search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "gaja storm"

    தற்காலிகமாக குடிசை வீடுகள் அமைப்பதற்கு உதவுவதற்காக சேலத்தில் உள்ள தமிழக அரசு நிறுவனமான மேக்னசைட் நிறுவனத்தில் இருந்து கஜா புயல் நிவாரணமாக 5 லாரிகளில் மூங்கில்கள் கொண்டு வரப்பட்டன. #Gajastorm

    தஞ்சாவூர்:

    கஜா புயல் தஞ்சை மாவட்டத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

    தஞ்சை மாவட்டத்தில் தஞ்சையில் தொடங்கி கடைகோடி பகுதியான அதிராம்பட்டினம் வரை பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இந்த பகுதியில் உள்ள அனைத்து தென்னை, பனை மரங்கள், புளியமரங்கள், அரசமரம், ஆலமரங்கள் உள்ளிட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன.

    குடிசை வீடுகள், ஓட்டு வீடுகள் சேதம் அடைந்தன. இதில் ஏராளமான குடிசை வீடுகள் முற்றிலும் சேதம் அடைந்தன. தஞ்சை மாவட்டத்தில் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் முற்றிலும் சேதம் அடைந்துள்ளன. இது தவிர 15 ஆயிரம் குடிசை வீடுகள் பகுதியாகவும், 52 ஆயிரத்து 137 ஓட்டு வீடுகள் பகுதியாகவும் சேதம் அடைந்துள்ளன.

    இது தவிர தென்னை மரங்கள் விழுந்ததில் ஏராளமான மாடி வீடுகளும் சேதம் அடைந்துள்ளன. வீடுகள் சேதம் அடைந்தவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த குடிசை வீடுகளில் வசிப்பவர்கள் தற்போது தங்குவதற்காக இடவசதி இன்றி அவதிப்பட்டு வருகிறார்கள்.

    சிலர் தார்ப்பாய் மூலம் தற்காலிகமாக குடிசை போன்று அமைத்து அதில் வசித்து வருகிறார்கள். சிலர் அருகில் உள்ள மற்ற வீடுகளில் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் தற்காலிகமாக குடிசை வீடுகள் அமைப்பதற்கு உதவுவதற்காக சேலத்தில் உள்ள தமிழக அரசு நிறுவனமான மேக்னசைட் நிறுவனத்தில் இருந்து கஜா புயல் நிவாரணமாக 5 லாரிகளில் மூங்கில்கள் கொண்டு வரப்பட்டன.

    இந்த மூங்கில்கள் தஞ்சை மாவட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் உள்ள பகுதி மக்களுக்கு வழங்குவதற்காக கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த மூங்கில்கள் பட்டுக்கோட்டை பகுதியில் வைக்கப்பட்டு பின்னர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிசை அமைப்பதற்காக வழங்கப்பட உள்ளன. #Gajastorm

    புயல் தாக்கி 13 நாட்களாகியும் மின்சாரம், குடிநீர் வழங்காததால் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. #Gajastorm

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம், மருங்குளம் அருகே உள்ள கோபால் நகரில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    கடந்த 16-ந் தேதி கஜா புயல் தாக்கியதில் மருங்குளம் பகுதியில் உள்ள மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் அனைத்தும் முற்றிலும் சாய்ந்தது.

    இதனால் புயல் தாக்கி 13 நாட்கள் மேல் ஆகியும் இந்த பகுதியில் இன்னும் மின்சாரம் வழங்கப்படாமல் உள்ளது. மேலும் குடிப்பதற்கு குடிதண்ணீர் இல்லை. நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட வில்லை என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று காலை 6 மணிக்கு மருங்குளம் அருகே உள்ள கறம்பக்குடி சாலையில் 200-க்கும் மேற்பட்டோர் மாட்டு வண்டிகள் மற்றும் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்த வல்லம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி இன்னும் ஒரு வாரத்திற்குள் அனைத்தும் சீர்செய்யபடும் என்று உறுதி அளித்தனர். இதனையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

    இதுகுறித்து கோபால் நகரை சேர்ந்த சேகர் என்பவர் கூறியதாவது:-

    கஜா புயல் தாக்கி 13 நாட்களுக்கு மேல் ஆகிறது. இதுவரைக்கும் எந்தவொரு அதிகாரிகளும், அரசியல் வாதிகளும் எங்களை பார்த்தது கிடையாது.

