search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cbi inquiry"

    ரூ.90 கோடி குட்கா ஊழல் வழக்கில் இன்று (வெள்ளிக்கிழமை) ஓய்வுபெற இருந்த ரெயில்வே துணை போலீஸ் சூப்பிரண்டு மன்னர் மன்னன் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை அரசு நேற்று பிறப்பித்தது.
    சென்னை:

    தமிழகத்தில் பெரும் புயலை கிளப்பிய ரூ.90 கோடி குட்கா ஊழல் வழக்கை சி.பி.ஐ. போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்த வழக்கில் தொழில்அதிபர் மாதவராவ் உள்ளிட்ட 8 பேர் மீது சி.பி.ஐ. போலீசார் முதல்கட்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

    தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, சென்னை மாநகர முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் உள்ளிட்டவர்களின் வீடுகளிலும் சி.பி.ஐ. போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

    மேலும் இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.




    குட்கா ஊழல் அரங்கேறியபோது சென்னை செங்குன்றம் போலீஸ் நிலையத்தில் உதவி போலீஸ் கமிஷனராக பணியாற்றிய மன்னர் மன்னன் மீது இந்த வழக்கில் முக்கியமாக புகார் கூறப்பட்டது. அவரது வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

    மன்னர் மன்னன் தற்போது மதுரை ரெயில்வே போலீசில் துணை சூப்பிரண்டாக பணியாற்றி வந்தார். அவர் இன்று (வெள்ளிக்கிழமை) பணியில் இருந்து ஓய்வுபெற இருந்தார். இந்தநிலையில் குட்கா ஊழல் புகாரில் சிக்கிய மன்னர் மன்னன் நேற்று பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்தது.

    மன்னர் மன்னன் பணி இடைநீக்கம் செய்யப்பட்டது தமிழக போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய பாஜக தலைவர் அமித் ஷா, பாஜக எம்எல்ஏ கொல்லப்பட்ட சதி குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என தெரிவித்தார். #LoksabhaElections2019 #BJP #AmitShah
    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுக்காக பா.ஜ.க. தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இதற்கிடையே, தண்டேவாடா மாவட்டத்தில் உள்ள ஷியாம்கிரி பகுதியில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. பீமா மாண்டவி உள்ளிட்டோர் கடந்த 9ம் தேதி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு மறைந்திருந்த நக்சலைட்கள் பா.ஜ.க.வினர் சென்ற கார்களை நோக்கி சக்திவாய்ந்த வெடிகுண்டுகளை வீசியும் துப்பாக்கிகளால் சுட்டும் தாக்குதல் நடத்தினர். இதில் பாஜக எம்.எல்.ஏ. பீமா மாண்டவி உள்பட பாதுகாப்பு படையை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.

    இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய பா.ஜ.க. தலைவர் அமித் ஷா, பாஜக எம்எல்ஏ கொல்லப்பட்ட சதி குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என தெரிவித்தார்.

    இதுதொடர்பாக, ராஜ்நந்தகாவ் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா,  சத்தீஸ்கரின் தண்டேவாடாவில் நடைபெற்ற நக்சலைட்கள் தாக்குதலில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. பீமா மாண்டவி கொல்லப்பட்டார்.

    பீமா மாண்டவி கொல்லப்பட்டது அரசியல் சதி.  எனவே, பாஜக எம்எல்ஏ கொல்லப்பட்ட சதி குறித்து சிபிஐ விசாரணைக்கு சத்தீஸ்கர் முதல் மந்திரி உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினார்.  #LoksabhaElections2019 #BJP #AmitShah
    கொடநாடு கொள்ளை விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி, டிராபிக் ராமசாமி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். #KodanadEstate #KodanadVideo #TrafficRamaswamy
    புதுடெல்லி:

    கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை விவகாரத்தில் குற்றவாளியாக கூறப்பட்ட ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ், சாலை விபத்தில் இறந்துபோனார். மற்றொரு குற்றவாளியான கனகராஜின் கூட்டாளி சயன் தனது மனைவி வினுப்பிரியா, மகள் நீது ஆகியோருடன் சென்றபோது விபத்தில் சிக்கினார். அதில் அவருடைய மனைவி, மகள் இறந்தனர். சயன் மட்டும் உயிர் தப்பினார். கொடநாடு எஸ்டேட்டின் சிசிடிவி பராமரிப்பாளராக இருந்த தினேஷ் குமார் தற்கொலை செய்து கொண்டார்.

