என் மலர்
நீங்கள் தேடியது "அண்ணாமலை பல்கலைக்கழகம்"
- 'டிட்வா' புயல் காரணமாக கடலூர் மாவட்டத்திற்கு நாளை அதிகன மழைக்கான ரெட் அலெர்ட்.
- தேசிய பேரிடர் மீட்புப் படையினர் கடலூர் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளனர்.
இலங்கை கடலோரப் பகுதியில் நிலை கொண்டுள்ள 'டிட்வா' புயல் காரணமாக தமிழகத்தில் நாளை செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அதிகனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, 'டிட்வா' புயல் காரணமாக கடலூர் மாவட்டத்திற்கு நாளை அதிகன மழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் கடலூர் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்திற்கு நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்வு மீண்டும் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அண்ணாமலை பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- நீண்ட காலமாக தகுதிக்கு ஏற்ற உரிமைகள் மறுக்கப்படுவதாக அவர்கள் போராடி வருகின்றனர்.
- ஆசிரியர்கள், ஊழியர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றிட பல்கலைக்கழக நிர்வாகமும், தமிழக அரசும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நூற்றாண்டு கால வரலாறு கண்ட அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் பிரச்சினைகளை உடனே தீர்க்க வேண்டியது அவசியம் ஆகும். 7-வது ஊதியக்குழு நிலுவைத் தொகைகளை வழங்குதல், முனைவர் பட்ட ஊக்கத் தொகைகளை வழங்குதல், ஆசிரியர்களுக்கான (சி.ஏ.எஸ்.) பதவி உயர்வுகளை தாமதமின்றி வழங்கல், அயற்பணியிட ஆசிரியர்களை உள்ளெடுப்பு செய்தல் உள்ளிட்ட ஆசிரியர்களின் நீண்டகால கோரிக்கைகளுக்காக அவர்கள் கடந்த 15 ஆண்டுகளாக பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனாலும் அவர்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டு, போராடி பெற்ற சட்டப்படியான உரிமைகளும் கூட ஒவ்வொன்றாக பறிக்கப்படுகிறது. இவைகள் அவர்களது உரிமைக்கு எதிரானது.
நீண்ட காலமாக தகுதிக்கு ஏற்ற உரிமைகள் மறுக்கப்படுவதாக அவர்கள் போராடி வருகின்றனர். ஆகவே ஆசிரியர்கள், ஊழியர்களின் மேற்கண்ட கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றிட பல்கலைக் கழக நிர்வாகமும், தமிழக அரசும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணை நடத்தியது.
- சென்னை உயர்நீதிமன்றத்திற்குத் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
அண்ணா பல்கலைக்கழக மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தி.மு.க. நிர்வாகியான ஞானசேகரன் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதைத் தமிழக வெற்றிக் கழகம் வரவேற்கிறது.
இவ்வழக்கில் தமிழ்நாடு அரசின் நிர்வாகத் தோல்வியை மறைப்பதற்காகத் தி.மு.க.வினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். இது தொடர்பாக நான் தமிழ்நாடு ஆளுநரைச் சந்தித்து, பாதிக்கப்பட்ட மாணவிக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்றும், குற்றவாளிக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும் என்றும் கோரிக்கை மனுவை வழங்கினேன்.
பல்வேறு அரசியல் கட்சிகளின் போராட்டங்களைத் தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணை நடத்தியது.
அப்போது, தமிழக முதலமைச்சரின் நேரடிக் கட்டுப்பாட்டில் செயல்படும் காவல் துறையின் தவறால் முதல் தகவல் அறிக்கை வெளியாகி, பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதற்காக, அவருக்கு இடைக்கால இழப்பீடாக ரூ.25 லட்சத்தைத் தமிழக அரசு வழங்க வேண்டும் என்றும், அலட்சியமாகச் செயல்பட்ட காவல் துறை அதிகாரிகளிடம் இருந்தே இந்தத் தொகையை வசூலித்துக் கொள்ளலாம் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது என்பதை மக்கள் மறக்கவில்லை.
