search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அரசு ஆஸ்பத்திரியில் தாய்க்கு மயக்க மருந்து கொடுத்து குழந்தை கடத்தல்: கணவன்-மனைவி கைது

    • சூரியகலாவுடன் நெருங்கி பழகுவது போல் நடித்து, அவருக்கு உணவு கொடுத்துள்ளார்.
    • சுமார் 500-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து பின் தொடர்ந்தனர்.

    வேலூர்:

    திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலத்தை சேர்ந்தவர் சுந்தர். இவரது மனைவி சூரியகலா. இவரால் சரியாக பேச முடியாது. காதும் கேட்காது. இவருக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு கண்ணமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆண் குழந்தை பிறந்தது.

    பின்னர் கருத்தடை சிகிச்சைக்காக சூரியகலா வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். வார்டில் சூரியகலாவுடன் குழந்தையும் இருந்தது.

    மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில் உணவு இடைவேளை தவிர மற்ற நேரத்தில் நோயாளிகளின் உறவினர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. நோயாளிகளுக்கு உதவியாக பெண்கள் ஒருவர் மட்டுமே வார்டில் உடன் இருக்க அனுமதிக்கப்படுகின்றனர்.

    இந்நிலையில் நேற்று மாலை சுமார் 5.30 மணிக்கு சூரியகலா இருந்த வார்டுக்கு ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கத்தை அடுத்த அய்யம்பேட்டைசேரியை சேர்ந்த திருநாவுக்கரசு மனைவி பத்மா என்பவர் வந்தார்.

    சூரியகலாவுடன் நெருங்கி பழகுவது போல் நடித்து, அவருக்கு உணவு கொடுத்துள்ளார். அந்த உணவை சாப்பிட்ட சூரியகலா சிறிது நேரத்திலேயே மயக்கமாகிவிட்டார்.

    இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சூரியகலாவின் ஆண் குழந்தையை பத்மா கடத்தி சென்றுவிட்டார். சூரியகலா கண் விழித்து பார்த்தபோது குழந்தை காணாமல் போனதை அறிந்த அவர் கதறி அழுது துடித்தார். இதுகுறித்து வேலூர் தாலுகா போலீசில் புகார் தெரிவித்தனர்.

    தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    இதனை தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவின் பேரில் வேலூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு பிரசன்ன குமார் தலைமையில், வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு மேற்பார்வையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

    போலீசார் ஆஸ்பத்திரியில் பொறுத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் பத்மா, குழந்தையை கடத்திக்கொண்டு வேக வேகமாக ஆஸ்பத்திரியில் இருந்து வெளியே செல்வது பதிவாகி இருந்தது.

    இதனை தொடர்ந்து போலீசார் கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, குழந்தையை கடத்தி சென்ற பத்மா திருவண்ணாமலை செல்லும் பஸ்சில் ஏறி தப்பி சென்றது தெரிந்தது.

    பத்மா பயணம் செய்த வழித்தடங்களில் உள்ள அண்டை மாவட்டங்கள் உள்பட சுமார் 500-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து பின் தொடர்ந்தனர்.

    கண்காணிப்பு கேமராவின் தொடர்ச்சியை வைத்து இறுதியாக 8 மணி நேரத்தில் காஞ்சிபுரத்தில் பத்மா இருப்பதை கண்டுபிடித்தனர். விரைந்து சென்ற தனிப்படை போலீசார் பத்மா மற்றும் அவரது கணவர் திருநாவுக்கரசு ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து குழந்தையை மீட்டனர்.

    மேலும், குழந்தையை கடத்திய பத்மா மற்றும் அவரது கணவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குழந்தை கடத்தலில் ஈடுபட்ட பத்மா போலீசில் சிக்காமல் இருக்க ஆஸ்பத்திரியில் இருந்து வெளியே வந்த பின்னர் பஸ் மூலம் திருவண்ணாமலை சென்று, அங்கிருந்து வந்தவாசி வழியாக காஞ்சிபுரம் சென்றுள்ளார். அவர் தெளிவாக திட்டமிட்டு குழந்தையை கடத்தி சென்றுள்ளார்.

    அதேபோல் காஞ்சிபுரத்தில் பத்மாவின் கணவரும் சுற்றித் திரிந்ததுள்ளார். பத்மா காஞ்சிபுரம் செல்லும் நேரத்தில், அவரது கணவர் தயார் நிலையில் இருந்தது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இவர்கள் தொடர் குழந்தை கடத்தலில் ஈடுபடுபவர்களா அல்லது குழந்தை கடத்தல் கும்பலாக செயல்படுபவர்களா என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.

    Next Story
    ×