என் மலர்
நீங்கள் தேடியது "Annamalai University"
- 'டிட்வா' புயல் காரணமாக கடலூர் மாவட்டத்திற்கு நாளை அதிகன மழைக்கான ரெட் அலெர்ட்.
- தேசிய பேரிடர் மீட்புப் படையினர் கடலூர் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளனர்.
இலங்கை கடலோரப் பகுதியில் நிலை கொண்டுள்ள 'டிட்வா' புயல் காரணமாக தமிழகத்தில் நாளை செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அதிகனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, 'டிட்வா' புயல் காரணமாக கடலூர் மாவட்டத்திற்கு நாளை அதிகன மழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் கடலூர் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்திற்கு நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்வு மீண்டும் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அண்ணாமலை பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- நீண்ட காலமாக தகுதிக்கு ஏற்ற உரிமைகள் மறுக்கப்படுவதாக அவர்கள் போராடி வருகின்றனர்.
- ஆசிரியர்கள், ஊழியர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றிட பல்கலைக்கழக நிர்வாகமும், தமிழக அரசும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நூற்றாண்டு கால வரலாறு கண்ட அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் பிரச்சினைகளை உடனே தீர்க்க வேண்டியது அவசியம் ஆகும். 7-வது ஊதியக்குழு நிலுவைத் தொகைகளை வழங்குதல், முனைவர் பட்ட ஊக்கத் தொகைகளை வழங்குதல், ஆசிரியர்களுக்கான (சி.ஏ.எஸ்.) பதவி உயர்வுகளை தாமதமின்றி வழங்கல், அயற்பணியிட ஆசிரியர்களை உள்ளெடுப்பு செய்தல் உள்ளிட்ட ஆசிரியர்களின் நீண்டகால கோரிக்கைகளுக்காக அவர்கள் கடந்த 15 ஆண்டுகளாக பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனாலும் அவர்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டு, போராடி பெற்ற சட்டப்படியான உரிமைகளும் கூட ஒவ்வொன்றாக பறிக்கப்படுகிறது. இவைகள் அவர்களது உரிமைக்கு எதிரானது.
நீண்ட காலமாக தகுதிக்கு ஏற்ற உரிமைகள் மறுக்கப்படுவதாக அவர்கள் போராடி வருகின்றனர். ஆகவே ஆசிரியர்கள், ஊழியர்களின் மேற்கண்ட கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றிட பல்கலைக் கழக நிர்வாகமும், தமிழக அரசும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- 164 பேரின் தேர்ச்சி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
- அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் பெறப்பட்ட பி.லிட் பட்டம் தமிழாசிரியர் பணிக்கு தகுதியானது தான் என்று தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் நோக்குடன் தமிழாசிரியர் பணிக்கு 518 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இந்த நிலையில், 164 பேரின் தேர்ச்சி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
அவர்கள் அனைவரும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி.லிட் பட்டம் பெற்றவர்கள். அந்தப் பட்டம் தமிழாசிரியர் பணிக்கு அடிப்படைத் தகுதியான பி.ஏ. தமிழ் இலக்கியம் பட்டத்திற்கு இணையானது இல்லை என்பதால் அவர்களின் தேர்ச்சி நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்திருக்கிறது. இது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத, சமூகநீதிக்கு எதிரான, ஒருதலைபட்சமான முடிவாகும்.
சென்னையில் கடந்த 11.4.2023-ந் தேதி நடைபெற்ற தமிழ்நாடு உயர்கல்வி மாமன்றத்தின் சமத்தகுதி நிர்ணயக்குழுவின் கூட்டத்தில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் பி.லிட் பட்டம் பி.ஏ. (தமிழ் இலக்கியம்) படிப்புக்கு இணையானது அல்ல என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருப்பதைக் காரணம் காட்டி, அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி.லிட் பட்டம் பெற்றவர்களுக்கு ஆசிரியர் பணி மறுக்கப்பட்டிருக்கிறது.