    இவ்விவகாரம் தொடர்பாக வழக்கு நடைபெற்று வரும் நிலையில், தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மாத்யூ சாமுவேலிடம் சயன் அளித்துள்ள வீடியோ வாக்குமூலத்தில், இந்தச் சம்பவங்களின் பின்னணியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருப்பதாக கூறியுள்ளார். இவ்விவகாரம் தமிழக அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



    இந்நிலையில் கொடநாடு விவகாரம் தொடர்பாக, சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சார்பில் உச்ச நீதிமன்றதில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. டிராபிக் ராமசாமி சார்பில் தேமுதிக வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில், கொடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கூறியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தன் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அந்த வீடியோ உண்மை இல்லை என தெரிவித்தார். அரசியலில் தங்களை நேரடியாக எதிர்கொள்ள முடியாமல் தவறான தகவலை பரப்புவதாகவும், அதன் பின்புலத்தில் இருப்பவர்கள் விரைவில் கண்டறியப்படுவர் என்றும் கூறினார்.

    இதையடுத்து அதிமுக அளித்த புகாரின் அடிப்படையில், மேத்யூ சாமுவேல், அந்த வீடியோவில் பேசிய மனோஜ், சயன் உள்ளிட்ட நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில், மனோஜ், சயன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேத்யூ சாமுவேலை போலீசார் தேடி வருகின்றனர். #KodanadEstate #KodanadVideo #TrafficRamaswamy
    அண்ணாமலைப் பல்கலைக்கழக ஊழல்கள் பற்றி சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #Ramadoss

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சிதம்பரம் அண்ணா மலைப்பல்கலைக்கழகத்தில் கடந்த 2009-11-ம் ஆண்டுகளில் நடந்த ஊழல்கள் தொடர்பாக அப்போதைய துணைவேந்தர் ராமநாதன், பதிவாளர் ரத்தினசபாபதி உள்ளிட்டோர் மீது கையூட்டுத் தடுப்புப் பிரிவினர் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கி உள்ளனர். பல்கலைக் கழக சீரழிவுக்கு காரணமானவர்கள் மீது விசாரணை தொடங்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது ஆகும்.

    அதேநேரத்தில் பல்கலைக் கழக ஊழலுக்கு 2011-ம் ஆண்டுடன் முற்றுப்புள்ளி வைக்கப்படவில்லை; பல்கலைக்கழக நிர்வாகம் புனிதமடைந்து விடவில்லை என்பதையும் கையூட்டுத் தடுப்புப் பிரிவு அறிந்து கொள்ள வேண்டும்.

    அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் கணினி புரோகிராமர்களாக பணியாற்றி வந்த 189 பேரும், ஆசிரியர் அல்லாத பணியில் இருந்த 30 பேரும், 2016-ம் ஆண்டு பேராசிரியர்களாக மாற்றப்பட்டனர். அவர்களிடமிருந்து தலா ரூ.5 லட்சம் வீதம் மொத்தம் ரூ.10.95 கோடி கையூட்டாக பெறப்பட்டுள்ளது;

    பல்கலைக் கழகத்தின் சார்பில் தொலைதூர கல்வி இயக்கத்திற்கான புத்தகங்கள் அச்சிடுதல், பொருட்களை கொள்முதல் செய்தல் ஆகியவற்றுக்கான ஒப்பந்தங்களை வழங்குவதில் 30 சதவீதம் கையூட்டு பெறப்பட்டது;

    தொலைதூரக் கல்வி இயக்ககத்தில் பணியாற்றியவர்களை இடமாற்றம் செய்து, அதை ரத்து செய்வதற்காக ஒவ்வொருவரிடமிருந்தும் லட்சக்கணக்கில் கையூட்டு பெறப்பட்டுள்ளது.

