search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்- மர்ம பெண்ணுக்கு போலீஸ் வலை வீச்சு
    X

    கடத்தப்பட்ட குழந்தைகள் சக்திவேல், சவுந்தர்யா

    காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்- மர்ம பெண்ணுக்கு போலீஸ் வலை வீச்சு

    • குழந்தைகள் இருவரையும் அந்த பெண் கவனித்து கொள்வதை நினைத்து நம்பி மேற்கொண்டு எதுவும் கேட்காமல் இருந்துவிட்டனர்.
    • பெண்ணை பிடிக்க காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம், உத்திரமேரூர் நெடுஞ்சாலையி்ல் உள்ள வெங்கடாச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி.

    இருளர் இனத்தை சேர்ந்த இவரது மனைவி காமாட்சி (வயது 28). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த காமாட்சியை பிரசவத்திற்காக மூர்த்தி 4 நாட்களுக்கு முன்பு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்திருந்தார்.

    காமாட்சியை பரிசோதித்த மருத்துவர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதிக்க அறிவுறுத்தினார்கள். அதன் பேரில் காமாட்சி மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். மூர்த்தியும் அவரது 3 வயது மகன் சக்திவேலும் உடன் இருந்தனர்.

    இந்த நிலையில் காமாட்சிக்கு உதவி செய்வதற்காக மூர்த்தியின் சகோதரர் அண்ணாமலையின் மனைவி குலாம்மாள் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு வந்தார். அவருடன் அவரது 6 வயது மகள் சவுந்தர்யாவும் உடன் வந்தாள்.

    மூர்த்தியும், குலாம்மாளும் காமாட்சியை கவனித்து கொள்ள மருத்துவமனைக்குள் சென்ற நிலையில் சக்திவேலும், சவுந்தர்யாவும் மருத்துவமனை வளாகத்தில் விளையாடி பொழுதை போக்கினார்கள். இரவில் அவர்கள் மருத்துவமனை வளாகத்திலேயே வராண்டாவில் பெற்றோருடன் தங்கி இருந்தனர்.

    இந்நிலையில் மருத்துவமனை வளாகத்தில் இருந்த ஒரு மர்ம பெண் சக்திவேலுடனும், சவுந்தர்யாவுடனும் நெருங்கி பழகினார். அவர்களை அழைத்து சென்று மருத்துவமனையின் பல்வேறு இடங்களையும் சுற்றி காண்பித்தார். மூர்த்தியும், குலாம்மாளும் பேறு கால பிரிவில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால் குழந்தைகள் இருவரையும் அந்த பெண் கவனித்து கொள்வதை நினைத்து நம்பி மேற்கொண்டு எதுவும் கேட்காமல் இருந்துவிட்டனர்.

    நேற்று முன்தினம் இரவு அந்த மர்ம பெண் சக்திவேல், சவுந்தர்யா இருவரையும் தனது அருகில் படுக்க வைத்துக் கொண்டார். இரண்டு நாட்கள் தங்களுடன் இருந்ததால் மூர்த்தியும் அந்த பெண்ணை நம்பிவிட்டார். நேற்று காலை அந்த மர்ம பெண்ணும், இரண்டு குழந்தைகளும் மாயமாகி இருந்தனர்.

    இதையறிந்து மூர்த்தியும், குலாம்மாளும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். மருத்துவமனை வளாகம் முழுக்க தேடி பார்த்தனர். மர்ம பெண் பற்றி மருத்துவமனையில் விசாரித்தபோது யாருக்கும் எந்த தகவலும் தெரியவில்லை.

    உணவு வாங்கி கொடுத்து பாசமாக கவனித்து கொண்ட அந்த மர்ம பெண் இரு குழந்தைகளையும் கடத்தி சென்றிருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து விஷ்ணு காஞ்சி போலீஸ் நிலையத்தில் மூர்த்தி இது தொடர்பாக புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். மர்ம பெண் பற்றி அறிய அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள சி.சி.டி.வி. கேமிராவை ஆய்வு செய்ய முடிவு செய்தனர்.

    அப்போது மருத்துவமனை வளாகத்தில் உள்ள பல சி.சி.டி.வி. கேமராக்கள் பழுதாகி இருப்பது தெரிய வந்தது. சில சி.சி.டி.வி. கேமராக்கள் மட்டுமே இயங்கின. அதில் உள்ள காட்சிகளை பார்க்க முயற்சி செய்த போது மின்சார தடை காரணமாக பதிவுகள் அனைத்தும் அழிந்து போயிருப்பது தெரிய வந்தது.

    கண்காணிப்பு கேமரா காட்சி உதவிகள் கிடைக்காததால் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையை சுற்றி வந்த மர்ம பெண் பற்றிய தகவல்கள் போலீசாருக்கு முழுமையாக கிடைக்கவில்லை. அந்த பெண் திட்டமிட்டு குழந்தைகளுடன் பழகி கடத்தி சென்றிருப்பது உறுதி படுத்தப்பட்டுள்ளது.

    சில இடங்களில் கண்காணிப்பு கேமரா காட்சிகள் கிடைத்து உள்ளன. ஆனால் செவ்வாய்க்கி ழமை இரவு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை பகுதியில் பலத்த மழை பெய்ததால் காட்சிகள் தெளிவாக தெரியவில்லை. இதனால் இரண்டு குழந்தைகளை கடத்திய மர்ம பெண் யார் என்று இதுவரை கண்டுபிடிக்க இயலவில்லை. அந்த பெண் 2 குழந்தைகளையும் எங்கே கடத்தி சென்றிருப்பார் என்பதும் தெரியவில்லை. அந்த பெண்ணை பிடிக்க காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    Next Story
    ×