பி.ஏ. தமிழ் இலக்கியத்திற்கான பாடத்திட்டத்தில் உள்ள 70-80 சதவீத பாடங்களைக் கொண்ட எந்த படிப்பும் பி.ஏ. தமிழ் இலக்கியத்திற்கு இணையானதாகவே பார்க்கப்பட வேண்டும். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.லிட் பட்டம் பெற்றவர்கள், அதை அடிப்படைத் தகுதியாகக் கொண்டு தமிழ் இலக்கியத்தில் பி.எட் பட்டம் பெற்றுள்ளனர்; அதைத் தொடர்ந்து ஆசிரியர் வாரியம் நடத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்று தமிழாசிரியர் ஆக தகுதி பெற்றுள்ளனர். இத்தகைய சூழலில் பொருந்தாதக் காரணங்களைக் கூறி 164 பட்டதாரி ஆசிரியர்களின் வேலைவாய்ப்பை பறிப்பது மிகப்பெரிய சமூக அநீதி ஆகும். இந்த அநீதியை களைய வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு உண்டு.
எனவே, அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் பெறப்பட்ட பி.லிட் பட்டம் தமிழாசிரியர் பணிக்கு தகுதியானது தான் என்று தமிழக அரசு அறிவிக்க வேண்டும். இது தொடர் பான வழிகாட்டுதல்களை ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு தமிழ்நாடு உயர் கல்வி மாமன்றத்துடன் இணைந்து உயர்கல்வித் துறை வழங்க வேண்டும், அதன் மூலம் தேர்ச்சி நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழக பி.லிட் பட்டதாரிகள் 164 பேருக்கும் தமிழாசிரியர் பணி வழங்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- கன மழை எச்சரிக்கை காரணமாக சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
- தேர்வுக்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று பல்கலைக்கழக பதிவாளர் தெரிவித்துள்ளார்.
அண்ணாமலைநகர்:
கடலூர் மாவட்டத்துக்கு விடுக்கப்பட்டுள்ள கன மழை எச்சரிக்கை காரணமாக சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு இன்று (செவ்வாய்க்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே இன்று அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் (கடலூர் மாவட்டம்) நடைபெற இருந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுகிறது.
இந்த தேர்வுக்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) மு. பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
- அரசு நியமித்த தேடுதல் குழுவின் யுஜிசி பிரதிநிதி இல்லாமல் இருப்பது விதிகளுக்கு முரணானது.
- நான் பிறப்பித்து உத்தரவை அமல்படுத்துங்கள் என்று தமிழக ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
அண்ணாமலை பல்கலை துணைவேந்தர் நியமனத்திற்கான தேடுதல் குழுவை திரும்பப் பெற வேண்டும் என தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்..
தமிழக அரசு அமைத்துள்ள தேடுதல் குழுவை திரும்ப பெற வேண்டும் என்றும் அரசு நியமித்த தேடுதல் குழுவின் யுஜிசி பிரதிநிதி இல்லாமல் இருப்பது விதிகளுக்கு முரணானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், துணை வேந்தரை தேர்ந்தெடுக்க பல்கலைக்கழக மானிய குழுவின் பிரதிநிதியையும் தேடுதல் குழுவில் சேர்த்து ஏற்கனவே நான் பிறப்பித்து உத்தரவை அமல்படுத்துங்கள் என்று தமிழக ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
- நாளை முதல், திமுக ஆட்சியை அகற்றும் வரை காலில் செருப்பு அணிய மாட்டேன்.
- 48 நாட்கள் விரதம் இருக்கப் போகிறேன். முருகப்பெருமானிடம் முறையிட போகிறேன்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
மாணவி வன்கொடுமை சம்பவத்தில் சைதை திமுக பிரமுகருக்கு தொடர்பு இருக்கிறது.
மாணவி பாலியல் வழக்கில் எப்ஐஆர் எப்படி வெளியே வந்தது. பாதிக்கப்பட்ட மாணவி குற்றம் செய்தது போல எப்ஐஆர் எழுதியுள்ளார்.