    மருத்துவக் கல்வியை தரமாக மாற்ற வேண்டும் என்று அனைத்துத் தரப்பிலிருந்தும் வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பல ஆண்டுகளாக மருத்துவப் படிப்பில் தேர்ச்சி பெற முடியாமல் தவித்து வந்த மாணவர்கள் 150 பேரிடம் தலா ரூ.25 லட்சம் வீதம் கையூட்டு பெறப்பட்டு அவர்களுக்கு தேர்ச்சி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.37.5 கோடி கையூட்டாக பெறப்பட்டுள்ளது. மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைகளுக்கு கருவிகளை வாங்குவதற்காக அப்போதைய துணை வேந்தர் மணியனின் மகனுக்கு நெருக்கமான நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளது.

    இதில் நடைபெற்ற ஊழல்கள் குறித்த ஆவணங்களை கடலூர் கையூட்டுத் தடுப்புப் பிரிவு ஆய்வாளர் சதீஷ் சில ஆண்டுகளுக்கு முன் பறிமுதல் செய்த போதிலும் மேல்நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    பல்கலைக்கழகத்தின் உபரி பணியாளர்கள், பேராசிரியர்களை அவர்களுக்கு விருப்பமான இடத்துக்கு மாற்றுவதற்கு கையூட்டு, பல்கலைக் கழகத்திற்கு முதல்வர்கள், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர், துணைத் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர், இயக்குநர்கள், துணை இயக்குநர்கள், துறைத் தலைவர்கள் ஆகிய பதவிகளுக்கு ஆட்களை நியமிப்பதில் ஊழல், பல்கலைக்கழக வளாகத்தில் செயல்பட்டு வரும் 3 உணவகங்களுக்கான ஒப்பந்தம் வழங்குவதில் ஊழல், நூலகங்களுக்கு புத்தகங்களை வாங்கியதிலும், கண்காணிப்பு கேமிராக்களை வாங்கியதிலும் ஊழல் என முந்தைய துணைவேந்தர் மணியன் மீதான ஊழல் பட்டியல் வரிசை நீள்வதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களே குற்றம்சாட்டியிருக்கின்றன.

    அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஊழல் புற்றுநோயாய் ஊடுருவியுள்ள நிலையில், குறிப்பிட்ட காலம் வரையிலான ஊழல்கள் குறித்து மட்டும் விசாரணை நடத்துவது நிர்வாகத்தை தூய்மைப்படுத்த உதவாது. மாறாக, மேலும் துணிச்சலுடன் ஊழல் செய்யவே வழி வகுக்கும்.

    எனவே, சில மாதங்களுக்கு முன்பு வரை துணைவேந்தராக பதவி வகித்த மணியன் மற்றும் அவரது குழுவினர் நடத்திய ஊழல்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும். அதேநேரத்தில் இந்த ஊழல்களில் ஆட்சியாளர்களுக்கும் தொடர்பு இருப்பதால் விசாரணை நியாயமாக நடைபெற வாய்ப்பில்லை. ஆகவே, அண்ணாமலை பல்கலையில் கடந்த 10 ஆண்டுகளில் நடந்த ஊழல்கள் பற்றி சிபிஐ விசாரணைக்கு ஆணையிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.  #Ramadoss

    அண்ணா பல்கலைக்கழகத்தில் விடைத்தாள் மறுமதிப்பீட்டில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. #AnnaUniversity #RevaluationScam
    சென்னை:

    சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் விடைத்தாள்கள் மறு மதிப்பீட்டில் நடந்துள்ள முறைகேடுகள் சமீபத்தில் அம்பலமானது. தேர்வில் தோல்வி அடைந்த மற்றும் குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களிடம் பல ஆயிரம் ரூபாயை லஞ்சமாகப் பெற்றுக் கொண்டு கூடுதல் மதிப்பெண் வழங்கியிருப்பது அண்ணா பல்கலைக்கழகம் மீதான நம்பகத்தன்மையை சீர்குலைப்பதாக அமைந்துள்ளது.

    லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீசார் நடத்திய ரகசிய விசாரணையில், விடைத்தாள் மறுமதிப்பீட்டில் ஊழல் நடந்திருப்பதும், சில நூறு கோடி ரூபாய் லஞ்சமாக கை மாறி இருப்பதும் தெரிய வந்தது.