தொடர்ந்து இவ்வழக்கைத் துரிதமாக விசாரிக்க, டிசம்பர் 28ஆம் தேதி சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பிறகே ஜனவரி 5ஆம் தேதி ஞானசேகரன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். பின்னர் பிப்ரவரி 24ஆம் தேதி ஞானசேகரனுக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, வழக்கு மகளிர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு, சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது.
சென்னை, உயர்நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் விசாரணை நடைபெற்றதால் மட்டுமே இந்த வழக்கு விரைவாக நடத்தப்பட்டு, தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
இதற்காகச் சென்னை உயர்நீதிமன்றத்திற்குத் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த வழக்கில் குற்றவாளி என்று மகளிர் நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ள ஞானசேகரனுக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்றும், இந்த வழக்கு தொடர்பாக சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.
முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் நிர்வாகத் தோல்வியின் காரணமாகச் சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து இவ்வழக்கை துரிதப்படுத்தியதால் தான், 5 மாதங்களில் தீர்ப்பு வந்துள்ளது.
ஆனால் இவற்றையெல்லாம் மறைத்து, தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டதற்குத் தமிழ்நாடு காவல் துறை தான் காரணம் என்று மனசாட்சியின்றிப் பச்சைப் பொய்யை தி.மு.க. தலைவர் கூறி சுயதம்பட்டம் அடித்துக்கொள்கிறார் என்பதை அனைவரும் அறிவர்.
சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற முடியாமல், பெண்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கத் தவறிய, செயல் திறன் அற்ற அவல ஆட்சி இது. இந்தக் கொடுமைகளுக்காகத் தமிழக மக்கள் இன்னும் 10 மாதங்களில் தி.மு.க. அரசை வீட்டுக்கு அனுப்பி வைப்பது உறுதி என்பதை நீதியின் பக்கம் நின்று, நெஞ்சுறுதி மிக்க மகளிர் பக்கம் நின்று தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- பல்கலைக்கழகத்தை அரசே எடுத்துக் கொள்ளும் வகையில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் சட்ட முன்வடிவு இயற்றப்பட்டு அ.தி.மு.க. ஆட்சியில் சட்டமாக்கப்பட்டது.
- கவுரவ விரிவுரையாளர்கள் போல நடத்தப்படுவதாகவும் எவ்வித பதவி உயர்வும் வழங்கப்படவில்லை என்றும் பாதிக்கப்பட்ட பேராசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
சென்னை:
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
1929-ம் ஆண்டு தொடங்கப்பட்ட அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மிகவும் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த பல்கலைக்கழகமாகும். இந்தப் பல்கலைக் கழகம் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்தபோது, ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியரின் நலனைக் கருத்தில் கொண்டு, இந்தப் பல்கலைக்கழகத்தை அரசே எடுத்துக் கொள்ளும் வகையில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் சட்ட முன்வடிவு இயற்றப்பட்டு அ.தி.மு.க. ஆட்சியில் சட்டமாக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தேவைக்கு அதிகமாக பணியாற்றிக் கொண்டிருந்த பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் உள்ளிட்டோர் அரசு கல்லூரிகளுக்கு அயல் பணியில் மாற்றப்பட்டனர். அவர்கள் கவுரவ விரிவுரையாளர்கள் போல நடத்தப்படுவதாகவும் எவ்வித பதவி உயர்வும் வழங்கப்படவில்லை என்றும் பாதிக்கப்பட்ட பேராசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, இந்தப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இருந்து அரசுக் கல்லூரிகளில் அயற்பணியில் பணியமர்த்தப்பட்ட பேராசிரியர்கள் மற்றும் உதவிப் பேராசிரியர்களை அந்தந்த கல்லூரிகளிலேயே பணியமர்த்தி, அவர்களுடைய மன உளைச்சலைத் தடுத்து நிறுத்தவும், அவர்கள் பதவி உயர்வு பெறவும் வழிவகை செய்ய வேண்டுமென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- கருத்தரங்கை தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.
