search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு 250 கோடி ரூபாய் ஒதுக்கீடு
    X

    அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு 250 கோடி ரூபாய் ஒதுக்கீடு

    அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு 250 கோடி ரூபாய் உள்பட பல்வேறு பல்கலைக்கழகங்களுக்கு 538.10 கோடி ரூபாய் தொகுப்பு நல்கைத் தொகையாக இந்த வரவு-செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. #Budget2019 #OPS
    சென்னை:

    தமிழக சட்டசபையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் உள்ள அம்சங்கள் வருமாறு:-

    வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் பயில்வதற்கு வழிவகை செய்யும் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தினை, இந்த அரசு முழு உத்வேகத்துடன் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டம் தொடங்கப்பட்ட நாள் முதல் இன்று வரை, 4.19 லட்சம் குழந்தைகள் பயனடைந்துள்ளனர்.

    இத்திட்டத்திற்காக 2019-2020 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 248.76 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    2019-2020-ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் பள்ளிக் கல்வித்துறைக்காக 28,756.62 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    மூன்று பல்வகை தொழில் நுட்பக் கல்லூரிகளை 2018- 2019ஆம் கல்வி ஆண்டில் அரசு நிறுவியுள்ளதுடன், 29 சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளைத் தொடங்கவும் அனுமதி வழங்கியுள்ளது. 2019- 2020ஆம் ஆண்டில், ராமேஸ்வரத்தில் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பெயரில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நிறுவப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    முதல் தலைமுறை பட்டதாரி மாணவ- மாணவியருக்கு கல்விக் கட்டணத்தைத் திரும்ப வழங்கும் திட்டத்திற்காக 2019-2020ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 480.25 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    சர்வதேசத் தரத்திற்கு கல்வி நிறுவனங்களின் தரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளுள் ஒன்றாக, தனியார் பல்கலைக்கழகங்களை நிறுவும் சட்டங்களை அரசு இயற்றி சிவசுப்பிரமணிய நாடார் பல்கலைக்கழகம், சாய் பல்கலைக்கழகம் ஆகிய இரண்டு தனியார் பல்கலைக்கழகங்களை அரசு அனுமதித்துள்ளது.

    அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு 250 கோடி ரூபாய் உள்பட பல்வேறு பல்கலைக்கழகங்களுக்கு 538.10 கோடி ரூபாய் தொகுப்பு நல்கைத் தொகையாக இந்த வரவு-செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உயர் தொழில்நுட்பத் திறன்களும் சிறப்புத் தகுதிகளும் கொண்ட பணியாளர்களுக்கான தேவை உலக அளவில் வளர்ந்து வருவதைக் கருத்தில் கொண்டு, தொழிற் கல்லூரிகளில் உள்ள வசதிகளை சர்வதேசத் தரத்திற்கு தொடர்ந்து மேம்படுத்துவது அவசியமாகிறது.

    எனவே மாநிலத்தில் முதன்மையான பல்கலைக் கழகமான அண்ணா பல்கலைக்கழகத்திலும், தொழில்நுட்பக் கல்வி ஆணையரின் கட்டுப்பாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளிலும் சர்வதேசத் தரத்தில் கற்பித்தலுக்குத் தேவைப்படும் உபகரணங்கள் உள்ளிட்ட அதன் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக, அண்ணா பல்கலைக் கழகத்திற்கு 100 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்.

    இவ்வாறு பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #TNBudget2019 #Budget2019 #OPS #AnnaUniversity
    Next Story
    ×