    மேலும் சாலைகளில் விழுந்த மரங்கள் அனைத்தும் அகற்றாமல் அப்படியே உள்ளது. மின்சாரம் இன்னும் வழங்கப்பட வில்லை. அன்றாடம் தேவைக்கு தண்ணீர் இல்லை. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பெரும் அவதிப்பட்டு வருகிறோம்.

    எனவே அரசு உரிய நிவாரண பொருட்கள் மற்றும் குடிதண்ணீர், மின்சாரம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Gajastorm

    புதுக்கோட்டை மாவட்டத்தில் நிவாரண உதவிகள் வழங்க கோரி 10 இடங்களில் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். #GajaCyclone
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கஜா புயலால் பாதிக்கப்பட்டது. இதனால் கந்தர்வக்கோட்டை அருகே வேம்பன்பட்டி கிராமம் பொதுமக்கள் மின்சாரம், குடிநீர் இல்லாமல் அவதிப்பட்டு வந்தனர்.

    இந்தநிலையில் நிவாரண பொருட்கள் மற்றும் அடிப்படை வசதிகள் கேட்டு வேம்பன்பட்டி பஸ் நிறுத்தம் அருகே பொதுமக்கள் கந்தர்வக்கோட்டை-பட்டுக்கோட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவலறிந்த கந்தர்வக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுப்பட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது நிவாரண பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

    இதேபோல் கந்தர்வக்கோட்டை பஸ் நிலையம் அருகே உடையார்தெரு, பெரிய கடைவீதி, சின்ன அரிசிக்கார தெரு மற்றும் குமரன் காலனி, இந்திரா நகர் போன்ற பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கந்தர்வக் கோட்டை நகரத்திற்கு நிவாரண பொருட்கள் வழங்கக்கோரி சாலை மறியலில் ஈடுப்பட்டனர். அப்போது மறியலில் ஈடுபட்டவர்கள் கந்தர்வக்கோட்டை தாசில்தார் நேரில் வந்து நிவாரண பொருட்கள் வழங்க உறுதியளிக்க வேண்டும் என்று கோ‌ஷமிட்டனர். ஆனால் தாசில்தார் சம்பவ இடத்திற்கு வரவில்லை.

    அப்போது அந்த வழியாக வந்த சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன், ஆறுமுகம் எம்.எல்.ஏ. ஆகிய இருவரையும் பொதுமக்கள் முற்றுகையிட்டு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சேமித்து வைக்கப்பட்டுள்ள நிவாரண பொருட்களை முறையாக அனைத்து பகுதி பொதுமக்களுக்கும் பிரித்து வழங்குமாறு கோரிக்கை வைத்தனர்.

    அப்போது அமைச்சர் அனைவருக்கும் நிவாரண பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதையடுத்து மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

    ஆலங்குடி அருகே உள்ள கரும்பிரான்கோட்டை கிராமத்தில் புயலால் குடிநீர், மின்சாரம் வழங்ககோரி ஆலங்குடி-அறந்தாங்கி சாலையில் காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், ஆலங்குடி-அறந்தாங்கி சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதேபோல் வடவாளம் காலனி பொதுமக்கள் குடிநீர் கேட்டு புதுக்கோட்டை-தஞ்சாவூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

    அறந்தாங்கி சுற்று வட்டார கிராம பகுதியில் கஜா புயல் காற்றில் அதிக அளவில் மின்மாற்றிகள், மின்கம்பங்கள், மரங்களும் சேதம் அடைந்துள்ளன. சீரமைக்கும் பணியில் மின்சாரத்துறை பணியாளர்கள் ஈடுபட்டனர் வருகின்றனர். இந்நிலையில் கஜா புயல் காற்று வலுவிழந்து 13 நாட்கள் ஆகியும் மின்சாரம், குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை என கோரியும், எங்கள் கிராமத்தில் இருந்து அடுத்த கிராமத்திற்கு செல்லும் பகுதியில் மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

