search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருச்சி விமான நிலையத்தில் 2-வது நாளாக சிபிஐ சோதனை - பயணிகளிடம் பல கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்
    X

    திருச்சி விமான நிலையத்தில் 2-வது நாளாக சிபிஐ சோதனை - பயணிகளிடம் பல கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

    திருச்சி விமான நிலையத்தில் 2-வது நாளாக சிபிஐ சோதனையில் பயணிகளிடம் பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #Goldsmuggling

    திருச்சி:

    திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இலங்கை, குவைத், ஷார்ஜா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கும், உள்நாட்டு சேவையாக சென்னை, பெங்களூருவுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் தினமும் திருச்சியில் இருந்து வெளிநாடுகளுக்கும், வெளிநாடுகளில் இருந்து திருச்சிக்கும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர்.

    இந்தநிலையில் வெளிநாடுகளில் இருந்து திருச்சி விமான நிலையம் வழியாக தங்கம் கடத்தி வரப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது.

    குறிப்பாக கடந்த 3 மாதங்களாக தினமும் பயணிகள் சிலரிடம் கடத்தல் தங்கங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து வந்தனர். இதன் மூலம் பல கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    கடந்த 25-ந்தேதி மலேசியாவில் இருந்து திருச்சி வந்த தனியார் விமானத்தில் கடத்தி வரப்பட்ட 6.3 கிலோ எடையுள்ள தங்க கட்டிகளை சென்னையில் இருந்து வந்திருந்த மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    அது தொடர்பாக விமான நிலையத்தில் சரக்கு ஏற்றி இறக்கும் பணியில் ஈடுபடும் தனியார் ஒப்பந்த பணியாளர்கள் 3 பேர், பயணி ஒருவர், தங்கத்தை பெற்று கொள்ள வந்திருந்தவர் என 5 பேர் கைது செய்யப்பட்டனர். தொடர்ச்சியாக தங்கம் கடத்தி வரப்படும் சம்பவம் திருச்சி விமான நிலைய அதிகாரிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் நேற்று மாலை ஏர்-இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்தது. அந்த விமானத்தில் மொத்தம் 70 பயணிகள் இருந்தனர். விமானத்தில் இருந்து பயணிகள் இறங்கியதும் அவர்களது பாஸ்போர்ட்டு, குடியுரிமை தொடர்பான ஆவணங்களை சரிபார்க்கும் பணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் செய்து கொண்டிருந்தனர். பயணிகளில் 20 பேர் சுங்க சோதனை முடிந்து வெளியே வந்தனர்.

    அப்போது அங்கு திடீர் என வந்த சி.பி.ஐ. அதிகாரிகள் 11 பேர் அவர்களை சூழ்ந்து கொண்டு, அப்படியே மீண்டும் விமான நிலையத்தின் உள்ளே அழைத்து சென்றனர். அங்கு அவர்களிடம் அதிரடி விசாரணை நடத்தினர்.

    மேலும் அந்த விமானத்தில் வந்த மற்ற பயணிகளையும் வெளியே விடாமல் தனி இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர். மதுரையில் இருந்து வந்திருந்த துணை கண்காணிப்பாளர் அந்தஸ்தில் உள்ள அதிகாரி தலைமையில் ஆய்வாளர்கள் 3 பேர் உள்பட 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் குழு இந்த சோதனையில் ஈடுபட்டனர்.

    பயணிகளிடம் திடீர் என விசாரிக்க வேண்டிய அவசியம் என்ன என்பதற்கான காரணம் எதனையும் அதிகாரிகள் வெளியிடவில்லை. கடந்த சில மாதங்களாகவே வெளிநாடுகளில் இருந்து திருச்சி வந்த விமான பயணிகளிடம் சுங்க இலாகா அதிகாரிகள் நடத்திய சோதனையில் தங்க கட்டிகள், நட்சத்திர ஆமைகள் ஆகியவை சிக்கின. இதன் காரணமாகவே இந்த அதிரடி சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்த கடத்தல் சம்பவங்களில் திருச்சி விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள், குடியுரிமை பிரிவு அதிகாரிகளுக்கும் தொடர்பு உள்ளதா? என்பதற்காக அவர்களிடமும் சி.பி.ஐ. அதிகாரிகள் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர். சுமார் 70 பயணிகளிடம் நேற்றிரவு முதல் விசாரணையை தொடங்கிய அதிகாரிகள் இன்று அதிகாலை வரை விடிய, விடிய விசாரணை நடத்தினர்.

    இன்று 2-வது நாளாகவும் விசாரணை நடை பெற்று வருகிறது. விசாரணை வளையத்தில் சிக்கியுள்ள பயணிகளில் பெரும்பாலானோர் வியாபாரிகள் ஆவர். தொழில் சம்பந்தமாக அடிக்கடி சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று வரக் கூடியவர்கள்.

    அவர்கள் அதிக அளவு தங்கம் கொண்டு வந்ததாக கிடைத்த ரகசிய தகவலையடுத்து, சி.பி.ஐ. அதிகாரிகள் இந்த அதிரடி விசாரணையில் ஈடுபட்டதாகவும், விசாரணையில் வியாபாரிகள் சிலர் தங்கத்தை கடத்தி வந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் அவர்களின் பெயர், விவரத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் வெளியிடவில்லை.

    ஆனால் அவர்களிடம் இருந்து பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பயணிகள் அனைவரிடமும் விசாரணை முடிந்த பிறகு முழு விவரமும் வெளியிடப்படும் என கூறப்படுகிறது. #Goldsmuggling 

    Next Story
    ×