது ஏன்?

    கங்கைகொண்டான் சோதனை சாவடி அருகே நடந்த சோதனையின்போது காரில் இளம்பெண் கடத்தி கொண்டுவரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து அந்த காரை நிறுத்தி, அதில் இருந்தவர்களை நாங்குநேரி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவர்களிடம் இளம்பெண்ணை கடத்தியது ஏன்? என்பது குறித்து விசாரித்தபோது, கயத்தாறு பகுதியை சேர்ந்த பெண்ணுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஒருவருடன் திருமணம் ஆகி ஒரு குழந்தை இருப்பதும், கணவர் இறந்து விட்ட நிலையில் திடீரென உடல் நலக்குறைவுக்குள்ளான குழந்தையை திருவனந்தபுரம் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்ததும் தெரியவந்தது.

    4 பேரிடம் விசாரணை

    அப்போது அங்கிருந்த வாலிபருடன் இளம்பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டதும், அவரை பார்க்கவே தற்போது இளம்பெண் பஸ்சில் குமரிக்கு சென்றதும் விசா ரணையில் தெரிய வந்தது.

    அந்த வாலிபரை பார்க்க கூடாது என்பதற்காகவே, அந்த இளம்பெண்ணை அவரது உறவினர்கள் இழுத்து சென்றுள்ளனர் என்பதை போலீசார் அறிந்த னர். இதுகுறித்து போலீசார் இளம் பெண்ணின் உறவி னர்கள் 4 பேரிடம் விசாரித்து வருகின்றனர்.

    • கள்ளக்குறிச்சி அருகே சாராயம் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • போலீசார் தொண்டனந்தல் கிராம பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    கள்ளக்குறிச்சி :

    கள்ளக்குறிச்சி மாவட்டம் பகண்டை கூட்டுரோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சூர்யா, சோலை, ஜெய ராமன் தலைமையிலான போலீசார் தொண்டனந்தல் கிராம பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு அதே பகுதியை சேர்ந்த அடைக்கலராஜ் (வயது 35) என்பவர் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார். இதையடுத்து போலீ சார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் அடைக்கலராஜிக்கு திருவண்ணாமலை மாவட்டம் பெருங்குளத்தூர் பகுதியை சேர்ந்த அரவிந்த் (25) என்பவர் சாராயத்தை கடத்தி வந்து விற்பனைக்கு கொடுத்து வந்தது தெரிந்தது.

    இதையடுத்து அடைக்கலராஜ் மூலம் அரவிந்தை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு விற்பனைக்கு சாராயம் கொண்டுவருமாறு போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து இருசக்கர வாகனத்தில் சாராயத்தை கடத்தி வந்த அரவிந்தை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். இதையடுத்து அடைக்கலராஜ், அரவிந் ஆகியோரிடம் இருந்து 35 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • சம்பவம் குறித்து தச்சநல்லூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • போலீசார் அந்த கும்பலை சுற்றிவளைத்து பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

    நெல்லை:

    கோவை மாவட்டம் ஓரைக்கல்பாளையம் நட்சத்திரா கார்டன் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார்(வயது 45). இவர் கார் வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார்.

    தொழில் நிமித்தமாக இவர் நெல்லைக்கு அடிக்கடி வந்து செல்வார். அப்போது நெல்லை பேட்டையை அடுத்த திருப்பணி கரிசல்குளம் மாரியம்மன்கோ வில் தெருவை சேர்ந்த நம்பிராஜன்(31) என்பவர் அவருக்கு அறிமுகமாகி உள்ளார். தொடர்ந்து 2 பேரும் கார் வாங்கி விற்கும் தொழில் செய்து வந்துள்ளனர்.

    இந்நிலையில் சமீபத்தில் சிவக்குமாருக்கு நெல்லையில் உள்ள தனியார் நிதி நிறுவனம் மூலமாக கார் வாங்குவதற்கு நம்பிராஜன் ரூ.10 லட்சம் வாங்கி கொடுத்ததாகவும், அதற்கான தவணைத் தொகையை சிவக்குமார் திருப்பி செலுத்தவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த நம்பிராஜன் நேற்று முன்தினம் தனது கூட்டாளிகளான திருப்பணி கரிசல்குளத்தை சேர்ந்த தங்ககிருஷ்ணன் (28), அவரது சகோதரர் விக்ணேஷ்மாரி மற்றும் 17 வயது சிறுவனை அழைத்துக் கொண்டு கோவைக்கு காரில் புறப்பட்டுள்ளார்.

    அங்கு வைத்து சிவக்குமாரை காரில் கடத்தி கொண்டு வந்த அந்த கும்பல் நெல்லை தச்சநல்லூரை அடுத்த மணிமூர்த்தீஸ்வரம் பகுதியில் உள்ள ஒரு குடோனில் அவரை அடைத்து வைத்து சரமாரியாக தாக்கியது. இந்த சம்பவம் குறித்து தச்சநல்லூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக உதவி கமிஷனர் ராஜேஸ்வரன், இன்ஸ்பெக்டர் ரமேஷ் மோகன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

    அப்போது அங்கிருந்த வர்கள் போலீசாரை கண்டதும் தப்பியோட முயற்சித்தனர். ஆனால் போலீசார் அந்த கும்பலை சுற்றிவளைத்து பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். மேலும் குடோனில் அடைத்து வைத்து தாக்கப்பட்டதில் காயம் அடைந்த சிவக்குமாரை மீட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தச்சநல்லூர் போலீசார் கடத்தல் வழக்குப்பதிவு செய்து நம்பிராஜன் மற்றும் அவரது கூட்டாளிகள் உள்பட 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×