    உடனே எங்கள் கிராமத்திற்க்கு மின் இணைப்பு கொடுக்க வேண்டும் என கோரி அறந்தாங்கி அடுத்துள்ள கூத்தங்குடி பகுதி பொதுமக்கள் கட்டுமாவடி சாலையில் மறியல் ஈடுபட்டனர். இதேபோல் அறந்தாங்கி அருகே மருதங்குடியில் பொது மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

    அரிமளம் ஒன்றியம் செங்கீரையில் மின்வினியோகம் செய்யபடாததை கண்டித்து பொதுமக்கள் செங்கீரையில் மறியலில் ஈடுபட்டனர்.

    இதேபோல் அரிமளம் பேரூராட்சிக்கு உட்பட்ட காசில் பழனி தெருவில் மின்சாரம் வழங்கக்கோரி பொதுமக்கள் அரிமளம் சிவன்கோவில் அருகே மறியலில் ஈடுபட்டனர்.

    கறம்பக்குடி அருகே குரும்பிவயல் கிராமத்தில், ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு வசிக்கும் அனைவரும் விவசாயம் மற்றும் விவசாய கூலி தொழிலாளர்களாகவே உள்ளனர். கஜாபுயலின் தாக்குதலால் அந்த கிராமத்தில் இருந்த அனைத்து குடிசை மற்றும் ஓட்டு வீடுகள் முற்றிலும் சேதமடைந்தன.

    இதனால் குடிநீர், மின்சாரம் இன்றி பல நாட்களாக அப்பகுதி பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். ஜெனரேட்டர் மூலமும் குடிநீர் வசதி செய்து தரப்படவில்லை. தனி தீவாக உள்ள இந்த கிராமத்திற்கு எந்த அதிகாரிகளும் வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த குரும்பிவயல் பொதுமக்கள் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கறம்பக்குடி-புதுக்கோட்டை சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

    இதேபோல் அண்டக்குளம் அடுத்துள்ள கொப்பம்பட்டியில் கஜா புயலால் மரங்கள், மின் மாற்றிகள், மின்கம்பங்கள் உள்ளிட்டவை விழுந்துள்ளன. இதனால் அப்பகுதியில் குடிநீர், மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். தற்போது அப்பகுதி மக்களுக்கு ஜெனரேட்டர் மூலமாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

    கடந்த 2 நாட்களாக அந்த தண்ணீரையும் நிறுத்தி விட்டனர். இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் இந்த பகுதிகளை அதிகாரிகள் யாரும் வந்து பார்க்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் குடிநீர், மின்சாரம் கேட்டு கொப்பம்பட்டி-செங்கிபட்டி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். #GajaCyclone
    கஜா புயல் பாதித்த இடங்களுக்கு காஞ்சீபுரம் மாவட்டத்தில் இருந்து ரூ.1¼ கோடி நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. #GajaCyclone
    காஞ்சீபுரம்:

    கஜா புயலில் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களுக்கு காஞ்சீபுரம் மாவட்டத்தில் இருந்து நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகிறது.

    நேற்று காஞ்சீபுரம் மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் 25 வகையான பொருட்களை ரூ.2.26 லட்சம் மதிப்பிலான பொருட்களை மாவட்ட கலெக்டர் பொன்னையா கொடியசைத்து அனுப்பி வைத்தார்.

    இதே போல் மாவட்ட கருங்கல் குவாரி ஒப்பந்ததாரர்கள் சார்பில், 1008 குடும்பங்களுக்கு தேவையான 7 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய பெட்டகத்தை கலெக்டரிடம் ஒப்படைத்தனர்.