எப்ஐஆரில் அதிக ஆபாச வார்த்தைகள் உள்ளன, இப்படியெல்லாம் எப்ஐஆர் போடுவார்களா ?
பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர், முகவரி முழுவதையும் போலீசார் வெளியிட்டதற்கு திமுகவினர் வெட்கப்பட வேண்டும்.
பாதிக்கப்பட்ட பெண்மை அவமானப்படுத்தும் நோக்கத்தில் எப்ஐஆர் வௌியிடப்பட்டுள்ளது.
இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று ஒரு முடிவு எடுத்து இருக்கிறேன். இந்த அரசியலாகாது, மாநிலத் தலைவராக தொண்டராக ஒரு சபதம் எடுத்துள்ளேன்.
இனிமேல் ஆர்ப்பாட்டம் கிடையாது. நாளை முதல் வேறு மாதிரியாக தான் டீல் செய்வோம்.
நாளை காலை 10 மணிக்கு என் வீட்டின் முன்பு என்னை நானே சாட்டையால் 6 முறை அடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளேன்.
நாளை முதல், திமுக ஆட்சியை அகற்றும் வரை செருப்பு அணிய மாட்டேன்.
48 நாட்கள் விரதம் இருக்கப் போகிறேன். முருகப்பெருமானிடம் முறையிட போகிறேன்.
நாளை முதல் எனது அரசியல் வேறு மாதிரி இருக்கும். ஆரோக்கியமான அரசியல், நாகரீகமான அரசியல், விவாதம், மரியாதை எல்லாம் இருக்காது.
எதற்கு அரசியல் கட்சியினருக்கு மரியாதை கொடுக்க வேண்டும். இனி மரியாதையெல்லாம் கிடையாது.
சாதாரண மனிதர்களின் பிரச்சினைகளை பேச வேண்டும். அவர்கள் இல்லாமல் அரசியல் கிடையாது.
கை உடைந்தது, கால் உடைந்தது எல்லாம் ஒரு தண்டனையா ? அரசியலுக்கு வந்ததால் அடங்கி உட்கார்ந்து கொண்டிருக்கிறேன்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் சிசிடிவி வேலை செய்யவில்லை என்று கூறுகிறார்கள். நிர்பயா நிதி எங்கே சென்றது ?
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- அண்ணாமலை, 6 முறை சாட்டையால் தன்னைத்தானே அடித்து 'கவன ஈர்ப்பு' போராட்டம் நடத்தினார்.
- சாட்டையால் அடிக்கும்போது அங்கு கூடியிருந்த பாஜக தொண்டர்கள் வெற்றிவேல்... வீரவேல் என முழக்கமிட்டனர்.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை கண்டித்து பல்வேறு மாணவர் அமைப்பினரும், அரசியல் கட்சியினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதனையடுத்து மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து 6 முறை சாட்டையால் அடித்து போராட்டம் நடத்துவேன் என்றும் தி.மு.க. ஆட்சியை அகற்றும் வரை நான் காலணிகள் அணிய மாட்டேன். நாளை முதல் 48 நாட்களுக்கு நான் விரதம் இருந்து அறுபடை முருகன் கோவில்களுக்கு சென்று, முருகப்பெருமானிடம் முறையிடப்போகிறேன் என்று அண்ணாமலை நேற்று தெரிவித்து இருந்தார்.
அதன்படி, இன்று காலை 10 மணிக்கு அண்ணாமலை, 6 முறை சாட்டையால் தன்னைத்தானே அடித்து 'கவன ஈர்ப்பு' போராட்டம் நடத்தினார்.
மேல் சட்டை அணியாமல், பச்சை வேட்டி அணிந்து கோவையில் உள்ள அவரது வீட்டின் முன்பு இந்த போராட்டத்தை அண்ணாமலை நடத்தினார். அண்ணாமலை சாட்டையால் அடிக்கும்போது அங்கு கூடியிருந்த பாஜக தொண்டர்கள் வெற்றிவேல்... வீரவேல் என முழக்கமிட்டனர்.