- கருத்தரங்கில் 3 அமர்வுகளாக தொழில்நுட்பம், பருவநிலை, வேளாண்மை, உடல் நலம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் விவாதம் நடைபெறுகிறது.
சிதம்பரம்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஜி.20 மாநாடு குறித்து ஒரு நாள் சிறப்பு கருத்தரங்க தொடக்கவிழா பல்கலைக்கழக சாஸ்திரி அரங்கில் இன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது. இந்த கருத்தரங்கை தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி தலைமை வகித்து தொடங்கி வைத்தார். துணைவேந்தர் ராம.கதிரேசன் வரவேற்புரையாற்றினார். தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் திருவள்ளுவன், புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக துணைவேந்தர் மோகன் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். நிகழ்ச்சியில் பதிவாளர் சிங்காரவேலு, கருத்தரங்கு அமைப்பு செயலாளர் ரமேஷ்குமார், அறிவுடைநம்பி ஆகியோர் உள்பட பலர் பங்கேற்றனர். இந்த கருத்தரங்கில் 3 அமர்வுகளாக தொழில்நுட்பம், பருவநிலை, வேளாண்மை, உடல் நலம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் விவாதம் நடைபெறுகிறது.
கருத்தரங்கில் பங்கேற்பதற்காக சென்னை கவர்னர் மாளிகையிலிருந்து கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று மாலை கார் மூலம் புறப்பட்டு சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக விருந்தினர் விடுதிக்கு இரவு வந்தார். அவரை கடலூர் மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், பல்கலைக்கழக துணைவேந்தர் ராம.கதிரேசன், பதிவாளர் சிங்காரவேலு ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர், பல்கலைக்கழக விருந்தினர் விடுதியில் தங்கிய கவர்னர் சிறப்பு கருத்தரங்கை இன்று தொடங்கி வைத்தார்.
- 164 பேரின் தேர்ச்சி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
- அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் பெறப்பட்ட பி.லிட் பட்டம் தமிழாசிரியர் பணிக்கு தகுதியானது தான் என்று தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் நோக்குடன் தமிழாசிரியர் பணிக்கு 518 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இந்த நிலையில், 164 பேரின் தேர்ச்சி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
அவர்கள் அனைவரும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி.லிட் பட்டம் பெற்றவர்கள். அந்தப் பட்டம் தமிழாசிரியர் பணிக்கு அடிப்படைத் தகுதியான பி.ஏ. தமிழ் இலக்கியம் பட்டத்திற்கு இணையானது இல்லை என்பதால் அவர்களின் தேர்ச்சி நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்திருக்கிறது. இது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத, சமூகநீதிக்கு எதிரான, ஒருதலைபட்சமான முடிவாகும்.
சென்னையில் கடந்த 11.4.2023-ந் தேதி நடைபெற்ற தமிழ்நாடு உயர்கல்வி மாமன்றத்தின் சமத்தகுதி நிர்ணயக்குழுவின் கூட்டத்தில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் பி.லிட் பட்டம் பி.ஏ. (தமிழ் இலக்கியம்) படிப்புக்கு இணையானது அல்ல என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருப்பதைக் காரணம் காட்டி, அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி.லிட் பட்டம் பெற்றவர்களுக்கு ஆசிரியர் பணி மறுக்கப்பட்டிருக்கிறது.