    இதையடுத்து ஊழல் தடுப்புத் துறை மற்றும் கண்காணிப்புத் துறையின் சென்னை சிறப்புப் பிரிவினர் அதிரடியாக செயல்பட்டு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி உமா உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை விரிவடையும் பட்சத்தில் பல்வேறு கல்லூரிகளின் பேராசிரியர்கள், இடைத்தரகர்கள் சிக்குவார்கள் என தகவல் வெளியாகி உள்ளன.



    இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் மறுமதிப்பீடு முறைகேடு வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கில் மேற்கொண்ட நடவடிக்கைகளை எடுத்துக் கூறினார். மேலும், லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்த குறுகிய காலத்திற்குள் சிபிஐக்கு மாற்றக் கோருவது நியாயமற்றது என்றும் வாதிட்டார். அவரது வாதத்தை ஏற்ற நீதிமன்றம், சிபிஐ விசாரணை கோரிய மனுவை தள்ளுபடி செய்தது. #AnnaUniversity #RevaluationScam
     
    திருச்சி விமான நிலையத்தில் 2-வது நாளாக சிபிஐ சோதனையில் பயணிகளிடம் பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #Goldsmuggling

    திருச்சி:

    திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இலங்கை, குவைத், ஷார்ஜா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கும், உள்நாட்டு சேவையாக சென்னை, பெங்களூருவுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் தினமும் திருச்சியில் இருந்து வெளிநாடுகளுக்கும், வெளிநாடுகளில் இருந்து திருச்சிக்கும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர்.

    இந்தநிலையில் வெளிநாடுகளில் இருந்து திருச்சி விமான நிலையம் வழியாக தங்கம் கடத்தி வரப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது.

    குறிப்பாக கடந்த 3 மாதங்களாக தினமும் பயணிகள் சிலரிடம் கடத்தல் தங்கங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து வந்தனர். இதன் மூலம் பல கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    கடந்த 25-ந்தேதி மலேசியாவில் இருந்து திருச்சி வந்த தனியார் விமானத்தில் கடத்தி வரப்பட்ட 6.3 கிலோ எடையுள்ள தங்க கட்டிகளை சென்னையில் இருந்து வந்திருந்த மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    அது தொடர்பாக விமான நிலையத்தில் சரக்கு ஏற்றி இறக்கும் பணியில் ஈடுபடும் தனியார் ஒப்பந்த பணியாளர்கள் 3 பேர், பயணி ஒருவர், தங்கத்தை பெற்று கொள்ள வந்திருந்தவர் என 5 பேர் கைது செய்யப்பட்டனர். தொடர்ச்சியாக தங்கம் கடத்தி வரப்படும் சம்பவம் திருச்சி விமான நிலைய அதிகாரிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் நேற்று மாலை ஏர்-இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்தது. அந்த விமானத்தில் மொத்தம் 70 பயணிகள் இருந்தனர். விமானத்தில் இருந்து பயணிகள் இறங்கியதும் அவர்களது பாஸ்போர்ட்டு, குடியுரிமை தொடர்பான ஆவணங்களை சரிபார்க்கும் பணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் செய்து கொண்டிருந்தனர். பயணிகளில் 20 பேர் சுங்க சோதனை முடிந்து வெளியே வந்தனர்.

    அப்போது அங்கு திடீர் என வந்த சி.பி.ஐ. அதிகாரிகள் 11 பேர் அவர்களை சூழ்ந்து கொண்டு, அப்படியே மீண்டும் விமான நிலையத்தின் உள்ளே அழைத்து சென்றனர். அங்கு அவர்களிடம் அதிரடி விசாரணை நடத்தினர்.

    மேலும் அந்த விமானத்தில் வந்த மற்ற பயணிகளையும் வெளியே விடாமல் தனி இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர். மதுரையில் இருந்து வந்திருந்த துணை கண்காணிப்பாளர் அந்தஸ்தில் உள்ள அதிகாரி தலைமையில் ஆய்வாளர்கள் 3 பேர் உள்பட 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் குழு இந்த சோதனையில் ஈடுபட்டனர்.