    இது குறித்து கலெக்டர் பொன்னையா கூறும்போது, “காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்துதுறைகளின் சார்பில் இதுவரை கஜா புயலில் பாதிக்கப்பட்ட மாவட்ட மக்களுக்கு 1 கோடியே 26 லட்ச மதிப்பிலான பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன” என்றார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி, மாவட்ட வருவாய் அலுவலர் சுந்தரமூர்த்தி, திட்ட இயக்குனர் ஜெயகுமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) நாராயணன், பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர் சிவசங்கரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். #GajaCyclone
    ராமநாதபுரம் மாவட்டம் சார்பில் கஜா புயல் பாதிப்புக்கு ரூ.76 லட்சம் நிவாரணம் வழங்கியதாக கலெக்டர் வீரராகவராவ் தெரிவித்துள்ளார். #GajaCyclone
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் கூறியதாவது:-

    கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் துயர் துடைக்கும் விதமாக பள்ளிக்கல்வித் துறையின் மூலமாக சேகரிக்கப்பட்ட ரூ.31,60,500 மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் திருவாரூர், நாகை பகுதிகளுக்கு 3 வாகனங்களில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தொடங்கப்பட்ட நிவாரணப்பொருட்கள் சேகரிப்பு மையத்தின் மூலம், மாவட்டத்திலுள்ள பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் பங்களிப்புடன் இதுவரை மொத்தம் ரூ.72,06,010 மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    இது தவிர தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை மொத்தம் ரூ.3,02,900 மதிப்பிலான காசோலை பெறப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    மேலும், மாவட்டத்திலுள்ள பொதுமக்கள், தன்னார்வலர்கள் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் நிவாரணப் பொருட்கள் சேகரிப்பு மையத்திற்கு நிவாரணப்பொருட்களை வழங்கி வருகின்றனர்.

    அவை அனைத்தும் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பாதுகாப்பாக வாகனங்களில் அனுப்பி வைக்கப்படுகிறது என்றார்.

    பேட்டியின் போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முருகன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கண்ணபிரான் உள்ளிட்டோர் உடனிருந்தனர். #GajaCyclone
    ஒரத்தநாடு-பட்டுக்கோட்டை பகுதியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகளை விரைந்து முடிக்க கோரி கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். #GajaCyclone
    தஞ்சாவூர்:

    டெல்டா மாவட்டங்களில் கஜாபுயல் தாக்கியதில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. புயல் தாக்கி 13 நாட்களை கடந்தும் மக்கள் மின்சார வசதி இன்றி தவிக்கின்றனர். பல கிராமங்களில் சாலைகளில் விழுந்த மரங்கள் முழுமையாக அகற்றப்படாததால் வாகன போக்குவரத்து நடைபெறவில்லை. எனவே பாதிக்கப்பட்ட கிராம மக்கள் வாகன போக்குவரத்துள்ள இடங்களுக்கு சென்று நிவாரண பொருட்களை பெற்று செல்கின்றனர். தற்போது வீசிவரும் குளிர் காற்று மற்றும் பனியால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

    புயல் தாக்கி பல நாட்களாகியும் தங்களது பகுதிக்கு அதிகாரிகள் வந்து சேதங்களை கணக்கெடுக்காததாலும், உணவு, குடிநீர் வசதி செய்யாததாலும் தினமும் பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் கஜா புயலால் ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளன. மேலும் மரங்கள், மின் கம்பங்கள் வழியில் விழுந்து கிடக்கின்றன. ஆனால் நிவாரண பணிகளை மேற்கொள்ள போதிய நடவடிக்கை எடுக்கபடவில்லை.

    இதனை கண்டித்து ஒரத்தநாட்டை அடுத்த தெக்கூர் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததால் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக அந்த பகுதியில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதே போல் ஒரத்தநாடு அருகே உள்ள செம்மண் கோட்டை கிராமத்திலும் புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தங்கள் பகுதியில் மீட்பு பணிகள் நடைபெறதாததை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் ஒரத்தநாடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். போலீசார் மீட்பு பணி நடைபெற ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்ததின்பேரில் பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    இதே போல பட்டுக்கோட்டை அறந்தாங்கி சாலை, வடசேரி ரோடு, பொன்னவராயன் கோட்டை ஆகிய இடங்களை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு மின் இணைப்பு வழங்க வேண்டும். குடிநீர் வசதி செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்படும் என்று உறுதி அளித்தனர்.