இந்நிலையில், அண்ணாமலை அடித்துக் கொள்வதற்கு முதலில் அசல் சாட்டை கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், பிறகு வேறு ஒரு சாதாரண சாட்டையால் அவர் அடித்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
போராட்டத்தில் ஈடுபடும் அண்ணாமலை அசல் சாட்டையால் அடித்துக் கொள்ளாமல், அவருக்கேற்ப வேறு ஒரு சாட்டையால் அடித்துக் கொண்டுள்ளாரா என வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்து வருகிறது.
திறந்த நிலை பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் பொன்முடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:-
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தொலை தூர கல்வியை மீண்டும் தொடங்க பல்கலைக்கழக மானிய குழுவிடம் கவர்னர் முறையிட வேண்டும்.
பெண் கல்வி வளர வேண்டும் என்பதே திராவிட மாடல். இதில் கவர்னருக்கும் மாற்று கருத்து இருக்காது.
இடைநின்ற மாணவர்கள் மீதமுள்ள படிப்பை திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் தொடர கவர்னர் உதவி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
சிதம்பரம் அண்ணா மலைப்பல்கலைக்கழகத்தில் கடந்த 2009-11-ம் ஆண்டுகளில் நடந்த ஊழல்கள் தொடர்பாக அப்போதைய துணைவேந்தர் ராமநாதன், பதிவாளர் ரத்தினசபாபதி உள்ளிட்டோர் மீது கையூட்டுத் தடுப்புப் பிரிவினர் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கி உள்ளனர். பல்கலைக் கழக சீரழிவுக்கு காரணமானவர்கள் மீது விசாரணை தொடங்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது ஆகும்.
அதேநேரத்தில் பல்கலைக் கழக ஊழலுக்கு 2011-ம் ஆண்டுடன் முற்றுப்புள்ளி வைக்கப்படவில்லை; பல்கலைக்கழக நிர்வாகம் புனிதமடைந்து விடவில்லை என்பதையும் கையூட்டுத் தடுப்புப் பிரிவு அறிந்து கொள்ள வேண்டும்.
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் கணினி புரோகிராமர்களாக பணியாற்றி வந்த 189 பேரும், ஆசிரியர் அல்லாத பணியில் இருந்த 30 பேரும், 2016-ம் ஆண்டு பேராசிரியர்களாக மாற்றப்பட்டனர். அவர்களிடமிருந்து தலா ரூ.5 லட்சம் வீதம் மொத்தம் ரூ.10.95 கோடி கையூட்டாக பெறப்பட்டுள்ளது;
பல்கலைக் கழகத்தின் சார்பில் தொலைதூர கல்வி இயக்கத்திற்கான புத்தகங்கள் அச்சிடுதல், பொருட்களை கொள்முதல் செய்தல் ஆகியவற்றுக்கான ஒப்பந்தங்களை வழங்குவதில் 30 சதவீதம் கையூட்டு பெறப்பட்டது;
தொலைதூரக் கல்வி இயக்ககத்தில் பணியாற்றியவர்களை இடமாற்றம் செய்து, அதை ரத்து செய்வதற்காக ஒவ்வொருவரிடமிருந்தும் லட்சக்கணக்கில் கையூட்டு பெறப்பட்டுள்ளது.
மருத்துவக் கல்வியை தரமாக மாற்ற வேண்டும் என்று அனைத்துத் தரப்பிலிருந்தும் வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பல ஆண்டுகளாக மருத்துவப் படிப்பில் தேர்ச்சி பெற முடியாமல் தவித்து வந்த மாணவர்கள் 150 பேரிடம் தலா ரூ.25 லட்சம் வீதம் கையூட்டு பெறப்பட்டு அவர்களுக்கு தேர்ச்சி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.37.5 கோடி கையூட்டாக பெறப்பட்டுள்ளது. மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைகளுக்கு கருவிகளை வாங்குவதற்காக அப்போதைய துணை வேந்தர் மணியனின் மகனுக்கு நெருக்கமான நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளது.