    பயணிகளிடம் திடீர் என விசாரிக்க வேண்டிய அவசியம் என்ன என்பதற்கான காரணம் எதனையும் அதிகாரிகள் வெளியிடவில்லை. கடந்த சில மாதங்களாகவே வெளிநாடுகளில் இருந்து திருச்சி வந்த விமான பயணிகளிடம் சுங்க இலாகா அதிகாரிகள் நடத்திய சோதனையில் தங்க கட்டிகள், நட்சத்திர ஆமைகள் ஆகியவை சிக்கின. இதன் காரணமாகவே இந்த அதிரடி சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்த கடத்தல் சம்பவங்களில் திருச்சி விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள், குடியுரிமை பிரிவு அதிகாரிகளுக்கும் தொடர்பு உள்ளதா? என்பதற்காக அவர்களிடமும் சி.பி.ஐ. அதிகாரிகள் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர். சுமார் 70 பயணிகளிடம் நேற்றிரவு முதல் விசாரணையை தொடங்கிய அதிகாரிகள் இன்று அதிகாலை வரை விடிய, விடிய விசாரணை நடத்தினர்.

    இன்று 2-வது நாளாகவும் விசாரணை நடை பெற்று வருகிறது. விசாரணை வளையத்தில் சிக்கியுள்ள பயணிகளில் பெரும்பாலானோர் வியாபாரிகள் ஆவர். தொழில் சம்பந்தமாக அடிக்கடி சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று வரக் கூடியவர்கள்.

    அவர்கள் அதிக அளவு தங்கம் கொண்டு வந்ததாக கிடைத்த ரகசிய தகவலையடுத்து, சி.பி.ஐ. அதிகாரிகள் இந்த அதிரடி விசாரணையில் ஈடுபட்டதாகவும், விசாரணையில் வியாபாரிகள் சிலர் தங்கத்தை கடத்தி வந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் அவர்களின் பெயர், விவரத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் வெளியிடவில்லை.

    ஆனால் அவர்களிடம் இருந்து பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பயணிகள் அனைவரிடமும் விசாரணை முடிந்த பிறகு முழு விவரமும் வெளியிடப்படும் என கூறப்படுகிறது. #Goldsmuggling 

    துணை முதலமைச்சர் ஓபிஎஸ் மீதான சொத்துக்குவிப்பு புகார் குறித்து சிபிஐ விசாரணைக்கு ஏன் உத்தரவிடக்கூடாது? என சென்னை ஐகோர்ட் கேள்வி எழுப்பி உள்ளது. #OPS #OPSAssetCase
    சென்னை:

    தி.மு.க. அமைப்புச் செயலாளரும், எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி சென்னை ஐகோர்ட்டில் நேற்று மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் கூறி யிருப்பதாவது:-

    தமிழக துணை முதல்-அமைச்சராக உள்ள ஓ.பன்னீர்செல்வம், கடந்த 1996ம் ஆண்டு முதல் பொது ஊழியராக உள்ளார். 1996ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரை பெரியகுளம் நகராட்சி தலைவராக பதவி வகித்தார். 2001 மற்றும் 2006-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தல்களில் பெரியகுளம் தொகுதி எம்.எல்.ஏ.வாகவும், 2011 மற்றும் 2016-ம் ஆண்டு களில் நடந்த சட்ட சபை தேர்தல்களில் போடி நாயக்கனூர் எம்.எல். ஏ.வாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    வருவாய் அமைச்சராகவும், பொதுப்பணித்துறை அமைச்சராகவும், இடை இடையே முதல்-அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.

    தற்போது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவையில், துணை முதல்-அமைச்சராக பதவி வகித்து வருகிறார். இவரது மனைவி பி.விஜயலட்சுமி. இவர்களுக்கு ரவீந்திரநாத் குமார், ஜெயபிரதீப் என்ற மகன்களும், கவிதா பானு என்ற மகளும் உள்ளனர்.

    இவர்கள் மீதும், தன் சகோதரர்கள் ஓ.ராஜா, ஓ.பாலமுருகன், ஓ.சண்முகசுந்தரம் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பெயரிலும் ஏராளமான முதலீடுகளை ஓ.பன்னீர் செல்வம் செய்துள்ளார்.