பி.ஏ. தமிழ் இலக்கியத்திற்கான பாடத்திட்டத்தில் உள்ள 70-80 சதவீத பாடங்களைக் கொண்ட எந்த படிப்பும் பி.ஏ. தமிழ் இலக்கியத்திற்கு இணையானதாகவே பார்க்கப்பட வேண்டும். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.லிட் பட்டம் பெற்றவர்கள், அதை அடிப்படைத் தகுதியாகக் கொண்டு தமிழ் இலக்கியத்தில் பி.எட் பட்டம் பெற்றுள்ளனர்; அதைத் தொடர்ந்து ஆசிரியர் வாரியம் நடத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்று தமிழாசிரியர் ஆக தகுதி பெற்றுள்ளனர். இத்தகைய சூழலில் பொருந்தாதக் காரணங்களைக் கூறி 164 பட்டதாரி ஆசிரியர்களின் வேலைவாய்ப்பை பறிப்பது மிகப்பெரிய சமூக அநீதி ஆகும். இந்த அநீதியை களைய வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு உண்டு.
எனவே, அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் பெறப்பட்ட பி.லிட் பட்டம் தமிழாசிரியர் பணிக்கு தகுதியானது தான் என்று தமிழக அரசு அறிவிக்க வேண்டும். இது தொடர் பான வழிகாட்டுதல்களை ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு தமிழ்நாடு உயர் கல்வி மாமன்றத்துடன் இணைந்து உயர்கல்வித் துறை வழங்க வேண்டும், அதன் மூலம் தேர்ச்சி நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழக பி.லிட் பட்டதாரிகள் 164 பேருக்கும் தமிழாசிரியர் பணி வழங்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- கன மழை எச்சரிக்கை காரணமாக சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
- தேர்வுக்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று பல்கலைக்கழக பதிவாளர் தெரிவித்துள்ளார்.
அண்ணாமலைநகர்:
கடலூர் மாவட்டத்துக்கு விடுக்கப்பட்டுள்ள கன மழை எச்சரிக்கை காரணமாக சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு இன்று (செவ்வாய்க்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே இன்று அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் (கடலூர் மாவட்டம்) நடைபெற இருந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுகிறது.
இந்த தேர்வுக்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) மு. பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
- குற்றவாளி ஞானசேகரனுக்கு பிணை வழங்கக்கூடாது.
- குற்ற பத்திரிகை தாக்கல் செய்து சிறையில் வைத்து விசாரிக்க வேண்டும்.
அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக ஆதங்கத்துடன் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, " நாளை காலை 10 மணிக்கு என் வீட்டின் முன்பு என்னை நானே சாட்டையால் 6 முறை அடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளேன். திமுக ஆட்சியை அகற்றும் வரை காலில் செருப்பு அணிய மாட்டேன். 48 நாட்கள் விரதம் இருக்கப் போகிறேன். முருகப்பெருமானிடம் முறையிட போகிறேன்.
நாளை முதல் எனது அரசியல் வேறு மாதிரி இருக்கும். ஆரோக்கியமான அரசியல், நாகரீகமான அரசியல், விவாதம், மரியாதை எல்லாம் இருக்காது" என்றார்.
இந்நிலையில், கோவை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேட்டி அளித்தார்.
அப்போது, அண்ணாமலையின் போராட்ட அறிவிப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதுகுறித்து பதில் கூறிய திருமாவளவன் கூறியதாவது:-
அண்ணா பல்கலைக்கழக விவகாரம் வேதனைக்குரியது. ஞானசேகரன் உடனடியாக கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. குற்றவாளி கைது செய்யப்பட்டது ஆறுதல் அளிக்கிறது.
குற்றவாளிக்கு பிணை வழங்கக்கூடாது. குற்ற பத்திரிகை தாக்கல் செய்து சிறையில் வைத்து விசாரிக்க வேண்டும்.
ஞானசேகரனுக்கும், திமுகவுக்கும் தொடர்பு இருப்பதுபோல் காட்டுவது ஆதார அரசியல்.
அண்ணாமலை பரபரப்பு அரசியல் செய்ய விரும்புகிறார். அதிமுக எதிர்க்கட்சி இல்லை. பாஜக தான் எதிர்க்கட்சி என காட்ட நினைக்கிறார்.