    இதைத்தொடர்ந்து பொது மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்காததை கண்டித்து நாகை வெளிப்பாளையம் பச்சை பிள்ளையார் கோவில் தெருவில் வசிக்கும் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் தாசில்தார் இளங்கோவன், இன்ஸ்பெக்டர் சிவபிரகாசம் ஆகியோர் பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நிவாரண பொருட்கள் உடனடியாக கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதன்பேரில் பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். #Gajacyclone
    புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முறையாக கணக்கிட முதலமைச்சரை நேரில் சந்தித்து முறையிடுவதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார். #Thirumavalavan #Edappadipalanisamy
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள கீரமங்கலம், பனங்குளம், வடகாடு, கொத்தமங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் ஏற்பட்டுள்ள சேதங்களை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளிடம் விபரங்கள் குறித்து கேட்டறிந்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஆலங்குடி தொகுதியில் லட்சக்கணக்கான பலா மரங்கள் சேதமடைந்துள்ளன. தென்னை மரத்துக்கு ரூ.1,100 என்பதை போல, பலா மரங்களுக்கும் அரசு நிவாரண தொகையை நிர்ணயிக்க வேண்டும். உயரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்.

    தென்னைக்கு அரசு அறிவித்துள்ள நிவாரணம் போதாது. கொத்தமங்கலத்தில் நடைபெற்ற அரசு வாகனம் எரிப்பு வழக்கில் சில மர்மநபர்கள் செய்த தவறுக்கு, 62 அப்பாவி மக்களை கைது செய்தது தவறு. அவர்களை அந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும்.

    சேதமடைந்த அனைத்து மரங்களையும் உரிய முறையில் வருவாய் துறையினர் கணக்கிடவில்லை என்று மக்கள் தெரிவித்துள்ளனர். சேதங்களை முறையாக கணக்கிட்டு நிவாரணத்தை உடனே வழங்க வேண்டும். இது குறித்து முதலமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்துவேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #Thirumavalavan #Edappadipalanisamy
    கஜா புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகள் டிசம்பர் 9-ம் தேதி நடைபெறும் என அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளர் அறிவித்துள்ளார். #GajaCyclone #AnnamalaiUniversity #Exams
    சிதம்பரம்:

    கஜா புயல் கடந்த 16-ம் தேதி வேதாரண்யம், நாகப்பட்டினம் இடையே கரையை கடந்தது. இதனால், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிப்படைந்தன.

    கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாக அன்று நடைபெறுவதாக இருந்த சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகின்றன. தேர்வுகள் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளர் அறிவித்திருந்தார்.



    இந்நிலையில், கஜா புயலால் நவம்பர் 16-ம் தேதி ஒத்திவைக்கப்பட்ட அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகள் டிசம்பர் மாதம் 9-ம் தேதி நடைபெறும் என அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளர் இன்று அறிவித்துள்ளார். #GajaCyclone #AnnamalaiUniversity #Exams
    கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு தங்கப் பதக்கத்தை அர்ப்பணிப்பதாக சென்னை திரும்பிய வாள் சண்டை வீராங்கனை பவானிதேவி தெரிவித்தார். #BhavaniDevi

    சென்னை:

    காமன்வெல்த் வாள் சண்டை போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள கான்பெராவில் சமீபத்தில் நடந்தது.

    இதன் சீனியர் ‘சேபர்’ பிரிவில் பங்கேற்ற சென்னை வீராங்கனை பவானி தேவி தங்கம் வென்றார். இறுதிப்போட்டியில் அவர் இங்கிலாந்து வீராங்கனை எமிராக்சை 15-12 என்ற கணக்கில் வீழ்த்தினார்.

    இதன்மூலம் காமன் வெல்த் வாள் சண்டையில் சீனியர் பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை பவானி தேவி படைத்தார்.

    தமிழகத்துக்கு பெருமை சேர்த்த அவர் இன்று அதிகாலை சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் பவானி தேவிக்கு பெற்றோர், நண்பர்கள், பயிற்சியாளர்கள், வீரர், வீராங்கனைகள் பெருமளவில் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

     


    சர்வதேச போட்டிகளில் வெல்லும் எனது முதல் தங்கப்பதக்கம் ஆகும். எனவே மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். அதோடு மட்டுமின்றி இந்தியாவில் இருந்து ஒருவர் வெல்லும் முதல் தங்கப்பதக்கம் ஆகும். அந்த சாதனையும் எனக்கு கிடைத்துள்ளதால் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைகிறேன்.

    கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு இந்த தங்கப் பதக்கத்தை அர்ப்பணிக்கிறேன். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவால் நான் எஸ்.டி.ஏ.டி.யின் எலைட் திட்டத்தில் சேர்க்கப்பட்டேன். இதனால் சர்வதேச போட்டிகளில் பங்கேற்கவும், வெளிநாடுகளில் பயிற்சி பெறவும் உதவிகரமாக உள்ளது. இதற்கு தமிழக அரசு பெரிதும் உதவி வருகிறது.

    தமிழக முதல்-அமைச்சருக்கும், விளையாட்டுத் துறை அதிகாரிகளுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

    காமன்வெல்த் தங்கப் பதக்கம், அடுத்த சர்வதேச போட்டிகளில் பங்கேற்க எனக்கு பெரிதும் ஊக்குவிப்பாக உள்ளது. எதிர்வரும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

    இவ்வாறு பவானிதேவி கூறினார். #BhavaniDevi

    கஜா புயல் டெல்டா மாவட்ட மக்களின் வாழ்க்கையே அடியோடு புரட்டி போட்டு விட்டதால் மின்சாரம் தடைப்பட்டது. இதனால் அப்பகுதியில் அரிக்கேன் விளக்கு விற்பனை செய்யப்படுகிறது. #gajacyclone #cycloneeffected

    பட்டுக்கோட்டை:

    கஜா புயல் டெல்டா மாவட்ட மக்களின் வாழ்க்கையே அடியோடு புரட்டி போட்டு விட்டது. லட்சக்கணக்கான குடிசை வீடுகள், தென்னை மரங்கள், மற்றும் படகுகள் சேதமாகி உள்ளன. இதனால் வாழ்வாதாரத்தை இழந்த மக்கள் நிவாரண முகாமில் தங்கி உணவுக்காக கையேந்தும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    புயல் தாக்கி 11 நாட்களாகியும் இதுவரை எந்த பகுதிக்கும் மின்சாரம் வழங்க வில்லை.

    குறிப்பாக நாகை, வேதாரண்யம், பட்டுக் கோட்டை, மன்னார் குடி, திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, பேராவூரணி, அதிராம் பட்டினம், திரு மருகல் உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் வழங்கப்படவில்லை. அதே நேரத்தில் சேதமான மின்கம்பங்கள் சரிசெய்யும் பணி போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது.

    தற்போது மக்களுக்கு உணவு, குடிநீர் பிரச்சினையை கூட ஒரளவுக்கு சமாளித்து வருகிறார்கள். ஆனால் இரவு நேரத்தை குழந்தைகளுடன் எப்படி சமாளிப்பது? என்று தெரியாமல் தவித்து வருகிறார்கள். மேலும் ஆங்காங்கே புயல் சேத மரக்கிளைகளின் குப்பைகள், மழை தண்ணீர் தேங்கி கிடப்பதால் சுகாதார கேடும் ஏற்பட்டுள்ளது.

    மின்சாரம் இல்லாததால் மெழுகுவர்த்தி, எமர்சென்சி லைட் மூலம் சமாளித்து வருகிறார்கள்.

    தற்போது பட்டுக்கோட்டை நகரில் மக்கள் இரவு நேரத்தை சமாளிக்க அரிக்கேன் விளக்கை வாங்கி வருகின்றனர்.

    சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு கிராம பகுதிகளில் மண்எண்ணை மூலம் அரிக்கேன் விளக்கை பயன்படுத்தி வருகிறார்கள். பிறகு கால மாற்றத்தில் மெழுகுவர்த்தி, எமர்ஜென்சி லைட்டை பயன்படுத்தினர்.