இதில் நடைபெற்ற ஊழல்கள் குறித்த ஆவணங்களை கடலூர் கையூட்டுத் தடுப்புப் பிரிவு ஆய்வாளர் சதீஷ் சில ஆண்டுகளுக்கு முன் பறிமுதல் செய்த போதிலும் மேல்நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
பல்கலைக்கழகத்தின் உபரி பணியாளர்கள், பேராசிரியர்களை அவர்களுக்கு விருப்பமான இடத்துக்கு மாற்றுவதற்கு கையூட்டு, பல்கலைக் கழகத்திற்கு முதல்வர்கள், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர், துணைத் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர், இயக்குநர்கள், துணை இயக்குநர்கள், துறைத் தலைவர்கள் ஆகிய பதவிகளுக்கு ஆட்களை நியமிப்பதில் ஊழல், பல்கலைக்கழக வளாகத்தில் செயல்பட்டு வரும் 3 உணவகங்களுக்கான ஒப்பந்தம் வழங்குவதில் ஊழல், நூலகங்களுக்கு புத்தகங்களை வாங்கியதிலும், கண்காணிப்பு கேமிராக்களை வாங்கியதிலும் ஊழல் என முந்தைய துணைவேந்தர் மணியன் மீதான ஊழல் பட்டியல் வரிசை நீள்வதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களே குற்றம்சாட்டியிருக்கின்றன.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஊழல் புற்றுநோயாய் ஊடுருவியுள்ள நிலையில், குறிப்பிட்ட காலம் வரையிலான ஊழல்கள் குறித்து மட்டும் விசாரணை நடத்துவது நிர்வாகத்தை தூய்மைப்படுத்த உதவாது. மாறாக, மேலும் துணிச்சலுடன் ஊழல் செய்யவே வழி வகுக்கும்.
எனவே, சில மாதங்களுக்கு முன்பு வரை துணைவேந்தராக பதவி வகித்த மணியன் மற்றும் அவரது குழுவினர் நடத்திய ஊழல்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும். அதேநேரத்தில் இந்த ஊழல்களில் ஆட்சியாளர்களுக்கும் தொடர்பு இருப்பதால் விசாரணை நியாயமாக நடைபெற வாய்ப்பில்லை. ஆகவே, அண்ணாமலை பல்கலையில் கடந்த 10 ஆண்டுகளில் நடந்த ஊழல்கள் பற்றி சிபிஐ விசாரணைக்கு ஆணையிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார். #Ramadoss
சிதம்பரம்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் சம்மந்தம் தெருவை சேர்ந்தவர் முனியப்பன். இவரது மகன் வேலாயுதம் (வயது 26). இவர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மொழியியல் துறையில் பி.எச்.டி.படித்து வருகிறார். அதே பல்கலைக்கழகத்தில் பி.எட். இரண்டாம் ஆண்டு மாணவி ஒருவர் படித்து வருகிறார்.
மாணவர் வேலாயும் அந்த மாணவியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்துள்ளார். மேலும் அவர் அந்த புகைப்படத்தை மாணவிக்கும், தனது நண்பர்களுக்கும் வாட்ஸ் அப் மூலம் அனுப்பியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து அவர் சமூக வலைத் தளங்களிலும் அந்த படங்களை வெளியிட்டுள்ளார். அந்த ஆபாச படத்தை பார்த்து அந்த மாணவி அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் அவர் இது குறித்து சிதம்பரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாணவிக்கு ஆபாச படம் அனுப்பிய மாணவர் வேலாயுதத்தை கைது செய்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணைநடத்தி வருகின்றனர்.
மாணவியின் புகைப் படத்தை ஆபாசமாக சித்தரித்து வாட்ஸ் அப்பில் வெளியிட்ட சம்பவம் சிதம்பரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