    தன்னுடைய தொழில் பங்குதாரர் ஆர்.சுப்புராஜ், அவரது மனைவி உமா மகேஸ்வரி ஆகியோர் பெயரிலும், பல பினாமிகளின் பெயர்களிலும் பெரும் தொகையை முதலீடு செய்துள்ளார். தன்னுடைய அரசு பதவியை தவறாக பயன்படுத்தி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளார்.

    ஆனால், 2016-ம் ஆண்டு தேர்தலின்போது, 2014-2015-ம் நிதியாண்டில், ஓ.பன்னீர்செல்வத்தின் வருமானம் ரூ.5 லட்சத்து 80 ஆயிரத்து 875 என்று அவர் வேட்புமனுவில் கூறியுள்ளார். அந்த நிதியாண்டில் எம்.எல்.ஏ.வுக்கான அடிப்படை மாத ஊதியம் ரூ.55 ஆயிரமாகும். 12 மாதத்துக்கு அதுவே ரூ.6 லட்சத்து 60 ஆயிரம் ஆகும்.

    அந்த காலக்கட்டத்தில் அவர் முதல்-அமைச்சர் பதவியை வகித்துள்ளார். இதை விட கூடுதலாக ஊதியம் பெற்றிருப்பார். இதுதவிர அந்த ஆண்டு ரூ.17.85 லட்சம் மதிப்புள்ள ஒரு புதிய சொகுசு காரையும் வாங்கியுள்ளார். எனவே, அவர் தவறான வருமான தகவலை தாக்கல் செய்துள்ளார்.

    பெரியகுளத்தில் தனக்குள்ள விவசாய நிலங்களையும், பெரியகுளம் தெற்கு அக்ரஹாரத்தில் உள்ள வீட்டின் சொத்து மதிப்புகளையும் மறைத்துள்ளார். 2011-ம் ஆண்டு தேர்தலில் அவர் தனது மனைவிக்கு ரூ. 24.20 லட்சம் மட்டுமே சொத்துக்கள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

    ஆனால் 2016-ம் ஆண்டு தேர்தலில் விஜயலட்சுமிக்கு ரூ. 78 லட்சத்துக்கு சொத்துக்கள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். வருமானமே இல்லாத குடும்பத் தலைவிக்கு இவ்வளவு வருமானம் வந்தது எப்படி?.

    தேனி மாவட்டத்தில் உள்ள போஜராஜன் மில்ஸ் நிறுவனத்துக்கு 99 ஆண்டுகள் குத்தகைக்கு வழங்கப்பட்ட ரூ.140 கோடி நிலத்தை பன்னீர்செல்வம் தனது பினாமி மூலமாக சந்தை விலையை விட குறைவாக வாங்கியுள்ளார்.

    150 ஏக்கர் பரப்பில் பினாமி மூலமாக ஸ்ரீவில்லிப்புத்தூர் செண்பகத்தோப்பு பகுதியில் மாந்தோப்பு வாங்கியுள்ளார். போடியில் நடக்கும் ஏல மார்க்கெட்டை இவர் தான் நிர்ணயம் செய்கிறார்.

    அமெரிக்கா, துருக்கி, இந்தோனேசியா, மலேசியா போன்ற நாடுகளில் உள்ள நிறுவனங்களில் ஓ.பன்னீர்செல்வத்தின் வாரிசுகள் ரூ. 200 கோடிக்கு மேல் முதலீடு செய்துள்ளனர். அவரது மகன்கள் பல இந்திய நிறுவனங்களில் இயக்குநர்களாக உள்ளனர்.

    பொது ஊழியரான ஓ.பன்னீர்செல்வமும் அவரது வாரிசுகளும் சட்டத்துக்கு புறம்பாக நேரடியாகவும், தங்களின் பினாமிகள் மூலமாகவும் பல கோடிக்கு சொத்துக்களை குவித்துள்ளனர்.

    ஓ.பன்னீர்செல்வத்தின் 2வது மகன் வி.ஜெயபிரதீப் 3 மிகப்பெரிய நிறுவனங்களின் இயக்குனராக பதவி ஏற்கும்போது, அவருக்கு 25 வயது கூட ஆகவில்லை. சின்ன வயதில், பல கோடி ரூபாய் முதலீடுகளை அவரால் எப்படி செய்ய முடிந்தது?