    கடந்த 16-ந் தேதி வீசிய கஜா புயல், டெல்டா மக்களின் வாழ்க்கையை 20 ஆண்டுகளுக்கு பின்னோக்கி தள்ளி விட்டது. இதேபோல் நாகரீகமற்ற வாழ்க்கையில் மக்களை 20 ஆண்டுகளுக்கு பின்னுக்கு தள்ளி விட்டது என்றால் மிகையாகாது.  #gajacyclone #cycloneeffected

    நாகை மாவட்டத்தில் கஜா புயல் பாதித்த பகுதிகளை மத்தியக்குழுவினர் இன்று ஆய்வு செய்தனர். #GajaCyclone #CentralCommittee

    நாகப்பட்டினம்:

    புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் பாதிப்புகள் குறித்து அறிவதற்காக மத்தியக் குழுவினர் மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் (நீதி) டேனியல் ரிச்சர்டு தலைமையில் வந்துள்ளனர்.

    இந்தக்குழுவில் மத்திய நிதித்துறை(செலவினங்கள்) அமைச்சகத்தின் ஆலோசகர் ஆர்.பி.கவுல், வேளாண்மை, கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலத்துறையின்(ஐதராபாத்) இயக்குனர்(பொறுப்பு) பி.கே.ஸ்ரீவத் சவா, மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சக துணை செயலாளர் மாணிக்சந்திர பண்டிட், மத்திய எரிசக்தித்துறை தலைமை பொறியாளர் வந்தனா சிங்கால், மத்திய நீர் ஆதாரத்துறை இயக்குனர் ஜெ.ஹர்ஷா, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சக கண்காணிப்பு பொறியாளர் ஆர்.இளங்கோவன் ஆகியோர் உள்ளனர்.

    இந்த குழுவினர் நேற்று முன்தினம் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு சென்று அங்கு புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தனர். பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்டு தஞ்சை வந்தனர்.

    தஞ்சை மாவட்டத்தில் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை உளூர், நெய்மேலி, புலவன் காடு, மல்லிப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் சென்று புயல் பாதிப்புகளை பார்வையிட்டார். பின்னர் அங்கிருந்து திருவாரூர் மாவட்டத்திற்கு சென்று அங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ள மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தனர்.

    இதைத் தொடர்ந்து நேற்று இரவு திருவாரூரில் இருந்து புறப்பட்ட மத்தியக் குழுவினர் நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள தனியார் ஓட்டலுக்கு சென்று தங்கினர். பின்னர் இன்று காலை ஓட்டலில் அதிகாரிகளுடன் மத்தியக் குழுவினர் ஆலோசனை நடத்தினர்.

    பின்னர் 8.45 மணிக்கு ஓட்டலில் இருந்து காரில் புறப்பட்டு வேட்டைகாரனிருப்பு பகுதிக்கு சென்றனர். அவர்களுடன் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், ஓ.எஸ்.மணியன், தங்கமணி, சரோஜா, சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன், வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால், நாகை கலெக்டர் சுரேஷ்குமார் மற்றும் அதிகாரிகள் சென்றனர்.

    முதலாவதாக வேட்டைகாரனிருப்பு பகுதிக்கு சென்று மத்தியக்குழுவினர் பார்வையிட்டனர். அங்கு புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்த்தனர். பின்னர் அங்கு இந்திராணி என்பவர் குடிசை வீட்டின் மீது தென்னை மரம் விழுந்து சேதமாகி உள்ளது அதனை பார்வையிட்டு அவர்களிடம் பாதிப்பு குறித்து கேட்டனர்.


    பின்னர் புயலால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதைத் தொடர்ந்து சீரமைக்கப்பட்டு வரும் துணைமின் நிலையத்தை பார்வையிட்டனர்.

    அப்போது அங்கே கூடி நின்றவர்கள் மத்தியக் குழுவினரிடம் புயல் பாதிப்பில் இருந்து விரைவில் மீளமுடியாத நிலைமைக்கு நாங்கள் உள்ளோம். எங்கள் தொழில் அனைத்தும் முடங்கி உள்ளது. பல வருடங்களாக பார்த்து பார்த்து வளர்த்த தென்னை மரங்கள் அடியோடு சாய்ந்து விட்டது. எங்களுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறோம். அரசு தான் இதை கவனத்தில் கொண்டு எங்களுக்கு கூடுதல் நிவாரணம் உடனே கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.