லண்டன் போயிட்டு வந்த பிறகு அண்ணாமலை ஏன் இப்படி ஆனார் என தெரியவில்லை.
அண்ணாமலையின் போராட்ட அறிவிப்புகள் நகைப்புக்குரியவையாக மாறிவிட கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
திறந்த நிலை பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் பொன்முடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:-
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தொலை தூர கல்வியை மீண்டும் தொடங்க பல்கலைக்கழக மானிய குழுவிடம் கவர்னர் முறையிட வேண்டும்.
பெண் கல்வி வளர வேண்டும் என்பதே திராவிட மாடல். இதில் கவர்னருக்கும் மாற்று கருத்து இருக்காது.
இடைநின்ற மாணவர்கள் மீதமுள்ள படிப்பை திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் தொடர கவர்னர் உதவி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக சட்டசபையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் உள்ள அம்சங்கள் வருமாறு:-
வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் பயில்வதற்கு வழிவகை செய்யும் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தினை, இந்த அரசு முழு உத்வேகத்துடன் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டம் தொடங்கப்பட்ட நாள் முதல் இன்று வரை, 4.19 லட்சம் குழந்தைகள் பயனடைந்துள்ளனர்.
இத்திட்டத்திற்காக 2019-2020 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 248.76 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2019-2020-ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் பள்ளிக் கல்வித்துறைக்காக 28,756.62 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மூன்று பல்வகை தொழில் நுட்பக் கல்லூரிகளை 2018- 2019ஆம் கல்வி ஆண்டில் அரசு நிறுவியுள்ளதுடன், 29 சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளைத் தொடங்கவும் அனுமதி வழங்கியுள்ளது. 2019- 2020ஆம் ஆண்டில், ராமேஸ்வரத்தில் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பெயரில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நிறுவப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
முதல் தலைமுறை பட்டதாரி மாணவ- மாணவியருக்கு கல்விக் கட்டணத்தைத் திரும்ப வழங்கும் திட்டத்திற்காக 2019-2020ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 480.25 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சர்வதேசத் தரத்திற்கு கல்வி நிறுவனங்களின் தரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளுள் ஒன்றாக, தனியார் பல்கலைக்கழகங்களை நிறுவும் சட்டங்களை அரசு இயற்றி சிவசுப்பிரமணிய நாடார் பல்கலைக்கழகம், சாய் பல்கலைக்கழகம் ஆகிய இரண்டு தனியார் பல்கலைக்கழகங்களை அரசு அனுமதித்துள்ளது.
அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு 250 கோடி ரூபாய் உள்பட பல்வேறு பல்கலைக்கழகங்களுக்கு 538.10 கோடி ரூபாய் தொகுப்பு நல்கைத் தொகையாக இந்த வரவு-செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உயர் தொழில்நுட்பத் திறன்களும் சிறப்புத் தகுதிகளும் கொண்ட பணியாளர்களுக்கான தேவை உலக அளவில் வளர்ந்து வருவதைக் கருத்தில் கொண்டு, தொழிற் கல்லூரிகளில் உள்ள வசதிகளை சர்வதேசத் தரத்திற்கு தொடர்ந்து மேம்படுத்துவது அவசியமாகிறது.
எனவே மாநிலத்தில் முதன்மையான பல்கலைக் கழகமான அண்ணா பல்கலைக்கழகத்திலும், தொழில்நுட்பக் கல்வி ஆணையரின் கட்டுப்பாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளிலும் சர்வதேசத் தரத்தில் கற்பித்தலுக்குத் தேவைப்படும் உபகரணங்கள் உள்ளிட்ட அதன் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக, அண்ணா பல்கலைக் கழகத்திற்கு 100 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்.
இவ்வாறு பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #TNBudget2019 #Budget2019 #OPS #AnnaUniversity