    எஸ்.ஆர்.எஸ். தாது நிறுவனத்தின் உரிமையாளர் சேகர் ரெட்டியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட டைரியில் (2016ம் ஆண்டு ஜூன் முதல் நவம்பர் மாதம் வரை) 6 மாதத்தில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ரூ.4 கோடி வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    எனவே, ஓ.பன்னீர்செல்வம், தன் மனைவி, மகன்கள், மகள் மற்றும் உறவினர்கள், நண்பர்கள், பினாமிகள் பெயரில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை சட்டவிரோதமாக சேர்ந்துள்ளார்.

    இதுகுறித்து கடந்த மார்ச் மாதம் 10ந்தேதி தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்தும், இதுவரையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    எனவே, வருமானத்துக்கு அதிகமாக பல கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்துள்ள பொது ஊழியரான ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும். சட்டப்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு முதல் வழக்காக ஐகோர்ட்டு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு வக்கீலிடம், நீதிபதி, மனுதாரர் கடந்த மார்ச் மாதமே புகார் செய்துள்ளார். இதுவரை அந்த புகார் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? போலீசார் இதுவரை என்ன செய்தனர்? என்று கேள்வி எழுப்பினார்.

    அதற்கு அரசு வக்கீல், புகார் வந்ததும், அந்த புகார் குறித்து மேல் நடவடிக்கை எடுப்பது குறித்து கருத்தினை கேட்டு, தலைமை செயலாளருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்றார்.

    இதையடுத்து நீதிபதி மார்ச் மாதம் கொடுக்கப்பட்ட புகார் மீது எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. போலீசார் ஏன் தயங்குகின்றனர்? புகார்தாரர் தன்னுடைய புகாரில், சேகர் ரெட்டி டைரியில் பன்னீர்செல்வம் பெயர் உள்ளது என்று கூறியுள்ளார். அவருக்கு சேகர் ரெட்டி ரூ.4 கோடி கொடுத்துள்ளதாக குறிப்பு உள்ளது என்கிறார். ஏற்கனவே சேகர்ரெட்டி மீதான வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது.

    போலீசாரும், இந்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால், பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்டோர் மீதான இந்த வழக்கையும் சி.பி.ஐ. விசாரணைக்கு ஏன் மாற்றக்கூடாது?’ என்று மீண்டும் கேள்வி எழுப்பினார்.

    அப்போது அரசு வக்கீல், இந்த மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்கிறேன். அதற்கு கால அவகாசம் வேண்டும் என்றார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வருகிற 23-ந்தேதிக்கு விசாரணையை தள்ளி வைக்கிறேன். அன்று விரிவான பதில் மனுவை அரசு தரப்பு தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டார்.
    #OPS #OPSAssetCase

    கச்சநத்தம் கிராமத்தில் நடந்த படுகொலை சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.#Thirumavalavan
    சென்னை:

    விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டம் கச்சநத்தம் கிராமத்தில் கடந்த 28-5-2018 அன்று இரவு சாதிவெறியர்கள் நடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்த 3 பேர் கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 5 பேர் உயிருக்குப் போராடும் நிலையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.

    இந்த கொடூரத்தைக் கண்டித்து தொடர்ந்து 3 நாட்களாக மதுரையில் போராடிக்கொண்டிருந்த பாதிக்கப்பட்ட மக்களை 1-6-2018 அன்று நேரில் சந்தித்து விடுதலைச்சிறுத்தைகளின் சார்பில் ஆறுதல் கூறினோம். சாதி ஒழிப்புக்கான கச்சநத்தம் களத்தில் பலியான ஆறுமுகம், சண்முகநாதன் மற்றும் சந்திரசேகர் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தினோம்.

    காவல்துறை அதிகாரிகளும் இந்தப் படுகொலையில் தொடர்பு கொண்டிருக்கிறார்கள் என்கிற நிலையில் இவ்வழக்கை காவல்துறையினரே விசாரிப்பது நீதி கிடைக்க ஏதுவாக அமையாது. எனவே, இதனை சி.பி.ஐ. விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் எனவும் வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின்படி தொடர்புடைய காவல்துறை அதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Thirumavalavan
    ×