    அவர்களுக்கு ஆறுதல் கூறி அங்கிருந்து சென்ற குழுவினர் வேட்டைகாரனிருப்பு பகுதியில் புயலால் பாதிக்கப்பட்டு சேவை மையங்களில் தங்க வைக்கப்பட்டிருந்த மக்களை சந்தித்து பாதிப்புகள் குறித்து கேட்டனர். அவர்களிடம் உணவு சரியாக வழங்கப்படுகிறதா? சாப்பாடு தரமாக உள்ளதா? என்று கேட்டனர்.இதையடுத்து முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு வழங்கப்படும் உணவுகளை மத்தியக் குழுவினர் சாப்பிட்டு ருசி பார்த்தனர்.

    பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மரங்கள் சாய்ந்து கிடக்கும் பகுதிக்கு சென்று பார்வையிட்டனர். அப்போது பெண்கள் சிலர் அவர்களை சூழ்ந்து கொண்டு எங்கள் வாழ்வாதாரம் அழிந்து விட்டது என்று கண்ணீர் மல்க கூறினர்.

    அதைத் தொடர்ந்து கோவில்பத்து கிராமத்திற்கு சென்று அங்கு சேதமாகி உள்ள செல்போன் கோபுரங்கள், தமிழ்நாடு நுகர்பொருள் கழக சேமிப்பு கிடங்கு ஆகியவை பார்வையிட்டனர். அந்த பகுதியில் சேதங்கள் குறித்து அப்பகுதி மக்களிடம் கேட்டுக் கொண்டனர்.

    அங்கிருந்த புறப்பட்ட குழுவினர் கோடியக்கரை பகுதிக்கு சென்று பாதிக்கப்பட்டுள்ள மீனவர்கள் வீடுகளை பார்வையிட்டனர். அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களை பார்வையிட்டும் அவர்களுக்கு ஆறுதல் கூறினர். அப்போது மீனவர்கள் எங்களுக்கு கூடுதல் நிவாரணம் ஒதுக்க வேண்டும். அதிகாரிகள் இந்த பகுதியை வந்துபார்வையிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதைத் தொடர்ந்து பெரிய குத்தகை, புஷ்பவனம், நாலுவேதபதி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று புயல் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தனர்.

    பின்னர் அங்கிருந்து விழுந்த மாவடி சென்ற குழுவினர் அங்கு சேதமடைந்த படகுகள், வலைகளை பார்வையிட்டனர். அப்போது கூடுதல் நிவாரணம் இருந்தால் மட்டுமே எங்கள் வாழ்க்கை தொடர முடியும். மேலும் புதிய படகுகள் அரசு வழங்க வேண்டும் என்று கூறினர். #GajaCyclone #CentralCommittee

    பட்டுக்கோட்டை அருகே புயலால் விழுந்து கிடந்த மின்கம்பி அறுந்து விவசாயி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #Gajastorm

    பட்டுக்கோட்டை:

    தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள வாட்டாக்குடி தெற்கு கிராமத்தைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு (வயது 60). விவசாயி. இவரது மனைவி தங்கம். 2 மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி விட்டனர்.

    இந்த நிலையில் நேற்று வாட்டாக்குடி தெற்கு மெயின் ரோட்டில் திருநாவுக்கரசு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த பகுதியில் கஜா புயலால் சேதமாகி சாய்ந்து கிடந்த மின்கம்பத்தில் இருந்து தாழ்வாக மின்கம்பி தொங்கி கொண்டிருந்தது.

    இதை கவனிக்காமல் திருநாவுக்கரசு மோட்டார் சைக்கிளில் வந்த போது, மின்கம்பி அவரது கழுத்தை அறுத்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து மதுக்கூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து திருநாவுக்கரசு உடலை மீட்டு பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பட்டுக்கோட்டை பகுதியில் புயலால் சேதமான மின்கம்பங்கள் பல இடங்களில் அப்படியே கிடக்கிறது. இந்த நிலையில் மின்கம்பி அறுத்து விவசாயி பலியான சம்பவம் பட்டுக்கோட்டை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #Gajastorm

    ×